திங்கள், 21 செப்டம்பர், 2009

நிறைமொழி மாந்தர்


பாடல்:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
              - குறள் எண்: 28

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.
மு.வ உரை: பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
சாலமன் பாப்பையா உரை: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளில் முதல் இரண்டு உரைகளும் நிறைமொழி மாந்தர் என்னும் தொடருக்குச் சான்றோர் என்று பொருள் கூறுகின்றன. இப் பொருள் இதற்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் சான்றோர் வேறு; நிறைமொழி மாந்தர் வேறு. நல்ல பண்புகளுக்குச் சான்றாக விளங்கும் தன்மை உடையவரே சான்றோர் ஆவர். இக் குறளில் வரும் நிறைமொழி மாந்தர் என்பது சான்றோரைக் குறிக்காது என்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று: சான்றோர் என்ற சொல்லைத் திருக்குறளில் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கும் வள்ளுவர் இக் குறளில் அச் சொல்லைப் பயன்படுத்தாதது. இரண்டு: சான்றோரின் இயல்புகள் குறித்து சான்றாண்மை என்னும் தனி அதிகாரத்தில் கூறி இருப்பது. எனவே நீத்தார் பெருமையைக் கூறும் இக் குறளில் வரும் நிறைமொழி மாந்தர் என்பது ஐம்புலன் அவித்தோரையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. சா.பா.உரையில் வரும் 'நிறைவான வாக்குப் பெருமை' ஆகிய பண்பும் சான்றோர்க்கே உரியது என்பதால் அப் பொருளும் இங்கே பொருந்தாது என்பது பெறப்படுகிறது.

அடுத்து மறைமொழி என்னும் சொல்லுக்கு அறவழி நூல்கள் என்றும் மந்திரச்சொற்கள் என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது. இப் பொருள்களும் இங்கு பொருந்தாது. ஏனென்றால் நூலாகட்டும் சொற்களாகட்டும் இரண்டுமே உரைக்கும் தன்மை பெற்றவை. ஆனால் வள்ளுவரோ 'மறைமொழி காட்டிவிடும்' என்கிறார். இதிலிருந்து மறைமொழி என்பது காட்டும் தன்மை உடையதே அன்றி உரைக்கும் தன்மை உடையது அல்ல என்பதைப் பெறலாம். எனவே மேற்சொன்ன இரண்டு பொருட்களும் இக் குறளில் வரும் மறைமொழி என்பதற்குப் பொருந்தாது என்பது உறுதியாகிறது. இந்தப் பொருள் தவறுகளுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை என்பதே.

திருத்தம்:

முதலடியில் வரும் 'நிலம்' என்னும் சொல் 'நிறம்' என்று வரவேண்டும். நிறம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இங்கு அச் சொல் உடலைக் குறிக்கும்(ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி).இக் குறளில் வரும் நிறைமொழி என்பது மௌனமொழி அதாவது பேசாமையினைக் குறிக்கும். மறைமொழி என்பது உரைக்கப் படாத குறிப்பு மொழியை அதாவது சின்முத்திரை போன்றவற்றைக் குறிக்கும். பெருமை என்பது இக் குறளில் பொருட்பெருமையைக் குறிக்காமல் அறிவுப் பெருமையைக் குறிக்கும். இனி இக்குறளின் சரியான பொருள் இதுதான்: மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் அறிவுப்பெருமையினை அவரது உடல்குறிப்பு மொழிகள் காட்டி நிற்கும்.'

நிறுவுதல்:

நிறைதல் என்னும் சொல்லுக்கு முழுமையாதல் என்ற பொருள் உண்டு. நிறைமொழி என்பது முழுமையான மொழி என விரியும். இவ் உலகில் மௌனத்தைத் தவிர வேறெந்த மொழியும் முழுமையான மொழி ஆகாது. ஏனென்றால் மௌனமே அனைத்து உயிர்களுக்கும் பொதுவான மொழி ஆகும். எல்லா மொழிகளிலும் இது இருப்பதுடன் எல்லா மொழிகளையும் இது தனக்குள் அடக்கி நிற்கிறது. என்வே தான் இது அனைவராலும் பயன்படுத்தப் படுகிறது. அன்றியும் ஐம்புலன் அவித்தோருக்கு எஞ்ஞான்றும் மௌனமே மொழி ஆகும். ஏனென்றால் ஐம்புலன் அடக்கலின் முதல் நிலையே நாவை அடக்குதல் ஆகும். சுவை மற்றும் சொல் ஒழித்தலே நாவடக்கம் ஆகும். சொல்லும் சுவையும் ஒடுங்கத் துவங்கும்போது உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் உண்டாகின்றன. நாவடக்கத்தினால் ஒருவர் மன அமைதியையும் உடல் நலத்தையும் ஒருங்கே பெறுவதுடன் ஏனைப் புலன்களின் அடக்கத்திற்கும் அதுவே அடிகோலுகிறது. எனில் ஐம்புலன் அவித்தோரின் எண்ணங்களைப் பிறர் அறிவது யாங்ஙனம்?. இதற்கான விடையினை இங்கே காணலாம்.

பொதுவாக மௌனத்தை மொழியாகக் கொண்டவர்கள் உடல்குறிப்பு மொழிகளால் தமது எண்ணங்களை வெளிப்படுத்துவர். இவற்றை 'முத்ரா' என்று வடமொழி கூறுகிறது. முத்திரைகள் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவதுடன் உடலுக்குப் பல நன்மைகளையும் அளிக்கின்றன. இந்த முத்திரைகள் பலவகைப்படும். முத்திரைகளின் வகைகள் பற்றியும் நன்மைகள் பற்றியும் இந்தியாநெட்ஸோன் என்ற இணையதளத்தில் காணலாம். இந்த முத்திரை ஆனது உடலின் பல உறுப்புக்களால் உருவாக்கப் பட்டாலும் கைகளும் விரல்களுமே அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. அருகில் உள்ள படம் முத்திரைக்கு ஒரு சான்றாகும். ஐம்புலன் அவித்தோர் தமக்குள் பரிமாறிக் கொள்வது இந்த முத்திரைகளால் தான். ஐம்புலன் அவித்தலில் உள்ள பல்வேறு படிநிலைகளுக்கு ஏற்ப அவரது அறிவின் முதிர்ச்சி மாறுபடுகிறது. இந்த முதிர்ச்சியானது முத்திரைகளால் காட்டப் படுகிறது.


எண்ணமே மொழியாகிறது. வெளிப்படுத்தப் பட்ட ஒருவரது மொழியே அவரது அறிவுநிலையினை அதாவது பெருமையினைக் கூறாநிற்கின்றது. அவ்வகையில் மௌனத்தை மொழியாகக் கொண்ட ஐம்புலன் அவித்தோரின் உடல்குறிப்பு மொழிகளே அவருடைய அறிவுப் பெருமைகளைக் காட்டாநிற்கின்றன. இதுவே இக் குறள் உணர்த்தவரும் கருத்தாகும்.

சரியான பாடல்:

நிறைமொழி மாந்தர் பெருமை நித்து
மறைமொழி காட்டி விடும்.
.........................................................................................................................

வியாழன், 17 செப்டம்பர், 2009

இந்திரனே சாலும் கரி

பாடல்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி.
                                                  - குறள் எண்: 25.

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மு.வ உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளில் முதல் உரையானது குறளுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தினைக் கூறுகிறது. இது எவ்வாறென்றால் ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்று காட்டுவதே இக் குறளின் நோக்கமாக இருக்க கலைஞரின் உரையோ ஐம்புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்று கூறுகிறது. குறளின் நோக்கத்திற்கு மாறாக இவ் உரை அமைந்திருப்பதால் இது தவறு என அறியலாம். அடுத்த இரண்டு உரைகளும் ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாக இந்திரனைக் கூறுகின்றன. இது விந்தையிலும் விந்தை ஆகும்.

