புதன், 8 பிப்ரவரி, 2012

அறவாழி அந்தணன் ( யார் அந்தணர்?)

குறள்:
    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.  - குறள் எண்: 8

கலைஞர் உரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

மு.வ உரை: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

பரிமேலழகர் உரை: அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.) .

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகள் அனைத்துமே ஆழி என்ற சொல்லுக்கு கடல் என்ற பொருளைக் கொண்டுள்ளன. ஆழி என்ற சொல்லுக்கு அகராதிகளில் பல பொருட்கள் உண்டென்றாலும் இக் குறளுக்கு கடல் என்ற பொருளே பொருந்துவதாகக் கொண்டு  உரை கூறியுள்ளனர். ஆனால் இக் குறளில் வரும் ஆழி என்ற சொல்லுக்கு கடல் என்ற பொருள் பொருந்துமா என்றால் இல்லை என்றே கூறலாம். ஏனென்றால் ஆழி என்ற சொல்லுக்கு கடல் என்ற பொருளைக் கொண்டால் அறவாழி என்ற சொல்லுக்கு அறக்கடல் எனற பொருள் வருகிறது. அதாவது அறத்தினை ஒரு கடலாக உருவகம் செய்வது போலாகிறது. ஆனால் அறத்தினை ஒரு கடலாக உருவகம் செய்ய முடியாது. ஏனென்றால் இரண்டின் தன்மைகளும் வேறு வேறானவை. அவற்றை ஒப்பிட முடியாது. இதைப் பற்றிக் கீழே பார்ப்போம்.

கடல் நிலையற்ற தன்மை கொண்டது; காலப்போக்கில் தனது இயல்பினில் திரியும் தன்மை உடையது. இதனால் தான் மேகங்கள் சரியாக மழை பொழியாவிட்டால் நெடிய கடலும் தனது தன்மையில் இருந்து திரியும் என்கிறார் வள்ளுவர் ( குறள் - 17). ஆனால், அறம் நிலையான தன்மை கொண்டது. காலமாற்றத்தினால் அறம் பாதிக்கப்படுவதில்லை. அதனால் தான் அறத்தினை பொன்றுங்கால் பொன்றாத் துணையென்று கூறுகிறார் வள்ளுவர் ( குறள் - 36).

அறமானது, தன்னைப் பற்றிக் கொண்டு இயல்பவனுக்கு நல்வழியைக் காட்டுவதுடன் இலக்கினை அடையச் செய்யும். ஆனால் கடலிலோ நிர்ணயிக்கப்பட்ட பாதை என்று எதுவும் இல்லை. நடுக்கடலுக்குச் சென்று விட்டால் திசையினைக் கூட அறிய முடியாது. மொத்தத்தில் நடுக்கடலில் விழுந்தவன் திசையறியாமல் தடுமாறி இலக்கினை அடையமுடியாமல் துன்புறுவான். ஆனால் அறநெறிக்குள் விழுந்தவனுக்கோ ஒருபோதும் துன்பமில்லை.  

இப்படி அறமும் கடலும் தம்முள் மாறுபடுபவையாக இருப்பதால், அறத்தினைக் கடலாக உருவகம் செய்ய முடியாது என்பது புலனாகிறது. மேலும், அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தமக்குள் நெருங்கிய தொடர்புடையவை. ஒன்றின் உதவியுடன் மற்றதைப் பெற முடியும். அறத்தினால் செல்வமும் (பொருளும்) சிறப்பும் (புகழ்/பெருமை) எய்தலாம் (குறள் - 31).  அதேபோல குற்றமில்லாமல் பெற்ற பொருளின் மூலம் அறத்தினையும் இன்பத்தினையும் பெறலாம் ( குறள் - 754). இப்படி இம் மூன்றும் ஒன்றுக்கொன்று துணையாய் இருக்கும்பொழுது, அறக்கடலாகிய இறைவனின் தாள் சேர்ந்தவர், பொருள் மற்றும் இன்பக் க்டல்களைக் கடக்க முடியும் என்று கூறுவது இங்கே முரணான கருத்தாக அமைகிறது. ஏனென்றால் அறம் செய்தாலே அது பொருளையும் இன்பத்தையும் தானே தந்து நிற்கும். அப்படி இருக்க, அறக்கடலின் மூலம் பொருள் மற்றும் இன்பக் கடல்களைக் கடத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகிறது அல்லவா?. வள்ளுவர் இக் குறளில் கூற வரும் கருத்தும் அதுவன்று.

