திங்கள், 2 ஜனவரி, 2012

திருக்குறளில் தெய்வம் - பகுதி 2


தெய்வம் என்பது என்ன?

திருக்குற்ளில் வரும் தெய்வம் என்பது கடவுளையோ, விதியையோ குறிக்காது என்று திருக்குறளில் தெய்வம் - பகுதி 1 என்ற கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டோம். இனி இக்கட்டுரையில் வள்ளுவர் தெய்வம் என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று பல சான்றுகளுடன் காண்போம்.

தெய்வத்தின் பண்புகள்:

தெய்வம் என்பதைப் பற்றிக் கூறுகையில் வள்ளுவர் அத் தெய்வத்தின் தன்மைகளாக சிலவற்றைக் கூறுகிறார். ஒவ்வொரு குறளிலும் கூறப்பட்டுள்ள கருத்துக்களின் படி தெய்வத்திற்கு கீழ்க் காணும் பண்புகள் இருந்தாக வேண்டும். அப் பண்புகளைக்கொண்டு தெய்வம் என்பது யாரைக் குறிக்கிறது என்பதை அறுதி செய்ய முயல்வோம்.

1. குறள் 43 ல் உள்ளபடி, தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற வரிசையில் தெய்வமும் வருகிறது. இவற்றில் தென்புலத்தாராகிய நீத்தாரும், விருந்தினரும், சுற்றமும், தனது குடும்பமும் ஆகிய அனைத்தும் இயக்கமும் உருவமும் உள்ளவையே என்பதால் இவற்றுடன் வரும் தெய்வமும் இயக்கமுடைய உயிருள்ள ஒரு உருவமே  என்பது பெறப்படுகிறது.

2. தெய்வமானது இல்வாழ்வில் உள்ளவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவ்வகையில் இல்லறத்தவரால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய நீத்தாரும், விருந்தினரும், சுற்றத்தாரும், தனது குடும்பத்தினரும் ஆகிய அனைத்து மாந்தரும் கூறப்பட்டு விட்டதால் இனி எஞ்சியிருக்கும் தெய்வம் என்பது மனிதரைக் குறிக்காமல் ஏதேனும் ஒரு விலங்கினையோ பறவையினையோ குறிக்கலாம் என்பது பெறப்படுகிறது.

3. குறள் 702 ல், தெய்வமானது, மனிதர்கள் வெளிப்படையாகக் கூறாவிடினும் சூழலை குறிப்பால் அறிய வல்லது என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெய்வமானது மனிதருடன் நெருங்கிய தொடர்புடைய தோழமையுடைய ஒரு விலங்காகவோ பறவையாகவோத் தான் இருக்க முடியும் என்னும் கருத்து பெறப்படுகிறது.

4. குறள் 1023 ல், தெய்வமானது, தனது குடியை உயர்த்திட அயராது உழைப்பவரிடத்தில்  தானே முன்செல்லும் தன்மை உடையது என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெய்வமானது ஒரு பறவையாக இருக்க முடியாது என்பது பெறப்படுகிறது. ஏனென்றால் பறவைகள் சர்வ சுதந்திரம் மிக்கவை. அவை மனிதர்களைத் தாமே நாடி வருவது என்பது அரிதான செயல். பறவைகளில் காகங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தாலும் அவை பசிக்கு சோறுண்ணவே வரும். குடியை உயர்த்த உழைப்பவரின் தன்மை அறிந்து அவர்க்கு உதவ அவை தாமாகவே முன்வராது. அப்படியே வந்தாலும் அவற்றால் மனிதர்க்கு எவ்வித உதவியும் செய்ய இயலாது. ஆக, தெய்வம் என்பது ஒரு விலங்கு என்பதும் அதுவும் வீட்டிலேயே வசித்து மனிதர்க்கு உதவி செய்யும் ஒரு வீட்டு விலங்கு என்பதும் பெறப்படுகிறது. ஏனென்றால் வீட்டில் வசிப்பதாக இருந்தால் மட்டுமே அதனால் உதவி செய்ய எளிதில் முன்வர முடியும்.

5. குறள் 55 ல், தெய்வமானது, இல்லறத்தில் உள்ளவர்களால் குறிப்பாக மணமான பெண்களால் நாள்தோறும் தொழப்படுவது என்னும் கருத்து கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெய்வம் என்பது பசு மாட்டினைக் குறித்து வந்திருக்கலாம் என்ற கருத்து தோன்றுகிறது. ஏனென்றால் வீட்டில் ஆடு, எருமை, நாய், பூனை, பன்றி போன்றவைகளும் வளர்க்கப்பட்டாலும், பெண்களால் நாள்தோறும் தொழப்படும் சிறப்பு பசுவிற்கு ம்ட்டுமே இன்றுவரை இருந்து வருகிறது. தாய்க்கு இணையாக இன்னொரு தாயாக இருந்து மழலையர்க்கு பால் தந்து வளர்த்து வரும் ஒரே வீட்டு விலங்கு பசு மட்டுமே ஆகும்.

