குறள்:
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
- எண்: 338
தற்போதைய உரைகள்:
கலைஞர் உரை: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
மு.வ உரை: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
உரைத்தவறுகள்:
மேற்காணும் உரைகளில் மு.வ. உரையானது மணக்குடவரது உரையைப் பின்பற்றியும் கலைஞர் மற்றும் பாப்பையாவின் உரைகள் பரிமேலழகரின் உரையினைப் பின்பற்றியும் எழுதப்பட்டுள்ளன. பரிமேலழகர் உரைப்படி, உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது பறவையின் முட்டைக்கும் பறவைக்கும் இடைப்பட்ட உறவு போன்றதாம். இங்கே பரிமேலழகர் குடம்பை என்ற சொல்லுக்கு முட்டை என்ற பொருளைக் கொண்டுள்ளார். மணக்குடவர் உரைப்படி, உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது பறவையின் கூட்டுக்கும் பறவைக்கும் இடையிலான உறவு போன்றதாம். இங்கே மணக்குடவர் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு என்ற பொருளைக் கொண்டுள்ளார். இவற்றில் எது சரியான விளக்கம் என்று இங்கே காணலாம்.
ஆராய்ந்து பார்க்குமிடத்து, மேற்கண்ட இரண்டு விளக்கங்களுமே தவறாகப் படுகிறது. முதலில் மணக்குடவரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி, உடல்-உயிர் உறவினை கூடு-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் பறவை தனது கூட்டிலேயே எப்போதும் இருப்பதில்லை. மாலையில் வந்து தங்கி இருந்து இரவு கழித்து அதிகாலையில் எழுந்ததும் இரைதேடச் சென்று விடுகிறது. மறுபடியும் மாலை ஆனதும் தனது கூட்டுக்கே திரும்பி விடுகிறது. இது நாள்தோறும் நடக்கும் செயலாகும். ஆனால் ஒருமுறை ஒரு உடலை விட்டு பிரிந்து செல்லும் உயிரோ மீண்டும் அதே உடலுக்கு திரும்ப வருவதில்லை. இதைத் தான் நாம் மரணம் என்று அழைக்கிறோம். இப்படியாக பறவையின் செயலும் (கூட்டுக்குத் திரும்பி வருவது) உயிரின் செயலும் ( உடலுக்குத் திரும்பாமை) முற்றிலும் இங்கே மாறுபடுகின்றதால் மணக்குடவரின் உரை தவறு என்று தெளியலாம். இல்லை, இல்லை, மணக்குடவர் கூற விழைவது யாதெனின், ஒரு பறவை தனது கூட்டை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விடுகின்றதல்லவா அதைத்தான் உடல்-உயிர் உறவுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் என்று சிலர் கூறலாம். இவ் விளக்கமும் பொருந்தா விளக்கமே. ஏனென்றால் அனைத்து பறவைகளுமே கூடுகட்டி வாழ்வதில்லை என்பதுடன் தனது வாழ்நாளில் பலமுறை கூட்டை விட்டுப் பறவை பிரிந்து செல்லும் நிகழ்ச்சியை எப்போதோ ஒருமுறை நிகழும் மரணத்துடன் ஒப்பிடுவது இயல்பாகப் படவில்லை. ஆகவே மணக்குடவரின் விளக்கம் இங்கு பொருத்தமாகப் படவில்லை.
அடுத்து பரிமேலழகரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி, உடல்-உயிர் உறவினை முட்டை-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் முட்டை பொறிந்தவுடன் முட்டைக்குள் இருந்து பறவைக் குஞ்சு வெளிவரும் போது முட்டை முற்றிலும் சிதிலமடைந்திருக்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால், முட்டையை முற்றிலும் சேதப்படுத்திய பின்னரே பறவைக் குஞ்சு வெளிவருகிறது. அதுமட்டுமின்றி வெளிவந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அனைத்துப் பறவைக் குஞ்சுகளுமே உடனடியாகப் பறந்துவிடுவதில்லை. ஆனால் உடலிலில் இருந்து உயிர் பிரியும் போது உடலுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படுவதில்லை. பறவையின் முட்டையைப் போல உடையாமல் மனித உடலானது அப்படியே முழுமையாகத் தான் இருக்கிறது. உயிர் பிரிந்த பல மணி நேரத்திற்குப் பின்னர் தான் உடல் அழுகத் துவங்குகிறது. அப்படியே அழுகினாலும் பறவை முட்டையைப் போல உடைந்து விடுவதில்லை. எனவே பறவை முட்டையை மனித உடலுடன் ஒப்பிட்டு பரிமேலழகர் இக் குறளுக்கு விளக்கம் கூறியிருப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.
