பழமொழி:
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
தற்போதைய பொருள்:
'ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டு பிரிவானால் கூத்தாடிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர்.'
தவறு:
முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பொதுவாக ஒரு ஊர் என்றாலே அங்கே பலதரப்பட்ட மக்களும் வாழ்வார்கள். ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இம் மக்கள் சாதி, மதம், பொருளாதாரம் மற்றும் மொழி போன்றவற்றால் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே வாழ்கின்றனர். மனிதர்களுடைய இந்தப் பிரிவினை எண்ணங்களை தனக்குச் சாதகமாக இன்றுவரையில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது யாரென்றால் அது அரசியல்வாதியாகத் தான் இருக்கும். இந்த அரசியல்வாதிகளின் வேலை மக்களைப் பிரிப்பது அல்ல; ஏற்கெனவே பிரிந்திருக்கும் மக்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுசேர விடாமல் தடுப்பதே ஆகும். ஏனென்றால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் அது மிகப் பெரிய ஆற்றலாகிவிடும். அந்த ஆற்றலை எதிர்த்து நிற்க எந்த அரசியல்வாதியாலும் முடியாது. இறுதியில் அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வ நேரிடும். அதனால் தான் அரசியல்வாதிகள் அனைவரும் மக்கள் ஒற்றுமையாகக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த நடைமுறை உண்மை.
இப்போது பழமொழிக்கு வருவோம். ஒரு ஊர் எப்போது ஏன் இரண்டு படும்?. மேலே நாம் கண்ட சாதி, மதம், பொருளாதாரம், மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு/பல காரணத்தின்/ காரணங்களின் அடிப்படையில் ஊர்மக்கள் இரண்டாகலாம்; மூன்றாகலாம்; நான்காகலாம்; இன்னும் எவ்வளவோ பிரிவுகளாகலாம். இதை யாரும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. சாதி மத அடிப்படையிலான பிரிவினை எண்ணம் என்பது மக்களின் குருதியில் வேரூன்றிப் போய்விட்டது. நமது முன்னோர்கள் எவ்வளவோ முயன்றும் பிரிவினை எண்ணத்தை அகற்றுவதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. திருமணம் தொடங்கி அரசாங்க வேலை வரையிலும் இன்று சாதி மதப் பேய்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இப்படி ஏற்கெனவே சாதி மதப் பாகுபாட்டால் பலவாறாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஏன் இரண்டாக்க வேண்டும்?. அதுமட்டுமின்றி இது சாத்தியமும் அல்ல; ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பவர்களைத் தானே பிரிக்க முடியும்?. எனவே 'ஊர்மக்கள் இரண்டு பிரிவானால்' என்ற விளக்கமே தவறு என்பதை உணரலாம்.
இனி 'கூத்தாடிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி' என்பது எவ்வாறு தவறு என்பதை ஆராயலாம். அதற்குமுன் இங்கே ஒரு உண்மைக் கதையினையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்துவந்த படியால் இவ் ஊரில் ஒரே ஒரு அம்மன் கோவில் மட்டுமே இருந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இக் கோவிலுக்குத் திருவிழா நடத்தி கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வந்தனர். ஒருமுறை ஊர்த்தலைவரின் மகன்களுக்குள் நிகழ்ந்த பிணக்கு காரணமாக அவ் ஊர்மக்கள் இரண்டு பிரிவானார்கள். இந் நிலையில் அவ் ஊரில் திருவிழாவும் வந்தது. அப்போது இந்த இரண்டு பிரிவினருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பல மண்டைகள் உடைய கலைநிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்த கூத்தாடிகள் உயிர் பயத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர். இப்போது சொல்லுங்கள் இந்த ஊர் இரண்டு பட்டதால் கூத்தாடிகள் திண்டாடினார்களா இல்லை கொண்டாடினார்களா என்று. பெரும்பாலான சிற்றூர்களில் இப்படித் தான் நடக்கிறது. சில சிற்றூர்களில் ஒரு பிரிவினர் அமைதியுடன் விட்டுக் கொடுக்க ஆண்டுதோறும் அங்கே எப்போதும்போல திருவிழாக்கள் நடக்கிறது. இதில் கூத்தாடிக்கு எங்கே இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது?. அதுமட்டுமின்றி பழமொழியில் ' கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்று தான் சொல்லப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றால் 'இரட்டிப்பு மகிழ்ச்சி' என்று வலிந்து பொருள் கொள்வது தவறே ஆகும். இதிலிருந்து இப் பழமொழிக்குக் கூறப்படும் மேற்காணும் பொருளானது முற்றிலும் தவறானது என்பது தெரிய வருகிறது.
