செவ்வாய், 6 ஏப்ரல், 2010

பெய்யெனப் பெய்யு மழை?

குறள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
                                                     -- குறள் எண்: 55

தற்போதைய பொருட்கள்:

பரிமேலழகர் உரை: பிற தெய்வம் தொழாது தன் தெய்வம் ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள், பெய் என்று சொல்ல மழை பெய்யும்.

கலைஞர் உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.

மு.வ உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

சாலமன் பாப்பையா உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளே அன்றி இணையத்தில் பல உரைகள் காணக் கிடைத்தாலும் அவற்றை இங்கே விரிக்கப் போவதில்லை. இந்த நான்கு உரைகளில் கலைஞர் உரை தவிர மற்ற உரைகள் யாவும் ஒரே கருத்தையே கூறி இருக்கின்றன. இவர்கள் உரை கூறும் முன்னர் திருவள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்தை ஒருவேளை நினைவுகூர மறந்து விட்டார்களா இல்லை வள்ளுவரின் மதிப்பினைக் குறைக்க வேண்டி இவ்வாறு செய்துள்ளனரா எனப் புரியவில்லை. ஏனென்றால் இந்த விளக்க உரை நடைமுறைக்குச் சற்றும் பொருந்தாத ஒன்று என்பதை நாம் நன்கு அறிவோம். இவ் உரைகளில் உள்ள தவறு என்ன என்று காணலாம்.

இக் குறளின் முதல் அடியில் ஒரு பெண் திருமணத்திற்குப் பின்னர் தனது கணவனையே தெய்வமாகத் தொழ வேண்டும் என்ற கருத்து புலப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமா என்றால் சாத்தியமே ஆகும். ஏனென்றால் கணவனைத் தெய்வமாக எண்ணித் தொழுவது என்பது அவனது எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் மனைவி ஆனவள் தனது முழுமையான ஒத்துழைப்பு அதாவது ஆதரவு அளித்தல் ஆகும். இதை இன்றளவும் பல பெண்கள் செய்துகொண்டு தான் உள்ளனர். செய்யாதவர்களைப் பற்றியோ செய்ய விரும்பாதவர்களைப் பற்றியோ இங்கே நமக்குக் கவலையில்லை. ஆனால் அவர்கள் விரும்பினால் இது சாத்தியம் தான் என்பதையே இங்கே இக் கட்டுரை நிறுவ முயல்கிறது.

ஆனால் இரண்டாம் அடியில் வரும் கருத்து மிகவும் சிக்கலானது என்பதுடன் வேடிக்கையாகவும் அமைந்து விட்டது. கணவனையே தெய்வமாகத் தொழுகின்ற பெண்கள் மேகத்தைப் பார்த்து 'பெய்' என ஆணையிட்டால் மழை உடனே பெய்யும் என்ற கருத்து இரண்டாம் அடிக்குக் கூறப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமா என்றால் ஒருபோதும் இல்லை. ஏனென்றால் இக் கருத்து அறிவியலுக்கு முற்றிலும் புறம்பானது. இதைத் திருவள்ளுவரும் அறிவார். அவ்வாறு இருக்க, வள்ளுவர் இக் கருத்தினைக் கூறியுள்ளதாக இவர்கள் விளக்க உரை இயற்றினால் அது வள்ளுவருக்குப் பெருமை சேர்க்காது. இப்படி வள்ளுவரை முட்டாளாகக் காட்டுவதில் யாருக்கு மகிழ்ச்சியோ தெரியவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் கண்டிக்கப் பட வேண்டியவர்கள். கலைஞரின் உரையோ குறளுடன் சற்றும் ஒட்டாமல் இருக்கிறது. இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப் பற்றி கீழே காணலாம்.

திருத்தம்:

இரண்டாம் அடியில் வரும் மழை என்ற சொல்லுக்குப் பதிலாக மிழை என்ற சொல் வரவேண்டும். இதுவே இங்கு தேவையான திருத்தமாகும். இரண்டாம் அடியினைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

பெய்யெனப் பெய்யு மிழை = பெய்+என+பெய்யும்+இழை

இதில் வரும் 'பெய்' என்பதற்கு 'அணி' என்றும் 'இழை' என்பதற்கு 'அணிகலன்' என்றும் 'எழு' என்பதற்கு 'தொடங்கு' என்றும் பொருளாகும். (சான்று: கழகத் தமிழ்க் கையகராதி, திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.) இனி இக் குறளின் திருந்திய சரியான பொருளானது ' தெய்வத்தைக் கூட தொழாமல் கணவனையே தொழுது (தனது வேலைகளைத்) தொடங்கும் பெண்ணானவள் (கட்டிய கணவன் கொணர்ந்து தந்து) 'அணிக' என்று கூற அணிகலனை அணிந்துகொள்வாள்.'

