தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொல்காப்பியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 நவம்பர், 2019

சங்க இலக்கியத்தில் சகரமுதல் சொற்கள் யாவும் தமிழ்தானா?


முன்னுரை:

தமிழ்ச் சொற்கள் சகரத்தில் தொடங்காது என்பது சரியா? என்ற ஆய்வுக் கட்டுரையில் "சரியல்ல" என்பதே ஆய்வு முடிவாகக் கூறப்பட்டது. இது தொடர்பாகத் தொல்காப்பியத்தில் காட்டப்படும் மொழிமரபு நூற்பா 29 ம் ஓர்  இடைச்செருகலே என்றும் நிறுவப்பட்டது. இந்த முடிவுக்கு ஆதரவாகச் சங்க இலக்கியத்தில் பயின்று வரும் சகர முதல் சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே என்னும் கருத்து அந்தக் கட்டுரையில் முன்வைக்கப் பட்டது.

சங்க இலக்கியத்தில் பயின்று வரும் சகரமுதல் சொற்கள் சகடம், சங்கம், சடை, சண்பகம், சதுக்கம், சந்து, சந்தம், சந்தனம், சந்தி, சமம், சமன், சமழ்ப்பு, சமைப்பு, சரணம், சருமம், சலம், சவட்டு, சனம் ஆகியவை ஆகும். சங்க இலக்கியத்தில் பயின்று வருவதால் மட்டும் சகர முதல் சொற்கள் யாவும் தமிழாகி விடுமா? என்ற கேள்வி எழுந்ததால் அக் கேள்விக்குச் சரியான விளக்கமான விடைகூறும் விதமாக இக் கட்டுரை வரையப்படுகிறது.

இலக்கணப் போலிகள்:

தமிழ் இலக்கியங்களில் பாடல்களைப் புனைவதற்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு உத்திகளில் ஒன்றுதான் இலக்கணப்போலி ஆகும். இலக்கணப் போலிகள் எனப்படுபவை தவறான வழக்குச் சொற்கள் அல்ல. ஏற்கெனவே வழக்கில் இருக்கும் சொல்லில் ஒரேயொரு எழுத்தை மட்டும் மாற்றியோ சேர்த்தோ நீக்கியோ அதே பொருளில் புதிய சொல்லை உருவாக்குவதே இலக்கணப் போலி எனும் உத்தியாகும்.

புதிய சொற்களை உருவாக்கும்போது சொல்லின் முதலில் வரும் உயிரெழுத்துடன் மெய்யெழுத்துக்களைச் சேர்ப்பது இலக்கணப் போலியில் ஒருவகையாகும். கீழே சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

அறை (சொல்) >>> பறை, அலங்கு >>> கலங்கு, ஆறு >>> யாறு
உன்னம் (கருத்து) >>> முன்னம், உந்தி (வயிறு) >>> துந்தி

சம்மோனைப் போலிகள்:

சொல்லுக்கு முதலில் வரும் உயிர் எழுத்துக்களுடன் சகர மெய்யினைச் சேர்த்து உருவாக்கப்பட்ட போலிச் சொற்களே சம்மோனைப் போலிகள் எனப்படும். தமிழ் இலக்கியங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ள போலிச்சொற்கள் சம்மோனைப் போலிகளே ஆகும். சம்மோனைப் போலிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கீழே சில சான்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இறகு >>> சிறகு,  இப்பி >>> சிப்பி,  உணங்கு >>> சுணங்கு

சங்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சகரமுதல் சொற்கள் பெரும்பாலும் சம்மோனைப் போலிகளாகவே அமைந்துள்ளன. அதாவது, உயிர்முதல் சொற்களில் முதலில் வரும் உயிர் எழுத்துடன் சகரமெய் சேர்த்துப் புதிய சொல்லாக உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டு இலக்கியங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட சம்மோனைப் போலிகளைப் பின்னாளில் எழுந்த இலக்கியங்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கின எனலாம். இனி, சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ள பல்வேறு சம்மோனைப் போலிச் சொற்களைப் பற்றி விளக்கமாகத் தனித்தனியாகக் காணலாம்.

சங்கம் (=கூட்டம்):

கூட்டம் என்ற பொருளைத் தருவதான அங்கண் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே சங்கம் என்ற தமிழ்ச் சொல் தோன்றியது.

