முன்னுரை:
கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக்கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பல்வேறு பெயர்ச் சொற்கள் குறிக்கின்ற பெண்களின் உடல் உறுப்புக்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இவற்றில் குறிப்பாக முலை என்ற பெயரும் கொங்கை என்ற பெயரும் பெரும்பாலான இடங்களில் பெண்களின் கண்களையே குறிக்கும் என்று ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டோம். இந்த புதிய ஆய்வு முடிவுகளுக்கு ஆதரவாகக் கூறப்படுவது யாதெனில், சங்ககாலப் பெண்கள் தமது முலைகளிலும் கொங்கைகளிலும் சந்தனம், குங்குமத்தால் மெழுகுவதும் மைகொண்டு தொய்யில் எழுதுவதும் பூந்தாதுக்களைக் கொண்டு அப்பி அழகுசெய்வதும் ஆகிய செயல்களைச் செய்ததாக இலக்கியப் பாடல்கள் பலவும் கூறுகின்ற செய்திகளாகும்.
ஆனால் சிலர் இதை ஏற்க மறுத்து, முலையும் கொங்கையும் பெண்களின் மார்பகங்களையே குறிக்கும் என்று கூறுகின்றனர். இவர்கள் கூற்றுப்படி, முலையும் கொங்கையும் மார்பகத்தினைக் குறிப்பதாக இருந்தால், பெண்கள் இத்தகைய அழகூட்டும் செயல்பாடுகளை மூடி மறைக்கப்படுவதான தங்கள் மார்பகத்தில் ஏன் செய்யவேண்டும்?. இவ்வளவு அழகு செய்துவிட்டு அதனை ஆடைகொண்டு மூடிமறைத்து விட்டால் அதனை யாரும் கண்டு மகிழமுடியாது; பாராட்டவும் முடியாது. எனவே முலையும் கொங்கையும் மூடி மறைக்கப்படுவதான மார்பகங்களை அன்றி எப்போதும் எளிதாகக் காணப்படத்தக்க கண்களையே பெரும்பாலும் குறிக்கும் என்ற கருத்து வலுவாக முன்வைக்கப்பட்டது. ஆனால் இதையும் அவர்கள் ஏற்க மறுத்து, சங்க காலப் பெண்கள் யாரும் மேலாடை இன்றியே வாழ்ந்தனர் என்றும் தமது அழகூட்டும் செயல்கள் அனைத்தையும் மூடி மறைக்கப்படாத தமது மார்பகங்களிலேயே செய்துவந்தனர் என்றும் எவ்வித ஆதாரங்களும் இன்றி கூறிவருகின்றனர். இவர்களது தவறான எண்ணங்களுக்கும் பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தனர் என்ற கருத்தினை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழந்தமிழர் ஆடைப் பெயர்கள்:
பழந்தமிழர்கள் அணிந்த பல்வேறு ஆடைகளின் பெயர்களாக தமிழ் விக்கிப்பீடியா கீழ்க்காண்பவற்றைக் காட்டுகிறது.
உடை, தழையுடை, துகில், கலிங்கம், அறுவை, சிதார், ஆடை, உடுக்கை, கச்சு, ஈரணி, தானை, காழகம், போர்வை, கச்சை, வம்பு, மடி, பட்டு, சீரை, படம், படாம், பூங்கரைநீலம், உத்தரியம், கம்பலம், கம்பல், கவசம், சிதர்வை, தோக்கை, வார், மெய்ப்பை, மெய்யாப்பு, புட்டகம், தூசு, ஒலியல், அரணம், சிதவல், நூல், வாலிது, வெளிது, கச்சம், கூறை, அரத்தம், ஈர்ங்கட்டு, புடைவை, பட்டம், உடுப்பு, கோடி, கஞ்சுகம், சிதர், சிதவற்றுணி, வட்டுடை, வடகம், மீக்கோள், வங்கச்சாதர், வட்டம், நீலம், குப்பாயம், கோசிகம், பஞ்சி, தோகை, கருவி, சாலிகை, பூண், ஆசு, வட்டு, காம்பு, நேத்திரம், வற்கலை, கலை, கோதை, நீலி, புட்டில், சேலை, சீரம், கொய்சகம், காழம், பாவாடை, கோவணம்.
