அந்தக் கல்மண்டபத்தின் கருவறையினை பெரியது என்று சொல்ல முடியாது. நான்கு பேர் படுத்தால் புரண்டு படுக்க முடியாத அளவுக்கு சிறியது தான். அந்த உச்சி வெயில் வேளையில் அவர் கருவறையின் நடுவில் கண்மூடி அமர்ந்திருந்தார். கருவறையில் இருந்த ஒரு சிறிய சாளரத்தின் வழியாக உள்ளே நுழைந்த வெயில் கருவறையினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கருவறையின் ஒரு மூலையில் ஒரு பாத்திரம் மட்டுமே கிடந்தது.
அவர் திடீரென்று கண் திறந்து பார்த்தார். பசி அவரது வயிற்றைப் பதம் பார்த்திருக்க வேண்டும். ஒட்டிப் போன வயிறுடன் அவர் இருந்தாலும் அவரது கண்களில் ஒரு ஒளி தெரிந்தது. அவரது உடல் அவருக்கு அகவை 60 க்கு மேலிருக்கலாம் என்று கூறினாலும் அவரது ஒளி வீசும் கண்கள் அவரை இளமையாகவே காட்டின. இடுப்புக்குக் கீழ் ஒரே ஒரு நூலாடை அணிந்திருந்தார். இன்னொரு நூலாடையின் மேல் அவர் அமர்ந்திருந்தார். அது அவரது மேலாடையாகவும் இருக்கலாம்.
இப்போது அவரது கண்கள் எதையோ தேடின.
இங்கே தானே வைத்திருந்தேன். எங்கே போயிருக்கும்?
பசிக்கும் வயிறுடன் மெல்ல எழுந்து கருவறையினை விட்டு வெளியில் முன் மண்டபத்திற்கு வந்தார். அங்கும் யாரையும் காணவில்லை.
அட, எங்கே போயிருக்கும் அவை? யார் எடுத்துச் சென்றிருப்பர்?.
முன் மண்டபத்தினையும் விட்டு நிலத்தில் கால் பதித்து மண்டபத்தின் அருகில் இருந்த அந்த அரச மரத்தடிக்கு வந்தார். அந்த அரச மரம் நல்ல உயரத்தில் நன்கு பரந்து விரிந்து வளர்ந்திருந்தது. தலையை மெல்ல உயர்த்தி மரத்தை நோக்கினார். மரக் கிளைகளில் ஒரு சில குரங்குகள் தென்பட்டன. அவற்றை உற்றுப் பார்த்தபோது ஒரு குரங்கின் கையில் கொய்யாக் கனிகளும் இன்னொன்றின் கையில் மாங்கனியும் இருப்பதைக் கண்டார்.
ஓ நீங்கள் தானா அப் பழங்களை எடுத்துச் சென்றது. பரவாயில்லை. உங்களுக்கும் பசிக்கும் தானே. சாப்பிடுங்கள். நான் கீழே இறங்கி சாரலில் இருந்து பழங்களைப் பறித்து வருகிறேன்.
எண்ணியவர் கீழே சாரலை நோக்கினார். அது மிக மிக ஆழத்தில் இருந்தது. ஆம், அவர் இருந்த கல் மண்டபம் அந்த மலையின் உச்சியில் இருந்தது. பூங்குன்றம் என்பது அம் மலையின் பெயர். பெயருக்கேற்றவாறே அம் மலையில் பல்வகையான பூக்களின் மணம் கமழ்ந்தவாறு இருக்கும். இப்போது கோடை காலமாதலால் பூக்கள் இன்றி சில மரங்கள் தங்கள் இலைகளையும் உதிர்த்துவிட்டு கூடாகக் காட்சியளித்தன.
அவர் கீழே இறங்கத் துவங்கிய நொடியில் திடீரென்று அவ்விடத்தை இருள் சூழ்வது போலத் தோன்றியது. ஆம், அங்கிருந்த மேகங்கள் எல்லாம் ஒன்று கூடி மலை உச்சிக்கு வந்து நின்றன.
ஓ மழை வரப் போகிறது போலும். இனி நாம் இப்போதைக்கு இறங்கிச் செல்ல முடியாது.
எண்ணியவர் அண்ணாந்து மேகங்களைப் பார்த்தார். நச்சென்று அவரது முகத்தில் விழுந்தது ஒரு மழைத் துளி.
கோடையின் வெப்பத்தால் வெப்புண்டு கிடந்த அவரது முகத்தில் மழைத்துளி விழுந்ததும் அவரது உடல் புல்லரித்தது. உடன் குளிர் காற்று வீசத் துவங்கியது. முன் மண்டபத்தின் மேல் ஏறி நின்று கொண்டு கீழே பார்த்தார்.
