வியாழன், 28 ஏப்ரல், 2016

சிறுபுறம் என்பது .......



முன்னுரை;

சங்ககாலம் தொடங்கி பல ஆண்டுகளாக இலக்கியங்களில் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்த பல சொற்களுள் ஒன்றுதான் ‘ சிறுபுறம் ‘ ஆகும். இச் சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல பொருட்களைக் கூறி இருந்தாலும், அவை எதுவும் பொருந்தாத நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இது இச் சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகிறது. இக் கட்டுரையில் அப் புதிய பொருள் என்ன என்றும் அது எப்படி அச் சொல்லுக்குப் பொருந்தும் என்பதைப் பற்றியும் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காணலாம்.

சிறுபுறம் – தற்போதைய பொருட்கள்:

சிறுபுறம் என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றன.

பிடரி,                முதுகு,                    கொடை.

பொருள் பொருந்தா இடங்கள்:

சிறுபுறம் என்ற சொல்லுக்கு அகராதிகள் தற்போது கூறும் பொருட்களான பிடரி, முதுகு, கொடை, போன்ற எவையும் பொருந்தாத பல இடங்களில் சில மட்டும் கீழே சான்றுக்குத் தரப்பட்டுள்ளன.

பெண்களின் சிறுபுறத்தினை யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து சிறுபாண்.

சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் நற். 228

இப்பாடல்களில் வரும் சிறுபுறத்தினை பிடரி என்றோ முதுகு என்றோ பொருள்கொண்டால், பெண்களின் பிடரி அல்லது முதுகானது யானையின் துதிக்கை போன்றிருந்தது என்றல்லவா பொருள்வரும்?. ஆனால், இவ் ஒப்புமை தவறானது என்று நம் எல்லோரும் நன்கு அறிவோம். காரணம், பெண்களின் முதுகோ பிடரியோ வடிவம், செயல்பாடு, வண்ணம் என்று எவ்விதத்திலும் யானையின் துதிக்கைக்கு ஒப்பாகாது. அதுமட்டுமின்றி, எந்தப் பெண்ணும் தனது முதுகுப்புறம் முழுதும் பிறர்க்கு வெளியே தெரியுமாறு ஆடை அணிந்து செல்லமாட்டாள். எனவே, இப் பாடல்களில் வரும் சிறுபுறம் என்ற சொல்லுக்குபிடரி, முதுகுஆகிய பொருட்கள் பொருந்தாது என்பது தெளிவாகிறது.

ஒரு தாய் தனது மகனுக்கு முலைப்பால் ஊட்டுகிறாள். அப்போது அக் குழந்தை குசும்பு செய்கிறது. தனது பிஞ்சுக் கையினால் தன் தாயின் சிறுபுறத்தைப் பற்றுகிறது. இதைப் பாடும் ஐங்குறுநூற்றுப் பாடல் கீழே.

வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட
தான் அவள் சிறுபுறம் கவையினன் ஐங்கு 404

இப் பாடலில் வரும் சிறுபுறம் என்பதற்கு பிடரி அல்லது முதுகு என்ற பொருள் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், தாய்ப்பால் அருந்தும்போது எந்தக் குழந்தையாலும் தாயின் பிடரியையோ முதுகையோ தழுவ இயலாது. எனவே, இங்கும் சிறுபுறம் என்பதற்கு அகராதிப் பொருட்கள் எவையும் பொருந்தாத நிலை இருப்பதை அறியலாம்.

ஒரு மரக்கிளையில் பூமொட்டுக்கள் பல அரும்பியுள்ளன. அவற்றை வண்டுகள் பல மொய்க்கின்றன. இருப்பினும் அம் மொட்டுக்கள் சிறிதளவே வாய்திறக்கின்றன அதாவது மலர்ந்து மலராத பாதிமலர் போன்ற நிலை. அவ் வண்டுகள் மொய்த்துச் சென்றபின்னால், அவற்றை முழுமையாக மலரச் செய்ய தும்பி செல்கிறது. இதை அழகான ஒப்புமையுடன் விரிவாகக் கூறுகிறது சிந்தாமணிப் பாடலொன்று.

தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி சிந்தா 852

இப் பாடலின் இறுதிவரியானது, தும்பியானது பெண்டிரின் சிறுபுறத்தைத் தழுவியதாகக் கூறுகிறது. இப் பாடலில் வரும் சிறுபுறத்தை பிடரி அல்லது முதுகு எனக் கொள்ளலாமா என்றால் கொள்ள இயலாது. காரணம், பழங்காலத்தில் பெண்கள் தமது உடலினை முழுவதுமாக ஆடையினால் மூடி தலையின் மேலாகக் கொண்டுவந்து முகத்திரையாக அணிந்திருப்பர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். இதன்படி, பெண்களது கழுத்துப் பிடரியும் முதுகுப்புறமும் ஆடையினால் முழுவதும் மறைக்கப்பட்டிருக்கும் தானே?. மூடிவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே தும்பி சென்று தழுவுவது எங்ஙனம்?. இயலாதன்றோ!. எனவே இங்கும் சிறுபுறம் என்பது பிடரியையோ முதுகினையோ குறித்து வந்திருக்காது என்பது தெளிவு.

இதுபோல இன்னும் பல இடங்களில் அகராதிப் பொருட்கள் எவையும் பொருந்தாநிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. அப் புதிய பொருளைப் பற்றிக் கீழே காணலாம்.

சிறுபுறம் புதிய பொருள்:

சிறுபுறம் என்ற சொல் குறிக்கும் புதிய பொருட்கள்

கண் ‘, ‘ கண்ணிமைமற்றும்கன்னம்ஆகும்.

நிறுவுதல்:

இனி, சிறுபுறம் என்னும் சொல்லானது எப்படி கண், கண்ணிமை மற்றும் கன்னங்களைக் குறிக்கும் என்று இங்கே ஆதாரங்களுடன் காணலாம். அதற்கு முன்னர், இக் கட்டுரையினை எழுதவேண்டிய சூழல் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றியும் இங்கே சிறிது காணலாம்.

சிறுபுறம் என்னும் சொல்லானது எப்படி முதுகினைக் குறிக்கும் என்ற ஐயத்தை முதலில் எழுப்பியதே அச்சொல் தான். காரணம்,

சிறுபுறம் என்பது சிறு + புறம் எனப் பிரிந்து
சிறிய புற உறுப்புஎன்ற பொருளைத் தருகின்ற போது அது

முதுகு போன்ற பெரிய புற உறுப்பினைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை அல்லவா?. ஆம், மனித உடலிலே மிகப் பெரிய பரப்பு கொண்ட புற உறுப்பு முதுகுதான். அந்த முதுகினை வெறுமனேபுறம்என்றோபெரும்புறம்என்றோ கூறுவதை விடுத்து, ‘சிறுபுறம்என்று புலவர்கள் குறிப்பிடுவார்களா?. மாட்டார்கள் தானே?. இதுதான் இச் சொல்லுக்கு அகராதிகள் கூறியிருந்த பொருட்களின் மீதான நம்பகத் தன்மையினை தகர்த்தது எனலாம்.

அதேசமயம், இச் சொல்கண் அல்லது கண்ணிமையைக் குறித்து வந்திருக்கவே பெரிதும் வாய்ப்பிருக்கிறது என்னும் நம்பிக்கையினையும் ஊட்டியது. காரணம், சிறுபுறம் என்னும் சொல்லுக்குசிறிய புற உறுப்புஎன்ற பொருளைக் கொண்டால், அது கண்ணைத் தான் குறிக்கும் என்று சொல்லத் தேவையில்லை. ஆம், மனித உடலில் மிகச் சிறிய புற உறுப்பும்  புலவர்களால் அதிகம் பாடப்பெறுவதும் கண் தான். இதைப் பற்றி முன்னர் பல கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இருப்பினும், இக் கட்டுரையிலும் பல ஆதாரங்களுடன் இக் கருத்தினை மெய்ப்பிக்கலாம்.

யானையும் சிறுபுறமும்;

பெண்களின் சிறுபுறத்தினை யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகளைக் கீழே காணலாம்.

பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து சிறுபாண்.
(யானையின் துதிக்கையினைப் போன்று வரிகளை உடைய கண்ணிமைகளையும் . )

சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் நற். 228
( பெண்களின் கண்ணிமைகளைப் போல வரிகளையுடையதாய்த் தோன்றும் பெரிய துதிக்கையினையுடைய யானை .)

பெண்களின் மையுண்ட கண்ணிமைகளில் இயல்பாகக் காணப்படும் அழகிய வரிகளை, யானையின் துதிக்கையில் காணப்படும் வரிகளுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கமே. இதைகுறங்கு என்றால் என்ன? ‘, ‘ பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா?’ போன்ற கட்டுரைகளிலும் கண்டு தெளியலாம்.


கூந்தலும் சிறுபுறமும்:

பெண்களின் கூந்தல் என்ற சொல் அவரது கண்ணிமையினைக் குறிக்கும் என்றுபெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா?’ என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம்.

கூந்தல் என்ற சொல்லுடன் சிறுபுறம் என்ற சொல்லும் இணைந்துகண்ணிமை என்ற ஒரே பொருளிலேயே கீழ்காணும் பாடல்களில் பயின்று வருகிறது. 

குறும் தொடி முன்கை கூந்தல் அம் சிறு புறத்து    முல்லைப்பாட்டு
( குறுகிய தொடியணிந்த அவளது கூந்தலாகிய கண்ணிமைகளில் .)

குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல்
இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வர அகம் 142
( சிப்பியின் எஞ்சிய ஓடுபோலப் பலவாக வகுக்கப்பட்டு மைபூசப்பட்ட குறுகிய கண்ணிமைகளின் மேலாக அணிகலன்கள் அசைந்தாட.)

கணவற்கு உற்ற கடுந் துயர் பொறா அள்         
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப கண்ணீர்  ஆடிய மணிமே 2
( தனது கணவனுக்கு உற்ற கடுந்துயரினைப் பொறுக்கமாட்டாதவளாய், மணம் வீசுகின்ற கூந்தலாகிய கண்ணிமைகளும் அமிழுமாறு பெருகிய கண்ணீரில்…….)

பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம் குறிஞ்சிப்பாட்டு

( பொன்னாலான குப்பிக்குள் செறித்த செம்மணியைப் போலத் தோன்றுமாறு  வரிகளை உடைய அக் கண்ணிமைகள் மஞ்சள்நிற பூந்தாதுக்களைச் சொரிந்து பூசப்பட்டிருக்க, அதற்குள்ளிருந்த கண்களோ நீண்டநேரம் நீராடியதால் சிவந்துகாணப்பட்டது..)

இப் பாடலில் வரும் பிழிதல் என்ற சொல்லுக்குசொரிதல்என்ற அகராதிப் பொருளும் துவர்தல் என்ற சொல்லுக்குபூசுதல்என்ற அகராதிப் பொருளும் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்காணும் பாடலில், ‘சிறுபுறம்என்னும் சொல்லுக்கு ஏன் முதுகு என்று பொருள்கொண்டனர் என்று ஆராயுமிடத்து, அதற்கான காரணம், கூந்தல் என்ற சொல்லே என்பது தெரிய வந்தது. ஆம், கூந்தல் என்ற சொல்லுக்குபெண்களின் தலைமயிர்என்று தவறாகப் பொருள் கொண்டதே சிறுபுறத்தை முதுகாகக் கருத இடமளித்துவிட்டது எனலாம்.

அறலும் சிறுபுறமும்:

பெண்களின் மை பூசி அலங்கரிக்கப்பட்ட சிறுபுறத்தினை அறலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடலொன்று.