'பிறவாழி' என்பதற்கு, பொருள் மற்றும் இன்பக் கடல்கள் என்று பொருள் கொள்ளாமல், சாலமன் பாப்பையா கூறுவதைப் போல 'பிறவிக் கடல்' என்று பொருள் கொள்ளலாமா?. என்றால் அதுவும் இங்கே பொருந்தாது. ஏனென்றால் குறள் 10 லும் வள்ளுவர் பிறவியைப் பெருங்கடலுக்கு உருவகப்படுத்திக் கூறுகிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இப்படி அடுத்தடுத்த இரண்டு குறள்களில் ஒரே கருத்தினைக் ( பிறவியைக் கடலுடன் உருவகப்படுத்திக் கூறுவது) கூறினால் அது கூறியது கூறல் குற்றமாகி விடும். வள்ளுவர் அத் தவறை செய்திருக்க மாட்டார் என்பதைக் கருத்தில் கொண்டால் இக் குறளில் வரும் ஆழி என்ற சொல்லுக்கு கடல் என்ற பொருள் சற்றும் பொருந்தாது என்பது உறுதியாகிறது.

ஆழி என்றால் என்ன?

என்றால் ஆழி என்ற சொல்லுக்கு இக் குறளில் பொருள் என்ன?. இதைப் பற்றி இங்கே விரிவாக ஆராயலாம். ஆழி என்ற பெயர்ச் சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்களை முதலில் காணலாம்.

ஆழி¹ āḻi, n. prob. அழி²-. 1. Discus weapon; சக்கராயுதம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ். திருவாய். 7, 4, 1). 2. Royal power, as symbolised by the discus weapon; ஆஞ்ஞாசக்கரம். ஆழிவேந்தன் (கம்பரா. தைல. 70). 3. Rule, command: கட்டளை. ஆழி நிற்குதி யல்லையேற் பழிவரும் (உபதேசகா. சிவவிரத். 16) 4. Circle; வட்டம். (பிங்.) 5. Ring; மோதிரம். ஆழிவாய் விரலில் (சீவக. 833). 6. Wheel, carriage wheel; சக்கரம். (பிங்.) 7. Potter's wheel; குயவன் திகிரி. மட்கலத் தாழி யென்ன (கம்பரா. வாலிவ. 37). 8. Curved line of loops drawn on sand by a woman to divine whether her husband will return in safety, the sum of which, if even, indicating the safe return and, if odd, failure to return; கணவனைப் பிரிந்த மனைவி இழைக்குங் கூடற்சுழி. ஆழியாற் காணா மோ யாம் (ஐந். ஐம். 43). 9. Tip of elephant's trunk; யானைக்கைந் நுனி. (அக. நி.)
ஆழி² āḻi , n. < ஆழ்¹- +. 1. Sea, as the deep; கடல். (பிங்.) 2. Seashore; கடற்கரை. பெருங்கடற் காழியனையன் (புறநா. 330).

ஆழி என்ற சொல்லுக்கான மேற்காணும் பொருட்களை நோக்கினால் அவற்றில் வட்ட வடிவப் பொருட்களே அதிகம் இடம் பெற்றிருப்பதை அறியமுடியும். அதேசமயம், ஆழித்தல் என்ற சொல்லுக்கு கீழ்க்கண்டவாறு அகராதிகள் பொருள் கூறுகின்றன.

ஆழி³-த்தல் āḻi- , 11 v. tr. < id. To dig deep; ஆழமாய்த் தோண்டுதல். (W.)

இதிலிருந்து ஆழி என்னும் பெயர்ச்சொல்லானது ஆழித்தல் என்ற வினைச்சொல்லில் இருந்தும் தோன்றியிருக்கலாம் என்று கருத இடமுண்டு அல்லவா? அவ்வகையில், ஆழமாய்த் தோண்ட உதவுகின்ற அதே சமயம் வட்ட வடிவிலான ஒரு கருவியினையும் இந்த ஆழி என்ற பெயர்ச்சொல்லால் மக்கள் குறித்திருக்க வாய்ப்பு இருப்பது புலனாகிறது. அப்படி ஒரு கருவி இருந்தால் அது என்னவாக இருக்கும்?

அதுதான் 'சட்டிக் கலப்பை' என்று இக் காலத்தே சொல்லப்படும் ஒருவகை வட்டக் கலப்பையாகும்.

