ஞாயிறு, 3 மே, 2015

தொடி - ஆகம் - தொடர்பு என்ன?

தொடி என்றால் என்ன?


முன்னுரை:

தொடி என்ற சொல் பல இலக்கியப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லிற்கு இன்றைய அகராதிகள் கூறும் பல பொருட்களில் ஒன்றுகூடப் பொருந்தாத நிலை பல இடங்களில் காணப்படுவதால், இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அதைப் பற்றிக் கீழே காண்லாம். 

தொடி - அகராதி காட்டும் பொருட்கள்:

, n. < தொடு²-. 1. Curve, bend; வளைவு. தொடிவளைத் தோளும் (சிலப். 10, 128). 2. Bracelet; கைவளை. (பிங்.) குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி (புறநா. 77). 3. Armlet;தோள்வளை. நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து . . . போக்கில் பொலந்தொடி (நற். 136). 4. Armlet, warrior's armlet; வீரவளை. வலிகெழு தடக்கை தொடியொடு சுடர்வர (மதுரைக். 720). 5. [T. toḍi.] Ring, ferrule, ornamental knob of an elephant's tusk; பூண். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). 6. Circular projections in stone-wells serving as steps; பாறைக்கிணறுகளில் படியாக உதவ வெட்டப் படும் சுற்றுவட்டம். Loc. 7. A standard weight. See பலம். தொடிப்புழுதி கஃசா வுணக்கின் (குறள், 1037).

பொருள் பொருந்தா இடங்கள்:

தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி ஐது அமைந்து அகன்ற அல்குல் - ஐங் 176/2,3
பூந்தொடி மகளிர் போற்றி பொன் கலம் பரப்பினாரே - சிந்தா:5 1300/4
பூந்தொடி அரிவை பொய்கை பூமகள் அனைய பொற்பின் - சிந்தா:5 1358/2

மேற்காணும் பாடல்களில் தொடி என்பது பூவுடன் ஒப்பிடப்பட்டு உள்ளது. இதிலிருந்து தொடி என்பது பூப்போல மென்மையானது என்பது பெறப்படுகிறது. ஆனால், அகராதி காட்டும் பொருட்களான கைவளை, வீரவளை, தோள்வளை, பூண் போன்றவை வலிமை மிக்கவையே அன்றி மென்மையானவை அல்ல என்பதை நாம் அறிவோம். அதுமட்டுமின்றி, பெண்களின் தோளில் அணியப்படும் தொடி என்ற இந்த அணி குறுகியது (குறுந்தொடி) என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

நெடு மென் பணைத் தோள் குறுந்தொடி மகளிர் - பரிபாடல்.
குறுந்தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் - அகம் 226/4
கோல் அமை குறுந்தொடி குறு_மகள் ஒழிய - குறு 267/5

ஆனால், அகராதிப் பொருட்களான கைவளை, வீரவளை, தோள்வளை, பூண் ஆகிய எவையும் குறுகியதாக இருக்க முடியாது. குறுகியதாக இருந்தால் அவற்றை அணிய முடியாது. இதிலிருந்து தொடி என்பதற்கு மேற்காணும் அகராதிப் பொருட்களே அன்றி வேறு பொருட்களும் உண்டு என்பதை அறியலாம்.

தொடி - புதிய பொருள்:

மேற்காணும் பாடல்களில் வரும் தொடி என்பதற்கு 'தோளில் அதாவது கண்ணின் வட்டப் பகுதியில் இடப்படும் மையணி' என்பது பொருள்.

நிறுவுதல்:

தோள் என்பது கண்ணைச் சுற்றியுள்ள வட்டப் பகுதி என்று தோள் என்றால் என்ன? என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இப் பகுதியில் எழுதுகோலால் வட்டமாக எழுதுகின்ற அல்லது பூசுகின்ற மை அலங்காரமே தொடி என்று அழைக்கப்பட்டது.

தொடுதல் என்றால் பூசுதல் என்றும் பொருள் உண்டு. இன்றைய அகராதிகளில் இப் பொருள் தரப்படவில்லை என்றாலும், கீழே காட்டப்பட்டுள்ள சில சான்றுகளில் இருந்து இக் கருத்தினை உறுதி செய்யலாம். .

நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் - பதி 49/10
பொருள்: குருதி பூசிய செங்கை வீரர்.

கீழ்க்காணும் பாடல்களில் 'தோள் தொடுதல்' அதாவது 'தோள் பகுதியில் பூசுதல்' என்ற சொல்லாடல் நேரடியாகவே வருவதைப் பார்க்கலாம்.

தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் - பரி 20/56
இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் - பரி 12/23

மேலும் இத் தொடி அணியினை எழுதுகோல் கொண்டு பூசுவர் என்பதைக் கீழ்க்காணும் பாடல்வரிகளில் இருந்து அறியலாம்.

ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி - மது 563
நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே - குறு 233/7
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய - குறு 267/5
கோல் அமை குறும் தொடி தளிர் அன்னோளே - குறு 356/8
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி - குறு 364/3

கண்ணுக்கு மை பூசும்போது, அது பெரும்பாலும் ஒளிரும் வண்ணத்தில் அல்லது பொன்நிறத்தில் தான் இருந்திருக்க வேண்டும். காரணம், சுடர் தொடி, அவிர்தொடி, பொன் தொடி, ஒண் தொடி என்ற சொற்களே பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.

ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் - மது 579
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த - நற் 258/5
சுடர் தொடி கோ_மகள் சினந்து என அதன்_எதிர் - நற் 300/1
நிழல் திகழ் சுடர் தொடி ஞெகிழ ஏங்கி - நற் 371/6
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும் - நற் 391/5
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் - குறு 238/3
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்_கால் - கலி 100/14
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி - அகம் 117/8
நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடி குறு_மகள் - அகம் 219/9

இப்படி பொன் நிறத்தில் பூசப்பட்ட பெண்களின் கண்கள் பூவினைப் போல மென்மையாக இருந்ததால், தொடியினைப் பூவுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்களில்  பாடியுள்ளனர்.

தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி ஐது அமைந்து அகன்ற அல்குல் - ஐங் 176/2,3
பூந்தொடி மகளிர் போற்றி பொன் கலம் பரப்பினாரே - சிந்தா:5 1300/4
பூந்தொடி அரிவை பொய்கை பூமகள் அனைய பொற்பின் - சிந்தா:5 1358/2

அதுமட்டுமின்றி, கண்ணில் பூசப்படும் இந்த தொடி என்னும் அணி சிறியதாக இருப்பதால், ஏனைய தொடிகளில் இருந்து இதனை வேறுபடுத்திக்காட்ட, இதனைக் குறுந்தொடி என்று பாடல்களில் குறிப்பிட்டனர்.

நெடு மென் பணைத் தோள் குறுந்தொடி மகளிர் - பரிபாடல்.
குறுந்தொடி மகளிர் குரூஉ புனல் முனையின் - அகம் 226/4
கோல் அமை குறுந்தொடி குறுமகள் ஒழிய - குறு 267/5

தொடியும் தோளும்:

தோள் என்பது கண் வளையம் அல்லது கண்ணைக் குறிக்கும் என்று தோள் என்றால் என்ன? என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். தொடி என்ற சொல் தோளுடன் இணைந்து பல இடங்களில் வந்துள்ளது. தொடி என்பது கண் சார்ந்த ஒரு அணியே என்பது இதன்மூலமும் உறுதிசெய்யப்படுகிறது. தோளும் தொடியும் இணைந்து வருவதான சில பாடல்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். - குறள் - 1234

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். - குறள் - 1235

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. - குறள் - 1236

நெடு மென் பணை தோள் சாஅய் தொடி நெகிழ்ந்து - குறு 185/2
தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே - குறு 239/1
தொடி நெகிழ்ந்த தோளளா துறப்பாயால் மற்று நின் - கலி 135/7

மேற்காணும் பாடல்களில் தொடி நெகிழ்தல் என்ற செய்தி கூறப்படுகிறது. இதன் பொருள் மையணி அழிதல் என்பதாகும். பெண்கள், காதலரின் பிரிவால், கண்கலங்கி அழும்போது கண்ணில் பூசப்பட்டிருக்கும் மை அழியும். இதையே தொடி நெகிழ்தல் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

முடிவுரை:

தொடி நெகிழ்தல் என்றால் பெண்களின் புஜத்தில் அணிந்திருக்கும் வளையங்கள் அவர்களின் உடல் மெலிவதால் கழன்று விழுவதாக இதுகாறும் பலர் பொருள் கொண்டு வந்துள்ளனர். இது தவறான கருத்தாகும். காரணம், பெண்களின் கைகள் மூங்கில் குழாய் போல ஒரே அளவாக இருப்பதால், அவர்களது புஜத்தில் வளையங்களை அணிந்தால் அது நிற்காது. எனவே தோள் நெகிழ்தல் / தொடி நெகிழ்தல் என்பது பெண்களைப் பொறுத்தமட்டில் கண்ணின் மையணி அழிதலே அன்றி வேறல்ல. ஆனால் ஆண்களின் புஜத்தில் புடைப்பு இருப்பதால் அங்கே வளையம் அணிய இயலும். எனவே ஆண்களைப் பொறுத்தமட்டில் தொடி என்பது அவர்தம் புஜத்தில் அணியும் வளையத்தைக் குறிக்கக் கூடும்.