நிறுவுதல்:

இக் குறள் வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தின் கீழ் அமைந்துள்ளது. ஒரு சிறந்த வாழ்க்கைத் துணையானவள் எவ்வாறு தனது புகுந்த வீட்டிற்கு ஏற்றாற் போல வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதைப் பத்து குறள்களில் விளக்க முற்படுகிறது இந்த அதிகாரம். தனது கணவனின் பொருள் வளத்திற்கு ஏற்றாற் போல வாழ்க்கை நடத்துபவளே சிறந்த வாழ்க்கைத் துணை என்று கூறுகிறது இந்த அதிகாரத்தின் முதல் பாடல்.

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பொருட்செல்வம் இன்றி யாரும் இல்வாழ்க்கை நடத்த இயலாத நிலையில் கணவனின் பொருள்வளம் பற்றிய அறிவு மனைவிக்குக் கண்டிப்பாகத் தேவை. அதை அறிந்து கொள்வதுடன் அதற்கேற்றாற் போல குடும்பத்தைச் சிக்கனமான முறையில் நடத்திச் செல்ல வேண்டியதும் மனைவியின் கடமை ஆகும். பொதுவாக இல்வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத பொருட்கள் மூன்றே மூன்று தான். அவை: உணவு, உடை, உறைவிடம் ஆகும். இவை தவிர தோடு, மூக்குத்தி, கைவளை, மார்பாரம் முதலான அணிகலன்கள் யாவும்  ஆடம்பரப் பொருட்களே ஆகும். ஆடம்பரமாகவே இருந்தாலும் இவற்றை மனைவிக்கு வாங்கித் தந்து அவளை அழகாக்கிப் பார்க்க வேண்டும் என்பது ஒவ்வொரு கணவனின் ஆசை தான். ஆனால் இந்த ஆசையை நிறைவேற்ற விடாமல் ஒரு ஏக்கமாகவே வைத்திருப்பது அவனது பொருள்வளம் அதாவது வருமானமே ஆகும்.

கணவனின் பொருள்வளத்தை அறிந்துகொண்டாலும் எல்லா இல்லத்தரசிகளும் கணவனிடம் 'அணிகலன்' வேண்டும் எனத் தொல்லை கொடுக்காமல் இருப்பதில்லை. சிலர் கணவனைக் கேட்காமல் தானே வாங்கிக் கொண்டு பின்னர் கணவனுக்குத் தெரிவிக்கின்றனர். பலர் கணவனை வற்புறுத்தியே பெற்றுக்கொள்கின்றனர். என்றால் அணிகலனுக்காக கணவனை எவ்வகையிலும் வற்புறுத்தாத பெண்கள் இவ் உலகில் இல்லையா?. என்ற கேள்வி நம்முள் எழுகிறது. இக் கேள்விக்கு 'இருக்கிறார்கள்' என்று இக் குறளின் மூலம் விடை பகர்கிறார் வள்ளுவர்.

' இப் பெண்கள் தெய்வத்தைத் தொழுவதில்லை; மாறாக தமது கணவனையே தொழுது தமது இல்லறக் கடமைகளைச் செய்யத் தொடங்குகிறார்கள். புதிய அணிகலன்களை கணவன் மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து கொடுத்து 'அணிந்துகொள்' எனக் கூறினால் மட்டுமே தாம் அணிந்து மகிழும் பண்பினர் இவர்கள். இவர்களே சிறந்த வாழ்க்கைத் துணைநலம் ஆவர்.' என்கிறார் வள்ளுவர்.

சரியான குறள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மிழை.
.......................................................................................................................

11 கருத்துகள்:

  1. PURATCHI KAVINGAR bHARATHI DASAN URAI PAARUNGAL.
    dEVEAYANA POLUTHU PEYYUM MALI PONTRAVAL.
    ithuvea sari milai ena marta vendam,
    OK?

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் குறளை திருத்துவதற்கு பதிலாக உரையை திருத்திக் கொள்ளலாம். சற்று முன் தான் இணையத்தில் இந்த குறள் ஆணாதிக்க குரல் என்கிற ரீதிக ஒரு வாதத்தை எதிர் கொண்டேன்.

    http://smarttamil.wordpress.com/2010/04/05/comedy-time/#comment-94

    பதிலளிநீக்கு
  3. harrispan, உங்கள் கருத்தில் பிழை உள்ளது. மழையைத் தேவையான மழை, தேவையற்ற மழை என பிரிக்க இயலாது. உங்களுக்குத் தேவையான மழை மற்றவருக்கு தேவையற்றதாக இருக்கலாம். எனவே அப்படி ஒரு கருத்து பாரதிதாசனார் சொல்லி இருந்தாலும் ஏற்புடையதன்று.

