எயிறு என்னும் சொல் சங்க காலத்தில் மட்டுமல்லாது இக்காலம் வரையிலும் பயன்படுத்தப் பட்டுவரும் பல சொற்களுள் ஒன்றாகும். இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் குறிப்பாக பெண்களைப் பொருத்த மட்டில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் உள்ள நிலையினையே எடுத்துக காட்டுகிறது. இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு பொருட்களைப் பற்றியும் இச்சொல்லின் மூலப் பொருள் பற்றியும் அந்த மூலப்பொருளில் இருந்து ஏனைய பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றியும் காணலாம்.
தற்போதைய பொருட்கள்:
எயிறு என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.
கழகத் தமிழ்க் கையகராதி: பல், யானை மற்றும் பன்றிகளின் வாய்க் கொம்பு.
இணையத் தமிழ்ப் பேரகராதி: பல், பல்லின் விளிம்பு.
பொருள் பொருந்தாமை:
மேற்காணும் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.
முள் எயிற்றுப் பாண்மகள் - ஐங்கு.-47
முள் எயிற்று அரிவை - ஐங்கு.- 495
கூர் எயிறு - கலி.-146,108,58
வாள் எயிறு - கலி.-88
வை எயிற்றவர் நாப்பண் - கலி.-59
முள் எயிற்று ஏர்- கலி.-104
முள் எயிறு - குறு.-262,26
முருந்து எனத் திரண்ட முள் எயிறு - அக.-179
குவி முகை முருக்கின் கூர்நுனை வை எயிற்று - அக.-317
முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய் - ஏலாதி - 7
மேற்காணும் பாடல்கள் அனைத்துமே காதலியின் எயிறு கூர்மையுடன் இருந்ததாகக் கூறுகிறது. அது மட்டுமின்றி எயிறானது இறகின் அடிப்பகுதி போலவும் மலர் மொட்டு போலவும் கூர்மையுடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந் நிலையில், இவ் இடத்தில் எயிறு என்பதற்கு பல் என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. இதற்குக் கீழ்க் காண்பவற்றைச் சில காரணங்களாகக் கூறலாம்.
- பல் என்பது ஓர் அக உறுப்பு அதாவது வாய்க்குள் இருப்பது. எனவே பெண்ணின் பற்களை அவ்வளவு எளிதாக ஆண்கள் பார்த்துவிட முடியாது. ஆனால் எயிறு என்னும் சொல்லோ நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆளப்பட்டுள்ளது. எனவே எயிறு என்பது பல் போன்ற ஒரு அக உறுப்பாக இருக்க முடியாது; புற உறுப்பாகவே இருக்க வேண்டும் என்பது உறுதி.
- ஒரு ஆண் ஒரு பெண்ணைப் புகழ்ந்து கூறும்போது 'உனது பல்லானது முள் போல கூர்மையாக உள்ளது' என்று கூறினால் அதை அவள் சிறிதும் இரசிக்க மாட்டாள். எனவே இங்கும் எயிறு என்பது பல்லைக் குறித்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.
- எயிறு தீப் பிறப்பத் திருகி ...... கடும்பனி உழந்தே - அக.-217 என்ற பாடலில் எயிற்றில் தீப் பிறப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் பற்களில் தீ பிறக்காது என்பதால் எயிறு என்னும் சொல் பல்லைக் குறிக்காது என்பது இங்கும் தெளிவுபடுத்தப் படுகிறது.
- சிவந்த மெல்விரல் திருகுபு கூர் நுனை மழுகிய எயிற்றள் - அக.-176 என்ற பாடலில் விரல்கொண்டு திருகியதால் எயிற்றின் கூர்நுனை மழுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் கைவிரல் கொண்டு பல்லின் கூர்மையினை மழுக்க முடியாது என்பது நாம் அறிந்த உண்மை. எனவே எயிறு என்னும் சொல் இங்கும் பல்லைக் குறித்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவு.
புதிய பொருட்கள்:
எயிறு என்னும் சொல் குறிக்கும் புதிய பொருட்கள் ' கடைக்கண்' மற்றும் ' கடைக்கண் ஈறு' ஆகும்.
