புதன், 28 ஏப்ரல், 2010

பொருட்பெண்டிர்

குறள்:

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.
                                            - எண்: 913

தற்போதைய பொருள்:

பரிமேலழகர் உரை: கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையுடைய முயக்கம், பிணமெடுப்பார் இருட்டறைக் கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்.

மு.வ.உரை: பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவல் இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தினைத் தழுவினாற் போன்றது.

கலைஞர் உரை: விலைமாதர்கள் பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவி பொய்யன்பு காட்டி நடிப்பது இருட்டறையில் ஒரு அந்நியப் பிணத்தினை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை: பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித்தழுவல், இருட்டு அறையில் முன்பு அறியாத பிணத்தினை தழுவுவது போலாகும்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளைப் படிக்கும்போது சில கேள்விகள் தாமாகவே மனதில் தோன்றுகின்றன. முதல் உரை நீங்கலான அனைத்து உரைகளிலும் ' இருட்டறையில் பிணத்தைத் தழுவுதல்' என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இக் கருத்தின் மேல் எழுகின்ற கேள்வி இதுதான்: இருட்டறையில் ஒருவர் பிணத்தைத் தழுவக் காரணம் என்ன?. ஒன்று வரம்பு கடந்த பாலுணர்வாக இருக்கலாம். மற்றொன்று அறியாமை (பிணம் என அறியாமை) யாக இருக்கலாம். இவ் இரண்டில் எது காரணமாக இருந்தாலும் இக் கருத்து வள்ளுவர் கூற வரும் கருத்துடன் ஒத்துப் போகவில்லை. ஏனென்றால் பொருட்பெண்டிர் ஒரு ஆண்மகனைத் தழுவுவதன் காரணமாக வள்ளுவர் கூறுவது அந்த ஆண்மகனின் பொருள்வளமே அன்றி பொருட்பெண்டிரின் வரம்பு கடந்த பாலுணர்வோ அறியாமையோ அன்று. இப்படி பொருட்பெண்டிரின் தழுவுதல் மற்றும் பிணத்தைத் தழுவுதல் ஆகிய இரண்டு செயல்களுக்குமான அடிப்படைக் காரணங்கள் வேறுவேறாக இருக்கும் நிலையில் இவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உவமையாகக் கூற இயலாது; அப்படிக் கூறினால் அது தவறாகும். வள்ளுவர் அவ்வாறு கூறி இருக்க மாட்டார் என்பதால் இக் கருத்தில் பிழை இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முதல் உரையான பரிமேலழகர் உரையிலோ 'இருட்டறையில் பிணத்தைத் தழுவி எடுத்தல்' என்ற பொருள் தொனிக்கிறது. இக் கருத்தில் இரண்டு தவறுகள் புதைந்து உள்ளன. இரவில் பிணம் எடுத்தல் என்ற கருத்து முதல் தவறாகும். ஏனென்றால் அக்காலத்தில் பகலில் பிணம் எடுக்கக் கூடாது என்றோ இறந்தவரது உடலை இரவில் தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும் என்றோ விதிமுறைகள் எவையும் இல்லை. அப்படி ஒரு நடைமுறை அக்காலத்தில் இருந்ததாக இதுவரை யாரும் போதுமான ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கவும் இல்லை. எனவே இக் கருத்தினை ஒரு புனைகதை என்றே கொள்ள முடியும். பிணம் எடுப்பவர் பிணத்தைத் தழுவி எடுப்பதாக ஒரு கருத்து இந்த உரையில் கூறப்பட்டுள்ளது. இது இரண்டாவது தவறாகும். பிணம் எடுப்பவர் பிணத்தை ஏன் கட்டித் தழுவ வேண்டும்?. கூலிக்குப் பிணம் எடுப்பவருக்கு பிணத்தைக் கட்டித் தழுவ ஒரு காரணமும் இல்லையே!. அன்றியும் உயிர் பிரிந்த சில மணி நேரங்களில் உடலானது விறைத்து கனமாகத் தோன்றுவது இயல்பு. இந் நிலையில் ஒருவரே பிணத்தைத் தழுவி எடுத்தல் என்பது மிகவும் கடினமான செயல் என்பதுடன் தேவையற்றதும் ஆகும். ஒருவர் பிணத்தின் கால்மாட்டிலும் இன்னொருவர் பிணத்தின் தலைமாட்டிலும் பிடித்துத் தூக்கி எடுத்துக் கொண்டு செல்வதே இயல்பான நடைமுறை ஆகும். இதிலிருந்து 'பிணம் எடுப்பவர் பிணத்தைத் தழுவி எடுப்பர்' என்ற கருத்தும் ஒரு புனைகதையே என்று அறியலாம்.