இவை அனைத்தையும் பற்றி இக்கட்டுரையில் குறிப்பிட இயலாது என்பதால் இவற்றுள் சில ஆடைப்பெயர்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவை தொடர்பான ஆதாரங்கள் மட்டுமே இங்கு முன்வைக்கப் படுகிறது.
சங்கத் தமிழரின் ஆடைக் கொள்கை:
சங்க காலத் தமிழர்கள் ஆடைகளின்மேல் சிறப்பான கவனம் செலுத்தினர் என்பதை மேலே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ஆடைப்பெயர்களில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆடை என்று வரும்போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும். ஒரு ஆண் குறைந்தபட்சமாக தனது இடுப்பில் ஒரு ஆடையினை சுற்றிக் கொண்டுவிட்டால் போதுமானது. அதுவே அவனது மானத்தைக் காக்கப் போதுமானது என்று நாம் கருதுகிறோம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அது மட்டும் போதாது. குறைந்தது கீழாடை, மேலாடை என்ற இரண்டு ஆடைகளாவது வேண்டும். ஒரு சாதாரணப் பெண்ணாகட்டும் அல்லது அரசனின் மனைவியாகட்டும் இந்த இரண்டு உடைகள் அவசியமே. ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ இரண்டு ஆடைகளுக்கு மேல் தேவையில்லை என்றும் எஞ்சியிருக்கும் ஆடைகளை இல்லாதோருக்குக் கொடுத்து உதவலாம் என்றும் கீழ்க்காணும் பாடலில் அறிவுறுத்துகிறார் புலவர் நக்கீரனார்.
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமா பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே
செல்வத்து பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே - புறம். 189
வேட்டையாடி உண்ணும் ஒருவனுக்கும் நாட்டை ஆளும் அரசனுக்கும் தேவையான உணவு மற்றும் உடை பற்றி இப் பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். ஒருநாள் உண்பதற்கு நாழி உணவும் உடுத்துவதற்கு மேலாடை, கீழாடை என்ற இரண்டு ஆடைகளும் இவ் இருவருக்குமே போதுமானது என்கிறார். கீழாடை மட்டும் போதும் மேலாடை தேவையில்லை என்று அவர் சொல்லவில்லை. ஒரு ஆணுக்கே குறைந்தது இரண்டு ஆடைகள் என்று கூறும்போது பெண்ணுக்கு எத்தனை என்று சொல்லத்தேவையில்லை. அவர்களுக்கும் குறைந்தபட்சமாக இரண்டு ஆடைகள் என்பது உறுதி. இதிலிருந்து, சங்க காலத்தில் ஆண்கள் குறைந்தது இரண்டு ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் பெண்கள் இரண்டு முதல் மூன்றுவரையிலான ( மேலாடை, கீழாடை, உள்ளாடை உட்பட ) ஆடைகளை அணிந்திருந்தனர் என்றும் முடிவுக்கு வரலாம்.
