செவ்வாய், 5 ஜூன், 2012

திருக்குறளில் கொலவெறி?

முன்னுரை:

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்    டதனோடு நேர்.   - 550

திருக்குறளில் செங்கோன்மை அதிகாரத்தில் வருகின்ற இக் குறளை அடிப்படையாகக்கொண்டு திருவள்ளுவர் மரண தண்டனையை ஆதரித்தார் என்றும் திருவள்ளுவருக்குக் கொலவெறி பிடித்திருந்தது என்றும் பலர் தாறுமாறாகக் கூறி வருகின்றனர். இக் கருத்துக்கள் எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆதாரங்களுடன் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

கேள்வியும் பதிலும்:

இதுவரையிலும் இல்லாமல் இக் கட்டுரை மட்டும் கேள்வி பதில் வடிவத்தில் அமைக்கப்படுகிறது. காரணம் பலருடைய ஐயப்பாடுகளுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளது. முதலில் வழக்கம் போல அந்த 'மூவரின்' விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கலைஞர் உரை: கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
மு.வ உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்கு நிகரான செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை: கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

கேள்வி: வள்ளுவர் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்குவதை ஆதரித்தாரா?

பதில்: இல்லை. இல்லவே இல்லை.

கேள்வி: ஆனால் குறள் 550 ல் மரண தண்டனை பற்றிப் பேசியுள்ளாரே.

பதில்: இல்லை. அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

கேள்வி: எப்படி?. அதுதான் கொலைக் குற்றவாளிகளுக்கான் தண்டனையானது வயலில் களை பறிக்கும் செயலுக்கு ஒப்பானது என்று கூறி இருக்கிறாரே. ஆனால் வயலில் களை பறிக்கும் செயலோ அதனைக் கொலை செய்யும் செயலாயிற்றே. இதனுடன் அந்த தண்டனையை ஒப்பிட்டிருப்பதால் அத் தண்டனையானது குற்றவாளிகளுக்கு மரணத்தைத் தரும் தண்டனையைத் தானே குறிப்பதாகப் பொருள்.?

பதில்: முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வயலில் களை எடுப்பது எதற்காக?. பயிர் நன்கு விளைய வேண்டும் என்பதற்காகத் தானே. களையைப் பறிப்பது கொலை என்றால் பயிர் நன்கு விளைந்த பின்னர் அதனையும் நாம் அறுவடை செய்து விடுகிறோமே அது மட்டும் கொலை இல்லையா?. அறுவடைக்குப் பின்னர் வயலுக்குத் தீ வைக்கும் போதும் பல உயிர்கள் கொலை செய்யப்படுவதில்லையா?. ஆக, உழவு என்கிற வேளாண்மையும் நமது வாழ்க்கை முறையினைப் போல ஆக்கல், வளர்த்தல், அழித்தல் என்ற மூன்று வகைப்பட்ட வினைகளுக்கும் உட்பட்டது தானே. அழித்தல் என்னும் கொலை இல்லாவிட்டால் உணவு கிட்டுமா நமக்கு?. கடவுள் வாழ்த்தில் கூட வேளாண்மையைத் தூக்கிப் பிடிக்கும் ஒப்பற்ற புலவரான வள்ளுவர் " வேளாண்மை ஒரு கொலைத் தொழில்; அதனால் அதனை செய்ய வேண்டாம்" என்று எங்காவது கூறியுள்ளாரா?. இல்லையே. வேளாண்மைத் தொழிலில் மண்ணோடியைந்த பல உயிர்கள் அழிவது தவிர்க்க முடியாதது. இக் கொலைகளுக்குப் பதிலீடாகத் தான் உழவர்களை ' பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக' என்று கூறியுள்ளார்.

கேள்வி: என்றால் களை பறிப்பது கொலைச் செயலில்லையா?.

பதில்: கொலைச் செயல் தான்.

