திங்கள், 27 பிப்ரவரி, 2017

கொங்கை என்பது மார்பகமா? ( கம்பனும் கொங்கையும் )

முன்னுரை:

முலை என்ற தமிழ்ச் சொல்லானது தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் மார்பகம் என்ற பொருளில் பயின்று வராது என்றும் கண் அல்லது கண்ணிமையினையே பெரும்பாலும் குறிக்கும் என்று முன்னர் கட்டுரையில் கண்டோம். இந்த முலை என்ற சொல்லினைப் போலவே கொங்கை என்ற சொல்லும் இலக்கியங்களில் பல இடங்களில் அகராதிப் பொருளில் பயின்று வரவில்லை. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இதைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காணலாம்.

கொங்கை - சொல்பயன்பாடும் பொருட்களும்:

தமிழ் இலக்கியங்களில் கொங்கை என்னும் சொல்லானது நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்டுள்ள பயன்பாட்டு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கம்பராமாயணம் - 84
நளவெண்பா - 15
திருவாசகம் - 11
பெரியபுராணம் - 10
சிலப்பதிகாரம் - 9
மணிமேகலை - 2
சங்க இலக்கியம் - 2
சீவகசிந்தாமணி - 1
பெருங்கதை - 1

கொங்கை என்ற சொல்லுக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொங்கை koṅkai , n. [M. koṅka.] 1. Woman's breast; மார்பகம். கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள் (சிலப். 4, 49). 2. Protuberances or knobs of a tree; மரத்தின் முருடு. (W.) 3. Kambu husk; கம்புத்தானியத்தின் உமி. Loc.

பொருள் பொருந்தாத இடங்கள்:

கொங்கை என்பதற்கு அகராதிப் பொருட்கள் எவையும் பொருந்தாத இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே விரிவாகக் காணலாம். பெண்களைப் பொருத்தமட்டில் கொங்கை என்பதற்கு மார்பகம் என்ற பொருளே உரையாசிரியர்களால் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அப் பொருள் பொருந்தாது என்பதைக் கீழ்க்காணும் ஆதாரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியங்களில் கம்பராமாயணத்தில் தான் மிக அதிகமாக இச்சொல் பயின்று வருவதால் அதிலிருந்தே சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன.

1. ஒளிவீசுமா மார்பகம்?

எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே - கம்ப.பால.13/51

இதன் பொருள்: காமன் எய்த அம்பினைப் போல எனது உள்ளத்தில் காமநோய் தோன்றுமாறு எங்கிருந்து எழுந்தது இந்த நிலவு ?. பொலிந்து தோன்றும் இந்த கொங்கையின் மேல் விடம்போலக் கருமை இருப்பினும் இரவில் தோன்றும் நிலவு இல்லை இது; ஏனென்றால் இதில் களங்கம் ஏதுமில்லை.

இப்பாடலில் கொங்கையினை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர். காமனின் அம்புகளைப் போல இந்த கொங்கை ஆகிய நிலவும் ஒளிவீசி காமநோயினை உண்டாக்கியதாம். இரவிலே தோன்றும் நிலவில் களங்கம் உண்டு. ஆனால் இந்த மங்கையின் கொங்கை ஆகிய நிலவில் களங்கம் ஏதுமில்லை என்கிறார். இப்பாடலில் வரும் கொங்கை என்ற சொல்லுக்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், மார்பகத்தினை நிலவுடன் ஒப்பிடுவதாகப் பொருள்வரும். ஆனால் இந்த ஒப்புமை பொருந்தாத ஒன்றாகும். காரணம், நிலவு ஒளிவீசும் தன்மையது; ஆனால் மார்பகம் ஒளிவீசாது. ஒப்புமை பொருந்தாமல் போவதுடன் பாடலின் நயமும் பொருளும் பொருத்தமற்றுப் போவதால் இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு ' மார்பகம் ' என்ற பொருள் பொருந்தாது என்பது உறுதியாகிறது.

2. கண்ணீர் கோக்குமா மார்பகத்தில்?

வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப
உண்டுகொலாம் அருள் என்கண் உன்கண் ஒக்கின்
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் - கம்ப.அயோ.3/10

இதன் பொருள்: வண்டுகள் ஒலிக்கும் மாலையணிந்த தசரதனின் வாய்மொழி கேட்ட கைகேயி தனது அகன்ற கண்கள் ஆர்ப்பரித்துக் கொங்கைகளில் நீர்கோத்திட என்மேல் உங்கள் அன்பு இருந்தால் அன்று நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன வரங்களை இன்று எனக்குக் கொடுங்கள் என்றாள்.

இப்பாடலில் கைகேயின் கண்கள் ஆர்ப்பரித்துக் கொங்கைகளில் கண்ணீர் கோப்பதாகச் சொல்கிறார் கம்பர். இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், கைகேயியின் கண்ணீர் அவளது மார்பகத்தில் கோப்பதாகப் பொருள்வரும். இது தவறான பொருளென்று அனைவரும் அறிவோம். காரணம், யாருக்கும் கண்ணீர் கண்களில்தான் கோக்குமே அன்றி அவரது மார்பகங்களில் கோப்பதில்லை. எனவே இப்பாடலில் வரும் கொங்கை என்ற சொல்லுக்கு மார்பகம் என்ற பொருள் பொருந்தாது என்பது உறுதியாகிறது.

3. இராமன் பார்த்தது மார்பகமா?

நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்இழை நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள் சுடர்மணி தடங்கள் கண்டாள் - கம்ப.ஆரண்.5/4

இதன்பொருள்: தண்டுடைய தாமரைமலர் போன்ற தனது கண்களையும் சக்கரவாளங்கள் தோன்றும் தனது கொங்கைகளையும் நெடிய வில்லினையுடைய இராமன் நோக்கவும் அவனது தோள்களை நோக்கினாள் சீதை.

இப்பாடலில் சீதையின் கொங்கைகளை இராமன் பார்ப்பதாகக் கூறுகிறார் கம்பர். கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், இராமன் சீதையின் மார்பகங்களை நோக்கினான் என்று பொருள்படும். இப்படி ஒரு பொருளில் கூறினால் அது இராமனுக்கும் அழகல்ல; கம்பருக்கும் அழகல்ல. இராமனை இழிவுசெய்யும் நோக்கம் கம்பருக்கு இல்லை என்பதால் இப்பாடலில் வரும் கொங்கை என்பது மார்பகத்தினைக் குறித்து வந்திருக்காது என்பது உறுதி.