…………………………….
வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிட
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்
நெடும் கால் மாஅத்து ஊழ்_உறு வெண் பழம்
கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர்
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே அகம் -117

(……….மணம் கமழும் பல மலர்களைத் தொடுத்து மாலையாக நெற்றியில் அணியவும், வரிகளை உடையதாய் பல வண்ணங்களில் பூசப்பட்ட கண்ணிமைகள் அந்த பாரத்தைத் தாங்காமல் தாழ்ந்து மூடிக்கொள்ளவும், அக் கண்ணிமைகள் அப்போது பார்ப்பதற்கு, பழுத்து உதிரும் மாம்பழங்களை ஆமையானது தனது குஞ்சுகளுடன் கவர்ந்துசெல்லும் பெருவளப்பமுடைய வாணனின் சிறுகுடிக்கு வடக்கிலிருக்கும் காட்டாற்றின் கரையில் ஊர்ந்துசெல்லும் நத்தைகளைப் போலத் தோன்றின. )

இப் பாடலில் வரும் அறல் என்பது நத்தையினைக் குறிக்கும் என்பதனையும் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை வண்ண வண்ண நத்தைகளுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கமே என்பதனையும்பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா?’ என்ற கட்டுரையில் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

கவைத்தலும் சிறுபுறமும்:

பெண்களின் சிறுபுறத்தினை கவைத்தலாகிய செய்திகளைப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இதில் வரும் சிறுபுறம் என்பதற்கு கண்களின் கீழ்ப்பகுதியாகிய கன்னம் என்றும் கவைத்தல் என்பதற்கு விரல்களால் பற்றுதல் என்றும் பொருள்கொண்டுசிறுபுறம் கவைத்தல்என்பதற்குகன்னத்தை விரல்களால் பற்றுதல்என்று பொருள்கொள்ளலாம். இந்தப் பொருளே பல இடங்களில் மிகப் பொருத்தமாய் அமைகிறது.

மாறாக, உரையாசிரியர்கள் பலரும், சிறுபுறம் என்பதற்கு முதுகு என்றும் கவைத்தல் என்பதற்கு அணைத்தல் என்றும் பொருள்கொண்டு, சிறுபுறம் கவைத்தல் என்பதற்கு முதுகினைக் கட்டி அணைத்தல் என்று பொருள்கொள்கின்றனர். இது தவறான விளக்கமாகும். ஏனெனில், துளியும் அறிமுகமற்ற ஆடவர் யாரும் ஒரு புதிய பெண்ணை அவ்வாறு கட்டித் தழுவ மாட்டார்கள். அது பண்பற்ற செயல் என்பதுடன் அதனை எந்தப் பெண்ணும் விரும்புவதுமில்லை.

பொதுவாக, கவைத்தல் என்னும் வினையானது ஒரு பற்றுக்குறட்டினைப் போல இருபுறங்களில் இருந்தும் கைகளால் ஒன்றைப் பற்றிக் கொள்ளுதலையே குறிப்பதாகும். அவ்வகையில், பெருவிரல் ஒருபுறமாகவும் ஏனை விரல்கள் இன்னொரு புறமாகவும் இருந்து கன்னத்தைப் பற்றுகின்ற வினையும் கவைத்தலே ஆகும். கீழ்க்காணும் பாடல்களில் பெண்களின் சிறுபுறத்தினை ஆடவர் கவைத்த செய்திகள் வருகின்றன. அவற்றை விரிவாகப் பார்ப்போம்.

………………………………….
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்
கண்ணியன் கழலன் தாரன் தண்ணென
சிறுபுறம் கவையினனாக அதன் கொண்டு
அஃதே நினைந்த நெஞ்சமொடு              
இஃது ஆகின்று யான் உற்ற நோயே நற். -128

(.. தினைப்புனத்தில் நான் காவலுக்கு இருந்தபோது தலையில் கண்ணியினையும் மார்பில் தாரினையும் காலில் கழல்களையும் அணிந்திருந்த ஒருவன் திடீரென என் கன்னத்தைச் செல்லமாகப் பற்றிவிட்டுச் சென்றுவிடவும் அதுமுதல் அவனையே நினைத்துநினைத்து நான் இக் காதல்நோயினை உற்றேன்.)

