உவப்பத் தலைக்கூடி உள்ளப்
பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
- 394.
தற்போதைய விளக்க உரைகள்:
கலைஞர் உரை: மகிழ்ச்சி
பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர்
செயலாகும்.
மு.வரதராசனார் உரை: மகிழும்
படியாகக் கூடிப்பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப்
பிரிதல் புலவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை: மற்றவர்கள்
கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப்
போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
பரிமேலழகர் உரை: உவப்பத்
தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை
யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் -
கற்றறிந்தாரது தொழில். (தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில்
என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை.
நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின்
இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது
உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: மக்களிருவர்
உவக்குமாறு கூடி அவர் நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது
இன்பம் நுகரினும் வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
உரைகளில் உள்ள நெருடல்கள்:
மேற்காணும் உரைகள் அனைத்தும்
ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றன. அதாவது, கற்றறிந்தவர்கள் பலர் ஒன்றுகூடும்போது
மன மகிழ்வுடன் பேசிப்பழகி ஒருவரையொருவர் பிரியும்போது மீண்டும் எப்போது இவரைச் சந்திப்போம்
என்ற எண்ணத்துடனும் செல்வர் என்பதையே வள்ளுவரின் கருத்தாக இந்த உரைகள் அனைத்தும் கூறுகின்றன.
ஆனால் இந்த உரைகளில் சில நெருடல்கள் உள்ளன. அவற்றைக் கண்டபின்னர், இந்த உரைகள் சரியா
தவறா என்ற முடிவுக்கு வரலாம்.
1. இக்குறளில் வரும் உவப்பு
என்னும் சொல்லுக்கு மகிழ்ச்சி, இன்பம் ஆகிய பொருட்களைக் கொண்டு விளக்கம் கூறியுள்ளனர்.
புதியதாகப் பிறரைச் சந்திக்கும்போது பல நூல்களைக் கற்றுத்தேர்ந்த புலவர்கள் மட்டும்தான்
மகிழ்ச்சிபொங்க பழகுவார்களா?. நூல்களையே கற்றிராத பல்வகை மக்கள் ஆகிய வேளாண்மக்கள்,
ஆடைநெய்வோர், துணிதுவைப்போர், தச்சர், கொல்லர், வீரர் போன்றோர் பிறரிடத்தில் இனிமையாகப்
பழகமாட்டார்களா? பல நூல்களைக் கற்றுப்பெறும் கல்வி அறிவுக்கும் இனிமையுடன் பிறரிடத்தில்
பழகுகின்ற பண்புக்கும் என்ன தொடர்பு?. இனிமையுடன் பழகுதல் என்பது புலவர்களுக்கு மட்டுமே
உரியது என்பதைப் போன்ற ஒரு கருத்தினை வள்ளுவர் ஏன் இங்கே வலியுறுத்த வேண்டும்?.
2. இக்குறளில் வரும் உள்ளல்
/ உள்ளுதல் என்னும் சொல்லுக்கு நினைத்தல் என்ற பொருள்கொண்டு விளக்கம் கூறியுள்ளனர்.
இனி எப்போது இவரைச் சந்திப்போம் என்று நினைத்துக்கொண்டு பிரிவார்களாம். இது என்ன வியப்பாக
இருக்கிறது !. விரும்பினால் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளத் தடையென்ன?. புலவர்கள்
ஒருவரையொருவர் சங்கங்களில் சந்தித்துக் கொள்வது இயல்பாக நடக்கக்கூடியது தானே?. எப்போது
சந்திப்போம் என்ற கவலை ஏன்?.
3. இந்தக் குறள் 'கல்வி'
என்னும் அதிகாரத்தில் வருவது. கல்வி கற்கும் முறை, கல்வியின் சிறப்பு, கற்றவருக்கு
உண்டாகும் சிறப்பு போன்றவற்றைக் கூறுகின்ற அதிகாரத்தில் இனிமையாகப் பழகுதல் என்கின்ற
அனைவருக்கும் பொதுவான அடிப்படையான பண்பினைப் பற்றிக் கூறவேண்டிய தேவையென்ன?. 'புலவர்
தொழில்' என்று குறளில் கூறியிருக்கும்போது 'இனிமையாகப் பழகுதல்' என்ற பண்பானது எப்படிப்
புலவரது தொழில் அல்லது கடமையாகும்?. பண்பும் கடமையும் வேறுவேறு அல்லவா?.
