புதன், 19 ஆகஸ்ட், 2009

பூமி என்னும் தாய்


பாடல்:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
- குறள் எண்: ௨௪௫


தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.
மு.வ உரை: அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
சாலமன் பாப்பையா உரை: அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

தவறு:

மேற்காணும் மூன்று உரைகளும் தவறானவை ஆகும். ஏனென்றால் இக் குறளின் மூலம் வள்ளுவர் கூறவரும் கருத்து இதுவல்ல. அருளுடையவர்க்குத் தீவினை அதாவது துன்பம் இல்லை என்று 244 ஆம் குறளில் கூறிய வள்ளுவர் அதே கருத்தை இக் குறளிலும் கூறுவாரா?. அவ்வாறு கூறினால் அது கூறியது கூறல் என்னும் குற்றமாகி விடும். வள்ளுவர் போன்ற பெருந்தகையாளர்கள் அக் குற்றத்தை ஒருபோதும் செய்யமாட்டார்கள். எனவே இக் குறளில் துன்பம் என்ற பொருளையே வள்ளுவர் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. என்றால் இந்தத் தவறான கருத்துரைகளுக்குக் காரணம் என்ன?. அல்லல் என்ற சொல்லுக்குத் துன்பம் என்று பொருள் கொண்டதே ஆகும். இப் பொருள் இக் குறளுக்குப் பொருந்தாது.

அதுமட்டுமின்றி இந்த உரைகளில் காணப்படும் காற்று என்ற பொருள் இங்கு தேவையின்றி வந்துள்ளது. வெறுமனே உலகம் என்று சொல்லாமல் காற்று இயங்குகின்ற உலகம் என்று வள்ளுவர் ஏன் கூறவேண்டும்?. பூமிக்கு வரும் துன்பங்களை எல்லாம் காற்று மண்டலம் தடுத்து பூமியைக் காப்பாற்றி விடும் என்ற கருத்திலா?. உறுதியாக இல்லை. ஏனென்றால் பிற அண்டவெளிப் பொருட்களால் பூமிக்கு நேர்கின்ற துன்பங்களை எல்லாம் காற்று மண்டலத்தால் தடுத்துவிட முடியாது. இந்த அறிவியல் உண்மையினை தகைசான்ற வள்ளுவரும் அறிவார். எனவே காற்று எனும் பொருள் இக் கருத்தினைக் குறிக்க வரவில்லை என்பது தெளிவாகிறது. காற்று எனும் பொருளை வள்ளுவர் இங்கு பயன்படுத்தியதன் நோக்கங்கள் எவையும் தெளிவாகவும் பொருத்தமாகவும் இல்லை என்பதால் அப்பொருளை வள்ளுவர் இக் குறளில் பயன்படுத்தி இருக்கவே மாட்டார் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து காற்று என்னும் பொருளைக் குறிக்கும் வளி என்ற சொல்லில் தான் ஏதோ பிழை உள்ளது என்னும் கருத்தைப் பெறலாம். இனி இவற்றிற்கான திருத்தங்களைக் காணலாம்.

திருத்தம்:

அல்லல் என்னும் சொல் இக்குறளில் வறுமைப் பொருளில் வந்துள்ளது. வறுமையும் ஒருவகைத் துன்பமே என்பதாலும் எதுகை அழகிற்காகவும் அல்லல் என்னும் சொல்லை வறுமைப் பொருளில் இங்கு வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். வளி என்னும் சொல்லுக்குப் பதிலாக வரி என்ற சொல் வந்திருக்க வேண்டும். வரி என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இச் சொல் இக் குறளில் கடலைக் குறிக்கும். வரிவழங்கும் மல்லல் என்பது கடல் தருகின்ற பெருவளமாகிய மழையினைக் குறிக்கும். இவையே இக் குறளில் வரும் திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:

