வியாழன், 14 மே, 2015

கதுப்பு - ஓதி - நுசுப்பு ( நூறாவது கட்டுரை )

கதுப்பு என்றால் என்ன?

முன்னுரை:

சங்க இலக்கியத்தில் பரவலாகப் பயின்று இன்று வழக்கொழிந்த பல சொற்களுள் கதுப்பு என்னும் சொல்லும் ஒன்று. இச் சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல பொருட்களைக் கூறினாலும் அவற்றுள் ஒன்றுகூடப் பொருந்தாத நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்கு வேறு சில பொருட்கள் இருப்பதையே காட்டுகிறது. அது என்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

கதுப்பு -அகராதி காட்டும் பொருட்கள்:

, n. prob. id. 1. [K. kada- pu.] Cheek, side of the face; கன்னம். தும்பி தொடர்கதுப்ப (பரிபா. 19, 30). 2. Human hair, locks of hair; தலைமயிர். கதுப்பின் குரலூத (பரிபா. 10, 120). 3. [T. K. kadupu.] Herd of cattle; பசுக்கூட்டம். (பிங்.) 4. Fleshy part of a fruit on each side of the seed in the centre; பழத்தின் நடுவேயுள்ள கொட்டையை நீக்கி அறுத்த துண்டம். மாம்பழம் நறுக்குகையில் ஆளுக்கு நான்கு கதுப்புக்கள் கிடைத்தன. Loc. , n. cf. கப்புமஞ்சள். Turmeric; மஞ்சள். (அரு. நி.)

பொருள் பொருந்தா இடங்கள்:

கதுப்பு என்னும் சொல்லுக்கு இன்றைய அகராதிகள் காட்டும் பொருட்களாகிய கன்னம், தலைமயிர், பசுக்கூட்டம், மஞ்சள், பழத்துண்டு ஆகியவற்றுள் எதுவும் பொருந்தாத சில இலக்கிய இடங்களைக் கீழே காண்லாம்.

மறவர் வேல் என விரிந்த கதுப்பின் - நற் 86/2

கதுப்பானது வேல் போல விரிந்த அமைப்புடையது என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. ஆனால் அகராதிப் பொருட்கள் எதுவும் அத்தகைய அமைப்புடையது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றை - குறு 21/3
பொருள்: கொன்றையின் புதிய பூக்கள் கதுப்பைப் போல மலர்ந்திருக்கின்றனவாம்.

முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறி - அகம் - 244
பொருள்: மலர்ந்த முல்லை மலரானது கதுப்பினைப் போல ஒளிவீசியதாம்.

இப் பாடலில் வரும் நாறுதல் என்பது ஒளிவீசுதல் என்று பொருள்படும். இதுபற்றி நுதல் என்றால் என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். இப் பாடல்களில் இருந்து கதுப்பு என்பது மலரைப் போல் ஒளிவிடுவதும் மென்மையானதும் ஆகும் என்பது பெறப்படுகிறது. ஆனால் அகராதிப் பொருட்களுக்கு இப் பண்புகள் இல்லை.

முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே - ஐங் 197/2
பொருள்: கதுப்பானது முகத்தை மறைக்க தலைதாழ்ந்து நின்றிருந்தாள்.

இதில் வரும் முகம் என்பதற்கு தலையின் முன்பகுதி என்றும் கதுப்பு என்பதற்கு தலைமயிர் எனவும் பொருள் கொண்டால், தலைமயிரை முன்னால் போட்டுக்கொண்டு முகத்தை மூடியவாறு தலைகவிழ்ந்து நின்றதாகப் பொருள்வருமன்றோ!. இப் பொருள் சற்றும் பொருத்தமற்றது என்று சொல்லத்தேவையில்லை. காரணம், எந்தப் பெண்ணும் தனது தலைமுடியால் தனது முகத்தை மூடிக்கொண்டு இருக்க மாட்டாள். இதிலிருந்து கதுப்பு என்பது தலைமயிரைக் குறிக்காது என்பது பெறப்படுகிறது.

கண்ணும் தோளும் தண்நறும் கதுப்பும் பழநலம் இழந்து பசலை பாய - நற் 219/1,2
பொருள்: கண்ணும் தோளும் ஒளிமிக்க கதுப்பும் வாடுமாறு கண்ணீர் பெருக.

இப் பாடலில் வரும் பசலை என்பது கண்ணீரைக் குறிக்கும் என்று பசலை என்றால் என்ன? என்ற கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம். மேலும் இப் பாடலில் கதுப்பு என்பது அழுகையுடன் தொடர்புடைய உறுப்பாகக் கூறப்படுகிறது. ஆனால் அகராதிப் பொருட்களில் எதுவும் அழுகையுடன் தொடர்புடையதல்ல.

இரண்டு கதுப்பும் உற நெடு முசலம் கொண்டு அடிப்ப - கம்பரா:யுத்2:16 51/3
பொருள்: கதுப்பு இரண்டிலும் படுமாறு நீண்ட முசலம் என்னும் ஆயுதத்தால் அடிக்க.

இப் பாடலில் கதுப்பு என்னும் உறுப்பு ஒரு மனிதருக்கு இரண்டு எண்ணிக்கையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கதுப்பு என்பது அகராதிப் பொருட்களில் ஒன்றான கன்னத்தைக் குறிக்குமோ என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அது சரியன்று. காரணம், கன்னம் என்பது காது, கண் போலத் தனியானதோர் உறுப்பன்று. 

மேலே கண்டவற்றில் இருந்து கதுப்பு என்னும் சொல்லுக்கு அகராதிப் பொருட்களே தவிர பிற பொருட்களும் உண்டென்று தெளிவாகிறது.  இவை என்ன என்பது பற்றிக் காணலாம்.

கதுப்பு - புதிய பொருள்:

கதுப்பு என்னும் சொல் குறிக்கும் புதிய பொருள் ' கண்ணிமை ' ஆகும்.

நிறுவுதல்:

கதுப்பு என்னும் சொல் எவ்வாறு கண்ணிமையைக் குறிக்கும் என்று கீழே பல சான்றுகளுடன் காணலாம்.

