பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். - 1121
தற்போதைய விளக்கங்கள்:
கலைஞர் உரை: இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.
மு.வ உரை: மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை: என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.
பரிமேலழகர் உரை: [அஃதாவது , தலைமகன் தன் காதல் மிகுதி கூறலும் , தலைமகள் தன் காதல் மிகுதி கூறலும் ஆம் . இது , புணர்ச்சியும் நலனும் பற்றி நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தல் , நலம் புனைந்து உரைத்தல்களின் பின் வைக்கப்பட்டது.] (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.).
மணக்குடவர் உரை: பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர். இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.
உரைத் தவறுகள்:
மேற்காணும் உரைகள் யாவற்றிலுமே ஒரே கருத்து தான் கூறப்பட்டுள்ளது. அதாவது, காதலியின் பற்களின் இடையே ஊறிய எச்சிலை உண்ட காதலன் அதை பாலும் தேனும் கலந்த கலவையைப் போல இனிப்பாக இருந்ததாகக் கூறுகின்றானாம். இக் கருத்து அறிவியலுக்கு முற்றிலும் முரணானது மட்டுமின்றி வள்ளுவரின் மாண்புக்கு இழுக்கு சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது. பரிமேலழகர், மணக்குடவ்ர் போன்ற பேரறிஞர்களும் உரை எழுதுகையில் இப்படி ஓர் தவறான விளக்கத்தை எவ்வாறு கொடுத்தனர் என்பது வியப்பினை மட்டுமின்றி வருத்தத்தையும் ஒருசேரத் தருகின்றது. முதலில் இவ் விளக்கங்களில் உள்ள தவறுகளைக் காணலாம்.
அறிவியல் கூற்றுப்படி, பாலூட்டிகளுக்கு உமிழ்நீரானது, மூன்று வகையான சுரப்பிகளில் இருந்து சுரக்கிறது. இதில் குறிப்பாக மனிதருக்கு, சாதாரண மனநிலையில், முக்கால்வாசி (70-75%) உமிழ்நீர் சப்-மாண்டிபுலார் சுரப்பி (2) யில் இருந்தும் கால்வாசி (20-25%) பரோடிட் சுரப்பி (1) யில் இருந்தும் சிறிய அளவில் (5-10%) சப்-லிங்குவல் சுரப்பி (3) யில் இருந்தும் சுரக்கிறது. அதுவே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பரோடிட் சுரப்பியே அதிகமான உமிழ்நீரைச் சுரக்கிறது. இதுபற்றிய மேலதிக தகவல்களை விக்கிபீடியாவில் காணலாம். அருகிலுள்ள படத்தில் இந்த மூன்று சுரப்பிகளும் மனிதரின் வாய்க்குள் அமைந்துள்ள இடங்கள் காட்டப்பட்டுள்ளது.
இப் படத்தில் இருந்து எவ்விதமான குறிப்பிடத்தக்க அளவுள்ள உமிழ்நீரைச் சுரக்கும் சுரப்பிகளும் பற்களுக்கிடையிலோ பற்களின் மேலேயோ கீழேயோ இல்லை என்பது தெளிவாகிறது. உமிழ்நீர் சுரப்பிகளே இல்லாத நிலையில் காதலியின் பற்களுக்கிடையில் சுரந்து வரும் உமிழ்நீரை காதலன் உண்டதாக வள்ளுவர் எவ்வாறு கூறியிருக்க முடியும்?. ஒருவேளை வள்ளுவர் அறிவியலை அறியாமல் தவறாக எழுதி விட்டாரா?. இப்படியும் சிலர் கூறுவர். ஆனால் வள்ளுவர் குறளைத் தான் எழுதி இருக்கிறாரே ஒழிய விளக்கத்தினை எழுதவில்லை. இது அப்பட்டமாக உரையாசிரியர்கள் உரை எழுதும்போது அறிவியல் உண்மையினை ஆராயாமல் செய்த தவறாகும். இதற்கு வள்ளுவர் பொறுப்பல்ல.
