செவ்வாய், 1 நவம்பர், 2016

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 1

முன்னுரை:

இன்றைய இந்தியாவில் தொல்தமிழகமானது, இமயமலையினை வட எல்லையாகவும், மேற்கு வங்காளத்தினை கிழக்கு எல்லையாகவும் ராஜஸ்தானை மேற்கு எல்லையாகவும் கொண்டு தெற்கே பரந்து விரிந்த தேயமாக விளங்கியது என்று ' நான்கு கடவுள் - தொல்தமிழகம் ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். இக் கட்டுரையில், தொல்தமிழகமானது இமய மலைக்கு அருகில் தான் அமைந்திருந்தது என்னும் கருத்தினைப் போதுமான இலக்கிய ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம். 

சிலப்பதிகாரமும் இமைய மலையும்:

தமிழினத்தைச் சேர்ந்த முப்பெரும் வேந்தர்களான பாண்டியர், சேரர், சோழர் ஆகிய மூவருமே இமையமலையில் தமது அரசுக்கான கொடியினை நட்டு தமது வெற்றியை உலகுக்குப் பறைசாற்றி உள்ளனர். இதைப்பற்றிய சிலப்பதிகாரப் பாடலைக் கீழே காணலாம்.

கயல் எழுதிய இமய நெற்றியின்
அயல் எழுதிய புலியும் வில்லும் - மதுரை.17

பாண்டியருக்கான மீன்கொடியும் சோழருக்கான புலிக்கொடியும் சேரருக்கான வில்கொடியும் இமைய மலையில் நட்டு வைக்கப் பட்டிருந்ததாக மேற்காணும் பாடல் குறிப்பிடுகிறது. இதுபோல சிலப்பதிகாரம் முழுவதிலுமே தமிழ் மன்னர்கள் தமது வெற்றிக்கொடியினை நாட்டி அரசாண்ட செய்திகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒருசில இடங்கள் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு
வில்-புலி-கயல் பொறித்த நாள் - வஞ்சி.29
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் - மதுரை. 17
வில் எழுதிய இமயத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே - வஞ்சி.24

இமயமலையில் தமிழ் மன்னர்கள் தமது கொடிகளை நட்டு ஆட்சிபுரிந்த செய்திகளை மேற்காணும் பாடல்கள் கூறுகின்றன. இதெல்லாம் அம் மன்னர்களுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று?. தற்போதைய தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இமயம் வரை சென்று போரிட்டு வெற்றிபெற்று கொடிநாட்டுவது என்பது இயலாத செயலாகும். காரணம், தற்போதைய தமிழ்நாட்டில் இருந்து இமயமலையானது ஏறத்தாழ 3000 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இமயமலைக்குச் செல்லும் வழியில் ஆறுகள், மலைகள், காடுகள் என்று பல தடைகள் எதிர்ப்படும். அவற்றைக் கடந்து முன்னேறும்போது வழியில் பிறநாட்டு மன்னர்களும் தடுப்பார்கள். அவர்களுடனும் போரிட்டு வெற்றிபெற்றால் தான் முன்னேறிச் செல்லமுடியும். இப்படிப் பல தடைகளையும் வென்று இவ்வளவு தூரத்தினைக் கடந்துசெல்வதற்குள் படைவீரர்கள், யானை, குதிரை போன்ற போர்விலங்குகளின் எண்ணிக்கை மற்றும் உடல்வலிமை ஆகிய ஒட்டுமொத்த வலிமையும் குன்றிவிடும். அப்புறம் போரில் வெற்றி பெறுவதென்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால், தமிழ் மன்னர்கள் இமயமலையை வெற்றிகொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. என்றால், அவர்கள் அப்போதிருந்த இடமானது உறுதியாக இமயமலைக்கு அருகில் தான் இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் இமயமலையின் வெற்றி அவர்களுக்குச் சாத்தியமாகும்.

" இல்லை இல்லை, சிலப்பதிகாரம் என்பது கற்பனை கலந்து எழுதப்பட்ட ஒரு காப்பிய நூல். அந்நூல் கூறும் வரலாற்றுச் செய்திகள் நம்பகமற்றவை. " என்று ஒருசிலர் மறுக்கலாம். இவர்களது வாதம் எவ்வளவு தவறானது என்பதைப் படிக்கப் படிக்கப் புரிந்துகொள்வார்கள். ஆம், சிலப்பதிகாரத்தைத் தான் கற்பனைக் காப்பியம் என்று இவர்கள் குறைகூறுகிறார்கள். சங்க இலக்கியங்களில் இமயமலை பற்றி ஏராளமான செய்திகள் காணப்படுகின்றனவே. அவையும் பொய்தானா இவர்களுக்கு?. இதோ சங்க இலக்கியங்களில் இமயமலை பற்றிக் காணக் கிடைக்கின்ற செய்திகள் பாடல் வரிகளுடன் விளக்கமாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் படித்துமுடித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம். 