கதுப்பு என்னும் சொல் தோள், முலை போன்ற சொற்களுடன் சேர்ந்து கீழ்க்காணும் பாடல்களில் பயின்று வருகின்றது.

நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும் - நற் 387/1
தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும் - கலி 90/7,8
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள் - பதி 12/22

இப் பாடல்களில் வரும் தோள் என்பதும் முலை என்பதும் கண் சார்ந்த உறுப்புக்கள் என்று முன்னர் கட்டுரைகளில் கண்டுள்ளோம். இவற்றுடன் பயின்று வருவதால் கதுப்பு என்பதும் கண் சார்ந்த உறுப்பே என்பது பெறப்படுகிறது. 

பெண்களின் கதுப்பு ஆகிய கண்ணிமையானது வண்ணங்களால் பூசப்பட்டு ஒளிரும் தன்மை மிக்கது. இப்படி ஒளிரும் இமையினை நறும் கதுப்பு என்றும் நாறும் கதுப்பு என்றும் இலக்கியம் கூறுகிறது. நறும், நாறும், நறிய என்றால் ஒளிர்கின்ற என்ற பொருளைக் குறிக்கும் என்று நுதல் என்றால் என்ன? என்ற கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம். நறுங் கதுப்பு பற்றி ஏராளமான பாடல்கள் கூறி இருந்தாலும் அவற்றுள் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மணமகள் கதுப்பு என நாறும் மாநகர் - சிந்தா:7 1621/2
பொருள்: மணமகளின் அலங்கரிக்கப்பட்ட கண்ணிமையினைப் போல மாநகர் முழுவதும் ஒளிவீசியதாம்.

தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும் - நற் 337/8
தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் - அகம் 391/6
நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து - நற் 250/8
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர் - அகம் 141/13,14

பல வண்ணங்களால் பூசப்பட்ட கண்ணிமையானது மயில்தோகை போல் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ - மலை 44

கண்ணிமையினை பல வண்ணங்களால் மட்டுமின்றி கரிய நிற மையினாலும் பூசினர். இப்படிக் கருநிற மையால் பூசப்பட்ட கண்ணிமையினை கரிய மேகத்துடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் - பரி 12/15
புயல் புரை கதுப்பு அகம் உளரிய வளியும் - பரி 21/49
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே - அகம் 323/13
புயல் புரை கதுப்பு அகம் உளரிய வளியும் - பரி 21/49

இப் பாடல்களில் வரும் கார், புயல் என்பவை கருநிற மேகங்களைக் குறிப்பன. மேலும் கதுப்பு என்னும் சொல் கூந்தல் என்னும் சொல்லுடன் பயின்று கூந்தல் ஆகிய கதுப்பு என்ற பொருளில் வந்துள்ளது. கூந்தல் என்றால் கண்ணிமை என்று கூந்தலுக்கு மணம் உண்டா? என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இதிலிருந்து கதுப்பு என்பதும் கண்ணிமையினையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. இனி கார்மேகமும் கண்ணிமையும் எவ்வாறு ஒக்கும் என்று காண்போம்.

கார்மேகமும் கருநிறக் கண்ணிமையும் வடிவத்தாலும் கருமை நிறத்தாலும் ஒத்தன.
கார்மேகம் மின்னல் ஒளியினைப் பாய்ச்சும். அதைப்போல பெண்களின் மையுண்ட கண்ணிமைகள் இமைத்தலின்போது மின்னலைப் போன்ற ஒளிபாய்ச்சும்.

கதுப்பின் வடிவம் குறித்து கீழ்க்காணும் பாடலும் கூறுவதைப் பாருங்கள்.

மறவர் வேல் என விரிந்த கதுப்பின் - நற் 86/2

கதுப்பானது வேல் போல விரிந்த அமைப்புடையது என்று மேற்காணும் பாடல் கூறுகிறது. வேல் போல விரிந்த உடல் உறுப்பு கண் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இன்றளவும் வேல்விழி என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருவதில் இருந்து இதனை உறுதி செய்யலாம். 

வண்ணமிடப்பட்ட கண்ணிமையினை அதன் மென்மைத் தன்மையாலும் ஒளிரும் பண்பினாலும் பூக்களுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

கதுப்பின் தோன்றும் புது பூங் கொன்றை - குறு 21/3
கண்ணிமையானது கொன்றைப் பூவினைப் போல மஞ்சள் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாக இப் பாடல் கூறுகிறது. .

முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறி - அகம் - 244
கண்ணிமையானது முல்லைப் பூவினைப் போல வெண்ணிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததாக இப் பாடல் கூறுகிறது.

கதுப்பு என்பது கண்ணிமையைத் தான் குறிக்கும் என்பதற்கு இன்னுமொரு அருமையான சான்று கீழே:

முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே - ஐங் 197/2

இதில் வரும் முகம் என்பது கண்ணைக் குறிக்கும் என்று இன்னொரு முகம் என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். ' கண்ணை மூடிய இமையினளாய் தலைதாழ்த்தி நின்றாள் ' என்ற பொருள் இப் பாடல் வரிக்கு எவ்வளவு அழகாக பொருந்தி வருகிறது பாருங்கள்.

கண்ணிமையானது மென்மையாக இருப்பதால் அதனை மலரின் இதழுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு - கலி 117/10
தோட்டார் கதுப்பினாள் தோள் - குறள் 1105

இதில் வரும் தோடு என்பது மலரிதழைக் குறிக்கும். அதுமட்டுமின்றி, பெண்களின் தோள் பகுதியில் மையணி பூசும்போது கண்ணிமையினையும் சேர்த்து அலங்கரிப்பதாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவி - குறு 190/1
நன் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய - அகம் 283/1

இவற்றில் வரும் நீவுதல் என்பது பூசுதலைக் குறிக்கும். கண்ணின் வட்டப் பகுதியாகிய தோளில் வட்டமாக மையணி பூசும்போதே கண்ணிமையிலும் மை பூசி அலங்கரிப்பது எளிதான செயல் என்பதால் இவ்வாறு செய்வர். மாறாக, இவற்றில் வரும் தோள் என்பதற்கு புஜம் என்றும் கதுப்பு என்பதற்கு தலைமயிர் என்றும் பொருள்கொண்டால் விளக்கம் பொருந்தாமையை அறியலாம்.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து கதுப்பு என்பது கண்ணிமையினைக் குறிக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவுரை:

கதுப்பு என்பது கண்ணிமையினைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். இதைப் போலவே கூந்தல் என்ற சொல்லும் மேனி என்ற சொல்லும் இறை என்ற சொல்லும் ஆகம் என்ற சொல்லும் கண்ணிமைகளைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டன என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இதிலிருந்து கதுப்பு, கூந்தல், மேனி, இறை, ஆகம் என்பவை ஒருபொருள் குறித்த பல சொற்கள் என்னும் தொகுதியைச் சேர்ந்தவை என்பதை அறியலாம்.

