புதன், 13 ஜூன், 2012

பெற்ற மனம் பித்து

பழமொழி:

பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.

தற்போதைய கருத்து:

மேற்காணும் பழமொழிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரே கருத்து இதுதான்:

பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் பெற்றோரின் மனமோ பிள்ளைகளின் மேல் பாசப்பித்தாய் இருக்கிறது. ஆனால் பிள்ளைகளின் மனமோ பெற்றோரின் மேல் எள்ளளவும் பாசமின்றி கல்போல உள்ளது.

இன்னொரு கோணம்:

இப் பழமொழிக்குக் கூறப்பட்டு வரும் மேற்கண்ட கருத்தினை முழுதாக ஏற்க இயலவில்லை. அதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணம் இருக்குமா என்பதைப் பற்றிய ஆய்வும் இக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திருமண உறவில் ஈடுபடும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் வியப்பில்லை. ஏனென்றால் இது இயற்கையின் உந்துதல். பிள்ளைப் பேற்றின் சிறப்பினைப் பற்றித் திருக்குறளில் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணுமாறு கூறுகிறார் வள்ளுவர்.

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. ( குறள் - 61)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். ( குறள் - 64)

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். ( குறள் - 65)

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். ( குறள் - 66)

இப்படியெல்லாம் பெருமையாகப் பேசப்படும் பிள்ளைச் செல்வங்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆனதும் பெற்ற தாய் தந்தையரின் மேல் சிறிதும் அக்கறையின்றி கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்வதாக இப் பழமொழிக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் மேல் இடப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மை தானா என்று பார்ப்பதைவிட இப்படி குற்றம் சாட்டுவது முறைதானா என்று முதலில் பார்க்க வேண்டும்.  ஆம், பிள்ளைகள் ஏன் பெற்றோரிடம் பாசமில்லாமல் நடந்து கொள்கின்றனர்?. அவர்கள் எந்த சூழ்நிலையில் அப்படி நடந்து கொள்கின்றனர்? என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும். தவறு யார் மீது இருக்கிறது என்று ஆராயாமலே பொத்தாம்பொதுவாக இப்படிப் பிள்ளைகளின் மேல் மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல.

பல குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு அன்பை ஊட்டி வளர்ப்பதில்லை. பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டால் மட்டும் அது அன்பாகி விடாது. அன்பு என்பது என்ன என்று சரியான முறையில் புரியுமாறு குழந்தைகள் வளர்க்கப் பட்டிருந்தால் எந்தப் பிள்ளையும் பாசமின்றி இருக்காது.

மேலும் திருமணத்திற்குப் பின்னர் சில பிள்ளைகள் குறிப்பாக ஆண் பிள்ளைகள், தமது மனைவியின் கட்டளைப்படியோ, இல்லற சுமையினைத் தாங்க முடியாமலோ பிற காரணங்களாலோ பெற்றோரைக் கவனிக்காமல் /கவனிக்க முடியாமல் இருந்து விடுகின்றனர். காரணம் எதுவாயினும் பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமல் இருப்பது தவறுதான். ஆசையுடன் பெற்றுப் பாசத்துடன் வளர்த்து ஆளாக்கிய  பெற்றோரின் கடைசிக் காலத்தில் பிள்ளைகள் ஓர் ஆதரவாய் இல்லாவிட்டால் அந்தக் கொடுமையினை பெற்றோரால் தாங்க முடியாது. தன்னால் முடிந்த அளவுக்கேனும் பெற்றோருக்கு ஓர் உதவியாய் இருக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

பிள்ளையின் கடமைகள்:

புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் பிள்ளைகளின் குறிப்பாக ஆண் பிள்ளையின் கடமை பற்றிக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். - 70

அதாவது, மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க உதவி, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

இக் குறளில் வள்ளுவர் கடமை என்று கூறாமல் உதவி என்ற சொல்லைக் கையாண்டுள்ளதைக் கவனிக்கவும். உதவி என்பது கடமையைப்போல கட்டாயமானதல்ல. விருப்பப்பட்டால் செய்யலாம். இருந்தாலும் ஒரு மகன் தன் தந்தைக்குப் புகழ் தேடித் தருகிறானோ இல்லையோ அவரது நற்பெயருக்கு எவ்விதத்திலும் களங்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்னும் கருத்தினையே இக் குறள் இங்கே வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.  அதேபோல ஒரு மகன் தனது தாய்க்குச் செய்கின்ற ஒரு கடமையாகக் கீழ்க் காணும் குறளைக் கூறுகிறார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். - 69

அதாவது, தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

இதிலிருந்து தனது தாய்க்கு இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியை அளிக்க வேண்டியதும் ஒரு மகனின் கடமை என்ற கருத்தினை மறைமுகமாக உணர வைக்கிறார் வள்ளுவர்.

பெற்றோரின் கடமை:

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் குறிப்பாகத் தந்தைக்கும் கடமை ஒன்று இருப்பதாகக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். - குறள் - 67.

