திங்கள், 21 மார்ச், 2011

தோள் என்றால் என்ன?


முன்னுரை:

தோள் என்னும் சொல் சங்க காலம் தொட்டு இன்றுவரையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல சொற்களுள் ஒன்றாகும். இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் குறிப்பாக பெண்களைப் பொருத்த மட்டில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது.  இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு பொருட்களைப் பற்றிக் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

தோள் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி : புயம், துளை, கை.
பேப்ரிசியஸ் அகராதி:                                      புயம், கை.
வின்சுலோ அகராதி:                                         புயம், கை.

மூன்றுவிதமான பொருட்களை அகராதிகள் கூறினாலும் தற்காலத்தில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது என்னவோ 'புயம்' மட்டுமே.

பொருள் பொருந்தாமை:

மேற்காணும் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.

மென்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய் - ஐங்கு.-28
மெல் இறை பணைத்தோள் பசலை தீர - ஐங்கு.-459
வேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39
தாம் பசந்தன என் தடமென் தோளே - குறு.-121

மேற்காணும் பாடல்களில் தோளானது பசக்கும் தன்மை உடையது என்னும் கருத்து கூறப்படுகிறது. பசத்தல் என்றால் அழுதல், நீர் வடிதல் என்ற பொருட்களே பொருந்தும் என்று பசப்பு என்றால் என்ன என்ற ஆய்வுக் கட்டுரையில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. அகராதிகள் கூறுகின்ற மூன்று பொருட்களான புஜத்திற்கோ கைக்கோ துளைக்கோ அழுகின்ற அல்லது நீர் வடியும் தன்மை இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம். ஆக மேற்காணும் பாடல்களில் வரும் தோள் என்ற பெயர்ச்சொல் அகராதிகள் கூறும் பொருட்களில் எதையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.

எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே - ஐங்கு.-78
முழங்குநீர்ப் புணை என அமைந்த நின் தடமென் தோள் - கலி.-56

மேற்காணும் பாடல்களில் தோளானது தெப்ப (புணை) வடிவம் கொண்டது என்னும் கருத்து கூறப்படுகிறது. தெப்பம் என்பது நீள்வட்ட வடிவில் அமைந்த ஒருவகையான நீர் ஊர்தி ஆகும். அகராதிகள் கூறும் மூவகைப் பொருட்களில் (புயம், கை, துளை) எதுவும் நீள்வட்ட வடிவில் இல்லை என்பது நாம் அறிந்த உண்மையாகும். ஆக மேற்காணும் பாடல்களில் வரும் தோள் என்ற பெயர்ச்சொல் அகராதிகள் கூறும் பொருட்களில் எதையும் குறிக்கவில்லை என்பது தெளிவு.

இவற்றில் இருந்து தோள் என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறியுள்ள பொருட்கள் நீங்கலாக பிற பொருட்களும் உண்டு என்று தெளியலாம்.

புதிய பொருட்கள்:

தோள் என்னும் பெயர்ச்சொல் குறிக்கும் புதிய பொருள்கள் 'கண்விளிம்பு' மற்றும் 'கண்' ஆகும். 

நிறுவுதல்:

தோள் என்னும் சொல்லானது எவ்வாறு கண்விளிம்பினைக் குறிக்கும் என்பதை இங்கே பார்ப்போம். உடல் உறுப்புக்களில் கண்விழிக்கு சில சிறப்புப் பண்புகள் உண்டு. அவை: கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு, வடிவப்பண்பு, மையிடப்படும் பண்பு ஆகியன. இந்தப் பண்புகளை விளக்கும் சங்க இலக்கிய மற்றும் கீழ்க்கணக்குப் பாடல்களைக் கீழே காணலாம்.

கலங்கி நீர்வார்க்கும் (அழும்) பண்பு:

மென்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய் - ஐங்கு.-28
மெல் இறை பணைத்தோள் பசலை தீர - ஐங்கு.-459
வேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39
தாம் பசந்தன என் தடமென் தோளே - குறு.-121
திருந்து இழை பணைத்தோள் நெகிழ - ஐங்கு-39
நேர் இறைப் பணைத்தோள் நெகிழ - ஐங்கு-239
மெல்தோள் நெகிழ்த்தான் - கலி.-131,142,143
நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் நெகிழ்பு - கலி.-146
சாய்ச்சாய் நெகிழ்ந்தன தோள் - கலி.-36
தோள் நெகிழ்புற்ற துயர் - கலி.- 37
மெல்தோள் நெகிழ விடல் - கலி.-86
மெல்தோள் நெகிழ்த்த செல்லல் - குறு.-111
பெரும் தோள் நெகிழ்த்த செல்வர்க்கு - குறு.-210
தணப்பின் நெகிழ்ப எம் தடமென் தோளே - குறு.-299
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே - குறு.-50
நெகிழ நெகிழ்ந்தன்று தடமெல் தோளே - குறு.-87
வேய் மருள் பணைத்தோள் நெகிழ - அக.-1
நல் தோள் நெகிழ வருந்தினள் கொல்லோ - அக.-41
வீங்கிறைப் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டு - அக.-59
பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு - அக.-169
தோள் புலம்பு அகல துஞ்சி நம்மொடு - அக.-187
மெல்தோள் நெகிழ சாய் - அக.-398
நற்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும் - குறி.-9
நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே - நற்.-131
மெல்தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் - நற்.-255
நெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் - நற்.-315
பெருந்தோள் நெகிழ அவ்வரி வாட - நற்.-358
எல்வளை மெல்தோள் நெகிழ - திணைமாலை ஐம்பது - 17
பூந்தொடித்தோள் என் அணிந்த ஈடில் பசப்பு - திணைமாலை150 - 63
என்பசந்த மென்தோள் இனி -  திணைமாலை150 - 117
பணைத்தோளி வாடும் பசலை மருந்து - கார்நாற்பது-4
படர் பசலை ஆயின்று தோள் - ஐந்திணை எழுபது - 68

மேற்கண்ட பாடல்களில் வரும் 'தோள் நெகிழ்தல்' என்பதற்கு 'கண் கலங்குதல்' என்பது பொருளாகும். கண் கலங்கும்போது கண் விளிம்பில் பூசப்பட்ட  மைவரிகள் அழிந்து கெடும். இதைத்தான் 'பெருந்தோள் நெகிழ அவ் வரி வாட' என்று கூறுகிறது நற்றிணையின் 358 ஆம் பாடல்.

வடிவப்பண்பு

எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே - ஐங்கு.-78
முழங்குநீர்ப் புணை என அமைந்த நின் தடமென் தோள் - கலி.-56
வேய்மருள் பணைத்தோள் - ஐங்கு.-318, நற்.-85,188
வேய் வனப்பு இழந்த தோள் - ஐங்கு.-392
வேய் உறழ் மெல்தோள் - கலி.-104
வேய் நலம் இழந்த தோள் - கலி.-127,99
வேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39
வேய் எனத் திரண்ட தோள் - கலி.-57
தெரி வேய்த்தோள் கரும்பெழுதி தொய்யில் - கலி.-76
வேய் மெல்தோள் - கலி.-81
மாண் எழில் வேய் வென்ற தோளாய் - கலி.-20
புனல்புணை அன்ன சாயிறைப் பணைத்தோள் - குறு.-168
வேய் மருள் பணைத்தோள் நெகிழ - அக.-1
வெறுத்த ஏர் வேய்புரைப் பணைத்தோள் - அக.-2
வேய்புரை பணைத்தோள் - அக.-47
வரைவேய் புரையும் நல் தோள் - நற்.-390
வேய் எழில் வென்று வெறுத்த தோள் - பரி.-11
வேய் உறழ் பணைத்தோள் - பதி.-21
வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய் - திணைமாலை150-94
அரும்பீர் முலையாள் அணிகுழல் தாழ் வேய்த்தோள் - திணைமாலை150-116
வேயன்ன தோளாய் - ஏலாதி-6
வேயின் திரண்ட தோள் - பழமொழிநானூறு - 32

மேற்கண்ட பாடல்களில் கண்களின் வடிவத்தை 'வேய்' மற்றும் 'புணை' ஆகிய பொருட்களின் வடிவத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். வேய் என்பது பொதுவாக மூங்கில் மரத்தைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும். ஆனால் இப் பாடல்களில் மூங்கில் மரத்தைக் குறிக்காமல் மூங்கில் காய்களைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. அருகில் உள்ள படத்தில் மூங்கில் காய்கள் காட்டப்பட்டுள்ளது. மூங்கில் காய்கள் நன்கு உருண்டு திரண்டு கூரிய முனையுடன் இருப்பதைக் காணுங்கள். அதனால் தான் உருண்டு திரண்ட கூரிய முனை கொண்டதாக மையிட்ட பெண்களின் கண்களுக்கு மூங்கில் காய்களை உவமையாகக் கூறியுள்ளனர். 'வேயெனத் திரண்ட தோள்' என்னும் வரிகள் இது பற்றி எழுந்ததே.