நிறுவுதல்:
எயிறு என்னும் சொல்லின் புதிய பொருட்களை நிறுவுவதற்கு முன்னர் அப் பொருட்களின் தன்மைகளைப் பற்றிக் காணலாம்.
கடைக்கண்ணின் தன்மைகள்:
- வெண்மை ஒளி மிக்கது
- நீர் ஊறும் இயல்புடையது
கடைக்கண் ஈற்றின் தன்மைகள்:
- கூர்மை உடையது
- வண்ணம் தீட்டப்படுவது
இனி இத் தன்மைகளை விளக்கும் வகையில் சங்க இலக்கியங்கள் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இருந்து சில பாடல்களைச் சான்றுகளாகக் காட்டி நிறுவலாம்.
பொதுவாக அனைத்து மாந்தரின் கண்களும் வெண்மை நிறம் கொண்டவையே. ஆனாலும் பெண்களின் கடைக்கண் தூய ஒளி மிக்க வெண்மை நிறம் கொண்டது ஆகும். இந்த வெண்மை ஒளிக்கு முல்லைப் பூவும் முத்தும் உவமையாகக் கூறப்படுகின்றன.வெண்மை ஒளி மிக்கது எயிறு (கடைக்கண்):
வால் எயிற்று மடமகள் - ஐங்கு.- 48
வால் எயிற்று - ஐங்கு. - 198
வால் எயிற்று - கலி.-56
வால் வெள் எயிறே - குறு.-169
வால் எயிற்றோள் - அக.-33
வால் எயிறு - அக.-344
வால் எயிற்றோயே - நற்.-9
வால் எயிற்று - நற். - 170,198,240
இலங்கு முத்து உறைக்கும் எயிறு - ஐங்கு.-185
முகைமாறு கொள்ளும் எயிற்றாய் - கலி.-64
முகை ஏர் இலங்கு எயிற்று - கலி.-139
முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக - குறு.-126
முகை ஏர் இலங்கு எயிற்று - நற்.-108
முல்லை அலைக்கும் எயிற்றாய் - நாலடி.-287
பெண்களின் கடைக்கண்ணை முல்லை முகைக்கு உவமையாகக் கூறுவது ஒருவகை என்றால் முல்லை முகையினை பெண்களின் கடைக்கண்ணிற்கு உருவகமாகக் கூறுவது இன்னொரு வகை. பெண்களின் கடைக்கண் போன்ற வெண்ணிற பூக்களை முல்லைக் கொடி அரும்பியதாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.
கொடிமுல்லை கூர் எயிறு எனக் குருத்தரும்ப - கைந்நிலை - 25
முல்லை எயிறு ஈன - கைந்நிலை - 34
கார்கொடி முல்லை எயிறு ஈன - ஐந்திணை 70 - 21
எயிறென குல்லை அம் புறவில் குவிமுகை அவிழ்ந்த முல்லை - சிறுபாண். - 30
எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை - கலி.-31
முல்லை மென்கொடி எயிறு என முகைக்கும் - குறு.-186
வெண்மை நிற கடைக்கண்ணை அழுத்திக் கசக்கி அழுததால் கண்கள் சிவந்த நிலையினைக் கீழ்வரும் பாடல் கூறுகிறது.
எயிறு தீப் பிறப்பத் திருகி ...... கடும்பனி உழந்தே - அக.-217
' அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்நீர் ஊறும் இயல்புடையது எயிறு (கடைக்கண்)
புன்கண் நீர்பூசல் தரும். ' - குறள் -71
என்பது வள்ளுவர் வாக்கு. ஆம், மிதமிஞ்சிய துன்பத்திலும் இன்பத்திலும் மாந்தரின் கண்களில் தாமாகவே நீர்ப் பெருக்கு எடுப்பதை நாம் பார்க்கிறோம். இந்தக் கண்ணீர்ச் சுரப்பிகள் (லேக்ரிமல் சுரப்பிகள்) கடைக்கண்ணின் மேலே இருப்பதால் முதலில் கடைக்கண்ணில் தான் கண்ணீர் அரும்புகிறது. இதைப் பற்றிய அறிவியல் உண்மைகளை விக்கிபீடியாவில் படிக்கலாம்.