ஈரணி என்னும் நீச்சலாடை:
சங்கத் தமிழ்ப் பெண்கள் கீழாடையும் மேலாடையும் அணிந்திருந்தனர் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்கள் அணியும் நீச்சல் உடுப்புக்கு ஈரணி என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஈரணி என்பது இரண்டு அணி அதாவது இரண்டு உடுப்பு என்ற பொருள் தரும். இளைஞர்களும் இளைஞிகளும் புனல் விளையாட்டில் ஈடுபடும்போது இந்த ஈரணி ஆகிய நீச்சலாடையினை அணிந்துகொண்டே விளையாடுவர். இது கீழாடை, மேலாடை என்று இரு பிரிவாக இருக்கும். தற்காலத்தில் நீச்சலின் போது அணியப்படும் டூபீஸ் ஆடை போன்றதாக இதைக் கருதலாம். இதுபற்றிக் கூறும் இலக்கியப் பாடல் கீழே:
.... இளையரும் இனியரும் ஈரணி அணியின்
இகல் மிக நவின்று தணி புனல் ஆடும் ... - பரி. 6
புனல் விளையாட்டு முடிந்தபின்னர், தான் அணிந்திருந்த ஈரணியின் ஈரம் காயும்வரை தனது கண்களையும் இமைகளை அழகுசெய்யத் துவங்குகிறாள் ஒரு பெண். இதைப்பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்.
.... விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் ... பரி. 7
வைகை ஆற்றில் புனல் விளையாட்டுக்குச் செல்லும்போது பெண்கள் இந்த ஈரணியினை வரிசையாக ஏந்திச்செல்லும் காட்சியினை விவரிக்கிறது கீழ்க்காணும் பரிபாடல்.
....ஈரணிக்கு ஏற்ற நறவு அணி பூந்துகில் நன் பல ஏந்தி
பிற தொழின பின்பின் தொடர
செறி வினை பொலிந்த செம் பூங்கண்ணியர்.. - பரி. 22
சங்க காலத்தில் வைகை ஆற்றில் புனல் விளையாட்டு என்பது ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப் பட்டிருக்கிறது என்ற செய்தியை மேற்காணும் பரிபாடல் விளக்கமாகக் கூறுகிறது. இதை உறுதிப்படுத்துவதைப் போல பெருங்கதையிலும் சில செய்திகள் காணக் கிடைக்கின்றன. புனல் விளையாட்டுக்குரிய ஈரணி என்னும் ஆடையினை விற்பனை செய்தனர் என்றும் அதனை முதல்நாளே பலரும் வாங்கினர் என்றும் கீழ்க்காணும் பெருங்கதைப் பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன.
... நாள் நீராட்டணி நாளை என்று அறைதலும்
விளையாட்டு ஈரணி விற்றும் கொள்ளும்
தொலைவுஇல் மூதூர் தொன்றின மறந்து உராய்.... - உஞ்சை. 37
புனல் விளையாட்டுக்கென்றே சிறப்பாக தனி ஆடையினை அணிந்த பண்பாட்டினை உடையவர்கள் சங்கத் தமிழர்கள். இவ்வளவு உயர்ந்த பண்பாட்டினை உடைய இவர்கள் மேலாடை இன்றி வாழ்ந்தனர் என்ற செய்தி எவ்வளவு தவறானது என்பது தெள்ளிதின் விளங்கும்.
மங்கையும் மஞ்ஞையும்:
சங்கப் பாடல்கள் பலவற்றில் பெண்களை மயிலுடன் உவமைப் படுத்திப் புலவர்கள் கூறுகின்றனர். இதற்குக் காரணமாகத் தற்போது கூறப்படுகின்ற கருத்து யாதெனின், பெண்களின் தலைமயிர் பின்னால் தொங்குவதைப் போல மயிலுக்குத் தோகையானது பின்னால் தொங்குகிறது என்பதாகும். இது மிகத் தவறான கருத்தாகும். காரணம், கருமைநிறத்தில் அழகின்றி இருக்கும் தலைமயிரானது பலவண்ணங்களில் பல வடிவங்களில் அழகாகக் காணப்படும் மயில் தோகைக்கு ஒருபோதும் ஒப்புமையாக முடியாது.