அதுமட்டுமல்ல, இவ் விளக்கங்களில் இன்னொரு தவறும் இருக்கிறது. இவ் விளக்கங்கள் மிகப் பச்சையாக ஒரு முத்த நிகழ்ச்சியினை விரிப்பதாக உள்ளது. பெரும்பாலான ஆங்கிலப் படங்களில் காட்டப்படுவதைப்போல ( இப்போது தமிழ்ப் படங்களிலும் இது பரவலாகத் தலைதூக்கி இருப்பது வேறு செய்தி) காதலன் காதலியின் உதடுகளுடன் தனது உதடுகளை வைத்து அவற்றைச் சுவைத்து அப்படியே அவளது வாயில் இருந்த உமிழ்நீரை உறிஞ்சிக் குடித்து ஆகா, என்ன சுவை! என்ன சுவை! தேனும் பாலும் கலந்து குடித்ததைப் போலல்லவா இருக்கிறது.! என்று இறுமாப்புடன் கூறுவதாக அல்லவா இவ் உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.?. எப்படி இவர்களால் இப்படி ஒரு கண்ணியமற்ற விளக்கத்தைக் கொடுக்க முடிந்தது? இதற்கு இயற்கைப் புணர்ச்சி என்று சப்பைக்கட்டு வேறு. இப்படி ஒரு முத்த நிகழ்ச்சியினை வள்ளுவர் இங்கே கூற வேண்டிய அவசியமேயில்லை. அதுவும் காதலின் சிறப்பினைக் கூறுகின்ற இந்த அதிகாரத்தின் முதல் பாடலிலேயே இப்படித்தான் காமரசம் சொட்டச்சொட்ட வள்ளுவர் கூறுவாரா?. ஒருபோதும் மாட்டார். என்ன இருந்தாலும் இப்படி ஒரு பண்பில்லாத கருத்தினைக் கூறி வள்ளுவரின் மாண்புக்கு இவ் உரையாசிரியர்கள் வேட்டு வைத்திருக்கக் கூடாது. :(((
இத்தகைய தவறான உரை விளக்கங்கள் உருவாகக் காரணம் நமது உரையாசிரியர்களிடையே ஒரு முறையான உரைக்கொள்கை இல்லாமல் போனது தான். முறையான உரைக்கொள்கை என்பது எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றிக் கீழே காணலாம்.
திருக்குறள் உரைக்கொள்கை:
எந்த ஒரு இலக்கியத்திற்கும் உரைசெய்யப் புகும்முன்னர் அந்த நூலுக்கு ஒரு உரைக்கொள்கை வகுத்தாக வேண்டும். இந்த உரைக்கொள்கையானது அந்த இலக்கியத்தை இயற்றிய நூலாசிரியரைப் பொருத்து அமைவதாகும். நூலாசிரியரின் கல்வி அறிவு, பரந்த அனுபவ அறிவு, .பொது நோக்கு, கண்ணியம், பொதுநலன் போன்ற பல பண்புகளின் அடிப்படையில் இந்த உரைக்கொள்கையானது வகுக்கப்படும். அவ்வகையில், திருக்குறளுக்கு உரைசெய்யும் முன்னர், வகுக்கப்பட வேண்டிய உரைக்கொள்கையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் உலகப்பொதுமறை என்று சான்றோர்களால் போற்றப்பட்டுள்ளது. எனவே இந் நூலாசிரியரான திருவள்ளுவர் பொதுநோக்கு உடையவர்; ஒரு சான்றோரும் ஆவார்.
இவரது திருக்குறளில் சமய, இன, மத, சாதி வேறுபாடுகள் கொண்ட கருத்துக்கள் இருக்காது.
இவரது குறள்கள் பொதுநலம் விரும்புவதாக இருக்கும்.
இவரது பாடல்களில் கண்ணியக் குறைவு இருக்காது.
இவரது பாடல்களில் இவரது பரந்துபட்ட அனுபவ அறிவு மிளிருமே அல்லால் கற்பனைகளைக் காண முடியாது.
இவரது கல்விப் புலமைக்கு இவரது பாடல்களே நற்சான்றுகளாக அமையும்.
எந்த சூழ்நிலையிலும் இவரது சான்றாண்மைக்கு இழுக்கு ஏற்படும் வண்ணம் கருத்துக்கள் கூறப்பட்டிருக்காது.
இப்படி ஒரு உரைக்கொள்கையினை வகுத்த பின்னர் திருக்குறளுக்கு உரைசெய்ய முனைவதே சரியான விளக்கங்களைத் தருவதாக அமையும். சரி, குறளுக்கு உரை செய்யும்பொழுது, ஏதேனும் ஓர் இடத்தில், உரைக்கொள்கையுடன் ஒவ்வாத கருத்துக்கள் இருப்பதாகத் தெரிந்தால் என்ன செய்வது?.