*************************************************************************



ஆகம் என்றால் என்ன?


முன்னுரை:

ஆகம் என்ற சொல் பல இலக்கியப் பாடல்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லிற்கு இன்றைய அகராதிகள் கூறும் பல பொருட்களில் ஒன்றுகூடப் பொருந்தாத நிலை பல இடங்களில் காணப்படுவதால், இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. அதைப் பற்றிக் கீழே காண்லாம். 

ஆகம் - அகராதி காட்டும் பொருட்கள்:

 , n. prob. ஆகு-. 1. Body; உடல். (திவ். திருவாய். 9, 3, 7.) 2. Breast; மார்பு. முலையாகம் பிரியாமை (கலித். 2). 3. Mind, heart; மனம். ஆகத்தெழுகனல் கண்வழியுக (கம்பரா. கரன்வ. 97)., , n. Calabash; சுரை. (சங். அக.)

பொருள் பொருந்தா இடங்கள்:

அகராதிகள் காட்டும் பொருட்களான உடல், மனம், மார்பு, சுரை ஆகியவற்றில் எதுவும் பொருந்தா இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர - நற் 358/2
ஆக மேனி அம் பசப்பு ஊர - அகம் 333/2
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் - குறி 249

இப் பாடல்களில் வரும் ஆகம் என்பது பசப்புடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. பசப்பு என்பது அழுகையைக் குறிக்கும் என்று பசப்பு என்றால் என்ன? என்ற கட்டுரையில் கண்டுள்ளோம். மேலும் பனி என்பதும் கண்ணீரைக் குறிப்பதுவே ஆகும். ஆனால், அகராதி காட்டும் பொருட்களில் எதுவும் அழுகையுடன் தொடர்புடையது அல்ல. அதுமட்டுமின்றி, கீழ்க்காணும் பாடலில் பெண்கள் தமது ஆகத்தில் சந்தனக் குழம்பை பூசியிருக்கும் செய்தி கூறப்படுகிறது.

சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் - சிந்தா:7 1673/4
அடுத்து அணிந்து ஆகம் சாந்தின் அணிபெற எழுதி - சிந்தா:9 2091/3

இதில் வரும் ஆகம் என்பதற்கு உடல் என்றோ மார்பு என்றோ பொருள்கொள்ள முடியாது. ஏனென்றால் பெண்கள் தம் உடலிலோ மார்பிலோ சந்தனம் பூசிக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறு பூசி இருப்பினும் அதைப் பிறர் அறியும் வண்ணம் காட்ட மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி, ஆகத்தினை மலருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்களில் பாடியுள்ளனர்.

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - திரு 139
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து - அகம் 240/11
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த - அகம் 177/18

இவற்றில் வரும் ஆகம் என்ற சொல்லுக்கு அகராதிகள் கூறும் பொருட்களான உடல், மனம், மார்பு, சுரை ஆகிய எதனையும் பொருளாகக் கொள்ள முடியாது. ஏனென்றால், இவற்றில் எதுவும் மலரின் பண்புகளைக் கொண்டவை அல்ல.

ஆக, இதுவரை கண்டவற்றில் இருந்து, ஆகம் என்ற சொல்லுக்கு அகராதி காட்டும் பொருட்களைத் தவிர பிற பொருட்களும் உண்டென்பது தெளிவாகிறது.

ஆகம் - புதிய பொருள்:

ஆகம் என்பதன் புதிய பொருள் ' கண் ' மற்றும் ' கண் இமைகள் ' ஆகும்.

நிறுவுதல்:

ஆகம் என்பது எவ்வாறு கண்ணைக் குறிக்கும் என்று கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர - நற் 358/2
ஆக மேனி அம் பசப்பு ஊர - அகம் 333/2
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் - குறி 249
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து - அகம் 146/11
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப - அகம் 299/15

மேற்காணும் பாடல்களில் ஆகம் என்பது பசப்பு எனப்படும் அழுகையுடனும், பனி எனப்படும் கண்ணீருடனும் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆகம் என்பது அழுகையுடன் தொடர்புடைய கண்ணே என்பது உறுதியாகிறது.