அங்கண் (கூட்டம்) >>> சங்கம்

அங்கண் என்ற சொல்லானது கூட்டம் என்ற பொருளில் ஏராளமான சங்க இலக்கியப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. ஒருசில பாடல்கள் மட்டும் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று – அகம். 208
அங்கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம்.56
அங்கண் விசும்பின் அகல் நிலா பாரிக்கும் – நால. 16/1

சங்கம் என்னும் சொல்லைப் பற்றிய மேலதிக தகவல்களைக் கீழ்க்காணும் சுட்டியில் உள்ள கட்டுரையில் படித்து அறியலாம்.


சலம் (=நீர்):

அலம்புதல் என்ற வினைச்சொல்லுக்கு அலைதல், ததும்புதல், ஒலித்தல், கழுவுதல், கலத்தல் என்றெல்லாம் பல பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. இந்த அனைத்து வினைகளையும் செய்கின்ற ஒரே பொருள் நீர் தான். இவ் அடிப்படையில், அலம்புதல் என்ற வினைச்சொல்லில் இருந்தே நீரைக் குறிக்கும் தமிழ்ச்சொல் கீழ்க்காணுமாறு பிறக்கும்.

அலம்பு >>> சலம்பு >>> சலம்

அலம்பும் சலம்பும் சம்மோனைப் போலிகள். சலம்பும் இயல்புடையதால் நீருக்குச் சலம் என்ற பெயர் உண்டாயிற்று. சலம் என்ற தூய தமிழ்ப் பெயரே கீழ்க்காணும் விதிகளுக்கேற்ப தமிக்ருத மொழியில் திரிந்து நீரைக் குறிக்க எழுந்தது.

சலம் >>> ச^ல (வி.15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச^கரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.

சருமம் (=தோல்):

சார்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பொருந்தியிருத்தல், ஒட்டியிருத்தல், பற்றியிருத்தல் என்றெல்லாம் பொருட்கள் உண்டென்று தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. சார்தல் என்ற வினையை அடிப்படையாய்க் கொண்டு தோன்றிய தமிழ்ச் சொல்லே சருமம் ஆகும். அதாவது, எலும்புகளாலும் தசைகளாலும் ஆன உடலை ஒட்டிக்கொண்டு / பற்றிக்கொண்டு இருப்பதால் தோலுக்குச் சருமம் என்ற பெயர் ஏற்பட்டது.

சார் (ஒட்டு, பொருந்து) >>> சருமம் (தோல்).

பி.கு: சார்தல் என்ற வினையில் இருந்து தோலைக் குறிக்கும் சருமம் என்ற சொல் தோன்றியதைப் போலவே கீழ்க்காணும் பல்வேறு சொற்களும் தோல் சார்ந்த பெயர்களாய் உருவாகின.

சார்க்கரம் = பாலின்மேல் தோன்றும் ஆடை
சர்ப்பம் = தோல் உரிப்பது = பாம்பு
சரசம் = தோலுடன் தோல் உரசுதல்
சரடம் = தோல்நிறத்தை மாற்றிக் கொள்வது = பச்சோந்தி
சரடு = தோல் போல மறைப்பது = தந்திரம், பொய்

சனம் (=மக்கள்):

அணத்தல் / அணவுதல் என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கூடுதல், உயர்தல், எழுதல்  என்ற பொருட்களுண்டு என்று தமிழ் அகராதிகள் கூறுகின்றன. உயர்தல் / எழுதல் என்ற வினையானது விரிவாக்க நிலையில் தோன்றுதல் என்ற பொருளைத் தருவதும் இயல்பான ஒன்றே ஆகும். காரணம், கடலில் இருந்து கதிரவன் உயர்ந்து எழுவதையே கதிரவன் தோன்றினான் என்று கூறுகிறோம். உயர்தல் என்பது தோன்றுதல் பொருளையும் குறிக்கும் என்ற அடிப்படையில் தோன்றியதே உயிரி என்னும் சொல்லாகும். (உயர் >>> உயிர் >>> உயிரி).

அணத்தல் என்னும் சொல்லானது அணவுதல் என்றும் வருவதைப் போலவே அணவரல் என்றொரு வடிவமும் இலக்கியத்தில் உண்டு. அணவரல் என்ற சொல்லுக்குத் தோன்றுதல் என்ற நேரடிப் பொருளே உண்டு. அணவரல் என்பது தோன்றுதல் பொருளில் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் வந்திருப்பதைக் காணலாம்.

தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர - பரி 1
அம் வரி உரிவை அணவரும் மருங்கின் - அகம் 327

தோன்றுதல் பொருளைத் தருவதான அணவுதல் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து சனம் என்ற தமிழ்ச் சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

அணவு (தோன்று) >>> சணவு >>> சணம் >>> சனம் (தோன்றுவன = உயிரி)

அணவு என்பது சணவு என்று சம்மோனைப் போலியாக மாறி அதில் இருந்து சணம் என்ற பெயர்ச்சொல் தோன்றும். சணப்பது அதாவது தோன்றுவது உயிரின் இயல்பாதலால் சணம் என்பது உயிர்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகியது.   

சணம் என்பது சனம் என்று மாறுவது வருக்க / இனப் போலியாகும். ஒரு இனத்தைச் சேர்ந்த மெய்யெழுத்து ஒன்று அதே இனஞ்சேர்ந்த இன்னொரு மெய்யாக மாறுவது இனப்போலி வகையாகும். இதற்குக் காட்டாக வேறு சில சான்றுகளையும் கீழே காணலாம்.

வண்ணம் >>> வன்னம்,  கணை >>> கனை.

சணத்தல், சணம் ஆகிய தமிழ்ச் சொற்களில் இருந்தே கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப தமிக்ருதச் சொற்கள் தோன்றும்.

சண (தோன்று) >>> ச^ன் (வி. 15,6)
சணம் (உயிரி) >>> ச^ன (வி. 15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச^கரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் / மாற்று விதி – இதன்படி விகுதி கெட்டது / மாறியது.

சடை (=முடி):

அடைதல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு பொருந்துதல், சேர்தல், சேர்ந்து இறுகுதல் என்ற பொருட்களைத் தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. தலையில் உள்ள முடியானது நாள்தோறும் எண்ணை நீவி வாரப்படா விட்டால்  தனித்தனியாக இராமல் ஒன்றுசேர்ந்து இறுகி விடும். இப்படி ஒன்றுசேர்ந்து இறுகிய நிலையில் இருக்கும் முடியினையே சடை என்று கூறுகிறோம். சடை என்ற தமிழ்ச் சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

அடை (சேர்ந்து இறுகு) >>> சடை (இறுகிய முடி)

சடை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்ப ச^டா எனும் தமிக்ருதச் சொல் தோன்றும்.

சடை >>> ச^டா (வி.15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரம் ச^கரமாக மாறியது.
வி.6 – விகுதி மாற்று விதி – இதன்படி விகுதி மாறியது.

பி.கு: சேர்ந்து இறுகித் திரண்டு தொங்குகின்ற தலைமுடியைக் குறித்துவந்த சடை என்னும் சொல்லானது பின்னாளில் அவ்வாறு தோன்றும் வேர்கள் மற்றும் விழுதுகளையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சகடம் (=வண்டி):

அகல்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்குக் கடத்தல், நீங்குதல் என்றெல்லாம் பொருட்கள் உண்டென்று தமிழ் அகராதிகளில் காணலாம். அகல்தல் என்ற சொல்லே அகறல் என்றும் இலக்கியங்களில் வழங்கப்பெறும். அகறல் என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணும் சொற்கள் தோன்றும்.

அகறல் (கடத்தல்) >>> சகறல் >>> சக்கரம் (1), சகடம் (2) (கடக்க உதவுவது)

மேலே காண்பதைப் போன்று, றகரம் ரகரமாக மாறுவதும் டகரமாக மாறுவதும் தமிழ் மொழியின் இயல்பே ஆகும். கீழே சில சான்றுகளைக் காணலாம்.

(1)  முறி >>> முரி,      சிதறு >>> சிதர்,      உலறு >>> உலர்
(2)  அசறு >>> அசடு,    முசிறு >>> முசிடு,   முற்று >>> முட்டு

கடத்தல் என்னும் பொருளைத் தருவதான அகறல் என்னும் தமிழ்ச் சொல்லை அடிப்படையாய்க் கொண்டு தோன்றியதால் சக்கரமும் சகடமும் தமிழ்ச் சொற்களே என்பதை அறிந்து கொள்ளலாம்.