மீண்டும் உரைக்கொள்கையின் கடைசி வரியை நோக்கவும். இதுவே உரைசெய்வோருக்கு வழிகாட்டியாகும். உரைக்கொள்கையுடன் ஒவ்வாத வகையில் கருத்துக்கள் தோன்றுமானால், குறளில் பிழைகள் இருக்கலாம் என்பது பெற்றியாம். அது எழுத்துப் பிழையாகவோ, சொற்பிழையாகவோ, பொருள் பிழையாகவோ இருக்கலாம். முறையான ஆய்வின் மூலம் அப்பிழையினைக் கண்டறிந்து அப் பிழைக்கேற்ற சரியான திருத்தத்தினைச் செய்யப் பரிந்துரைப்பதும் உரையாசிரியரின் கடமையாகும். திருத்தம் செய்த பின்னர் கிடைக்கின்ற புதிய உரையானது, உரைக்கொள்கைக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பது இன்றியமையாத விதியாகும்.
இனி, மேலே கூறப்பட்டுள்ள உரைக்கொள்கையின் படி, இக்குறளுக்கான புதிய விளக்கம் அதாவது திருந்திய பொருள் என்னெவென்று காணலாம்.
திருந்திய பொருள்:
இக் குறளில் வரும் எயிறு என்னும் சொல்லுக்கு கடைக்கண் என்பது பொருளாகும். இதன் அடிப்படையில், இக் குறளுக்கான புதிய விளக்கம் இதுதான்:
குறைவாகவே பேசும் எனது காதலியின் வெண்ணிற கடைக்கண்ணில் ஊறிய கண்ணீர்த் துளியானது, பாலுடன் கலந்த தேன் போல எனக்குள் இனிமை பயவாநின்றது.
நிறுவுதல்:
எயிறு என்ற சொல்லானது கண் மற்றும் கடைக்கண்ணையும் குறிக்கும் என்று எயிறு என்றால் என்ன? என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இக்குறளிலும் கடைக்கண் என்ற பொருளில் தான் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். இனி, இக் குறளுக்கான புதிய விளக்கத்தினைப் பற்றி விரிவாகக் காணலாம்.
காதற் சிறப்புரைத்தல் என்னும் இந்த அதிகாரத்தில் வரும் பத்து குறள்களில் முதல் ஐந்து குறள்கள் காதலனால் கூறப்படுவதாகவும் பின் ஐந்து குறள்கள் காதலியால் கூறப்படுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. காதலனும் காதலியும் ஏதோ காரணத்தால் சில நாட்கள் பிரிந்துள்ளனர். மீண்டும் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அவர்களுக்கிடையிலான காதல் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை விளக்கும் விதமாக இந்த முதல் குறள் அமைந்துள்ளது.
பிரிந்திருந்த காதலனைக் கண்முன்னர் கண்டதும் காதலியின் மனம் மகிழ்ச்சி பொங்குகிறது. உள்ளத்தில் உண்டாகிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் மறைக்க முயல்கிறாள். ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?. அவளால் தனது உணர்ச்சிகளை மறைக்க முடியவில்லை. ஆர்வலர் புன்கணீர் பூசல் தருவதன்றோ?. இறுதியில் அவளது கண்ணீர் அவளது காதலை வெளிப்படுத்தி விட்டது. எப்போதுமே நாணத்தால் மிகக் குறைவாகப் பேசுகின்ற தனது காதலியின் கடைக்கண்ணில் நீர் துளிர்ப்பதை காதலன் கண்ணுறுகிறான். அவள் தன்மேல் கொண்டுள்ள அளவில்லாத காதலை அறிந்து மகிழ்கிறான். அவளது காதலின் சிறப்பினைப் போற்றும் விதமாகவும் அவளைப் பிரிந்து சென்று துன்பத்துக்கு உள்ளாக்கியதற்காக அவளைச் சமாதானப் படுத்தும் விதமாகவும் அவளது கண் அழகினைப் புகழ்ந்து பாடுகிறான்.
