புதன், 22 செப்டம்பர், 2010

தாமரைக் கண்ணான் உலகு (50 ஆம் கட்டுரை)

குறள்:

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.  - எண்: 1103

தற்போதைய உரைகள்:

மணக்குடவர் உரை: தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ இந்திரனது சுவர்க்கம்?.
பரிமேலழகர் உரை:  ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில்போல வருந்தாமல் எய்தலாமோ அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
கலைஞர் உரை: தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.
சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகள் அனைத்திலும் பொருட்பிழை உள்ளது. தாமரைக் கண்ணான் என்பது இந்திரனைக் குறிப்பதாக எடுத்துக் கொண்டு உரை இயற்றியுள்ளார் மணக்குடவர். பரிமேலழகரும் சாலமன் பாப்பையாவும் தாமரைக் கண்ணான் என்பதற்கு திருமால் என்ற பொருள் கொண்டு உரை இயற்றியுள்ளனர். கலைஞரோ தாமரைக் கண்ணான் யார் என்று விளக்கிக் கூறாமலே உரை எழுதி இருக்கிறார். இவ் உரைகளில் உள்ள தவறுகள் யாவை என்று பார்ப்போம்.

கலைஞர் உரையில் 'தாமரைக் கண்ணான்' என்பதற்கு சரியான விளக்கம் இல்லாததால் இது தெளிவின்மைக் குற்றமாகும். எனவே இவ் உரை ஏற்றுக் கொள்ளப்படாது.  ஏனை மூன்று உரைகளில் கூறப்பட்டுள்ள இந்திரன், திருமால் ஆகியவை மதம் சார்ந்த கடவுட் பெயர்கள். வள்ளுவர் மதச் சார்பற்றவர் என்பதை நாம் நன்கு அறிவோம். கடவுள் வாழ்த்திலும் சரி பிற குறள்களிலும் சரி எந்த மதத்தையும் சாராமல் அவர் குறள் இயற்றியிருப்பதை நாம் ஆதிபகவன் யார், இந்திரனே சாலும் கரி முதலான கட்டுரைகளில் கண்டுள்ளோம். எனவே இக் குறளில் வரும் தாமரைக் கண்ணான் என்ற சொல்லுக்கு வள்ளுவர் இந்திரன் அல்லது திருமால் என்ற பொருளைக் கொண்டிருக்க மாட்டார் என்பது தெளிவு.

அதுமட்டுமின்றி 'தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்' என்ற பொருளில் இந்திரனையோ திருமாலையோ வள்ளுவர் குறிக்க விழைந்திருந்தால் 'தாமரைக் கண்ணன்' என்றே குறித்திருப்பார். ஆனால் குறளிலோ 'தாமரைக் கண்ணான்' என்று வருகின்றது. இதிலிருந்து வள்ளுவர் கூற வருவது 'தாமரை மலர் போன்ற கண்களை உடையவன்' என்ற கருத்தல்ல என்பது பெறப்படுகிறது. இந்த விளக்க உரைகளில் வரும் இந்திரனும் திருமாலும் உரையாசிரியர்களின் சொந்த விளக்கங்கள் என்பதால் அவை தவறானவையாகவே கருதப்படும். இனி தாமரைக் கண்ணான் என்பது உண்மையில் யாரைக் குறிக்கும் என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருந்திய திருக்குறள் விளக்கம்:

இக் குறளில் வரும் தாமரைக் கண்ணான் என்பது நிலவைக் குறிக்கிறது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

தாமரைக் கண்ணான் = தாமரைக்கு + அண்ணான்
                                             = தாமரைக்குப் பகைவன்
                                             = சந்திரன் (நிலவு)

இனி இக் குறளின் திருந்திய பொருள் இதுதான்: தாம் விரும்பும் காதலியின் மெல்லிய தோளின் கண் பெறும் துயிலைவிட நிலாவுலகம் (நிலவு) இன்பம் தருவதோ?.

நிறுவுதல்:

அண்ணார் என்பதற்கு பகைவர் என்ற பொருளை சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி காட்டுகிறது. அண்ணுதல் என்றால் சேர்தல், நெருங்குதல் என்று பொருள். தம்முடன் அண்ணாதவர்கள் அதாவது சேராதவர்கள் பகைவர்களே அல்லவா?. வள்ளுவர் இக் குறளில் ஒருமையைச் சுட்ட அண்ணான் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளார். இனி நிலவு எவ்வாறு தாமரைக்குப் பகைவன் ஆகும் என்று பார்ப்போம்.