4. இந்தக் குறளில் 'ஒன்றுசேர்தல்'
என்ற பொருளைத் தருவதான 'தலைக்கூடுதல்' என்பதற்கு எதிராகப் 'பிரிதல்' என்ற சொல்லைப்
பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர். இதே அடிப்படையில், உள்ளலும் உவத்தலும் எதிர்ச்சொற்களாகத்
தான் இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் இவையிரண்டும் எதிர்ச்சொற்கள் இல்லை. காரணம்,
உள்ளல் என்பதற்கு ஆராய்தல், கருதுதல் போன்ற பொருட்களையும் உவத்தல் என்பதற்கு விரும்புதல்,
மகிழ்தல் போன்ற பொருட்களையும் அகராதிகள் காட்டுகின்றன.
மேற்கண்ட காரணங்களைத் தொகுத்துப்
பார்க்கும்போது, இக்குறளில் ஏதோ ஒரு எழுத்துப்பிழை இருக்கிறது என்பதும் அதுவே விளக்க
உரைகளில் நெருடல்களை உருவாக்கி இருக்கிறது என்பதும் உறுதியாகிறது. குறிப்பாக 'உவப்ப'
என்ற சொல்லில்தான் பிழை இருப்பதாகத் தெரிகிறது. அதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.
திருந்திய சொல்லும் பொருளும்:
உவப்ப என்னும் சொல்லில்
பிழை இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. அப்படியென்றால் திருந்திய சொல் என்ன?. இதைக்
கண்டறிய நமக்கு உதவியாய் இருப்பது 'உள்ளல்' என்ற சொல்லே. அதாவது, திருந்திய சொல்லானது
உள்ளல் என்ற சொல்லுக்கு எதிர்ப்பொருள் தருவதாய் அமைந்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில்
பார்க்கும்போது நமக்குக் கிடைப்பது, உலப்ப என்ற சொல்லாகும். இதன் அடிப்படையில் இக்குறளின்
திருந்திய வடிவம் இதுதான்:
உலப்பத் தலைக்கூடி உள்ளப்
பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
- 394.
உலப்பல்/உலப்புதல் என்னும்
சொல்லுக்குக் கலப்புக்கட்டோசை, பேரொலிசெய்தல், ஆரவாரித்தல் ஆகிய பொருட்களைத் தமிழ்
அகராதிகள் கூறுகின்றன. இப்புதிய பொருளின் அடிப்படையில், இக்குறளின் திருந்திய பொருளானது:
ஒன்றுகூடும்போது கலப்புக்கட்டோசை
/ பேரொலி எழுமாறு உரைப்பதுவும்
பிரியும்போது கேட்டவற்றை
ஆய்ந்தவண்ணம் செல்வதும்
புலவர்களின் தொழில் அல்லது
கடமையாகும்.
நிறுவுதல்:
இப்புதிய சொல்லும் புதிய
விளக்கமும் எவ்வாறு பொருந்தும் என்பதனை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். முதலில், திருக்குறள்
பதிப்புக்களில் ஒருசில எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே இருந்துள்ளன என்ற கருத்தினையும்
நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஏடுகளைப் பதிப்பிக்கும்போது எழுத்துப்பிழைகள் ஏற்படுவது
இயல்புதான் என்பது மட்டும் இங்கே காரணமாகக் காட்டப்படவில்லை. தமிழ் எழுத்துக்களில்
'ல' கரமும் 'வ' கரமும் ஒட்டிப்பிறந்தவர்களைப் போல ஒரே மாதிரி அமைப்புடையவை. சாதாரணமாகப்
படிக்கும்போதே இந்த எழுத்துக்கள் வரும் இடங்களை நன்கு உற்றுப்பார்த்துத்தான் படிக்கவேண்டும்.
'பாவம்' என்ற சொல்லைக் கவனக்குறைவாக 'பாலம்' என்று படிப்போர் அதிகம். இந்த அடிப்படையில்,
'உலப்ப' என்று வள்ளுவர் எழுதியதை ஏட்டினைப் புதுப்பித்தோர் 'உவப்ப' என்று சற்றே கவனக்குறைவாகப்
பதிப்பித்திருக்க அதிக வாய்ப்புண்டு அல்லவா?.
மேலும், வள்ளுவர் இக்குறளில்
முரண்தொடையைப் பயன்படுத்தி இருக்கிறார் என்று மேலே கண்டோம். முதல் அடியின் இரண்டாவது
சீரான 'தலைக்கூடுதல்' என்னும் சொல்லுக்கு முரணாகப் பொருள்தருகின்ற வகையில் 'பிரிதல்'
என்ற சொல்லை நான்காவது சீராக அமைத்திருக்கிறார். எந்தவொரு பாடலிலும் ஒரே அடியில் வருவதான
இரண்டாவது நான்காவது சீர்கள் மட்டும் முரணான பொருட்களைத் தந்தால் அது சிறப்பாகக் கருதப்படுவதில்லை.