மகிழ்ச்சியின் காரணமாய் காதலியின் கடைக்கண்ணில் ஊறிய கண்ணீர்த் துளியானது, பாலுடன் கலந்த தேன் துளியைப் போல காதலனுக்கு இனிமை தருகிறதாம். இதைப்பற்றி விரிவாக எயிறு என்றால் என்ன என்ற கட்டுரையில் சொல்லப்பட்டு இருந்தாலும் இங்கேயும் அதைப்பற்றிச் சுருக்கமாகக் காணலாம். பொதுவாக, மாந்தரின் கண்ணீர் லேசான உப்புச் சுவை உடையது என்பது உலகறிந்த உண்மை. ஆனால் காதலியின் கடைக்கண்ணீர் மட்டும் இனிய அமிர்தம் போன்ற சுவை உடையதாக இத் திருக்குறள் உட்பட பல இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. இது எங்ஙனம் என்றால், துயர மிகுதியால் நாம் அழும்போது கண்ணீரானது கண்ணின் முன்பகுதியில் தோன்றுவதையும் அது உப்புக்கரிப்பதையும் மகிழ்ச்சியின் போதும் சிரிக்கும்போதும் கண்ணீரானது கடைக்கண்ணில் தோன்றுவதையும் அது உப்பின்றி இனிப்பதையும் அறிவோம். பிரிந்துசென்ற காதலரை மறுபடியும் கண்டு மகிழ்ச்சியடைந்த காதலியின் கடைக்கண்ணில் ஊறிய கண்ணீரானது பாலும் தேனும் கலந்த கலவையினைப் போலக் காதலனுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் தருவதாக வள்ளுவர் கூறுவதற்கு இதுவே அடிப்படையாகும்.
இக் குறளில் வரும் எயிறு என்பது காதலியின் கண்ணையே அன்றி அவளது பல்லைக் குறித்து வரவில்லை என்பதற்கு அந்த அதிகாரத்தில் வரும் ஏனைக் குறள்களே போதுமான சான்றாகும். காதல் சிறப்புரைத்தல் என்ற இந்த அதிகாரத்தில் மொத்தமுள்ள 10 குறள்களில் 1121, 1123, 1125, 1126, 1127, 1129 ஆகிய 6 குறள்களிலும் காதலியின் கண்ணைப் பற்றியே கூறியிருக்கிறார். மீதமுள்ள இரண்டு பாடல்களில் உயிர் பற்றியும் இரண்டில் உள்ளம் பற்றியும் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, காதலின் சிறப்பினைக் கூறுவதான இந்த அதிகாரத்தில் காதலியின் பல்லில் ஊறும் எச்சில் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவை என்ன?. எயிறு என்ற சொல்லுக்குப் பல் என்ற பொருள் மட்டுமின்றி கண் என்ற பொருளுமுண்டு என்று தெரிந்திருந்தால், அகராதிகளோ நிகண்டுகளோ கூறியிருந்தால், எந்த உரையாசிரியரும் இதுபோல தவறான உரை விளக்கம் எழுதியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி.
சங்க இலக்கியத்தில் வாலெயிறு ஊறிய நீர்:
திருக்குறளில் 'வாலெயிறு ஊறிய நீர்' என்று வள்ளுவர் கூறுவதைப் போலவே சங்க இலக்கியத்திலும் 'வாலெயிறு ஊறிய நீர்' என்ற சொல்லாடல் வருகிறது. வாலெயிறு ஊறிய நீர் என்பது பற்களில் ஊறிய எச்சில் நீரைக் குறிக்காது என்பதற்குக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலை ஒரு அருமையான சான்றாகக் கொள்ளலாம்.
புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ
நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப,
அரவுஎயிற்று அன்ன அரும்புமுதிர் குரவின்
தேன்இமிர் நறுஞ்சினைத் தென்றல் போழக்,
குயில்குரல் கற்ற வேனிலும் துயில்துறந்து
இன்னா கழியும் கங்குல்' என்றுநின்
நல்மா மேனி அணிநலம் புலம்ப,
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல்
செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை
மென்தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு,
இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு,
பால்பெய் செந்நெற் பாசவல் பகுக்கும்
புனல்பொரு புதவின் உறந்தை எய்தினும்,
வினை பொருளாகத் தவிரலர் கடைசிவந்து
ஐய அமர்த்த உண்கண்நின்
வைஏர் வால்எயிறு ஊறிய நீரே! - அகம். 237.
