செவ்வாய், 4 அக்டோபர், 2011

நான்கு கடவுள் - பகுதி 2 (தெய்வப் பொருட்கள்)


தெய்வப் பொருட்கள்:

பழந்தமிழர்கள் மேகம் (மாயோன்), மலை (சேயோன்), சூரியன் (வேந்தன்) மற்றும் கடல் (வருணன்) ஆகிய நால்வகைப் இயற்கைப் பொருட்களையே தெய்வங்களாக எண்ணி வழிபட்டனர் என்று முன்னர் கண்டோம். இவற்றை மட்டுமின்றி அவர்கள் இவ் இடங்களில் விளைந்த சிறு பொருட்களையும் தெய்வம் சார்ந்த பொருட்களாகவே கருதினர். தெய்வம் சார்ந்த பொருட்கள் எவை எவை என்று இங்கே காணலாம்.




உப்பு:

கடல் தரும் அமிழ்தம் என்ற பெயருடன் நமது அன்றாட உணவில் இன்றியமையாத இடம் பிடித்துவிட்ட பொருள் தான் உப்பு. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' , ' உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பினை உணர்த்தி நிற்பவை. உணவுக்குச் சுவை கூட்டி உணர்வுகளைப் பதப்படுத்தும் பொருளே உப்பு. உணவில் உப்பின் அளவு மிகுந்தாலும் அவ் உணவுப் பொருள் உண்ணப்படாமல் வீணாகிவிடும். வள்ளுவர் உப்பின் அளவு குறித்து இவ்வாறு கூறுகிறார்.

உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது
மிக்கற்றால் நீள  விடல் - குறள் - 1302

நாம் நுகரும் உணவிற்குத் தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்தால், அது உணவிற்குச் சுவை ஊட்டும். அதைப்போல், தலைவன், தலைவியிடையே நிகழும் ஊடலும் அளவோடு இருந்தால் இன்பம் தரும். மாறாக, உணவில் உப்பை அளவுக்கு மீறிச் சேர்த்தால் அதனால் அந்த உணவையே உண்ண முடியாமல் இருப்பதைப்போல, ஊடல் அளவுக்கு அதிகமாக நீடித்தால், துன்பம் தருவது மட்டுமல்ல, இருவர் உறவைக் கூட பாதிக்கும்படி செய்துவிடும். அன்றாடம் நாம் நம் நடைமுறை வாழ்க்கையில், உணவில் பயன்படுத்தும் உப்பை, காதலர்களுக்கிடையே நிகழும் ஊடலுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.
நாவிற்குச் சுவை தந்து இன்பமளிப்பதால் உப்பு என்ற சொல் இனிமையைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.

கடலைத் தெய்வமாக வணங்கிய பழந்தமிழர்கள் அக் கடலில் இருந்து பிறக்கும் இந்த உப்பினையும் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். அந்தத் தெய்வம் தான் மகாலக்ஷ்மி. ஆம், கடல் தரும் அமிழ்தமாகிய உப்பு தான் மகாலக்ஷ்மி ஆகும். இது எவ்வாறு என்று காண்போம்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது அமிழ்தத்துடன் மகாலக்ஷ்மி வெளிப்பட்டாள் என்று கூறுவர். அதைப்போல கடலில் இருந்து பெறப்படும் அமிழ்தமே உப்பு ஆகும். ஆம், கதிரவனின் வெப்பத்தால் கடல்நீர் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகிறது. அதே சமயம் உப்பு கீழே படிகிறது. உப்பு பிறக்கும் இந் நிகழ்ச்சியினைத் தான் பாற்கடலைக் கடைந்த போது அமிழ்தத்துடன் லக்ஷ்மி வெளிப்பட்டாள் என்று கூறுகின்றனர்.

கடல்நீர் ஆவியாகும் பொழுது பிரிந்து மேலே சென்ற மேகங்களை மாயோன் (திருமால்) என்று வழிபட்டனர். அதே சமயம் கீழே படிந்த உப்பினை மகாலக்ஷ்மி என்று வழிபட்டனர். இந்த மகாலக்ஷ்மியே பின்னாளில் திருமாலை மணம் புரிந்தவள். மாயோனின் மார்பில் இருந்துகொண்டு அவனைக் குளிர்விப்பவள் இந்த லக்ஷ்மி. அதைப்போலவே மேகங்கள் மழை பெய்யாமல் வானில் திரிந்து கொண்டிருந்தால் அவற்றைக் குளிர்வித்து செயற்கையாக மழை பெய்யச் செய்வதற்கு இந்த உப்பைத்தான் மேகங்களின் மேல் தூவுகிறார்கள். உப்புக்கும் மேகத்திற்கும் இடையே உள்ள இத் தெய்வீகத் தொடர்பு வியப்பாக உள்ளது அல்லவா?