இப்பொருள் குழப்பங்களுக்குக் காரணம் 'குடம்பை' என்ற சொல்லே ஆகும். இக் குறளில் இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்னவென்றும் இக் குறளுக்கான புதிய விளக்கம் என்னவென்றும் கீழே காணலாம்.
திருந்திய பொருள்:
இக் குறளில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு செய்கூடு அதாவது கூண்டு என்பது பொருளாகும். இப்புதிய பொருளின்படி, இக்குறளுக்கான புதிய விளக்கமானது:
உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது, (அத்தனை நாளும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருந்த) கூண்டை விட்டு பறவை ஒன்று தனியே (திரும்பி வராதபடிக்கு) பறந்து செல்வதைப் போன்றதாகும்.
நிறுவுதல்:
குடம்பை என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன.
சென்னை மற்றும் வின்சுலோ இணையத் தமிழ்ப்பேரகராதிகள்:
குடம்பை kuṭampai: , n. < குட. 1. Nest; கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி, 26). 2. Egg; முட்டை. (பிங்.) குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே (குறள், 338).
ஃபேபரிசியஸ் இணையத் தமிழ்ப் பேரகராதி:
குடம்பை (p. 254) [ kuṭampai ] , s. a bird's nest, கூடு; 2. an egg, முட்டை; 3. body, உடம்பு; 4. a tank.
மேற்காணும் கூடு, முட்டை, உடம்பு, தொட்டி ஆகிய பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று பார்ப்போம்.
1. கற்றுரிக் குடம்பை கதநாய் வடுகர் - அகநா: 382
2. தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதிவாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.
- திருவிளையாடல்: 2695
மேற்காணும் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு, முட்டை, உடம்பு, தொட்டி என்று எந்தப் பொருளைப் போட்டாலும் பொருந்தவில்லை அல்லவா. இது இச் சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. ஆம், இப் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு 'கூண்டு' என்ற புதிய பொருளே பொருத்தமாயுள்ளது. இது எவ்வாறென்று காண்போம்.
முதல் பாடலில் வரும் 'கற்றுரிக் குடம்பை' என்பது கீழ்க்காணுமாறு பிரியும்.
கற்றுரிக் குடம்பை = கற்று (கன்று) + உரி ( = தோல்) + குடம்பை
கன்று என்பது இங்கு கற்று என்று வலித்தல் விகாரம் பெற்று வந்துள்ளது. ஆக, கற்றுரிக் குடம்பை என்பது விலங்குக் கன்றின் தோலினால் செய்த கூண்டைக் குறிப்பதாகும்.
இரண்டாம் பாடலில் 'மீன் இடு குடம்பை' என்று இருக்கிறது. இதன் பொருள் 'மீன்களை இடுகின்ற கூண்டு' என்பதாகும். கூடுக்கும் கூண்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். கூடு திறந்த நிலையில் இருக்கும். அதை மூடி விட்டால் அதுவே கூண்டு ஆகும்.
ஆக, அகராதிகள் கூறியுள்ள பொருட்களே அன்றி குடம்பை என்னும் சொல்லிற்கு கூண்டு என்ற பொருளும் உண்டு என்பது தெளிவாகிறது. இதே பொருளில் தான் வள்ளுவர் குடம்பை என்ற சொல்லை இக் குறளில் கையாண்டுள்ளார். இது எவ்வாறு என்று பார்ப்போம்.