அதாவது, தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க கடமை, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

இங்கே நன்றி என்ற சொல்லை கடமை என்ற பொருளில் கூறுகிறார் வள்ளுவர். பிள்ளைகளைப் பெற்று விட்டால் மட்டும் போதாது; அவர்களுக்கு நல்ல ஆசானாய் இருந்து கல்வியைத் தந்து நல்வழியைக் காட்டிநின்று அவர்களைக் கற்றவர்களின் அவையில் முதல்வனாக விளங்கச் செய்ய வேண்டியது தந்தையின் கடமை என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் இன்று எத்தனை தந்தையர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.?. குழந்தையின் பிறப்புக்குக் காரணமாய் இருப்பதோடு சரி, அதன்பின் அக் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் திரிகின்ற தந்தையர் பலர் இச் சமுதாயத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப் பல குழந்தைகள் தந்தையின் கவனிப்பின்றியும் சரியான பாதை காட்டப்படாமலும் வளர்க்கப்படுவதால் தறுதலைகளாகச் சமுதாயத்தில் உருவெடுத்து வருவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட தந்தையின் நிலையையும் அவரது மனைவியின் நிலையையும் காணும் போது பசுவும் காளையும் தான் நினைவுக்கு வருகிறது. 

பசுவும் காளையும்:

பசுவின் குணம் பற்றியும் காளையின் குணம் பற்றியும் ஏற்கெனவே நமது திருக்குறளில் தெய்வம் மற்றும் திருக்குறள் காட்டும் தேவர் யார்? என்ற ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம்.

பொதுவாக, பசு, காளை மற்றும் கன்று அடங்கிய ஒரு பசுவின் குடும்பத்தில் பசு தாயாக இருந்து தனது கன்றின் மேல் பாசம் காட்டி பாலூட்டி வளர்க்கிறது. தனது கன்றுக்கொரு துன்பம் வந்தால் அத் துயரத்தினைத் தாங்க மாட்டாமல் கண்ணீர் வடித்து அழுகிறது; உதவிக்கு அழைத்துக் கதறுகிறது. ஆனால் அந்தக் கன்றின் மேல் எந்தவித அக்கறையுமின்றி காளைமாடு திரிகிறது. அந்தக் கன்றின் பிறப்புக்குத் தானே தந்தையாய் இருந்தும் அந்தக் கன்றின் மீது ஒரு பற்றுதலும் இல்லாமல் கல்நெஞ்சம் கொண்டவரைப் போல வாழ்கிறது காளைமாடு. இந்தப் பசுவின் மனநிலையையும் காளையின் மனநிலையையும் பற்றிக் கூறுவதாக அமைவதே நமது தலைப்புப் பழமொழியாகும். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

பழமொழியின் வடிவமும் பொருளும்:

பழமொழிகள் வாய்மொழி வழியாக பல்லாண்டு காலம் வழங்கப்பட்டு பின்னர் எழுத்தில் இடம்பெற்றன. அப்படி எழுதப்பட்ட பொழுது பல எழுத்துப் பிழைகளால் பொருள் தவறுகள் நேர்ந்துள்ளதை நாம் இதற்கு முன்னர் பல பழமொழி ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். அப்படி ஒரு எழுத்துப் பிழையே இப் பழமொழியிலும் பொருள் மாறுபாடு உண்டாகக் காரணமாகி விட்டது.

நமது தலைப்புப் பழமொழியின் உண்மையான வடிவம் கீழ்க்காணுமாறு இருப்பதாகும்.

பெற்ற மனம் பித்து; புல்ல மனம் கல்லு.

இதில் வரும் பெற்றம் என்பது பசுவையும் புல்லம் என்பது காளையையும் குறிக்கும் என்று அகராதிகள் கூறுகின்றன. அவ்வகையில்,

பெற்ற மனம் = பெற்றத்தின் மனம் அதாவது பசுவின் மனம் ஆகும்.

புல்ல மனம் = புல்லத்தின் மனம் அதாவது காளையின் மனம் ஆகும்.

புல்ல என்பது லகர ளகர குழப்பத்தால் புள்ள என்று  உருமாறி பின் தூய தமிழாக உருவெடுக்கும்போது பிள்ளை என்று மாறிவிட்டது. இதன் வரலாறு கீழே காட்டப்பட்டுள்ளது.

புல்ல ---> புள்ள -----> பிள்ளை

இனி, பழமொழியின் உண்மைப் பொருள் இதுதான்:  
பசுவின் மனம் (கன்றின் மேல்) பாசத்தால் பித்தாக இருக்கிறது; காளையின் மனமோ ( கன்றின் மேல்) பாசமின்றிக் கல்லாக இருக்கிறது.

பசுவுக்கும் காளைக்கும் இயற்கையாக அமைந்த இந்த இருவிதமான மனநிலைகளையே இப் பழமொழி வாயிலாக நம் முன்னோர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. காளையின் இயற்கைக் குணத்தினை மாற்ற இயலாது. ஆனால் மனிதன் நினைத்தால் மாறலாம்; தன் கீழான குணத்தினை மாற்றிக் கொண்டு அன்பு காட்டலாம். அப்படி அன்பு காட்டாத கல்நெஞ்சம் கொண்ட தந்தையரை காளைக்கும் பாசத்தினால் பித்துகொண்டு அன்புகாட்டி உருகும் அன்னையரை பசுவிற்கும் உவமையாக கூறி, இந்தக் காளைகளைப் போல தந்தையர் இருக்கக் கூடாது என்ற நற்கருத்தினை வலியுறுத்துவதாக அமைகிறது இப்பழமொழி. இதுவே இப்பழமொழியின் இன்னொரு கோணம் ஆகும்.
====================== வாழ்க தமிழ்!==============

1 கருத்து:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.