இன்றைய நடைமுறையில் பல மங்கல நிகழ்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது இந்த உப்பு ஆகும். குறிப்பாக புதுமனைப் புகும் பொழுது முதலில் வீட்டுக்குள் கொண்டு செல்லப்படுபவை உப்பும் மஞ்சளும் ஆகும். இதில் உப்பு என்பது மகாலக்ஷ்மி ஆகும். முதலில் உப்பைக் கொண்டு செல்வதன் காரணம் புது இல்லத்தில் மகாலக்ஷ்மியின் அருளால் பொருள் வளம் கொழிக்க வேண்டும் என்பதே.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். இந்த அமிர்தம் என்பது உப்பே ஆகும். உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்து உண்டால் அது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றிற்கு எளிதாக வழிவகுக்கும். உணவில் உப்பு குறைவாக இருந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றிற்கு அடிகோலும். இதைத்தான் 'மிகினும் குறையினும் நோயே' என்றனர் பெரியோர். பொருள் செல்வமும் அவ்வாறே ஆகும். அளவுக்கு அதிகமாக பொருள் அல்லது சொத்து சேர்த்து வைத்தவர்களின் நிலை என்ன என்று நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். ஒரளவுப் பணம் நமக்குப் பாதுகாப்பைத் தரும். அதுவே அதிகமானால் பணத்தை நாம் பாதுகாக்க வேண்டி வரும். அதனால் மன நிம்மதியை இழந்து தவிக்க நேரிடும். அவ்வகையில்,

உணவில் உப்பும் 
உழைப்பில் பணமும் (உழைப்பு இல்லாத பணம். உழைத்தால் அதிக பணம் ஈட்ட முடியாதே!)
ஓரளவே சேர்க்க வேண்டும் 

என்னும் கருத்து உறுதியாகிறது. இங்கு உப்பு, பணம் என்ற இரண்டிற்கும் மகாலக்ஷ்மியே தெய்வமாக இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள்:

உப்புக்கு அடுத்தபடியாக மங்களப் பொருளாகக் கருதப்படுவது மஞ்சள் கிழங்கு ஆகும். புதுமனைப் புகுவிழாவில் உப்புடன் இதையும் சேர்த்துத்தான் வீட்டிற்குள் முதலில் கொண்டு செல்வார்கள். பொருள் பெருக்கத்திற்கு உப்பு என்றால் மங்களத்திற்கு மஞ்சள் ஆகும். புது வீட்டில் தொடர்ந்து மங்கள நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று விரும்பியே மஞ்சள் கிழங்குகளை ஒரு தனித்தட்டில் எடுத்துச் செல்கின்றனர்.

மஞ்சளைப் பயன்படுத்தாத பெண்கள் தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். பெண்களின் முகத்திற்குப் பொலிவினைத் தருவதுடன் நல்லதொரு கிருமிநாசினியாகவும் மஞ்சள் செயல்படுகிறது. வெளிப்புறத்தில் மஞ்சளாகவும் உட்புறத்தில் சிவப்பாகவும் உள்ள கிழங்கு மஞ்சளையே பெண்கள் பெரிதும் விரும்புவர். இந்த மஞ்சள் விளைவது செம்மண் பூமியில். செம்மண் பூமியை சேயோன் என்று வழிபட்ட மக்கள் அம் மண்ணில் விளையும் மஞ்சளையும் அத் தெய்வம் சார்ந்த பொருளாகவே கருதினர்.

இந்த மஞ்சள் என்ற சொல்லே மங்கள் என்று திரிந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மஞ்சள் நிறத்தை மங்களகரம் என்று இன்றும் நாம் கூறுகிறோம். மங்களகரமான மஞ்சள் நிறத்தைத் தருகின்ற மஞ்சளை விளைவித்துத் தருகின்ற படியால் சேயோனுக்கு அதாவது முருகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு. மங்களவாரம் என்று முருகனுக்குரிய செவ்வாய்க் கிழமையை நாம் கூறுவது இதன் அடிப்படையில் எழுந்ததே. கீழ்க்காணும் படம் இத் தொடர்பினை விளக்கும்.