மாந்தரின் கண்ணீர் லேசான உப்புச் சுவை உடையது என்பது உலகறிந்த உண்மை. ஆனால் காதலரின் கண்ணீர் மட்டும் இனிய அமிர்தம் போன்ற சுவை உடையதாகக் கீழ்வரும் பாடல்கள் கூறுகின்றன. இது எங்ஙனம் என்றால், காதலரின் பிரிவுத் துயரத்தினால் வரும் கண்ணீர் உப்புச் சுவை உடையதாகவும் காதலரைக் காணும்போது மகிழ்ச்சியினால் உண்டாகும் கண்ணீர் இனிய சுவை உடையதாகவும் கொள்ளலாம். ஏனென்றால் கீழ்க்காணும் பாடல்கள் அனைத்தும் பிரிவுத் துன்பம் நீங்கி இணையும்போது காதலன் கூறியதாக உள்ளன. இந்த ஆனந்தக் கண்ணீரின் சுவையினை கள் மற்றும் நெல்லிக்கனி (மூவாப்பசுங்காய்) யின் இன்சுவையுடன் உவமைப் படுத்திக் கூறியுள்ளனர். அது மட்டுமின்றி, கண்ணீரால் அழிந்துபோன காதலியின் கடைக்கண் ஈற்று வரி அழகினைத் திருத்துவதற்கு காதலன் ஆசைப்படுகிறான். இதனையே 'எயிறு உண்ணல்' என்று கூறுகிறது சங்க இலக்கியம்.
ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் - கலி.-20
முள் உறழ் முனை எயிற்று அமிழ்தூறும் தீநீரைக் கள்ளினும் மகிழ்செயும்
என உரைத்தும் அமையார் என் ஒள் இழை திருத்துவர் காதலர் - கலி.-4
முள் எயிற்று அமிர்தம் ஊறும் - குறு. -286
வால் எயிறு ஊறிய வசை இல் தீநீர் - குறு.-267
மூவாப் பசுங்காய் நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் - அக. - 335
அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே - அக.-237
மழைக்கண் கலுழ்தலின் .... இலங்கு எயிறு உண்கு என - நற். - 17
நின் முள் எயிறு உண்கு என - நற். -134
நின் கூர் எயிறு உண்கு என - நற். - 204
நுங்கின் இன்சேறு இகுதரும் எயிற்றின் - சிறுபாண்.-28
துயர மிகுதியால் நாம் அழும்போது கண்ணீரானது கண்ணின் முன்பகுதியிலும் மகிழ்ச்சியின் போதும் சிரிக்கும்போதும் கண்ணீரானது கடைக்கண்ணிலும் துளிர்ப்பதை நாம் அறிவோம். இதைத்தான் மேலே பாடி உள்ளனர் சங்க காலப் புலவர்கள். காதலில் கண்ணீர் இனிக்கும் என்று சங்க காலத்தில் மட்டுமல்ல இக் காலத்திலும் பல கவிஞர்கள் தமது கவிதைகளிலும் திரைப்படப் பாடல்களிலும் கூறியுள்ளனர். அவை குறித்த சுட்டிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
விகடன் கவிஞர் பிரியன் பூவேலி (திரைப்பாடல்) அரவிந்தன்(திரைப்பாடல்)
காதலியின் கடைக்கண் ஈறு பற்றிப் பாடாத காதலன் சங்க காலத்தில் இல்லை போலும். அதனால் தான் அனைத்து சங்க இலக்கிய நூல்களிலும் இதைக் காண முடிகிறது. காதலியின் கடைக்கண் ஈறு கூர்மையானது என்று புகழும் காதலன் அதனை முளை, முள், முகை (மொக்கு), முருந்து (இறகின் கூரிய வெண்மையான அடி) ஆகியவற்றின் கூர்மையுடன் ஒப்பிடுகிறான். சில சான்றுகளைக் கீழே காணலாம்.கூர்மை உடையது எயிறு (கடைக்கண் ஈறு):