4. தண்ணீர் தெளிப்பார்களா மார்பகத்தில்?

கைகளால் தன் கதிர் இளம் கொங்கை மேல்
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள்
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால் - கம்ப.ஆரண்.6/71

இதன்பொருள்: சூர்ப்பனகை தனது கைகளால் குளிர்ந்த நீரினை அள்ளித் தனது கொங்கைகளின்மேல் அப்பினாள்; சுற்றிலும் தீப்பற்றி எரிய வெம்மையுற்ற ஒரு பாறையின்மேல் வைத்த வெண்ணையினைப் போல அந்தக் குளிர்ந்த நீரும் இருந்த இடம் தெரியாமல் போனது.

சூர்ப்பனகையின் உள்ளத்தில் எழுந்த சினத்தீயின் தாக்கத்தினை இப்பாடலில் விவரிக்கிறார். சினம் கொண்ட சூர்ப்பனகை குளிர்ந்த நீரை அள்ளித் தனது கொங்கைகளின்மேல் அப்புவதாகக் கூறுகின்றநிலையில், கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொள்வது பொருத்தமற்றது. காரணம், எந்தவொரு பெண்ணும் குளிர்ந்த நீரை அள்ளி முகத்தில் அப்புவார்களே ஒழிய மார்பகத்தில் அப்பிக் கொள்ளமாட்டார்கள். மேலும் அளவுக்கதிகமான சினம் வரும்போது கண்கள் தான் சிவக்குமேயன்றி மார்பகம் சிவப்பதில்லை. எனவே இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு மார்பகமென்னும் பொருள் பொருந்தாது.

5. வருந்தினால் கொதிக்குமா மார்பகம்?

பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே - கம்ப.ஆரண். 3/46

இதன்பொருள்: சோலைகளில் இருந்த பூக்கள் புதிய தேனைப் பொழியவும் அதை விரும்பிய வண்டுகள் தென்றலுடன் சேர்ந்து மெல்லென சோலைக்குள் நுழையவும் காதலரைப் பிரிந்தவரின் கொங்கைகள் வருத்தத்தினால் வெம்பிக் கொதித்தன.

இப்பாடலில் மங்கையரின் கொங்கைகள் பிரிவு வருத்தத்தினால் வெம்பிக் கொதிப்பதாகக் கூறுகிறார். இதில் வரும் கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டால் மார்பகங்கள் வெம்பிக் கொதித்தன என்று பொருள்வரும். ஆனால் வருத்தத்தினால் கண்கள் தான் வெம்பிக் கொதிக்குமே அல்லாமல் மார்பகங்கள் கொதிப்பதில்லை. எனவே இப்பாடலில் வரும் கொங்கை என்னும் சொல்லுக்கு மார்பகம் என்ற பொருள் பொருந்தாது.

6. கொங்கைக்கும் கூந்தலுக்கும் என்ன தொடர்பு?:

கொங்கை என்றால் மார்பகம் என்றும் கூந்தல் என்றால் தலைமயிர் என்றும் பொருள் கூறுகிறார்கள் இற்றை உரைகாரர்கள். இந்நிலையில், இவ் இரண்டுக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்க முடியும்?. ஒன்றுமே இருக்க முடியாது அல்லவா?. ஆனால் தொடர்பு இருக்கிறது என்று அடித்துக் கூறுகிறார் கம்பர் கீழ்க்காணும் பாடலில்.

சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும்
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ - கம்ப.அயோ.6/5

இதன் பொருள்: கொங்கை ஏந்திய செல்வமாகிய நெறித்த கரிய கூந்தலையுடைய அவள் தனது சிற்றிடை வருந்துமாறு நீர்மொக்குள் போன்ற மெல்லிய தனது அடிகளும் வருந்தத் தொடர்ந்து நடந்து சென்றாள். குற்றமில்லாத அவளது வலிமையான அன்பினைக் காட்டிலும் பெரியதொன்று உண்டோ?.

இப்பாடலில் கொங்கையானது நெறித்த கரிய கூந்தலாகிய செல்வத்தினை ஏந்தியிருப்பதாகக் கூறுகிறார் கம்பர். மார்பகத்தின் மேலே விரிந்திருந்த கரிய தலைமயிர் என்று இதற்குப் பொருள் கொள்கிறார்கள். பெண்களின் கரிய கூந்தல் எப்படிச் செல்வமாகும்?. சீதை ஏன் காரணமில்லாமல் தனது தலைமயிரை எடுத்து மார்பகத்தின் மேல் போட்டுக்கொள்ள வேண்டும்?. பொதுவாகத் தலைமயிரை எடுத்து முன்னால் விரித்துப் போட்டுக்கொள்வது எந்த ஒரு பெண்ணுக்கும் அழகல்ல. மரணம் போன்ற பெருந்துயர நிகழ்வுகளில் தான் பெண்கள் தலைவிரி கோலமாக இருப்பர். எனவே இப்பாடலில் வரும் கூந்தல் என்பது தலைமயிர் அல்ல என்பதும் கொங்கை என்பது மார்பகம் அல்ல என்பதும் உறுதியாகிறது.

இதுபோல இன்னும் பல இடங்களில் கொங்கை என்னும் சொல்லுக்கு மார்பகம் என்ற பொருள் பொருந்தாத நிலையில், இச் சொல்லுக்கு புதியதோர் பொருள் இருப்பது உறுதியாகிறது. அதைப் பற்றிக் கீழே காணலாம்.

கொங்கை - புதிய பொருள் என்ன?

கொங்கை என்னும் சொல் குறிக்கின்ற புதிய பொருட்கள்:

கண் மற்றும் கண்ணிமை .

நிறுவுதல்:

கொங்கை என்ற சொல்லுக்கு கண் மற்றும் கண்ணிமை ஆகிய புதிய பொருட்கள் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றி இங்கே பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

1. கொங்கையும் நிலவும்:

பெண்களின் கண்களை நிலவுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கமே. பெண்களின் கண்களைக் குறிப்பதான 'நுதல்' என்ற சொல்லைப் பற்றியும் அதனைப் பிறைச்சந்திரனும் நிலவுடனும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருப்பதைப் பற்றி 'நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இதேபோல, பெண்களின் கொங்கை ஆகிய கண்களையும் நிலவுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார் கம்பர்.

எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே - கம்ப.பால.13/51

இதன் பொருள்: காமன் எய்த அம்பினைப் போல எனது உள்ளத்தில் காமநோய் தோன்றுமாறு எங்கிருந்து எழுந்தது இந்த நிலவு ?. பொலிந்து தோன்றும் இந்த கொங்கையின் மேல் விடம்போலக் கருமை இருப்பினும் இரவில் தோன்றும் நிலவு இல்லை இது; ஏனென்றால் இதில் களங்கம் ஏதுமில்லை.

இப்பாடலில் கொங்கையினை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர். காமனின் அம்புகளைப் போல இந்த கொங்கை ஆகிய நிலவும் ஒளிவீசி காமநோயினை உண்டாக்கியதாம். இப்பாடலில் வரும் கொங்கை என்ற சொல்லுக்கு கண் என்று பொருள்கொண்டால், கண்ணை நிலவுடன் ஒப்பிடுவதாகப் பொருள்வரும். இந்த ஒப்புமை மிகமிகப் பொருத்தமான ஒன்றே ஆகும். காரணம், நிலவு எப்படி வெண்ணிற ஒளிவீசும் தன்மை கொண்டதோ அதைப்போலவே பெண்டிரின் பொலிவுடைய வெண்விழிகளும் வெண்ணிற ஒளிவீசும் தன்மையதே. மேலும், இரவிலே தோன்றும் நிலவில் களங்கம் அதாவது கறை உண்டு. ஆனால் இந்த மங்கையின் கண் ஆகிய நிலவுக்கு மேலே கண்ணிமையில் கறை போன்று கருமை பூசியிருந்தாலும் கண் ஆகிய நிலவில் களங்கம் ஏதுமில்லை என்கிறார் கம்பர்.

2. கொங்கையும் கண்ணீரும்:

பெண்கள் என்று சொன்னாலே கண்ணீருக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் துன்பப்படும்போது அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாது. கண்களில் கண்ணீர்த் துளிகள் கோர்த்துக்கொண்டு கீழே விழத் தயாராக நிற்கும். அப்படிப்பட்ட ஒரு காட்சியினைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.

வண்டு உளர் தாரவன் வாய்மை கேட்ட மங்கை
கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப
உண்டுகொலாம் அருள் என்கண் உன்கண் ஒக்கின்
பண்டைய இன்று பரிந்து அளித்தி என்றாள் - கம்ப.அயோ.3/10

இதன் பொருள்: வண்டுகள் ஒலிக்கும் மாலையணிந்த தசரதனின் வாய்மொழி கேட்ட கைகேயி தனது அகன்ற கண்கள் ஆர்ப்பரித்துக் கொங்கைகளில் நீர்கோத்திட என்மேல் உங்கள் அன்பு இருந்தால் அன்று நீங்கள் கொடுப்பதாகச் சொன்ன வரங்களை இன்று எனக்குக் கொடுங்கள் என்றாள்.

இப்பாடலில் கைகேயின் கண்கள் ஆர்ப்பரித்துக் கொங்கைகளில் கண்ணீர் கோப்பதாகச் சொல்கிறார் கம்பர். இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு கண் என்பதே பொருத்தமான பொருளென்று அனைவரும் அறிவோம். காரணம், யாருக்கும் கண்ணீரானது கண்களில்தான் கோக்குமே அன்றி வேறெதிலும் கோப்பதில்லை. அழும்போது கொங்கையில் அதாவது கண்ணில் நீர் கோத்து ஒழுகுவதைப் பற்றிய இன்னொரு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வஞ்சனை அரக்கர் செய்கை இது என மனக்கொண்டேயும்
அஞ்சன வண்ணத்தான்தன் பெயர் உரைத்து அளியை என்பால்
துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம் என்று உவந்து சொன்னாள்
மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் - கம்ப.சுந்த.14/40

இதன் பொருள்: வஞ்சனை மிக்க அரக்கரின் செயலே இது என்று எண்ணியவளாய் இராமனின் பெயரைச் சொல்லி உயிர்போகும் தருவாயில் எனக்கு சுவர்க்கம் காட்டினாய் என்று மகிழ்ச்சியுடன் கூறினாள் மழைமேகம் போல கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தநிலையில் இருந்த சீதை.

இராமனின் பிரிவினை எண்ணி அழுது அழுது தனது ஆருயிர் பிரிகின்ற நிலையில் இருந்த சீதையினை சந்தித்த அனுமனைக் கண்டதும் சீதை அடைந்த இன்பத்தை இப்பாடலில் விவரிக்கிறார் கம்பர். மழைமேகம் போல மைதீட்டிய கண்களில் இருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்துகொண்டிருக்கிறது. கூடவே அவளது ஆவியும் பிரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனுமன் அவளைச் சந்தித்துத் தன்னை ராமதூதன் என்று சொன்னதும் அவளுக்கு சுவர்க்கலோக இன்பமே கிட்டியதைப் போன்ற மகிழ்ச்சி. இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்குக் கண் என்பதே பொருத்தமான பொருளாகும் என்பதைப் பாடலின் விளக்கமே பறைசாற்றி நிற்கிறது. இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டால், அனுமன் தனது அன்னையாகிய சீதையின் மார்பகங்களைப் பார்த்தான் என்று பொருள்வரும். கண்ணியமற்ற இச்செயலை அனுமன் செய்யமாட்டார் என்பதால் மார்பகம் என்ற பொருள் இப்பாடலில் அறவே பொருந்தாது.

3. கொங்கையும் கொதிப்பும்:

பொதுவாக மனிதர்களின் அளவுக்கதிகமான உணர்ச்சிகளால் அதிகம் பாதிக்கப்படுவது கண்களே. அளவுக்கதிமான அழுகை, எல்லை மீறிய கோபம் போன்றவற்றால் கண்விழிகள் கொதிப்பு அடைந்து சிவப்பதைப் பார்த்திருக்கிறோம். இது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதே ஆயினும் பெண்கள் மிக அதிகமாகப் பாதிப்படைகிறார்கள். அழுகை மற்றும் சினத்தின் போது பெண்களின் கொங்கைகள் ஆகிய கண்கள் கொதிப்படைதல் பற்றிய சில பாடல்களைக் கீழே காணலாம்.

பொழிவன சோலைகள் புதிய தேன் சில
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன அன்னவை நுழைய நோவொடு
குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே - கம்ப.ஆரண். 3/46

இதன்பொருள்: சோலைகளில் இருந்த பூக்கள் புதிய தேனைப் பொழியவும் அதை விரும்பிய வண்டுகள் தென்றலுடன் சேர்ந்து மெல்லென சோலைக்குள் நுழையவும் காதலரைப் பிரிந்தவரின் கொங்கைகள் வருத்தத்தினால் வெம்பிக் கொதித்தன.