சரணம் (=செருப்பு):

அரணம் என்ற தமிழ்ச் சொல்லுக்குச் செருப்பு என்ற பொருள் உண்டு என்று தமிழ் அகராதிகள் காட்டுகின்றன. அரணம் என்ற சொல் செருப்பு என்ற பொருளில் சங்க இலக்கியத்திலேயே வந்திருப்பதைக் கீழே காணலாம்.

அடி புதை அரணம் – பெரும்பாண். 69

அரணம் என்ற தமிழ்ச் சொல்லின் சம்மோனைப் போலியே சரணம் ஆகும். அரணம் என்ற சொல்லே சரணம் என்று சம்மோனைப் போலியாகச் செருப்பு என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் பயின்று வந்துள்ளது.

அரணம் (செருப்பு) >>> சரணம் (செருப்பு)

.......................... தொடரும்…………

புதன், 13 நவம்பர், 2019

கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையா?


முன்னுரை:

தமிழ் அல்லாத பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போது சில ஒலிகளைக் குறிப்பதற்காக ஸ, ஜ, ஹ, ஷ, க்ஷ என்ற ஐந்து கிரந்த எழுத்துக்களைத் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ் இலக்கண நூல்கள் எவையும் குறிப்பிடாத இந்த கிரந்த எழுத்துக்களைத் தமிழில் எழுதும்போது அதனை நீக்கிவிட்டு வேறொரு தமிழ் எழுத்தைக் கொண்டே எழுதவேண்டும் என்று தொல்காப்பியர் சொல்லதிகாரம் 401 ஆவது நூற்பாவில் கூறியுள்ளார்.

பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் மேற்காணும் விதியைப் பின்பற்றியிருந்தாலும் கல்வெட்டுக்கள் இந்த விதியைக் காற்றில் பறக்க விட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட ஏராளமான கல்வெட்டுக்களில் இந்த விதி மீறப்பட்டுள்ளது. வடசொற்களில் இருக்கும் புதிய ஒலிகளைக் குறிக்க மேற்காணும் கிரந்த எழுத்துக்களைக் கல்வெட்டுக்களில் பயன்படுத்தி இருக்கின்றனர். தமிழ்மொழிக்கு இந்த கிரந்த எழுத்துக்கள் உண்மையிலேயே தேவைதானா?. என்பதைப் பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

சொல்லதிகார நூற்பா 401 கூறுவது என்ன?:

வடசொற்களைத் தமிழில் எழுதும்போது என்ன செய்யவேண்டும்? என்று சொல்லதிகாரம் நூற்பாவில் கீழ்க்காணுமாறு கூறியுள்ளார் தொல்காப்பியர்.

வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே. – தொல்.சொல்.401.

அதாவது, வடசொல்லானது அதிலுள்ள வடவெழுத்துக்களை நீக்கித் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய சொல்லாக மாறும் என்று இந்த நூற்பாவுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இதன்படி, ஸ்நேகா என்ற வடமொழிப் பெயரை எப்படித் தமிழ் எழுத்துக்களால் எழுதுவது?. இப்பெயரில் உள்ள ஸ் என்ற வட எழுத்தினை நீக்கிவிட்டு சகர எழுத்தைப் போட்டால் ச்நேகா என்றுதான் வரும்.

தொல்காப்பியரும் மேற்காணும் நூற்பாவின்படி, ஸ்நேகா என்பதனை ச்நேகா என்றே எழுதச் சொல்லுகிறார். மாறாக, சிநேகா என்றோ சுநேகா என்றோ சநேகா என்றோ சகரத்துடன் உயிரெழுத்தைக் கூட்டி எழுதச் சொல்லவில்லை; அது அவரது நோக்கமுமில்லை. காரணம், அப்போதுதான் அது பிறமொழிச் சொல் என்று மக்களுக்குத் தெரிய வரும் என்றும் தமிழ்மொழியில் கலந்துவிடாமல் எப்போதும் அது தனித்தே இருக்கும் என்றும் கருதியிருக்கிறார். சான்றாக,

ஸ்டாலின், அஸ்வின், ரமேஷ் என்பதை நூற்பாவின்படி எழுதாமல் சுடாலின், அசுவின், உரமேசு என்று எழுதினால் நாளடைவில் இவை தமிழ்ச் சொற்களாகவே அறியப்பட்டுத் தமிழில் கலந்துவிடும். இதனால் தமிழ்மொழியின் தூய்மையானது கேள்விக்குறியாகி விடும்.