இந்திரன்-அகலிகை-கௌதமன் ஆகியோரின் முக்கோணக் காமக்கதை நாடறியும். பலர் பலவிதங்களில் இக் கதையினைக் கூறினாலும் ஒன்று மட்டும் உண்மை. இந்திரன் புலனடக்கம் இன்றி அகலிகையின் மேல் காம விருப்பம் கொண்டு அவளை அடைய முயன்றான் என்பதே அது. இதிலிருந்து இந்திரன் புலனடக்கம் இல்லாதவன் என்பது மிகத் தெளிவாக அறியப்படுகிறது. இப்படிப்பட்ட ஒருவனை திருவள்ளுவர் ஐம்புலன் அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாகக் கூறுவாரா? ஒருபோதும் மாட்டார். வள்ளுவரின் சான்றாண்மைக்கு மாறாக இந்த இரண்டு உரைகளும் அமைந்திருப்பதால் அவையும் தவறாகவே கொள்ளப்படும். இந்தத் தவறுகளுக்குக் காரணம் ஒரு சில எழுத்துப் பிழைகளே ஆகும்.

திருத்தம்:

இக் குறளில் வரும் கோமான் என்னும் சொல் கோமன் என்று வரவேண்டும். மேலும் இக் குறளின் சரியான பொருளை அறிய முதல் அடியைக் கீழ்க்காணுமாறு பிரிக்க வேண்டும்.

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புள் ஆர்கோ மன்

மேற்காணும் அடியில் வரும் மன் என்பது ஒரு பொருளற்ற அசைச்சொல் ஆகும்; ஆர்தல் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இச் சொல் இங்கு 'பரவுதலைக்' குறிக்கும். இரண்டாம் அடியில் வரும் இந்திரன் என்ற சொல் ஐந்திரன் என வரவேண்டும். இச் சொல் இங்கு ஞாயிற்றைக் குறிக்கும்.

எனவே இக் குறளின் சரியான பொருள்: ' ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றல் (பூவுலகினைக் கடந்து) அகன்ற வானத்தில் பரவிநிற்குமோ?. (பரவிநிற்கும் போலும்). இதற்குக் கதிரவனே போதுமான சான்று ஆவான்.' என்பதாகும்.

நிறுவுதல்:

ஐம்புலன்களின் அடக்கத்தினால் பெறப்படும் ஆற்றலின் சிறப்பினை விளக்க முற்பட்ட வள்ளுவர் இக் குறளில் கதிரவனையே அதற்குச் சான்றாகக் கூறுகிறார். ஏனென்றால் கதிரவனின் ஆற்றல் எத்தன்மையது என்று உலகமே அறியும். ஆம், அளப்பரிய ஆற்றலுடன் அண்டமெல்லாம் தனது ஒளியைப் பரப்பிக் கோலோச்சி விளங்குகின்றான் கதிரவன். இக் கதிரவன் இன்றேல் பூமிக்கு வெளிச்சம் இல்லை; வெப்பம் இல்லை; மழை இல்லை; ஏன் எதுவுமே இல்லை எனலாம். நமது பூமிக்கு மட்டுமல்லாது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு கோள்களின் இயக்கத்திற்கும் வளமைக்கும் கதிரவனே காரணம் ஆவான். இவனே நடுநாயகமாய் வீற்றிருந்து ஏனைக் கோள்களை எல்லாம் கட்டுப்படுத்தித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறான். இவ்வளவு ஆற்றல் மிக்க இக் கதிரவன் அதிகாலையில் தோன்றுவது கிழக்குத் திசை ஆகும். இந்த கிழக்குத் திசைக்கு ஐந்திரம் என்றொரு பெயரும் உண்டு. (சான்று: பிங்கல நிகண்டு - வான்வகை). ஐந்திரம் ஆகிய கிழக்குத் திசையில் தோன்றுவதால் கதிரவனுக்கு ஐந்திரன் என்ற பெயர் வந்தது. எனவே ஐந்திரன் என்பது கதிரவனையே குறிக்கும் என்பது தெளிவு.

