வெள்ளி, 16 செப்டம்பர், 2011

இன்னொரு முகம்


முன்னுரை:

சங்க காலந்தொட்டு இன்று வரையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல தமிழ்ச் சொற்களுள் 'முகம்' என்ற சொல்லும் ஒன்றாகும்.  இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு ஒரு பொருளும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது.  இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு ஒரு புதிய பொருளைப் பற்றியும் அப்பொருளில் இருந்து இதர பொருட்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றியும் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

முகம் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி: 

முகம் mukam
, n. < mukha. 1. Face; தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன் புறம். முகத்தா னமர்ந்தினிது நோக்கி (குறள், 93). 2. Mouth; வாய். மொழிகின்ற முகத்தான் (கம்பரா. வாலிவ. 74). 3. Entrance, as of a house; வாயில். (சங். அக.) 4. Backwater; கழி. (பிங்.) 5. Place; இடம். (திருக்கோ. 356, உரை.) 6. Head, top; மேலிடம். (W.) 7. Point; நுனி. அயின் முகக்கணை (கம்பரா. ஆற்றுப். 14). 8. Commencement; தொடக்கம். (W.) 9. Form, shape; வடிவு. கூன் முகமதி (பிரபுலிங். கைலாச. 3). 10. Look, sight; நோக்கு. புகுமுகம்புரிதல் (தொல். பொ. 261). 11. Meditation; தியானம். செல்வன் . . . இரண்டுருவ மோதி நேர்முக நோக்கினானே (சீவக. 1289). 12. Praise, flattery; முகத்துதி. முகம் பலபேசி யறி யேன் (தேவா. 742, 2). 13. Cause, reason; கார ணம். Colloq. 14. (Gram.) Ending of seventh case; ஏழாம் வேற்றுமையுருபு. இனிய செய்தி நின் னார்வலர் முகத்தே (புறநா. 12). 15. Front; முன்பு. ஈன்றாள் முகத்தேயு மின்னாதாம் (குறள், 923). 16. (Dram.) The first juncture or opening of a drama, one of five nāṭaka-c-canti, q.v.; நாடகச் சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி. (சிலப். 3, 13, உரை.) 17. Opening dance before the appearance of the actors on the stage; நடிகர்கள் அரங்கத்திற்கு வருமுன் நிகழும் கூத்து. (சிலப். 3, 147, உரை.) 18. Character, nature; இயல்பு. களி முகச் சுரும்பு (சீவக. 298). 19. State, condition; நிலை. (W.) 20. Aspect, appearance; தோற்றம். சுளிமுகக் களிறன்னான் (சீவக. 298). 21. Head, as of a boil; கட்டி முதலியவற்றின் முனையிடம். 22. Chieftaincy; முதன்மை. (W.) 23. Full-growth; maturity; பக்குவம். பயம்பின்வீழ் முகக்கேழல் (மதுரைக். 295). 24. Side; பக்கம். Colloq. 25. Part, as of a town or village; கிராம முதலியவற் றின் பகுதி. Nāñ. 26. Particle of comparison; உவமவுருபு. கிளிமுகக் கிளவி (சீவக. 298). 27. Instrumentality; மூலம். 28. Sacrifice; யாகம். மறைவழி வளர் முகமது சிதைதர (தேவா. 573, 5). 29. Cochineal insect; இந்திரகோபம். (பரி. அக.)

வின்சுலோ இணையத் தமிழ் அகராதி:

முகம், (p. 872) [ *mukam, ] s. The mouth, வாய். 2. Face, countenance, visage, mien, வதனம். 3. Entrance to a house, a harbor or river, வாயில். 4. Commencement, தொடக்கம். 5. Aspect, look, appearance, தோற்றம். 6. Prospect--as the front of an army, படை முகம். 7. Head--as of a street, or point, முனை. 8. Design, object, purpose, நோக்கம். 9. Chief, முதன்மை. W. p. 663. MUK'HA. 1. Place, இடம். 11. State or condition, as காரியம்நல்லமுகத்தைக்கொள்ளுகிறது. (Beschi.) அபிமுகம். Presence. அதோமுகம். A down-cast look. அறிமுகம். Acquaintance. சிரீமுகம்--சீமுகம்--ஷ்ரீமுகம்--திருமுகம்..... A letter from a guru. புதுமுகம். An unknown person; (lit.) a new face. என்வீட்டுமுகமாய்த்திரும்பும். Please turn to wards my house. அவர்கள் ஒரு முகமாய்நிற்கிறார்கள். They are all on one side. காற்றுமுகத்திலேதூற்றிவிடு. Winnow [the corn] before the wind. கிழக்குமுகமாயிரு. Sit towards the east. முகத்துக்குமுகங்கண்ணாடி. Personal inquiry is as a perspective.

பொருள் பொருந்தாமை:

அகராதிகள் கூறியுள்ள மேற்காணும் பொருட்களில் உடல் உறுப்புக்களைக் குறிப்பவை வதனமும் வாயும் மட்டுமே. இவற்றில் வதனம் என்பதற்கு ' நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம்' என்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. இதே பொருளில் தான் நாமும் அன்றாட வாழ்வில் புழங்கிக் கொண்டு இருக்கிறோம். இனி, இப் பொருள் கீழ்க்காணும் இடங்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன் - குறள்-1116
மதி மருள் வாள் முகம் - கலி: 126
பெயல் சேர் மதி போல வாள்முகம் தோன்ற - கலி: 145
அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம் போல
மல்லல் நீர்த்திரை ஊர்பு மாலிருள் மதி சீப்ப - கலி: 148
தீங்கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் - கலி: 15
அணிமுகம் மதி ஏய்ப்ப - கலி: 64
அகல் மதி தீங்கதிர் விட்டதுபோல முகன் அமர்ந்து - கலி: 56
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி: 62
திங்கள் அன்ன நின் திருமுகத்து - அக: 253
முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி - பரி: 19
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போல
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் - புற: 67

மேற்காணும் பாடல் வரிகளில் முகத்தை நிலவுக்கு உவமையாகக் கூறி இருக்கிறார்கள். இப்பாடல் வரிகளில் வரும் முகம் என்பதற்கு வதனம் அதாவது நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம் என்று பொருள் கொண்டால் உவமையின் சிறப்பு குன்றி விடுவதை உணரலாம். ஏனென்றால் பூமியில் இருந்துகொண்டு நாம் காணும் நிலவானது இயற்கையாகவே பால்போன்ற வெண்மை நிறம்கொண்டது; ஒளிவீசும் தன்மை பெற்றது. ஆனால் வதனத்திற்கோ இயற்கையான பால்போன்ற வெண்மை நிறமும் இல்லை; ஒளிவீசும் தன்மையும் இல்லை. அன்றியும் நாம் காணும் நிலவானது ஒரே பொருளாகத் தோற்றமளிக்க, வதனமோ நெற்றி, கன்னம், கண், மூக்கு, வாய் என்று பல உறுப்புக்களின் தொகுதியாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒத்த பண்புகளே இல்லாத நிலையில் வதனத்தையும் மதியினையும் ஒப்புமைப்படுத்திக் கூறுவது அணி இலக்கணத்திற்கு முரணானது மட்டுமின்றி அறிவுக்குப் புறம்பானதுமாகும்.

இப்படி வள்ளுவர் உள்பட எந்தப் புலவரும் தவறான உவமைகளைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் மேற்காணும் பாடல் வரிகளில் வருகின்ற முகம் என்ற சொல் வதனத்தையோ வாயினையோ குறிக்கவில்லை என்பது தெளிவு. இது இச்சொல்லுக்கு வேறு ஒரு புதிய பொருள்  இருப்பதைக் காட்டுகிறது. இனி இச்சொல் குறிக்கும் புதிய பொருள் எதுவென்று ஆதாரங்களுடன் இங்கே காணலாம்.

புதிய பொருள்:

முகம் என்ற சொல் மேலே கண்ட பாடல்களில் குறிக்கின்ற புதிய பொருள் 'கண்' ஆகும். இதுவே இச்சொல்லுக்கான முதன்மைப் பொருள் ஆகும். வதனம் என்னும் பொருள் இடவாகு பெயராக வந்த பொருள் ஆகும்.

