திங்கள், 16 ஜனவரி, 2012

திருக்குறளில் தெய்வம் - பகுதி 3 ( பசு வழிபாடு)


முன்னுரை:

திருக்குறளில் தெய்வம் என்று வள்ளுவர் குறிப்பிட்டது பசுவினைத் தான் என்பதை ' திருக்குறளில் தெய்வம் - பகுதி 2 'என்ற கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டோம். இனி இக் கட்டுரையில், வள்ளுவர் பசுவினைப் போற்றி இருப்பதால் வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடு இருந்ததா?. பசு வழிபாடு பற்றிக் கூறுவதால் வள்ளுவர் சமயம் சார்ந்தவரா?. என்பதைக் காணலாம்.



பசு வழிபாடு என்பது என்ன?

பெண்கள் பசுவினைத் தொழுவதைப் பற்றிக் கீழ்க்காணும் குறளில் வள்ளுவர் கூறி இருக்கிறார்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. - 55.

இங்கே 'தெய்வமாகிய பசுவினைத் தொழுதல்' என்பது எதைக் குறிக்கிறது என்றால் அது 'பசுக்களைப் பேணிப் பாதுகாத்தலையே' குறிக்கிறது.  அதாவது, ஒரு தாய் தனது பிள்ளைகளை எவ்வாறு சீராட்டி பாராட்டி பக்குவமாக பாசத்துடன் வளர்ப்பாளோ அதைப்போலவே பசுக்களையும் அவற்றின் கன்றுகளையும் கவனித்து வளர்க்க வேண்டும். சரி, ஏன் பசுக்களை பாசத்துடன் கவனித்து வளர்க்க வேண்டும்?. ஏனென்றால் பசுவானது குறிப்பறியும் தன்மை கொண்டது. தன் மீதும் தனது கன்றுகள் மீதும் குடும்பத்தினர்கள் பாசமில்லாமல் நடந்து கொள்ளும்போது அதையறிந்த பசுக்கள் வேதனைப்படும். அதனால் அது அளிக்கும் பாலின் தன்மை மாறுபடுவதுடன் பால் சுரக்கும் அளவும் குறையும். ஆகவே பசு வளர்ப்பில் பாசம் மிக இன்றியமையாதது.

அத்துடன் ஒரு குடும்பத்தில் அதிகாலையிலேயே எழுந்து வேலைகளைச் செய்யத் துவங்குவது பெண்களே ஆவர். ஆனால் இப்பெண்களுக்கும் முன்னதாகவே எழுந்து அவர்களைக் காண்பதற்காக ஒரு குழந்தையைப் போல் வாஞ்சையுடன் காத்துக்கிடப்பது பசுக்களே ஆகும். அதனால் தான், காலையில் எழுந்ததுமே முதல் வேலையாக பசுக்களைச் சென்று கண்டு அவற்றைக் கவனிப்பது பெண்களின் அன்றாட கடமைகளில் ஒன்றாக இருந்திருக்கிறது. வள்ளுவர் மேற்காணும் குறளில் குறிப்பிடும் 'பசுவினைத் தொழுதல்' என்பது இதுதான். இதிலிருந்து வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடு இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

மேலும் இக் குறளில் பசு வழிபாடானது இல்லறத்துப் பெண்களுக்கானது என்று பொதுவாகக் கூறியிருப்பதால் வள்ளுவர் காலத்தில் பசு வழிபாடானது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவாக இருந்திருக்கிறது என்னும் கருத்து பெறப்படுகிறது.


சிறப்பும் பூசனையும்:

வள்ளுவர் காலத்தில் பசுக்கள் மிகவும் மதிக்கப்பட்டன  என்பதற்கு இன்னொரு ஆதாரத்தை வான் சிறப்பு என்ற் அதிகாரத்தில் காணலாம்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.- 18

இங்கே வானோர் என்பது பசுக்களையே குறிக்கும். இது எவ்வாறு என்று காணலாம்.

