சனி, 6 ஆகஸ்ட், 2011

மாமுகடி = மூதேவி ?


குறள்:
மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரை யினாள்
                          - குறள் எண்: 617

தற்போதைய உரை விளக்கங்கள்:

பரிமேலழகர் உரை: கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
கலைஞர் உரை: திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.
மு.வ உரை: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
சாலமன் பாப்பையா உரை: சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவாள். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்பர்.

உரைத் தவறுகள்:

மேற்காணும் உரைகள் அனைத்தும் 'மாமுகடி' என்ற சொல்லிற்கு 'கரிய சேட்டை ஆகிய மூதேவி' என்றும் 'தாமரையினாள்' என்ற சொல்லிற்கு 'திருமகள்' என்றும் பொருள் கூறுகின்றன. மற்றவர்கள் இவ்வாறு பொருள் கூறியிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால்  இறைவனின் இருப்பினையே மறுக்கின்ற கொள்கையை உடையவர் கலைஞர். திருக்குறளின் கடவுள் வாழ்த்திற்கு இவர் எழுதியுள்ள உரை விளக்கங்களே இதற்குப் போதுமான சான்றுகளாகும். இவர் எப்படி, ஏன் இப் பொருள்களைக் கூறியுள்ளார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!.

இது ஒருபுறமிருக்க,  மூதேவியும் திருமகளும் ஒரு குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள் என்னும் உண்மையினை நாம் நன்கு அறிவோம்.  திருவள்ளுவர் சமயச்சார்பற்றவர் என்றும் எந்த ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமயம் சார்ந்த கருத்துக்களையும் அவர் கூறுவதில்லை என்னும் உண்மையினையும் நாம் முன்பே 'ஆதிபகவன் யார்', 'தாமரைக் கண்ணான் உலகு', இந்திரனே சாலும் கரி', 'செய்யவள் தவ்வை', 'பொறிவாயில் ஐந்தவித்தான்' போன்ற கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.  அவ் வகையில், இக் குறளிலும் அவர் ஒரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த கருத்துக்களைக் கூறி இருக்க முடியாது அல்லவா?.  எனவே இக் குறளுக்கு மேலே கூறப்பட்டுள்ள உரை விளக்கங்கள் யாவும் தவறானவையாகவே கொள்ளப்படுகின்றன.


அதுமட்டுமின்றி மேலேகண்ட உரைவிளக்கங்களில் சொல்லப்படுவதான  'சோம்பல் இல்லாமல் முயல்பவனிடத்தில் திரும்கள் தங்குவாள். சோம்பேறியிடத்திலே மூதேவி தங்குவாள்' என்னும் கருத்தைப் போலவே கீழ்க்காணும் குறள் உள்ளது.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். - எண்: 616

இதன் பொருள்: சோம்பல் இன்றி முயல்பவனிடத்தில் செல்வம் (திருமகளின் அருள்) பெருகும். முயற்சியற்ற சோம்பேறியிடத்திலே வறுமையே (மூதேவியின் அருள்) மிகும்.

616 ம் குறளின் பொருளுக்கும் 617 ம் குறளின் விளக்கத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது?. ஒன்றுமே இல்லை அல்லவா?. ஒரே கருத்தினை அடுத்தடுத்த இரண்டு குறள்களில் வள்ளுவர் ஏன் கூற வேண்டும்?. அவ்வாறு கூறுவது 'கூறியது கூறல்' குற்ற்மாகி விடும் என்பதை வள்ளுவர் நன்கு அறிவார். எனவே வள்ளுவர் 617 ம் குறளில் மேலே கண்ட கருத்தினைக் கூற விழையவில்லை என்பது பெறப்படுகிறது.


அதுமட்டுமின்றி, இக்குறளுக்கு பல பாடபேதங்கள் காணக் கிடைக்கின்றன. 'மடியுளான் மாமுகடி' என்றும் ' மடியுளாள் மாமுகடி' என்றும் ' தாளுளான்  தாமரையினாள்' என்றும் ' தாளுளாள் தாமரையினாள்' என்றும் பலவாறாகக் கூறப்படுகின்றன. இது இக்குறள் சிதிலமடைந்த  நிலையில் கிடைத்திருக்குமோ என்று கருத இடமளிக்கிறது. இனி இக் குறளின் திருந்திய பொருளை ஆதாரங்களுடன் காணலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் 'மாமுகடி' என்ற சொல் எருமைமாட்டினைக் குறிக்கும். அடுத்து, 'தாமரையினாள்' என்பதைக் கீழ்க் காணும் வகையில் பிரித்துப்பொருள் கொள்ள வேண்டும்.