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 1
சிமைய குரல சாந்து அருந்தி இருளி
இமைய கானம் நாறும் கூந்தல்
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்
பருகு அன்ன காதல் உள்ளமொடு
திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார்
கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த
உடை_கண் நீடு அமை ஊறல் உண்ட
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை
வாடு புலம் புக்கு என கோடு துவைத்து அகற்றி
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும்
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம்
காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல்
வேய் கண் உடைந்த சிமைய
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே - அகம். 399

வரிவிளக்கம்:

சிமைய குரல = மலையுச்சியில் பூத்த பல மலர்களின்
சாந்து அருந்தி இருளி = சாந்தினைக் கருமையுடன் சேர்த்துப் பூசியதால்
இமைய கானம் = இமயத்து மலர்ச்சோலைகளைப் போல
நாறும் கூந்தல் = நறுமணம் வீசுகின்ற கண்ணிமைகளையும்
நன் நுதல் அரிவை = நல்ல ஒளிவீசும் கண்களையும் உடைய தலைவியே !
இன் உறல் ஆகம் = இன்பம் தரும் கண்களைப்
பருகு அன்ன காதல் உள்ளமொடு = பருகுவதைப் போலும் காதல் உள்ளத்துடன்
திருகுபு முயங்கல் இன்றி = பின்னியதைப் போலப் பார்ப்பதே அன்றி
அவண் நீடார் = அங்கே காலந்தாழ்த்த மாட்டார்
கடற்று அடை மருங்கின் = காட்டுவழியின் ஓரமாக
கணிச்சியின் குழித்த = மழுவினைக் கொண்டு செதுக்கிய
உடைக்கண் நீடு அமை = கணு உடைந்த நீண்ட மூங்கில் மரங்களின்
ஊறல் உண்ட = பச்சிலைகளை உண்ட
பாடு இன் தெண் மணி = ஒலிக்கின்ற மணிகள் கோர்த்த
பயம் கெழு பெரு நிரை = பால் நிறைந்த பசுக்கூட்டமானது
வாடு புலம் புக்கு என = வறண்ட நிலத்தில் புகுந்ததென
கோடு துவைத்து அகற்றி = ஊதுகொம்பினை ஒலித்து நீங்கச்செய்து
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ = குட்டையாக வளர்ந்த கொன்றைமர நிழலில் தங்கி
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் = இடையர்கள் ஊதுகின்ற
சிறு வெதிர் தீம் குழல் = மூங்கிலால் செய்த சிறிய புல்லாங்குழலின்
புலம் கொள் தெள் விளி = இடம் முழுவதும் பரவிய தெளிவான ஓசையினை
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற = குற்றமில்லாத பளிங்கு போலத் தோன்றுகின்ற
பல் கோள் நெல்லி பைம் காய் அருந்தி = பல நெல்லிமரங்களின் பசுங்காய்களைத் தின்று
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் = அசையிட்டவண்ணமாக மான்கூட்டம் கவனித்துக் கேட்கின்ற காட்டினையும்
காய் கதிர் கடுகிய = கதிரவன் மிகுதியாகக் காய்ந்ததால்
கவின் அழி பிறங்கல் = அழகு அழிந்த மலையினதாய்
வேய் கண் உடைந்த சிமைய = மூங்கில்களின் கணு உடைந்த மலையுச்சியின்
வாய் படு மருங்கின் மலை இறந்தோரே - விளிம்பருகே உள்ள வழியாக மலையைக் கடந்தவரே.

( பொருள்: மலையுச்சியில் பூத்த பல மலர்களின் சாந்தினைக் கருமையுடன் சேர்த்துப் பூசியதால் இமயத்து மலர்ச்சோலைகளைப் போல நறுமணம் வீசுகின்ற கண்ணிமைகளையும் நல்ல ஒளிவீசும் கண்களையும் உடைய தலைவியே ! காட்டுவழியின் ஓரமாக வளர்ந்திருந்த பிளவுபட்ட நீண்ட மூங்கில் மரங்களை மழுவினைக் கொண்டு செதுக்கியிட்ட பச்சிலைகளை உண்ட, ஓலிக்கும் மணிகள் கட்டப்பட்ட பசுக்கூட்டமானது வறண்டநிலத்தில் புகுந்ததால், ஊதுகொம்பினை ஒலிக்கச்செய்து அங்கிருந்து அவற்றை நீங்கச்செய்தபின்னர், குட்டையாக வளர்ந்திருந்த கொன்றைமர நிழலில் இளைப்பாறியவண்ணம் இடையர்கள் ஊதிய புல்லாங்குழலின் ஓசையினை, பளிங்குபோன்ற நெல்லிக்காய்களைத் தின்று அசைபோட்டவண்ணம் கவனித்துக் கேட்கின்ற மான் கூட்டம் மிக்கதும், வெயிலின் கடுமையால் வறண்டு அழகழிந்து பிளவுண்ட பல மூங்கில் மரங்களை உச்சியில் உடையதுமான அம் மலைக்காட்டினைக் கடந்துசென்ற உனது காதலர், உனது கண்கள் தரும் இன்பத்தினைப் பருகுவதற்கு காதல் மிக்க உள்ளத்துடன் உன்னைக் காண விரைந்து வருவாரேயன்றி அங்கே நீண்டகாலம் தங்கமாட்டார். )