சங்க கால இளம்பெண்கள் பலரும் பூவேலைப்பாடுகளை கரைகளில் அதாவது ஓரங்களில் உடைய நீலநிற ஆடையினை அணிந்திருந்தனர். இந்த ஆடையினைப் பூங்கரை நீலம் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. பூங்கரை நீலம் = பூ + கரை + நீலம் = பூவேலைப்பாடுகளை ஓரங்களில் உடைய நீல ஆடை. ஆடையின் மேல்பகுதியில் நீல நிறமும் கீழ்ப்பகுதியில் பூவேலைப்பாடுகளும் இருக்கும். இந்த ஆடையைப் பற்றிக் கூறுகின்ற சில இலக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
... தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த
பூங்கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ .... - கலி. 111
பசுக்களில் இருந்து பாலைக் கறந்தபின்னர் கன்றுகளை எல்லாம் தாம்புக் கயிற்றுடன் பிணித்து வீட்டில் இருத்திவிட்டு தனது அன்னை தந்த பூங்கரை நீல ஆடையினை பக்கங்களில் தாழ்ந்து தொங்குமாறு உடல்முழுவதும் உடுத்தியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் ' புடை தாழ மெய் அசைஇ ' என்ற சொற்றொடரே போதும் அக்காலத்தில் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடைகொண்டு மறைத்தே இருந்தார்கள் என்பதை உறுதி செய்வதற்கு.
... யானும் என் சாந்து உளர் கூழை முடியா
நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் .... - கலி. 115
நிலம் தாழ தான் அணிந்திருந்த பூங்கரை நீலமாகிய ஆடையினை மெய்யுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு தளர்வாக நடந்து சென்றாள் என்ற செய்தியினை மேற்காணும் பாடல் குறிப்பிடுகிறது. மயில் கழுத்து போலும் நீல வண்ணமும் பூவேலைப்பாடுகளும் கொண்ட ஆடையினை அணிந்த இளம்பெண்கள் வேங்கை மரத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்கும்போது அதைப் பார்க்கும் புலவருக்கு வண்ண மயில் ஒன்று வேங்கை மரத்தின் மேல் இருப்பதாகத் தோன்றுகிறது. காரணம், அப் பெண்கள் அணிந்திருக்கும் நீலநிற மேலாடையும் அதன் கீழ்ப்பகுதியில் இருக்கும் பூவேலைப்பாடுகளும். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாடன் .. - குறு.26
விரிந்த வேங்கை பெரும் சினை தோகை
பூ கொய் மகளிரின் தோன்றும் நாட.... - ஐங்கு.297
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட .. - ஐங்கு. 294
நாட்பட்ட பழச்சாற்றினை நீர் என்று கருதி பருகிய வண்ண மயிலொன்று போதையேறியதால் ஆடுமகள் கயிற்றின் மேல் இருபுறங்களிலும் மாறிமாறிச் சாய்ந்தவாறு நடப்பதைப் போல தள்ளாடித் தள்ளாடி நடப்பதைக் காட்டும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
.....பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் .... - குறி.190
இப்பாடலில் ஆடுமகளை மயிலுடன் ஒப்புமைப் படுத்தியன் காரணம், அவள் அணிந்திருந்த ஆடைகளின் வண்ணமே. மயில்கழுத்து போன்ற நீலநிற மேலாடையும் மயில்தோகை போன்று பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்கும் பெண்ணைப் பார்த்தால் யாருக்குத்தான் மயிலின் நினைவு தோன்றாது?. எனவே புலவர் அப்பெண்ணை மயிலுடன் உவமைப்படுத்தியதில் வியப்பில்லை. அடுத்து இன்னொரு சான்று.
