வியாழன், 1 டிசம்பர், 2016

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 4

முன்னுரை:

இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரங்களாக மேலும் சில சான்றுகளை இங்கே விரிவாகக் காணலாம்.



சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 6

வரை மருள் புணரி வான் பிசிர் உடைய
வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல்
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசை               
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து
மனால கலவை போல அரண் கொன்று               
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின்
கடி உடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர்
நார் அரி நறவின் ஆர மார்பின்                   
போர் அடு தானை சேரலாத
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும்
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே               
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்னம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே    - பதிற். 11

வரி விளக்கம்:

வரை மருள் புணரி = மலைபோல எழுகின்ற உயரமான அலைகளையும்
வான் பிசிர் உடைய = தூறல் மழையினையும் உடையதாய்
வளி பாய்ந்து அட்ட = சூறைக்காற்றும் உடன்வீசி வருத்த
துளங்கு இரும் கமம் சூல் = இடியுடன் கூடிய கருமேகங்கள் சூழ்ந்திருந்த
நளி இரும் பரப்பின் மா கடல் முன்னி = குளிர்ச்சிமிக்க அந்த பெரிய கடலிலே பயணித்து
அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் = பேய்போல் தோற்றமுடைய அவுணர்கள் காவல்காக்கின்ற
சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசை    = கொடிய தெய்வமேறிய மரத்தினைப் பிளந்து பெரும்புகழ்பெற்ற       
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு = கடுஞ்சினமும் வெற்றியுமுடைய முருகன் யானையின் மேலமர்ந்து வருவதைப் போல
செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப = குருதி தோய்ந்த வாளினால் எதிர்ப்படுவோரை வெட்டவும்
அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் = உடலில் உண்டான புண்ணில் இருந்து வழியும் குருதியால்
மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து = நீலமணி போன்ற கழிமுக நீரின் நிறம் மாறி
மனால கலவை போல அரண் கொன்று = குங்குமக் கலவை போல ஆகுமாறு காவலை அழித்த       
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை = சிறந்த வலிமைகொண்ட உயர்ந்த தலைவனே !
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின் = பலரும் மொய்த்துப் பாதுகாத்த திரண்ட பூக்களுடைய கடம்பமரத்தின்
கடி உடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று  = பூசைசெய்த அடிப்பகுதி வெட்டுறுமாறு தாக்கி வென்று
எறி முழங்கு பணை செய்த வெல் போர் = போரில் வெற்றிமுரசு கொட்டியவனும்
நார் அரி நறவின் = நாரினால் கட்டிய மாலையைப் போன்றதும் நறுமணம் மிக்கதுமான                
ஆர மார்பின்    = செங்கடம்ப மாலையை அணிந்தவனும்
போர் அடு தானை சேரலாத = போரில் வெல்கின்ற பெரும்படையினை உடையவனுமாகிய சேரலாதனே !
மார்பு மலி பைம் தார் = மார்பினை நிறைக்கும் அழகிய மாலையுடன்
ஓடையொடு விளங்கும் = ஓடை எனும் அணியினை அணிந்த
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை = மேல்நோக்கிய தந்தங்களுடன் கூடிய குறையில்லாத யானையினது
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த = பொன் அணிந்த பிடரியின்மேல் அமர்ந்தவாறு விளங்கும்
நின் பலர் புகழ் செல்வம் = உன்னுடைய புகழ்மிக்க செல்வத்தால்            
கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி = கவரிமானானது முருக்கமரங்கள் நிறைந்த சாரலில் தூங்கும்போதுகூட
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் = அருவிநீரையும் நரந்தப் புல்லையும் உண்பதாகக் கனவுகாண்கின்ற
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் = ஆரியர்கள் கூட்டமாக வாழ்கின்ற புகழ்பெற்ற இமயமலை முதலாக
தென்னம் குமரியொடு ஆயிடை = தெற்கிலே குமரியினை ஈறாகக் கொண்ட இடைநிலத்தில் உனது
மன் மீக்கூறுநர் மறம் தப = பெருமையினைப் புகழ்ந்தோரின் வறுமை ஒழிவதை
இனிது கண்டிகுமே கடந்தே = இனிதே கண்டவாறு கடந்துவந்தேன்.