இப்பாடலில் மங்கையரின் கொங்கைகள் பிரிவு வருத்தத்தினால் வெம்பிக் கொதிப்பதாகக் கூறுகிறார். இதில் வரும் கொங்கை என்பதற்கு கண் என்பதே பொருத்தமான பொருளாயிருக்கும். காரணம், வருத்தத்தினால் கண்கள் தான் வெம்பிக் கொதிக்குமே அல்லாமல் மார்பகங்கள் கொதிப்பதில்லை. மேலும் மலர்ச்சோலைக்குள்ளே தென்றல் காற்று வேறு வீசிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், காதலரைப் பிரிந்திருக்கும் காதலியின் கண்களோ வருத்தத்தினால் வெம்பிக் கொதிப்புற்றதாகக் கூறுகிறார் கம்பர். அளவற்ற வருத்தத்தினால் மட்டுமின்றி அளவற்ற சினத்தினாலும் கண்கள் கொதிப்படையும். இதைப்பற்றி சிலப்பதிகாரத்தில் வரும் சில இடங்களைக் கீழே காணலாம்.

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் -சிலப்.புகார்.8

இதன்பொருள்: மிக்க துயரம் உற்ற வீரபத்தினி ஆகிய கண்ணகியின் முன்னால் மதுரை மாநகரின் காவல்தெய்வம் வந்துதோன்றி ' உள்ளச் சீற்றத்தால் தீயினைப் போலும் கொதிப்புண்ட கண்விழியால் மதுரையை அழித்தவளே .....

மதுரை மூதூர் மா நகர் கேடு உற
கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து - சிலப்.வஞ்சி.28

இதன் பொருள்: உள்ளச் சீற்றத்தால் தீயினைப் போலும் கொதிப்புண்ட கண்விழியால் மதுரை மூதூரும் மாநகரும் அழியுமாறு செய்து...

அளவுக்கதிகமான சினத்தாலோ மனம்வருந்தி அழுவதினாலோ கொதிப்படைகின்ற கண்களைக் குளிர்விக்க குளிர்ந்த நீரைக் கைகளால் அள்ளிக் கண்களின்மேல் தெளித்துக் கொள்வது பெண்களின் வழக்கம். இதைப்பற்றிய கம்பரின் பாடலொன்று கீழே.

கைகளால் தன் கதிர் இளம் கொங்கை மேல்
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள்
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்குமால் - கம்ப.ஆரண்.6/71

இதன்பொருள்: சூர்ப்பனகை தனது கைகளால் குளிர்ந்த நீரினை அள்ளித் தனது கொங்கைகளின்மேல் அப்பினாள்; சுற்றிலும் தீப்பற்றி எரிய வெம்மையுற்ற ஒரு பாறையின்மேல் வைத்த வெண்ணையினைப் போல அந்தக் குளிர்ந்த நீரும் இருந்த இடம் தெரியாமல் போனது.

சூர்ப்பனகையின் உள்ளத்தில் எழுந்த சினத்தீயின் தாக்கத்தினை இப்பாடலில் விவரிக்கிறார். சினம் கொண்ட சூர்ப்பனகை குளிர்ந்த நீரை அள்ளித் தனது கண்களின்மேல் அப்புகிறாள். மறுகணமே அந்த நீர் ஆவியாகி இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறதாம். இது எப்படி இருக்கிறது என்றால் சுற்றிலும் தீமூட்டியதால் வெம்மையுற்ற ஒரு கற்பாறையின் மேல் வெண்ணையினை வைத்தால் மறுகணமே அது உருகி ஆவியாகி விடுவதைப் போல சூர்ப்பனகையின் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரியும் சினத்தீயின் தாக்கம் அவளது கண்களில் தெரிகிறது என்கிறார் கம்பர். 

4. கொங்கையும் இராமனும்:

நாளம் கொள் நளின பள்ளி நயனங்கள் அமைய நேமி
வாளங்கள் உறைவ கண்டு மங்கைதன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் மற்றை நேர்இழை நெடிய நம்பி
தோளின்கண் நயனம் வைத்தாள் சுடர்மணி தடங்கள் கண்டாள் - கம்ப.ஆரண்.5/4

இதன்பொருள்: தண்டுடைய தாமரைமலர் போன்ற தனது கண்களையும் சக்கரவாளங்கள் தோன்றும் தனது கொங்கைகளையும் நெடிய வில்லினையுடைய இராமன் நோக்கவும் அவனது தோள்களை நோக்கினாள் சீதை.

இப்பாடலில் சீதையின் கொங்கைகளை இராமன் பார்ப்பதாகக் கூறுகிறார் கம்பர். இப்பாடலில் வரும் கொங்கை என்பதற்கு கண் என்று பொருள்கொண்டால் கண்ணியமான மிகப் பொருத்தமான விளக்கம் கிடைக்கும். சீதையின் கண்களின் அழகினைக் கூறும்போது தாமரைமலர் போன்று இருந்ததாகவும் அதில் சக்கரவாளங்கள் தோன்றியதாகவும் கூறுகிறார் கம்பர். இந்த சக்கரவாளம் என்பது உள்ளே ஒளியும் வெளியே இருளும் கொண்ட ஓர் மலை என்று அகராதி கூறுகிறது. இப்படியொரு மலை உண்மையில் இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொரு அழகான பெண்ணிடமும் இருக்கிறது. அதுதான் அவளது கண் என்கிறார் கம்பர். ஆம், ஒளிவீசும் வெண்ணிற விழிகள் உள்ளேயும் கருமை பூசிய கண்ணிமைகள் புறத்தேயும் இருப்பது பெண்களின் கண்களில் தானே. அதுமட்டுமின்றி, பெண்களின் கண்களும் மலைபோல மேல்நோக்கிக் குவிந்து இருப்பனவே என்பதால் அவற்றைச் சக்கரவாளங்களுடன் ஒப்பிடுகிறார் கம்பர். இப் பாடலில் வரும் முலை என்பதற்கு மார்பகம் என்று பொருள்கொண்டு அதனைச் சக்கரவாளத்துடன் ஒப்பிடமுடியாது. காரணம், யாருடைய மார்பகத்திலும் உள்ளே ஒளியும் புறத்தே கருமையும் இருக்காது.