வடசொற்களால் தமிழ்மொழியின் தூய்மை கெட்டுவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தினைக் கருத்தில் கொண்டே இந்த நூற்பாவைத் தொல்காப்பியர் இயற்றினார் என்க. எனவே, தொல்காப்பிய நூற்பாவின்படி, ஸ்டாலின், அஸ்வின், ரமேஷ் ஆகிய வடசொற்களைக் கீழ்க்காணுமாறு தான் எழுத வேண்டும் என்று அறியலாம்.

ஸ்டாலின் = ச்டாலின்,  அஸ்வின் = அச்வின்,  ரமேஷ் = ரமேச்.

கிரந்த எழுத்துக்களால் முழுமையான பயனுண்டா?:

வடசொற்களில் உள்ள வடவெழுத்துக்களை நீக்கியே எழுதவேண்டும் என்று தொல்காப்பியர் கூறினாலும் தமிழ்மொழியில் இல்லாத புதிய ஒலிகளைக் குறிக்க கிரந்த எழுத்துக்களைத் தான் இன்றும் தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சான்றாக,

MAHATMA என்பதை மஹாத்மா என்றும்
SUBASH என்பதை ஸுபாஷ் என்றும்

கிரந்த எழுத்துக்களைக் கொண்டு எழுதி வருகின்றனர். கிரந்த எழுத்துக்கள் பிறமொழிப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதற்கு உதவியாக இருப்பதாகக் கருதுகின்றனர். ஆனால், இந்த ஐந்து கிரந்த எழுத்துக்களை மட்டும் வைத்துக் கொண்டு தமிழில் இல்லாத புதிய ஒலிகள் அனைத்தையும் குறிப்பிட முடியாது என்பதுதான் உண்மை. இந்த உண்மையைக் கீழ்க்காணும் சில சான்றுகளின் உதவியுடன் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

GANDHI, BABUR, DHARMA, DIANA, BUDDHA

மேற்காணும் பிறமொழிப் பெயர்களில் எதனையும் இந்த ஐந்து கிரந்த எழுத்துக்களின் உதவியுடன் மொழிபெயர்க்க முடியுமா என்றால் முடியாது. காரணம், GA, BA, DHA, DA போன்ற ஒலிகளைக் குறிக்கும் கிரந்த எழுத்துக்கள் இல்லை. இதைப்போல ஏராளமான பிறமொழிச் சொற்களை மிகச் சரியான ஒலிப்புடன் குறிப்பதற்குக் கிரந்த எழுத்துக்கள் இல்லை என்பது இங்கே கவனிக்க வேண்டிய கருத்தாகும். எனவே, கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு முழுமையான பயன் இல்லை என்பது உறுதியாகிறது.

கிரந்த எழுத்துக்களால் தமிழுக்குத் தீமையே:

கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு ஒரு பயனும் இல்லை என்று மேலே கண்டோம். மாறாகக், கிரந்த எழுத்துக்களின் பயன்பாட்டால் தமிழுக்குத் தீமைகளே அதிகம் உண்டாகி விட்டன எனலாம்.. கல்வெட்டுக்களிலும் பிற்காலத்து எழுந்த சில இலக்கியங்களிலும் கிரந்த எழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களுடன் தாராளமாகச் சேர்த்தும் புகுத்தியும் எழுதத் தொடங்கினர். இதன் விளைவாக, பல ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் தமது உண்மை வடிவத்தை இழந்தன. சான்றாக,

புத்தகம் புஸ்தகம் என்று ஆகியது.
சலம் ஜலம் ஆகியது.
நானம் ஸ்நானம் ஆகியது.