ஆழித்தல் -------------------------> ஆழி
(தோண்டுதல்)                     ( ஆழமாகத் தோண்ட உதவுவது)
                                            = சட்டிக் கலப்பை


வள்ளுவரால் 'ஆழி' என்று குறிப்பிடப்பட்ட இந்த வட்ட வடிவிலான சட்டிக் கலப்பையானது வேளாண்மையில் மிக இன்றியமையாதது. இந்த சட்டிக் கலப்பையானது வேளாண் நிலத்தை மிக ஆழமாக உழுவதற்குப் பயன்படுகிறது. உழுகின்ற போதே வயலில் உள்ள மண் கட்டிகளை உடைப்பதற்கும் வேர் மற்றும் கொடிகளை அறுத்தெடுக்கவும் இது பயன்படுகிறது. வறண்ட நிலத்தில் உழாமல் நீர் பாய்ச்சிய பின்னர் உழுதால் இன்னும் ஆழமாக உழ முடியும். அருகில் உள்ள படம் சட்டிக்கலப்பையைக் கொண்டு உழவு செய்யும் முறையைக் காட்டுகிறது.

என்றால் வள்ளுவர் 'அறவாழி', 'பிறவாழி' என்ற இரண்டு இடங்களிலும் கலப்பை என்ற பொருளில் தான் ஆழி என்ற சொல்லைப் ப்யன்படுத்தி உள்ளாரா என்றால் இல்லை என்று கூறலாம்.

ஆழி என்ற பெயர்ச்சொல்லானது, ஆழமாகத் தோண்ட உதவுவது என்ற பொருளில் சட்டிக் கலப்பையினைக் குறிப்பதைப் போல,  ஆழமாகத் தோண்டப்பட்டது என்ற பொருளில் ஒரு வட்டக் குழியினையினையும் குறிக்கும்.

ஆழித்தல் -------------------------> ஆழி
(தோண்டுதல்)                     ( ஆழமாகத் தோண்டப்பட்டது)
                                            = வட்டவடிவிலான ஆழக் குழி

திருந்திய பொருள்:

ஆழி என்ற சொல்லுக்கு மேலே கண்ட 'கலப்பை' மற்றும் 'குழி' என்ற பொருட்களின் அடிப்படையில் இக் குறளின் புதிய பொருள் இதுதான்:

" அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவனாகிய இறைவனின் திருவடிகளைப் பற்றினார்க் கல்லால் பிறவியாகிய ஆழக் குழியில் இருந்து விடுபட முடியாது."

திருக்குறள் காட்டும் அந்தணர் யார்?:

மேற்கண்ட புதிய பொருள் விளக்கத்தில் அந்தணர் என்ற சொல்லுக்கு உழவர் என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப் பொருள் பொருத்தமானது தானா என்று பார்ப்போம்.

வள்ளுவர் திருக்குறளில் இக்குறளையும் சேர்த்து மொத்தம் மூன்று இடங்களில் அந்தணர் என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.இம் மூன்று இடங்களிலும் அச் சொல்லுக்கு உழவர் என்றே அவர் பொருள் கொண்டிருப்பது வியப்பளிக்கிறது.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். - 30

மேற்காணும் குறளில் அந்தணர் என்றும் அறவோர் என்றும் வள்ளுவர் குறிப்பிடுவது உழவர்களையே. ஏனென்றால் உழவர்களே உயிர்கள் வாழத் தேவையான உணவினை பொதுநலநோக்குடன் உற்பத்தி செய்வதுடன் அவ் உணவினால் பல உயிர்களின் பசிப்பிணி போக்கும் அறச்செயலை செய்கின்றனர். இதைத்தான்,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவாற் றுளெல்லாம் தலை.

என்று குறள் 322 ல் கூறுகிறார் வள்ளுவர். இங்கு நூலோர் என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் நூல் (ஏர்) உடைய உழவர்களையே என்று ' நூல் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னமே கண்டோம்.

வள்ளுவர் கீழ்க்காணும் குறளிலும் அந்தணர் என்ற சொல்லை உழவர் என்ற பொருளில் தான் பயன்படுத்தி உள்ளார்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். - 543

அந்தணராகிய உழவர்களின் ஏருக்கும் அவர்தம் அறச்செயலாகிய பசிப்பிணி போக்குதலுக்கும் அடிப்படையாய் இருப்பது மன்னவனின் செங்கோன்மையே என்று இக் குறள் மூலம் தெளிவாக்குகிறார் வள்ளுவர். இக்குறளில் வரும் நூல் என்பது உழவரின் ஏரினைக் குறிக்கும் என்பதை ' நூல் என்றால் என்ன?' என்ற கட்டுரையில் முன்னமே கண்டோம். இனி, கடவுள் வாழ்த்துக் குறளிலும் இப் புதிய பொருள் எப்படிப் பொருத்தமானது என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.