கேள்வி: இந்தக் கொலைச் செயலுடன் கொடிய குற்றவாளிகளுக்கான தண்டனையை ஒப்பிட்டிருப்பதால் இக் குற்றவாளிகளையும் கொலை செய்ய வேண்டும் என்று கூறுவதாகத் தானே பொருள்.?

பதில்: இல்லை. முன்பே சொன்னது போல வேளாண்மையில் கொலை என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் ஒரு மன்னன் நினைத்தால் மனிதக் கொலையைத் தவிர்க்க முடியும். எனவே இந்த இரண்டையும் ஒப்பிடுவது தவறாகும்.

கேள்வி: ஆனால் மேற்காணும் உரைகளில் மு.வ.வும் சாலமன் பாப்பையாவும் வள்ளுவர் மரண தண்டனை கொடுக்கச் சொல்வதாக உரை இயற்றியுள்ளனரே.

பதில்: மேலே கூறப்பட்ட தவறான ஒப்புமையால் வந்த விளைவு தான் இது. வள்ளுவர் கூற வருவது குற்றவாளிகள் யாராயினும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே.

கேள்வி: குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று முதல் வரியிலேயே சொல்லிவிட்டாரே பின்னர் ஏன் வயலில் களை பறிக்கும் செயலைப் பற்றி இரண்டாம் வரியில் கூறவேண்டும்.?

பதில்: இரண்டாம் வரியை சரியாகத் தான் வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.முதல் வரியினைத் தான் நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: கொஞ்சம் தெளிவாகக் கூறுங்களேன்.

பதில்: முதலடியில் ஒரு எழுத்துப்பிழை காரணமாக நாம் அதன் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்ளும்படி ஆகிவிட்டது.

கேள்வி: முதலடியில் எழுத்துப்பிழையா?. அறிவதற்கு ஆவலாக உள்ளேன். கூறுங்கள்.

பதில்: 'கொலையிற் கொடியாரை' என்பதற்குப் பதில் ' கொலைவிற் கொடியாரை' என்று இருக்க வேண்டும்.

கேள்வி: இதன் பொருள்?

பதில்: கொலைவிற் கொடியார் = கொலை + வில் +கொடியார்

அதாவது, கொலைத்தொழில் புரியும் வில் போல வளைந்து ஆண்களின் இதயங்களைத் தாக்கும் புருவங்களையும் கொடி போல இருக்கிறதோ இல்லையோ என்று மெலிந்த நிலையில் ஆண்களின் உள்ளங்களை உலுக்கும் இடையினையும் உடைய மகளிர் என்று பொருள்.

கேள்வி: சரி,  இக் குறளில் கொடியிடைப் பெண்களுக்கும் களை பறித்தலுக்கும் என்ன தொடர்பு?

பதில்: தொடர்பு இருக்கிறது. பல்லாண்டு காலமாக வயலிலே களை பறிப்பது யார்?. பெண்கள் தானே!. மேலும் செங்கோன்மை அதிகாரத்தில் 549 ஆம் குறளில் அதாவது நமது தலைப்புக் குறளுக்கு முந்தைய குறளில் வள்ளுவர் என்ன சொல்கிறார்?

கேள்வி: கேள்வியை நான் தான் கேட்க வேண்டும். பரவாயில்லை. பதில் கூறுகிறேன்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

என்று கூறி இருக்கிறார். அதாவது குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும் என்று கூறி இருக்கிறார்.

பதில்: குற்றவாளிகள் யாராயினும் என்றால் பெண்களாக இருந்தால் கூட தண்டிக்கலாம் என்று தானே பொருள்.?

கேள்வி: அப்படித் தான் பொருள் என்று நினைக்கிறேன். அடடா, எனக்குப் பதிலாக நீங்களே தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 

பதில்: காரணம் இருக்கிறது. என்னதான் குற்றவாளிகள் ஆனாலும் மென்மையான இதயம் கொண்ட பெண்களைத் தண்டிப்பது எவ்வகையில் நியாயமாகும்?. இதன் அடிப்படை என்ன?.