நீரில் பூக்கும் பல மலர்களில் தாமரை மலர் மிக அழகானது. நீரிலேயே இருந்தாலும் இம் மலர் வெப்பத்தை விரும்பும் ஒரு மலராகும்.  எனவே தான் கதிரவன் உலாவும் பகல் நேரத்தில் நீரினின்று உயர்ந்து முழுமையாக விரிந்து மலர்ந்திருக்கும். கதிரவன் மறையும் மாலை வேளையானதும் தனது இதழ்களை சுருட்டி மூடிக் கொள்ளும். இரவு நேரத்தில் வரும் நிலவின் ஒளியோ குளுமையானது. இக் குளுமை தாமரைக்குப் பிடிக்காது. எனவே நிலவின் ஒளியில் தாமரை தண்ணீருக்குள் மூழ்கி தன்னை மறைத்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.  தாமரைப் பூவின் இத்தன்மைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஜெந்தமுனி என்ற இணையதளத்தைக் காணலாம்.

நிலவொளி வீசும் இரவு நேரத்தில் தாமரை நீருக்குள் மறைந்து கொள்வதால் தான் நிலவைத் தாமரையின் பகைவன் என்றனர். தியாகராஜ பாகவதர் நிலவினைத் தாமரைப் பகைவன் (தம்மி வைரி) என்றும் கமலப் பகைவன் (கமல வைரி) என்றும் தனது பாடல்களில் கூறியுள்ளார். கீழ்க்காணும் இணைய தளங்களில் அப் பாடல்களைக் காணலாம்.

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/05/kaaru-velpulu-raga-kalyani.html

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/08/3-karuna-judavamma-raga-todi.html

மேற்காணும் இரண்டாவது பாடலில் 'கமலப் பகைவனின் பிறை அணிவோன் இல்லாளே' என்று அன்னை சக்தியை விளிக்கிறார் பாகவதர். 'நிலவின் பிறை அணிந்த சிவனின்  இல்லததரசியே' என்று கூறுவதில் இருந்து கமலப் பகைவன் என்ற சொல் நிலவைத் தான் குறிக்கிறது என்பது உறுதியாகிறது. கலித்தொகை 134 ஆம் பாடல் இரவு நேரத்தில் நிலவின் ஒளியில் தாமரை மலர்கள் கூம்பியுள்ள நிலையைக் கூறுகிறது.

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின்,
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல்,
கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின்,
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப்,
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேரப்,
போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப்
பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப,
ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற,
இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை;

தாமரை மலரானது மதியிடம் தோற்கும் என்ற கருத்து தண்டியலங்காரப் பதிப்புப் ( திரு.கு.சுந்தரமூர்த்தி, திருப்பனந்தாள்) பாடலில் கூறப்பட்டுள்ளது.

மறுப்பயின்ற வாண்மதியும் அம்மதிக்குத் தோற்கும்
நிறத்தலரும் நேரொக்கு மேனும் - சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போல் திருமேனி
முல்லைப் பூங்கோதை முகம்'

இங்கே நிறத்தலர் என்பது தாமரை மலரைக் குறிக்கும். விவேக சிந்தாமணியின் 19 ஆம் பாடலிலும் இதைப் பற்றிய குறிப்பு உள்ளது.

தேனுகர் வண்டு மது தனை உண்டு தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனி என்று தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி மலர்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பறந்ததோ பழம் தான் புதுமையோ இது எனப் புகன்றாள். 19.

இங்கே மலர் எனக் கூறப்பட்டது தாமரை மலரே ஆகும். பெண்ணின் சிவந்த கைகளை தாமரை மலரென எண்ணிய வண்டானது நிலவு வந்துவிட்டதால் தாமரை மலர் மூடிக் கொள்ளுமே என்று எண்ணி அஞ்சிப் பறந்து சென்று விட்டதாம். அழகிய கற்பனை இது!.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து தாமரைப் பகைவன் என்பது நிலவையே குறிக்கும் என்பது உறுதியாகிறது. இனி இக் குறளில் நிலா கூறப்பட்டுள்ளதன் பின்னணியைக் காணலாம்.