அடுத்து 'முன்னறியாத பிணம், அந்நியப் பிணம், தொடர்பில்லாத பிணம்' என்ற சொற்றொடர்கள் இவ் உரைகளில் குறிப்பிடப் பட்டுள்ளன. இவை யாவும் பொருளற்ற மொழிகளாய் இக் குறளுடன் சற்றும் பொருந்தாமலே உள்ளன. பிணம் எடுப்பவனுக்கு பிணத்தைப் பற்றி முன்னரே எதுவும் தெரியாதா என்ன?. யார் வீட்டில் பிணம் எடுக்க வேண்டும், அது யாருடைய பிணம் என்று முன்னரே அனைத்தையும் தெரிந்துகொண்டு தானே பிணத்தை எடுப்பார்கள்?. இதில் என்ன ஒளிவுமறைவு வேண்டிக் கிடக்கிறது?. அல்லது வரம்பு கடந்த பாலுணர்வு நிலையில் ஒரு பிணத்தைத் தழுவுபவனுக்கு அப் பிணத்தின் அடையாளம் என்ன வேண்டிக் கிடக்கிறது?. அல்லது பிணம் என்றே தெரியாமல் இருட்டில் பிணத்தைத் தழுவும் காமக் குருடனுக்குத் தான் பிணத்தின் அறிமுகம் என்ன வேண்டிக் கிடக்கிறது?. உண்மையில் இந்த மூன்று சொற்றொடர்களும் மிக வியப்பாகவும் அதேசமயம் சிறிதும் தரமின்றியும் உள்ளது.   

இப்படிப் பல புனைகதைகளையும் பொருத்தமில்லாத கீழான கருத்துக்களையும் கூறி இருந்தாலும் அவை வள்ளுவர் கூறவரும் கருத்துக்கு அரண் சேர்க்கின்றனவா என்றால் அதுவும் இல்லை. பரிமேலழகர் கூறுவது போல பொருட்பெண்டிரின் பொய்யான தழுவுதலும் இருட்டறையில் பிணமெடுப்பவன் பிணத்தைத் தழுவுதலும் ஒன்றான செயலாக முடியாது. ஏனென்றால் பொருட்பெண்டிர் பணம் படைத்தவனையே தழுவி மகிழ்வர். ஆனால் பிணம் எடுப்பவன் யாராக இருந்தாலும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் பிணம் எடுப்பான். இப்படி இந்த இரண்டு செயல்களும் தம்முள் மாறுபட்டவையாக இருக்கும்போது இவற்றை ஒன்றுக்கொன்று உவமையாகக் கூறுவது தவறாகும். வள்ளுவர் இந்தத் தவறைச் செய்யமாட்டார் என்பதால் இதைச் செய்தவர்கள் பிற்கால மக்களே என்பது தெளிவு. உண்மையில் இந்தக் கட்டுக்கதைகள் அனைத்தும் உருவாகக் காரணமாக இருந்தது ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப்பற்றி கீழே காணலாம்.

திருத்தம்:

இக் குறளின் இரண்டாம் அடியில் வருகின்ற 'பிணம்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பணம்' என்ற சொல் வரவேண்டும். இதுவே இங்கு தேவையான திருத்தமாகும். இனி திருந்திய குறள் இதுதான்:

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் ணந்தழீஇ யற்று.
                                       
இக் குறளின் திருந்திய சரியான பொருள் இதுதான்: கொடுப்பாரை விரும்பாது கொடுப்பாரின் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான தழுவலானது இருட்டறையில் திருடன் ஒருவன் பிறரது பணத்தைத் தழுவி மகிழ்வதை ஒக்கும்.

நிறுவுதல்:

விலைமாதர் என்று இக்காலத்தில் குறிப்பிடப்படும் பொருட்பெண்டிரின் தன்மைகளைப் பற்றி வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தில் கூறுகிறார் வள்ளுவர். வள்ளுவர் கூறும் பொருட்பெண்டிரின் தன்மைகளாவன:

1) இவர்கள் மனதளவில் உண்மையாக யாரையும் விரும்புவதில்லை. இவர்கள் விரும்புவதெல்லாம் பிறரிடம் உள்ள பொருள்வளத்தைத் தான்.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் - குறள்: 911.

2) பிறரால் தனக்குக் கிடைக்கும் பயனின் அளவினை அறிந்துகொண்டு அதற்கேற்ப அவரிடம் இனிமையாகப் பழகும் இயல்புடையவர்கள் இப் பெண்கள்.

பயன்தூக்கி பண்புரைக்கும் பண்பில் மகளிர் - குறள் : 912.