இப் பாடலில் தலைவியானவள் தனது கடைக்கண்களால் தலைவனை அளக்கிறாள். அவனது தோற்றத்தைக் கண்டு மகிழ்கிறாள். நாணம் மேலிட, தலைகவிழ்ந்து நிற்கிறாள். இந்நிலையில் அவளை மெல்ல நெருங்கும் தலைவன், அவள் எதிர்பாராத வகையில், அவளது கன்னத்தைச் செல்லமாய்ப் பற்றிவிட்டுச் செல்கிறான். இதனால் இன்னும் நாணம் கொண்ட தலைவி, தலைவனது அச் செயலையே பலமுறை நினைத்து நினைத்து அவனை மறுபடி எப்போது காணலாம் என்று ஏங்கும் நிலைக்குப் போய்விடுகிறாள்.

இதே நிகழ்ச்சியை விளக்குகின்ற இன்னொரு பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

நெருநல் எல்லை ஏனல் தோன்றி
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து
புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண்          5
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா
சூர் அர மகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ எம் அணங்கியோய் உண்கு என
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு 
……………………………    அகம் -32 

( நேற்றைய பகற்பொழுதிலே நமது தோட்டத்திற்குள் வந்த ஒருவன் பார்ப்பதற்கு ஓர் அரசனைப் போல அழகிய நீலமணி ஒளிரும் பூண்களை அணிந்துவந்து பிச்சைக்காரனைப் போல கெஞ்சும் மொழியில், ‘ தினையுண்ணவரும் கிளிகளைத் துரத்தவேண்டி குளிரும் தட்டையும் கொண்டு மெதுவாக அடித்து ஒலியெழுப்பி நிற்கின்ற தெய்வமகளைப் போலத் தோன்றும் பெண்ணே நீ யார்?. எனக்குள் காமநோயினை உண்டாக்கிய உனது கண்ணழகினை நான் உண்ணவோ?’ என்றுகூறி எனது கன்னத்தைப் பற்றிச் சென்றவனாக அதுமுதல்.)

இன்னொரு பாடலில், தலைவன் தலைவியையும் தனது மகனையும் பிரிந்து 
பொருள்தேடச் செல்கின்ற நேரம். அப்போது அவர்களுக்குள் நிகழும் பாசப் 
பிரிவினைப் போராட்டத்தினை கண்முன்னால் கொண்டு வருகிறது 
கீழ்க்காணும் பாடல். இது தலைவியின் கூற்றாக வருகிறது. 
 
……………………………………
என்மகன்_வயின் பெயர்தந்தேனே அது கண்டு
யாமும் காதலம் அவற்கு என சாஅய்
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல்
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய்
மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே         
நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே  - அகம் - 26

(……….. நான் என் மகனுக்கு அருகில் செல்வதைக் கண்டு, ‘ நானும் அவன்மேல் பாசமுடையவனேஎன்று கூறி அவனது கன்னத்தைச் செல்லமாய்ப் பற்றிவிட்டு கண்கலங்கி அழுதிடவும், அதைக்கண்ட நான், பலமுறை உழுதுவிட்டு மழைக்காக ஏங்கிக் காத்திருந்து பின்னர் அம்மழைநீரைப் பெற்று அதனுடன் ஒன்றிக்கலந்து சேறாகும் வயல்மண்ணைப் போல என் உள்ளம் நிலையழிந்து கலங்க மதிகெட்டவளாயினேன் .)

ஒருதாய் தனது மகனுக்கு முலைப்பால் ஊட்டும்போது அக் குழந்தையானது தனது தாயின் கன்னத்தை விளையாட்டாய்ப் பற்றுகிறது. இதை விளக்கும் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட
தான் அவள் சிறுபுறம் கவையினன் ஐங்கு 404

( ஒளிமிக்க கண்களை உடைய அப் பெண்ணானவள் தனது குழந்தைக்கு முலைப்பால் ஊட்டவும், அக் குழந்தையோ அவளது கன்னத்தைத் தனது சிறுகையினால் விளையாட்டாய்ப் பற்றியது)