வான் என்பதற்கு அமிர்தம் என்ற பொருளை சென்னை இணையப் பேரகராதி கூறுகிறது. இந்த அமிர்தமாகிய பாலை வழங்குவதால் பசுக்களை வானோர் என்று கூறுகிறார் வள்ளுவர்.

இந்தப் பசுக்களை மகிழ்விக்க வேண்டி அவற்றுக்கு சிறப்பு செய்யும் விதமாக பல பூசனைகளை பசு வளர்ப்போர் நிகழ்த்திய செய்தியைத் தான் மேற்காணும் குறள் கூறுகிறது.
 

பசு பதி பாசம்:

சைவ சித்தாந்தத்தில் பசு-பதி-பாசம் என்ற முக்கோண உறவுத் தத்துவம் கூறப்படுகிறது. இங்கே பசு என்பது ஆன்மாவினைக் குறிக்கும்; பதி என்பது தலைவனாகிய இறைவனைக் குறிக்கும்; பாசம் என்பது மாயையினைக் குறிக்கும். பசுவாகிய ஆன்மாவானது பதியாகிய இறைவனைக் காணவிடாமல் பாசமாகிய மாயை மறைத்துக் கொண்டிருக்கின்றது என்பதே இத் தத்துவத்தின் விளக்கமாகும்.

திருவள்ளுவரும் இந்த பசு-பதி-பாசம் போன்றதொரு பாசத்தினைப் பற்றி மேற்காணும் குறளில் கூறியிருப்பதைக் கண்டோம். இக் கோணத்தில் இருந்து பார்த்தால் வள்ளுவரும் பசுவும் ஒரு குறிப்பிட்ட மதச் சார்புடையவர்களோ என்று எண்ணத் தோன்றும். ஆராய்ந்து பார்க்கின், அது இல்லை என்பது தெரியவரும்.

சைவசித்தாந்தத்தில் வருகின்ற பசு பதி பாசத்திற்கும் வள்ளுவர் கூறும் பசு பதி பாசத்திற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. சைவசித்தாந்த நெறிப்படி, பசு தான் பதியினை அடைய முயல்கிறது. ஆனால் வள்ளுவர் கூறும் இல்லற நெறிப்படி, பதி தான் பசுவினை அடைகிறார். மேலும் சைவ சித்தாந்தத்தில் பசுவுக்கும் பதிக்கும் இடையில் இருப்பதான பாசம் என்னும் மாயையானது இருவரையும் பிரித்து வைக்கின்றது. ஆனால், இல்லற நெறியிலோ பசுவுக்கும் பதிக்கும் இடையிலான பாசம் என்பது இருவரையும் இணைத்து வைக்கின்றது.

இப்படி இரண்டுமே பெரிய அளவில் முரண்படுவதால் வள்ளுவரும் சரி பசுவும் சரி சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பது உறுதியாகிறது.

பசு பாதுகாப்பு:

இல்லறத்தில் வாழ்வோர் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய ஐவகையினரில் பசுவும் ஒன்றெனக் கீழ்க்காணும் குறள் கூறுகிறது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.  - 43

பசுக்களின் மேல் அக்காலத்து மக்கள் கொண்டிருந்த பேரன்பினையும் பெருமதிப்பினையும் இக் குறள் காட்டுகின்றது. பசு பாதுகாப்பு என்பது நாள்தோறும் தவறாமல் செய்யப்பட வேண்டிய பணிகளில் ஒன்றாக அக் காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பசு பாதுகாப்பினை முன்னிறுத்தியே கீழ்க்காணும் முதுமொழி தோன்றியிருக்கக் கூடும்.

' ஆலயம் தொழுவது சாலவும் நன்று.'

இதில் வரும் ஆலயம் என்பது ஆக்கள் லயிக்கும் இடத்தைக் குறிக்கும். லயித்தல் என்றால் ஒடுங்குதல் என்று பொருள்படும். பசுக்கள் ஒடுங்கும் இடத்தையே ஆலயம் என்று குறிப்பிட்டனர் முன்னோர்.  இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் சென்று பசுக்களைத் தொழவேண்டும் அதாவது பேண வேண்டும் என்னும் கருத்தினை வலியுறுத்தியே இந்த முதுமொழி உருவானது.