'புணை' என்ற சொல் சிறிய நீர்நிலைகளில் பயணம் செய்ய உதவுகின்ற நீள்வட்ட வடிவிலான மரக்கலனைக் குறிக்கும். அருகில் உள்ள படம் ஒருவகையான புணையைக் காட்டுகிறது.  புணையின் வடிவத்தைப் போலவே கண்களும் நீள்வட்ட வடிவில் அதேசமயம் முனைகளில் கூராக உள்ளதால் கண்களை புணையின் வடிவத்திற்கு ஒப்பிட்டு பாடல்களில் கூறியுள்ளனர்.

புணையும் கண்களும் நீருடன் தொடர்புடையவை என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாகும்.

தண்ணீரில் தத்தளிக்கும் ஓடத்தைப் போல்
கண்ணீரில் தத்தளிக்கின்றன
காதலனைக் காணாத
வேதனையில் கண்கள்.

எங்கோ எப்போதோ படித்த இக் கவிதை இந்த இடத்தில் சரியாகப் பொருந்துகிறது அல்லவா?

மையிடப்படும் பண்பு

என் தோள் எழுதிய தொய்யிலும் - கலி.-18
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி.-64
தெரி வேய்த்தோள் கரும்பெழுதி தொய்யில் - கலி.-76
நடாக்கரும்பு அமன்ற தோளாரைக் காணின் - கலி.-112
பெரும் தோள் தொய்யில் வரித்தும் - அக.-389
களிமயில் கலாவத்து அன்ன தோளே - அக.-152
கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் - நற்.-298
வண்ணம் நீவிய வணங்கிறைப் பணைத்தோள் - புற.-32

பெண்கள்  தமது கண்களின் விளிம்புகளில் மையிட்டு எழுதும் பழக்கம் தொன்றுதொட்டு இன்று வரையிலும் உள்ளது. இதைத்தான் சங்க காலத்தில் ' கரும்பு எழுதுதல்' என்றும் 'தொய்யில் எழுதுதல்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தோள் என்ற சொல் கண் மற்றும் கண்விளிம்பினைக் குறிக்கும் என்பதற்கு மேலே கண்ட சான்றுகளே அன்றி திருக்குறளில் இருந்தும் சில சான்றுகளைக் காணலாம்.

திருக்குறளில் தோள்:

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் - குறள் - 1105

பூக்களில் மனோரஞ்சிதம் என்றொரு பூ உண்டு. இப் பூவிற்கு பல வாசனைகள் உண்டு. நாம் எந்த வாசத்தை நினைத்துக்கொண்டு அப் பூவினை முகர்ந்து பார்த்தாலும் அதே வாசனை வருமாம். அதைப் போல காதலியின் பூவிதழ் போன்ற கண்ணிமைகளை உடைய கண்கள் நாம் விரும்புகின்ற வகையில் இன்பம் அளிப்பதாய் உள்ளது என்று காதலன் கூறி மகிழ்கிறான்.

உறுதோறும் உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்ற தோள் - குறள் - 1106

அமிழ்தினை உண்ணும்போது உயிர்க்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்பார்கள். என் காதலியின் கண்களை நான் காணும் போதெல்லாம் அமிழ்தம் உண்டதைப் போல எனது உயிர் புத்துணர்ச்சி பெறுகிறதே. ஒருவேளை எனது காதலியின் கண்கள் அமிழ்தத்தால் ஆனவையோ என்று வியக்கிறான் காதலன்.

காண்கமன் கொண்கனை கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு - குறள் - 1265

பிரிந்து சென்றிருந்த எனது காதலர் இதோ வந்துவிட்டார். கண்களே நீங்கள் நிறைவோடு எனது காதலரைக் கண்டு மகிழுங்கள். கண்டபிறகாவது வடிந்துகொண்டிருந்த கண்ணீர் இனி நிற்கட்டும்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர் - குறள் -906

இல்லத்தரசியாக இருக்கக் கூடிய தகுதியே இல்லாத ஒரு பெண்ணின் உருட்டி மிரட்டும் கண்களைக் கண்டு அஞ்சி நடுங்கி அவளது  சொல்கேட்டு நடப்பவர்கள் எவ்வளவு உயர்வான பதவிகளில் இருந்தாலும் பெருமை இல்லாதவர்களே ஆவர் என்று சாடுகிறார் வள்ளுவர்.

தந்நலம் பார஧ப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். - குறள் - 916

தனது இயல்பான நலனைத் தொலைக்க விரும்பாமல் காப்பாற்ற விரும்புபவர், செருக்குடன் இழிந்த குணமுடைய பெண்களின் கண்களைப் பார்க்கவே மாட்டார்கள்.  இக் குறளில் வரும் 'தோள் தோய்தல்' என்பது புஜங்களை உரசிக் கொள்ளுதலையோ உடலுறவினையோ குறிக்காது. கண்ணும் கண்ணும் நோக்கி உரசிக் கொள்வதையே குறிக்கும்.