    அன்புடன்,

    தி.பொ.ச.

    பதிலளிநீக்கு
  4. smart, ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்பது ஒரு பொருளற்ற வாதம். இவ் உலகம் ஆணாதிக்கமா பெண்ணாதிக்கமா என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்; வள்ளுவருக்கும் தெரியும்.

    அன்புடன்,

    தி.பொ.ச.

    பதிலளிநீக்கு
  5. அன்பு நண்பருக்கு, வணக்கம். நலம். நலம் வாழ்க.
    பெய்யென பெய்யும் மிழை என்று திருத்தம் நன்று. தங்களின் எண்ணங்களைச் சரியான ஆதாரங்களோடு நிறுவும் தங்களின் பண்பு பாராட்டப்பட வேண்டியது என்பதில் ஐயம் இல்லை.
    வாழ்த்துகள் - தொரட்டும் தங்களின் தமிழ்ப்பணி
    -முனைவர் தி.நெடுஞ்செழியன்

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் கண்டுபிடித்த உரையும் அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை நண்பரே! இதன்படிபார்த்தால், நாளையே இன்னொருவர் “ அது மிழையும் அல்ல ; முழை!” என்று மாற்றிவிட்டு அதற்கு ஒரு அர்த்தமும் கற்பிக்கக்கூடும்.
    ’பெய்யெனப்பெய்யும் மழை’ இற்கு இன்றைய தமிழுலகம் ஏற்றுக்கொண்ட உரை எது தெரியுமா?

    மழை எப்போதுமே எமக்குப்பயன்படும்வகையில் பெய்வதில்லை ; பெரும்பாலும், காலங்கடந்து - அல்லது பேய்மழையாகப்பெய்து எமக்குப்பேரழிவை ஏற்படுத்திவிதத்திலேயே பெய்யும்.
    அவ்வாறானமழையாக இல்லாமல், தேவையைப்பொறுத்து, ‘ பெய்!’ என ஆணையிடும்போது பெய்யும் மழைபோல இவ்வுலகிற்கே பிரயோசனமானவள் என்பதுதான் பொருள்!
    அதாவது, அவ்வாறான குணநலங்கொண்ட ஒரு பெண் - பெய் என்றுசொல்லும்போதுமட்டும் பெய்யும் மழைபோல பிரயோசனமானவள் !

    பதிலளிநீக்கு
  7. நண்பர் அமுதசிவம்,

    உங்கள் கருத்தில் எவ்வளவு பிழைகள் உள்ளன பாருங்கள்.

    1) பெய்யென ஒருவர் சொன்னதும் மழை பெய்யாது. இது முழுமையான கற்பனை. இத்தகைய மழை ஒரு கற்பனையே என்பதால் அந்தப் பெண்ணும் ஒரு கற்பனைப் பாத்திரமாகவே ஆகிறாள்.
    2) பெண் கற்பனை என்பதால் அவளால் கிடைக்கும் பயனும் கற்பனையே என்பதாகிறது.
    3) பெண் கற்பனை என்பதால் அவள் தெய்வத்தை தொழுவதில்லை; கணவனையே தொழுபவள் என்பதும் கற்பனையாகிறது.
    4) மொத்தத்தில் இக் குறளையே ஒரு கற்பனையாகக் கொள்ள உங்கள் கருத்து இடமளித்து வள்ளுவரை ஒரு கற்பனாவாதியாகக் காட்டுகிறது.

    இதுபோன்ற குழப்பங்களால் தான் பலரும் திருக்குறளைக் கேலிபேசி நம்ப மறுக்கின்றனர். வள்ளுவர் மீதுள்ள இக் கறைகளைக் களையவே இக் கருத்தினை மாற்ற முயல்கிறேன். தயவுசெய்து மீண்டும் வள்ளுவரை முட்டாளாகக் காட்ட முயலவேண்டாம்.

    அன்புடன்,
    தி.பொ.ச.

    பதிலளிநீக்கு
  8. இல்லறவாழ்வையே அனைத்து அறங்களிலும் சிறந்தது என வாழ்வியல் கூறும் வள்ளுவர் மனித நேயத்தையே முன்னிலைப் படுத்துவார். பல இடங்களில் இறை வழிபாட்டைச் சற்று அடக்கியே வாசித்துள்ளார் என்பது தெளிவு. ஆகவே ஆண் பெண் இருபாலாரும் ஒருவரை ஒருவர் வணங்கிப் போற்ற வேண்டும் என்ற கருத்தைப் பலவிதமாக அவர் கூறக்காணலாம். தவறு செய்யும் கணவன் தன் மனைவி என்ன நினைப்பாள் என அஞ்சுவதும் ஒருவகையில் பெண்ணுக்கு ஆண் தரும் உயர்வுதான்.