நிறுவுதல்:

முகம் என்ற சொல்லுக்கு கண் என்ற பொருள் எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதைக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

அனிச்ச மலரைத் தொடவே வேண்டாம்; அருகில் சென்று மோந்து பார்த்தாலே வாடிவிடுகிற அளவுக்கு மென்மையானது அனிச்சப்பூ. அதுபோல விருந்தினர்களும் மென்மையானவர்களே. நமது கண்களில் சிறிது வெறுப்பைக் காட்டினாலும் அவர்கள் வாடிவிடுவார்கள் என்று கூறுகிறார் வள்ளுவர்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து. - குறள் -90

கற்றவர்களுக்கு மட்டுமே கண்கள் உண்டு. கல்லாதவர்களுக்கு கண்களுக்குப் பதிலாக அவ் இடங்களில் புண்களே உண்டு என்கிறார் வள்ளுவர்.

கண்ணுடையர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் - குறள்:  393

கண்ணாடியானது தனக்கு அடுத்திருப்பதை (உள் பக்கமாக இருப்பதை) புறத்தே காட்டும். அதுபோல உள்ளத்தின் குமுறலை கண்களே புறத்தில் காட்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். கண்ணாடியைப் போல பளபளப்பான உடல் உறுப்பு 'கண்' மட்டுமே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்    --குறள்  706

ஒளிவீசும் கண்களை ஒளிவீசும் நிலவுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். ஏற்கெனவே கண்ணைக் குறிக்கும் இன்னொரு சொல்லான 'நுதல்' என்பதை நிலவுடன் ஒப்பிட்டு 'பிறைநுதல்' என்று இலக்கியங்கள் கூறுவதைப் போல முகம் என்ற சொல்லையும் நிலவுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

மதி மருள் வாள் முகம் - கலி: 126
பெயல் சேர் மதி போல வாள்முகம் தோன்ற - கலி: 145
அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம் போல
மல்லல் நீர்த்திரை ஊர்பு மாலிருள் மதி சீப்ப - கலி: 148
தீங்கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் - கலி: 15
அணிமுகம் மதி ஏய்ப்ப - கலி: 64
அகல் மதி தீங்கதிர் விட்டதுபோல முகன் அமர்ந்து - கலி: 56
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி: 62
திங்கள் அன்ன நின் திருமுகத்து - அக: 253
முகனும் விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி - பரி: 19
நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போல
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் - புற: 67

மேற்காணும்  பாடல்களில் வரும் 'முகம்' என்ற சொல்லுக்கு 'கண்' என்ற பொருளே பொருந்தி வருவதை அறியலாம். ஏனென்றால் நமது உடல் உறுப்புக்களில் கண்களுக்கு மட்டுமே நிலவைப் போல ஒளிவீசும் தன்மை உண்டு; நிலவைப் போல இயற்கையான பால்போன்ற வெண்மை நிறமும் உண்டு. இவை மட்டுமின்றி, கீழ்க்காணும் பாடல்களிலும் முகம் என்ற சொல் கண் என்ற பொருளில் தான் வழங்கப்பட்டுள்ளது. கட்டுரையின் விரிவஞ்சி அனைத்துப் பாடல்களுக்கும் விளக்கம் கொடுக்கவில்லை.

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொலினதே அறம். குறள் - 93
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின் - குறள் - 92
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு குறள் - 224
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும். - குறள் - 707
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின் - குறள் - 708

தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு - ஐங்கு: 44
பழி தபு வாள்முகம் பசப்பு ஊர - கலி: 100
முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால்
முகம்போல ஒண்கதிர் தெறுதலின் - கலி: 2
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே - கலி: 7
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல
பாழ்பட்ட முகத்தொடு பைதல் கொண்டு - கலி: 5
முகம் திரியாது கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி - குறு: 252
மாதர் வாள்முகம் மதைஇய நோக்கே - அக:130
ஒளிகெழு திருமுகம்- மதுரை:448
சினவிய முகத்து சினவாது சென்று - நற்:100

வள்ளுவர் ஒருபடி மேலே போய் வானத்து மீன்களெல்லாம் நிலவு எது காதலியின் கண் எது என்று தெரியாமல் திக்குமுக்காடித் திரிவதாகக் கற்பனை செய்கிறார்.

