யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பதை திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
- புறம்: 192
விளக்கமும் திருத்தமும்:
எல்லா ஊரும் எனது ஊரே; எல்லா மக்களும் எனது உறவினர்களே.
- இந்தப் பாடலின் நோக்கத்தை இந்த முதல்வரி தான் பறைசாற்றி நிற்கிறது. இந்த வரி எவ்வாறு சரி என்பதை விளக்கத்தான் இந்த முழுப்பாடலும் எழுதப்பட்டுள்ளது. எல்லா ஊரையும் ஏன் உங்கள் ஊர் என்று சொல்கிறீர்? எல்லா மக்களையும் ஏன் உங்கள் உறவினர் என்று சொல்கிறீர்கள்? வெறும் பேச்சுக்கு வேண்டுமானால் நீங்கள் இவ்வாறு கூறுவது நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இதெல்லாம் சரிப்பட்டு வருமா? மற்ற ஊர் மக்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?. உங்கள் கூற்றை சரி என்று நீங்கள் உறுதிசெய்ய இயலுமா?. இதுபோன்ற கேள்விகள் இந்த முதல்வரியினைப் படிக்கின்ற அத்தனை பேருக்கும் எழும் என்பது புலவருக்குத் தெரியும். அதனால் தான் அடுத்தடுத்த வரிகளில் இக் கேள்விகளுக்கான விடையினை வைக்க முயல்கிறார் புலவர். ஆனால்.......
தீமையும் நன்மையும் பிறரால் விளைவதில்லை.
- முதல் வரியே மகா குழப்பம். இதில் இரண்டாம் வரியில் இன்னும் குழப்புகிறாரே. தீமையும் நன்மையும் பிறரால் வருவதில்லையாம். பின் யாரால் வருகிறதாம்?. நம்மாலா? அதாவது நாம் செய்யும் வினைகளால் தான் நமக்கு நன்மையும் தீமையும் வருகிறது என்று சொல்ல வருகின்றாரா?. ஆனால், உண்மை அப்படி இல்லையே. பிறருக்குத் தீமையே செய்யாத ஒருவருக்கு தீமை வரத்தான் செய்கிறது. பிறருக்கு நன்மையே செய்யாத ஒருவருக்கு நன்மையும் வரத்தான் செய்கிறது. இதை நாம் கண்கூடாக வாழ்க்கையில் பார்க்கிறோம். அப்படியென்றால் இதற்கு என்னதான் பொருள்?. சரி சரி பொறுமையாக மூன்றாம் வரியினைப் பார்ப்போம்.
வறுமைப்படுதலும் செல்வம் நிறைதலும் அவ்வாறே.
- வறுமைப்படுதலை நோதலென்றார். ஆம், வறுமையினை விடக் கொடிய நோய் ஒன்று உண்டா?. அனைத்துத் துன்பங்களுக்கும் அடிப்படை ஆதாரமே இந்த வறுமை தானே. செல்வம் நிறைதலை தணிதலென்றார். ஆம், செல்வம் இருந்தால் தானே வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். இந்த வறுமையும் செல்வமும் கூட பிறரால் வருவதில்லையாம். அப்படியென்றால், ஒருவன் பிச்சைக்காரனாய் வாழ்வதற்கும், செல்வந்தராய் இருப்பதற்கும் காரணம் என்ன?. பொறுமையாக அடுத்த வரியில் அதற்கான விடையினைத் தேடுவோம். (நோதல் = வறுமைப்படுதல். தணிதல் = நிறைதல். அகராதி காண்க.)
சாவு என்பது புதுப்பிக்கத் தக்கதல்ல.
- ஆ, எவ்வளவு உண்மையான கருத்து !!!. நமது ஓட்டுநர் அடையாள அட்டையினை அதன் தேதி முடிந்ததும் புதுப்பிக்கிறோம். நமது வெளிநாட்டுக் கடவுச்சீட்டினையும்
அதன் தேதி முடிவடைந்தால் புதுப்பிக்க முடிகிறது. இதுபோல பலவற்றை ஏன் நமது இளமையைக் கூட புதுப்பிக்க முயல்கிறோம். ஆனால், இந்த சாவினை மட்டும் நம்மால் புதுப்பிக்க முடிவதில்லையே. ஏன் நம்மால் சாவினை தள்ளிப்போட முடியவில்லை?. வாழ்நாள் என்னும் சீட்டில் எழுதப்பட்டுள்ள கடைசி தேதியை முடிவு செய்தது யார்?. விடைதெரியாத இக் கேள்விகளுக்கு விடையைக் காண அடுத்த வரிக்குச் செல்வோம். (புதுவுதல் = புதுமையாக்குதல் / புதுப்பித்தல்)
இல்வாழ்க்கை இனிமையானது என்று நான் மகிழவும் இல்லை;
- இல்வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். நன்மை விளையும் போது மகிழ்வதும் தீமை விளையும் போது வருந்துவதும் மனித உயிரின் இயல்பு தான். ஆனால், இங்கு புலவர் தனது இல்வாழ்க்கையினை எண்ணிப் பார்த்து இவ்வாறு சொல்கிறார். இல்வாழ்வில் தனக்கு எல்லையற்ற இன்பங்கள் கிடைத்த போதும் கூட தனது மனம் மகிழவில்லை என்கிறார். சரி, அவரது குடும்ப விசயங்களை ஏன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்?. இதனால் யாருக்கு என்ன பயன்?. இன்னும் கீழே இறங்கி பார்ப்போம்.