    அப்படி, கணவனை மதிக்கக்கூடிய பெண் “பெய் எனப் பெய்யும் மழைக்கு ஒப்பானவள்’ என்ற கருத்தைப் பாரதிதாசனும் மற்றும் சிலரும் விளக்கியிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. குறளில் அவசரப்பட்டுப் பாட பேதங்கள் செய்வது நல்லதன்று.

    பதிலளிநீக்கு
  9. ஜெயபாலன் ஐயா, வணக்கம். நான் ஏற்கெனவே நண்பர் அமுதசிவத்திற்கு இது குறித்து விளக்கியுள்ளேன். பெய்யெனப் பெய்யும் மழை முழுமையான கற்பனை. கற்பனையான ஒன்றுடன் வள்ளுவர் உவமைப்படுத்த மாட்டார். அவ்வாறு செய்வதனால் பயன் ஒன்றும் இல்லை. ஒருவேளை பெய் எனக் கூறி மழை அதிகம் பெய்து நாசம் விளைவிக்கவும் கூடுமே. பெய் என்று கூறியதும் பெய்யவும் போதும் எனக் கூறியதும் நிற்கவும் இது என்ன குடிநீரா? மழை அன்றோ!. யாருக்கும் கட்டுப்படாத ஒன்றன்றோ!

    பதிலளிநீக்கு
  10. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு
  11. முரண் : ஒரு பெண் கட்டளை இட்டால் மழை வருமா ? இந்த அதிகாரம் ஆற்றல் இறைவனுக்கு மாத்திரம் தான் இருக்கு , ஒரு பெண்ணுக்கு இருக்கிறதா ?

    interpretation :1

    இது கட்டளை order /command இல்லை
    இது கோரிக்கை /request

    மழைக்காக துவா செய்

    மரியாதையாக , வீட்டு காரரின் சொல் கேட்டு நடக்கும் நல்ல பெண்களின் , நல்ல சாலிஹான மனிதர்களின் துவா /பிராத்தனை ஏற்று கொள்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது

    சில நேரங்களில் மலக்குகள் அமீன் சொல்லிவிடுவர் ,

    ஒவ்வொரு முறையும் கட்டளை இட்டால் order குடுத்தாள் மழை வரும் என்று அர்த்தம் இல்லை

    இது போன்ற நல்லோர்களின் சொல்லுக்கு /துவாவிற்கு /பிராத்தனைக்கு ஒரு power இருக்கிறது

    நீ துவா செய்தால் மழை கூட சீக்கிரம் வந்துவிடும்
    நல்ல ஸாலிஹ்ஹான மனிதர்களின் துவாவிற்க்கு/பிராத்தனைக்கு ஒரு power இருக்கிறது

    interpretation :2

    ஒரு பெண் தன் கடமையை சரியாக செய்தால் , மழையும் நேரத்துக்கு வந்து உதவி தன் கடமையை செய்யும்

    அல்லது மழை இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தன் கடமையை செய்வது போல , நீயும் உன் கடமையை செய்

    , - அதை போல் நீயும் இரு என்று கூறும் analogy ஒப்புமை,
    order உம் இல்லை request இம் இல்லை

    interpretation :3

    அதாவது ஒரு பெண் வீட்டுக்காரருக்கு கட்டுப்பட்டு நடப்பது மரியாதையாக பணிவாக நடப்பது , எந்த அளவுக்கு நல்ல விஷயம் என்று புகழ்ந்து சொல்லப்பட்டு இருக்கிறது

    நல்ல மனிதர்கள் ., நல்ல ஸாலிஹ்ஹான வர்கள் வாழும் ஊர்க்கு மழை தானாக வரும் , அதிகமாக வரும்

    இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு 545

    அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.

    நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.

    நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்

    முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.559

    ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.

    அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

    முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது

    துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு 557

    மழை இல்லாது போனால் எத்தகைய துயரத்தை மக்கள் அடைவார்களோ, அத்தகைய துயரத்தை, நேர்மையில்லாத ஆட்சியின் கீழும் அடைவார்கள்

    மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்

    7:57 . தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும்போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம்.

    7:130. "படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும், பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''

    71:10. உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான் என்று கூறினேன்.

    11. உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.