புதன், 24 ஜூன், 2015

நுதலும் நுதலப்படாத கருத்துக்களும்


முன்னுரை:

நுதல் என்னும் சொல் சங்க காலத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கிழந்த நிலையில் உள்ள பல சொற்களுள் ஒன்றாகும். இச் சொல்லுக்குச் சில பொருட்களை தற்கால அகராதிகள் கூறி இருந்தாலும் அப் பொருட்கள் பல இடங்களில் குறிப்பாக பெண்களைப் பொருத்த மட்டில் பொருந்தாத நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு சில பொருட்களும் உள்ள நிலையினையே எடுத்துக் காட்டுகிறது.  இக் கட்டுரையில் இச் சொல் குறிக்கும் வேறு பொருட்களைப் பற்றிக் காணலாம்.

தற்போதைய பொருட்கள்:

நுதல் என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் கூறும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இணையத் தமிழ்ப் பேரகராதி: சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம்.
கழகத் தமிழ்க் கையகராதி: நெற்றி, தலை, புருவம், சொல்.

பொருள் பொருந்தாமை:

மேற்காணும் பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களில் பொருந்துகின்றதா என்று பார்ப்போம்.

ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.- ஐங்கு-55
ஒள் நுதல் பசப்பித்தோரே - ஐங்கு. 67
சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து -ஐங்கு.107
என் நுதல் பசப்பதுவே. - ஐங்கு.222
திருநுதல் பசப்பவும் - ஐங்கு.230
வாள்நுதல் பசப்ப - ஐங்கு.423
ஒள்நுதல் பசப்பது எவன்கொல் - ஐங்கு.219
ஒள்நுதல் பசத்தல் - ஐங்கு.225
நல்நுதல் பசப்பவும் - ஐங்கு.227
நல்நுதல் பசத்தல் - ஐங்கு.234
ஒள்நுதல் பசப்ப - ஐங்கு.424
சுடர்நுதல் பசலை - கலி.125
வாள்நுதல் பசப்பு ஊர - கலி.127
ஆய்நுதல் பசப்பே - கலி.144
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் - கலி.25
நுதல் ஊரும் பசப்பு - கலி.28
பசந்தன்று நுதல் - கலி.36
நுதல் பசப்பு ஊர - கலி.99. அக.-205

மேற்காணும் பாடல்கள் அனைத்தும் காதலி அழுதுநின்ற நிலையைக் கூறுகின்றன. பசப்பு, பசத்தல், பசலை ஆகிய சொற்கள் யாவும் அழுகையைக் குறிக்கும் என்று ஏற்கெனவே நாம் பசப்பு என்றால் என்ன? என்ற கட்டுரையில் ஆய்வுசெய்து நிறுவியுள்ளோம். இந் நிலையில், அழுகையுடன் தொடர்புடைய உறுப்பாக மேற்காணும் பாடல்கள் அனைத்திலும் குறிப்படப்படும் 'நுதல்' என்ற சொல்லுக்குப் பொருளாக நெற்றியோ புருவமோ தலையோ பொருந்தாது. ஏனென்றால் நெற்றியோ புருவமோ தலையோ அழுவதில்லை.

அடுத்து 'சிறுநுதல்' என்ற சொல்லானது ஐங்குறுநூறு.394, 179. குறுந்தொகை-129. அகநானூறு.-57,334, 307. புறநானூறு.-166 ஆகிய இடங்களில் பயின்று வந்துள்ளது. சிறு என்றால் சிறிய அளவினது என்ற பொருள்நிலையில் இங்கும் நுதல் என்னும் சொல்லுக்கு முற்சொன்ன ஐந்து பொருட்களும் பொருந்தாது. இது எவ்வாறெனில் நெற்றியும் தலையும் அகன்ற பரப்புடையவை; புருவமோ நீளமானது ஆகும். சொல்லுக்கும் மேலிடத்திற்கும் சிறுமைப் பண்பு பொருந்தாது.

அடுத்து சுடர்நுதல், வாள்நுதல், ஒள் நுதல், நறுநுதல் ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் பல இடங்களில் பயின்று வந்துள்ளன. இச் சொற்களில் நுதல் என்னும் சொல்லுடன் அடைமொழியாய் வருகின்ற சுடர், வாள், ஒள், நறு ஆகிய சொற்கள் யாவும் ஒளிரும் பண்பைக் குறிப்பவை என்று நாம் நன்கு அறிவோம். இந்த நான்கு சொற்களும் ஒளிரும் பண்பையே குறிக்கின்ற நிலையில் இவற்றை அடைமொழியாகக் கொண்ட நுதல் என்னும் சொல்லுக்குப் பொருளாக சொல், நெற்றி, புருவம், தலை, மேலிடம் என்ற பொருட்களில் எதுவும் பொருந்தாது. ஏனென்றால் இவற்றில் எதற்குமே ஒளிரும் பண்பு இல்லை.

இவற்றில் இருந்து நுதல் என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறியுள்ள பொருட்கள் நீங்கலாக பிற பொருட்களும் உண்டு என்று தெளியலாம்.

நுதல் - புதிய பொருள் என்ன?
நுதல் என்ற சொல் குறிக்கும் புதிய பொருட்கள் ஒன்றல்ல, இரண்டு. அவை: கண் விழி மற்றும் கண் இமை.

இச் சொல் சில இடங்களில் தனியே கண்விழியினையும்
சில இடங்களில் கண் இமையினையும்
சில இடங்களில் இரண்டு பொருட்களிலும் பயின்று வந்துள்ளது.

அந்தந்த இடத்துக்கேற்றாற் போல இச் சொல்லின் பொருளைத் தேர்வு செய்து கொள்ளலாம்

நிறுவுதல்:

நுதல் என்ற சொல் எவ்வாறு கண், கண்ணிமை ஆகியவற்றைக் குறிக்கும் என்று இங்கே ஆதாரங்களுடன் காணலாம். 

பசப்பு, பசலை, பசத்தல் ஆகிய சொற்கள் அழுகை அல்லது கண்ணீரைக் குறிக்கும் என்று ' பசப்பு என்றால் என்ன? ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இனி, இந்த சொற்களுடன் தொடர்புற்று நுதல் என்ற சொல் வரும் இடங்கள் பல இருந்தாலும் சிலவற்றை மட்டும் இங்கே விளக்கங்களுடன் காணலாம்.

நறு நுதல் பசத்தல் அஞ்சி - நற் 1/8
( ஒளிமிக்க கண்கள் அழுவது கண்டு அஞ்சி...)

நுதல் கவின் அழிக்கும் பசலையும் - நற் 73/10
( கண்களின் அழகினைக் கெடுக்கின்ற கண்ணீரும்...)

சுடர் புரை திரு நுதல் பசப்ப - நற் 108/8
( சந்திரன் போன்ற அழகிய கண்கள் கலங்க.....)

நன் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை - நற் 288/5
( நலமிக்க கண்களிலே பரவிய கண்ணீரைக் கண்ட அன்னை......)

பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் - கலி 36/12,13
( கண்ணீர் ஒழுக ஒழுக கலங்கியது கண்கள்......)

பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை - கலி 99/10
( பிறைச்சந்திரன் போன்ற கண்களில் கண்ணீர் பெருக பெருந்துன்பம் அடைந்தவளை....)

வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை - கலி 127/17
( ஒளிமிக்க கண்களிலே கண்ணீர் பெருக இவளை நீ பிரிந்தசென்றதை........)

மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி கயல் உமிழ் நீரின் கண் பனி வார - அகம் -169
( மென்மையான விரல்களால் கண்இமைகளைக் கசக்கவும், பெருகிய கண்ணீரானது, மீன் தன் வாயால் உமிழ்கின்ற நீரினைப் போல வழிந்தோட......)