பிற ஆதாரங்கள்:

திருக்குறளில் வள்ளுவர் 'தெய்வம்' என்று குறிப்பிட்டுச் சொன்னது பசு மாட்டினையே என்னும் கருத்தினை மேலே கண்டோம். இக் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் சில ஆதாரங்களையும் வள்ளுவர் கூறியுள்ளார். அவற்றையும் பார்ப்போம்.

அமிர்தம் தரும் பசு: 

குறள் 50 ல், இல்லற வாழ்வினை அறநெறிப் படி வழுவாமல் வாழ்ந்து பிறர்க்கு உதவியாக இருப்பவனை தெய்வத்திற்கு சமமானவன் என்று வள்ளுவர் கூறுகிறார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

வெறுமனே தெய்வம் என்று கூறாமல் 'வான் உறையும்' தெய்வம் என்று அடை கொடுத்துச் சிறப்பிக்கிறார் வள்ளுவர். இதில் வரும் 'வான்' என்பதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.

வான் என்ற சொல்லுக்கு சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கீழ்க்காணும் பொருட்களைக் கூறுகின்றது..

, n. 1. [T. vāna, K. bāna, M. vānu.] Sky, the visible heavens; ஆகாயம். வானுயர் தோற்றம் (குறள், 272). 2. Primordial matter; மூலப்பிரகிருதி. வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 3. Cloud; மேகம். ஏறொடு வான் ஞெமிர்ந்து (மதுரைக். 243). 4. Rain; மழை. வான்மடி பொழுதில் (பெரும் பாண். 107). 5. Celestial world; தேவருலகு. வான்பொரு நெடுவரை (சிறுபாண். 128). 6. Ambrosia; அமிர்தம். வான்சொட்டச் சொட்ட நின் றட்டும் வளர்மதி (தேவா. 586, 1). 7. Heaven; மோட்சலோகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10, 6, 5). 8. Goodness; நன்மை. வரியணி சுடர் வான் பொய்கை (பட்டினப். 38). 9. Greatness; largeness; பெருமை. (பிங்.) இருடூங்கு வான்முழை (காசிக. காசியின்சிறப். 13). 10. Beauty; அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித். 103). 11. Strength; வலிமை. (பிங்.) 12. Regularity; நேர்மை. வானிரைவெண்பல் (கலித். 14). 13. A kind of tree; மரவகை. (பிங்.)

மேற்காணும் பொருட்களுள், வான் என்பதனை அமிர்தம் என்ற பொருளில் வள்ளுவர் இக் குறளில் கையாண்டுள்ளார். இங்கு அமிர்தம் என்று வள்ளுவர் குறிப்பிடுவது பசும்பால் ஆகும். ஆம், அமிர்தம் என்பதற்கு பசும்பால் என்ற பொருள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

*அமிர்தம் amirtam
, n. < a-mṛta. 1. Immortality; அழிவின்மை. 2. Ambrosia, nectar, as conferring immortality; தேவருணவு. தோ ளான் . . . அமிர்த மன்னாளை யெய்தி (சீவக. 268). 3. Pleasantness, agreeableness; இனிமை. அமிர் தங்கொள வுயிர்க்குங் கருங்கா ழகிலி னறும்புகை (சீவக. 349). 4. Food; உணவு. தந்தவ ளமிர்த மூட்ட வுண்டு (சீவக. 1178). 5. Water; நீர். (W.) 6. Cow's milk; பசுவின்பால். (தைலவ. தைல. 1.) 7. Unsolicited alms; யாசியாமற் கிடைக்கும் பிட்சை. ஒன் றிரவாமல் வருவதே அமிர்தம் (காஞ்சிப்பு. ஒழுக். 36). 8. Final liberation; மோக்ஷம்.

ஆக, வான் உறையும் தெய்வம் என்பது அமிர்தமாகிய பால் பொதிந்திருக்கும் பசு என்று விளக்கம் பெறும்.  அறநெறிப்படி இல்வாழ்க்கை வாழ்ந்து யாருக்கும் துன்பம் செய்யாமல் பிறருக்கு உதவிகள் செய்பவனை பசுவுக்குச் சமமாக வள்ளுவர் இக் குறளில் கூறுகிறார். இது ஏன் என்று பார்ப்போம்.