***********************************************************************

 ஓதி என்றால் என்ன?

முன்னுரை:

சங்க இலக்கியத்தில் பரவலாகப் பயின்று இன்று வழக்கொழிந்த பல சொற்களுள் ஓதி என்னும் சொல்லும் ஒன்று. இச் சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல பொருட்களைக் கூறினாலும் அவற்றுள் ஒன்றுகூடப் பொருந்தாத நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்கு வேறு சில பொருட்கள் இருப்பதையே காட்டுகிறது. அது என்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

ஓதி -அகராதி காட்டும் பொருட்கள்:

 , n. < ஓது-. 1. Knowledge, wisdom, spiritual perception; ஞானம். எல்லா மோதியி னுணர்ந்து கொண்டான் (சீவக. 951). 2. Learning, erudition; கல்வி. (திவா.) 3. Learned person; one who recites the Vēda and Šāstras; நூல் ஓதுபவ-ன்-ள். , n. < ஓந்தி. [K. ōti.] See ஓந்தி., . 1. Closeness, thickness, crowd; செறிவு. (பிங்.) 2. Woman's hair; பெண் மயிர். வாழைப்பூவெனப் பொலிந்த வோதி. (சிறுபாண். 22). 3. See ஓதிமம், 2. காந்தளங்கை யோதிகொங்கை (வெங்கையு. 272). 4. Close attack in battle; நெருங்கித்தாக்குகை. (W.)

பொருள் பொருந்தா இடங்கள்:

அகராதிகள் காட்டும் பல்வேறு பொருட்களில் பெண்மயிர் என்ற ஒன்று மட்டுமே உடலுடன் சேர்ந்த உறுப்பாகும். இப் பொருளும் பொருந்திவராத பல இடங்கள் இலக்கியத்தில் காணப்பட்டாலும் சில இடங்கள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வாழைப்பூ என பொலிந்த ஓதி - சிறுபாண்: 22
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் - நற் - 225

இப் பாடல்களில் வரும் வாழைப்பூவிற்கும் பெண்ணின் தலைமுடிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?. வாழைப்பூவினைப் போல விளங்கும் தலைமுடியினை உடையவள் என்றால் நகைப்புக்குரியதாகி விடுமன்றோ!. எனவே இதில் வரும் ஓதி என்பது தலைமயிரைக் குறிக்காது என்பது தெளிவு.

பொன் பொதிந்தன்ன சுணங்கின் இருஞ்சூழ் ஓதி பெருந்தோளாட்கே - நற் - 275

இப் பாடலில், பொன் போன்ற பூந்தாதுக்களை உடைய ஓதி என்று கூறப்பட்டுள்ளது. இதில் வரும் ஓதி என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொள்ள முடியுமா என்றால் முடியாது. காரணம், பூக்களைக் கொண்டுதான் தலைமையிரை அலங்கரிப்பார்களே அன்றி பூந்தாதுக்களைக் கொண்டு அலங்கரிக்க மாட்டார்கள்.

அதுமட்டுமின்றி, ஓதியானது மின்னலைப் போல ஒளிரும் தன்மையது என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

மின் நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே. அகம் - 236
மின் நேர் ஓதி இவளொடு நாளை - நற் - 340

ஆனால் பெண்களின் தலைமயிர் கருப்பாய் இருப்பதால் அதற்கு ஒளிவிடும் தன்மையே கிடையாது. எனவே இங்கும் ஓதி என்பதற்கு அகராதிப் பொருட்கள் எதுவும் பொருந்தவில்லை.

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய் - அகம் - 49
மை ஈர் ஓதி மடவோய்! யானும்நின் அகம் - 389
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே - நற் -29
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே - நற் -57

மேற்காணும் பாடல்களில் ஓதியானது கரிய மையினால் பூசப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின் தலைமுடியில் எண்ணை பூசுவதுதான் வழக்கமே ஒழிய மை கொண்டு பூசுவது வழக்கமல்ல. எனவே இங்கும் ஓதி என்பது தலைமுடியைக் குறிக்கவில்லை.

மேற்கண்ட பல சான்றுகளில் இருந்து ஓதி என்னும் சொல்லுக்கு அகராதிப் பொருட்கள் தவிர பிற பொருட்களும் உண்டென்பது உறுதியாகிறது.

ஓதி - புதிய பொருள்:

ஓதி என்னும் சொல் குறிக்கும் புதிய பொருள் ' கண்ணிமை ' ஆகும்.

நிறுவுதல்:

ஓதி என்னும் சொல் எவ்வாறு கண்ணிமை எனும் பொருளைக் குறிக்கும் என்பதைக் கீழே பல சான்றுகளுடன் நிறுவலாம்.

ஓதி என்னும் சொல் நுதல் என்னும் சொல்லுடன் பயின்று கீழ்க்காணும் பாடல்களில் வருகின்றது.