பொருள் விளக்கம்:

மலைபோல எழுகின்ற உயரமான அலைகளையும் தூறல் மழையினையும் உடையதாய் சூறைக்காற்றும் உடன்வீசி வருத்த இடியுடன் கூடிய கருமேகங்கள் சூழ்ந்திருந்த குளிர்ச்சிமிக்க அந்த பெரிய கடலிலே பயணித்து குருதி தோய்ந்த வாளினால் எதிர்ப்படுவோரை வெட்டவும் உடலில் உண்டான புண்ணில் இருந்து வழியும் குருதியால் நீலமணி போன்ற கழிமுக நீரின் நிறம் மாறி குங்குமக் கலவை போல ஆகுமாறு காவலை அழித்த சிறந்த வலிமைகொண்ட உயர்ந்த தலைவனே! பலரும் மொய்த்துப் பாதுகாத்த திரண்ட பூக்களுடைய கடம்பமரத்தின் பூசைசெய்த அடிப்பகுதி வெட்டுறுமாறு தாக்கி வென்று போரில் வெற்றிமுரசு கொட்டியவனும் நாரினால் கட்டிய மாலையைப் போன்றதும் நறுமணம் மிக்கதுமான செங்கடம்ப மாலையை அணிந்தவனும் போரில் வெல்வதான பெரும்படையினை உடையவனுமாகிய சேரலாதனே ! பேய்போல் தோற்றமுடைய அவுணர்கள் காவல்காக்கின்ற கொடிய தெய்வமேறிய மரத்தினைப் பிளந்து பெரும்புகழ்பெற்ற கடுஞ்சினமும் வெற்றியுமுடைய முருகன் யானையின் மேலமர்ந்து வருவதைப் போல மார்பினை நிறைக்கும் அழகிய மாலையுடன் ஓடை எனும் அணியினை அணிந்த மேல்நோக்கிய தந்தங்களுடன் கூடிய குறையில்லாத யானையினது பொன் அணிந்த பிடரியின் மேலமர்ந்து விளங்கும் உன்னுடைய புகழ்மிக்க செல்வத்தால் கவரிமானானது முருக்கமரங்கள் நிறைந்த சாரலில் தூங்கும்போதுகூட அருவிநீரையும் நரந்தப் புல்லையும் உண்பதாகக் கனவுகாண்கின்ற ஆரியர்கள் கூட்டமாக வாழ்கின்ற புகழ்பெற்ற இமயமலை முதலாக தெற்கிலே குமரியினை ஈறாகக் கொண்ட இடைநிலத்தில் உனது பெருமையினைப் புகழ்ந்த புலவர்களின் வறுமை ஒழிவதை இனிதே கண்டவாறு கடந்துவந்தேன்.

மேல் விளக்கம்:

சேரலாதனின் வீரத்தினை விரிவாகக் கூறும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். சேரலாதனின் படைகள் போர்புரிவதற்காகக் கப்பல்களில் பயணிக்கும்போது கடலின் நிலை எவ்வாறு இருந்தது என்பதனை நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார் புலவர். கடல் கொந்தளித்ததோ என்று எண்ணும் அளவுக்கு மலை உயரத்திற்கு அலைகள் எழுகின்றனவாம்; புயல் காற்று வேறு வீசி கப்பல்களை அலைக்கழிக்கிறதாம்; பலத்த இடியுடன் மழையும் சேர்ந்துகொள்ள, கார்மேகங்கள் கூட்டம் கூட்டமாய் வானில் இருந்தவாறு கப்பல்களின் தள்ளாட்டத்தினை வேடிக்கை பார்க்கிறதாம். இப்படியொரு பயங்கரமான இயற்கை சீற்றத்திற்கு இடையில் உயிரைப் பணயம் வைத்து வங்கக் கடலில் பயணிப்பதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும் இல்லையா?. அது சேரலாதனிடம் நிறையவே இருக்கிறது என்று முதல் வரிகளிலேயே உணர்த்திவிடுகிறார் புலவர்.

அடுத்த வரிகளில் எதிரி நாட்டில் சேரன் நடத்திய வீர விளையாட்டினை விவரிக்கிறார். வங்கக் கடலில் பயணித்து எதிரி நாட்டு கடல் எல்லையைக் கடக்கும்போதே எதிரி வீரர்கள் தாக்குவதற்காக திரண்டு ஓடி வருகின்றனர். அப்படி எதிரில் வருவோர் அனைவரையும் தனது வாளினால் வெட்டிக்கொல்கிறான். வெட்டுண்டு இறந்து வீழ்வோரின் உடலில் இருந்து பெருகி வழியும் குருதியானது அருகில் இருந்த கடற்கழியின் நீரில் கலக்க, அது குங்குமக் கலவை போல செந்நிறமாய் மாறுகிறது. அடுத்து, சேரலாதனின் பார்வை எதிரிகள் தமது தெய்வம் போல பூசித்துவருகின்ற காவல் மரமான கடம்ப மரத்தினை நோக்கித் திரும்புகிறது. அம் மரத்தினை நெருங்க விடாமல் சுற்றிலும் காவல் காத்தவாறு ஏராளமான எதிரி வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அந்தக் காவல் மரத்தினை அடியோடு வெட்டி வீசுகிறான். எதிர்த்தோர் அனைவரும் உயிரற்று மண்ணில் வீழ்ந்துகிடக்க, வெற்றி முரசு அடிக்கப்பட, தனக்குரிய யானையின் மேல் அமர்ந்தவாறு நாட்டுக்குள் செல்கிறான் சேரலாதன்.