துறவு துன்பமானது என்று நான் வருந்தவும் இல்லை.
- இம்மை எனப்படும் இல்லறத்தில் தனது 60 அகவை வரை மனைவியுடனும் மக்களுடனும் வாழ்ந்து முடித்துவிட்டு இப்போது மறுமை எனப்படும் துறவற வாழ்வில் ஈடுபட்டுள்ள புலவர் இவ்வாறு கூறுகிறார். உண்மையில் இல்லறத்தைக் காட்டிலும் துறவறத்தில் இடையூறுகள் பல உண்டு. முதல் இடையூறு தனிமை. இல்லறத்தில் பலருடன் அளவளாவி வாழ்ந்த ஒருவருக்கு இந்தத் தனிமையினை எதிர்கொண்டு வெல்வதென்பது மிகக் கடினமான செயல். இரண்டாவது இடையூறு உணவு. என்னதான் துறவியானாலும் உடல் இருக்கும் வரை பசிக்கு உணவு வேண்டுமே. காட்டிலும் மலையிலும் வாழும் துறவிகளுக்குத் தான் தெரியும் அங்கே உணவு பெறுவது எவ்வளவு கடினமானதென்று. இதுபோக பருவகால மாற்றங்கள், விலங்குகள் என்று பல்வேறு இடையூறுகள் உண்டு. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு சமாளித்து வாழ்வதற்குக் கலங்காத உள்ளம் வேண்டும். ஆனால் புலவர் தனது இல்வாழ்வில் இன்பத்தைக் கண்டு மயங்காததால் துறவறத்தின் துன்பங்கள் அவரைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது. ம்ம்.. இப்போது தான் மெல்லப் புரியத் துவங்குகிறது. இன்னும் அடியில் செல்வோம்.
மின்னலுடன் மழையானது ஒருதுளியாகத் துவங்கி தொடர்ந்து பெய்ததால்
- அனைத்து உயிர்களின் தோற்றமும் ஒரு புள்ளியில் தான் என்பதைப் போல இந்த மழையும் ஒரு துளியில் தான் தோன்றுகிறது. பூமியில் இருக்கும் நீர் கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகி மிதக்கிறது. இந்த மேகங்களில் மின்னல் ஏற்பட அவை மழைத்துளியாகி அவையெல்லாம் ஒன்று சேர்ந்து மழையாகி மீண்டும் பூமியை நோக்கி விழுகிறது. சரி சரி இதெல்லாம் தெரிந்தது தானே, இதை ஏன் இங்கே சொல்ல வேண்டும்?. அடுத்த வரிக்குச் செல்வோம்.
பாறைகளில் மோதிக் கீழிறங்கிய நீர் வலிமையானதோர் காட்டாறாய் மாற
- ஆ, இது தான் மிக இன்றியமையாத வரி. வலிமையே இல்லாமல் காற்றில் மிதக்கின்ற ஒரு மேகமானது மழைத்துளியாய் மாறியதும் அதற்கு லேசாக ஒரு ஆற்றல் உருவாகிறது. இத்துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அதன் ஆற்றல் பெருகுகிறது. இதனால் பூமியை நோக்கி அது இழுக்கப்படுகிறது. பூமியை வந்தடைந்த இவை சிறு ஓடைகளாய் உருவெடுத்து மீண்டும் பல்கிப் பெருகுவதால் வலிமையானதோர் ஆற்றல் பொருளாய் அதாவது ஒரு காட்டாறாய் மாறுகிறது. பெரிய பெரிய பாறைகளைக் கூட இடம்பெயரச் செய்யும் இந்த அளப்பரிய ஆற்றல் நீருக்குக் கிடைத்தது எவ்வாறு?. நீரானது பூமியின் மேல் பரப்பிலேயே இருந்திருந்தால் இந்த வலிமை அதற்குக் கிடைத்திருக்குமா? ஒருபோதும் இல்லை தானே. இந்த நீருக்கு ஒரு இயக்க ஆற்றலைக் கொடுத்தது எது?. பூமிதான்; பூமியின் ஈர்ப்பு விசைதான். சரி, அடுத்த வரியில் என்ன சொல்கிறார் பார்ப்போம்.