ஓதி ஒண்நுதல் பசலையும் மாயும்; - அகம் - 253
இருஞ்சூழ் ஓதி ஒண்நுதற் பசப்பே! அகம் - 103
சின்னிரை ஓதிஎன் நுதல்பசப் பதுவே. - அகம் - 221
ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே. -அகம் -67
ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் அணிகொளக் - பதிற் - 72

ஆனால் இவற்றில் வரும் நுதல் என்பது கண்ணைக் குறிக்கும் என்று நுதல் என்றால் என்ன? என்ற கட்டுரையில் கண்டுள்ளோம். கண்ணுடன் தொடர்புற்று வருவதால், ஓதி என்ற சொல்லும் கண்ணுடன் தொடர்புடைய ஒரு உறுப்பாகத் தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

வாழைப்பூ என பொலிந்த ஓதி - சிறுபாண்: 22
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் - நற் - 225

இப்பாடல்களில் ஓதியினை வாழைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். பொதுவாக, பூவினை ஒத்த கண்ணின் உறுப்பு கண்ணிமையே என்பதால், ஓதி என்பது கண்ணிமையைத் தான் குறிக்கும் என்று தெளியலாம். மேலும் வாழைப்பூவானது கண் போன்ற வடிவத்தில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் பல வரிகளை உடையதாக இருக்கும். இவ் வாழைப்பூவினைப் போல பல செவ்வரிகளால் வரையப்பட்டிருப்பதால் இங்கே கண்ணிமையினை வாழைப்பூவுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

பொன் பொதிந்தன்ன சுணங்கின் இருஞ்சூழ் ஓதி பெருந்தோளாட்கே - நற் - 275

இப்பாடலில் வரும் சுணங்கு என்பது பூந்தாதுக்களைக் குறிக்கும். பொதுவாக கண்ணிமையில் தான் பூந்தாதுக்களைக் கொண்டு பூசுவர் என்பதை முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். எனவே இப் பாடலில் வரும் ஓதி என்பது கண்ணிமையைத் தான் குறிக்கும் என்பது உறுதியாகிறது. 

மின் நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே. அகம் - 236
மின் நேர் ஓதி இவளொடு நாளை - நற் - 340

இப் பாடல்களில் ஓதியானது மின்னல் போல ஒளிரும் தன்மையது என்று கூறப்படுகிறது. இதில் வரும் ஓதி என்பது கண்ணிமையைத் தான் குறிக்கும். இது எவ்வாறெனில்,  கண்ணிமையானது ஒளிரும் வண்ணங்களால் பூசப்பட்டு பளபளப்புடன் இருக்க, அக் கண்ணிமைகளை மூடித்திறக்கும் போது அது மின்னலைப் போல ஒளிர்ந்து மறையுமன்றோ!. இமைக்கும் செயல் கருதியே கண்ணிமையினை மின்னலுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

பெண்கள் தமது கண்ணிமையினை மை கொண்டு பூசி அலங்கரிப்பது வழக்கம். இதனைக் குறிப்பிடுகின்ற பல பாடல்களில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய் - அகம் - 49
மை ஈர் ஓதி மடவோய்! யானும்நின் அகம் - 389
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே - நற் -29
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே - நற் -57

இப் பாடல்களில் வரும் ஓதி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் தவிர வேறெதுவும் பொருந்தாது. காரணம், கண்ணிமையில் மட்டுமே மை கொண்டு பூசுவர்.

முடிவுரை:

இதுகாறும் கண்ட சான்றுகளில் இருந்து ஓதி என்பது கண்ணிமையைக் குறித்து பல பாடல்களில் வந்துள்ளதை அறிந்தோம். கண்ணிமையினைக் குறிக்க ஏற்கெனவே கதுப்பு, மேனி, கூந்தல், இறை, ஆகம், போன்ற பல சொற்கள் இருப்பினும் போதாதென்று ஓதி என்ற சொல்லையும் அதே பொருளில் பயன்படுத்தி இருக்கின்றனர் என்று இக் கட்டுரையின் மூலம் அறிந்துகொண்டோம்.

*********************************************************

நுசுப்பு என்றால் என்ன?

முன்னுரை:

சங்க இலக்கியத்தில் பரவலாகப் பயின்று இன்று வழக்கொழிந்த பல சொற்களுள் நுசுப்பு என்னும் சொல்லும் ஒன்று. இச் சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல பொருட்களைக் கூறினாலும் அவற்றுள் ஒன்றுகூடப் பொருந்தாத நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்கு வேறு சில பொருட்கள் இருப்பதையே காட்டுகிறது. அது என்ன என்பதைப் பற்றி இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

நுசுப்பு -அகராதி காட்டும் பொருட்கள்:

நுசுப்பு nucuppu , n. perh. நொசி-. Waist of a woman; மகளிர் இடை. நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை (குறள், 1115).

பொருள் பொருந்தா இடங்கள்:

நுசுப்பு என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறும் பொருளாகிய இடை என்பது பொருந்தாத இலக்கியப் பாடல்களைக் கீழே காணலாம்.

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

இப் பாடலில் நுசுப்பானது தனது அழகிய பொன்போன்ற நிறத்தினால் வேங்கை மலரினைப் போலத் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு நுசுப்பு என்பதற்கு இடை என்பது பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மலரைப் போன்ற ஒளிரும் பண்போ வடிவமோ இடைக்கு இல்லை.

அரும்பிய சுணங்கின் நுசுப்பு அழித்து ஒலிவரும் - அகம் - 253

இப் பாடலில் நுசுப்பானது சுணங்காகிய பூந்தாதுக்களால் பூசப்பட்டுள்ள செய்தி கூறப்பட்டுள்ளது. இங்கும் நுசுப்பு என்பதற்கு இடை எனும் பொருள் பொருந்தாது. காரணம், பூந்தாதுக்களைக் கொண்டு இடையில் பூசி யாரும் அலங்கரிப்பதில்லை.

மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் - கம்பரா: பால:5 111/3

இப் பாடலில் மின்னல் போல விளங்கும் நுசுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இங்கு நுசுப்பு என்பதற்கு இடை எனப் பொருள் கொள்ளலாமா என்றால் கூடாது. காரணம், மின்னலைப் போன்ற ஒளிரும் பண்போ வடிவமோ தோன்றி மறையும் பண்போ இடைக்கு இல்லை.

தாதியர் போற்றத் துணை முலைகள் கொண்ட நுசுப்பு - பெரியபுரா: 1737
நொந்து எடுக்கலாது வீங்கும் வனமுலை நுசுப்பின் தேய்ந்த ஓர் - சிந்தா:6 1532/1
முலை நெருங்கி நைவது போலும் நுசுப்பினாய் - பழ: 134

இப் பாடல் வரிகளில் நுசுப்பு என்பது முலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு நுசுப்பு என்பதற்கு இடை எனப் பொருள் கொண்டால், முலைகளை உடைய இடுப்பு என நகைப்புக்குரியதாகி விடும். .

தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற - சிறு 59,60

இப் பாடலில் நுசுப்பானது தோளை மறைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இங்கு நுசுப்பு என்பதற்கு இடுப்பு எனப் பொருள் கொண்டால், இடுப்பு தோளை மறைத்தது எனப் பொருள்வந்து நகைப்புக்குரியதாகிவிடும்.

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் - திரு -101
கொடி புரையும் நுசுப்பினாய் - கலி 58
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ - கலி 1/7

இப் பாடல்களில் நுசுப்பானது கொடியுடன் உவமை செய்யப்பட்டுள்ளது. இதில் வரும் நுசுப்பு என்பதற்கு இடுப்பு எனப் பொருள்கொண்டால், தாவரத்தின் மெல்லிய கொடி போன்ற இடை என்று பொருள்வரும். ஆனால், அப்படி ஓர் மிக மெல்லிய இடை சாத்தியமா?. என்று சிந்திக்க வேண்டும். உயர்வு நவிற்சியாகவேக் கூறி இருப்பதாகக் கொண்டாலும், ஏன் கொடியுடன் அதனை ஒப்பிட்டுக் கூற வேண்டும்?. கொடிக்கும் இடைக்கும் என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?.

கொடி தொடர்ந்து வளர்ந்து நீளும் இயல்புடையது. ஆனால், இடை வளர்ந்து நீளாது.
கொடி வளர்வதற்கு ஒரு பற்றுக்கோடு தேவை. ஆனால், இடைக்கு அது தேவையில்லை.
கொடியில் பூக்கள் பூக்கும். ஆனால் இடையில் எதுவும் பூப்பதில்லை.
கொடி மிக மெல்லியது. ஆனால் இடையானது கொடியினைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது.
கொடியில் பல வளைவுகள் இருக்கும். ஆனால் இடை ஒரே ஒரு வளைவினைக் கொண்டது.

இப்படி எந்த ஒற்றுமையுமே இல்லாதபொழுது, இடையினைக் கொடியுடன் ஒப்பிடுவது தவறு தானே!. இத் தவறுக்குக் காரணம் என்ன?. நுசுப்பு என்னும் சொல்லுக்கு இடுப்பு எனத் தவறாகப் பொருள் கொண்டதுதான்!. ஆம், இப் பாடல்களில் வரும் நுசுப்பு என்பது ஒருபோதும் இடுப்பு எனப் பொருள்படாது.

துகில் நூலின் வாய்த்த நுண் கேழ் நுசுப்பின் மடவீர் - சிந்தா: 2346

இப்பாடலில் வரும் நுசுப்பு என்பதற்கு இடை எனப் பொருள் கொண்டால், ஆடையின் நூல் போன்ற நுண்ணிய இடை என்று பொருள்வரும். இது மிகவும் நகைப்புக்குரியது. நூல் போன்ற இடையினை எங்கும் காண இயலாது; அது சாத்தியமுமில்லை; அப்படியே இருந்தாலும் அதைப் பார்க்கவே சகிக்காது எனும்போது அதை யாரும் பாராட்ட மாட்டார்கள்.

முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் - சிந்தா:13 3119/3

இப் பாடலில் நுசுப்பானது முல்லை மலரைச் சூடினாலே முரிந்து போகும் என்று கூறப்பட்டுள்ளது. இங்கும் நுசுப்பு என்பது இடை என்ற பொருளில் வராது. காரணம், முல்லை மலரை பெண்கள் யாரும் இடுப்பில் சூடமாட்டார்கள். அப்படியே சூடினாலும் அந்த சிறு மலரின் எடையினைக் கூடத் தாங்காமல் இடுப்பு ஒடிந்து விழுந்தால் அந்தப் பெண் எப்படி உயிர் வாழ்வாள்?. முடியாதன்றோ!.

இதைப்போல இன்னும் பல இடங்களில் இடை எனும் பொருள் பொருந்தவில்லை எனினும் கட்டுரையின் விரிவஞ்சி சில சான்றுகளே மேலே காட்டப்பட்டுள்ளன. ஆக, இதுவரை கண்ட சான்றுகளில் இருந்து, நுசுப்பு என்பதற்கு அகராதிகள் கூறும் இடை என்ற பொருளைத் தவிர பிற பொருள்களும் உண்டு என்பது உறுதியாகிறது. அது என்ன என்று கீழே காணலாம்.

நுசுப்பு - புதிய பொருள்:

நுசுப்பு என்னும் சொல் குறிக்கும் புதிய பொருள் ' கண்ணிமை ' ஆகும்.

நிறுவுதல்:

மேலே கண்ட சான்றுகளில் இருந்து நுசுப்பு என்பது மிக மெல்லியது என்றும் சிறிய பாரம் கூடத் தாங்க மாட்டாதது என்றும் அறியப்பட்டது. மேலும் நுசுப்பானது பிறரால் எளிதில் காணப்படுகின்ற ஒரு புறத்துறுப்பாகவும் இருக்கவேண்டும். பெண்களின் உடலில் அப்படிப்பட்ட உறுப்பு எதுவாக இருக்கும்?. நிச்சயம் அது கண் சார்ந்த உறுப்பாகத் தான் இருக்க வேண்டும். இக் கருத்தினை உறுதிப்படுத்த மேலும் சில ஆதாரங்களைக் கீழே காணலாம்

தாதியர் போற்றத் துணை முலைகள் கொண்ட நுசுப்பு - பெரியபுரா: 1737
நொந்து எடுக்கலாது வீங்கும் வனமுலை நுசுப்பின் தேய்ந்த ஓர் - சிந்தா:6 1532/1

இப் பாடல்வரிகளில் நுசுப்பானது முலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. இவற்றில் வரும் முலை என்பது கண்ணைக் குறிக்கும் என்று மதுரையை எரித்த கண்ணகி என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். கண்ணுடன் தொடர்புடையதால் நுசுப்பும் ஒரு கண் சார்ந்த உறுப்பே என்பது பெறப்படுகிறது. மேலும் ' நுசுப்பு போலத் தேய்ந்த ' என்று கூறப்பட்டுள்ளதில் இருந்து நுசுப்பானது ஒரு மெல்லிய இதழ் போன்றது என்னும் கருத்தும் இங்கே பெறப்படுகிறது. இதனை மேலும் சில சான்றுகளைக் கொண்டு உறுதி செய்யலாம்.

மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் - சிந்தா:1 371/1

இப் பாடலில் நுசுப்பில் எழுதப்படும் அதாவது பூசப்படும் செய்தி கூறப்பட்டுள்ளது. அதிலும் அவ் எழுத்தானது மின்னலைப் போல ஒளிரும் வண்ணத்தால் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் தமது கண்ணிமைகளைத்தான் பூசி அலங்கரிப்பர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். இதிலிருந்து நுசுப்பு என்பது கண்ணிமையினையே குறிக்கும் என்னும் கருத்து மேலும் வலுவாகிறது.

ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னின் துளங்கு நுண் நுசுப்பும் - சீவக - 551
மா நீர் மணி முகிலின் மின்னு கொடி நுசுப்பின் மயில் அம் சாயல் - சிந்தா:5 1354/1
மின் பிறழ் நுசுப்பினார் தாமும் விம்மலால் - கம்பரா: பால:5 111/3

முதல் பாடலில் நுசுப்பு என்பது ஆகத்தின் இடத்தில் பரந்திருப்பது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஆகம் என்றால் கண் என்று ஆகம் என்றால் என்ன? என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். மேலும் நுசுப்பானது மின்னலைப் போல ஒளிவிடும் இயல்புடையதாகவும் இப் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. மின்னலைப் போல ஒளிவிடும் கண்ணின் பகுதி கண்ணிமையே என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். ஏனென்றால், கண்ணிமை மட்டுமே தனது மை பூசப்பட்ட பண்பினால் இமைக்கும்பொழுது மின்னலைப் போல ஒளிர்ந்து மறையும் தன்மையதாகும். எனவே இவற்றில் வரும் நுசுப்பு என்பது கண்ணிமையையே குறிக்கும் என்பது உறுதியாகிறது.

வண்ண மையினால் பூசப்பட்ட கண்ணிமையானது வேங்கையின் பொன் நிற மலரைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப் பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

மையினால் மட்டுமின்றி, பூக்களின் தாதுக்களாலும் கண்ணிமையினை அலங்கரிப்பது வழக்கம். கீழ்க்காணும் பாடல் அதை உறுதிசெய்கிறது.

அரும்பிய சுணங்கின் நுசுப்பு அழித்து ஒலிவரும் - அகம் - 253

இதில் வரும் சுணங்கு என்பது பூந்தாதுக்களையும் நுசுப்பு என்பது கண்ணிமையினையும் குறிக்கும்.

கண்ணிமையில் எழுதப்பட்ட மையணியானது கண்ணின் வட்டப் பகுதியாகிய தோளையே மறைக்கும் அளவுக்கு இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற - சிறு 59,60

இதில் வரும் ஐம்பால் என்பது ஐந்து பிரிவாகப் பூசப்பட்ட மையணியைக் குறிக்கும். இதைப் பற்றி கூந்தலுக்கு மணம் உண்டா? என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம்.

நுழைசிறு நுசுப்பிற்கு எவ்வமாக அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக்    
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின - குறு: 159

இப்பாடலில், அப் பெண்ணின் கண்இமைகள் மெலிந்து வருந்தும்படியாக அவளது கண்கள் பெருத்துப் பருத்திருந்தன என்றும் பார்ப்பதற்கு அவை குங்குமச் சிமிழ்களைப் போல செவ்வண்ணத்தில் அழகாகத் தோற்றமளித்தன என்றும் கூறப்பட்டுள்ளது. ஆகம் எனப்படும் கண்களுடன் ஒட்டி இருக்கின்ற ஒரே உறுப்பு இமையே என்பதால் இங்கும் நுசுப்பு என்பது இமைகளையே குறித்து வந்திருப்பதை அறியலாம்.


திருக்குறளில் நுசுப்பு:

நுசுப்பு எனும் சொல் கண்ணிமை என்ற பொருளில்தான் இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை முன்னர் பல சான்றுகளுடன் கண்டோம். இக் கருத்துக்கு அரண் சேர்ப்பதாக வள்ளுவரின் திருக்குறளும் இருக்கின்றது. அதைப் பற்றி விரிவாக இப் பகுதியில் காணலாம்.

அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை. – குறள் – 1115


இக் குறளில் வரும் நுசுப்பு என்னும் சொல் எவ்வாறு கண்ணிமை என்ற பொருளைக் குறிக்கும் என்பதைக் காணும் முன்னர், இக் குறளுக்கு நமது உரையாசிரியர்கள் எப்படியெல்லாம் உரை எழுதி இருக்கிறார்கள் என்பதையும் அவை எவ்வாறு தவறானவை என்பதையும் முதலில் பார்த்து விடலாம்.

பரிமேலழகர் உரை: (பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது.) அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா. (அம் 'முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறை படுதலும் இலக்கணக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.).

மணக்குடவர் உரை: அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்: இனி இவளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை. இஃது இடையினது நுண்மை கூறிற்று.

கலைஞர் உரை:  அவளுக்காக நல்லபறை ஒலிக்கவில்லை; ஏனெனில் அவள் இடை ஒடிந்து வீழ்ந்துவிட்டாள்; காரணம், அவள் அனிச்ச மலர்களைக் காம்பு நீக்காமல் தலையில் வைத்துக்கொண்டதுதான்.

மு.வ உரை: அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினால், அவற்றால் நொந்து வருத்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா.

சாலமன் பாப்பையா உரை: என் மனைவி தன் மென்மையை எண்ணாமல் அனிச்சம்பூவை அதன் காம்பின் அடிப்பகுதியைக் களையாமல் அப்படியே சூடிவிட்டாள். அதனால் நொந்து வருந்தும் இவள் இடுப்பிற்கு நல்ல மங்கல ஒலி இனி ஒலிக்காது.

