வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
ஆத்துல போட்டாலும்
பழமொழி:
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்
தற்போதைய பொருள்:
தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவரும் பல தமிழ்நாட்டுப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'ஆற்றில்' என்னும் தூயதமிழ்ச்சொல்லே 'ஆத்துல' என்று கொச்சைவழக்கில் மருவியதாகப் புரிந்துகொண்டு 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்' என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு 'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்' என்று பொருள் கூறுகின்றனர்.
தவறு:
மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. முதலில் ஆற்றுநீரில் போடுவதைப் பற்றிப் பார்ப்போம். இக் கருத்து அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.
அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல. ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று நாம் அறிவோம். எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப் பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.
திருத்தம்:
இப் பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.
நிறுவுதல்:
புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப் பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும். தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.
மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனை உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. வள்ளுவர் ஒருபடி மேலேபோய் அறிவினை ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று 421 ஆம் குறளில் அவர் குறிப்பிடுவதில் இருந்து நல்ல தெளிவான அறிவினை ஆயுதமாகக் கொண்டு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்று அறியலாம். இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.
அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் 'அகத்தில் போட்டாலும்' என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது 'எளிதான செயல்தானே' என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.
'நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே' என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி.
இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல
சரியான பழமொழி:
அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லுவாகண்ணே.
பதிலளிநீக்குஆத்துல போயிக் கொட்டுற அளவுக்குக் குப்பையும் இல்ல எங்க ஊருல ஆறும் இல்லண்ணே.
அதுக்காக பழமொழியக் கோச்சுக்க முடியுங்களாண்ணே?
அதால அந்தப் பழமொழியில தான் ஏதோ தப்பிருக்குன்னு புரிஞ்சுட்டுண்ணே./
இப்படி ஒரு அறிமுகத்தோடு இந்தப் பதிவுக்கு இழுத்துவந்து, ம்ம்ம்ம்,சுவையாகத் தான் இருக்கிறது! அகம் என்பது ஆறு ஆனதைக் கூட நடைமுறையில் பார்த்திருப்பதால், ஒப்புக் கொள்ள முடிகிறது. அது திரிபு என்பதையும் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது.
ஆனால்.. அளந்து என்பது எழுத்துப் பிழை என வாதம்? அங்கே என்னவோ இடறுகிறதே!
திருத்தம், திருத்தம் செய்யப் படுவதற்காகவே மட்டும் அல்ல. தவறான பொருளைவிளக்கிச் சரியான பொருளைக் காண முனைகிற முயற்சி!
நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா! அளத்தல் என்னும் சொல்லிற்கு கருதுதல், சிந்தித்தல் என்பதே பொருளாகும். எனவே அளத்தல் வேறு; அறிதல் வேறாகும். புதிய தகவல்களைக் கற்கும்போது அவைகுறித்த தெளிவான உண்மைகளையும் அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும் என்பதே இக் கட்டுரையின் பொருளாகும். இப் பொருளை விளக்க அளத்தல் என்றசொல் பயன்படாது என்பதால் தான் அறிதல் என்ற சொல்லே வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஅய்யா ஒரு சின்ன திருத்தம்
பதிலளிநீக்குஆற்றில் போடுவது அறிவற்ற செயல் , அதை செய்தாலும் அளந்து செய் என் பொருள் கொள்ளலாமோ???
அதாவது எந்த செயல் செய்தாலும் (பயனற்றதாக இருந்தாலும்) கவனமாக செய் , நிதானம் தவறாதே என்று பொருள் வரும் என்பது இந்த சிறியவனின் கருத்து
???????????
பிரபு அவர்களே 'பயனற்றதாகவே இருந்தாலும் கவனமாகச் செய்' என்று பெரியவர்கள் ஒருபோதும் அறிவுரை கூறமாட்டார்கள். அப்படிச் சொன்னால் அது நன்னெறிப்படுத்தல் ஆகாது. அன்றியும் அளந்து என்பதற்கு கவனித்து என்ற பொருள் அகராதிகளில் இல்லை. எனவே நீங்கள் கூறும் பொருள் இங்கே பொருந்தாது.
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டிய பழமொழி
பதிலளிநீக்கு