அந்நீரில் சிக்கிய படகின் போக்கினைப் போல
- அளப்பரிய ஆற்றல் கொண்ட ஒரு காட்டாற்றிலே ஒரு படகு சிக்கிக்கொண்டால் அதன் கதி என்னவாகும்?. படகோட்டியின் விருப்பத்திற்கேற்ப படகினை அப்போது ஓட்டிச் செல்ல முடியுமா?. முடியாது. காட்டாற்றின் போக்கில் தான் படகு பயணிக்க முடியும். அங்கே அப்போது படகோட்டியின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போகும். ஆனால் அதே ஆறு காட்டாறாக மாறுவதற்கு முன்புவரை அந்த ஆற்றில் தான் விரும்பிய வண்ணம் படகோட்டியானவன் படகினை ஓட்டிக்கொண்டு தானே இருந்தான். இப்போது ஏன் அவனால் முடியவில்லை?. ஏனென்றால் அப்போது அவனது முயற்சிகளை வெல்லும் ஆற்றல் ஒன்று இல்லை. இப்போது இருக்கிறது, காட்டாற்றின் வடிவாக. தனக்கு எதிராக தன்னை வெல்லும் பேராற்றல் ஒன்று மெல்லமெல்ல உருவாகி வருவதை அதுவரை அவனாலேயே அறிய முடியவில்லை பாருங்கள். இதை என்னவென்று சொல்வீர்கள்?. புலவர் இதை என்னவென்று சொல்கிறார்?. வாருங்கள் அடுத்த வரியில் பார்ப்போம்.
மன்னுயிர் விதியின் போக்கில்தான் இயங்கும் என்பதனை
- ஓ, இதைத்தான் புலவர் விதியென்று சொல்கிறாரா?. அதாவது உயிர்களின் இயக்கமானது பார்ப்பதற்குத் தன்னிச்சையாக நடப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவை விதியின் ஆளுமைக்குட்பட்டுத் தான் நடப்பதாகக் கூறுகிறார் புலவர். காட்டாறு உருவாகும் வரை அதுபற்றி அந்த படகோட்டி அறிந்திருக்காததைப் போல ஒரு செயல் நடவாத வரை விதியானது தன்னை மறைத்தே வைத்திருக்கும். செயல் நிகழும்போது தான் விதியின் வலிமையை நம்மால் உணரமுடிகிறது. விதியால் நிகழ்த்தப்படும் ஒரு செயல் சிலருக்கு நன்மையினையும் அதேசமயம் சிலருக்குத் தீமையினையும் தருகிறது. இங்கு தீமையோ நன்மையோ விதி ஒன்றுதான்; செயலும் ஒன்றுதான். ஆனால், விளைவுகள் இரண்டு. இடம், நேரம், சூழல் என்று அந்த செயலுடன் தொடர்புடையவை மூன்று. ஆக, ஒரு செயல் ஒரு சூழலில் நமக்கு நன்மை தருமா தீமை தருமா என்பதனை அந்த விதி தான் தீர்மானிக்கிறது என்கிறார். சரி, விதியின் இந்த அளப்பரிய ஆற்றலை அவர் எவ்வாறு அறிந்தார்?. அடுத்த வரியைப் பார்ப்போம்.
வெளியிடத்திலே (நிகழ்ந்த) ஓர் காட்சியின் மூலமாகக் கண்டு தெளிந்தோம் ஆகையால்
- திறந்த வெளியிடத்திலே நிகழ்ந்த ஓர் காட்சியினைக் கண்டு அதன்மூலமாக விதியின் வலிமை பற்றிய தெளிவினைத் தான் பெற்றதாகச் சொல்கிறார். அப்படி அவர் கண்ட காட்சி எது?. அது தான் கோடைமழைக் காட்சி. இக் கட்டுரையின் முதல் பகுதியில் விரிவாகக் கூறப்பட்ட மழை நிகழ்ச்சி. மலையில் நிகழ்ந்த மழை நிகழ்ச்சியும் அதனால் உண்டான விளைவுகளும் புலவருக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. யாரும் எதிர்பாராதவண்ணம், அதுவரை பழங்களை உண்டு மகிழ்ந்திருந்த குரங்குகளும், மீன்பிடித்து மகிழ்ந்திருந்த படகோட்டிகளும் திடீரெனத் தோன்றிய மழை வெள்ளத்தில் காணாமல் போனது அவரை சிந்திக்கத் தூண்டியது. இந்த மழை வெள்ளத்தின் அளப்பரிய ஆற்றலை இப்பாடலில் விதியின் ஆற்றலுடன் ஒப்பிடுகிறார். ( திறவோர் = திறவு + ஓர். திறவு = வெளியிடம். அகராதி காண்க.)