தலைவனைச் சந்திப்பதற்கு தலைவியானவள் நள்ளிரவில் மழைபெய்யும் நேரத்தில் வருகிறாள். அப்போது அவள் நுண்ணிய நூலினால் செய்யப்பட்ட ஆடையினை தனது உடல் முழுவதும் போர்த்தியவாறு காலில் அணிந்திருக்கும் சிலம்புகள் கூட ஒலிக்காதவண்ணம் மெதுவாக மழையில் நனையாமல் மறைந்து மறைந்து வருகிறாள். அவள் அணிந்திருக்கும் ஆடையினைப் பார்க்கின்ற புலவருக்குக் கார்மேகங்களைக் கண்டு தோகை விரித்தாடுகின்ற மயிலின் நினைவு வந்துவிட்டது. இதை அழகாக விவரிக்கும் பாடல்வரிகள் கீழே:
கூறுவம் கொல்லோ கூறலம்கொல் என
கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது
நயந்து நாம் விட்ட நன் மொழி நம்பி
அரைநாள் யாமத்து விழு மழை கரந்து
கார் விரை கமழும் கூந்தல் தூ வினை
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின்
இள மழை சூழ்ந்த மட மயில் போல ..... - அகம். 198
இப்பாடலில் வரும் ' நுண் நூல் ஆகம் பொருந்தினள் ' என்ற வரியானது ' நுட்பமான ஆடையினை உடலின்மேல் அணிந்திருந்தாள் ' என்ற செய்தியினைத் தாங்கி நிற்கிறது. மயிலுடன் இப் பெண்ணை உவமைப்படுத்தியதில் இருந்து இந்தப் பெண்ணும் முன்னர் கண்டதுபோல நீலநிற மேலாடையும் பூவேலைப்பாடுடைய கீழாடையும் அணிந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. மயிலுக்கு மஞ்ஞை என்று பெயர் வைத்ததுகூட மங்கையுடன் அதற்குள்ள இத் தொடர்பு கருதி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
சமையலும் சங்ககாலப் பெண்களும்:
சங்க காலப் பெண்கள் சமையல் செய்யும் அழகினைப் பற்றி ஒருசில பாடல்கள் விரிவாகவே கூறியுள்ளன. அவற்றுள் நற்றிணை காட்டும் நளபாகத்தினை முதலில் காணலாம்.
தட மருப்பு எருமை மட நடை குழவி
தூண்தொறும் யாத்த காண்தகு நல் இல்
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப
வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇ
புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெற
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர்
அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து
அட்டிலோளே அம் மா அரிவை
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று
சிறு முள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே - நற். 120
எருமை மாட்டினை அதன் கன்றுடன் சேர்த்து தூணில் கட்டிவிட்டு வாளைமீனை சமைக்கிறாள் தலைவி. அப்போது அவள் கண்களில் புகை சூழ்ந்து கண்சிவந்து முகமெல்லாம் வியர்க்கிறது. அந்த வியர்வையினை தனது மேலாடையின் நுனி அதாவது முந்தானை கொண்டு துடைக்கிறாள். இப்பாடலில் வரும் ' சிறுநுண் பல்வியர் அம் துகில் தலையில் துடையினள் ' என்ற சொற்றொடர் அவள் மேலாடை அணிந்திருந்தாள் என்று மிகத் தெளிவாகக் காட்டுகிறது. காரணம், கீழாடை கொண்டு தலையில் உள்ள வியர்வையினைத் துடைப்பது கடினம் என்பதால் அப்படி யாரும் செய்வதில்லை.
இதேபோன்ற ஒரு காட்சி குறுந்தொகையிலும் உண்டு. அப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.
முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடைஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்நுதல் முகனே. - குறு. 167
கெட்டியாகிப்போன தயிரினைக் கைவிரல்களால் பிசைந்தவள் விரல்களைக் கழுவாமல் அப்படியே தனது ஆடையில் துடைத்துக் கொள்கிறாள். அத்துடன் தாளிக்கும்போது எழுந்த புகையினால் கலங்கிய தனது கண்களையும் வியர்த்த தனது முகத்தினையும் நீரில் கழுவாமல் அதே துணியினால் துடைத்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' கழுவுறு கலிங்கம் கழாது துடைஇ ' என்ற சொற்றொடரை இவ் இரண்டுக்குமே பொருத்திக் கொள்ளலாம். முன்கண்ட பாடலில் உள்ளதைப் போலவே இப்பாடலில் வரும் தலைவியும் தனது முகத்தினையும் கையினையும் தனது மேலாடையின் முந்தானையால் தான் துடைத்திருக்க வேண்டும். ஆக, சங்க காலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இவ் இரண்டு பாடல்களையும் சான்றாகக் கொள்ளலாம்.