உரைத்தவறுகள்:

இனி இவ் உரைகளில் உள்ள தவறுகளைக் காணலாம்.

மேற்கண்ட அனைத்து உரைகளுமே ‘ அனிச்சப்பூக்களை காம்புகளுடன் சூடிக்கொண்டதால், அவற்றின் பாரம் தாங்கமாட்டாமல் தலைவியானவளின் இடைமுரிந்து இறந்துபடப் போவதாகவும் அதனால் இனி அவள் வீட்டில் நல்ல பறைகளன்றி சாப்பறை அதாவது சாவுமேளமே ஒலிக்கும் என்று தலைவன் வருந்துவதாக ‘ ஓர் கருத்தை முன்வைக்கின்றன. ஆராய்ந்து பார்த்தால் இக் கருத்து அடிப்படையிலேயே மிகத் தவறான ஒன்று என்பது புலப்படும். இது எவ்வாறெனில்,

அனிச்சப்பூ மிகமிக மென்மையான மலர். இது எவ்வளவு மென்மையானது என்றால், இதை நாம் முகர்ந்து பார்த்தாலே அதாவது நமது வெப்பமான மூச்சுக் காற்று இதன்மேல் பட்டாலே சுருண்டு வாடிவிடும் என்று வள்ளுவர் வேறொரு குறளில் கூறி இருக்கிறார். அவ்வளவு மென்மையான இதழ்களை உடைய இம் மலரின் பாரத்தைக் கூடத் தாங்க முடியாமல் இடைமுரிந்து விழும்நிலையில் ஒரு பெண் இருப்பாளா?. ஒருபோதும் இருக்கமாட்டாள். காரணம், எந்த ஒரு பெண்ணின் உடலமைப்பும், நீர்க்குடம் தாங்குதல், குழந்தை பெறுதல் போன்ற கடினமான சமயங்களில் தாங்கிநிற்கும் வண்ணம், இயற்கையிலே வலுவான எலும்புகளுடன் தான் இடையானது படைக்கப்பட்டு இருக்கிறது.

இல்லை இல்லை, இதை அறிவியல் ரீதியாகப் பார்க்கக்கூடாது, அப் பெண்ணுடைய இடையின் மென்மையைப் பாராட்டுவதற்காகத் தான் அப்படிக் கூறியிருக்கிறார்கள் என்று சிலர் மறுக்கலாம். ஆனால், அதுவும் உண்மை இல்லை. ‘ அனிச்சப் பூவைக் காம்போடு சூடாதே; இடை முரிந்து இறந்து போவாய்; உன்வீட்டில் சாவுமேளம் ஒலிக்கும் ‘ என்று அமங்கலமாகக் கூறுவதுதான் அவளது இடையைப் பாராட்டும் முறையா?.  இப்படிக் கூறினால் எந்தப் பெண்ணாவது ரசிப்பாளா?. ஒருபோதும் ரசிக்க மாட்டாள்.

இப் பாடல் பயின்று வருவதான ‘ நலம் புனைந்துரைத்தல் ‘ என்ற அதிகாரத்தில் வரும் ஏனைய பாடல்களையும் பாருங்கள். தனது காதலியின் முகத்தை நிலவுடனும் பூவுடனும் ஒப்பிட்டு எவ்வளவு அழகாகக் காதலன் பாடுகிறான் என்று. தனது காதலி எவ்வளவு மென்மையானவள் என்று காட்டுவதற்கு அவன் அனிச்சப் பூவையும் அன்னத்தின் தூவியையும் சான்று காட்டுகிறான். அதுமட்டுமின்றி, இலைக்கொழுந்து, வெண்முத்து, மூங்கில் காய், கூர்வேல் என்று பலவற்றையும் அவளது கண்ணழகிற்கு சான்று காட்டுகிறான். இப்படிப் புகழ்ந்து பாராட்டும் தலைவனா மங்கலமற்ற முறையில் ‘ உனது வீட்டில் நல்ல பறைகள் ஒலிக்கா ‘ என்று சாபம் விடுவதைப் போல பாராட்டுவான்?. அன்புடைய யாரும் இப்படிக் கூற மாட்டார்கள் என்பதால், இவ் உரைகள் தவறானவை என்பது உறுதியாகிறது.

நுசுப்பு என்பது கண்ணிமையே !

நுசுப்பு என்னும் சொல் இப் பாடலில் எவ்வாறு கண்ணிமையைக் குறிக்கும் என்று காணலாம்.

சங்கப் பெண்கள் தமது அல்குல் ஆகிய நெற்றிப் பகுதியில் பூமாலைகள் மற்றும் பிற அணிகலன்களை அணிந்து மகிழ்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அதைப்போல, இப் பாடலில் வரும் தலைவியும் தனது நெற்றிப் பகுதியில் கண்ணிமைகளுக்கு மேலாகத் தொங்குமாறு அனிச்சப் பூமாலையினை அணிந்திருக்கிறாள்.

அந்த மாலையில் இருந்த பூக்களில் காம்புகள் களையப்படவில்லை. இந்தக் காம்புகள் முனையில் உருண்டு திரண்டு பார்ப்பதற்குப் பறையடிக்கும் கோல்களைப் போலத் தோன்றுகிறது தலைவனுக்கு. அதுமட்டுமின்றி, காதலியின் மையுண்ட கண்ணிமைகளோ கரியமை தடவிய பறை போலத் தோன்றுகிறது அவனுக்கு. இப்போது காற்றில் இப் பூமாலையானது லேசாக ஆடவும், அக் காம்புகள் கண்ணிமைகளின் மேல் பட்டுபட்டு எழுகின்றன. இது பார்ப்பதற்கு கோல்கொண்டு பறையடிப்பதாகத் தோன்றுகிறது தலைவனுக்கு. மேலும், இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஏனைப் பறைகளை அடித்தால் ஓசை வரும். ஆனால், இப் பறையில் ஒலி எழும்பாது. அதனால் இதனை ‘ படாஅ பறை ‘ என்று கூறுகிறார் வள்ளுவர்.  இது தலைவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தந்ததால் ‘ நல்ல படாஅ பறை ‘ என்கிறார்.