பெரியோரின் சிறப்பற்ற கீழ்ச்செயல் கண்டு வியப்பதும் இல்லை;
- மேன்மை மிக்க பெரியோர்கள் செய்யும் செயல்கள் யாவும் நற்செயல்கள் தான். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை தான். ஆனால் அத்தகைய மேன்மை தாங்கிய பெருமக்கள் ஒருநாள் தமது பெருமை குன்றுமாறு இழிசெயல் புரிந்தால் என்னவாகும்?. என்னது? அவரா? அவரா இந்த மாதிரிக் காரியம் செய்தார்? என்னால் நம்பவே முடியவில்லையே.!. என்று வியப்படைகிறோம் அல்லவா?. இவ்வாறு வியப்படைவது உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் அவ்வாறு வியப்படைய மாட்டேன் என்கிறார். ஏன்? ஏனென்றால், பெரியோரின் இச் செயலுக்குக் காரணம் அவரல்லர். விதி, விதி தான் காரணம். ஆம், விதிவசத்தால் தன் மதியிழந்து அவர் செய்யும் செயலே இந்த இழிசெயல் என்கிறார். எவ்வளவு பெரிய மனிதரும் விதியின் கைப்பாவை ஆகிவிட்டால் அவர் கதி அதோ கதிதான் என்பதை நாமும் பல கதைகளில் படித்திருக்கிறோம். பெரியோரின் இழிசெயலுக்குப் பின்புலமாக விதி இருக்கும் காரணத்தினால் தான் புலவர் அச்செயல் கண்டு தான் வியப்படைவதில்லை என்கிறார். சரிதானே?. (மாட்சியில் = மாட்சி + இல் = மாட்சியற்ற )
சிறியோரின் நற்செயல் கண்டு இகழ்வதும் இல்லை.
- கீழ்க்குணம் மிக்க சிறியோரின் செயல்கள் அனைத்தும் தீய செயல்களாகத் தான் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். தனது வாழ்க்கை முழுவதும் பிறருக்குத் தீமையே செய்து வந்த ஒருவன் திடீரென்று நல்லவனாகி நன்மை செய்யத் துவங்கினால் என்னவாகும்?. என்னது? அவனா?. அவனாவது நல்லது செய்றதாவது!. என்று அவன் செய்த நல்ல காரியத்தையும் இகழ்ச்சியாகவே மக்கள் பேசுவர். இதுவும் உலக இயல்பு தான். ஆனால் நம் புலவர் இதிலும் மாறுபடுகிறார். தான் அவ்வாறு இகழமாட்டேன் என்கிறார். ஏன்?. ஏனென்றால் இதுவரை தீமையே செய்த வந்த ஒருவன் நல்லவனாய் நற்செயல்கள் புரிவதும் விதியினால் தான் என்கிறார். ஆம், நல்ல மதியினைக் கெடுக்க வல்லதும் கெட்ட மதியினை திருத்த வல்லதும் இந்த விதி என்கிறார் புலவர். ஒருவகையில் பார்த்தால் இந்த விதியானது வள்ளுவர் சொன்ன மழை போலத்தான் இருக்கிறது. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை என்று கூறிய வள்ளுவர் வாக்கு இங்கு பொருத்தமாய் அமைவதைப் பாருங்கள்.
பாடலின் சாரம்:
இனி, இப்பாடலின் மூலமாக புலவர் கணியன் பூங்குன்றனார் கூற வருகின்ற கருத்தின் சாரத்தினைக் கீழே காணலாம்.