3) இவர்கள் மனம் இருவகையாகச் செயல்படும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது மற்றும் செய்வது இவர்களுடைய பழக்கமாகும். இதனால் தான் இவரை 'இருமனப் பெண்டிர்' என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - குறள்: 920

பொருட்பெண்டிர் தமது மனதில் உள்ள உண்மையான எண்ணத்தினை மறைத்து அதற்கு மாறாக செயல்படுவதால் அவர்களைத் திருடனுடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர். திருடன் ஒருவன் இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்குத் திருடச் செல்கிறான். அங்கே பெரும் செல்வத்தைக் காண்கிறான். அச் செல்வம் முழுவதையும் தான் அடையப் போகிறோம் என்று எண்ணி அதைக் கட்டிப் பிடித்து இருட்டிலே மகிழ்கிறான். திருடனுடைய இந்தச் செயலை பொருட்பெண்டிரின் செயலுடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

பொருட்பெண்டிரின் கைகள் புறத்தே ஒரு ஆண்மகனைக் கட்டித் தழுவிக் கொண்டிருக்கும். ஆனால் அவரது மனமோ ஒரு திருடனைப் போல அகத்தே அந்த ஆண்மகனின் செல்வத்தினைக் கட்டிப்பிடித்துத் தான் அடையப் போகிறோம் என்று எண்ணி மகிழ்ந்திருக்கும். இத்தகைய பொருட்பெண்டிரின் பொய்யான தழுவலுக்கு ஆளாகி பொருள் செல்வத்துடன் மானத்தையும் இழந்து துன்பத்திற்கு ஆளாக வேண்டாம் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கை விடுக்கிறார் வள்ளுவர்.
------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. #திருவள்ளுவர் பிறந்தது குமரி மண்ணில்...

      வரலாற்று ஆய்வாளரும் 'ஆய்வுக் களஞ்சியம்' மாத இதழ் ஆசிரியருமான டாக்டர் எஸ். பத்மநாபன் திருவள்ளுவர் குறித்த ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் அவர்...!!

      ஆதாரங்களோடு இவர் எழுதிய தகவல்களை அவரால் மறுக்க முடியவில்லை. அதன் மூலம் திருவள்ளுவர் பற்றிய பொய்யான பல கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்....


      இவற்றை விட ஓர் அரிய சான்றினை கூறுகிறார்...!! இதுதான் திருவள்ளுவர் இந்த மண்ணைச் சேர்ந்தவர் என்பதற்கு மிக அரிதான சான்று. 'வரைவின் மகளிர்' என்ற தலைப்பில் விலைமகள்களைப் பற்றி கூறுகிறார். ''பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில், ஏதில் பிணைந்தழீ இயற்று'' என்பது அந்தக்குறள்.

      வாடிக்கையாளர்களை மிகவும் அன்போடு தழுவுவதாக நடிக்கும் ஒரு விலைமகளின் செயல் இருட்டறையில் முன்பின் தெரியாத ஒருவரின் பிணத்தைத் தழுவுவது போலாகும் என்று கூறுகிறார். பிணம் தழுவுதல் என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்தது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்கள். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தை தழுவி வரவேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்கள். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை.

      கூலிக்காக முன் பின் தெரியாத பெண்ணின் பிணத்தை தழுவிய இளைஞனையும், பணத்திற்காக எந்த உடலையும் தழுவும் விலைமகளையும் வள்ளுவர் ஒப்பிட்டுக் கூறுகிறார். மலை நாட்டிலுள்ள பிணம் தழுவும் வழக்கத்தை வள்ளுவர் தமது நூலிலே குறிப்பிட்டிருப்பது அவர் குமரி மண்ணிலே பிறந்தவர் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சி'' என்கிறார் பத்மநாபன்.

      திருநாயனார் குறிச்சியை அடுத்து வள்ளுவன் கல் பொற்றை என்ற இடத்திற்கும் திருவள்ளுவருக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. தடிக்காரங்கோணம் அருகே உள்ள கூவைக்காடு என்ற இடத்தில்தான் இந்த மலை இருக்கிறது. இது அந்த காலத்திய ஊட்டி, கொடைக்கானல் போல் குளுமையாக இருந்திருக்க வேண்டும். இந்த மலையில்தான் திருவள்ளுவரும், அவர் மனைவியும் ஓய்வெடுக்க வருவார்கள். தேனும் தினைமாவும் விரும்பி உண்பார்கள். அப்படி அவர் தங்கி இடம்தான் அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

      வள்ளுவன் கல் பொற்றையில் கருமை நிறத்தில் பெரிய பாறை ஒன்று சிறு குன்று போல் இருக்கிறது.. "அதுதான் வள்ளுவன் கல்பொற்றை'' என்கிறார் பத்மநாபன். அதன் உச்சியில் பொறிக்கப்பட்டுள்ள பாதம் 'வள்ளுவர் பாதம்' என்று அழைக்கிறார்கள் இங்குள்ள பழங்குடிமக்கள்.

      டாக்டர் பத்மநாபன் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தும், அதன்பின் பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் போதும் திருவள்ளுவரைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து. திருவள்ளுவர் இங்கு வருவதற்கான காரணத்தை ஆதாரத்தோடு சொல்கிறார்...!!
      நன்றி;டாக்டர் எஸ்.பத்மநாபன்.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.