 தாமரையினாள் = தா + மரையின் + ஆள்
                                      = தாவிச் செல்லும் மான் போன்றவன்.

தாளுளான் என்பதற்கு முயற்சி அல்லது வினையாற்றுபவன் என்று பொருள் கொள்ளவேண்டும். இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்:

சோம்பல் மிகுதியால் செயல் புரியாமல் கிடப்பவனை எருமை மாடு என்று  சொல்வார்கள். சோம்பல் இல்லாதவனாய் (ஓடித் திரிந்து) வினையாற்றுபவன் தாவிச் செல்லும் மான் போன்றவன் ஆவான்.'

நிறுவுதல்:

சோம்பல் கூடாது என்று மடியின்மை என்ற அதிகாரத்தில் வலியுறுத்திக் கூறிய வள்ளுவர் ஆள்வினை உடைமை என்ற இந்த அதிகாரத்தில் சோம்பேறியின் தன்மை பற்றியும் சோம்பல் அற்றவனின் தன்மை பற்றியும் விளக்குகிறார். அதற்கு நாம் நன்கு அறிந்த இரண்டு விலங்குகளை எடுத்துக் காட்டாகக் கூறியுள்ளார் இக்குறளில்.

இந்தக் காலத்தில் மட்டுமல்ல வள்ளுவர் காலத்துக்கு முன்பாகவும் செயலேதும் புரியாத சோம்பேறிகளை 'எருமை மாடு' என்று குறிப்பிடுவது வழக்கம் போலும். அதனால் தான் இக்குறளில் வள்ளுவர் 'மாமுகடி என்ப' என்று கூறுகிறார். இந்த 'மாமுகடி' என்ற சொல் எவ்வாறு எருமை மாட்டினைக் குறிக்கும் என்று பார்க்கலாம்.

முகடி என்ற சொல்லுக்கு அறிவின்மை / அறியாமை என்ற பொருளும் உண்டு. ஆனால் இது அகாராதிகளில் கூறப்படவில்லை. கீழ்க்காணும் குறளில் வள்ளுவரே அப் பொருளில் பயன்படுத்தி இருப்பதைக் காணலாம்.
 
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியான் மூடப் பட்டார். - குறள்: 936
 
மா என்றால் மிகுதி, கருமை, விலங்கு என்ற பொருட்கள் உண்டு. எனவே மாமுகடி என்பது அறியாமை மிக்க கரிய விலங்கு என்ற பொருளில் எருமை மாட்டினைக் குறித்தது.


இனி சோம்பல் உடையவனை எருமைமாடு என்று சொல்லும் வழக்கம் எதனால் உண்டானது என்று பார்க்கலாம். இங்கு பேசப்படும் எருமை மாடானது கரிய நிறமுள்ள ஆசிய கண்டத்து நீர் எருமை ஆகும். இது நன்றாகப் புல்லை மேய்ந்துவிட்டு சேற்றுநீரில் சென்று படுத்துக்கொண்டு பொழுதைக் கழிக்கும். பெரும்பாலான நேரம் நீரிலேயே இருப்பதால் இதன் வாசனை முகரும் திறன்  மிகவும் குறைவாக இருக்கிறது. கேட்புத் திறனோ மிக மிகக் குறைவாகும். மந்தமாக இயங்குவது இதன் தனிச்சிறப்பாகும்.  சோம்பல் மிகக் கொண்டு செயல்புரியாமல் இருப்பவனின் நிலையும் ஏறத்தாழ எருமை மாட்டின் நிலை தான். ஊக்கமும் செயலும் இன்மையால் இவரது புலன்களும் சோம்பல் கொண்டு சரியாக இயங்குவதில்லை. காது சரியாகக் கேளாது. மூக்கு சரியாக முகராது. பார்வை சரியாகத் தெரியாது. இயக்கம் இல்லாமல் எப்போதும் சோம்பிப் படுத்திருக்கும் இத்தகைய மனிதரை எருமை மாடு என்று பெரியோர்கள் சொன்னதில் தவறில்லை தானே?

சோம்பல் உடையவனை எருமை மாட்டிற்கு ஒப்பிட்ட வள்ளுவர் சோம்பலில்லாமல் ஓடித் திரிந்து வினையாற்றுபவனை தாவித் திரியும் மானுடன் ஒப்பிடுகிறார். ஏனென்றால் மான் எப்போதும் சுறுசுறுப்பாகத் திரியும் இயல்பினது. இதற்கு நல்ல கேட்புத் திறனும் வாசனை முகரும் திறனும் உண்டு.  சோம்பலில்லாமல் வேலை செய்பவனின் புலன்களும் எழுச்சி பெற்று இருக்கும் என்பதற்கு மானை ஒரு காட்டாகக்கூறுகிறார் இக்குறளில்.