சரி, ஐம்புலன்களை அடக்கியோரின் ஆற்றலுக்குக் கதிரவனை ஏன் சான்று கூறவேண்டும்?. இதைப் பற்றிக் காணலாம். ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் பல ஆற்றல்களைப் பெறலாம் என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இந்த ஆற்றல்கள் எண்வகைப்படும். இவற்றை அட்டமா சித்திகள் என்று கூறுவர். அவை: அணிமா (வடிவத்தை சுருக்குதல்), மகிமா(வடிவத்தைப் பெரிதாக்குதல்), இலகிமா(உடலை இலேசாக்கிப் பறத்தல்), கரிமா (அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்குதல்), பிராத்தி (விரும்பியவற்றைக் கண்முன்னே கொணர்தல்), பிராகாமியம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்), ஈசத்துவம் (அனைத்து உலகிலும் ஆணை செலுத்துதல்) மற்றும் வசித்துவம் (அனைத்தையும் தன்வசப்படுத்துதல்) ஆகும். இந்த ஆற்றல்களின் உதவியால் ஒருவன் வானில் உள்ள பல கோள்களைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ஐம்புலன் அடக்கியோரின் ஆற்றல் வானில் பரந்து விரிந்து கோலோச்சும் தன்மை கொண்டதால் அதற்குக் கதிரவனை சான்றாகக் கூறினார் வள்ளுவர்.

சரியான குறள்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோன்
ந்திரனே சாலும் கரி.
....................................................................

சனி, 12 செப்டம்பர், 2009

உரன் என்னும் தோட்டி

பாடல்:

உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.
                               - குறள்: 24

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை:உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
மு.வ உரை:அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை:மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளுமே ஒரு விந்தையான பொருளை உணர்த்துகின்றன. அது என்னவெனில் ஐம்பொறிகளையும் அடக்கிக் காக்கும் ஒருவனை மூன்று உரைகளுமே 'ஒரு விதை' என்று கூறுவதே ஆகும். இவ்வளவு வல்லமை பொருந்திய ஒருவனை 'நிலத்திற்கேற்ற விதை' என்றும் 'வீட்டுலகிற்கு ஏற்ற விதை' என்றும் கூறுவது விந்தையாக உள்ளது. அதென்ன விதை?. இப் பொருளின் ஆழம் என்ன என்று ஆராய்ந்தபோது பரிமேலழகரின் உரையில் இதற்கான விளக்கம் கிட்டியது. அவர் இதை ஏகதேச உருவகம் என்று கூறுகிறார். அவரது உரைப்படி ஐம்பொறிகளையும் அடக்கிய ஒருவன் மேலான வீட்டுலகிற்கு ஒரு விதையாகச் சென்று அங்கேயே முளைப்பான்; மீண்டு இங்கே வாரான் அதாவது அவனுக்கு மறுபிறப்பில்லை என்பதாகும். பரிமேலழகரின் உரை சரியா என்று பார்ப்போம்.

அவரது உரையில் ஐம்பொறிகளையும் அடக்குவதன் மூலம் ஒருவன் பிறவிக்கடலை நீந்திவிட முடியும் என்ற கருத்து தொனிக்கிறது. இது ஒருபோதும் திருவள்ளுவரின் கருத்தாக இருக்கமுடியாது. ஏனென்றால் திருவள்ளுவரின் கருத்துப்படி இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே பிறவிப் பெருங்கடலை நீந்த முடியும். இதை கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள 8 மற்றும் 10 ஆம் பாடல்கள் உறுதிப் படுத்துகின்றன. எனவே இறைவனுடைய திருவடிகளைச் சேராமல் வெறும் ஐம்புலன்களை அடக்குவதால் மட்டும் வீட்டுலகம் கிட்டாது அதாவது பிறவிக் கடலைக் கடக்க முடியாது என்பது தெளிவு. வள்ளுவரின் கடவுள் வாழ்த்துக் கருத்துக்கு மாறுபாடாக பரிமேலழகரின் உரை இருப்பதால் அவரது உரை தவறு என்று அறியலாம். பரிமேலழகரின் உரையினை அடிப்படையாகக் கொண்டே மேற்காணும் மூன்று உரைகளும் 'விதை' என்று கூறுவதால் அவையும் தவறாகின்றன. இத் தவறுகளுக்குக் காரணம் 'வித்து' என்ற சொல்லுக்கு 'விதை' என்று பொருள் கொண்டதும் 'வரன்' என்ற சொல்லில் உள்ள ஒரு எழுத்துப் பிழையும் தான். இவற்றின் திருத்தங்களைக் கீழே காணலாம்.