5. கொங்கையும் கூந்தலும்:
கூந்தல் என்பது கண்ணிமையைக் குறிக்கும் என்று பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா? என்ற கட்டுரையில் ஏற்கெனவே கண்டுள்ளோம். கூந்தல் என்பது கண்ணிமையைக் குறிக்க, கொங்கை என்பது கண்விழியினைக் குறிக்கின்ற நிலையில், இவ் இரண்டுக்கும் இடையிலான தொடர்பினைப் பற்றிக் கீழ்க்காணுமாறு கூறுகிறார் கம்பர்.

சிறுகு இடை வருந்த கொங்கை ஏந்திய செல்வம் என்னும்
நெறி இரும் கூந்தல் நங்கை சீறடி நீர் கொப்பூழின்
நறியன தொடர்ந்து சென்று நடந்தனள் நவையின் நீங்கும்
உறு வலி அன்பின் ஊங்கு ஒன்று உண்டு என நுவல்வது உண்டோ - கம்ப.அயோ.6/5

இதன் பொருள்: கொங்கை ஏந்திய செல்வமாகிய நெறித்த கரிய கூந்தலையுடைய அவள் தனது சிற்றிடை வருந்துமாறு நீர்மொக்குள் போன்ற மெல்லிய தனது அடிகளும் வருந்தத் தொடர்ந்து நடந்து சென்றாள். குற்றமில்லாத அவளது வலிமையான அன்பினைக் காட்டிலும் பெரியதொன்று உண்டோ?.

இப்பாடலில், கொங்கையானது நெறித்த கரிய கூந்தலாகிய செல்வத்தினை ஏந்தியிருப்பதாகக் கூறுகிறார் கம்பர். அதாவது கண்விழிகள் ஏந்தியிருக்கும் செல்வமான கண் இமைகள் என்று கூறுகிறார். ஏன் கண்ணிமைகளைச் செல்வம் என்று கம்பர் கூறவேண்டும்?. அது அத்தனை அழகாய் மைபூசப்பட்டு பொன்போல ஒளிர்கிறது. மேலும் பெண்களுக்குக் கண்களும் கண்ணிமைகளும் தானே மிகப்பெரிய சொத்து. எனவேதான் விழிகள் தாங்கிநிற்கும் செல்வம் என்று கண்ணிமைகளை வர்ணிக்கிறார் கம்பர்.

6. கொங்கையும் குங்குமச் சிமிழும்:

பெண்களின் மையணிந்த கண்களைக் குங்குமச் சிமிழுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கமே. இதைப் பற்றி கண்ணகி மதுரையை எரித்தது எப்படி? என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். இதேபோல கண்களைக் குறிப்பதான கொங்கையினைக் குங்குமச் சிமிழுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர்.


கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் செய் தோளுக்கு
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின் ஒப்பு ஆகும் அன்றே - கம்ப.பால. 22/10

இதன் பொருள்: குங்குமச் சிமிழினைப் போலப் பெருத்து அழகுடன் திகழும் கண்களின் சுமையினால் வருந்துகின்ற இமைகளில் செந்நிறத்தில் வண்ணம் பூசியிருக்க, அது பார்ப்பதற்கு ஒளிர்கின்ற செம்மணிக்குள் பொதிந்து வைத்த நல் முத்து போலத் தோன்றியது.

இக்காலத்தில் குங்குமம் வைக்கின்ற சிமிழ்கள் பல்வேறு பொருட்களால் செய்யப்பட்டனவாய் பலவித வடிவங்களில் கிடைக்கின்றன. ஆனால், அக்காலத்துப் பெண்கள் தாம் விரும்பிப் பூசுகின்ற குங்குமத்தினைச் செம்பினாலான சிமிழுக்குள் தான் வைத்திருப்பர். அருகில் கண்போன்ற வடிவத்திலான ஒரு தற்காலக் குங்குமச்சிமிழின் படம் இணைக்கப்பட்டுள்ளது. பழங்காலச் சிமிழானது மேலே திறந்துமூடத்தக்க மேற்புறமாகக் குவிந்த மூடியுடன் கூடியதாய் செவ்வண்ணத்தில் இருக்கும். பெண்களின் கண்ணிமைகளுக்குச் செந்நிறத்தில் வண்ணம் பூசி இருக்கும்போது அது பார்ப்பதற்குக் குங்குமச் சிமிழ் போலவே தோன்றும். இது எப்படியென்றால், செந்நிறம், குவிந்த வடிவம், மூடித்திறக்கும் செயல் ஆகிய மூன்று பண்புகளாலும் ஒத்திருப்பதால், பெண்களின் செம்மையுண்ட கண்களைக் குங்குமச் சிமிழுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். இத்தோடு நிற்காமல், ஒளிவீசும் முத்தொன்று செம்மணியின் நடுவில் இயற்கையாக அமைந்திருக்குமா?. ஆம் எனில் அப்படித்தான் அவளது கண்களும் இருந்தன என்கிறார் கம்பர். இங்கே வெண்ணிற விழிகள் முத்துக்கும் செம்மையுண்ட கண்ணிமைகள் செம்மணிக்கும் உவமை.

7. கொங்கையும் தென்னங்காயும்:

பெண்களின் கண்களை நீர்க்கலசங்களுடன் ஒப்பிடுவதும் இலக்கிய வழக்கம் தான். காரணம், பெண்கள் அழும்போதும் இந்த நீர்க்கலசங்களை இருவகையாகப் பிரிக்கலாம். இயற்கைப் பொருட்களான தென்னையின் இளநீர்க் காய்களும் பனைமரத்தின் நுங்குகளும் ஒருவகை. செயற்கையாகச் செய்யப்பட்ட செம்பொன்னாலான கலசங்களும் கும்பங்களும் இன்னொரு வகை. பெண்களின் கண்களை தென்னங்காய்களுடன் ஒப்பிடுவதான சில பாடல்களைக் கீழே காணலாம்.

தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை
ஆரிடை சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்
வாரிடை தனம் மீது ஆட மூழ்கினாள் வதனம் மை தீர்
நீரிடை தோன்றும் திங்கள் நிழல் என பொலிந்தது அன்றே - கம்ப.பால.18/17

இதன்பொருள்: தேர்த்தட்டினைப் போல அகன்ற அழகான நெற்றியும் தென்னையின் இளநீர்க்காய்களை ஒத்து உருண்டு திரண்ட கண்களும் அரிதாகப் பெற இயலும் அழகினையும் உடைய அவள் தனது கண்ணிமைகளின் மேல் நீரானது ஆடுமாறு நீரில் மூழ்கினாள். அப்போது அவளது முகம் தெளிந்த நீரில் தோன்றும் நிலவின் நிழல் எனப் பொலிந்து தோன்றியது.