இப்படி ஏராளமான தமிழ்ச் சொற்களில் தேவையே இன்றி கிரந்த எழுத்துக்களைச் சேர்த்தும் புகுத்தியும் எழுதியதன் விளைவாகப் பல தமிழ்ச் சொற்கள் தமிழா? சமக்கிருதமா? என்ற கேள்விக்கு உள்ளாகியுள்ளன. சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகவே இருந்தாலும் கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்ட காரணத்தால் அவை சமக்கிருதமே என்று மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர். நம்பியதுடன் நிற்காமல் அந்தச் சொற்களைப் பயன்படுத்துவதையும் கைவிட்டு விட்டனர் என்பதே கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு விளைந்த மிக மோசமான விளைவாகும். சான்றாக, சந்திரன், சிரத்தை, சாமி போன்ற சொற்கள் எல்லாம் தமிழாகவே இருக்க, அவற்றில் வரும் சகரத்துக்குப் பதிலாக ஸகரத்தைப் போட்டு எழுதியதால் இவற்றைத் தமிழ் அல்ல என்று நினைத்துத் தமிழ் ஆர்வலர் பலரும் இச்சொற்களுக்குப் பதிலாக நிலவு, அன்பு, கடவுள் என்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர். 

கிரந்த எழுத்துக்களை ஏராளமான தமிழ்ச் சொற்களில் தாராளமாகக் கலந்து எழுதியது தவறு என்று தற்போது தமிழர்கள் உணர்ந்து விட்டனர். அதன் தொடர்ச்சியாக, இப்போது அந்த கிரந்த எழுத்துக்களை எல்லாம் தமிழ்ச் சொற்களில் இருந்து முழுமையாக நீக்கவேண்டும் என்று விரும்பி அதற்கென சில கணினி மென்பொருட்கள் மற்றும் செயலிகளை உருவாக்கி வருகின்றனர். 

கிரந்த எழுத்துக்களுக்கு மாற்றுவழி என்ன?

கிரந்த எழுத்துக்களால் தமிழுக்கு முழுமையான பயன் இல்லை என்றும் அவற்றால் தமிழுக்குத் தீமையே என்றும் மேலே கண்டோம். என்றால், பிறமொழிப் பெயர்களை அவற்றின் உண்மையான ஒலிப்புடன் கிரந்த எழுத்து கலவாமல் எப்படித் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதுவது என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையை இங்கே காணலாம்.

சொல்லதிகார நூற்பா 401 ன்படி, வடசொற்களில் இருந்து வடவெழுத்துக்களை நீக்கிவிட்டுத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு எழுதலாம் என்ற ஒரு வழிமுறை இருப்பதை மேலே கண்டோம். ஆனால், இந்த முறைப்படி எழுதும்போது சில சிக்கல்கள் எழாமல் இல்லை. சான்றாக, அஸ்வின் என்பதை நூற்பாவின்படி அச்வின் என்று எழுதினால், இதில்வரும் சகரத்தை எவ்வாறு ஒலிக்கவேண்டும் என்பது புதிதாக அச்சொல்லைப் படிப்பவர்களுக்குப் புரியாமல் போகிறது. இதனால் அவர்கள் அச்வின் என்றே ஒலிப்பார்கள். அதுமட்டுமின்றி, அச்வின் என்பதை ஆங்கிலத்தில் எழுதும்போதும் ACHWIN என்றே எழுதுவார்கள். இப்படி அந்தச் சொல்லின் உண்மையான ஒலிப்பு சிதைவதால் அதனைக் கேட்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புக்கள் அதிகமாகிறது.

அதுமட்டுமின்றி, வடவெழுத்துக்களைத் தமிழ் எழுத்துக்களால் மாற்றி எழுதும்போது அந்தச் சொற்களின் பொருளும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதுண்டு. சான்றாக, விஜயம் என்ற வடசொல்லை நூற்பாவின்படி விசயம் என்று தமிழில் மாற்றி எழுதும்போது தவறாகப் புரிந்துகொள்ளப்படும். காரணம், விஜயம் என்பது வெற்றியையும் விசயம் என்பது கருப்பட்டியையும் குறிக்கும்.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது தான் ஆறுரூபாய் முறை ஆகும். ஆறுரூபாய் முறையைப் பற்றிக் கீழ்க்காணும் சுட்டியில் உள்ள கட்டுரையில் முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.


ஆறுரூபாய் முறையைப் பற்றியும் அது செயல்படும் விதம் பற்றியும் கீழே சுருக்கமாகச் சில சான்றுகளுடன் காணலாம்.