1. பசுவானது மிக அமைதியான விலங்கு; யாருக்கும் தீங்கிழைக்க நினைக்காதது. அதே போல அறநெறிப்படி வாழ்பவனும் பிறருக்குத் தீங்கிழைக்க மாட்டான்.

2.  பசுவானது எவ்வித எதிர்பார்ப்புமின்றி பிறருக்குப் பாலைத் தருகிறது. அதைப்போல அறநெறிப்படி வாழ்பவனும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி பிறருக்கு உதவிகள் செய்வான். மேலும் எப்படி பசுவிடத்தில் உள்ள அமிர்தம் அதற்கில்லாமல் பிறருக்கே பயன்படுகின்றதோ அதைப்போல வாழ்வாங்கு வாழும் அறநெறியாளனிடத்தில் உள்ள செல்வமும் அவனுக்கன்றி பிறருக்கே பயன்படுகிறது.

இப்படி பல நற்பண்புகளால் ஒத்திருப்பதால் தான் வையத்துள் அறநெறிப்படி வாழ்வாங்கு வாழும் இல்லறத்தானை பசுவுக்குச் சமமாகக் கூறுகிறார் வள்ளுவர்.

குறிப்பறியும் பசு:

பசுக்கள் குறிப்பறிந்து நடப்பதில் வல்லவை என்று குறள் 702 கூறுகிறது.  தன்னை வளர்ப்பவரின் குணநலன்களை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல செயல்பட வல்லது பசு. அதுமட்டுமின்றி, தன்னை வளர்ப்பவருக்கு துன்பம் நேர்ந்தாலோ, நேரப்போகிறது என்றாலோ, அதை அறிந்து அதற்காகக் கண்ணீர் விட்டு அழும் பண்புடையது பசு.

மனிதருக்காக பசுக்கள் கண்ணீர் விட்டு அழுகின்ற ஒரு காட்சியினை சிலப்பதிகாரத்தில் காட்டுகிறார் ஆசிரியர். கண்ணகி ஆயர்பாடியில் தங்கி இருந்த போது, அவளுக்கு உண்டாகப் போகும் பேரவலத்தை எண்ணி அங்கிருந்த பசுக்கள் எல்லாம் கண்ணீர் விட்டு நடுங்கிக் கொண்டிருந்தன என்று கூறுகிறார்.

' நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும் ' - ஆய்ச்சியர் குரவை.

இதே போன்ற ஒரு செய்தி திருமூலர் வரலாற்றிலும் உண்டு. மூலன் என்னும் இடையன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது திடீரென இறந்து விடுகிறான். அவன் இறந்து போனதை அறிந்த பசுக்கள் எல்லாம் கண்ணீர் வடித்து அழுது கொண்டிருந்தன. அதைக் கண்ணுற்ற சுந்தரநாதர் என்னும் முனிவர் பசுக்களின் கண்ணீரைத் துடைக்கக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை மூலம் தனது ஆவியை மூலனின் உடலுக்குள் செலுத்தி அவனை உயிர்பெறச் செய்தார் என்பது வரலாறு.

இப்படி வெளிப்படுத்தப்படாத உண்மைகளையும் பசுக்கள் குறிப்பினால் அறிந்து கொள்வதால் தான், ஐயத்திற்கு இடமில்லாத வகையில் ஆசிரியரது அல்லது தலைவரது கருத்தினை முகம் அல்லது கண்களைக் கொண்டு குறிப்பால் அறிந்து கொள்ளும் திறமை உடையவனை பசுவுக்குச் சமமானவனாகக் கருத வேண்டும் என்று குறள் 702 ல் கூறுகிறார் வள்ளுவர்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

தானே பால் சொரியும் பசு:

அதுமட்டுமின்றி, தன்னுடைய குடியினை மேம்படுத்த அயராது உழைக்கும் ஒருவனுக்கு, அவனது நல்லெண்ணத்தைக் குறிப்பால் அறிந்த பசுவானது தானே மனமுவந்து முன்வந்து பாலைச் சொரியும் என்று 1023 ம் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். - 1023

இக் குறளில் வரும் 'மடிதற்று' என்பதற்கு 'ஆடையினை இறுகக் கட்டிக்கொண்டு' என்று பொருள் கூறியுள்ளனர் உரை ஆசிரியர்கள். இவ் உரை இக் குறளுக்குப்பொருந்தாது என்று முதலாம் பகுதியில் கண்டோம். மேலும் 'தறுதல்' என்ற வினைச்சொல் இருப்பதாகவோ 'தற்று' என்பதற்கு 'தரித்துக்கொண்டு' என்ற பொருள் இருப்பதாகவோ எந்த அகராதியும் கூறவில்லை. எனவே மடிதற்று என்பதில் பிழை இருப்பது தெரிகிறது. 'மடிதற்று' என்பதற்குப் பதிலாக 'மடிதுற்று' என்று வந்திருக்க வேண்டும். துறுதல் என்ற வினைச்சொல்லுக்கு நிறைதல் என்ற பொருள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

துறு, (p. 611) [ tuṟu, ] கிறது, துற்றது, ம், துற, v. n. To be thick, crowded, full, நெருங்க. 2. To be closed, குவிய. (p.)