ஒருவருக்கு வரும் நன்மையும் தீமையும் பிறரால் வருவதில்லை; மாறாக விதிவசத்தாலே வருகின்றது. ஒருவரின் வறுமை நிலையினையும் செல்வநிலையினையும் கூட இந்த விதிதான் முடிவு செய்கிறது. ஒருவரது வாழ்க்கை இனிமையானதாக இருப்பதும் துன்பம் நிறைந்ததாக இருப்பதும் அதே விதியினால் தான். சாவும் கூட முன்னரே விதியினால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றுதான். நல்லோரின் மதியினைக் கெடுத்து தீமை செய்ய வைக்கவும் தீயோரை நல்வழிப்படுத்தி நன்மை செய்ய வைக்கவும் இந்த விதியினால் முடியும். ஆம், இந்த விதியானது மிக மிக மிக வலியது. இதை வெல்லவே முடியாதா? முடியும்!
என்றால் விதியை வெல்லும் வழிதான் என்ன?. அது தான் ஒற்றுமை. ஆம், ஒற்றுமை ஒன்றே விதியின் வலிமையைக் குறைக்க வல்லது.
இது எப்படி சாத்தியமாகும்?. முதலில் விதி எவ்வாறு வலிமை பெறுகிறது என்று பாருங்கள். இதற்கு இப் பாடலில் வரும் காட்டாற்றினையே சான்றாக எடுத்துக் கொள்வோம். பூமியில் பொழியும் மழைநீர் முதலில் சிறு சிறு ஓடைகளாய்த் தான் உருவெடுக்கிறது. பின்னர் இவை ஒன்று சேர்ந்து ஒரு வலிமை மிக்க காட்டாறாய் மாறுகிறது. இந்த மாற்றத்திற்கு ஊன்றுகோலாய் இருப்பது புவி ஈர்ப்பு விசை தான். அதைப்போல மனிதர்கள் நிலத்தால் இனத்தால் மொழியால் பிரிந்திருந்தாலும் அன்பு என்னும் ஈர்ப்பு விசையினால் ஒன்றாக்கப் பட்டால் மனித ஆற்றல் வலிமை பெறும். ஒற்றுமையால் வலிமை பெற்ற மனித ஆற்றலை விதியினால் அசைக்க முடியாது. இது எப்படி?. மீண்டும் பாடலில் இருந்தே சான்று பார்ப்போம்.
பாறைகள் தனித்தனியாய் இருக்கும் போது அவற்றை மிக எளிதாக ஒரு காட்டாறு இடம்பெயர்த்து விடும். ஆனால் அதே பாறைகள் ஓரிடத்தில் குழுமி நெருக்கமாக இருந்தால் அவற்றில் ஒன்றைக் கூட காட்டாற்றினால் அசைக்க முடியாது. மாறாக, அது பாறைகளைச் சுற்றிச் செல்லும். காரணம், ஒற்றுமையினால் விளைந்த பேராற்றல். அதைப்போல மனிதர்கள் பிரிவுற்று இருக்கும் பொழுது வலிமை குறைந்தவர்களாகத் தான் இருப்பர். ஒன்றாகச் சேரும்பொழுது விதி கூட இந்த மனித ஆற்றலுக்கு முன் வளைந்து கொடுக்கும். இதைச் சில நடைமுறை எடுத்துக்காட்டுக்களுடன் காணலாம்.
ஒருவருக்கு வாழ்வில் நன்மையும் தீமையும் வறுமையும் செல்வமும் இன்பமும் துன்பமும் விதிவசத்தால் தான் வருகின்றது என்று முன்னர் கண்டோம். ஆனால் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அன்பு பூண்டொழுகும் பொழுது அங்கு தீமையில்லை; வறுமையில்லை; துன்பமுமில்லை. ஏனென்றால் ஒருவருக்கொருவர் அன்பு பூண்டபின், பிறருக்குத் தீமை செய்யமாட்டார்; ஒருவருக்கு வறுமையோ துன்பமோ விளைந்தால் ஓடோடிச் சென்று அவர் வறுமையினைக் களைவார்; அவரது துன்பத்தினைத் துடைப்பார் அன்றோ!. இவ்வாறு மனிதரின் ஒற்றுமை என்னும் பேராற்றலுக்கு முன்னால் விதியின் வலிமை குன்றத் துவங்கி விடும். சுருங்கச் சொன்னால் மனிதருக்கிடையிலான இடைவெளி கூடக்கூட விதி வலிமை பெறும்; குறையக் குறைய விதி வலியிழக்கும். மனிதம் வெல்லும்.!. இதற்கான முதல் படி அனைத்து ஊர்களையும் தம் ஊராக நினைத்து வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் அனைத்து மக்களையும் தமது உறவினராகப் பேணுதலுமே.
இதைக் கருத்தில் கொண்டே புலவர் கூறினார்: யாதும் ஊரே யாவரும் கேளிர். என்ன அவர் கூற்று சரிதானே?.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.