இப்பாடலில் வரும் தனம் என்னும் சொல்லும் கொங்கையினைப் போலக் கண்களையே குறிக்கும். அல்குல் என்பது நெற்றியைக் குறிக்கும் என்று அழகின் மறுபெயர் அல்குல் என்ற கட்டுரையில் கண்டுள்ளோம். தென்னையின் இளநீர்க் காயினை நீளவாக்கில் வெட்டித் திறந்துபார்த்தால் உள்ளே தேங்காயின் வெள்ளைநிற நெற்று இருக்கும். அதன் நடுவில் நீர் இருக்கும். பார்ப்பதற்குக் கண்போன்ற வடிவத்தில் இருக்கின்ற தென்னங்காயின் வெட்டுத்தோற்றப் படம் அருகில் இணைக்கப்பட்டுள்ளது. உருண்டு திரண்டிருந்த இவளது வெண்ணிற விழிகளைச் சுற்றிலும் நீர் சூழ்ந்திருந்ததால் அவற்றைத் தென்னங்காய்களுடன் ஒப்பிடுகிறார் கம்பர்.

செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி
அம்மா இவை மங்கையர் கொங்கைகள் ஆகுமோ என்ன
எம் மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன என்று ஓர் ஏழை
விம்மா வெதும்பா வெயரா முகம் வெய்துயிர்த்தாள் - கம்ப.பால.17/17

இதன் பொருள்: தென்னையின் இளநீர்க் காய்களை நோக்கி ஒருவர் இவை பெண்களின் கண்களுக்கு ஒப்பாகுமோ என்றுகூற அதைக்கேட்ட பெண்ணொருத்தி எம்போன்ற பெண்களின் கண்களுக்கு இவை ஒப்பாகும் என்றாள் துயரத்தினால் பெருமூச்செறிந்து விம்மிவிம்மி அழுதபடி.

பெண்கள் அழும்போது அவரது உருண்டு திரண்ட வெண்ணிற விழிகளைச் சூழ்ந்து கண்ணீர் நிறைந்திருக்கும். தென்னங்காயின் உள்ளே வெண்ணிற தேங்காய்நெற்றும் நீரும் இருப்பதைப் போல இது தோன்றுவதால், பெண்களின் நீர்நிறைந்த கண்களை தென்னங்காய்களுடன் ஒப்பிடுகிறார் கம்பர். இதைப்போலவே இன்னொரு பாடல் கீழே.

தங்கு தண் சாந்து அகில் கலவை சார்கில
குங்குமம் கொட்டில கோவை முத்து இல
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல
தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய - கம்ப.அயோ.12/37

இதன் பொருள்: குளிர்ந்த சந்தனமும் அகிலும் சேர்ந்த கலவையின் பூச்சு இல்லை; குங்குமம் பூசப்படவில்லை; முத்துக்கோவை போல் வெண்பொட்டுக்கள் இல்லை; பொங்கிப் பெருத்திருந்த கண்களில் தென்னங்காயின் இளநீரைப் போல கண்ணீரைத் தவிர புதுமை வேறு எதுவுமில்லை.

8. கொங்கையும் பொற்கலசமும்;

பெண்களின் கொங்கைகள் ஆகிய கண்களைச் செயற்கையாகச் செய்யப்பட்ட நீர்க்கலசங்களுடன் ஒப்பிடுவதும் இலக்கிய வழக்கமே. அத்தகையதோர் ஒப்பீட்டினை கம்பர் விளக்கும் விதத்தினைப் பாருங்கள்.

வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்தன்
தார் ஆழி கலை சார் அல்குல் தடம் கடற்கு உவமை தக்கோய்
பார் ஆழி பிடரில் தாங்கும் பாந்தளும் பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழி தேரும் ஒவ்வார் உனக்கு நான் உரைப்பது என்னோ - கம்ப.கிட்.13/37

இதன் பொருள்: உருக்கிவார்த்த வட்டமான பொற்கலசங்கள் போன்ற கண்களையும் வஞ்சிக்கொடி போன்ற இமைகளையும் உடைய அவளின் நெற்றிப் பரப்பில் கடலலைகளைப் போலும் வரிஓவியங்களும் உலகினைத் தலையில் தாங்கும் ஆதிசேசன் எனும் பாம்பும் தோற்குமாறு புள்ளி ஓவியங்களும் வரையப்பட்டுக் காண்பதற்குச் சக்கரங்களை உடைய ஒரு தேரின் தட்டுபோலவும் தோன்றுவதால் உனக்கு நான் எதைக் கூறுவேன்?

பெண்கள் தமது திரண்ட கண்விழிகளைச் சுற்றிலும் கண்ணிமைகளில் பொன்வண்ணத் துகள்களால் பூசியிருக்கும்போது, அது பார்ப்பதற்கு மேற்புறம் குவிந்தவாய் அமைப்புடைய ஒரு பொற்கலசம் போலத் தோன்றும். இக் கலசத்திற்குள் வெள்ளைநிறப் பால் ஊற்றி நிரப்பிவைத்திருக்கும்போது அது பார்ப்பதற்குப் பெண்களின் வெண்ணிற விழிகளைப் போலத் தோன்றுவதால் பெண்களின் மையுண்ட கண்களை பொற்கலசத்துடன் ஒப்பிடுவது வழக்கம்.

இப்பாடலில் சீதையின் அங்க அடையாளங்களை இராமன் அனுமனுக்கு விளக்கிக் கூறுகிறார். இதில் சீதையின் அல்குல், கொங்கை, மருங்குல் ஆகிய மூன்றும் பேசப்படுகிறது. இவற்றில் அல்குல் என்பதற்கு சிலர் இடை என்றும் சிலர் பெண்குறி என்றும் கொங்கை என்பதற்கு மார்பகம் என்றும் மருங்குல் என்பதற்கு மறுபடியும் இடை என்றும் பொருள் கூறுகின்றனர். கண்ணியமிக்க இராமன் தனது மனைவியின் அடையாளங்களைக் கூறும்போது அவளது மார்பகம், இடுப்பு, பெண்குறி போன்றவற்றை அடையாளமாகக் கூறுவாரா?. இது இராமனுக்கும் அழகல்ல; கம்பனுக்கும் அழகல்ல. உண்மையில், இப்பாடலில் வரும் அல்குல் என்னும் சொல்லானது நெற்றியினைக் குறிக்கும் என்று அழகின் மறுபெயர் அல்குல் என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம். மருங்குல் என்பது நுசுப்பு போலவே இங்கு கண்ணிமைகளைக் குறித்து வருவதாகும். மேலும் சில சான்றுகளைக் கீழே காணலாம்.