மஞ்சள் ---> மங்களம் --> மங்களன் (முருகன்)

நெல்லும் கரும்பும்:

கடலில் விளைந்த உப்பையும் செம்மண்ணில் விளைந்த மஞ்சளையும் மட்டுமின்றி நெல்லையும் கரும்பினையும் கூட தெய்வம் சார்ந்த பொருட்களாகவே கருதினர் பழந்தமிழர். மருத நிலத்தின் வயல்களில் பயிர் செய்யப்பட்ட இவற்றைக் கொண்டு தான் மருத நிலத்தின் தெய்வமான சூரியனுக்கு பொங்கலைப் படையல் இடுகின்றனர். இதைத்தான் தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் திருவிழாவாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

உண்மையில் பொங்கல் திருவிழாவானது சூரியனுக்கு உழவர்கள் நன்றி செலுத்தும் விழாவாகும். வயல்களில் இருந்து புதிதாக அறுவடை செய்த முதல்நெல்லை அவித்து அரிசியாக்கி வைத்திருப்பர். புதிதாக அறுத்த கரும்புகளின் சாற்றில் இருந்து வெல்லம் தயாரித்து வைத்திருப்பர். இவ் இரண்டையும் கொண்டு பொங்கல் சமைத்து அதை சூரியனுக்குப் படைத்து வழிபடுவர். சூரியனைப் போலவே நெல்லுக்கும் கதிர் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாலை:

தலைப்பில் கூறப்பட்ட நூற்பாவில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களைக் கூறிய தொல்காப்பியர் அகத்திணை இயலின் 11 வது பாடலில் ஐந்தாவது நிலம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்.

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.

ஏனை நான்கு நிலங்களுக்கும் பெயர்களைக் கூறிய தொல்காப்பியர் ஐந்தாவது நிலத்திற்கு பெயரெதுவும் கூறாமல் நடுவுநிலைத் திணை என்று கூறுகிறார். ஆனாலும் இந் நிலத்தின் தன்மைகளைக் கூறிவிட்டுத் தான் சென்றுள்ளார். இந் நிலத்தின் சிறுபொழுது நண்பகல் ஆகும். பெரும்பொழுது வேனில் ( இளவேனில் மற்றும் முதுவேனில்) ஆகும். பின்பனிக் காலமும் உரியதே. இந் நிலத்தில் வாழும் மக்கள் கடைநிலை குலத்தவர் (முடிவுநிலை மருங்கு = கடைநிலைக் குலம்) ஆவர். 'முன்னிய நெறித்தே' என்பது கடைநிலைக் குலத்தவர் எதிர்ப்படும் பாதையைக் குறிப்பது. அதாவது பாதையில் செல்வோரை இடைமறித்துத் தாக்கி வழிப்பறி செய்வார்கள் என்பதனை குறிப்பாக உணர்த்துகிறார்.

(மருங்கு = குலம்; முன்னுதல் = எதிர்ப்படுதல் - சான்று: சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி)

சரி, தொல்காப்பியர் ஏன் இந் நிலத்தை நடுவுநிலைத் திணை என்று கூறுகிறார் என்பதைப் பற்றிக் காண்போம். இவ்வகை நிலங்கள் ஓர் இடத்தில் அல்லது ஓர் ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் வழியின் இடைப்பட்டதாய் (நடுவினதாய்) இருக்கும். அதனால் தான் இந் நிலத்தை நடுவுநிலைத் திணை அதாவது இடைப்பட்ட நிலம் என்று கூறுகிறார் தொல்காப்பியர். அதுமட்டுமின்றி இவ் வகை நிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம் போன்ற நிலங்களிலும் இடையிடையே இருக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் மக்கள் இந்த இடைப்பட்ட நிலங்களைக் கடந்து செல்லும்போது தான் அங்குள்ள ஆறலைக் கள்வர்களால் (வழிப்பறித் திருடர்கள்) தாக்கப்படுவர்.

அகத்திணை இயலின் முதல் நூற்பாவில் இவ்வாறு கூறுகிறார்.

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப
அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே.

மேற்காணும் பாடலிலும் ஐந்தாவது நிலத்தை 'நடுவணது' என்று தான் கூறுகிறாரே ஒழிய அதன் பெயர் இன்னதென்று கூறவில்லை. இப்படி அகத்திணை இயலில் எந்த ஒரு இடத்திலும் ஐந்தாவது நிலத்தின் பெயரைக் கூறாத தொல்காப்பியர் புறத்திணை இயலில் கீழ்க்காணும் பாடல் மூலமாகத் தான் அந்த ஐந்தாவது நிலம் 'பாலை' என்பதை 'உய்த்துணர' வைக்கிறார்.

வாகை தானே பாலையது புறனே - பா: 15

இந்த நடுவண் நிலமாகிய பாலைநிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் யாரைத் தெய்வமாக வணங்கினர் என்பதற்கான குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை.

                                                                                                          - தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.