புதிய பொருள்:

வித்து என்ற சொல்லுக்கு 'நீர்,ஈரம்' என்ற பொருட்கள் உண்டு என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இக் குறளிலும் அதே நீர்ப்பொருளில் தான் இச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். இக் குறளில் வித்து என்ற சொல் மழைநீரைக் குறிக்க வருகிறது. வரன் என்ற சொல் வறன் என்று வருவதே திருத்தமாகும். வறன் என்ற சொல் இங்கு வறண்ட நிலத்தைக் குறிக்கும். வைப்பு என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இங்கு அது ஊரைக் குறிக்கும். எனவே இக் குறளின் புதிய பொருள் இதுதான்: ' மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய ஐந்து யானைகளை அடக்கிக் காப்பவன் வறண்ட நிலம் ஆகிய ஊருக்குப் பெய்யும் மழை ஆவான்.'

நிறுவுதல்:

வித்து என்ற சொல் எவ்வாறு நீர்ப்பொருளைக் குறிக்கும் என்று முன்னர் ஒரு கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டுவிட்டதால் இங்கு வறன் பற்றிக் காணலாம். வறன் என்ற சொல் வறண்ட பூமியைக் குறிக்கும் என்பதற்குக் கீழே சில ஆதாரங்கள் உள்ளன.

வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி - கலித்தொகை - பாலைக்கலி பா.எண்: 7
வறன் நீந்தி நீ செல்லும் நீளிடை நினைப்பவும் - பாலைக்கலி பா.எண்: 2

மேற்காணும் பாடல்வரிகளில் வரும் வறன் என்ற சொல் வறண்ட நிலம் என்னும் பொருளையேத் தந்துநிற்பதைத் தெள்ளிதின் அறியலாம். இச் சொல்லை இப் பொருளில் கையாள்வதன் மூலம் ஐம்புலன்களை அடக்கியவனின் பெருமையை நன்கு விளக்குகிறார் வள்ளுவர். இது எவ்வாறு என்று காண்போம். நீரின்றி உலக வாழ்க்கை இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம். இந் நிலையில் பல ஆண்டுகளாக மழையே இல்லாமல் இருந்தால் ஒரு ஊரின் நிலை என்ன ஆகும்?. ஒட்டுமொத்த ஊரும் ஒரு புல்பூண்டு கூட இன்றி வறண்ட பூமியாகத் தானே காட்சி அளிக்கும். நீர் இன்றி அந்த ஊர் மக்கள் சொல்லொணாத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென மழை பெய்தால் என்ன நடக்கும்?. அங்கே ஒரு மகிழ்ச்சிக் கூப்பாடே நடக்கும் அல்லவா?. ஆம், மக்கள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தவாறு மழையில் நனைந்து கொண்டு ஆடுவார்கள்; ஓடுவார்கள்; கூவித் திரிவார்கள். அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா அப்போது?. இந்த மகிழ்ச்சி தான் அந்த மழைக்குக் கிடைக்கின்ற புகழ் ஆகும்.

உலகில் அடிக்கடி பெய்கிற மழைக்கு புகழ் ஏதும் கிட்டுவதில்லை. எப்போதாவது பெய்யும் மழையே மிகுந்த புகழ் பெறுகிறது. ஐம்புலன்களை அடக்குதல் என்பது எப்போதாவது பெய்யும் மழையைப் போல அரிதான செயலாகும். அம் மழையைப் போலவே ஐம்புலன் அடக்கியோரும் பெரும்புகழ் பெறுகின்றனர்.

இது எவ்வாறென்றால் ஐம்புலன் அடக்கமானது ஒருவகை சித்தியை அதாவது ஆற்றலை அவர்களுக்கு அளிக்கிறது. இந்த ஆற்றலின் உதவியால் இவர்கள் சாதாரண மக்களால் செய்ய இயலாத சில வேலைகளைச் செய்து காட்டுகின்றனர். இது இவர்களுக்குப் பெரும்புகழைத் தேடித் தருகிறது. இவர்களையே நாம் சித்தர்கள் என்று நடைமுறையில் அழைக்கிறோம். இதைத்தான் ' செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார்' என்று அடுத்த குறளில் கூறுகிறார். அரிதாகிய பண்பினாலும் புகழ் பெறுதலாலும் ஐம்புலன் அடக்கத்தினை இக் குறளில் வறண்ட பூமியில் பெய்யும் மழைக்கு உவமையாகக் கூறியுள்ளார் வள்ளுவர். என்னே அவரது நுண்மாண் நுழைபுலம்!.