முளை வாள் எயிற்றள் - ஐங்கு.-256
முள் எயிற்றுப் பாண்மகள் - ஐங்கு.-47
முள் எயிற்று அரிவை - ஐங்கு.- 495
கூர் எயிறு - கலி.-146,108,58
முள் எயிறு உண்கும் - கலி.-112
வாள் எயிறு - கலி.-88
வை எயிற்றவர் நாப்பண் - கலி.-59
முள் எயிற்று ஏர்- கலி.-104
முள் எயிறு - குறு.-262,26
முளை வாள் எயிற்றள் - குறு.-119
கூர் எயிறு - அக.-5,16
முள் எயிறு - அக.-7,39,361,385
வை எயிறு - அக.-325,122,230
கூர் எயிற்று - மதுரை - 708
வை எயிறு - நற்.-2,26,37,200
முள் எயிறு - நற்.-62,120,155,290
கூர் எயிற்றார் - பரி. 8-118
வை எயிற்று எய்யா மகளிர் - பரி.-9-33
வை எயிற்று - புற.-349
முள் எயிற்று மகளிர் - புற.-361
வை எயிற்று - சிறுபஞ்ச.-18
முருந்து எனத் திரண்ட முள் எயிறு - அக.-179
குவி முகை முருக்கின் கூர்நுனை வை எயிற்று - அக.-317
முருந்து ஏய் எயிறொடு - திணைமாலை 150. - 116
முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய் - ஏலாதி - 7
கண்களுக்கு அழகு சேர்த்தல் என்பது பெண்டிர்க்கு மிகவும் பிடித்த செயல் என்பதை நாம் அறிவோம். அவ்வகையில் பெண்டிர் தமது கடைக்கண் ஈற்றிற்கும் அழகு சேர்க்கத் தவறவில்லை. இயல்பாகவே கூராக இருக்கும் கடைக்கண் ஈற்றினை மேலும் கூர்மையாகக் காட்ட வண்ண வரிகளை எழுதுவர். இதைக் கீழ்க்காணும் பாடல்கள் விளக்குகின்றன.வண்ணம் தீட்டப்படுவது எயிறு ( கடைக்கண் ஈறு):
வார்ந்து இலங்கு வை எயிற்று - குறு.-14
வை எயிற்று வார்ந்த வாயர் - மதுரை.-413
ஈர் எயிற்றாய் - கைந்நிலை - 21
கண்களைக் கசக்கியதால் எயிற்றில் வரைந்திருந்த வண்ண வரியின் கூர்நுனை மழுங்கியதாகக் கீழ்வரும் பாடல் கூறுகிறது.
சிவந்த மெல்விரல் திருகுபு கூர் நுனை மழுகிய எயிற்றள் - அக.-176
வரிகளே அன்றிப் பல வண்ணங்களை (சிவப்பு உட்பட) அப் பகுதியில் பூசியும் அழகுபடுத்தி உள்ளனர் என்பதை 'துவர் வாய்' என்ற இலக்கியச் சொல்லாடல் உணர்த்துகிறது. இங்கு துவர்த்தல் என்றால் பூசுதல் என்று பொருள்; வாய் என்றால் இடம் என்று பொருள். ஆக, துவர் வாய் என்பது பூசிய இடம் என்று பொருள்பெறும். இச்சொல்லாடலை எயிறுடன் தொடர்புபடுத்திப் பல சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே காணலாம்.
எயிறு கெழு துவர் வாய் - ஐங்கு.-185
எயிற்றுத் தேமொழித் துவர்ச் செவ்வாய் - கலி..-55
முள் எயிற்றுத் துவர் வாய் - குறு.-26
எயிறு கெழு துவர் வாய் - அக.-27,29,62
முள் எயிற்றுத் துவர் வாய் - அக.-39,179,385
மின் எயிற்றுத் துவர் வாய் - அக.-212
மேற்கண்ட சான்றுகள் மற்றும் படங்களில் இருந்து எயிறு என்னும் சொல்லுக்கு 'கடைக்கண்' மற்றும் 'கடைக்கண் ஈறு' என்ற பொருட்களும் உண்டு என்று தெள்ளிதின் அறியலாம்.