எருமையும் மானும் புல்லைத் தின்னும் விலங்குகளே ஆனாலும் இரண்டின் செயல்பாடுகளில் எவ்வளவு வேறுபாடுகள் இருக்கிறது பாருங்கள்.  இவ் இரண்டின் தன்மைகளைக் கொண்டு ஒரு அரிய கருத்தினை குறளில் புகுத்திய வள்ளுவனின் நுண்மாண் நுழைபுலம் வியந்து பாராட்டத் தக்கதன்றோ!
............................................... வாழ்க தமிழ்!...................................................

10 கருத்துகள்:

  1. வணக்கம்.வாழ்க தமிழ்! வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது! என்று இங்கிட்டும் அங்கிட்டும் ஓடுகிறார்போல் செய்வது எவ்வாரு என்று எனக்கு எழுதுங்களேன். உதவியாய் இருக்கும். asokanvvr@gmail.com

    பதிலளிநீக்கு
  2. snackwebsites.com என்ற விளம்பரத்தைப் பார்த்து அதில் போனால் முன்னே பின்னே போகும்படி செய்யலாமோ என்று போய் inpower4.snack.ws என்று ஓப்பன் பண்ணியதுதான் மிச்சம். ஓடவில்லை. ஆனால் ப்ளாக் நன்றாக உள்ளது. நன்றி...நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு மிக்க நன்றி. இப்போது அந்த விளம்பர வாசகம் வேலை செய்யவில்லை. ஏதோ கோளாறு போலத் தெரிந்ததால் விட்டுவிட்டேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

      நீக்கு
  3. சமீப காலமக குறளின் மீது பற்றிக் கொண்ட ஆர்வத்தின் காரணமாக இந்தக் குறளுக்கு பொதுவில் பகிர்ந்திருக்கும் விளக்கம் ஒவ்வாது சிறிதே அகழ்ந்தெடுக்க முயன்ற போது எனது எண்ணமும் கிட்டத்தட்ட இந்தப் பொருளை ஒட்டியே வந்தமர்ந்தது.

    ஆனாலும் ஒரு இடத்தில் நான் கரை தட்டி நிற்கிறேன்.

    மடியிலுளாள் - என்று குறள் கூறுகிறது.

    இங்கும் நாம் பெண்பால் விகுதியை மாற்ற வேண்டுமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மடியுளாள் = மடி+உள்+ஆள் அதாவது மடியினை உடைய ஆள் என்று விரியும். பொதுவாக ஆள் என்பது ஆண்மகனைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பதால் விகுதியை மாற்ற வேண்டிய தேவையில்லை. சில நூல்களில் மடியுளான் என்று பாடபேதமாகவும் இருக்கிறது. மடியுளான் என்றாலும் மடியுளாள் என்றாலும் ஆண்மகனையே குறிக்கிறது. மிக்க நன்றி. :))

      நீக்கு
  4. ஆள் என்றால் மனிதன் என எந்த அடிப்படையில் கொள்வது ? பண்டை இலக்கிய சான்று தர இயலுமா? ஆன் என்பதையே மனிதன் என குறள் குறிப்பதற்கு பல குறள்கள் உள்ளனவே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 14ஆம் நூற்றாண்டு சூடாமணி நிகண்டு மிகத்தெளிவாக முகடி என்றால் மூதேவி என உள்ளது. முகடி என்பதை முகரி என மாற்றுவதற்கு என்ன ஆதாரம்?

      நீக்கு
    2. கட்டுரையில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. படித்துவிட்டு வேறு ஆதாரங்கள் தேவை எனில் கேளுங்கள். நன்றி.

      நீக்கு
    3. பொருத்தமாக இல்லை என கருதுகிறேன். தங்களது கூற்றுப்படி மாமுகடி என்றால் கரிய விலங்கு அறியாமை என கொள்ளவேண்டும். முகடிமா என்றால் அறியாமை உள்ள கரிய விலங்கு என கொள்ளலாம்.
      உங்களது சொல் அமைப்பை பின்பற்றினால் ஆள்தாமரை என்றே கொள்ள வேண்டும். தங்களது எடுத்துக்காட்டு குறளில் சூதென்னும் அறியாமை என இதுவரை ஒரு தமிழறிஞரும் கூறவில்லை. அக்குறளிலும் முகடி என்பதை அனைவரும் மூதேவி என்றே கூறியுள்ளனர். இறை மறுப்பாளரான கலைஞரும் தீமை என்றே முகடியை குறிப்பிட்டுள்ளார். அறியாமை என்ற பொருளை யார் எங்கு பயனிட்டுள்ளார் என தெரிவிக்கவும்.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.