இப் பாடலில் கண்ணை மீனுக்கும், கண்ணில் இருந்து பெருகி வழியும் கண்ணீரினை மீன் உமிழ்கின்ற நீருக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

மேற்கண்ட பாடல்களில் நுதல் என்பது அழுகையுடன் தொடர்புற்று வருவதால், நுதல் என்பது இங்கு கண்ணையே குறிக்கும் என்று தெளியலாம். இருந்தாலும், நுதல் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள நுதல் குறித்த உவமைகள் உதவும் என்பதால் அவற்றையும் ஈண்டு காணலாம்.

நுதலுக்கான உவமைகள்:

பெண்களின் நுதலினை சந்திரன், இமைக்கின்ற மீன் ஆகிய விண்மீன், மலர், ஊர், இமைக்காத மீன் ஆகிய நீர்வாழ்மீன், கடைவீதி, வில் ஆகியவற்றுடன் ஒப்பிட்டும், யானையின் நுதலினை நெருப்புக்கும், வேங்கைப் பூவுக்கும் ஒப்பிட்டும் இலக்கியங்கள் கூறுகின்றன. இவற்றை விரிவாகக் கீழே காணலாம்.

சந்திரனும் நுதலும்:

பெண்களின் நுதலைச் சந்திரனுடன் ஒப்பிட்டுப் பல பாடல்கள் கூறுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெண்களின் கண்ணை பிறைச்சந்திரனுடன் ஒப்பிட்டே கூறுகின்றன. இதன் காரணம் யாதெனில், பெண்கள் நிலம் நோக்கியவாறு இருக்கும்பொழுது, அவர்களின் கண்ணிமை தாழ்ந்து, கண்விழியின் சிறிய கீழ்ப்பாகம் மட்டுமே வெளியில் தெரியும். இப் பாகமானது வளைவாகவும் ஒளிருவதாகவும் இருப்பதால், இதனை பிறைச்சந்திரனுடன் ஒப்பிட்டுப் பாடியுள்ளனர் புலவர்கள். இதனை பிறைநுதல் என்றும் சிறுநுதல் என்றும் இலக்கியம் கூறுகிறது.

கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம் - சிந்தா - 1487
( வளைந்த பிறைச்சந்திரனைப் போன்ற கண் யமனைப் போலவும் குவிந்த கண்ணிமையானது யமன் கையில் உள்ள பாசக்கயிறாகவும்.....)

மேலே உள்ள பாடல் வரிக்கு, நுதல் = கண், முலை = கண்ணிமை என்ற புதிய பொருட்களின் அடிப்படையில் விளக்கம் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய உரையாசிரியர்கள், வளைந்த பிறைச்சந்திரன் போன்ற நெற்றி ஒரு யமனைப் போலவும், குவிந்த மார்புகள் அந்த யமன் கையில் இருக்கும் பாசக்கயிறாகவும் என்று விளக்கம் கூறும்போது பாடலில் கூறப்பட்டிருக்கும் உவமைகளின் அழகு அங்கே முற்றிலும் அற்றுப் போவதுடன் கொஞ்சமும் பொருந்தாமையையும் பாருங்கள்.

நெற்றி எங்கே இருக்கிறது? தலையில்.
மார்பு எங்கே இருக்கிறது?. கழுத்தின் கீழே.
இந்த இரண்டு உறுப்புக்களும் தொடர்பற்று தூரத்தில் இருக்கின்றன. இந்நிலையில்,

தலையில் யமன் இருப்பதாகக் கொண்டால், அவன் கையில் இருக்கும் பாசக்கயிறு மட்டும் மார்பில் எப்படி இருக்கமுடியும்?. இந்த இரண்டு இடங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் கூறப்பட்ட உவமை பொருந்தாமல் அழகு குன்றிவிடுகிறது அல்லவா?. அதுமட்டுமின்றி,

நெற்றியை எப்படி யமனாகக் கொள்ள முடியும்?. யமனோ பாசக்கயிறை வீசுபவன். ஆனால் நெற்றி எதை வீசும்?. அதனிடம் என்ன இருக்கிறது வீச?
மார்பினை எப்படிக் கயிறாகக் கொள்ள முடியும்?. கயிற்றினை நீட்டவும் சுருக்கவும் முடியும். ஆனால் மார்பினை அவ்வாறு செய்ய முடியுமா?.

அப்படியானால், தொடர்பே இல்லாத இரு பொருட்களை உவமையாகக் கொண்டு பாடல் இயற்றி இருக்கிறார்களா? என்ற கேள்வி எழலாம். இல்லை. தொடர்புள்ள பொருட்களைக் கொண்டே பாடல் இயற்றப்பட்டு இருக்கிறது. அவற்றின் சரியான பொருளை உணரத் தவறிவிட்டதால், வந்த விளைவு இது. இப்போது புதிய பொருட்களின் அடிப்படையில் இந்த உவமைகளில் உள்ள அழகினைக் காணலாம்.

யமனைப் பார்த்தவுடன் நமக்கு என்ன தோன்றும்?. அவனுடைய உருவத்தை அருகில் கண்டதும் மனதில் ஒரு நடுக்கம் தோன்றும் அல்லவா.? அதைப் போல அழகான பெண்களின் ஒளிவீசும் கண்களை அருகில் கண்டதும் ஆண்களின் மனதில் ஒரு நடுக்கம் அல்லது தடுமாற்றம் தோன்றும். அந்தக் கண்களின் பார்வை ஆடவரின் உயிருக்குள் ஊடுருவி என்னென்னவோ செய்யும். அதனால் தான் பெண்களின் கண்ணை உயிருண்ணும் யமனுக்கு ஒப்பிடுவது இலக்கிய வழக்கமானது. இப்படி ஆடவரின் உயிரினைப் பறித்துச் செல்வது எது.? எமன் வீசுவதாகக் கூறப்படும் பாசக் கயிறு தானே.?. இதைப் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளுடன் ஒப்பிடுகிறார் புலவர். காரணம், கண்ணிமைகள் மென்மையாக இருப்பதால், அவை கயிறு போல நீளவும் சுருங்கவும் வல்லன என்பதுடன் கண்ணுக்கு மேலேயே இருப்பதால், அதனை யமன் கையில் இருக்கும் கயிறாக உவமைப் படுத்தி இருக்கிறார். எவ்வளவு அழகான உவமை பாருங்கள்.

இப்படி ஒவ்வொரு உவமையும் சிறப்பானதோர் காரணம் பற்றியே அன்றி மேம்போக்காகக் கூறப்படவில்லை. உவமையின் சிறப்பினை அறிய வேண்டுமானால் சொற்களின் சரியான பொருளை அறிய வேண்டும். அன்றேல், இதுபோன்ற தவறுகளே நேரிடும். இனி மேலும் சில உவமைகளை அவற்றின் விளக்கங்களுடன் கீழே காணலாம்.

பிறை போல் திரு நுதல் - பொரு 25
( பிறைச்சந்திரனைப் போன்று ஒளிவீசும் அழகிய கண். )

பிறை என மதி மயக்குறூஉம் நுதலும் - குறு - 226
( பிறைச்சந்திரனோ என மதிமயங்கச் செய்யும் கண்ணும் ......)

பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே - நற் 167/11
(பிறைச்சந்திரன் போன்ற அழகிய கண்ணில் வடிகின்ற கண்ணீர்.....)

பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் - நற் 250/7,8
( பிறைச்சந்திரனைப் போன்ற ஒளியினை உடைய களங்கமற்ற அழகிய கண் ....)

சந்திரனின் இளம்பிறையுடன் மட்டுமின்றி, முழுநிலவுடனும் கண்ணை ஒப்பிட்டுப் பாடியுள்ளனர். 

மதி இருப்பு அன்ன மாசு அறு சுடர் நுதல்- அகம் 192/1,2
( சந்திரன் தங்கி இருப்பதைப் போல களங்கமற்ற ஒளிவீசுகின்ற கண்கள்...)

பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் - நற் 128/2
( இதில் வரும் பாம்பு என்பது மேகத்தைக் குறிக்கும். இதன் பொருள்: மேகம் மறைத்த நிலவினைப் போல கண்ணீரினால் கண்ணின் ஒளி மறைய......)

அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப - அகம் 313/7
( இதில் வரும் அரவு என்பதும் மேகத்தைக் குறிக்கும். இதன் பொருள்: மேகம் மறைத்த நிலவினைப் போல கண்ணீரால் கண்ணின் ஒளி மறைய...)

இப் பாடல்களில், கண்ணை நிலவுக்கும், கண்ணை மறைக்கும் கண்ணீரினை நிலவினை மறைக்கின்ற மேகத்துக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர். கண்ணீர் என்பதனை நேரடியாகக் கூறாமல் பாடலின் ஏனைய வரிகளால் உய்த்துணர வைத்தார்.

கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்    நன் நுதல் நீவிச் சென்றோர் - நற் - 316
( வானத்து நிலவு எனத் தோன்றும் உனது கண்ணின் இமைக்கு மை இட்டுச் சென்றவர்....)

இந்து நுதல் நின்னொடு இவண் எய்தி - சுந்:5 9/1
( சந்திரன் போன்ற கண்ணுடைய உன்னோடு இங்கு வந்து .............)

திங்கள் வாள் நுதல் மடந்தையர் - சுந்:12 49/1
( சந்திரனைப் போல ஒளிரும் கண்ணுடைய பெண்டிர்.........)

இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் - யுத்1:1 8/1
( சந்திரனைப் போன்ற கண்ணுடைய பேதை இருந்தாள்.........)

குழவி கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறு நுதலும் அணி வட்ட மதி முகமும் - சிந்தா -165
( சந்திரனின் இளம்பிறையானது முழுமதியுடன் ஒன்றுகூடியதைப் போல, வட்டவடிவிலான ஒளிவீசும் முகத்தில் அழகிய சிறிய அடிக்கண் தோன்ற..........)

ஊரும் நுதலும்:

பெண்களின் ஒளிமிக்க கண்களை ஊருடன் ஒப்பிட்டுக் கூறுகிறது ஐங்குறுநூற்றுப் பாடலொன்று.

பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம் பெறு சுடர் நுதல் தேம்ப - ஐங்கு -56

(பொருள்: ஒளிவீசும் விளக்குகளால் இரவுப் பொழுதே அறியாவண்ணம் போர் வெற்றியினைக் கொண்டாடிய சோழர்களின் ஆமூர் என்ற ஊரினைப் போல இரவெல்லாம் உறக்கமின்றி ஒளிர்ந்த இவளது கண்கள் ஒளியிழந்து வாட......)

இமைக்கின்ற மீனும் நுதலும்:

பெண்களின் கண்ணை வானத்தில் ஒளிவீசுகின்ற விண்மீனுடன் ஒப்பிட்டு கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப்படைப் பாடலொன்று கூறுகிறது.

பெரு நல் வானத்து வட வயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறு நுதல் - - பெரும் 303,304
( பெரிய வானத்தின் வடக்குத் திசையிலே ஒளிவிடுகின்ற சிறிய விண்மீனைப் போன்று கற்புடையாளின் ஒளிரும் கண்.......)

இமைக்காத மீனும் நுதலும்:

பெண்களின் கண்களை நீரிலே நீந்தித் திரிகின்ற மீன்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது குறுந்தொகைப் பாடலொன்று.

ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என் மகள் நுதலே - குறு - 114
( ஆரல் மீன்களை உண்ட நாரையானது 'மீன்' என நினைத்துப் பாய்ந்துதாக்குகின்ற எனது மகளின் சிறிய கண்......)

இங்கு மிதித்தல் என்பதற்கு ' பாய்ந்து தாக்குதல்' என்ற அகராதிப் பொருளைக் கொள்ளவேண்டும்.

பெண்கள் தமது கண்களைச் சுற்றிலும் மையிட்டு அலங்கரிப்பது பொதுவான வழக்கம். ஆனால், சங்க காலப் பெண்கள் தமது கண்களை மீன் போல மையால் எழுதி அலங்கரித்த செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறியலாம்.

மகர வலயம் அணி திகழ் நுதலியர் - பரி -10
( மகரமீன் போல வரையப்பட்ட அலங்காரம் திகழ்கின்ற கண்ணிமைகளை உடையவர் .......)

சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் - பெரும் 385,386
( சுறாமீனின் வாய் போல எழுதிய வண்டுகள் சூழும் ஒளிவீசும் கண்........)

மலரும் நுதலும்:

பெண்களின் கண்களை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற இலக்கியப் பாடல்களில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பனி வளர் தளவின் சிரல் வாய் செம் முகை
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப
பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே - ஐங்கு - 447

(பொருள்: மீன்கொத்தியின் வாய்போலக் கூரியதும் சிவந்ததுமான குளிர்ச்சி பொருந்திய முல்லையின் முகையினைக் கருநிற வண்டு ஊத, மலர்ந்த வெண்ணிற மலர்போல் அழகுடைய ஒளிமிக்க கண்களைக் காண்போம்...)

இப் பாடலில் வரும் உவமைகளைப் பாருங்கள். கண்ணின் வெள்ளைப் பகுதியினை மலர்ந்த முல்லை மலருக்கும், கண்ணின் நடுவில் இருக்கும் கருவிழியினை கரியநிற வண்டுக்கும் உவமைப் படுத்தி இருக்கிறார் புலவர். அதாவது, முல்லை முகையினை வண்டு ஊத, அது மலர்கின்றது. அப்போது அந்த வெண்ணிற மலரின் நடுவே கருநிற வண்டு இருக்கும். இதனை வெண்ணிற விழியின் நடுவே இருக்கும் கருவிழிக்கு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார். அழகான உவமைதான் இல்லையா.?

நன் நுதல் நாறும் முல்லை மலர - ஐங் 492/2
(கண் போல் ஒளிரும் முல்லை மலர....)

பூத்த முல்லை பசு முகை தாது நாறும் நறு நுதல் - குறு - 323
( பூத்த முல்லை மலரின் பூந்தாதுக்களால் ஒளிர்கின்ற கண்ணிமை......)

காந்தள் மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே - அகம் - 238
( வெண்காந்தள் மலரின் மெல்லிய புது முகை அவிழ்ந்து மலர்ந்ததைப் போல ஒளிரும் கண்ணுடையவளுக்கு.......)

குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் - குறு 59
( வெண்குவளை மலரின் நடுவே அமர்ந்திருக்கும் கருங்குளவியினைப் போல ஒளிரும் கண்.......)

இதில் வெண்குவளை மலரினை கண்ணின் வெள்ளைப் பகுதிக்கும் கரிய குளவியினை கண்ணின் கருவிழிக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் - குறு - 259
( வெண்காந்தள் மலரின் முகை அவிழ்ந்ததைப் போல ஒளிர்கின்ற கண்.......)

சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல்- அகம் 338/7,8
( வெண்காந்தள் மலரினைப் போல ஒளிரும் கண்.............)

பிரிந்தவர் நுதல் போல பீர் வீய - கலி 31/4
( காதலரைப் பிரிந்தவரின் பொன்னிற ஒளியிழந்த வாடிய கண் இமைகளைப் போல பீர்க்கின் மஞ்சள்நிற மலர் வாடி அழிய.......)

தீம் பெரும் பைம் சுனை பூத்த தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே - அகம் 78
(இனிய நீருடைய சுனையிலே பூத்த தேன் நிறைந்த வெண்குவளை மலர் போன்ற இவள் கண்ணே......)

கடைவீதியும் நுதலும்:

பெண்களின் கண்களை கடைவீதிக்கு ஒப்பிட்டுக் கூறுகிறது அகநானூற்றுப் பாடலொன்று.