கடவுளும் கந்தசாமியும்:

கடவுள் சரி, யார் இந்த கந்தசாமி?. என்று கேட்பவர்களுக்கு பதில்: உழவர். ஏற்கெனவே நான்கு கடவுள் - பகுதி 1 என்ற ஆய்வுக் கட்டுரையில் பழந்தமிழர்கள் நிலத்தையே கந்தனாக எண்ணி வழிபட்டனர் என்று கண்டோம். அந்த நிலத்தை உழுது பல உயிர்களைப் பயிர் செய்கின்ற உழவர்களை கந்தசாமி என்று குறிப்பிட்டால் அதுவும் பொருத்தமாயிருக்கும் என்றே தோன்றுகிறது.

சொல்லப்போனால் கடவுளுக்கும் கந்தசாமியாகிய உழவர்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.

கடவுள் உயிர்களைப் படைக்கிறார். கந்தசாமி பயிர்களை நடுகிறார்.
கடவுள் உயிர்களை வளர்க்கிறார். கந்தசாமி பயிர்களை வளர்க்கிறார்.
கடவுள் உயிர்களின் பந்தம் அறுக்கிறார். கந்தசாமி பயிர்களை அறுவடை செய்கிறார்.

இததகைய ஒப்புமைகளால் தான் வள்ளுவரும் கடவுளை ஒரு உழவனாக உருவகிக்கிறார். ஆனால் அவனிடம் இருப்பதோ அறம் எனும் கலப்பை. இக் கலப்பையைக் கொண்டு பிறவி எனும் ஆழக் குழிக்குள் உழுது உயிர்களை வித்திடுகிறான். இவ் வித்துக்களில் எவை இறைவனின் அருள் எனும் நீரைப் பெற்று நன்கு வளர்ந்து குழியை விட்டு வெளியே தலைகாட்டுகின்றனவோ அவற்றை அப்படியே கொத்தோடு பறித்துத் தனதாக்கிக் கொள்கிறான். இப்படி இறைவனை அடைந்தவை மீண்டும் பிறப்பதில்லை. இறைவனின் அருள் நீரைப் பெறாமல் வளர்ந்து வளராத நிலையில் இருக்கும் ஏனை வித்துக்கள் பிறவிப் பெருங்குழியைக் கடக்க முடியாமல் அதற்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும்.

இத்தகைய ஒரு அரிய கருத்தினைத் தான் 'அறவாழி அந்தணன்' என்ற கடவுள் வாழ்த்துக் குறளில் உருவகங்களின் மூலம் விளக்கி இருக்கிறார் வள்ளுவர். இதிலிருந்து இக்குறளிலும் 'அந்தணன்' என்ற சொல் உழவரையே குறிக்கிறது என்பது உறுதியாகிறது.

முடிவுரை:

நாகரிக மனிதனின் முதல் செய்தொழில் வேளாண்மையே என்பதால் வேளாண்மையில் மிக இன்றியமையாத பொருள்களில் ஒன்றான வட்டக் கலப்பையினைக் குறிக்கவே முதன்முதலில் 'ஆழி' என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். நாளடைவில் இக் கலப்பையினைப் போன்றிருக்கும் வட்ட வடிவப் பொருட்களான சக்கரம், மோதிரம், தும்பிக்கையின் வட்டவடிவ நுனி போன்றவற்றையும் குறிக்க இச் சொல் பயன்பட்டிருக்கலாம்.

அதுமட்டுமின்றி, உழவரின் பெருமையை நன்கு அறிந்த வள்ளுவர் அதை விளக்குவதற்கு உழவு என்று ஒரு தனி அதிகாரமே அமைத்துப் பாடி இருக்கிறார். அது போதாதென்று கடவுளின் பெருமையைப் பாடுகின்ற கடவுள் வாழ்த்தில் கூட கடவுளை ஒரு உழவனாக உருவகப்படுத்திக் கூறி இருப்பதில் இருந்து உழவரின் சிறப்பினை மிகவும் உயர்த்திவிட்டார் வள்ளுவர். இவர்களையே அந்தணர் என்றும் போற்றுகின்றார். இந்த புதிய செய்தியினை தற்கால உழவர் பெருமக்கள் அறியும்போது அவர்கள் பெருமகிழ்ச்சி அடையக்கூடும். அவர்களின் மகிழ்ச்சியே நமக்கும் மகிழ்ச்சியைத் தரும். ஏனென்றால் அவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கைவைக்க முடியும். உணமை தானே!
----------------------------- வாழ்க தமிழ்!---------------------------------

7 கருத்துகள்:

 1. மிக்க நன்றி பொன். சரவணன். நான் படித்த உரைகள் அனைத்திலும் இருந்து மாறுபட்ட மறுக்க முடியாத விளக்கங்கள். அருமை!