போரில் ஈடுபடும்போது ஏற்படுகின்ற பழிகள் / குறைகள் அதாவது காயங்கள், வெட்டுக்கள் போன்ற எதுவும் இல்லாமல் பொன்னால் செய்த ஓடை என்னும் அணியினை அணிந்தவாறு மேல்நோக்கிய தந்தங்களுடன் கம்பீரமாக நடந்துசெல்லும் அந்த யானையின்மேல் மார்பில் மாலை அணிந்தவாறு வீற்றிருக்கும் சேரலாதனைக் கண்டதும் புலவருக்கு ஏனோ முருகனின் நினைப்பு வருகிறது. பதுமாசுரன் என்ற அரக்கர் தலைவனை முருகன் கொன்ற நிகழ்ச்சியினை நினைவுகூர்கிறார். பேய்போன்ற உருவமுடைய அரக்கர்களின் காவல் தெய்வமான பதுமாசுரன் முருகனுக்குப் பயந்து மாமரத்தில் சென்று ஒளிந்துவிடுகிறான். அம் மரத்தைச் சுற்றிலும் பல அரக்கர்கள் காவலாக இருக்க, அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அம் மரத்தினையும் அடியோடு வெட்டிவீழ்த்தியபின், தனக்குரிய யானையின்மேல் அமர்ந்தவாறு பெரும்புகழுடன் முருகன் சென்றதனை இங்கு கூறியதன் மூலம், மலைநாட்டு மன்னனாம் சேரலாதனைக் குறிஞ்சிக் கிழவனாம் முருகனுடன் மறைமுகமாக உவமைப்படுத்துகிறார் புலவர்.

பொதுவாக தமிழ்ப் புலவர்கள், தமிழ் மன்னர்களின் வீரத்தை மட்டுமின்றி அவர்களின் ஈரத்தையும் அதாவது உதவிசெய்யும் பண்பினையும் மறக்காமல் போற்றுவார்கள். அவ்வகையில், இப் பாடலிலும் சேரலாதனின் கருணையினைப் போற்ற புலவர் மறக்கவில்லை. வடக்கில் இமயமலை முதலாக தெற்கில் குமரி வரையிலான இடைப்பட்ட பகுதி முழுவதும் சேரலாதனின் ஆட்சிக்குக் கீழ் இருந்ததாகவும், அப் பகுதியில் வாழ்ந்த புலவர்கள் சேரலாதனின் பெருமைகளைப் புகழ்ந்துகூறி வறுமைத் துன்பமே அறியாத வண்ணம் வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார். இப்படி பல்லோரும் புகழ்ந்து ஏத்துகின்ற சேரலாதனின் பெருஞ்செல்வம் தனது வறுமையினையும் போக்காதா என்ற புலவரின் ஏக்கம் இப்பாடலில் தொக்கிநிற்கிறது.

இப்பாடலில் வரும் ஆரம் என்பது செங்கடம்பு மரத்தினைக் குறிக்கும். கடம்ப மரத்தில் பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று தான் ஆரம் என்றும் செங்கடம்பு என்றும் அழைக்கப்படும் சமுத்திரப்பழ மரமாகும். ஆங்கிலத்தில் இது barringtonia acutangula என்று அழைக்கப்படும். பேருக்கேற்றாற்போல இம் மரங்கள் கடற்கரையினை ஒட்டிய பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகின்றன. இம் மரத்தின் பூக்கள் மிக்க நறுமணம் கொண்டவை. அதுமட்டுமின்றி, நார்கொண்டு கட்டிய பூமாலையினைப் போல இம் மரத்தின் பூக்கள் இயற்கையாகவே ஒரு மலர்மாலையினைப் போல மரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும் அழகே தனிதான். அருகில் இதன் படம் இணைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு எப்படி இந்த செங்கடம்பு மலர்மாலையினைப் பிடிக்குமோ அதைப்போல சேரலாதனுக்கும் இந்த மாலையினைப் பிடித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. காரணம், இம் மலரை அணிய நார்கொண்டு கட்டத்தேவையில்லை. மரத்தில் இருந்து அப்படியே இரண்டு மலர்ச்சரங்களைப் பறித்தெடுத்து முனைகளில் முடிச்சுபோட்டு கழுத்தில் மாலையாக அணிந்துகொள்ளலாம்.

