வெள்ளி, 25 நவம்பர், 2011

அடியளந்தான் யார்?


குறள்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
                               - எண்: 610

தற்போதைய உரைகள்:

கலைஞர் உரை: சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
மு.வ உரை: அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.
சாலமன் பாப்பையா உரை: தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

உரைத் தவறுகள்:

முதல் உரையாகிய கலைஞர் உரையில் அடியளந்தான் என்ற சொல்லுக்குத் தெளிவான விளக்கம் இல்லை. கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர் ஆதலால் அடியளந்தான் என்ற சொல்லுக்கு மற்றவர்களைப் போல கடவுள் சார்ந்த விளக்கம் கூறாமல் எதையோ மழுப்பி இருக்கிறார் கருணாநிதி. அடியளந்தான் என்ற சொல்லுக்கு மன்னனையே பொருளாகக் கொள்வது எவ் வகையிலும் பொருந்தவில்லை. எந்த மன்னனாவது தனது காலடியினை அளந்து அளந்து எடுத்து வைத்துச் செல்வானா? மேலும் அடியளத்தல் என்பதற்கு செல்லுதல் என்னும் பொருள் எந்த அகராதியிலும் கூறப்படவில்லை. ஆதலால் இவரது உரை பொருத்தமற்றதாகிறது.

அடுத்து வரதராசனாரும் பாப்பையாவும் கூறியுள்ள உரைகளில் 'அடியளந்தான்' என்பதற்கு 'எல்லா உலகையும் தனது அடியால் அளந்த கடவுள்' என்ற பொருள் கூறப்பட்டுள்ளது. என்றால் இக் கடவுள் யார்?. இக் கடவுள் திருமாலையே குறிக்கும் என்பது ஒரு சமயத்தாரின் வாதம். இதற்கு சான்றாக திருமாலின் வாமன அவதாரத்தைக் கூறுகின்றனர். மகாபலி மன்னனின் ஆணவத்தை ஒடுக்க குள்ள முனியாகிய வாமனராக அவதாரம் எடுத்த திருமால், மகாபலி மன்னனிடம் சென்று தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் எனக் கேட்கிறார். 'மூன்றடி நிலம் தானே, தருகிறேன்' என்று மகாபலி கூற, உடனே வாமனராக இருந்த திருமால் விஸ்வரூபம் எடுத்தார். தனது ஒரு அடியால் பூவுலகையும் இன்னொரு அடியால் விண்ணுலகையும் அளந்த திருமால் மூன்றாவது அடிக்கு என்ன செய்ய என்று கேட்க, தனது தலையில் வைக்குமாறு மகாபலி கூற, அவன் தலைமீது மூன்றாவது அடியை வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

வள்ளுவர் இக் குறளில் புராணக் கதையில் வரும் வாமன அவதாரத்தைப் பற்றித்தான் கூறுவதாக இச் சமயத்தார் கூறுகின்றனர். இது உண்மையா என்றால் ஒருபோதும் இல்லை. ஏனென்றால் வள்ளுவர் எந்த ஒரு குறளிலும் குறிப்பிட்ட சமயம் அல்லது மதத்தை சார்ந்ததான கருத்துக்களைக் கூறவில்லை என்பதைப் பற்றி முன்னரே பல ஆய்வுக் கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இந்திரனே சாலும் கரி, ஆதிபகவன் யார், தாமரைக்கண்ணான் உலகு, செய்யவள் தவ்வை, மாமுகடி=மூதேவி?, பொறிவாயில் ஐந்தவித்தான் போன்ற பல கட்டுரைகளில் இருந்து வள்ளுவரின் சமய-மத பேதம் கடந்த மனநிலையினை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வகையில் இக் குறளிலும் வள்ளுவர் சமய-மதம் சாராத ஒரு நடுவுநிலைமையான கருத்தைத் தான் கூறியிருக்க வேண்டும் என்பது உறுதி.

இப் பொருள் குழப்பங்களுக்குக் காரணம் அடியளந்தான் என்ற சொல்லே ஆகும். வள்ளுவர் இச் சொல்லைத் தான் இக் குறளில் எழுதினாரா என்றால் இல்லை என்று ஆணித்தரமாக கூறலாம். வள்ளுவர் எழுதிய சொல் வேறு. பின்னாளில் வந்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறு திருத்தி விட்டார்கள். வள்ளுவர் எழுதிய உண்மையான சொல் என்ன என்பதைப் பற்றிக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

திருந்திய பொருள்:

வள்ளுவர் இக் குறளில் 'அடியளந்தான்' என்பதற்குப் பதிலாக 'அடியிலாதான்' என்றே எழுதியிருக்க வேண்டும். 'அடியிலாதான்' என்ற சொல் காற்றைக் குறிக்கும். இனி, இக் குறளின் புதிய பொருள் இது தான்.