இப் பாடலில் இமையமலையில் இருக்கும் மலர்ச்சோலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறாள் தலைவி. இமயமலையில் பல சமவெளிகளும் மலையுச்சிகளும் உண்டென்று அனைவரும் அறிவோம். அப்படி ஒரு சமவெளியில் வாழுகின்ற தலைவியானவள் அருகிருக்கும் ஒரு மலையுச்சியில் இருந்து பறிக்கப்பட்ட பூக்களின் தாதுக்களை மைபோல அரைத்துக் கருமையுடன் சேர்த்து கண்ணிமைகளில் பூசியிருக்கிறாள். அது இமயமலையில் உள்ள பன்மலர்ச் சோலைகளைப் போல மணம்வீசுவதாகக், காதலரின் பிரிவால் வாடிக்கொண்டிருக்கும் தலைவியிடம் கூறி அவள் மனதை மாற்ற முயல்கிறாள் அவளது தோழி. தலைவி வாழும் சமவெளியில் இடையர்கள் மாடு மேய்த்தவாறு புல்லாங்குழலை ஊதி மகிழ்வது வழக்கம். அப்படி அவர்கள் ஊதும் புல்லாங்குழலின் ஓசையினை அருகிருக்கும் இன்னொரு மலையுச்சியில் வாழ்கின்ற மான் கூட்டமானது கூர்ந்து கேட்குமாம். பொருள் கருதித் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் அருகிருக்கும் அந்த மலையுச்சியினைக் கடந்துதான் செல்ல வேண்டும். மான்கள் தனது துணையுடன் சேர்ந்திருக்கும் அக் காட்சியைக் காணும் தலைவர் உன்னைக் காண விரைந்து வருவார் என்று அவளைத் தேற்றுவதாகப் பாடல் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல, இப் பாடலில் வேனில் பருவத்துக் கொடுமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இடையர்கள் மாடுமேய்த்துச் செல்லும் சமவெளியில் வெயிலின் தாக்கத்தினால் மூங்கில் மரங்கள் கணுக்கள் பிளந்தநிலையில் காணப்படுகின்றன. பசுக்கள் குடிப்பதற்குத் தண்ணீர் எங்கேயும் காணப்படாததால், லேசான ஈரப்பதத்துடன் இருக்கின்ற மூங்கிலின் இலைகளை மழுவினைக் கொண்டு செதுக்கி அவற்றைப் பசுக்களுக்கு உண்ணக் கொடுக்கிறார்கள் இடையர்கள். வெயிலில் அலைய முடியாமல் குட்டையாக வளர்ந்திருக்கும் கொன்றை மரங்களின் நிழலில் இளைப்பாறிய வண்ணம் பொழுதுபோக புல்லாங்குழல் வாசிக்கின்றனர். இதுபோல பல இடையர்கள் வாசித்ததால் எழுந்த பெரும் ஓசையினை அருகில் இருக்கும் மலையுச்சியில் வாழும் மான் கூட்டங்கள் கவனித்துக் கேட்ட வண்ணம், நெல்லி மரங்களின் காய்களைத் தின்றுகொண்டு நிற்கின்றன. மான்கள் வாழும் அந்த மலையின் நிலையோ சமவெளியைக் காட்டிலும் கொடியது. கொடிய வெப்பத்தால் மலையுச்சியிலிருந்த மூங்கில் மரங்களின் கணுக்கள் யாவும் வெடித்து முற்றிலும் பசுமை இழந்து வறண்ட நிலையில் அழகற்றுக் காணப்படுகின்றன. தாகத்தைத் தீர்க்க விரும்பிய மான் கூட்டமோ நீரின்மையால் நெல்லிக்காய்களைத் தின்று அதையே அசைபோட்டுக் கொண்டிருக்கின்றன. 

இப் பாடலில் கூறப்படும் செய்திகள் யாவும் இமயமலை பற்றியதாகத் தான் இருக்கமுடியும். இமயமலையின் மலர்ச்சோலைகளைப் போல மணம் பரப்புகின்ற கண்ணிமைகளை உடையவளே என்று தோழி கூறுவதிலிருந்து இதனை அறிந்துகொள்ளலாம். இன்றைய தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, எங்கோ இருக்கின்ற இமயமலையைப் பற்றி இவ்வளவு விரிவாக யாரும் கூறமாட்டார்கள். அவ்வகையில், சங்க காலத்தில் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடலை ஒரு காட்டாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும். 

.......  தொடரும்.....

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.