இமயமலையினைப் பற்றிக் கூறுமிடத்து, ஆரியர்களைப் பற்றியும் கவரிமான்களைப் பற்றியும் கூறுகிறார். ஆரியர்கள் கூட்டம் கூட்டமாக இமயமலையின் வடக்குப் பகுதியில் வாழ்வதாகவும், மலைச்சாரலில் வாழும் கவரிமான்கள் முருக்கமரங்களின் நிழலில் தூங்கும்போதுகூட நரந்தம் எனப்படும் எலுமிச்சைப் புற்களை உண்டு அருவி நீரைப் பருகுவதாகக் கனவுகாண்பதாகவும் கூறுகிறார். உண்பதற்கு நறுமணம் மிக்க எலுமிச்சைப்புல், பருகுவதற்குச் சுவையான அருவிநீர், படுத்து உறங்குவதற்கு செம்பட்டுப் போன்ற முருக்கமலர்கள் தூவிய மெத்தை.. ஆகா, இந்தக் கவரி மான்களுக்குத்தான் என்ன ஒரு இனிமையான வாழ்க்கை இல்லையா?. கவரி மான்களுக்கு அமைந்த இதுபோன்றதோர் இனிய வாழ்க்கை சேரலாதனின் செல்வத்தால் தனக்கும் அமையவேண்டும் என்பதே புலவரின் ஆசை.  இமயமலையினைப் பற்றி விளக்கமான செய்திகளைக் கூறுவதால் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு அரணாக இந்தப் பாடலையும் ஒரு சான்றாகக் கொள்ளலாம் என்பது துணிபாகும்.

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 7
செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே - புறம். 214

வரி விளக்கம்:
செய்குவம் கொல்லோ நல்வினை எனவே = ஆதலால் நல்ல செயல்களையே செய்வோமாக
ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி = நீங்காத ஐயங்களும் குற்றமுள்ள அறிவும்
நீங்கா நெஞ்சத்து துணிவு இல்லோரே = பொருந்திய உள்ளத்தில் உறுதியும் இல்லாதவர்களே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே = யானையை வேட்டையாடியவன் யானையுடன் வருவதும்
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே = காடையை வேட்டையாடியவன் வெறுங்கையுடன் வருவதும் உண்டு
அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு = அதனால் உயர்ந்த நோக்கத்தினை உடைய பெரியோருக்கு
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் = செய்யும் வினைப்பயன் வழியாக அடையமுடிவதாக
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் = குறையேதுமில்லா சொர்க்கவாழ்வும் கைகூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் = குறையேதுமில்லா சொர்க்கவாழ்வு கைகூடாவிட்டாலும்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும் = மாறிமாறித் தோன்றுவதாகிய பிறப்பிலிருந்து விடுதலையும் கைகூடும்
மாறி பிறவார் ஆயினும் = மாறிப்பிறவாமல் மனிதராகவே பிறந்தார் என்றால்
இமயத்து கோடு உயர்ந்து அன்ன = இமயமலையின் உயரமான உச்சியைப் போல
தம் இசை நட்டு = தமது உயர்ந்த புகழினை நிறுவி
தீது இல் யாக்கையொடு = தீமை செய்யாத உடலினராய்
மாய்தல் தவ தலையே = இறப்பதே மிகச் சிறப்பானது.

பொருள் விளக்கம்:

நீங்காத ஐயங்களும் குற்றமுள்ள அறிவும் பொருந்திய உள்ளத்தில் உறுதியும் இல்லாதவர்களே ! யானையை வேட்டையாடியவன் வெற்றிபெற்று யானையுடன் வருவதும் உண்டு; காடையை வேட்டையாடியவன் தோல்வியுற்று வெறுங்கையுடன் வருவதும் உண்டு. அதனால் எப்போதும் உயர்ந்த நோக்கத்தினையே உடைய பெரியோருக்குச் செய்யும் வினைப்பயன் வழியாக அடையமுடிவதாகக் குறையேதுமில்லா சொர்க்கவாழ்வும் கைகூடும். ஒருவேளை குறையேதுமில்லா சொர்க்கவாழ்வு கைகூடாவிட்டாலும் மாறிமாறித் தோன்றுவதாகிய பிறப்பிலிருந்து விடுதலையும் கைகூடும். ஒருவேளை மாறிப்பிறவாமல் மனிதராகவே பிறந்துவிட்டார் என்றால் இமயமலையின் உயரமான உச்சியைப் போல தமது உயர்ந்த புகழினை நிறுவி யாருக்கும் தீமை செய்யாத உடலினராய் இறப்பதே மிகச் சிறப்பானது. ஆதலால் இனி நாம் நல்ல செயல்களையே செய்வோமாக !.