சரியான குறள்:

உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
ன்என்னும் வைப்பிற்கோர் வித்து.

திங்கள், 7 செப்டம்பர், 2009

வித்தும் இடவேண்டுமோ?

பாடல்:
 வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
                                                             - குறள் 85

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.
மு.வ உரை: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
சாலமன் பாப்பையா உரை: விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.

தவறுகள்:
 மேற்காணும் மூன்று உரைகளும் தவறான பொருளையே உணர்த்துகின்றன. கலைஞரின் உரை மேற்காணும் குறளுடன் தொடர்புடையதாகவே இல்லை. அவரது உரையில் 'வித்தும் இடல்வேண்டும் கொல்லோ' என்ற தொடருக்கு 'விதையைக் கூட (உணவளிக்கப்) பயன்படுத்தாமல் இருப்பானா?' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இது சற்றும் பொருத்தமற்றது ஆகும். ஏனென்றால் 'கொல்லோ' என்ற சொல்லுக்கு 'இருப்பானா' என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை என்பதுடன் கொல், கொல்லோ ஆகிய சொற்கள் அடிப்படையில் பொருளற்ற அசைச்சொற்கள் ஆகும். தற்காலத்தில் இவை ஆ, ஓ ஆகிய ஈற்றசைச் சொற்களாகப் பயன்படுத்தப் படுகின்றன.

மு.வ.உரையிலும் சா.பா.உரையிலும் 'விருந்தோம்பலில் சிறந்தவனின் நிலத்தில் விதைக்காமலேயே உணவுப் பயிர் விளையும்' என்ற பொருள் தொனிக்கிறது. இது நடைமுறையில் சாத்தியமா?. ஒரு விளைநிலத்தில் விதைக்காமல் எவ்வாறு உணவுப் பயிர் விளையும்?. நெல் வேண்டுமென்றால் நெல்லைப் பயிரிட வேண்டும்; கோதுமை வேண்டுமென்றால் கோதுமையைப் பயிரிட வேண்டும். எதையுமே விதைக்காமல் ஒரு விளைநிலத்தில் பயிர் விளைகிறது என்றால் அது உறுதியாக உணவுப் பயிராய் இராது; நமக்கு வேண்டாத ஒரு களையாகவே இருக்கும். ஏனென்றால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய இயலும். இது அறிவியல் உண்மை. இந்த அறிவியல் உண்மைக்குப் புறம்பாக திருவள்ளுவர் கருத்து கூறி இருக்கமாட்டார் என்பதால் மு.வ.உரையும் சா.பா.உரையுமே தவறானவை எனத் தெளியலாம். இத் தவறுகளுக்குக் காரணம் 'வித்து' என்ற சொல்லுக்கு 'விதை' என்ற பொருளைக் கொண்டது தான். இப் பொருள் இக் குறளில் பொருந்தாது.

புதுப்பொருள்:
 வித்து என்ற சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன. ஆனால் திருவள்ளுவரோ இச் சொல்லை புதியதோர் பொருளில் கையாண்டுள்ளார். 'நீர் அல்லது ஈரம்' என்பதே அப் பொருள் ஆகும். இப் புதிய பொருளின்படி, மேற்காணும் குறளுக்கு இவ்வாறு பொருள் உரைக்கலாம்: விருந்தினரைப் போற்றியதுபோக எஞ்சியதை உண்கின்றவனின் விளைநிலத்தில் (பயிர்கள் விளைய) நீர் பாய்ச்சவும் வேண்டுமோ?'.