எரிந்த சிந்தையர் எத்தனை என்கெனோ
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்
தெரிந்த கொங்கைகள் செவ்விய நூல் புடை
வரிந்த பொன் கலசங்களை மானவே - கம்ப.பால.18/27

இதன் பொருள்: (நீரில் விளையாடியபோது) கூரிய நகம் பட்டுக் கண்ணிமையில் பூசியிருந்த மஞ்சள்நிற மையானது ஆங்காங்கே அழியவும் அப் பெண்ணின் கண்கள் அப்போது காண்பதற்குப் புறத்தே நூல் சுற்றப்பட்ட பொற்கலசங்களைப் போலத் தோன்ற அதைக் கண்டு மனம் புழுங்கியவர்கள் எத்தனை பேர் என்று சொல்வேன்?

பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு நாள்தோறும் பலவிதமாக மைபூசி அலங்கரித்துக் கொள்வது வழக்கம். தொடர்ந்து பலகாலம் இப்படிப் பூசுதலால் இமையின் தோலானது தனது உண்மையான நிறத்தினை இழந்து வெளுத்துவிடும் அதாவது வெண்ணிறம் பெறும். இதைத்தான் நரை என்று துவக்கத்தில் குறிப்பிட்டனர். ஏனென்றால், இந்த நரையானது அதிக வயதில் தோன்றாமல் குறைந்த வயதிலேயே தோன்றுவதுண்டு. வயதான பின்னர் தலைமயிரில் தோன்றுகின்ற வெளுப்பினைக் குறிக்கவும் இந்த நரை என்ற சொல் பயன்பாட்டில் வந்தது பிற்காலத்தில். இந்த நரையினைப்பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம். இப்பாடலிலும் பெண்களின் இமையில் தோன்றும் இளநரையே குறிப்பிடப்படுகிறது. அதாவது, கண்ணிமை முழுவதும் பூசியிருந்த மஞ்சள்நிற மைப்பூச்சு ஆங்காங்கே நகம்பட்டு அழிந்தால் அந்த இடங்களில் எல்லாம் இமையின் வெண்மை நிறம் தெரியுமல்லவா?. இதைத்தான் வெண்நூல் சுற்றிய பொற்கலசங்களுடன் ஒப்பிடுகிறார் கம்பர்.

மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்
அங்கு அவர் கழுத்து என கமுகம் ஆர்ந்தன
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன
கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே - கம்ப.அயோ.2/37

இதன்பொருள்: பெண்களின் வரியெழுதிய கண்ணிமைகளைப் போல வாழைப்பூக்கள் பூத்திருந்தன; அவர் கழுத்தில் அணிந்திருந்த மணிகளைப் போல் பாக்குமரங்கள் காய்த்திருந்தன; ஒளிவீசும் அவரது கண்விழிகளைப் போன்ற முத்துமாலைகள் தொங்கின; வண்ணம் பூசிய அவர் கண்களைப் போன்ற பொற்கலசங்கள் வரிசையாய் இருந்தன.

இப்பாடலில் வரும் குறங்கு என்பது கண்ணிமைகளைக் குறிக்கும் என்று குறங்கு என்றால் என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். பெண்கள் தமது கண்ணிமைகளுக்குச் செந்நிறத்தில் மைபூசி அதில் பல வரிகளை எழுதியிருக்கும்போது பார்ப்பதற்கு அது வாழைப்பூவின் சிவந்த இதழ்களைப் போலத் தோன்றும். பெண்கள் தமது கழுத்தில் பச்சை, கருமை, சிவப்பு, செம்மஞ்சள் என்று பலவண்ண மணிகளைக் கோர்த்துக் கட்டியிருக்கும்போது அது பார்ப்பதற்குப் பாக்குமரத்தின் பலவண்ணக் காய்களைப் போலத் தோன்றும். இப்படிப் பூத்த வாழை மரங்களும் காய்த்த பாக்குமரங்களும் தோரணமாய் நிறுத்தப்பட்டுக் கட்டப்பட்டிருந்தன. அதில் முத்துமாலைகளைக் கோர்த்துத் தொங்கவிட்டிருந்தனர். பொன்நிறத்தில் மைபூசியிருந்த பெண்களின் திரண்ட கண்விழிகளைப் போன்ற பொற்கலசங்களை மங்கலப் பொருட்களாக வரிசையாக வைத்திருந்தனர்.

9. கொங்கையும் குங்கும சந்தனமும்:

மகளிர் தமது கொங்கைகள் ஆகிய கண்ணிமைகளில் பொன்நிறத்திலும் செந்நிறத்திலும் மைபூசி மகிழ்வர் என்று மேலே கண்டோம். சில நேரங்களில் மைபூசாமல் மஞ்சள்நிறத்திற்காக சந்தனத்தையும் செந்நிறத்திற்காக குங்குமத்தையும் குழைத்துப் பூசி அழகுசெய்வர். ஆனால் இவை மைப்பூச்சு போல நீண்டநேரம் இமைகளில் தங்கி நிற்காது. சிறிதளவு வியர்த்தாலே குழைந்து வழிந்து இறங்கிவிடும். இதைப்பற்றிய சில பாடல்களைக் கீழே காணலாம்.

வரிந்த வில் அனங்கன் வாளி மனங்களில் தைப்ப மாதர்
எரிந்த பூண் இனமும் கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும்
சரிந்த மேகலையும் முத்தும் சங்கமும் தாழ்ந்த கூந்தல்
வரிந்த பூம் தொடையும் அன்றி வெள்ளிடை அரிது அ வீதி - கம்ப.பால.21/18

இதன் பொருள்: வரிந்த வில்லுடைய மன்மதனின் அம்புகள் உள்ளத்தில் தைக்க, உள்ளம் புழுங்கிய பெண்டிரின் மையுண்ட இமைகள் வேர்த்தபோது குழைந்து வழிந்த சந்தனமும் நெற்றியில் அணிந்திருந்த மேகலையும் முத்துமாலையும் சங்குமாலையும் இமைகளின் மேலே அணிந்திருந்த பூமாலைகளும் கழன்று சரிந்து எங்கும் இடைவெளியே இல்லாதபடிக்கு அந்தத் தெருவிலே வீழ்ந்து கிடந்தன.