துறு என்ற வினைச்சொல்லில் இருந்து துற்று என்ற வினையெச்சம் பிறக்கிறது.

துறு --------------> துற்று
(நிறை)                ( நிறைந்து)

மடிதுற்று என்றால் மடிநிறைந்து என்று பொருள். 'மடிதுற்றுத் தான் முந்துறும்' என்றால் 'மடிநிறைந்து பாலைச்சொரிய தானே முன்வரும்' என்று பொருள். பொதுவாக பசுவிடம் பால் கறக்க வேண்டுமென்றால் நாம் தான் பசு இருக்கும் இடத்தைத் தேடிச்சென்று அதை ஒருவழியாக சம்மதிக்க வைத்துப் பால் கறக்க வேண்டும். ஆனால் நல்வழியில் குடியினை மேம்படுத்த முயல்பவருக்கு உதவி செய்யும் விதமாக பசுவே முன்வந்து பால் தரும் என்கிறார் வள்ளுவர். உண்மை தானே!.

பசுவும் எருதும்:

தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அமிர்தம் போன்ற உணவான பாலைத் தருவதால் மக்களால் போற்றப்படும் பெருமை உடையது பசு. இதன் பாலை நாள்தோறும் உணவாக உட்கொள்ளுவதால் பசுவைத் தூயமையாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். இதற்கென தனியாக தொழுவங்கள் அமைத்து அதை நல்ல முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும். நமது உடல் நலத்தைப் பேணிக் காப்பதில் பசும்பாலுக்கு இன்றியமையாத இடம் இருப்பதால் அதைத் தரும் பசுவினை இன்னொரு தாயாகக் கருதி பெண்கள் தொழுகின்றனர். இதனால் தான் இல்லறத்தில் உள்ளோர் பசுக்களைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் என்று குறள் 43 ல் கூறுகிறார் வள்ளுவர்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

ஒரே இனமாக இருந்தாலும் பசுவின் ஆண்பாலான எருதிற்கு இந்த சிறப்புக்கள் உண்டா எனில் இல்லை என்றே கூறலாம். ஆம், பசுவைப் போல பெருமை உடையதல்ல எருது; இருந்தாலும் எருதானது தனது முயற்சியால் மெய் வருத்தி உழைக்க வல்லது. வேளாண்மையில் வயல்களை உழுவதற்கும் வண்டியில் பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்கும் எருதே பயன்படுகிறது. பிறப்பினால் பசுவைப் போன்ற பெருமை தனக்கில்லை என்ற போதிலும் தனது முயற்சியினால் மெய் வருத்தி உழைத்து தனக்குப் பெருமை தேடிக்கொள்கிறது. இதனால் தான் உழவர் திருநாளாகிய தைப்பொங்கல் திருநாளில் எருதுகளுக்கு சிறப்பு மரியாதை செய்யப்படுகிறது. கீழ்க்காணும் குறளில் இதைத்தான் கூறுகிறார் வள்ளுவர்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். - குறள் 619:

இக் குறளின் பொருள் காண கீழ்க்காணும் வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

தெய்வத்தான் ஆகாதெனினும் = தெய்வத்து + ஆன் + ஆகாது + எனினும்

இது ஒரு தொகைநிலைத் தொடராகும்.  அதாவது இத் தொடரில் 'தெய்வத்து' என்ற சொல்லை அடுத்து 'ஐ' என்ற இரண்டாம் வேற்றுமை உருபும், 'போல' என்ற உவம உருபும் வெளிப்படையாக வராமல் மறைந்து வந்துள்ளன. இதில் வரும் ஆன் என்பது எருதினைக் குறிப்பதாகும். சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி.

, n. < ஆ&sup8;. [M. ān, T. āvu.] 1. Female of the buffalo, ox or deer; எருமை, பெற்றம், மரை இவற்றின் பெண். (திவா.) 2. Ox; இடபம். ஆன்முகத்த னடற்கண நாயகன் (கந்தபு. பானு கோ. 95).