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியில் கலங்கிய மீன் - குறள்-1116

அதுமட்டுமின்றி நிலவானது தனது காதலியின் கண் போல அழகாக ஒளி வீசுவதால் அதில் மயக்கமுற்று அந்த நிலவையும் தனது காதலியாகக் கருதிய ஒரு காதலன் நிலவை நோக்கி ' இனி நீ அனைவரும் காணும் வண்ணம் வானத்தில் தோன்றாமல் என் காதலியைப் போல எனக்காக மட்டுமே தோன்றவேண்டும்' என்று கட்டளை இடுகிறான்.

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி - குறள்: 1119

நிலவுடன் மட்டுமின்றி மலர்ந்திருக்கும் புதிய மலருடனும் பெண்களின் கண்ணை ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கம். அவ்வகையில் முகம் என்ற சொல்லையும் மலருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

பிரிந்தவர் நுதல் போல பீர் வீயக் காதலர்ப்
புணர்ந்தவர் முகம் போல பொய்கை பூ புதிது ஈன- கலி: 31
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த குவளை - கலி: 64
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசை பலவுடன்
ஒண் செங்காந்தள் அவிழும் - குறு: 284
தாதுபடு பெரும்போது புரையும் வாள்முகத்து - மதுரை: 711

முகம் என்ற சொல்லை யானையுடன் தொடர்புபடுத்தி பல சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. அவற்றில் 'புகர் முகம்' என்ற சொல்லாடல் பரவலாக உள்ளது.

புகர் முக வேழம் - ஐங்கு: 239, அக: 12, நற்: 158
புகர் முகக் களிறு - கலி: 45
யானைப் புகர் முகம் - கலி: 46, குறு: 284

இதில் வரும் புகர் என்பது கடுஞ்சினத்தால் அல்லது அச்சத்தால் யானையின் கண்களில் உண்டாகும் நிற மாற்றத்தைக் குறிப்பதாகும். இதைக் கபில நிறமென்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

புகர்¹ pukar  , n. perh. புகு¹-. [T. pogaru, M. pukar.] 1. Tawny colour, brown; cloud colour; கபிலநிறம். (பிங்.)

யானையின் கண்களின் நிறத்தைக் கொண்டு அது சினத்தில் அல்லது அச்சத்தில் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் வழக்கம் அக் காலத்தில் இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

முடிவுரை:

நுதல், மேனி, முலை, தோள், கூந்தல், எயிறு ஆகிய சொற்கள் கண்ணைக் குறிக்கும் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். இப் பட்டியலில் முகம் என்ற சொல்லும் இப்போது சேர்ந்துள்ளது.

முகம் என்ற சொல்லின் முதல்நிலைப் பொருள் கண் என்பதே ஆகும். இப் பொருளில் இருந்து பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்திருக்கக் கூடும் என்று கீழே காணலாம்.

முகம் = வதனம், கண்கள் அமைந்துள்ள தலையின் முன்புறப் பகுதி என்ற பொருளில் இடவாகுபெயராகத் தோன்றியுள்ளது.
முகம் = முகத்துதி = புகழ்ச்சி, பெண்களது கண்களின் அழகைப் பாராட்டுதல் என்ற பொருளில் இருந்து பொதுவாகப் புகழ்ச்சி என்ற பொருளுக்கு மாற்றமடைந்தது.
முகம் = நோக்கு, கண்பார்வை என்ற பொருளில் வழங்குகிறது.
முகம் = முன்பு, கண்களுக்கு முன்னால் உள்ளது என்ற பொருள்படுவது.
முகம் = தோற்றம், கண்களால் காணும் காட்சி என்ற பொருளில் வருவது.
.....................................................வாழ்க தமிழ்!..........................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.