வாடா வேம்பின் வழுதி கூடல் நாள்அங்காடி நாறும் நறு நுதல் - அகம் - 93

பொருள்: வாடாத வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனின் கூடல் நகரில் இருந்த பகல்நேரக் கடைத்தெருவினைப் போல ஒளிவீசும் கண் அல்லது கண்ணிமை...........

இப்பாடலில் வரும் நுதல் என்பதற்கு கண் என்றும் கண்ணிமை என்றும் பொருள்கொண்டு இருவிதமான விளக்கங்களைக் கொள்ள முடியும். முதலாம் விளக்கப்படி அதாவது  கடைத்தெருவினைக் கண்ணுடன் உவமைப்படுத்தியதில் இருந்து, மையத்தில் ஒரு ஆலமரம் போல பெரிய மரமோ குளமோ கோவிலோ வேறு ஒரு கட்டிடமோ இருக்க, அதைச் சுற்றிலும் வட்டமாகக் கடைத்தெரு அமைந்திருந்தது என்றோ, அந்தக் கடைத்தெருவில் இருந்த கடைகளுக்கு மேலாக, வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டி, வெயிலைப் பிரதிபலிக்கின்ற வெள்ளைநிறத் துணியினை படுதா போலக் கட்டி இருந்தார்கள் என்றோ பொருள்கொள்ளலாம்.

இரண்டாவது விளக்கப்படி அதாவது கடைத்தெருவினைக் கண்ணிமையுடன் உவமைப்படுத்தியதில் இருந்து, கண்ணிமையில் பூசப்பட்டிருந்த பலவண்ண அணிகளைப் போல, பொன், வெள்ளி, செம்பு, காய்கறிகள், பழங்கள், ஆடைகள் எனப் பல வண்ணப் பொருட்களை உடையதாய் அந்த கடைத்தெரு இருந்தது எனப் பொருள் கொள்ளலாம்.

வில்லும் நுதலும்:

பெண்களின் அழகிய கண்ணை வில்லுக்கு உவமையாக்கிக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன. கண்ணை வில்லுடன் உவமைப்படுத்துவதன் முதன்மைக் காரணம், வில்லானது கூரிய அம்பினை உமிழ்ந்து உடலைக் காயப்படுத்துவதைப் போல, பெண்களின் கண்ணானது அழகு என்னும் அம்பினை உமிழ்ந்து காளையர் மனதினை காயப்படுத்துவதே. மேலும், வெண்ணிற ஒளிவீசும் பெண்களின் கண்ணைச் சுற்றி கண்ணிமைகளில் வளைவாகப் பூசப்பட்டிருக்கும் மையணியானது பார்ப்பதற்கு ஒரு வில் போலத் தோன்றுவதனை இன்னொரு காரணமாகக் கொள்ளலாம். 

வில் ஒக்கும் நுதல் என்றாலும் வேல் ஒக்கும் விழி என்றாலும் - ஆரண்:10 74/1
( வில் போன்ற கண்ணிமை என்றாலும் வேல் போன்ற கண்விழி என்றாலும்......)

சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல் - சிந்தா:3 657/1
( வில்லின் தொழிலைச் செய்யும் சிறிய கண் இமைகளை உடைய தெய்வ மகள் போல...........)

பூட்டார் சிலை நுதலாள் புல்லாது ஒழியேனே - சிந்தா -1042
( அம்பு பூட்டிய வில் போன்ற கண் இமையினை உடையவளை பொருந்தாது ஒழியேன்.......)

வில்லி வாங்கிய சிலை என பொலி நுதல் - அயோ:10 13/1
 ( வில்லாளன் கையில் இருக்கும் வில் போல பொலிந்த கண் இமை........)

வில் கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர் கொழுந்தே - அயோ:10 17/1
( வில் போன்ற ஒளிமிக்க கண்ணிமைகள் விளங்குகின்ற இளம் தளிரின் கொழுந்து போன்றவளே .......)

தனு எனும் திரு நுதலி வந்தனள் - கிட்:10 66/4
( வில் எனும்படியான அழகிய கண் இமை உடையாள் வந்தாள்...........)

வார் கணை கோல் எய்யும் குனி சிலை நுதலினாரொடு - சிந்தா -90
( நீண்ட அம்பினை எய்கின்ற வளைந்த வில்லினைப் போன்ற கண் இமைகளை உடையவரோடு.......)

யானையும் நுதலும்:

யானையின் கண்ணினை நெருப்புடன் ஒப்பிட்டுப் பல பாடல்கள் உள்ளன. பொதுவாக அச்சத்தில் அல்லது சினத்தில் இருக்கும் யானையின் கண்கள் நெருப்பு நிறத்தில் இருக்கும். இதனை பூ நுதல் என்றும் புகர் நுதல் என்றும் இலக்கியம் கூறுகிறது. இதில் வரும் புகர் என்பது கபிலநிறமான அடர் செந்நிறத்தைக் குறிக்கும். பூ என்பது வேங்கை மரத்தின் சிவந்த பூவினைக் குறிப்பதாகவோ நெருப்பினைக் குறிப்பதாகவோ கொள்ளலாம். பூ என்பதனை எப்படி நெருப்பென்று பொருள் கொள்ளலாம் என்றால், தீயின் கங்குகளை மிதிப்பதனை ' பூ மிதித்தல் ' என்று சொல்லுவதைப் போலத்தான் இதுவும். பூ என்பதற்கு தீப்பொறி, தீ போன்ற பொருட்களை அகராதிகள் கூறியிருப்பதுவும் இதற்கொரு சான்றாகும். மேலும், யானையின் செந்நிறக் கண்களின் மேல் உள்ள கண்ணிமையானது பல வரிகளை உடையதாய் இருக்கும். இதனை வரிநுதல் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

மேலும் போரில் ஈடுபடும்போது எதிரிகள் யானையின் தலையினை தாக்காதிருக்க, யானையின் தலையின் மேல் கும்பம் போன்றதோர் உலோக அணியினைக் கட்டி விடுவர். இதனை ஓடை என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. யானையின் தலையினை முழுதுமாய் மறைத்துக் காக்கின்ற இந்த அணியில் யானையின் கண்களுக்கு மட்டும் சிறிய திறப்பு அல்லது ஓட்டை இருக்கும். இவ்வளவு பாதுகாப்பு இருந்தபோதிலும், போரின்போது எதிரி வீரர்கள் இந்த ஓட்டையின் வழியாகத் தெரிகின்ற யானையின் கண்களையே குறிபார்த்து அம்பு அல்லது வேல் கொண்டு தாக்குவர். காரணம், யானையின் உடம்பில் எவ்வளவு அம்புகள் பாய்ந்தாலும் அது சமாளித்துக்கொண்டு கீழே விழாமல் எதிரிகளைப் பந்தாடும். ஆனால் ஒரே ஒரு அம்பு அல்லது வேல் யானையின் கண்ணில் பாய்ந்தாலும், அதனால் நிற்க முடியாமல் அலறிக்கொண்டு கீழே விழுந்துவிடும். களவழி நாற்பது என்னும் இலக்கியத்தில் இதுபற்றிய செய்திக் குறிப்புகள் உள்ளன. இக் குறிப்புக்களையும் யானையின் கண் குறித்த ஏனைய பாடல்களில் சிலவற்றையும் இங்கே காணலாம்.

வரி நுதல் ஆடு இயல் யானை தட கை ஒளிறு வாள் ஓடா மறவர் துணிப்ப
துணிந்தவை கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே - களம் -22

( பொருள்: வரிகளைக் கொண்ட கண்ணிமையினையும் அசையும் நடையினையும் உடைய யானையின் துதிக்கையினை அஞ்சி ஓடாத எதிரி வீரர்கள் தமது வாள்கொண்டு வெட்டிவீழ்த்த, துதிக்கை இழந்து நீண்டு வளைந்த தந்தத்தை மட்டும் கொண்டிருந்த அத் தோற்றமானது, வானத்தில் வளைந்த வெண்மையான பிறைச்சந்திரனின் ஒரு முனையினைக் கருமேகம் ஒன்று தீண்டியது போலத் தோன்றியது.....)