முடிவுரை:
எயிறு என்னும் சொல்லின் மூலப் பொருள் யானைத் தந்தம் மற்றும் காட்டுப் பன்றிகளின் கொம்பாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் எயிறு என்னும் சொல்லின் மூலம் எய் என்பதாகும். எய் என்னும் சொல்லானது நீண்ட அதேசமயம் கூர்மையான அம்பினைக் குறிக்கும். சொல் மாறும்போது பொருள் மாறவேண்டும் என்ற விதியின் படி எயிறு என்பது யானை மற்றும் காட்டுப் பன்றிகளின் நீண்ட கூர்மையான வெளிப்புறப் பற்களைக் குறிக்கப் பயன்படலாயிற்று.
ஆனால் நாளடைவில் இப் பொருள்நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. வடிவம் மற்றும் நிற ஒப்புமையால் கூர்மை என்னும் பொருள்நிலையில் பெண்களின் கடைக்கண் ஈற்றினைக் குறிக்கப் புலவர்கள் இதைப் பயன்படுத்தலாயினர். இது இரண்டாம் நிலைப் பொருள்கோள் ஆகும். அடுத்து வெளிப்புறப் பற்களே அன்றி வாயின் உட்புறத்தில் அமைந்த கூர்மையான கோரைப்பற்களைக் குறிக்கவும் இச் சொல் பயன்படுத்தப் பட்டது. இது மூன்றாம் நிலைப் பொருள்கோள் ஆகும். என்றாலும் எயிறு என்ற சொல் மூன்றாம் நிலைப் பொருளில் மனிதர்களின் பற்களைக் குறிக்கப் பயன்படாமல் நாய், குரங்கு, பூனை, பாம்பு, வௌவால் மற்றும் பேயின் பற்களைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பொருள்நிலை மாற்றங்கள் கீழே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
எய் (அம்பு) ----------------------------------> எயிறு
= யானை மற்றும் காட்டுப்பன்றியின் வெளிப்புறக் கொம்பு - முதல்நிலை
|
= பெண்களின் கூர்மையான வெளிப்புறக் கடைக்கண் ஈறு - இரண்டாம் நிலை = கடைக்கண் -சமநிலை
|
= கூர்மையான உட்புற கோரைப் பற்கள் - மூன்றாம் நிலை
விக்கிபீடியாவில் உங்கள் பங்களிப்பை செலுத்துகிறீர்களா? ஆவண பொக்கிஷம் இது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி ஜோதிஜி. அல்குல் பற்றிய கட்டுரையினை தமிழ் விக்கிபீடியாவில் இட்டுள்ளேன். மேலும் பல கட்டுரைகளை இடுவதற்கு எண்ணியுள்ளேன்.
பதிலளிநீக்குஅன்புடன்,
திரு.பொன் சரவணன் அவர்களுக்கு, எயிறு 'பல்'என்பது முதல் தேற்றம்.பின்னாளில் கூர்மைக் கருத்தேற்றம் பெற்றது எனும் தங்களின் நிறுவுதல் சிறப்பாக உள்ளது.அன்பன்,மீ.கணேசன்.
பதிலளிநீக்குஎயிறு என்பது திரிந்து ஈறாகியிருக்கலாம் என்பது என் கருத்து. பல்லில் நீர் ஊறாது. ஈற்றிலிருந்து வரும் நீர் பல்வழி வழிந்து பல் பளபளக்கும். மேலும் அவ் வகைச் சுரப்பு காதல் மயக்கத்தின்போது வெளிப்படும் என்று எங்கோ படித்த நினவு. அது கிருமி நாசினி என்றும் குறிப்பு. இதில் உண்மை இருக்கலாம். பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தில் ‘வன் பல் விழுந்து” என்று வந்தபின்னர், ‘வளர் பிறை போல எயிறும்” என்பது பற்களைக் குறிக்க வாய்ப்பில்லை.க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ‘பல்’ என்ற பொருளைத் தவிர்துள்ளது.”ஈறு” என்று ஒரே ஒரு விளக்கம் தான் தருகிறது.
பதிலளிநீக்கு