பெரும் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம் ஒரு நாள் புணர புணரின் - குறு 280/3,4

மேற்காணும் பாடலில் சிறிய மென்மையான ஆகம் என்று கூறப்படுவதில் இருந்து அது கண்ணையே குறிக்கும் என்பது வலுவாகிறது.

ஆகம் என்பது கண்ணிமையையும் குறிக்கும் என்பதைக் கீழ்க்காணும் சான்றுகளில் இருந்து அறியலாம்.

கண்ணிமை மேல் சந்தனத்தைக் குழைத்துப் பூசியிருக்கும் செய்தியைக் கீழ்க்காணும் சிந்தாமணிப் பாடல்கள் கூறுகிறது.

சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள் - சிந்தா:7 1673/4
அடுத்து அணிந்து ஆகம் சாந்தின் அணிபெற எழுதி அல்குல் - சிந்தா:9 2091/3
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி காதில் - சிந்தா:10 2181/1
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர் - சிந்தா:12 2479/3

சந்தனம் மட்டுமின்றி, பெண்கள் தமது கண்ணிமைகளில் பூந்தாதுக்களைக் கொண்டும் அலங்காரம் செய்தனர் என்னும் செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் - அகம் 174/12
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து - பொரு 35
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் - கலி 4/17
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் - கலி 64/27
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த - அகம் 161/12

இப் பாடல்களில் வரும் சுணங்கு என்பது பூந்தாதுக்களைக் குறிக்கும்.

கண்ணிமையைப் பொன் போல அலங்கரித்ததைக் கூறும் பாடல்வரிகள்.

பொன் துஞ்சு ஆகத்தினாய் பொருள் செய்யுமே - சிந்தா:8 1922/4
பொடித்து பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ - சிந்தா:13 2709/2

கண்ணிமையில் விரல் நுனி கொண்டு மை பூசுவதைக் கூறும் பாடல்:

புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி - சிந்தா:3 625/3

ஆகம் என்பது மாந்தளிர் போல வடிவினதும் மென்மையானதும் ஆகும் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது:

மாவின் தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த - அகம் 177/18

ஆகமும் முலையும்:

ஆகம் என்பது முலையுடன் இணைந்து பல பாடல்களில் வருகிறது. அவற்றில் சில பாடல்கள் மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - நெடு 136, அகம் 206/9
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் - கலி 14/5
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப - அகம் 49/8
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் - அகம் 62/3
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே - அகம் 69/20
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து- அகம் 75/12
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து - அகம் 240/11
மென் முலை ஆகம் கவின் பெற - கலி 40/33
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து - அகம் 97/14

மேற்கண்ட பாடல்களில் வருகின்ற முலை என்பது கண்ணையே குறிக்கும் என்று ' மதுரையை எரித்த கண்ணகி ' என்ற கட்டுரையில் கண்டுள்ளோம். முலையுடன் சேர்ந்தே வருவதால் ஆகம் என்பதும் கண்ணையே குறிக்கும் என்பது உறுதிசெய்யப்படுகிறது.

முடிவுரை:

ஆகம் என்ற சொல் சில இடங்களில் தனியாகவும் சில இடங்களில் முலை என்ற சொல்லுடன் இணைந்தும் வரும் என்று மேலே கண்டோம். சிலசமயம், முலை, ஆகம், கண் என்ற மூன்றுமே உடன் பயின்று வருவதும் உண்டு.

கதிர் முலை ஆகத்து கண் அன்னார் சேரி - திணை: 50:4 33/3

இப்படி ஒரே பொருளைத் தருவதான முலை, ஆகம், கண் என்ற மூன்று சொற்களும் ஒரே இடத்தில் வருவதால்தான், குழப்பம் ஏற்பட்டு, இம் மூன்று சொற்களும் வேறுவேறு பொருட்களைக் குறிப்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ள இடமளித்துவிட்டது.

******************************************************************

இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்தபின், ஆகத்திற்கும் தொடிக்கும் உள்ள தொடர்பு என்னவென்று தெரிந்திருக்கும். ஆம்,  ஆகமாகிய கண்ணில் பூசப்படும் மையலங்காரமே தொடி ஆகும். 

***************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.