இராமனின் அழகினைக் காண்பதற்கு பெண்கள் ஒருவருக்கொருவர் நெருக்கிக்கொண்டு அந்தத் தெரு முழுக்கச் செல்கின்றனர். இராமனின் கொள்ளை அழகுள்ள விழிகளைக் கண்டதும் மன்மதனின் அம்புகள் வேலைசெய்யத் துவங்கின. இவ்வளவு அழகுடைய இராமன் தனக்குக் கணவனாய் வாய்க்கவில்லையே என்று மனம் புழுங்கிய பெண்கள் கூட்ட நெரிசலிலும் சிக்கியதால் அவரது நெற்றி, இமை என்று அனைத்தும் வேர்க்கின்றன. இதனால் அவரது இமைகளில் பூசியிருந்த சந்தனப்பூச்சு குழைந்து வழிந்து தெருவில் விழுந்தது. இமைகளுக்கு மேலாக அணிந்திருந்த மேகலைகளும், முத்துமாலைகளும், சங்குமாலைகளும், பூமாலைகளும் நெற்றியில் இருந்து கழன்று கீழே தெருவில் விழுந்தன. இதனால் அந்தத் தெருவெங்கும் சந்தனச் சாந்தும் மாலைகளும் இடைவெளியே இல்லாமல் நிறைந்து தோன்றின. மேலும் சில சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த
சீத களப செழும் சேற்றால் வீதி வாய்
மான கரி வழுக்கும் மா விந்தம் என்பது ஓர்
ஞான கலை வாழ் நகர் - நள. 20

இதன் பொருள்: மகளிர் தமது கண்ணிமைகளின்மேல் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட சந்தனத்தைக் குழைத்துப் பூசியது போக எஞ்சிய சேற்றினில் பெரிய யானையே வழுக்கி விழுவதான மாவிந்தம் என்னும் ஊரில் ஞானமும் கலையும் செழித்து விளங்கியது.

இப்பாடலின் அடிகளில் இருந்து ஒரு கருத்து முகிழ்க்கிறது. பெரிய யானையே வழுக்கி விழும் அளவுக்கு சந்தனக் கலவை மிஞ்சியிருந்ததென்றால், அவ் ஊரில் வாழ்ந்த பெண்கள் கூட்டாகச் சேர்ந்து பொது இடத்தில் நிறைய சந்தனக் கலவையினைத் தயார் செய்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. அனைவரும் பூசியதுபோக எஞ்சிய சேற்றில் ஆனையே வழுக்கும் என்பது அவ் ஊரின் இயற்கை வளத்தையும் செல்வச் செழிப்பையும் காட்டுகிறது.

வாச நீர் குடை மங்கையர் கொங்கையில்
பூசும் குங்குமமும் புனை சாந்தமும்
வீசு தெண் திரை மீது இழந்து ஓடும் நீர்
தேசு உடைத்து எனினும் தெளிவு இல்லதே - பெரியபு.திருமலை.8

இதன் பொருள்: பெண்கள் வாசனை மிக்க நீரில் குளித்தபோது அவரது இமைகளில் பூசியிருந்த குங்குமமும் சந்தனமும் நீரில் கரைந்து ஓட, வண்ணமயமாய் விளங்கிய அந்த நீர் தெளிவின்றிக் கலங்கித் தோன்றியது.

நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து - சிலப்.மது.14

இதன் பொருள்: குறிஞ்சி மலர் அணிந்து கண்ணிமைகளில் குங்குமக் கலவையினை பூசி...

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து கொங்கை என்பதற்கு மார்பகம் என்ற பொருள் உண்டென்றாலும் பெரும்பாலான இடங்களில் கண் / கண்ணிமை ஆகிய பொருட்களில் தான் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் பல ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் அறிந்து கொண்டோம். துவக்கத்தில் கண்ணைக் குறித்துவந்த கொங்கை என்னும் சொல்லானது பின்னாளில் கண்விழியினைப் போல மரத்தில் ஆங்காங்கே உருண்டு திரண்டு காணப்படுகின்ற முருடு என்ற பகுதிகளைக் குறிக்கவும் பயன்படலாயிற்று. திரண்ட கண்விழியைக் கண்ணிமையானது மூடியிருப்பதனைப் போல கம்பு போன்ற திரண்ட தானியங்களை உமி மூடியிருப்பதால், கண்ணிமையைக் குறித்துவந்த கொங்கை என்ற சொல் நாளடைவில் தானியங்களின் உமியினைக் குறிக்கவும் பயன்படாலாயிற்று.


கண் மற்றும் கண்ணிமைக்குக் கொங்கை என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன என்று காணலாம். தமிழில் கொங்கு என்ற சொல்லுக்குப் பூந்தாது, நறுமணம் ஆகிய பொருட்கள் உண்டென்று அகராதிகள் கூறுகின்றன. பெண்கள் தமது கண்ணிமைகளில் பூந்தாதுக்களைக் கொண்டும் நறுமணப் பொருட்களைக் கூட்டியும் பூசி அழகுசெய்வர். இப்படி பூந்தாதுக்களால் பூசப்பட்டு நறுமணம் கொண்ட மலர்போலத் தோன்றுவதால் இமைகளுக்குக் கொங்கை என்று பெயர். அதாவது மேட்டினை உடையது மேடை எனப்படுவதுபோல கொங்கினை உடையதால் கொங்கை என்று அழைக்கப்பட்டது எனலாம். கண்ணிமைக்கு வழங்கப்பட்ட கொங்கை என்ற பெயர் ஆகுபெயராக கண்விழிக்கும் ஆயிற்று என்க.

கொங்கை என்ற சொல்லை மிக அதிகமாகக் கம்பரே பயன்படுத்தியுள்ள நிலையில், கொங்கை என்ற சொல்லுக்கு மார்பகம் என்று தவறாகப் பொருள்கொண்டு கம்பராமாயணத்தைக் காமாயணமென்றும் கம்பரசத்தினை காமரசமாகவும் கருதி கம்பரை இழிவாகப் பேசிவருகின்றனர். இந்தக் கட்டுரையினைப் படித்துப் புரிந்துகொண்ட பின்னரேனும் அக் கருத்து தவறு என்று உணர்வரேல் நன்று. வாழ்க கவின்மிகு தமிழ் !. வளர்க கம்பனின் புகழ் !.

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.