இப் பாடலில் வருகின்ற பாம்பு என்பது மேகத்தைக் குறிக்கும். யானையின் தந்தத்தினை பிறைச்சந்திரனுக்கும் யானையின் உடலினை மேகத்திற்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

எற்றி வயவர் எறிய நுதல் பிளந்து நெய்த்தோர் புனலுள் நிவந்த களிற்று உடம்பு செக்கர் கொள் வானில் கரும் கொண்மூ போன்றவே - களம் - 23

( பொருள்: எதிரி வீரர்கள் எறிந்த வேல்களால் கண்பிளந்து வழிந்தோடிய குருதிப்புனலில் சாய்ந்து வீழ்ந்த யானைகளின் கரிய உடலானது, சிவந்த வானத்தில் இருந்த கருநிற மேகங்களைப் போலத் தோன்றியது.......)

இப்பாடலில், யானையின் உடலை கருமேகத்துக்கும் குருதியின் புனலை செவ்வானத்துக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

ஓடா மறவர் எறிய நுதல் பிளந்த கோடு ஏந்து கொல் களிற்றின்
கும்பத்து எழில் ஓடை மின்னு கொடியின் மிளிரும் - களம் - 31

 பொருள்: அஞ்சி ஓடாத வீரர்கள் எறிந்த வேலினால் கண் பிளக்க, அலறியவாறு நிலமிசை வீழ்கின்ற யானையின் கும்பம் போன்ற அழகிய ஓடை அணியானது, கருமேகத்தில் தோன்றி ஒளிரும் மின்னலைப் போல ஒளிர......)

இப் பாடலில், யானையை மேகத்திற்கும், யானையின் ஓடை அணியினை மின்னலுக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர்.

வை நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 78,79
( கூரிய அம்பு தாக்கிய வடுவினையும் வரிகளையும் கொண்ட கண் இமைகளின் மேல் வாடாத மாலையானது ஓடை அணியுடன் அசைய.......)

ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் - பதி 34/6,7
( ஓடை அணி விளங்குகின்ற அச்சந்தரும் சிவந்த கண்களை உடைய ......)

அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் பெரும் களிற்று யானையொடு. - பதி 71/20,21
( பெரும்போரிலே நிலைத்துநின்று வெற்றிபெற்ற செந்நிறக் கண்களை உடைய பெரிய ஆண்யானைகளுடன்..........)

பூ நுதல் இரும் பிடி குளிர்ப்ப வீசி  - திரு 303,304
( வேங்கைப் பூபோன்ற சிவந்த கண்களையுடைய பெண்யானை குளிருமாறு வீசி......)

வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் - பதி -53
( வேங்கைப் பூவும் தோற்கும்படியான அனல் பறக்கும் செந்நிறக் கண்கள்.........)

எரிவேங்கை வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி திரு நயந்து இருந்து அன்ன - கலி -44
( பொருள்: வேங்கைப்பூ போன்ற சிவந்த கண்களையும் வரிகொண்ட கண் இமைகளையும் உடைய யானையானது பூவுடைய நீரினை மேலே சொறிய, மலர்ந்த தாமரை மலரின்மேல் திருமகள் அழகுடன் வீற்றிருப்பதைப் போல..... )

பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி - நற் 36/2
( வேங்கைப் பூபோன்ற கண்ணுடைய பெண்யானை வருந்துமாறு தாக்கி....)

பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் - நற் 333/4
( தீப்பொறி போன்ற கண்ணுடைய யானையினை புலியானது தாக்கி உண்ணும்.......)

பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை - பரி 20/4
( புலி தாக்கியதால் கீறலுற்ற தீப்பொறி ஒத்த கண்களை உடைய யானை ..........)

புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன - கலி -53
( செந்நிறக் கண்ணுடைய யானையானது புலியைக் குத்திப் புண்ணாக்கிய குருதி தோய்ந்த தந்தம் போல் செங்காந்தள் மலர்களின் முகை தோன்ற...)

கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் - கலி - 134
( எதிரிகளைக் கொன்ற யானையின் அழகிய கண்ணிலே குத்திய அம்புகளைப் போல, கதிரவனின் கதிர்கள் மலைக்குப் பின்னால் சென்று மறைய....) 

இப் பாடலில், யானையை மலைக்கும், யானையின் கண்ணைச் சுற்றிலும் குத்திநிற்கின்ற அம்புகளை கதிரவனின் கதிர்களுக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர். மேலும் இப் பாடலில் ஒன்றுக்கு மேற்பட்ட அம்புகள் யானையின் கண்களைத் தாக்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, இந்த யானைக்குத் தலைக்கவசமாகிய ஓடை அணிவிக்கப்படாதிருக்க வேண்டும் அல்லது போரின்போது அது கழன்று கீழே விழுந்திருக்க வேண்டும் என்ற கருத்து பெறப்படுகிறது. 

கரும் கால் வேங்கை எரி மருள் கவளம் மாந்தி களிறு தன்
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை கல் ஊர் பாம்பின் தோன்றும் - அகம் - 349
( கருங்கால் வேங்கை மரத்தின் தீ போன்ற மலர்களை உணவாக உண்டபின், யானை தனது வரிகொண்ட கண்ணிமை மேல்வைத்த துதிக்கையானது, கருங்கல் பாறை மேல் ஊரும் மலைப்பாம்பினைப் போல தோன்றுகின்ற........)

பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல் - அகம் 78/4
( தீப்பொறி போன்ற கண்களை உடைய வலிய ஆண் யானை........)

கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல்கள் யானையின் சிவந்த கண் பற்றி நேரடியாகவே கூறுவதைப் பாருங்கள்.

செம் நுதல் யானை வேங்கடம்  - அகம் 265/21
( சிவந்த கண்களை உடைய யானை இருக்கும் மலையினை.....)

செம் நுதல் யானை பிணிப்ப - புறம் 348/9
( சிவந்த கண்ணுடைய யானையினைப் பிணிக்க......)

திலகமும் நுதலும்:

பெண்கள், தம் கண்இமைகளில் மையினால் எழுதி அழகு சேர்ப்பர். இந்த மையணியினை ' திலகம் ' என்று இலக்கியம் பல பாடல்களில் குறிப்பிடுகிறது. பொதுவாக, திலகம் என்ற சொல் கரிய மையினையே குறிக்கும். இது தில் என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகும். தில் என்பது கரிய எள்ளினைக் குறிக்கும். தில்லியம் என்பது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணையையும், திலகடம் என்பது எள்ளுப் பிண்ணாக்கினையும் குறிக்கும் என்று அகராதிகள் கூறுகின்றன. எள்ளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கரிய மையினையே முதலில் திலகம் என்று அழைத்தனர் போலும். பின்னாளில் திலகம் என்ற சொல் கரிய மையினை மட்டுமின்றி பிற வண்ண மையினையும் குறிக்கப் பயன்படலாயிற்று. திலகம் குறித்த சில பாடல்களை இங்கே விளக்கங்களுடன் காணலாம். 

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24, நற் - 62
( மையணிந்து கள் வடிகின்ற அழகிய கண்ணிமை.........)

அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின்
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று
நன் நுதல் நீத்த திலகத்தள் - கலி - 143

( பொருள்: பரந்த வெளியின் இருள் நீங்குமாறு அழகுடன் திகழ்ந்தபின்னர், பகலிலே ஒளியிழந்து நிற்கும் நிலவினைப் போல, மையணி இன்றி ஒளியிழந்த கண் இமையினள்.....)