கண்ணீரும் முந்தானையும்:
பெண்கள் அழும்போது கண்களில் பெருகும் கண்ணீரைத் தமது ஆடையின் முந்தானை கொண்டு துடைப்பது வழக்கம். இதேபோன்ற ஒரு காட்சியினை படம்பிடித்துக் காட்டுகிறது கீழ்க்காணும் பரிபாடல்.
.....கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானைக் கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி .... - பரி. 16
பொருள்: கருங்கை உடைய ஆயத்தாராகிய கள்வர்களை அழித்து வென்று பெருமைகொண்ட படைத்தலைவனைப் போல வருபவனைக் கண்டு நுங்கினை ஒத்த தனது கண்களில் பொங்கிய ஆனந்தக்கண்ணீரைத் துடைக்காமல் அப்படியே இருந்த அவள் பின்னர் தனது மேலாடையின் முந்தானையால் ஒற்றி எடுத்து......
இப்பாடலில் வரும் ' இரும் துகில் தானை ' என்பது அப்பெண் அணிந்திருந்த ' ஆடையின் முந்தானை ' என்பது மிகத் தெளிவாகவே தெரிகிறது. ஆடையின் முன் பகுதி என்று பொருள்தருவதான முன்தானை என்பதே முந்தானை என்று மருவி வழங்கப்படுகிறது. முந்தானை என்று கூறப்படுவதில் இருந்தே அது மேலாடை தான் என்பது உறுதியாகிறது. சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம்.
சங்ககாலப் பெண்களும் மேலாடையும்:
சங்ககாலப் பெண்கள் மேலாடை அணிந்தனர் என்பதற்கு மேலே பல சான்றுகளைக் கண்டோம். இருப்பினும் இன்னும் சில சான்றுகளைக் கீழே விரிவாகக் காணலாம்.
அகநானூற்றின் கீழ்க்காணும் பாடலானது சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் திருமணமும் முதலிரவும் எப்படி நடைபெற்றது என்பதை மிக விரிவாக விளக்குகிறது.
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
...........................................................................
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப
அஞ்சினள் உயிர்த்தகாலை ..... - அகம்.86
முதலிரவின்போது மனைவியானவள் தனது உடல்முழுவதும் ஆடையினால் சுற்றி அணிந்து முகத்தையும் மறைத்து ஒடுங்கி இருக்கிறாள். அவளது முகத்தைக் காணும் ஆவல் கொண்ட கணவன் மெல்ல அவளது முகத்திரையினை விலக்கவும் அவள் அஞ்சி நடுங்குகிறாள். இப்பாடலில் வரும் ' கொடும்புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் ' என்ற சொற்றொடரானது மிகத் தெளிவாக அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மறைத்திருப்பதைக் காட்டுகிறது. சங்ககாலப் பெண்கள் எப்போதுமே மேலாடை அணியாமல் இருந்திருந்தால், முதலிரவின்போது மட்டும் மேலாடை அணிவார்களா?. அவ்வாறு யாரும் செய்யமாட்டார்கள் என்பதால், சங்ககாலத்துத் தமிழ்ப் பெண்களுக்கு மேலாடை அணியும் வழக்கம் உண்டு என்பது உறுதியாகிறது.
இதேபோன்ற ஒரு காட்சி கீழ்க்காணும் பாடலிலும் வருகிறது.
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
...............................................................
தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின்
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி
முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ
பெரும் புழுக்கு உற்ற நின் பிறை நுதல் பொறி வியர்
உறு வளி ஆற்ற சிறு வரை திற என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே .......... - அகம். 136
இப்பாடலிலும் முதலிரவின்போது தனது உடலையும் முகத்தையும் ஆடையினால் மறைத்திருந்த மனைவியைப் பார்த்து ' உனது முகமெல்லாம் வியர்த்திருக்கும்; கொஞ்சமாகத் திறந்தால் காற்று வரும் ' என்று கூறி அவளது முகத்திரையினை மெல்லத் திறக்கிறான் அவளது கணவன். உறையில் இருந்து எடுக்கப்பட்ட வாளினைப் போல ஒளிவீசும் அவளது கண்களைக் காண்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழி அறியாதவளாய், நாணம் மேலிடத் தலையைக் கவிழ்த்துக் கொள்கிறாள். இப்பாடலில் வரும் ' முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ ' என்ற சொற்றொடரானது அவள் தனது உடல் முழுவதையும் ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை மிகத் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமின்றி, அவள் தனது முகத்தையும் மூடி மறைத்திருந்தாள் என்பதனை ' பெரும்புழுக்கு உற்ற நின் பிறைநுதல் பொறிவியர் உறுவளி ஆற்ற சிறுவரை திற ' என்ற சொற்றொடர் உறுதிப்படுத்துகிறது.
பழந்தமிழ்ப் பெண்டிர் திருமணத்தின்போது புத்தாடை அணிவது வழக்கமே. அதிலும் குறிப்பாக தாமரை மலரின் வண்ணத்தில் அணிவது மரபு போலும். இதைப்பற்றிய சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
போது அவிழ் பனி பொய்கை புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரை தனி மலர் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக .... - கலி. 69
திருமண நாளன்று மணமகளானவள் செந்தாமரை மலரின் நிறத்தில் ஆடை அணிந்திருந்ததை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. அவள் தனது உடல் முழுவதையுமே ஆடையினால் மறைத்திருந்தாள் என்பதனை ' கலிங்கத்துள் ஒடுங்கிய ' என்ற சொற்றொடர் விளக்கி நிற்கிறது. செந்தாமரை நிறத்துப் புத்தாடையினை மகளிர் விரும்பி அணிகின்ற செய்தியினைக் கூறும் இன்னொரு பாடல் கீழே:
...கதிர் நிழற்கு அவாஅம் பதும நிறம் கடுக்கும்
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ ... - பெருங். உஞ்சை. 42
முடிவுரை:
இதுகாறும் கண்டவற்றில் இருந்து, சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் மேலாடை அணிந்தே வாழ்ந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்டது. இவர்கள் மேலாடை கொண்டு தமது மார்பகங்களை மூடி மறைத்திருந்தனர் என்ற செய்தியும் இதிலிருந்து பெறப்படுகிறது. வள்ளுவரும் கூட கீழ்க்காணும் குறளில் இவ்வாறு கூறுகிறார்.
கடாஅ களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் - குறள் - 1087.
இக்குறளில் வரும் முலை என்பதற்குக் கண் என்ற பொருளோ மார்பகம் என்ற பொருளோ எதைக் கொண்டாலும் அதன்மேல் ஆடை அணிந்து மறைத்திருந்தனர் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது கவனிக்கப்படத் தக்கதாகும்.
சங்ககாலப் பெண்கள் தமது மார்பகங்களை மேலாடை கொண்டு மூடி மறைத்திருந்தனர் என்ற கருத்து உறுதிசெய்யப் பட்டுவிட்ட நிலையில், அவர்கள் தமது மார்பகங்களில் தொய்யில் எழுதவோ சந்தன குங்குமத்தால் பூசவோ, பூந்தாதுக்களை அப்பவோ செய்திருக்க மாட்டார்கள் என்பதும் உறுதியாகிறது. முடிவாக, சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள முலை என்ற சொல்லானது பெரும்பாலும் கண் / கண்ணிமையினைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் மிகச் சில இடங்களில் மட்டுமே மார்பகம் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் ஆணித்தரமாக உறுதிசெய்யப் படுகிறது.
......... தொடரும்......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.