ஆறுரூபாய் முறை:

தமிழில் இல்லாத புதிய ஒலிகளைக் குறிப்பதற்கு `, ~, ^ என்ற மூன்று குறியீடுகளைத் தமிழ் எழுத்துக்களுடன் சேர்த்துப் பயன்படுத்துவதே ஆறுரூபாய் முறை ஆகும். கணினியின் விசைப்பலகையில் உள்ள இந்த மூன்று குறியீடுகளும் கூட்டல், கழித்தல் போன்ற குறியீடுகளைப் போல அனைத்து மொழியினருக்கும் பொதுவானவையே ஆகும். கணினி விசைப்பலகையில் ஆறாம் எண் உள்ள பொத்தானிலும் ரூபாய்க் குறியீடு உள்ள பொத்தானிலும் இந்த மூன்று குறிகள் இருப்பதால் ஆறுரூபாய் என்று இந்த முறைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்புதிய முறைப்படி, வல்லின மெய்யெழுத்துக்களுடன் இந்த மூன்று குறியீடுகளும் சேர்ந்து எவ்வாறு புதிய ஒலிகளைக் குறிக்கப் பயன்படும் என்று கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

குறியீடு
`
~
^
^^
^`
^~
HA
GA
GHA



SA
SHA
JA
JHA
ZA
KSHA
DA

DDA



DHA

DDHA



BA

BHA

FA


மேற்காணும் அட்டவணையைப் பயன்படுத்திச் சில பிறமொழிப் பெயர்களை எவ்வாறு தமிழ் எழுத்துக்களால் எழுதலாம் என்று காணலாம்.

STALIN                          - ச்`டாலின்
SUBASH CHANDRA BOSE           - சு`பா`ச்~ சந்த்`ர போ`ச்`
RAMESH                         - ரமேச்~
BILL CLINTON                     - பி`ல் க்ளிண்டன்
ANSUI ZEN                       - அன்சூ`ய் செ^`ன்
MAHATMA GANDHI                 - மகா`த்மா கா~ந்தி`
JAWAHARLAL NEHRU               - ச^வக`ர்லால் நேரு
BHAGAVAT SING                  - ப^க~வத் சி`ங்
BUDDHA                                      - பு`த்தா^
LAKSHMAN                                  - லச்^~மண்
FEROZ                                      - பெ^`ரோச்^` அல்லது ஃபெரோச்^`

ஆறுரூபாய் முறையின் நன்மைகள்:

ஆறுரூபாய் முறையைப் பயன்படுத்தி பிறமொழிச் சொற்களை எழுதுவதால் என்னென்ன நன்மைகள் விளையும் என்று இங்கே காணலாம்.

1.   தமிழ்மொழியில் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு அறவே ஒழிக்கப்படுகிறது.
2.   பிறமொழிச் சொற்களில் உள்ள எழுத்துக்களை எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்று புரிந்துகொண்டு சரியாக ஒலிக்க முடிகிறது.
3.   `, ~, ^ என்ற மூன்று குறியீடுகளைக் கொண்டவை எல்லாம் பிறமொழிச் சொற்கள் என்பதால் அவற்றைத் தனியே இனம் காண முடிகிறது. இதனால் தமிழில் பிறமொழிக் கலப்பினை முற்றிலும் தவிர்க்க முடிகிறது.
4.   ஆங்கிலம் உட்பட பிறமொழிகள் எவற்றின் உதவியுமின்றி முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்துக்களிலேயே எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் அறிவியல் கட்டுரைகளை எழுத முடிகிறது.
5.   இந்த மூன்று குறியீடுகளும் உலகப் பொதுவாக இருப்பதால் எந்த நாட்டிலும் கணினியின் உதவியுடன் இந்த முறையினை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
6.   பிறமொழிப் பெயர்களில் உள்ள எழுத்துக்களைச் சிதைக்காமல் அப்படியே எழுதுவதால் அப்பெயரை ஒலிப்பதிலும் கேட்பதிலும் எழுதுவதிலும் சிக்கல்கள் எழுவதில்லை.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, கிரந்த எழுத்துக்களால் தமிழுக்குப் பயனில்லை என்றும் தீமையே உண்டென்றும் விளக்கமாக அறிந்து கொண்டோம். அதேசமயம், கிரந்த எழுத்துக்களுக்கு மாற்றாக ஆறுரூபாய் முறையினைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் அறிந்தோம். இறுதியாக, இக் கட்டுரையின் துணிபு கீழே:

கிரந்த எழுத்துக்கள் தமிழுக்குத் தேவையில்லை.