இப் பாடலில், கண்ணை நிலவினுக்கும், கண்ணிமையில் வரையப்பட்டிருந்த கருநிற மையணியினை இருளுக்கும் உவமையாக்கி இருக்கிறார் புலவர். இருள் இருக்கும்வரையில் தான் நிலவுக்கு மதிப்பும் அழகும் உண்டு. அதைப்போல கண்ணைச் சுற்றி கரிய மையணி இருக்கும்வரையில் தான் கண்ணின் ஒளிக்கு மதிப்பும் அழகும் உண்டு. மையணி நீங்கியதால் மதிப்பினையும் ஒளியினையும் கண்கள் இழந்ததாகக் கருதி, அதனை பகலில் தோன்றும் அழகற்ற நிலவுக்கு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார். 

திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப பவள வாள் நுதல் திலகம் இழப்ப - சிலப் - புகார் - 4

( நிலவு போல் ஒளிர்ந்த முகத்தில் வியர்வை முத்துக்கள் அரும்பி, செம்மீன் போலத் தோன்றுமாறு சிவந்த மையணிந்திருந்த அகன்ற கண்இமைகளின் மேல் வழிய, செம்பவளம் போல் ஒளிர்ந்த அக் கண்ணிமைகள் தமது மையணியினை இழக்க......)

தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் - அகம் 389/3
( கள் வடிகின்ற அழகிய கண் இமையில் மையணிந்தும்.....)

பவள வாள் நுதல் திலகம் இழப்ப - புகார் 4/54
( வெண்பவளம் போன்ற ஒளிமிக்க கண்கள் மையணியினை இழக்க.....)

தீட்டினான் கிழி மிசை திலக வாள் நுதல் - சிந்தா:4 1003/2
( மையணிந்த ஒளிமிக்க கண்களை உடையவளை துணியின் மேல் ஓவியமாக வரைந்தான்.....)

மேலே கண்ட பாடல்களில் நுதல் என்னும் சொல்லும் திலகம் என்ற சொல்லும் இணைந்து வரும் இடங்கள் காட்டப்பட்டுள்ளன. இனி திலகம் என்ற சொல் மட்டும் தனியாக மையணி என்ற பொருளிலேயே வழங்கப்படும் சில பாடல்களைக் கீழே காணலாம்.

செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான்
வையை உண்டாகும் அளவு - பரி - 32

( பொருள்: பூமகள் தன் கண்ணிமையில் அணிந்த சிவந்த மையணி போலச் சிறிதாகத் தோன்றும் அதிகாலைக் கதிரவனின் கதிர்கள் பின்னர் வையமெலாம் விளங்கி ஒளிதருவது எப்படிப் பொய்யாகாதோ அதைப் போல மதுரையின் வையை ஆறு உண்டாகும் இடத்தில் அளவில் சிறியதாக இருந்தாலும் அது மதுரையெங்கும் பாய்ந்து வளங்கொழிக்கச் செய்வதும் பொய்யாகாது. )

விண்-பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து விசும்பு ஏந்தி
மண்-பால் திலகம் ஆய் வான் பூத்து ஆங்கு மணி மல்கி
பண்-பால் வரி வண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி
எண் பால் இகந்து உயர்ந்தாற்கு இசைந்த கோயில் இயன்றதே - சிந்தா: 2600

( மேகங்களைக் கிழித்துக் கொண்டு வானம் ஏகி கதிரையும் தடுக்கின்றதாய் உயர்ந்து வளர்ந்து, பூமகளின் மையணி ஆகிய அதிகாலைச் செவ்வானம் போல செந்நிற மலர் முகைகள் தோன்றியிருத்தலால் வரிவண்டுகளும் தேனீக்களும் பாடியவாறு அவற்றை மொய்க்கின்ற அசோக மரங்கள் மிக்க சோலையிலே எண்குணம் கடந்து உயர்ந்தார்க்கு உரிய கோயில் கட்டப்பட்டது. )

மாக விசும்பின் திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின் திரு முகத்து - அகம் - 253
( ஆகாய மேகம் போல் கரிய மையணிந்த கண்ணிமையும் பதிக்கப்பட்ட நிலவு போன்று விளங்கும் உனது அழகிய கண்ணும்.....)

ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் - கலி - 92
( ஒருத்தி தெரிக்கின்ற முத்துப் போன்ற கண்களின் இமைகளில் மையணி இட.....)

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே - பரி - 11
( நெற்றியினை விழியாகக் கருதி நிறைந்த மையினைப் பூசினாள்.....)

திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கி - சிந்தா - 350
( இமையில் பூசியிருந்த வெண்ணிற மையணியைக் கைவிரலால் நீக்க, அது விரல்நுனியில் நிலவு போல ஒளிர........)

இதுவரை, திலகம் என்ற சொல் மையணி என்ற பொருளை மட்டுமே குறிக்கின்ற சில இலக்கிய இடங்களைக் கண்டோம். ஆனால், பெண்களின் கண்ணிமையில் பூசப்பட்டுக் கண்ணுக்கு அழகு சேர்த்ததினால், திலகம் என்ற சொல்' அழகு ' என்ற பொருளிலும் பயன்படலாயிற்று. அழகு என்ற பொருளில் வழங்கப்படும் பாடல்களில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை - கலி - 97
( ஒளிரும் கண்களின் மேலாக அணிந்த அழகு விளங்கும் ஓடை அணி.)

திலக வெண்குடை பெருமகன் கோயிலுள் - சிந்தா - 183
( அழகிய வெண்குடை கொண்ட பெருமகனின் கோயிலில்...)

திலக நீள் முடி தேவரும் வேந்தரும் - சிந்தா - 246
( அழகிய நீண்ட கிரீடம் அணிந்த தேவர்களும் மன்னர்களும்... )

அதுமட்டுமின்றி, இத் திலகமானது கண்களின் மேல் உள்ள கண்ணிமையில் பூசப்பட்டு வந்ததினால், திலகம் என்ற சொல் ' மேலானது, சிறந்தது, தலையாயது ' என்ற பொருட்களிலும் பயன்படலாயிற்று. இப் பொருட்களில் திலகம் என்ற சொல் வழங்கப்பட்ட பாடல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.

மறந்தும் மழை மறா மகத நல்நாட்டுக்கு ஒரு பெருந் திலகம் - மணி - 26
( மேகங்கள் மழையினைப் பொழிய மறவாத மகத நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் ஒரு தலைமகன் )

பூமி மா திலகம் எனும் பொன் கிளர் - சிந்தா - 2855
( பூமியில் மேலானது எனப்படுகின்ற பொன் ஒளிரும்..)

தற்போது மக்களிடையே அதிகம் வழங்கப்பெறுகின்ற மக்கள் திலகம், மங்கையர் திலகம், நடிகர் திலகம் போன்ற சொற்றொடர்களில் வருகின்ற திலகம் என்பதன் பொருள் ' மேலானவர், சிறந்தவர், தலையாயவர் ' என்பதுதான்.  

சிந்தாமணியும் நுதலும்:

சிந்தாமணியில் நுதல் பயின்று வருகின்ற சில பாடல்களை மட்டும் இங்கே விளக்கங்களுடன் காணலாம். இப் பாடல்களில் பயின்றுவரும் உவமைகளின் விளக்கங்களைப் படித்த பிறகு நுதல் என்பதற்கு கண் / கண்ணிமை ஆகிய பொருட்களே அன்றி நெற்றி என்ற பொருள் இந்த இடங்களில் பொருந்தாது என்பதனைத் தாமாகவே அறிந்துகொள்ளலாம்.