நிறுவுதல்:

வேளாண்மை அறிவியலின்படி ஒரு பயிர் விளைவதற்கு விதை,நீர்,நிலம்,வெளிச்சம், வெப்பம் போன்றவை தேவைப்படுகின்றன. இவற்றில் வெளிச்சமும் வெப்பமும் நிலத்திற்குக் கதிரவனின் கொடை ஆகும். விதையும் நீருமே நமது முயற்சியால் நிலத்திற்கு அளிக்கப்படுவன. இவ் இரண்டில் விதை இல்லாமல் எதுவும் விளையாது என்பதால் வேளாண்மையின் வெற்றியானது நீர் பாய்ச்சுதலைப் பொறுத்தே அமைவதாகிறது. பயிர்கள் செழித்துவளர மட்டுமின்றி விதைகள் முளைவிடவும் நீரே தேவைப்படுகிறது. ஈரத்துணியில் கட்டிவைக்கும் பயறுகள் முளைவிடுதலே இதற்குப் போதுமான சான்றாகும். இவ்வளவு இன்றியமையாத நீரைப் பாய்ச்சாமல் இருந்தாலும் சிறப்பாக விருந்தோம்பல் செய்வானின் நிலத்தில் பயிர்கள் செழித்து வளரும் என்று கூறுகிறார் வள்ளுவர். இது எப்படிச் சாத்தியமாகும் என்று பார்ப்போம்.

மனிதனை மனிதனாகவே வாழச்செய்யும் பல பண்புகளில் விருந்தோம்பல் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. விருந்தோம்பலின் முதல் கட்டம் தன் இல்லம் தேடி வந்த விருந்தினரை இன்மொழிகளால் வரவேற்று இல்லத்தில் தங்கச் செய்தல் ஆகும். அதன்பின் அவரது குறைகளைக் கவனத்துடன் கேட்டறிதல் இரண்டாவது கட்டம் ஆகும். விருந்தினரின் பொருட்பிணியினை நீக்கும் வல்லமை இல்லாவிட்டாலும் அவரது பசிப்பிணியையாவது தீர்க்கவேண்டும் என்பதே விருந்தோம்பலின் இன்றியமையாத மூன்றாவது கட்டம் ஆகும். இந்த மூன்று செயல்களையும் யார் எப்போதும் எந்த நிலையிலும் செம்மையாகச் செய்கிறார்களோ அவரது வீட்டில் திருமகள் என்றென்றும் நீங்காமல் தங்கி இருப்பாள் என்று 84 ஆம் குறள் கூறுகிறது. ஆனால் எல்லா மக்களும் இவ்வளவு செம்மையாக விருந்தோம்பலைக் கடைப்பிடிப்பதில்லை.

எவ்வகை குருதித் தொடர்பும் நட்பும் அற்ற மக்களை இல்லத்திற்குள் அழைத்துச் சென்று உணவளித்து முகம் கோணாமல் மகிழ்விக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை உயிர்களின் மேல் இரக்கம் ஆகும். எனவே பிறரது துன்பத்தைத் தனது துன்பமாக நினைத்து உதவுகின்ற மேன்மக்களால் மட்டுமே விருந்தோம்பலில் சிறக்க முடியும். இந்த மேன்மக்களின் நெஞ்சில் எப்போதும் ஈரம் ஆகிய இரக்கம் இருப்பது போல் அவரது விளைநிலத்தின் நெஞ்சிலும் ஈரம் எப்போதும் இருக்கும் என்கிறார் வள்ளுவர். இது எவ்வாறெனில்

பூமித்தாயே திருமகள் என்பதால் நெஞ்சில் ஈரமுடைய மேன்மக்களது விளைநிலத்தில் மட்டும் திருமகள் நீரின் வடிவாக எப்போதும் வீற்றிருந்து வளம் குறையாமல் காப்பாள். இதனால் அவரது விளைநிலத்திற்கு நீர் பாய்ச்சுகின்ற தேவை இல்லை என்பதே இக் குறளின் மூலம் வள்ளுவர் உணர்த்த வரும் கருத்தாகும்.

மேற்காணும் குறள் தவிர 24, 138, 361 ஆகிய குறள்களில் வித்து என்ற சொல்லை நேரடியாகவும் 235 ஆம் பாடலில் மறைமுகமாகவும் பயன்படுத்தி உள்ளார் செந்நாப்புலவர். இவை அனைத்திலும் வித்து என்ற சொல் நீர் அல்லது ஈரத்தையே குறிக்கிறது. 235 ஆம் பாடலின் விளக்கத்தினை ஏற்கெனவே நாம் சங்கே முழங்கு என்னும் தலைப்பின் கீழ் திருத்தத்தில் கண்டுள்ளோம். 24 ஆம் பாடலின் விளக்கத்தினை தனிக் கட்டுரையின் கீழ் காணப்போவதால் இங்கே ஏனை இரண்டு குறள்களை மட்டும் காண்போம்.