காதல் வயப்பட்ட தலைவி ஒருத்தி இரவில் உறக்கமின்றி தவிக்கிறாள். அவள் உறங்காமல் இருப்பதற்கான காரணத்தை அறியாத அவளது தாய் அவளைத் தூங்கவைக்க முயல்கிறாள். இதைப்பற்றிய பாடல் இதோ கீழே:

நிரை இதழ் பொருந்தா கண்ணோடு இரவில்
பஞ்சி வெண் திரி செம் சுடர் நல் இல்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ
அன்னை முயங்க துயில் இன்னாதே குறுந் 353

( திரிவிளக்கு ஒளிரும் எனது வீட்டில், இரவாகிய பின்னும் இமைகள் பொருந்தாத கண்ணினளாய் நான் இருப்பதைக்கண்ட எனது அன்னை வரிகளை உடைய எனது கண்ணிமைகளைப் பொருந்தச்செய்து அணைத்தவாறு என்னை உறங்கவைத்தாலும் அது துன்பத்தையே தருவதாகும் )  

இப் பாடலில் பின்னுவீழ் சிறுபுறம் என்று வருவதால் இது வரிகளை உடைய கண்ணிமைகளைக் குறிப்பதாயிற்று.

சிறுபுறம் வேறு சில இடங்கள்:

சிறுபுறம் என்னும் சொல் கண் மற்றும் கண்ணிமைப் பொருட்களில் பயின்றுவரும் வேறுசில இடங்களை இங்கே காணலாம்.

தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா
சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர
ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆய் இழை மேனி பசப்பு கலி -42

( என் தோழியே ! பின்னாலிருந்தவாறு தனது கைகளால் எனது கண்ணிமைகளை மூடிநின்ற எனது காதலனைக் கண்முன்னர் கண்டதும், கதிரவனைக் கண்ட இருள்போல, எனது கண்களில் அதுவரையில் இருந்த கண்ணீர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது..)

இப் பாடலில் வரும் மேனி என்பது கண்களையும் பசப்பு என்பது கண்ணீரையும் குறிக்கும் என்று முன்னர் கட்டுரைகளில் கண்டுள்ளோம்.

தலைவி தலைவனுடன் உடன்போக்கு செல்லும்போது இடையில் ஒரு குறிஞ்சிக் காடு குறுக்கிடுறது. அது பல இன்னல்களை உடையது. அக் காட்டில், தனது வலிய நகங்களால் பாம்புகளைக் கொன்று ஆண் கரடியானது புற்றுக்குள் கைவிட்டு புற்றாஞ்சோறை உண்ணும்; பெரிய காட்டுப் பன்றியினைக் கொன்று புலியானது இழுத்துச்செல்லும்; சேற்றில் சிக்கிய ஆண்யானையினை மீட்க, பெண்யானையானது பெரிய மரத்தினை ஓசையுடன் முறித்து வலியுடன் பெயர்க்கும். இப்படி கரடியும், புலியும், யானையும் சுற்றித்திரிகின்ற இக் கானக நிலத்திலே திடீரென்று பெய்யும் பெருமழையினால் வழிதவறிச் செல்லும் இவர்களைக் கண்டுஇந் நிலத்தின் தன்மைகளை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டு அவர்களுக்கு விளக்குகிறார் ஒருவர். இவற்றை முன்னமே தாம் அறிந்திருந்தால், பகலில் செல்லாமல் இரவிலே சென்றிருப்போமே என்று தலைவி எண்ணுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. 

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சி பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும்
அரிய அல்ல-மன் …………………
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல
துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்          
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ
நெறி கெட விலங்கிய நீயிர்  சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர் பெறினே - அகம்  8
 
(…….. மின்னல் தோன்றக்கண்டு சற்றே ஒதுங்கி நடக்கத் துவங்கியபோது மென்மெல விழுந்த மழைத்துளிகள், ஐவண்ணங்களில் அழகாக மை பூசியிருந்த எனது கண்களையும் மறைக்குமாறு பெருமழையாக  இடியோசையுடன் பொழிய, ‘ செல்லவேண்டிய பாதைமாறி வந்த நீங்கள் இக் கானகத்தின் தன்மையினை அறிவீர்களா ? ‘ என்று கேட்போரைப் பெற்றால்.)   