' காற்று பரவியிருக்கும் அனைத்து இடங்களையும் ஒரு மன்னன், தனது சோர்வில்லாத தன்மையினால் ஒருங்கே அடைய முடியும்.'

அதாவது காற்று எங்கும் பரவியிருப்பதைப் போல, ஒரு மன்னன் தனது சோர்வில்லாத முயற்சியினால் தனது ஆட்சியையும் புகழையும் எங்கும் பரப்ப முடியும் என்பதே இதன் விளக்கமாகும்.

இனி திருந்திய குறள் இதுதான்:

மடியிலா மன்னவன் எய்தும் அடியிலாதான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

நிறுவுதல்:

வள்ளுவர் இக் குறளில் அடியளந்தான் என்ற சொல்லை எழுதியிருக்க மாட்டார் என்பதற்கான ஆதாரங்களை முதலில் கீழே காணலாம்.

யாப்பு இலக்கணத்தில் ஒரூஉ எதுகைத் தொடை என்ற ஒருவகை உண்டு. பாடலில் ஒரு அடியின் முதல் மற்றும் நான்காவது சீர்களில் எதுகை நயம் வருமாறு அமைத்துப் பாடுவது ஒரூஉ எதுகைத் தொடை எனப்படும். திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் ஏராளமான பாடல்களில் இந்த ஒரூஉ எதுகைத் தொடையைக் காணலாம். சான்றாக இந்த மடியின்மை என்னும் அதிகாரத்தில் இருந்து கீழ்க்காணும் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் - 601
டியை மடியா ஒழுகல் குடியைக் - 602
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து - 604
டியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் - 606
டிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து - 607

மேற்காணும் பாடல் வரிகளை நோக்கினால் கீழ்க்காணும் உண்மை புரியும்.

" ஒவ்வொரு அடியின் முதல் சீரிலும் நான்காவது சீரிலும் முதல் எழுத்து நீங்கலாக ஏனைய எழுத்துக்கள் பெரும்பாலும் ஒத்து வருகிறது."

சான்றாக, 601 ஆம் குறளில், முதல் சீராகிய 'குடியென்னும்' என்பதிலும் நான்காவது சீராகிய 'மடியென்னும்' என்பதிலும் முதல் எழுத்து நீங்கலாக ஏனைய எழுத்துக்கள் ஒத்திருக்கின்றன. இதேபோல் ஏனைய குறள்களில் ஒத்திருப்பதையும் காணலாம்.

ஒரூஉ எதுகைத் தொடை பயிலும் இந்தத் தலைப்புக் குறளிலும் இதே முறைப்படி தான் சொற்கள் வரவேண்டும் அல்லவா?. ஆனால், இப்போதிருக்கும் குறள் வடிவத்தில், முதல் சீர் 'மடியிலா' என்றிருக்க, நான்காவது சீரோ 'அடியளந்தான்' என்றிருக்கிறது. இந்த இரண்டு சீர்களிலும் இரண்டாம் எழுத்தைத் தவிர மற்ற எழுத்துக்கள் ஒத்துவரவில்லை. இது மற்ற குறள்களில் வள்ளுவர் கடைப்பிடித்துள்ள யாப்பிலக்கண முறையினின்று முற்றிலும் மாறுபட்டுள்ளது. இதிலிருந்து 'அடியளந்தான்' என்ற சொல் வள்ளுவரால் எழுதப்படவில்லை என்பது தெளிவாகிறது.

அதேசமயம், 'அடியிலாதான்' என்ற சொல் 'மடியிலா' என்ற சொல்லுடன், வள்ளுவர் ஏனைய குறள்களில் பின்பற்றியுள்ள ஒரூஉ எதுகைத் தொடை அமைப்பு முறைப்படி ஒத்துவருவதை அறியலாம். ஆம், இவ் இரண்டு சீர்களிலும் மூன்று எழுத்துக்கள் ஒத்து வருகின்றன.

டியிலா ................    ...........     அடியிலாதான்

அதுமட்டுமின்றி, 'அடியிலாதான்' என்ற சொல்லுக்கான பொருளும் இக் குறளுக்கு நன்கு பொருந்தி வருகின்றது. எனவே வள்ளுவர் 'அடியளந்தான்' என்னும் சொல்லுக்குப் பதிலாக 'அடியிலாதான்' என்றே எழுதியிருப்பார் என்பதை ஊகிக்கலாம்.

இனி, இந்த 'அடியிலாதான்' என்ற சொல் எவ்வாறு காற்றைக் குறிக்கும் என்று பார்ப்போம்.