தொழுதல் என்ற வினையின் அடிப்படையிலேயே தொழுவம் என்ற சொல் உருவானது. பசுக்கள் பேணப்படும் இடத்தையே பசுத்தொழுவம் என்று கூறினர்.

தொழுதல் ------> தொழுவம்

நன்மை தருவதான அறச் செயல்கள் பலவற்றுள்ளும் நாள்தோறும் பசுத் தொழுவம் சென்று பசுக்களைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் நல்ல செயலாகும் என்பதே இம் முதுமொழி உணர்த்தும் பொருளாகும். இதிலிருந்து அக் காலத்தில் ஊர்க்குப் பொதுவாக ஒரு பெரிய பசுத் தொழுவம் அமைக்கப்பட்டு அங்கிருக்கும் பசுக்களை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் பேணலாம் என்ற நடைமுறை இருந்துள்ளது என்னும் செய்தி பெறப்படுகிறது.

முடிவுரை:

மேற்கண்ட சான்றுகளில் இருந்து பசு வழிபாடு என்பது வள்ளுவர் காலத்தில் பொதுவான ஒரு சமுதாய வழக்காகவே இருந்து வந்துள்ளது என்பது உறுதியாகிறது.  அதுமட்டுமின்றி அவரது காலத்தில் சிலை வழிபாடுகளோ மதம் சார்ந்த பிற வழக்குகளோ இருக்கவில்லை என்பதை முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். இப்படி ஒரு சாதி மத பேதமற்ற சமுதாய நிலையினைக் கொண்டிருந்த வள்ளுவரது காலத்தினை "பழந்தமிழகத்தின் பொற்காலம்" என்று கொண்டாடினால் தவறில்லை.

மேலும் வள்ளுவர் காலத்தில் சமயத்துக்கு அப்பாற்பட்டதாக விளங்கிய பசுவிற்கு பின்னாளில் தான் சமய மூலம் பூசப்பட்டிருக்க வேண்டும். இதனுடைய தொடர்ச்சியாகத் தான் பசுவானது காமதேனுவாகவும் எருதானது சிவனுக்கு வாகனமாகவும் ஆகியது. மேலும் சிவபெருமான் நந்தியைத் தனது காவலாகக் கொண்டிருப்பதிலும் ஒரு காரணம் உண்டு. ஏனென்றால் பசுவைப் போலவே எருதிற்கும் குறிப்பறியும் திறன் உண்டு. தனது தலைவராகிய சிவபெருமானுடைய விருப்பத்தினை அவர் கூறாமலேயே அவரது முகக் குறிப்பால் அறிந்து செயல்படுத்துவார் நந்தி. சிவன் கோயில்களில் நந்தியானது சிவனை நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும் காரணமும் இதுவே ஆகும். இதனால் தான் நந்திக்கும் சிவனுக்கும் இடையில் புகுந்து செல்லக் கூடாது என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ பசுவானது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்பதனை இனியேனும் அறிந்து அனைத்து மதத்தினரும் பசுக்களைப் பாதுகாக்க முற்பட்டால் அதுவே இக் கட்டுரையின் பயனாகும்.
......................................... வாழ்க தமிழ்!..........................

3 கருத்துகள்:

  1. ஓர் இறை கொள்கை சரியா ? அல்லது பல தெய்வ கொள்கை சரியா ?

    kural தனக்கு உவைமை இல்லாதான் தாள் அடி சேர்ந்தார்ர்
    quran வசனம் 112 :1 அவன்னுக்கு நிகராக யாரும் இல்லை

    Chandogya Upanishad, Prapathaka 6, Khanda 2, “Ekam evaditiyam”, “He is one only without a second”

    Svetasvatara Upanishad, Adhyaya 4, Shloka 19, “Na tasya pratima asti” “There is no likeness of him”

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.