இப்பாடலில் வரும் வாரி என்பதற்கு மழை என்ற பொருளும், குரல் என்பதற்கு இடியின் ஓசையும், பிழிதல் என்பதற்கு பொழிதல் என்ற பொருளும் கொள்ளப்பட்டுள்ளது.

தலைவியைப் பிரிந்துசென்ற தலைவன், இல்லத்தில் தலைவியின் நிலையை எண்ணி வருந்தி விரைந்துசெல்ல ஆவல்கொள்வதாக அமைந்த பாடல் இதோ:

……………………………..
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக
இயங்காது வதிந்த நம் காதலி
உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே அகம் -19

(………… பொன்னாலானதைப் போன்ற அழகிய அகல்விளக்கின் சுடரொளியினைத் துணையாகக் கொண்டு, அச்சுடரைப் போலவே அசையாமல் காத்துக்கிடக்கின்ற எனது காதலியின் வருத்தத்தினால் மெலிந்திருக்கும் கண்ணிமைகளைத் தழுவிக் கண்ணீரைத் துடைத்த பின்னர்……)

தலைவியானவள், தலைவனுடன் உடன்போக்கு செல்லும் முன்னர், தனது இல்லத்தில் தாய்ப்பசுவுடன் சேர்த்து மரத்தில் கட்டியிருக்கும் கன்றினை வாஞ்சையுடன் பார்க்கிறாள். அப்போது அவளது அன்னை அவளருகில் மெல்ல வந்து அவளது கண்ணிமைகளைத் தடவிக் கொடுத்து மெல்லத் தழுவவும், தலைவியோ அவளைப் பிரியப்போகும் வருத்தத்தினால் பலமுறை ஆரத்தழுவிக் கண்கலங்குகிறாள். இதை அழகாகப் படம்பிடித்துக்காட்டும் அகப்பாடல் இதோ கீழே:

………………………………….
கொடும் தொடை குழவியொடு வயின் மரத்து யாத்த
கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கி         
குறுக வந்து குவவு நுதல் நீவி
மெல்லென தழீஇயினேன் ஆக என்மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப
பல்கால் முயங்கினள் மன்னே ……. அகம் -49

(…………வளைந்த கால்களை உடைய சிறிய கன்றுக்குட்டியுடன் சேர்த்து மரத்தில் கட்டியிருந்த கறவைமாட்டினை வாஞ்சையுடன் பார்க்கும் என் மகளின் கண்களை நோக்கியவாறு மெல்ல அவளருகில் சென்று அவளது திரண்ட கண்ணிமைகளைத் தடவிக்கொடுத்து அவளை நான் ஒருமுறை அணைத்தேனாக, அவளோ தனது கண்களில் இருந்து கண்ணீர் சொரிய என்னைப் பலமுறை அணைத்துக் கொண்டாள்..)

இப் பாடலில் வரும் ஆகம், முலை, நுதல் ஆகிய அனைத்தும் கண்ணுடன் தொடர்புடையவையே. இதுபற்றி பல கட்டுரைகளில் விரிவாக முன்னர் கண்டுள்ளோம்.

இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த
தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம்
தாம் பாராட்டிய_காலையும் உள்ளார் அகம் 59

( இனிய நீருடைய சுனையிலே பூத்த அழகிய செங்கழுநீர்ப் பூவிதழினைப் போல அழகுசெய்யப்பட்ட எனது கண்ணிமைகளை அவர் பாராட்டிய பொழுதுகளையும் நினையார்..)

சிந்தாமணியும் சிறுபுறமும்:

பெண்களின் சிறுபுறம் பற்றி சிந்தாமணியில் சிந்தியிருக்கும் மணிபோன்ற பாடல்கள் சிலவற்றையும் ஈண்டு காண்பாம்.

எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி
திரு மணி முலையின் நெற்றி சிறுபுறம் செறிய தீட்டி
புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி
விரி மணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே - சிந்தா 625

( செம்மணி போல ஒளிரும் பட்டுத்துணியானது தழுவிக் கிடக்கின்ற நெற்றியில் வளைந்த வில் போன்ற மேகலையையும் முத்துமாலையையும் அணிந்து, அழகிய மணியைப் போல ஒளிவீசும் கண்களின் இமைகளில் விரல் நுனியைக் கொண்டு அழகாக மைபூசி இருந்தபோது, அது நீலமணியினைப் போல ஒளிவிட்டு விளங்கியது………) 

இப் பாடலில் வரும் சுண்ணம் என்னும் சொல் பட்டு என்னும் அகராதிப் பொருளில் வந்துள்ளது. இப் பாடலுக்குப் பொருள்கொள்ளும் முன்னர், நெற்றி என்னும் சொல்லை முதல்வரியில் சேர்த்துஎரிமணி சுண்ணம் மின்னும் நெற்றிஎன்று அமைத்துக்கொள்ள வேண்டும். இப் பாடலில் வரும் சிறுபுறம், ஆகம், மேனி ஆகிய மூன்றும் கண்ணிமைகளையும் முலை என்பது கண்ணையும் குறித்து வந்துள்ளன.

தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி சிந்தா 852

( வளைந்த மரக்கொம்புகளில் பூக்கள் நெருக்கமாகப் பூத்திருப்பதைப்போல அவள் தன் நெற்றியில் மலர் அரும்புகளால் ஆன மாலையினை அணிந்திருக்க, பெண்டிரைச் சேரும் ஆடவரினைப் போன்று அவ் அரும்புகளை வண்டுகள் மொய்த்திட, ஆண்களின் அரவணைப்பில் நெகிழ்ந்து ஊடல்கொள்ளும் பெண்டிரைப் போல அவ் அரும்புகள் முழுதாய் மலராமல் சற்றே நெகிழவும், பெண்டிரின் ஊடலைத் தீர்த்துவைக்கும் நண்பரைப் போல தும்பியானது சென்று அப் பெண்ணின் கண்ணிமையில் பொருந்தியிருந்து அவ் அரும்புகளுடன் பேசியதாம்……….என்ன ஒரு கற்பனை ! .)

முடிவுரை;

இதுகாறும் கண்டவற்றில் இருந்து சிறுபுறம் என்பதற்கு கண், கண்ணிமை, கன்னம் ஆகிய பொருட்களும் உண்டு என்று தெளிந்தோம்.

சிறுபுறம் என்பது கண்ணையும் கண்ணிமையினையும் குறித்து வருவதில் வியப்பில்லை. ஆனால், அது எவ்வாறு கன்னத்தைக் குறிக்க  பயன்படலாயிற்று என்று இங்கே பார்க்கலாம். பொதுவாக பெண்கள் கண்கலங்கி அழும்போது வழிந்தோடும் கண்ணீரைத் தாங்குவது கன்னமே. பெண்கள் நெடுநேரம் வருந்தி அழுதிருந்தால், கண்ணீர் வழிந்தோடிய வடுக்களை கன்னத்தில் காணமுடியும். இதைக் கவிதையாகச் சொல்வோமானால்,

கண்களின் அழகினை கண்ணிமைகள் காட்டிநின்றால்,
கண்களின் அழுகையினை கன்னங்கள் காட்டிநிற்கும்.
கண்களுக்கு மேலே இருப்பவை கண்ணிமைகள்
கண்களுக்குக் கீழே பொறுப்பவை கன்னங்கள்.

இப்படி கண்ணுக்கும் கண்ணிமைக்கும் கன்னத்திற்கும் ஒரு முக்கோணத் தொடர்பிருப்பதால், இம் மூன்றையும் குறிக்க சிறுபுறம் என்ற ஒரே சொல்லையே புலவர்கள் பயன்படுத்தினர் எனலாம்.

இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், நாம் தற்போது பயன்படுத்திவரும் கன்னம் என்ற சொல்லே கண்ணம் என்பதன் மரூஉ வாகக் கூட இருக்கலாம்.  அதாவது,

கன்னம் >; கண்ணம் = கண்ணுடன் தொடர்புடையது/ அருகிருப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.