அடி என்ற சொல்லுக்கு சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி கீழ்க்காணும் பொருட்களைக் கூறுகிறது.

அடி³ aṭi
, n. < அடு¹-. [T. aḍugu, K. Tu. aḍi, M. aṭi.] 1. Foot; பாதம். (பிங்.) 2. Measure of a foot = 12"; அடியளவு. 3. Footprint; காற் றடம். (சம். அக.) 4. Metrical line, of which there are five kinds, viz., குறளடி, சிந்தடி, அளவடி or நேரடி, நெடிலடி, கழிநெடிலடி. அடுத்து நடத்தலி னடியே (இலக். வி. 711). 5. Base, bottom; கீழ். 6. Stand, support, foundation; அடிப்பீடம். புஷ்கரபத்திமடல் அடியோடுமொன்று (S.I.I. ii, 15). 7. Beginning; ஆதி. நடுவின் முடிவினி லடியி னன் றான பொருள் (ஞானவா. சனகரா. 22). 8. Source, root of words or plants, origin of lineage, ancestry, or family; மூலம். (தாயு. தேசோ. 10.) 9. Antiquity; பழைமை. 10. Place; இடம். (பிங்.) 11. Racecourse; வையாளிவீதி. (சூடா.) 12. A conventional term in gambling; சூதாடுவோர் குழூஉக்குறியுளெரன்று. அடியிது பொட்டையீ தென்பர் (கந்தபு. கயமுகனு. 168). 13. Indulgence in intoxicating drinks; மதுபானம். Parav. 14. Riches, wealth; ஐசுவரியம். அடியுடையார்க்கெல் லாம் சாதித்துக்கொள்ளலாமே (ஈடு, 4, 2, 9). 15. Nearness, proximity; சமீபம். கிணற்றடியில் நிற் காதே. Colloq. 16. Plan of action; உபாயம். நல்ல அடி எடுத்தாய். Colloq.

இக் குறளில் வரும் அடி என்ற சொல் மேற்காணும் பொருட்களில் பாதத்தை அதாவது காலடியைக் குறிப்பதாகும். அதன்படி, அடியிலாதான் என்ற சொல் அடி இல்லாதவன் அதாவது பாதமில்லாதவன் / காலில்லாதவன் என்று பொருள்படும்.  இங்கே வள்ளுவர் 'பாதம் இல்லாதவன்' என்று யாரைக் குறிக்கிறார் என்றால் காற்றையே குறிக்கிறார். ஏனென்றால், ஓரிடத்தில் நிலையாக இருக்க வேண்டுமென்றால் பாதம் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா. காற்றோ ஒரு நிலையில் இல்லாமல் எப்போதும் இங்குமங்குமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. இக் காரணம் பற்றியே காற்றுக்கு 'காலிலி' அதாவது 'காலில்லாதவன்' என்ற பெயர் ஏற்பட்டது போலும்.

காற்றுக்கு 'காலிலி' என்ற பெயர் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதியும் வின்சுலோ இணையப் பேரகராதியும் கூறுகிறது.

சென்னை:  காலிலி kāl-ili - , n. < id. + இலி. 1. One who is lame; முடவன், முடத்தி. 2. Aruṇa, the lame charioteer of the sun; அருணன். (சூடா.) 3. Snake, as having no legs; பாம்பு. (சூடா.) 4. Wind; காற்று (சூடா.)

வின்சுலோ: காலிலி s. A snake, பாம்பு. 2. Wind, காற்று. 3. The charioteer of the sun, அருணன்; [ex கால், leg, இல், not without legs.]

மேற்கண்ட சான்றுகளில் இருந்து, 'அடியிலாதான்' என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிடுவது 'காலிலி' யாகிய காற்றையே என்பது தெளிவு.

மேலும் இக் குறளில் வரும் 'தாஅய' என்னும் சொல் குறிக்கின்ற 'பரவி இருத்தல்' என்னும் பண்பு காற்றுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாகும். 'தாஅய' என்னும் சொல் 'பரவி இருத்தல்' என்னும் பொருளில் பல பாடல்களில் ஆளப்பட்டுள்ளது. சிலவற்றை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த் - ஐங்கு-328
செந்ந்நில மருங்கின் பல்மலர் தாஅய்ப் - ஐங்கு -495
நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய் - மலை-149
நளி இருஞ் சோலை நரந்தம் தாஅய் - பரிபாடல்
தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் - பரிபாடல்
பவழத்து அன்ன வெம் பூத் தாஅய் - பரிபாடல்

மரங்களில் பூக்கள் பூத்தும் உதிர்ந்தும் பரவிக் கிடக்கும் காட்சியை மேலே காணும் பாடல் வரிகள் நமக்குக் காட்டுகின்றன. இந்தப் பரவிக் கிடக்கும் செயலானது காற்றின் பண்புகளில் ஒன்றாகும் என்று நாம் அறிவோம். இப்படி காற்றானது எங்கெல்லாம் பரவி இருக்கிறதோ அந்த இடங்கள் அனைத்தையும் ஒரு மன்னன் தனது சோர்வில்லாத முயற்சியினால் ஒருங்கே அடைந்து அதன் மூலமாக அந்த இடங்களில் காற்றைப்போல தனது ஆட்சியினையும் புகழினையும் பரப்ப முடியும் என்று இக் குறள் மூலம் கூறுகிறார் வள்ளுவர்.