புகழ் வரை சென்னி மேல் பூசையில் பெரியன
பவழமே அனையன பல் மயிர் பேர் எலி
அகழும் இங்குலிகம் அஞ்சன வரை சொரிவன
கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே - சிந்தா - 1898
( கரிய மலையில் வாழும் காட்டுப்பூனைகளை விடப் பெரியதும், வெண்பவழ நிறத்ததும், பலமயிர் கொண்டதுமான பெரிய பெருச்சாளியானது, அந்த மலையடிவாரத்தில் இருந்த சாதிலிங்க மரத்தின் அடியில் அகழ்ந்து முட்டுதலால், மலையின்மேல் சொரிந்த செந்நிறத்துச் சாதிலிங்கப் பூக்களானவை, கவளம் உண்ணும் யானையின் கண்மேல் அமைத்த செம்பட்டாலான கட்படாம் போலத் தோன்றியது. )

இப் பாடலில் பயன்படுத்தப் பட்டுள்ள அழகான உவமைகளைக் காணலாம். யானையின் துதிக்கை முன்னால் உள்ள பெரிய வெண்ணிற சோற்று உருண்டையினை வெள்ளைநிறப் பெருச்சாளிக்கும், யானையின் கரிய நீண்ட திரண்ட துதிக்கையினை சாதிலிங்க மரத்துக்கும், யானையின் உடலை கரிய மலைக்கும், யானையின் கண்மேல் அமைந்த சிவந்த பட்டினால் ஆன கட்படாமினை செந்நிறச் சாதிலிங்கப் பூக்களுக்கும் உவமையாக்கி இருக்கிறார் திருத்தக்கத் தேவர்.

சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதி வாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என - சிந்தா - 278


( சினம் மிக்க மன்னவன் ஊர்ந்த யானையின் கண்ணில் எதிரியின் வாளானது குத்திப்புகுந்ததால் குருதி ஒழுக யானை அலறிய காட்சியானது, அருவியை உடைய கரிய மலையிலே இடிஇடித்ததைப் போலத் தோன்றியது......)

இப் பாடலில், யானையை மலைக்கும், யானையின் கண்ணில் இருந்து ஒழுகும் குருதி ஒழுக்கினை மலையில் உள்ள அருவிக்கும், யானையின் அலறல் ஓசையினை மலையின் மேல் தோன்றிய இடியோசைக்கும் ஒப்புமை கூறி இருக்கிறார் புலவர்.

பந்து மைந்துற்று ஆடுவாள் பணை முலையின் குங்குமம்
சுந்தர பொடி தெளித்த செம்பொன் சுண்ணம் வாள் நுதல்
தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை
இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே - சிந்தா - 1956

( வேகமாகப் பந்தாடியதால் அவளின் பருத்த கண்ணிமையில் குங்குமத்தால் எழுதப்பட்ட செந்நிற வரியும், செம்பொன் (ஆரஞ்சு) வண்ணத்து அழகிய பொடியினால் வரித்த வரியும், சந்தனப் பொடியால் வரித்த மஞ்சள்நிற வரியும், இமையின் மேல் உண்டான வியர்வை ஒழுகியதால் ஒன்றுடன் ஒன்று கலந்தநிலையில் அந்த கண்ணிமையானது, வானத்தில் தோன்றும் வானவில்லானது நெக்குருகி வீழ்ந்ததைப் போலத் தோன்றியது. )

இப் பாடலில் வரும் முலை, நுதல் ஆகிய சொற்கள் கண்ணிமையினைக் குறித்தே வந்துள்ளன. வானவில்லில் இருப்பதைப் போலவே சிவப்பு நிறம் முதலிலும், செம்பொன் ( ஆரஞ்சு) நிறம் அடுத்தும், மஞ்சள் நிறம் அதற்கடுத்தும் வைத்துப் பாடப்பட்டிருப்பது இப் பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது. 

சேட்டு இளம் செம் கயல் காப்ப செய்து வில்
பூட்டி மேல் வைத்து அன புருவ பூமகள்
தீட்டரும் திரு நுதல் திலகமே என
மோட்டு இரும் கதிர் திரை முளைத்தது என்பவே - சிந்தா - 1223

( அழகிய இளஞ் செம்மீன் போலவும், பூட்டிய வில்லினைப் போலவும், பூமகளின் அழகிய கண்ணிமையிலே தீட்டற்கரிய மையணி போலவும் தோன்றும்படியாக கடலின்மேல் உச்சியில் கதிரவனின் செங்கதிர்கள் முளைத்தன. )

கள்ளும் தேனும் ஒழுகும் குவளை கமழ் பூ நெரித்து வாங்கி
கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளி திலகம் திகழ பொறித்து
தெள்ளும் மணி செய் சுண்ணம் இலங்க திரு நீர் நுதலின் அப்பி
உள்ளம் பருகி மதர்த்த வாள் கண் உருவம் மையில் புனைந்தாள் -  2439

( கள்ளும் தேனும் ஒழுகுகின்ற குவளை மலரின் இதழ்களைப் பிரித்து வாங்கி, அதைக் கிளியின் வாய் போன்று வளைந்திருக்கும் தனது கூரிய விரல்நகத்தினால் கிள்ளி, அதைக் கொண்டு தனது கண்ணிமையில் மை எழுதி, பின் அதன் மேல் கருஞ்சுண்ணம் கலந்த நீர்கொண்டு பூசி, உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் வகையில் இவ்வாறு தனது கண்ணை மையினால் புனைந்தாள். )

ஏச்செயாச் சிலைநுத லேழை மார்முலைத்
தூச்செயாக் குங்குமந் துதைந்த வண்டினம்
வாய்ச்சியா லிட்டிகை செத்து மாந்தர்தம்
பூச்செயா மேனிபோற் பொலிந்து தோன்றுமே.- சிந்தா - 2689

( அம்பு எய்யும் வில் போன்ற கண்ணுடைய பெண்டிரின் கண்ணிமையில் தூவியதுபோல் இருந்த குங்குமப் புழுதியில் படிந்தெழுந்த கருவண்டானது, வாய்ச்சி எனும் கருவியால் செங்கல்லை செதுக்குவோரின் செம்மண் பூசிய கரிய கண்ணிமை போல அழகாகத் தோன்றியது..)

கருநிற வண்டானது குங்குமப் புழுதியில் படிதலால், அதன் உடலில் சிவந்த குங்குமத் துகள்கள் ஆங்காங்கே ஒட்டியிருக்கும். செங்கல் அறுப்போர் தமது வேலையின்போது தமது கைகளால் நெற்றி வியர்வையினைத் துடைக்கும்போது அவர்களது கருநிறக் கண்ணிமையில் செம்மண் துகள்கள் ஒட்டிக் கொள்ளும். இவ் இரண்டையும் இப் பாடலில் உவமைப்படுத்தி இருக்கிறார் திருத்தக்கத் தேவர்.

போழ் மதி போல் கூர் இரும்பின் பூ நுதல்கள் போழ்ந்திடவும்
காழ் நுதியின் குத்துண்டும் கார் மழை போல் நின்று அதிர்ந்தும்
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து
ஆழ்த்த கந்து இளக யானை அலம் வருமே - சிந்தா - 2785

பொருள்: தாம் விரும்பிய பெண் யானைகளை நினைத்துக் காமநோயினால் மதம் கொண்ட ஆண் யானையானது, தன்னைக் கட்டிவைத்துள்ள ஆழமாக நடப்பட்ட கட்டுத்தறியும் நெகிழுமாறு சுற்றிச்சுற்றி வருவதைக் கண்ட யானைப்பாகர்கள், நீண்ட திரண்ட கூரிய கோலினால் குத்தியும் அமையாமல், பிறைச்சந்திரனின் உடைந்த துண்டு போன்ற கூர் இரும்பினால் ஆன தோட்டியினால் அதன் கண்ணருகே குத்த, தவறுதலாக அது யானையின் தீப்பொறி ஒத்த கண்களைப் பிளக்க, வலி தாங்காமல் யானை பிளிறிய ஓசையானது, கரிய மழை மேகத்தில் இடி இடித்ததைப் போல் இருந்தது.