ஒரு மனிதன் ஒரு பறவையைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கிறான். அக் கூண்டுக்குள்ளேயே அப் பறவையை அடைத்து வைத்து அதற்குத் தேவையான உணவையும் நீரையும் அளித்து வருகிறான். வேளா வேளைக்கு உண்ண உணவு கிடைத்தாலும் பருக நீர் கிடைத்தாலும் அந்தப் பறவையின் ஒரே ஒரு ஏக்கம், நோக்கம் எதுவாக இருக்கும் என்றால் அது சுதந்திரமாக அக் கூட்டை விட்டு வெளியே வந்து வானில் பறந்து திரிய வேண்டும் என்பது தானே. இந்த சுதந்திரத்திற்காகத் தான் அப் பறவை ஒவ்வொரு நொடியும் பல வகைகளில் முயன்று கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது சடீரென்று கூண்டை விட்டு வெளியேறி சிறகடித்து வானில் பறந்து சென்று விடுகிறது. அப் பறவை இனி திரும்ப வருமா அதே கூட்டுக்கு? ஒருபோதும் வராது. மறுபடியும் ஒரு மனிதன் அப் பறவையைப் பிடித்து வேறொரு கூட்டில் அடைத்து வைக்காதவரை அப் பறவை உல்லாசமாய் வானில் பறந்து கொண்டே இருக்கும்.
இக் கூண்டுப் பறவையின் வாழ்க்கையைப் போலத்தான் மனித உயிரின் வாழ்க்கையும் இருக்கிறது. விதிவசத்தால் உயிரானது ஒரு உடலுக்குள் அடைபடுகிறது. அதுவே பிறப்பு எனப்படுகிறது. உடலுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் உயிரானது ஒவ்வொரு நொடியும் தனது சுதந்திரமான இயல்பை எண்ணிக் கொண்டே இருக்கிறது. அண்டவெளியில் கலப்பதையே நாடுகிறது. சரியான வாய்ப்பு கிடைக்கும் பொழுது உடலை விட்டு உயிர் வெளியேறி அண்டவெளியில் கலந்து விடுகின்றது. மறுபடியும் விதிவசத்தால் வேறொரு உடலுக்குள் அடைபடாதவரை அந்த உயிர் அண்டவெளியில் தான் இருக்கும். இந்த விதியின் அளப்பரும் வலிமையை அறிந்த வள்ளுவர் இக் குறள் மூலம் அவ் விதியின் வசத்தால் உடலுக்குள் அகப்பட்ட உயிரின் கதியை ஒரு கூண்டுப் பறவையின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.
அதேசமயம், கூண்டின் வலிமையைப் பொறுத்தும் பறவையின் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு அமைவதைப் போல உடலின் வலிமையைப் பொறுத்தும் உயிர் பிரியும் வாய்ப்பு அமைகிறது. அதனால் தான் திருமூலர் இவ்வாறு கூறுகிறார்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
- திருமந்திரம்.
கூண்டு என்னதான் வலிமையானதாக இருந்தாலும் ஒருநாள் சமயம் பார்த்து பறவை வெளியேறி விடுவதைப் போல உடலைவிட்டு உயிரும் வெளியேறி விடும் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கிறார் வள்ளுவர். இப்படியாக, கூண்டுப் பறவையினை உயிருடனும், கூண்டினை உடலுடனும் ஒப்பிட்டு, மனித வாழ்க்கை நிலையற்றது என்னும் உண்மையினை நயம்படக் கூறிய வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க தன்றோ!
................................................. வாழ்க தமிழ்!................................
தங்கள் தமிழ் அறிவு கண்டு தலை தாழ்த்தி வணங்குகிறேன். ஆய்வுப் பணி தொடரட்டும்
பதிலளிநீக்குவணக்கம் சுப்பு
மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅன்புடன்,
தி.பொ.ச
உங்கள் கருத்து ஏற்புடையது .ஆய்வுப் பணி தொடரட்டும்
பதிலளிநீக்கு