இங்கு இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். காற்றானது புவி மண்டலத்தில் மட்டுமே பரவி இருப்பதால் ஒரு மன்னன் தனது சோர்வில்லாத முயற்சியினால் இப் புவியை மட்டுமே ஆள முடியும் என்பது தெளிவாகிறது. இது தான் சாத்தியமும் கூட. இதைவிடுத்து, திருமால் தனது திருவடியால் அளந்ததாகக் கூறப்படும் மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒரு மன்னன் முழுமையாக அடைந்து ஆட்சி செய்யலாம் என்று கூறுவது சாத்தியமற்றது என்பதுடன் வள்ளுவத்தின் சமய-மத பேதம் கடந்த மாட்சிக்கு ஒவ்வாதது என்பதே இக் கட்டுரையின் முடிபாகும்.

.......................................... வாழ்க தமிழ்!...............

6 கருத்துகள்:

 1. திருவள்ளுவரைத் திருத்தும் திருத்தம் ஐயா! தங்கள் கட்டுரையில்
  என்ற வரியை சமய-மதம் கடந்த மனநிலை என்று கொள்வதா அல்லது சமய-மதபேதம் கடந்த என்று கொள்வதா?

  [தமிழகத்தில் மதுவிலக்குத் தளர்த்தப்பட்ட சமயத்தில் ஒரு பத்திரிகை அதை எதிர்த்தெழுதுகையில், ‘காந்தியடியகள் மதுவுக்கு எதிரானவர்’ என்றெழுதுவதற்குப் பதிலாக, மதுவிலக்குக்கு எதிரானவர் என்றெழுதி விட்டது, திருத்தம் ஐயா!]

  பதிலளிநீக்கு
 2. வாழ்க சரவணன் ஐயா .....

  உங்கள் திருத்தம் ‘விளாங்காய்ச்சீர்’ ஆக அமைந்திருக்கிறது...

  ஐயனின் குறளில் இந்த ’சீர் அமைப்பு’ இல்லாமலேயே அமைத்திருப்பார் என்பதைக் கவனிக்க வேண்டுகிறேன் ...

  பதிலளிநீக்கு
 3. ஹரியண்ணாவுக்கு வணக்கம்.

  தாங்கள் அறியாததா? :)))

  அன்புடன்,
  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 4. எதுக்கும் ஓலைச்சுவடி ஆய்வு -ஐயத்துக்கு விடை சொல்லக்கூடும்

  பதிலளிநீக்கு
 5. அடி என்பது பாதத்தைக்குறிக்கும் சரி
  அடியிலாதான் என்பது காற்றைக்குறிக்குமென்பது தங்களின் கருத்து. வாதத்திற்காக எதை வேண்டுமானாலும் ஒரு வாதத்திறமையுள்ளவன் மாற்றி மற்றவரின் ஒப்புதலை பெற்றுவிடவியலும்.

  தாங்கள் எடுத்துக்காட்டியுள்ள மற்ற குறள்களில்:

  குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் - 601
  மடியை மடியா ஒழுகல் குடியைக் - 602
  குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து - 604
  படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் - 606
  இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து - 607

  என்பவை இந்தக்குறளிலிருந்து வேறுபடுகிறது !

  எல்லாக் குறளிலிலும் முதல் சீர் மற்றும் நாங்காவது சீரில் முதலெழுத்து தவிர்த்து மற்றவையெல்லாம் ஒத்துப்போகிறது.

  ஆனால்
  மடியிலா ................ ........... அடியிலாதான்
  அவ்வாறில்லை என்பது தெளிவு. அதனால் உங்கள் வாதத்தை என்னால் ஏற்றுகொள்ள இயலவில்லை !

  பதிலளிநீக்கு
 6. மேற்கத்தியர்கள் செய்வது போல இராணி எலிசபெத் 1; இராணி எலிசபத் 2; வில்லியம் 1; வில்லியம் 2 என்பது போல நீங்கள் உங்களை திருவள்ளுவர் 1, திருவள்ளுவர் 2 என்று கூறிக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.