காதலர் இருவர் களவில் சந்தித்து மகிழ்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு மேலே முழுநிலா ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. நிலவொளியின் குளுமை இன்பத்தை இருவரும் நுகர்கின்றனர். இந் நிலையில் நிலவொளியின் இன்பத்தையும் காதலியின் தோள் தரும் இன்பத்தையும் காதலனின் மனம் சீர்தூக்கிப் பார்க்கிறது 'இரண்டில் எது மேலானது?.' என்று. இறுதியில் காதலியின் தோள் தரும் இன்பமே பெரிதென முடிவாயிற்று. ஏன்?. நிலவின் ஒளியை இரவில் மட்டுமே அனுபவிக்க முடியும். ஆனால் காதலியின் தோட்களோ பகலிலும் இன்பம் தருபவை!.

முடிவுரை:

காதலியின் தோள் தரும் இன்பம் மேலானது என்ற கருத்தை வலியுற்றுத்தவே நிலா தரும் இன்பத்தை இங்கே அதனுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் வள்ளுவர். புணர்ச்சி மகிழ்தல் என்ற இந்த அதிகாரத்தில் காதலியின் தோளே அதிகம் புகழப்பட்டிருப்பதும் ஈண்டு கவனிக்கத் தக்கது. பெண்ணின் தோள் தரும் இன்பத்தை யாருமே உய்த்தறிந்திராத இந்திர உலகம் அல்லது திருமால் உலக இன்பத்துடன் ஒப்பிட்டுக் கூறாமல் யாவரும் உய்த்து அறியத்தக்க நிலவொளியின் இன்பத்துடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கும் வள்ளுவனின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்கது அன்றோ?.
................................................................................................................

7 கருத்துகள்:

 1. அன்பு அய்யாவுக்கு ,
  தங்களின் விளக்கமும் ஆய்வும் அருமை . ஒவ்வொரு வரியிலும் தங்களின் உழைப்பு ..

  ஒரு சிறிய கருத்து : சான்றோரின் உரைகளை குற்றம்,தவறு என்று சொல்வதைவிட , ’’அவர்களது உரையைவிட இந்த ஆய்வுக்கருத்து சிறந்ததாக இருக்கிறது ..கவனியுங்கள் ’’ என்று சொலவதே
  சிறந்ததாக இருக்கும் .. இது எனது தனிப்பட்ட கருத்துதான் .. வாழ்க அய்யா

  பதிலளிநீக்கு
 2. திரு.துரை அவர்களுக்கு முதற்கண் நன்றி.

  நான் சான்றோர்களை மதிப்பவன். உங்களையும் மதிக்கிறேன். உங்கள் கருத்தையும் மதிக்கிறேன்.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 3. ஐயா, தாமரைக் கண்ணான் என்பதற்கு தாங்கள் அளித்த அருமையான விளக்கம் என்னுள் மேலும் பல சிந்தனைகளை உருவாக்கியது. எனது வலைப் பூவில் தனிப் பதிவாக பதித்திருக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றி நண்பரே. உங்கள் சிந்தாகுலம் வலைப்பூ பார்த்தேன். உங்கள் புரிதலும் விளக்கங்களும் அருமை.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 5. மதசார்பற்றவரா... அவருடய கால நேரத்ல இருந்த மதங்கள் பத்தி உங்களுக்கு தெரிந்தத சொல்லுங்க. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. சரவணன் ஐயா,
  தங்கள் புதிய விளக்கம் நன்று ! :)

  திருவள்ளுவர் மதம் சார்ந்தவரா இல்லையா என்ற விவாதத்தை வேறு பதிவில் பார்க்கலாம்,
  தாங்கள் கீழ்க்கண்ட குறளில் வரும் அடியளந்தான் என்ற வள்ளுவனின் வாக்குக்கு விளக்கமும் கூறினால் நன்றாயிருக்கும்.

  பொருட்பால்
  மடியின்மை
  610.
  மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
  தாஅய தெல்லாம் ஒருங்கு.

  இதில் அடியளந்தான் என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கவில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை ஐயா. இதைப் பற்றிய கட்டுரை கீழே உள்ள சுட்டியில்.

   http://thiruththam.blogspot.in/2011/11/blog-post_25.html

   நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.