(138) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - 'நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நீரைப் பாய்ச்சவேண்டும். மாறாக தீயொழுக்கம் என்னும் நீரைப் பாய்ச்சினால் வறுமை என்னும் பயிரே விளையும்' என்பதுவே இக் குறளின் சரியான பொருளாகும். இக் குறளில் ஒழுக்கத்தை நீராக உருவகப் படுத்தியுள்ளார் வள்ளுவர். இது மிகவும் சரியாகும். ஏனென்றால் இரண்டுமே ஒழுகும் தன்மை கொண்டவை. இக் குறளின் மூலம் வள்ளுவர் உணர்த்த வரும் கருத்தானது: நல்லொழுக்கம் என்பது பயிர்களுக்கு நன்னீரைப் பாய்ச்சுதலுக்கு ஒப்பாகும். தீயொழுக்கம் என்பது பயிர்களுக்கு கழிவுநீரைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும் என்பதே ஆகும். நன்னீரைப் பாய்ச்சினால் நல்ல வளமான பயிர்களைப் பெற்று செழிப்புடன் வாழலாம். கழிவுநீரைப் பாய்ச்சினால் பயிர்கள் நோய்வாய்ப்பட்டு வாடிவிடும். இதனால் வறுமையே உண்டாகும். அதைப்போல நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் நன்மைகள் பெறலாம்; தீய ஒழுக்கத்தினால் வறுமையும் நோயுமே மிகும் என்கிறார் வள்ளுவர். இது அறிவியல் உண்மை என்பதால் இக் குறளிலும் வித்து என்பது நீர்ப்பொருளையே குறித்து நிற்கிறது என்று தெளியலாம்.

(361) அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாப் பிறப்பீனும் வித்து - ' (இவ்வுலகில்) அனைத்து உயிர்களுக்கும் பிறப்பினைத் தவறாமல் அளிப்பது ஆசை என்னும் ஈரப்பசையே ஆகும்' என்பதே இதன் சரியான பொருளாகும். பிறப்பு, மறுபிறப்பைப் பற்றிப் பல சமயங்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றன. அவற்றில் ஒன்று தான்: 'இறக்கும் தருவாயில் ஒருவன் நெஞ்சில் கொள்ளும் ஆசையே அவனது மறுபிறவிக்குக் காரணமாக அமைகிறது' என்ற இந்து சமயக் கொள்கை ஆகும். புத்த மதமும் இதே கொள்கையைத் தான் கூறுகிறது. இந்த ஆசையானது ஒரு பொதுநல விருப்பமாகவும் இருக்கலாம்; சுயநல விருப்பமாகவும் இருக்கலாம். பொதுநலம் சாரும்போது அது இரக்கம் என்னும் பெயர் பெறுகிறது. சுயநலம் சாரும்போது அது வேட்கை எனும் பெயர் பெறுகிறது. 'பிறருக்கு உதவிசெய்ய இயலவில்லையே; அடுத்த பிறவியிலேனும் இதை நிறைவேற்ற வேண்டும்' என்ற ஆசை உயர்வானது; இரக்கம் சார்ந்தது. 'இவற்றை எல்லாம் அனுபவிக்க இயலவில்லையே; அடுத்த பிறவியில் இவற்றை அடைந்துவிட வேண்டும்' என்ற ஆசை இழிவானது; வேட்கை சார்ந்தது. எது எவ்வாறாயினும் விதையில் சிறிதளவு நீர்ப்பசை இருந்தாலும் அது முளைவிட்டு விடுவதைப்போல நெஞ்சில் சிறிதளவு ஆசை(இரக்கம்/வேட்கை) இருந்தாலும் அது மறுபிறவிக்கு வழிவகுத்து விடும் என்கிறார் வள்ளுவர். இதில் அறிவியல் உண்மையும் கலந்திருப்பதால் இக் குறளில் வரும் வித்து என்ற சொல் நீர்ப்பசையாகிய ஈரத்தையே குறிக்கும் என்று தெளியலாம்.