எனவேதான் அது முரண் தொடையின் இலக்கணத்துள் வருவதில்லை. என்றால், எஞ்சியிருக்கும் முதல்
மற்றும் மூன்றாம் சீர்களில் தான் முரண்தொடை அமைந்திருக்க வேண்டும் என்றாகிறது. இவ்வாறு
ஒரு அடியில் வரும் முதல் சீரும் மூன்றாம் சீரும் சேர்ந்து முரண்பொருளைத் தந்தால் அது
பொழிப்பு முரண் என்ற இலக்கணத்தில் அடங்கும். அவ்வகையில் பார்த்தாலும் 'உலப்ப' என்னும்
சொல்லே 'உள்ள' என்ற சொல்லுக்குச் சரியான முரண் சொல்லாகும். காரணம், உள்ளுதல் என்பது
பிறர் அறியாவண்ணம் தனக்குள் ஒன்றைக் கருதுவதாகும்; உலப்புதல் என்பது பிறர் அறியுமாறு
தனது கருத்தினை உரக்க வெளிப்படுத்துதல் ஆகும். இவ் இரண்டு செயல்களும் ( மறைத்தல், வெளிப்படுத்துதல்
) ஒன்றுக்கொன்று முரணானவை என்பதால் உலப்புதலும் உள்ளுதலும் முரண்சொற்கள் ஆகின்றன.
இக்குறளில் வரும் புலவர்
என்னும் சொல்லுக்குப் பல நூல்களைக் கற்ற அறிவுடையோர் என்ற பொருளே பொதுவாகக் கொள்ளப்படுகிறது.
அவ்வகையில், புலவர்கள் பலர் மன்னனது அவையில் ஒன்றுகூடிப் பல்வேறு பொருட்களைப் பற்றிப்
பேசி அலசி ஆராய்வது வள்ளுவர் காலத்து வழக்கம். அப்படிப்பேசும்போது புலவர்களுக்கிடையே
காரசாரமான உரையாடல், சான்றாக, திருவிளையாடல் திரைப்படத்தில் இறையனாருக்கும் நக்கீரருக்கும்
இடையில் நடக்கும் உரையாடலைப் போல, நடப்பதும் வழக்கமான ஒன்றுதான். அவரவர்க்கு அவரவர்
கருத்தின்மீது பிடிப்பும் அதை அனைவர் முன்னும் உரக்கக் கூறவேண்டும் என்ற முனைப்பும்
இருப்பது இயல்பென்பதால் அங்கே கலப்புக்கட்டோசை அதாவது பல குரல்களின் கலப்பு ஓசை எழுவதைத்
தவிர்க்க இயலாது. இப்படி ஒன்றுகூடி ஆயும்போது பல்லோர் முன் உரக்கத் தனது கருத்தை வெளிப்படுத்திய
பின்னர் பிரிந்து செல்லும்போது பிறர் கூறிய கருத்துக்களின்மீது தனது எண்ணங்களைக் குவித்து
ஆய்ந்தவாறு புலவர்கள் செல்வதும் வழக்கம் தான். சொல்லப்போனால், புலவர்களின் தொழில் அதாவது
கடமையே இதுதான். அதாவது, தான் கற்றுணர்ந்த கருத்துக்களை அவையோர் முன்னால் உரக்கக் கூறுவதும்
அது தொடர்பாக அவையோர் கூறும் மறுமொழிகளை மதித்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதும்
ஒரு புலவருக்குரிய தலையாய கடமையாகும் அல்லவா?. இதைத்தான் புலவர் தொழில் என்று இக்குறளில்
குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
இக்குறளானது கல்வி என்னும்
அதிகாரத்தின் கீழ் வருவது. கல்வியின் சிறப்பினையும் கல்விகற்பதால் உண்டாகும் சிறப்பினையும்
வலியுறுத்துவதால், இக்குறளைக் கல்விபயிலும் மாணவர்களுக்காகக் கூறியதாகவும் எடுத்துக்
கொள்ளலாம். ' கல்வி கரையில கற்பவர் நாள்சில ' என்னும் கூற்று உண்மையான், புலவர் என்ற
சொல்லானது கல்வி பயில்கின்ற மாணாக்கர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். இப்புதிய கோணத்தில்
பார்த்தாலும் புதிய விளக்கம் பொருத்தமாகத்தான் இருக்கின்றது. மாணவர்கள் கல்விபயில ஒன்றுகூடி
இருக்கும்போது ஆசிரியர் கூறுவதை உரத்த குரலில் அப்படியே திரும்பக் கூறுவார்கள் இல்லையா?.