மலைச்சாரலின் முடிவில் ஒருபுறம் ஒரு சிறிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஓடிக்கொண்டிருந்தது என்பதை விட தேங்கி இருந்தது என்று சொல்லலாம். சிறிதளவே நீர் இருந்த போதிலும் அதிலும் ஒரு சிலர் படகோட்டிக் கொண்டும் மீன் பிடித்துக் கொண்டும் இருந்தார்கள். ஆற்றுக்கு அந்தப் பக்கமாக இன்னொரு மலை இருந்தது. ஆனால் அதில் மரங்கள் மிகக் குறைவாகவும் கற்கள் நிறைந்தும் இருந்தன. பெரிய பெரிய பாறைகள் ஆங்காங்கே வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல் இருந்தன. இந்த இரண்டு மலைகளுக்கும் இடையில் தான் அந்த ஆறு மிக மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.
திடீரென மின்னல் வெட்டியது. அவ்வளவு தான், வானமே பொத்துக் கொண்டதோ என்று நினைக்கும் அளவுக்கு பெரும் மழை பொழியத் துவங்கி விட்டது. இப்போது மண்டபத்தைச் சுற்றியிருந்த எதையும் அவரால் பார்க்க இயலவில்லை. ஏன் அந்த மரம் கூடத் தெரியாத அளவுக்கு வலுவான மழை பெய்து கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறிமாறி ஏற்பட்டு அந்த இடத்தின் அமைதியைக் குலைத்து ஒருவித அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.
அவர் அமைதியாய் முன் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு சிந்திக்கலானார்.
பாவம், இந்த குரங்குகளின் நிலை என்ன ஆகுமோ தெரியவில்லையே! இந்த பயங்கரமான மழையில் சிக்கிக் கொண்ட இவை இனி உயிர் தப்புமா? கடவுளே.
அவரது உடல் பசிக்காக ஏங்கினாலும் மனம் குரங்குகளின் நிலைக்காக வருந்தியது. மனம் பின்னோக்கிச் சென்றது.
இளம் வயதில் இல்வாழ்க்கையில் இருந்தபோது மனைவி, அவருக்குப் பலவகையான பழங்களை அருகிலிருந்து ஊட்டிய பொழுதுகளை எண்ணிப் பார்த்தார். அப்போது என் மனம் களிப்புற்று இருந்ததா? எண்ணிப் பார்த்தார். ம்கூம். இல்லை. இப்போது துறவு வாழ்க்கையில் உண்ண உணவின்றி பசியால் உழலும் இக் கணத்தில் என் மனம் துன்புறுகிறதா? இல்லை. ஆனால், இதோ இந்த உடல் தான் எதையாவது உண்ணத் தா என்று கேட்கிறது. ஒருநாளைக்கு ஒருவேளை உணவு தானே. அதுவும் பழங்கள் மட்டும் தானே. அதையேனும் கொடுக்கக் கூடாதா என்று ஏங்குகிறது. அது பாட்டுக்குக் கேட்டுக் கொண்டிருக்கட்டும். நாம் நமது வேலையினைக் கவனிப்போம்.
இப்போது அவர் கண்களை மூடிக் கொண்டார். உடலின் தேவையைப் புறந்தள்ளி விட்டு சூழலை முற்றிலும் மறந்துவிட்டு ஓகநிலையில் ஆழ்ந்தார். எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தாரோ அவருக்குத் தெரியாது. கண்களைத் திறந்து பார்த்தார். இப்போது மழை விட்டிருந்தது. வானம் தெளிந்திருந்தது.
அருகிலிருந்த மரத்தைப் பார்த்தவர் துணுக்குற்றார். மரத்தில் இருந்த பல கிளைகள் முறிந்து தொங்கிக் கொண்டிருந்தன. குரங்குகளைக் காணவில்லை. அடடா, என்ன ஆயிற்றோ அவைகளுக்கு? பாவம்!.
அருகில் இருந்த மலையைப் பார்த்தவர் இன்னும் ஆச்சர்யமடைந்தார். அங்கிருந்த பாறைகளில் பலவற்றைக் காணவில்லை. ஒருசில இடம் பெயர்ந்திருந்தன.
ஓ மிக வலுவான மழை பெய்துள்ளதோ?. இந்த மலையின் கோலத்தையே மாற்றி அமைத்து விட்டதே இந்த மழை.
எண்ணிக் கொண்டே கீழே இருந்த ஆற்றைப் பார்த்தவர் அரண்டு போனார். அமைதியாக இருந்த அந்த ஆறு இப்போது காட்டாறாக மாறி இருந்தது. பல மரக்கிளைகள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த எந்த ஒரு படகினையும் இப்போது காணமுடியவில்லை. ஒருவேளை அப் படகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்குமோ? என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுதே அவரது எண்ணம் சரிதான் என்று மெய்ப்பிப்பதைப் போல ஒரு படகு அந்த ஆற்றில் பயங்கரமாக புரண்டு புரண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் வேகத்துடன் ஈடு கொடுக்க முடியாமல் மூழ்குவதும் எழும்புவதுமாய் இருந்த அதன் நிலை அவரது மனதினை என்னமோ செய்தது. அப்போது......
கதிரவன் மேற்கில் மறையத் துவங்கினான்.
அவரது மனதில் ஒரு பாடல் உதிக்கத் துவங்கியது.
............................... தொடரும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.