  குறிப்பாக இந்த குறளின் விளக்கம் எனக்கு வியப்பை தருகிறது - உங்கள் கருத்துப் படி இரண்டாவது 'ஆழி', ஆழமாகத் தோண்டப்பட்டது என்று பொருள் பட வைத்துக்கொண்டாலும், வள்ளுவர் ஏன் 'நீந்தல் அரிது' என்று கூறி உள்ளார்? அப்படியென்றால், இங்கு 'ஆழி' எனும் பதம் 'கடலை' அல்லவா குறிக்கும்? (நீர்நிலையில் தானே 'நீந்த' முடியும்?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. கார்த்திக,

   நீந்துதல் என்பதற்கு கடத்தல் என்ற பொருளுமுண்டு. கருத்துக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 2. எனக்கு உடன்பாடு இல்லை... உங்களுக்கே தெரியும் காடுகளை அழித்துத்தான் இந்த உலகம் முழுவதும் விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆக லட்சோப லட்ச உயிரினங்களின் வாழ்விடத்தை அழித்து தனக்கு(மனிதன்) உணவு உற்ப்பத்தி செய்து கொண்டவன் எப்படி பல்உயிர் பேனுதலுக்குள் வருவான்? ஒரு காட்டை அழித்து விவசாய நிலம் உருவாக்கி அதில் தானும் தனகு;கு உதவும் ஆடு மாடுகளுக்கு நன்னை செய்துட்டா அவன் அந்தணனா???

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா,

   அறம், பொருள், இன்பம் இம்மூன்றும் மானுடர்களுக்கே பொருந்துவதாகும் அல்லவா. இதைத்தானே அரசர்களும் தம்குடி வாழவே பிறநாட்டின்மீதும் படையெடுப்பு நடத்தி போரிட்டும் வெற்றி கண்டனர். அதை மட்டும் அறம் என்றலாகுமா???

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
  பிறவாழி நீந்தல் அரிது. 8
  அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

  வஸீலா

  5: 35. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்

  17:57 இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவை (இறைவனை நெருங்குவதற்கான வழியைத்) தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர்.

  வஸீலா என்பதின் அர்த்தம் சாதனம் - கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக - சாதனமாக உள்ளது என்பர்

  நாம் கடலில் நீச்சல் அடித்து கரை சேர்வது கடினம் , மூழ்கி விடுவோம் , இறந்து விடுவோம் , வெற்றி பெற முடியாது , ஆனால் கப்பல் என்ற சாதனத்தின் மூலம் இலகுவாக கரை சேர முடியும்

  கப்பல் என்றால் நாகூர் கந்தூரி கப்பலில் ஊர்வலம் செய்தால் அதை கொண்டு நமக்கு நன்மை ஏற்படும் , இதன் மூலம் நாம் வெற்றி பெறலாம் என்று அர்த்தம் இல்லை

  மறுமையில் கரை சேர / மோச்சம் அடைய / மறுமையில் வெற்றி பெற கப்பல் என்னும் நல்அமல் / நல்லறம் தேவை

  நல்லறம் செய்து / தொழுது / பாவமன்னிப்பு கேட்டு இறைவனை நோக்கி முயற்சி செய்

  11: 3. "உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்!

  11: 23. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித் திரும்பியோரே சொர்க்கவாசிகள்.

  76: 29. இது அறிவுரை. விரும்பியவர் தமது இறைவனை நோக்கி ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்கிறார்

  51:50. எனவே அல்லாஹ்வை நோக்கி விரையுங்கள்!
  25: 71. திருந்தி, நல்லறம் செய்பவர் அல்லாஹ்வை நோக்கி முற்றிலும் திரும்புகிறார்
  78:39 விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்

  17:19 மறுமையை விரும்பி, அதற்காக முயற்சிப் போரின் முயற்சிக்கு நன்றி செலுத்தப்படும்
  84:6 6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.