அப்போது அங்கே கலப்புக்கட்டோசை எழுவது இயல்புதான். இப்படி உரக்கக் கூறி பயில்வதால்
அது மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதிவதாகத் தற்காலக் கல்வியியல் ஆய்வுமுடிவுகளும் கூறுகின்றன.
கல்வி கற்றபின்னர் இல்லம் திரும்பும்போது மாணவர்கள் அமைதியாகத் தாம் கற்றவற்றை மீண்டும்
நினைத்துப் பார்த்தவாறு செல்வர். இதையே 'புலவர் தொழில்' என்று கல்வி பயிலும் மாணவர்களின்
கடமையாகக் கூறுகிறார்.
இறுதியாக ஒரு சான்று. கல்வி, கற்றல் ஆகிய சொற்களின் அடிப்படை வேர்ச்சொல் 'கல்' என்பதாகும். கல் என்னும் வினைச்சொல்லுக்குப் பல பொருட்களை அகராதிகள் கூறியிருந்தாலும் கலப்புக் கூட்டாக ஒலித்தல் என்ற பொருள் அதில் விடுபட்டுப் போய்விட்டது. கல் என்னும் சொல் கலப்புக் கூட்டாக ஒலித்தல் என்ற பொருளில் 'கல் என்', 'கல் என்று' என்பதைப் போன்ற வழக்குகளாகப் பல சங்க இலக்கியப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே ஆதாரங்களாகக் காணலாம்.
கல்லென் சுற்றம் கடும் குரல் அவித்து எம் - குறி.151
(மக்கள் கூட்டாக எழுப்பிய ஓசை)
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை - மலை. 335
(மாடுகளைப் பிடிக்கும்போது எழுந்த பேரோசை)
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி - நற். 195
( பல்வேறு பறவைகள் எழுப்பிய ஓசை )
கல்லென் கௌவை எழாஅ காலே - ஐங்கு.131
( ஊரார் கூடிநின்று பேசும் அலர் ஓசை )
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் - அகம். 57
( போரிலே உண்டாகும் பேரோசை )
கல்லென் விழவுடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து - புறம் 31
( ஊர்த் திருவிழாவில் எழுந்த பேரோசை )
மேற்காணும் பாடல்களில் வரும் கல் என்னும் சொல்லானது கலப்புக் கூட்டொலி அதாவது பேரோசை என்னும் பொருளில் பயின்று வந்துள்ளதை அறியலாம். அகராதிகள் சுட்டிக்காட்டியிராத இப் புதிய பொருளே கல்வி மற்றும் கற்றலின் அடிப்படையாகும்.
ஆதியில் கல்வி என்பது வாய்ப்பாடமாகவே பயிலப்பட்டு வந்தது. பல மொழிகளுக்கு வரிவடிவங்கள் தோன்றியதெல்லாம் பிற்காலத்தில் தான். திருவள்ளுவர் காலத்தில் கூட கல்வியானது செவிவழியாகவே பெரும்பாலும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால் தான் கேள்வி என்றொரு தனி அதிகாரமே இயற்றியிருக்கிறார். கல்வியைச் செவிச்செல்வம் என்று புகழ்கிறார். இப்படிக் கல்வியானது செவிவழியாகவே பயிற்றுவிக்கப்பட்ட காலத்தில், ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்கள் அதனைச் செவியால் நன்கு உள்வாங்கித் திரும்பச் சொல்லவேண்டும். மாணவர்கள் கூட்டாக ஒன்றுசேர்ந்து கூறும்போது அங்கு கலப்புக் கூட்டொலி அதாவது பேரோசை உண்டாகும் அல்லவா?. இதுதான் கல்வி கற்றலின் அடிப்படை ஆகும். கல் + தல் = கற்றல், கல் + வி = கல்வி ஆகியவை கூட்டாக ஒலித்தலைக் குறிக்கும். கற்களை அடிப்படையாகக் கொண்டே ஆதியில் கற்றல் துவங்கியது என்பாரும் உளர். ஆனால் இக்கருத்து பொருந்தாது என்பதனை மேற்காணும் விளக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
இறுதியாக ஒரு சான்று. கல்வி, கற்றல் ஆகிய சொற்களின் அடிப்படை வேர்ச்சொல் 'கல்' என்பதாகும். கல் என்னும் வினைச்சொல்லுக்குப் பல பொருட்களை அகராதிகள் கூறியிருந்தாலும் கலப்புக் கூட்டாக ஒலித்தல் என்ற பொருள் அதில் விடுபட்டுப் போய்விட்டது. கல் என்னும் சொல் கலப்புக் கூட்டாக ஒலித்தல் என்ற பொருளில் 'கல் என்', 'கல் என்று' என்பதைப் போன்ற வழக்குகளாகப் பல சங்க இலக்கியப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. அவற்றில் சிலவற்றை மட்டும் கீழே ஆதாரங்களாகக் காணலாம்.