திருத்தம்:
மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அது என்ன? ' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'பல்லும் நாக்கும்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.
நிறுவுதல்:
விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.
'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'
இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'பல்லையும் நாக்கையும்' குறிக்கும் என்று பார்ப்போம். மனிதரின் வாய்க்குள் பற்கள் இரண்டு வரிசைகளாக (மேல், கீழ்) 32 எண்ணிக்கையில் அமைந்தவை என்பதை நாம் அறிவோம். பொதுவாக நாம் வாய் மூடி இருக்கும்போது இந்த இரண்டு வரிசைப் பற்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒரு குழுமமாக இருக்கும். அப்போது இந்தப் பற்களுக்குப் பின்னால் உள்ள நாக்கோ மிக அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். இங்கே இந்த நாக்கு தான் கூத்தாடி ஆகும். இரண்டு வரிசைகளிலும் உள்ள 32 பற்களின் ஒருங்கிணைந்த குழுமம் தான் ஊர் ஆகும். இந்த ஊர் இரண்டாகும்போது அதாவது மேல்வரிசையும் கீழ்வரிசையும் பிரிந்து வாய் திறக்கும்போது இந்த நாக்கு ஆகிய கூத்தாடி ஆடத் துவங்கிவிடும். அதன் ஆட்டம் பேசுவதற்காகவோ உணவைச் சுவைப்பதற்காகவோ வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆக மொத்தம் பற்குழுமம் ஆகிய ஊர் இரண்டு பட்டால்தான் நாக்கு ஆகிய கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த நடைமுறை உண்மையினை உருவகமாக்கி அழகான ஒரு விடுகதையாகப் புனைந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அது என்ன?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது.
...............................................வாழ்க தமிழ்!.............................................
இக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.
மொக்கயா இருக்குமங்க. இது விடுகதயாவே இருந்தாலும் இது தான் விடைன்னு எத வச்சு சொல்ரீங்க?
பதிலளிநீக்குபல்லையும் நாக்கையும் வச்சுத்தான். :)
பதிலளிநீக்குநான் சிந்தித்த வகையில் ஊரில் விழா நடக்கும்போதுதான் கூத்தாடிக்கு கொண்டாட்டமாக இருக்கும். அப்போது மேடையில் கூத்து நடப்பதை பார்க்கும் மக்கள் அதை ஆதரித்தோ எதிர்த்தோ கருத்து வெளியிடுவார்கள். இதனை எரிந்த கட்சி, எரியாத கட்சி என்று சொல்வது வழக்கம். இவ்வாறுதான் பட்டி மன்றங்கள் தோன்றியது.
பதிலளிநீக்குஇவ்வாறு மக்களின் உணர்ச்சி வெளிப்பாடைக் கவனிக்கும் கூத்தாடிக்கு உற்சாகம் பொங்கும். தனது நடிப்பில் மெருகேற்றி ஊர் மக்களின் பாராட்டைப் பெற முயல்வார்.
எனவே ஊர்மக்கள் இவ்வாறு இரண்டுபட்டால் (இரு பிரிவாக பிரிந்து கருத்து வெளியிட்டால்) கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே?
தங்களின் பல இடுகைகளில் உள்ள விளக்கங்களைக் கண்டு வியந்திருக்கிறேன். ஏற்றும் உள்ளேன். இந்த இடுகைக்கான விளக்கம் அவ்வாறு இல்லை என்றே கருதுகிறேன். (ஒரு வேளை அறிவியல் மற்றும் பல மேற்கோள்களை வழக்கமாக கூறுவது இதில் குறைந்துள்ளதால் இருக்கலாம்).
இந்த கட்டுரை நன்றாக உள்ளது. நன்றி.
பதிலளிநீக்குஅன்புடன்,
சங்கர் கணேஷ்