என்ன அழகான ஒரு உவமைநயம் இப்பாடலில் கூறப்பட்டு இருக்கிறது பாருங்கள். !. இதுதான் இப் பாடலுக்கு மிகப் பொருத்தமாகவும் இருக்கிறது அல்லவா?. இதிலிருந்து இப் பாடலில் வரும் நுசுப்பு என்பது கண்ணிமையைத் தவிர வேறெதையும் குறிக்காது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளலாம். இனி, இக் குறளுக்கான புதிய விளக்கம் இதுதான்:

" அனிச்சப் பூக்களைக் காம்பு களையாமல் கண்ணிமையின்மேல் அணிந்துகொண்டாள். அது ஒலிக்காத நல்லதோர் பறைபோலத் தோன்றுகிறது.  "


கொடியும் நுசுப்பும் :

நுசுப்பு என்ற சொல்லுக்கு இடை என்ற பொருளைக் கொண்டு, கொடி புரையும் நுசுப்பு என்ற பாடல் வரிகளுக்கு ' கொடியைப் போன்ற மெல்லிய இடை ' என்று இதுநாள்வரை பொருள் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அது தவறான கருத்தாகும் என்று மேலே கண்டோம். என்றால் உண்மையில் கொடி புரையும் நுசுப்பு என்பதன் சரியான விளக்கம் என்ன என்று இங்கே காணலாம்.

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் - திரு -101
கொடி புரையும் நுசுப்பினாய் - கலி 58
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ - கலி 1/7

இப் பாடல்களில் வரும் கொடி புரையும் நுசுப்பு என்பது

கொடியைப் போன்ற கண்ணிமை என்று பொருள்படும்.

சரி, கண்ணிமைக்கும் கொடிக்கும் என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன? ஏன் அதனைக் கொடியுடன் ஒப்பிட வேண்டும்?. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

கொடியானது தொடர்ந்து வளரும் இயல்புடையது. அதைப்போல கண்ணிமைகளும் தொடர்ச்சியாக வண்ணங்களால் பூசப்படும் தன்மையது. 

கொடியினை ஒரு பற்றுக்கோடு தாங்கியிருக்கும். அதைப் போல கண்ணிமையினைக் கண் தாங்கி நிற்கின்றது.

கொடியில் பூ தோன்றும். அதைப்போல பெண்கள் தமது கண்ணிமைகளின் மேல் பல வண்ணங்களில் ஆன பூக்களை வரைவர்.   

கொடி மிக மெல்லிய தடிமன் கொண்டது. அதைப் போலவே கண்ணிமையும் மிக நுட்பமான தடிமன் கொண்டது அதாவது மெல்லியது..

கொடியில் பல வளைவுகள் இருக்கும். அதைப்போல கண்ணிமையிலும் பல வளைவான வரிகள் இருக்கும்.

இப்படி பல காரணங்களால் ஒத்திருப்பதால் தான் கண்ணிமையினைக் கொடியுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் பாடியுள்ளனர். மேலும், கொடி பொன்ற கண்ணிமையினை உடைய பெண்டிரை ' கொடிச்சி ' என்று அழைப்பது இலக்கிய வழக்கம். அதைப் பற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு - நற் 85/9
நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே - குறு 272/8
பேர் அமர் மழை கண் கொடிச்சி - குறு 286
இரும் பல் கூந்தல் கொடிச்சி பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே - ஐங் 281/3,4
பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும் - ஐங் 282/2
பூ கமழ் கூந்தல் கொடிச்சி நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே - ஐங் 290/3,4
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் - மலை 304
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை - அகம் 58

மேற்காணும் பாடல்களில் கொடிச்சி என்ற சொல்லானது கதுப்பு, கூந்தல், மழைக்கண் ஆகியவற்றுடன் இணைந்து வந்துள்ளதைக் காணலாம். கதுப்பு என்பதும் கூந்தல் என்பதும் மழைக்கண் என்பதும் மை உண்ட கண்ணிமைகளையே குறிக்கும் என்று முன்னர் கட்டுரைகளில் கண்டோம். இதிலிருந்து இப் பாடல்களில் பயின்றுவரும் கொடிச்சி என்னும் சொல் ' கொடி போன்ற கண்ணிமையை உடையவள் ' என்பதையே அன்றி ' கொடி போன்ற இடுப்பை உடையவள் ' என்ற பொருளைக் குறிக்காது என்பதைத் தெள்ளிதின் அறியலாம்.

அலங்காரம் நீங்கிய கண்ணிமையினை பூவினை இழந்த கொடியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்

பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் - கலி 132/18


முடிவுரை:

சங்க காலத்தில் பெண்களைக் ' கொடிச்சி ' என்று அழைத்ததைப் போல இன்றைய காலகட்டத்தில் பெண்களைப் ' பூங்கொடி ' என்று அழைப்பது வழக்கம். திரைப்படப் பாடல்களில் தொடங்கி பெண்களுக்கு இடப்படும் பெயர்கள் வரை 'பூங்கொடி' என்ற சொல் வெகுவாகப் புழங்கப்பட்டு வருகிறது. இச் சொல்லுக்கு ' பூவினை உடைய கொடி போன்ற இடுப்புடையவள் ' என்றே இதுநாள்வரையிலும் பொருள்கொள்ளப் பட்டு வந்துள்ளது. ஆனால் அது தவறு என்பதும் ' பூவினை உடைய கொடி போன்ற மை பூசப்பட்ட இமைகளை உடையவள் ' என்பதே சரியான பொருள் என்பதும் இக் கட்டுரையின் மூலம் அறிந்து தெளியலாம்.

********************************************************

2 கருத்துகள்:

  1. நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
    பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

    புரைய என்பது மாமையை வேங்கைமலரொடு ஒப்பிடுகிறது. நுசுப்பை அல்ல,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேந்தன் அரசு ஐயா,

      வருக வருக. இங்கு மாமை என்பது நுசுப்பிற்கும் வேங்கை மலருக்கும் பொதுவான பண்பு ஐயா. அதனால் தான் இச் சொல்லை இரண்டுக்கும் நடுவில் வைத்துப் புலவர் பாடுகிறார்.

      அன்புடன்,

      தி.பொ.ச.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.