எனவே,

தெய்வத்தான் ஆகாதெனினும் = தெய்வத்து + ஆன் + ஆகாது + எனினும்
                                                       = தெய்வத்தை (பசுவை) ப் போல எருது ஆகாது எனினும்

என்று பொருள்படும்.

இனி இக் குறள் மூலம் வள்ளுவர் கூற விழையும் கருத்து: ' (பிறப்பால்) பசுவினைப் போல எருதானது (சிறப்புடையது) ஆகாது என்றாலும் அது தன் முயற்சியால் மெய்வருத்தி உழைத்திட பெருமை பெறும். அதைப் போல பிறப்பினால் ஒருவருக்குப் பெருமை இல்லாமல் போனாலும் முயன்று செய்யும் வினையினால் அப் பெருமையினைப் பெறலாம். '

இக் குறளின் கருத்தை நோக்கும் பொழுது இதற்குத் துணையாக அமைவதைப் போல கீழ்க்காணும் குறளும் நினைவுக்கு வருகிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். - 972.

பசு வழிபாடு:

இதுவரை கண்ட பல சான்றுகளில் இருந்து திருக்குறளில் தெய்வம் என்று வள்ளுவர் குறிப்பிட்டது பசுவினைத் தான் என்பது உறுதி செய்யப்படுகிறது. வள்ளுவர் பசுவினைப் போற்றி இருப்பதால் வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடு இருந்ததா?. பசு வழிபாடு பற்றிக் கூறுவதால் வள்ளுவர் இந்து சமயத்தைச் சார்ந்தவரா?. என்றெல்லாம் கேள்விகள் எழலாம். இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்.

                                                                                    ............. தொடரும்.

9 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான கட்டுரை.
    பல புது தகவல்கள் புதிய பார்வை புரிதலைத் தரும் பதிவு
    மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பரே, உங்களது முந்தைய கருத்துக்களை நான் நீக்கியதன் காரணம், உங்களை சினப்படுத்தவோ புறந்தள்ளவோ அல்ல. அப்படி செய்தாலாவது ஏன் நீங்கள் என் கருத்துக்களை நீக்கினீர்கள் என்று கேட்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. பரவாயில்லை.

      நான் அலகையாய் இருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நான் அலகையாய் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான் நண்பரே. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக்குகிறேன். உங்களுக்கு என் கட்டுரைகளில் ஐயங்கள் இருந்தால் தயவுசெய்து கேளுங்கள். விடை கூறுகிறேன். கருத்தை மறுக்கிறீர்கள் என்றால் ஆதாரங்களை முன்வையுங்கள். உங்க ஆதாரங்கள் சரியாய் இருந்தால் நான் எனது கருத்தை மாற்றிக்கொள்ள எப்போதும் தயார். புரிதலுக்கு மிக்க நன்றி நண்பரே.
      உங்களை நான் நோகடித்திருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள்.
      அன்புடன்,
      தி.பொ.ச.

      நீக்கு
  4. தனக்கு உவைமை
    இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்

    வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை...
    “Say he is Allah one and only

    Chandogya Upanishad, Prapathaka(Chapter) 6, Khanda(Section)2, Shloka(Verse) 1 “Ekam evaditiyam”, “He is one only without a second”

    Svetasvatara Upanishad, 4:19
    Adhyaya(Chapter) 4, Shloka(Verse) 19, “Na tasya pratima asti” “There is no likeness of him”.

    quran 112:4 And there is none like unto him”.

    பதிலளிநீக்கு
  5. பசு இறந்து விட்டால் , இறைவன் இறந்து விட்டான் என்று ஆகுமா ?

    "தனக்கு உவமை இல்லாதான்" என்றால் ஒன்றுதான் இருக்க முடியும் , பல் பசு மாடு இருக்க முடியாது ,

    மனிதனின் அறிவு ஆற்றல் எங்கே , இந்த விலங்கின் ஆற்றல் என்ன ? பெரிய வித்யாசம் இருக்கிறது ,

    இவ்வளவு பெரிய பூமி , விலங்கு , மரம் ,என்று அனைத்தையும் படைத்தவன் ஆற்றல் எப்படி இருக்கும் ?

    மனிதன் சந்தோசமாக வாழ்வதற்கு இறைவன் பூமியில் பல விலங்குகளை படைத்தது இருக்கிறார் , எந்த ஒரு விலங்கும் , வணங்க தகுதியானது இல்லை , ஆடு , குதிரை , ஒட்டகம் , நாய் , யானை , அனைத்தும் மனிதன் சந்தோசமாக வாழ்வதற்கு இறைவன் செய்த ஏற்பாடு , இறைவன் வேற விலங்கு வேற ,

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.