கல்லென் சுற்றம் கடும் குரல் அவித்து எம் - குறி.151
(மக்கள் கூட்டாக எழுப்பிய ஓசை)
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை - மலை. 335
(மாடுகளைப் பிடிக்கும்போது எழுந்த பேரோசை)
கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி - நற். 195
( பல்வேறு பறவைகள் எழுப்பிய ஓசை )
கல்லென் கௌவை எழாஅ காலே - ஐங்கு.131
( ஊரார் கூடிநின்று பேசும் அலர் ஓசை )
களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் - அகம். 57
( போரிலே உண்டாகும் பேரோசை )
கல்லென் விழவுடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து - புறம் 31
( ஊர்த் திருவிழாவில் எழுந்த பேரோசை )
மேற்காணும் பாடல்களில் வரும் கல் என்னும் சொல்லானது கலப்புக் கூட்டொலி அதாவது பேரோசை என்னும் பொருளில் பயின்று வந்துள்ளதை அறியலாம். அகராதிகள் சுட்டிக்காட்டியிராத இப் புதிய பொருளே கல்வி மற்றும் கற்றலின் அடிப்படையாகும்.
ஆதியில் கல்வி என்பது வாய்ப்பாடமாகவே பயிலப்பட்டு வந்தது. பல மொழிகளுக்கு வரிவடிவங்கள் தோன்றியதெல்லாம் பிற்காலத்தில் தான். திருவள்ளுவர் காலத்தில் கூட கல்வியானது செவிவழியாகவே பெரும்பாலும் பயிற்றுவிக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால் தான் கேள்வி என்றொரு தனி அதிகாரமே இயற்றியிருக்கிறார். கல்வியைச் செவிச்செல்வம் என்று புகழ்கிறார். இப்படிக் கல்வியானது செவிவழியாகவே பயிற்றுவிக்கப்பட்ட காலத்தில், ஆசிரியர் சொல்லச் சொல்ல மாணவர்கள் அதனைச் செவியால் நன்கு உள்வாங்கித் திரும்பச் சொல்லவேண்டும். மாணவர்கள் கூட்டாக ஒன்றுசேர்ந்து கூறும்போது அங்கு கலப்புக் கூட்டொலி அதாவது பேரோசை உண்டாகும் அல்லவா?. இதுதான் கல்வி கற்றலின் அடிப்படை ஆகும். கல் + தல் = கற்றல், கல் + வி = கல்வி ஆகியவை கூட்டாக ஒலித்தலைக் குறிக்கும். கற்களை அடிப்படையாகக் கொண்டே ஆதியில் கற்றல் துவங்கியது என்பாரும் உளர். ஆனால் இக்கருத்து பொருந்தாது என்பதனை மேற்காணும் விளக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
முடிவுரை:
கல்வி பயில்வதில் கற்றல்
மட்டுமின்றி கற்றவற்றை நினைத்துப் பார்த்தலும் இன்றியமையாதது தான். இக் கருத்தினை இந்த
அதிகாரத்தின் முதல் குறளிலேயே வலியுறுத்தி இருப்பார் வள்ளுவர்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. -
391.
கல்விகற்கும்போது பிழையில்லாமல்
கற்பதும் கற்றபின்னர் அவற்றை நினைத்துப் பார்ப்பதும் இன்றியமையாதவை என்று மேற்குறளில்
கூறுகிறார் வள்ளுவர்.
முயன்று விளக்கம் தந்துள்ளீர்ஜள். முயற்சிக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇரண்டு இலக்கியச் சான்றுகள் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1.உலப்ப என்ற சொல் எவ்விலக்கியங்களில் எந்தஎந்தப் பொருளில் கையாளபட்டுள்ளது.
2.புலவர் என்ற சொல் எந்த இலக்கியத்தில் மாணவர் என்ற பொருளில் எடுத்தாளப்பட்டுள்ளது?
நன்றி
சொ.வினைதீர்த்தான்
வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் வினாக்களுக்கான விடைகளை மின் தமிழ் குழுமத்தில் இட்டுள்ளேன் ஐயா.
பதிலளிநீக்கு