கரும்பு அணி வள வயல் காமர் தாமரை வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல்
அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல் சுரும்பு சூழ் இலம்பக தோற்றம் ஒத்ததே - சிந்தா - 1442


பொருள்: கரும்பு வளர்ந்திருந்த வயலைச் சுற்றிலும் அழகிய வெண்தாமரை மலர்கள் வரப்பு போல பூத்திருக்க, அதற்கு மேலாக அதன் இமைபோல நீண்டு உயரமாய் வளர்ந்திருந்த செந்நெல் பயிர்களானவை, அரங்கிலே ஆடுகின்ற நாடக மகளிரின் அழகிய கண்ணைச் சுற்றி இமைகளில் வரைந்திருந்த வண்டுகள் மொய்க்கும்படியான செந்நிறத்து இலம்பக அணியினை ஒத்திருந்தது.

இப் பாடலில், கண்ணின் கருவிழியினை கரும்புக்கும், வெள்ளைப் பகுதியினை வெண்தாமரை மலர்களுக்கும், செந்நிறத்தில் பூசப்பட்டிருந்த கண்ணிமையினை செந்நெல்லுக்கும் உவமையாக்கி இருக்கிறார் திருத்தக்கத் தேவர்.

பாடு வண்டு இருந்த அன்ன பல் கலை அகல் அல்குல்
வீடு பெற்றவரும் வீழும் வெம் முலை விமலை என்று
ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன வாள்_நுதல்
ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள்-அரோ - சிந்தா - 1996

( பாடும் வண்டுகள் வரிசையாய் அமர்ந்திருப்பதைப் போல செம்பொன்னாலான பலமணிகளைக் கோர்த்து அணிந்த அகன்ற நெற்றியையும், துறவு பெற்றவரும் விரும்புவதான அழகிய கண்ணிமைகளையும், விமலை என்ற பார்வதியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் தன் தலையில் அணிந்திருக்கும் சிறப்புடைய பிறைச்சந்திரனைப் போல் ஒளிரும் கண்களையும் உடைய இவள், ஊடலே கொண்டாலும் புணர்ந்ததைப் போல இன்பம் அளிப்பவளாய் இருக்கிறாள்......)

இப் பாடலில் வரும் அரம்பை என்பதற்கு பிறைச்சந்திரன் எனப் புதிய பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இது எப்படிப் பொருந்தும் என்று கீழே காணலாம்.

அரம்பை என்றால் என்ன?

அரம்பை என்னும் சொல்லின் மூலம் அரம் ஆகும். அரம் என்பது பொதுவாக வளைந்த மெலிந்த கூரிய முனை கொண்ட பொருட்களைக் குறிக்கும். அரம் தொடர்பாக அகராதிகள் காட்டும் பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அரம் = வாளரம் = கதிர் முதலானவற்றை அரியும் கருவி.
அரம்பணம் = வெற்றிலை நறுக்கும் கருவி.

இந்த அரம் மற்றும் அரம்பணம் போல வளைந்து மெலிந்து கூரிய முனை கொண்ட பிறைச்சந்திரன், அரம்பை என்றும் அரம்பு என்றும் அழைக்கப்பட்டதில் வியப்பில்லை தானே.?

அரம்பை = பிறைச்சந்திரன் என்ற பொருளில் கீழ்க்காணும் பாடலிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

மாடத்து ஊடு எலாம் இறைகொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே - சிந்தா - 74

( மாடங்களின் இடையிலே தெரிந்த வானத்தில் ஒளிர்கின்ற விண்மீன்களைப் போல இமைகளுக்கிடையிலே பிறைச்சந்திரன் போன்ற அடிக்கண் ஒளிர்ந்தது........)

அரம்பு = சந்திரன் என்ற பொருளில் கீழ்க்காணும் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரம்பு வந்து அலைக்கும் மாலை - அகம் 287
( சந்திரன் வந்து மனதை வருத்துகின்ற மாலை நேரம்......)

அரம்பை என்ற சொல் பிறைச்சந்திரனை மட்டுமின்றி சந்திரனையும் குறிக்கும். இந்த சந்திர லோகத்தில் வசிக்கும் அழகிய பெண்களை அரம்பை என்றும் அரம்பையர் என்றும் இலக்கியம் கூறுகிறது. இதைப் பற்றிய ஏராளமான பாடல்கள் சீவக சிந்தாமணியிலும் கம்பராமாயணத்திலும் உள்ளன. இந்த சந்திரன் உலாவருகின்ற இடத்தினை அரமியம் அதாவது நிலாமுற்றம் என்று அகராதிகள் சுட்டுவதில் இருந்து அரத்துக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு எளிதின் விளங்கும்.

வெள்ளைக்கண் கம்புள்:

ஐங்குறுநூற்றில் 85 ஆம் பாடலில் ' வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை' என்ற வரி உள்ளது. இதில் குறிப்பிடப்படும் கம்புள் என்ற பறவைக்கு வெள்ளை நிறத்தில் நெற்றியோ தலையோ இருந்ததாகக் கொள்ளலாமா என்றால் கொள்ள முடியாது. ஏனென்றால் வெள்ளை நிறத் தலையோ நெற்றியோ பறவை இனங்களில் பரவலாகக் காணப்படும் பண்பாகும். அன்றியும் ஒரு பறவையைப் பாடலில் குறிப்பிடும் புலவர் அதன் சிறப்புத் தன்மையையே கூறுவார் என்பதால் நுதல் என்ற சொல் இங்கும் நெற்றி அல்லது தலையைக் குறித்து வந்திருக்காது என்பது தெளிவு.

அதே சமயம் வெள்ளை நிறக் கண்களானது பறவை இனங்களில் அரிதாகவே காணப்படும் பண்பாகும்.  பறவைக் குடும்பங்களில் ஜோஸ்டெரோபிடே என்ற குடும்பம் ஒன்று உண்டு. இக் குடும்பத்தைச் சேர்ந்த அனைத்துப் பறவைகளின் கண்களைச் சுற்றிலும் பெரிய வெள்ளை நிற வளையம் ஒன்று காணப்படுகிறது. இது இப் பறவைகளின் தனிச் சிறப்பாகும். இக் குடும்பத்தைச் சேர்ந்த பறவை ஒன்றின் படம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இப் பறவைகளைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விக்கிபீடியாவில் தேடலாம். ஆக இங்கும் 'நுதல்' என்பது 'கண்ணிமை' என்ற பொருளில் தான் வந்துள்ளது என்பது பெறப்படுகிறது. கண்களைச் சுற்றிலும் வெள்ளை நிறத்தில் பெரிய வளையத்தைக் கொண்ட இப் பறவைகளை சங்க காலத்தில் கம்புள் என்று அழைத்தனர் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து நுதல் என்ற சொல்லுக்கு ' கண் மற்றும் கண்ணிமை ' ஆகிய புதிய பொருட்கள் இருப்பதை இக் கட்டுரையின் மூலம் அறிந்தோம். இக் கட்டுரையில் அனைத்து இலக்கியங்களையும் தொட்டுக் காட்டியது போலத் தோன்றினாலும் நுதல் என்ற சொல் பயின்று வருவதான புராணம் சார்ந்த இலக்கியப் பகுதிகள் மற்றும் பக்தி இலக்கியங்களை அறவே காட்டவில்லை. குறிப்பாக, சிவபெருமான், கொற்றவை போன்ற தெய்வங்களுடன் தொடர்புற்று நுதல் என்ற சொல் பல பாடல்களில் பயின்று வந்தபோதும், அவற்றை ஈண்டு விரிக்காததன் காரணம், அதைப் பற்றித் தனியாக ஆய்வுசெய்ய வேண்டும் என்பதால்.  
==================== வாழ்க தமிழ் !=================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.

முன்னுரை:     ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அம் மொழி சார்ந்த அகராதிகள் எவ்வளவு முக்கியமான பணியைச் செய்கின்றன என்பதை ...