கேள்வி: ஐயா, இனி கேள்வியும் நீங்களே, பதிலும் நீங்களே. நீங்களே கூறி விடுங்களேன்.

பதில்: கூறுகிறேன். குற்றவாளிகள் யாராயினும் அவருக்குத் தக்க தண்டனை வழங்குவது தான் ஒரு செங்கோல் அரசாட்சியாகும். பொதுவாக குற்றங்கள் ஆண்களால் தான் செய்யப்படுகின்றன. இந்த ஆண்களுக்குத் துணை போகின்ற ஒரு குற்றத்தினை மட்டுமே பெண்கள் செய்கிறார்கள். இப்படிக் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருக்கின்ற காரணத்தினால் சட்டத்தின் பார்வையில் இவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களாக ஆகின்றனர். குற்றவாளிகளைத் தண்டிக்குமிடத்து உடந்தையாக இருந்த பெண்களும் அரசனால் தண்டிக்கப் படுகிறார்கள். இச் செயல் எத்தகையது என்றால் வயலில் விளைந்திருக்கும் இளம்பயிர் ( பைங்கூழ் ) களுடன் இடையிடையே விளைந்திருக்கும் களைகளைப் பறிக்குமிடத்து அக்களைகளை ஒட்டி வளர்ந்துள்ள ஓரிரண்டு பயிர்களும் பறிக்கப்பட்டு விடுவதைப் போன்றதாகும்.

எப்படி பயிர்ப் பாதுகாப்புக்குக் களை பறித்தல் இன்றியமையாததோ அதைப் போல நீதியை நிலைநாட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும். ஓரிரண்டு பயிர்கள் அழியுமே என்பதற்காக களை பறிப்பதை விட்டுவிட முடியாது. அதைப்போல ஓரிரண்டு பெண்கள் தண்டிக்கப்படுவார்களே என்பதற்காக நீதியைச் சீர்குலைக்க முடியாது. ஏனென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதுவே வள்ளுவன் வாக்கு.

கேள்வி: எழுத்தை மாற்றியவுடன் விளக்கம் பொருத்தமாக இருக்கிறது ஐயா. ஒரே ஒரு எழுத்துப்பிழையினால் இவ்வளவு பொருள் மாறுபாடுகளா?. சரி, இந்த எழுத்துப்பிழைகளுக்கு யார் காரணமாக இருக்க முடியும் ஐயா?

பதில்: ஹ ஹ் ஹஹ் ஹா.

முடிவுரை:

இதுவரை கண்ட கேள்வி பதில் பகுதியில் இருந்து பெறப்பட்ட இக்குறளின் திருந்திய வடிவம் இதுதான்:

கொலைவிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்    டதனோடு நேர்.   - 550

அதுமட்டுமின்றி மேற்காணும் திருந்திய குறள் மூலம் வள்ளுவர் மரண தண்டனையை ஆதரிக்க வில்லை என்பதும் அவருக்குக் கொலவெறி இல்லை என்பதும் நிறுவப்படுகிறது.

3 கருத்துகள்:

 1. ஐயா.. தங்களின் திருத்திய விளக்கம் முற்றிலும் ஏற்புடையதாக இருக்கிறது..
  ஆனால் இத்தகு எழுத்துப்பிழை எதனால் உண்டாகியிருக்கும்?

  பதிலளிநீக்கு
 2. திரு. லோகநாதன்

  க்ருத்துக்கு மிக்க நன்றி. பனை ஒலைச் சுவடிகளில் ஏற்படும் அரிப்புகள், முறிவுகள் மற்றும் படி எடுத்து எழுதும் போது ஏற்படும் பிழைகள், அச்சுப்பிழைகள் போன்று பலவற்றை எழுத்துப்பிழைகளுக்கான காரணங்களாகக் கூறலாம்.

  ஆனாலும் இப்பிழைகளை முறையான ஆய்வின் மூலம் கண்டறிய முடியும்.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.