அருளுடைமைக்குச் சிறந்த சான்றுகாட்ட விரும்பிய வள்ளுவர் இக் குறளில் நமது பூமியையே சான்றாகக் காட்டுகிறார். ஆம், நமது பூமித்தாயினைவிட அருளில் சிறந்தவள் யார் இருக்கமுடியும்?. அண்டவெளியில் விழுந்து தொலைந்து போகாமல் தன்னோடு ஈர்த்துவைத்துக் கொண்டு ஒரு தாயைப்போல நம்மையெல்லாம் சுமந்து கொண்டிருக்கின்றது பூமி. இப் பூமியை நமது தேவைக்காகப் பங்குபோட்டுக் கொண்டு வெட்டுகிறோம்; குத்துகிறோம்; குடைகிறோம்; வெடிவைத்துத் தகர்க்கிறோம். இத் துன்பங்களுக்காக நம்மீது சினம்கொள்ளாமல் பொறுமையாக இருப்பதுடன் நமக்காக நல்ல பல வளங்களையும் தந்து காப்பதால்தான் பூமியை அருளில் சிறந்தவள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

சரி, பூமித்தாயை வள்ளுவர் ஏன் இக்குறளில் சான்றாகக் கூறுகிறார் அதாவது இச் சான்றின் மூலம் வள்ளுவர் உணர்த்த வரும் கருத்து என்ன என்று காணலாம். அருள் என்னும் உயரிய பண்பு ஒரு குலப்பண்பு ஆகும். பிறரது துன்பத்தைத் தனது துன்பமாக நினைத்து உதவுதலும் யாருக்கும் துன்பமே விளைவிக்காமல் வாழ்தலும் அருளுடையோரின் அடையாளங்கள் ஆகும். அருட்குடியில் பிறந்த மக்கள் பிறருக்கு உதவிசெய்து வாழவேண்டும் என்பதே அவர்களுக்கான விதி. ஆனால் இப்படி வாழ்வதால் தமது பெருஞ்செல்வத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி வாடவேண்டுமோ என்று அஞ்சி பலர் உதவிசெய்யத் தயக்கம் காட்டுவதுண்டு. இவர்களது தயக்கத்தினைக் களையவே இக் குறளை இயற்றியுள்ளார் வள்ளுவர்.


பிறருக்கு உதவிசெய்து வாழ்வதால் வறுமைநிலை உண்டாகாது; வளமான நிலையே உருவாகும். இக் கூற்றுக்குச் சான்றாகத் தான் கடல் உடுத்த பூமியைக் காட்டுகிறார் வள்ளுவர்.




பூமி உயிர்களிடத்தில் காட்டும் அருளே மழை ஆகும். உப்புநீராகிய கடல்நீர் ஆவியாகி மேகமாகி நன்னீராக மீண்டும் பூமிக்கே பொழிகிறது. இதனால் பூமியின் மொத்த நீர்வளம் குறைவதில்லை; மாறாக கூடவே செய்கிறது. இதற்குச் சான்றாக பூமியில் அடிக்கடி உண்டாகும் வெள்ளப் பெருக்குகள் மற்றும் கடல் கொந்தளிப்புக்களைக் கூறலாம். பிறரது துன்பம் கண்டு அருள்செய்வோரிடத்தில் மழைநீர்ப் பெருக்கைப் போல எதிர்பாராத பலவழிகளில் செல்வம் பெருகும். இதனால் அருளுடையோருக்கு வறுமை என்பதே இல்லை. கடல் வழங்குகின்ற பெருவளமாகிய மழையினை உடைய இந்த பெரும்பூமியே இதற்குச் சிறந்த சான்றாகும் என்கிறார் வள்ளுவர். இதுவே இக் குறளின் சரியான பொருள்விளக்கம் ஆகும். பூமியின் அருட்செல்வமாகிய மழையினை மாந்தரின் பொருட்செல்வத்துடன் ஒப்பிட்டு இக் குறளை இயற்றிய வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத் தக்கது அல்லவா?.

சரியான பாடல்:

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வரிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.