விருப்பம் கொண்ட ஆணும் பெண்ணும் கண்களால் பேசிக் காதல் வளர்ப்பது உலகறிந்த செய்தி. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்' என்று கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். கம்பரும் ராமாயணத்தில் ராமனின் அழகைக் கண்ட பெண்களின் நிலையினை கீழ்க் கண்டவாறு கூறுகிறார்.

' தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே '

ராமனின் அழகிய கண்களைக் கண்ட பெண்களின் கண்கள் அதிலேயே குத்திட்டு நின்றன. அங்கிங்கு அசைய முடியவில்லையாம்.  மெய்மறத்தல் என்று சொல்வார்களே அதுபோன்ற நிலையினை அவர்கள் அடைந்தார்களாம். இங்கே தோள் என்ற சொல்லிற்கு புஜம் என்று பொருள் கொள்ள முடியாது. ஏனென்றால் அதே பாடலில் இன்னொரு இடத்தில் 'தடக்கைக் கண்டாரும் அதே' என்று கையினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.  ஒருபாடலில் இரண்டு இடங்களில் ஒரே பொருளைப் பற்றிக் கூறினால் அது 'கூறியது கூறல்' குற்றமாகிவிடும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் அக் குற்றத்தை செய்திருக்க மாட்டார் என்பதால் இப் பாடலில் வரும் தோள் என்ற சொல் புஜத்தைக் குறிக்காமல் கண்ணையே குறிக்கும் என்பது தெளிவு.

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். - குறள் -917

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. - குறள் - 919

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. - குறள் -1218

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். - குறள் - 1233

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். - குறள் - 1234

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். - குறள் - 1235

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. - குறள் - 1236

பாடுபெறு  தியோநெஞ் சேகொடி யார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து. - குறள் - 1237

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். - குறள் - 149

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு. - குறள் - 1113

மேலே கண்ட குறள்கள் அனைத்திலும் தோள் என்ற சொல் கண் என்ற பொருளையே குறித்து வந்துள்ளதை அறியலாம்.

தோளும் தொடியும்:

மேலே சில பாடல்களில் தோள் என்ற சொல் தொடி என்ற சொல்லுடன் பயின்று வந்துள்ளதைக் காணலாம். தொடி என்ற சொல்லிற்கு இன்றைய அகராதிகள் 'கைவளை' என்ற பொருளையே கூறுகின்றன. ஆனால் 'தொடி' என்ற சொல் சங்க இலக்கியத்தில் 'கண்ணின் மேல் பூசப்படும் மை' என்ற பொருளில் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. திருக்குறளிலும் நாம் மேலே கண்ட குறள்கள் 1234, 1235, 1236 ஆகியவற்றில் இப் பொருளே பொருந்தி வருகின்றது. அழுகையால் கண்கள் கலங்கும்போது வெளிப்படும் கண்ணீரால் கண்ணில் பூசப்பட்ட மை கரைந்து அழியும். இதைத்தான் 'தொடிநிலை' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகின்றது.

5 கருத்துகள்:

 1. தோள் கண்டார் தோளே கண்டார்!
  வளர்க உம் ஆராய்ச்சி!
  மேற்கோள்களுடன் தக்க புகைப்படங்களையும் கையாளப்பட்டிருத்தல் தற்கால மாணவ ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னுதாரணமாக பயன் தரக்கூடியது.
  எனது வகுப்புகளில் தங்களது ஆராய்ச்சி முடிபுகளையே (சில அடுத்த நிலைக்குச் செல்லக் கூடியவை என்றாலும்) எடுத்துரைக்கின்றேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி திரு. வீரராகவன்.

  இலக்கியங்களைப் பற்றிய மக்களது சிந்தனை அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது கட்டுரைகளின் நோக்கம்.

  அன்புடன்,

  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 3. உங்களது வலைத்தளமும் இடுகைகளும் மிகவும் சிறப்பாகக் காணப்படுகிறது. எனதுப் பாராட்டுக்கள். மேலும் நன் தமிழில் உரையாடலில் வடமொழிக் கலப்பை ஒழிக்க வேண்டும் என்பது எனது அவா. இங்கு நீங்கள் ஆதவனின் அழகு என்று இட்டதிற்குப் பதிலாக கதிரவன், பகலவன், பரிதி, ஞாயிற்றின் அழகு என்று இட்டிருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் தாழ்மையானக் கருத்து.

  பதிலளிநீக்கு
 4. சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி தோழர் சிங்கமுகன் அவர்களே. இதோ நீங்கள் விரும்பிய வண்ணமே மாற்றி விட்டேன்.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.