இப்பாடலில் வரும் ' துயில் துறந்து இன்னா கழியும் கங்குல் என்று நின் நல்மா மேனி அணிநலம் புலம்ப, கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வைஏர் வால்எயிறு ஊறிய நீரே! இனைதல் ஆன்றிசின் ஆயிழை ! ' என்ற வரிகள் தலைவியின் துயர நிலையினை அப்பட்டமாக விளக்கி நிற்கின்றன. தலைவன் வாராமையால் அவனை எதிர்பார்த்து இரவெல்லாம் உறக்கமின்றிக் கழிய, சோர்வடைந்த கண்ணிமைகளுடன் அழுகின்ற நிலையில் இருக்கின்ற தலைவியைப் பார்த்து அவளது தோழியானவள் ' கடைக்கண் ஈற்றில் பூசிய சிவந்த வரிகளுடன் அழகாகத் தோன்றுகின்ற மையுண்ட கண்களை உடையவளே ! உனது வெண்ணிற விழிகளில் நீர் பெருகுகிறது; அழவேண்டாம்; அவர் உடனே வந்துவிடுவார் ' என்று ஆறுதல் கூறுகிறாள்.
இப்பாடலில் வரும் ' வாலெயிறு ஊறிய நீர் ' என்பதற்கு ' வெண்ணிற விழிகளில் பெருகிய நீர் ' என்பதே மிகப் பொருத்தமான பொருளாகும். மாறாக, பற்களில் ஊறிய எச்சில் நீர் என்று பொருள் கொள்ளலாமா என்றால் கூடாது. காரணம், தலைவியின் துயரநிலை. ஆனால் இரண்டாவது பொருளில் தான் உரை விளக்கம் எழுதி உள்ளனர். அதாவது, அழுதுகொண்டிருக்கும் தலைவியைப் பார்த்து ' உனது பற்களில் ஊறுகின்ற எச்சிலைப் பருகுவதற்காகவேனும் உனது கணவன் ஓடோடி வந்துவிடுவான். நீ அழவேண்டாம். ' என்று உரை கூறியுள்ளனர். என்ன ஒரு விளக்கம் பாருங்கள்.! தலைவன் தலைவியின் வாயுடன் வாய்வைத்து அவளது எச்சிலை உண்கின்ற செய்தி அவளது தோழிக்கு எப்படித் தெரியுமோ புரியவில்லை.!! எந்தச் சூழலில் எப்படிப் பேசவேண்டும்?. எதைப் பற்றிப் பேசவேண்டும்? என்ற வரைமுறையே இல்லாமல் இப்படியெல்லாம் பேசியதாகக் கூறினால் பழந்தமிழரின் பண்பாடு நாறிப்போகுமே என்ற நினைப்பின்றி உரை எழுதி இருப்பதனை நினைத்து வருத்தமே மேலிடுகிறது.!!!
வாழ்க தமிழ்! வளர்க குறள்!
முத்தமிடுவதை ஒரு கொலைக்குற்றம் என்ற அளவுக்கல்லவா பார்த்திருக்கிறீர்கள் ஐயா :)))
பதிலளிநீக்குதுரை ஐயா, குழந்தைக்கு தாய் முத்தமிடுவது பாசத்தால். காதலியை காதலன் முத்தமிடுவது பாலுணர்வினால். அதிலும் இங்கே நடப்பதை முத்தம் என்று சொல்வதைவிட பாலுறவின் முதல் கட்டமாகத் தான் எடுத்துக் கொள்ள முடியும். :)))
பதிலளிநீக்குஅன்புடன்,
தி.பொ.ச.
பாலில் தேன் கலந்ததாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.
பதிலளிநீக்குதேன்போன்ற நிறத்தையுடைய கண்னிமையில் பால்போன்ற கண்ணீர் படிவதாகவும் தாங்கள் உறை எழுதியுள்ளீர்கள்.
பாலில் தேன் கலந்தது (திருவள்ளுவர்)
தேனில் பால் கலந்தது (திருத்தம்.பொ.ச)
கலக்கம் பற்றிக் கலக்கம் வருகிறது.
அன்பன்
கி.காளைராசன்
காளைராசன் ஐயா
பதிலளிநீக்குதயவுசெய்து கண்களை நன்கு கசக்கி விட்டுத் தெளிவாகப் பாருங்கள். :)))
தேனில் பால் கலந்தது என்றா எழுதியுள்ளேன்.?
அன்புடன்,
தி.பொ.ச