மேல் விளக்கம்:

வாழ்வியல் குறித்த அறிவுரைகளைத் தரும் பல புறநானூற்றுப் பாடல்களில் மிகச் சிறந்த பாடல் இதுவாகும். வாழ்க்கையில் எப்போதும் நல்ல செயல்களையே செய்யவேண்டியதன் தேவையினை மிகத் தெளிவாகச் சில சான்றுகளுடன் விளக்குகிறார் புலவர். அதேசமயம், ஒருவர் கெட்ட செயல்களை ஏன் செய்கிறார் என்பதற்கான காரணங்களையும் கூறுகிறார். நீங்காத ஐயங்கள், குற்றமுள்ள அறிவு, உள்ள உறுதியின்மை ஆகியவையே குற்றங்கள் செய்வதற்கான அடிப்படை என்று விளக்குகிறார்.

நீங்காத ஐயங்கள் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம். நம்மாலும் பிறருக்கு நன்மை செய்யமுடியுமா?, நன்மை செய்வதால் நாம் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொள்வோமா?. எப்படி பிறருக்கு நன்மையைச் செய்வது?. பிறருக்கு நன்மை செய்வதால் நமக்கேதும் பலனுண்டா?. - இதைப்போன்ற பல ஐயப்பாடுகள் நம்மில் பலர் மனதில் அடிக்கடி எழுவதுண்டு. இவற்றைக் கேள்விக்குரியாகவே என்றும் மனதில் பொதிந்துவைத்திருக்கக் கூடாது. இவற்றுக்கான விடைகளை முயன்று கண்டறிந்து தெளிவுபெற வேண்டும். அப்போதுதான் நாம் பிறருக்கு நன்மை செய்யவேண்டியதன் தேவையினைப் புரிந்துகொள்ள முடியும்.

அடுத்துவருவது குற்றமுள்ள அறிவு. தீமையை நன்மையாக அதாவது தவறாகப் புரிந்துகொள்கின்ற அறிவே குற்றமுள்ள அறிவாகும். தெளிவாகச் சொல்வதென்றால் பிறருக்குச் செய்யும் தீமையை தனக்குச் செய்யும் நன்மையாகப் புரிந்துகொள்வது. திருட்டு, கொலை, வழிப்பறி, மோசடி போன்றவை யாவும் பிறருக்குச் செய்யப்படும் தீமைகள். இவற்றைத் தனக்கு நன்மை தருபவையாக எண்ணச்செய்வது குற்றமுள்ள அறிவு. குற்றமுள்ள அறிவுடையவன் ஒருபோதும் பிறருக்கு நன்மை செய்யமாட்டான். இத்தகைய அறிவு ஒருவருக்குத் தோன்றக் காரணம் மேலே நாம் கண்ட நீங்காத ஐயங்களே. ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள முயலாமல் அப்படியே விட்டுவிடும்போது நன்மை செய்யவேண்டும் என்ற எண்ணமே தகர்ந்து தீமையினையே நன்மையாகக் கருதுகின்ற குற்றமுள்ள அறிவு தலையெடுக்கிறது.

அடுத்து வருவது உள்ளத்தில் உறுதியின்மை. நீங்காத ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு தெளிவாக உணர்ந்தாலும் தீமையினை விடுத்து நன்மையினைச் செய்ய உள்ளத்தில் உறுதி வேண்டும். உள்ள உறுதி இல்லாதவர்களால் தொடர்ந்து நன்மை செய்ய இயலாது. இப்படிப் பட்டவர்கள் ஒரு உந்துதலில் அல்லது ஒரு சூழ்நிலையில் நன்மை செய்வர். உந்துதல் விலகியதும் அல்லது சூழல் மாறியதும் மறுபடியும் தீமை செய்யத் தொடங்கிவிடுவர். எந்தச் சூழ்நிலையிலும் பிற உயிர்களுக்குத் தீமை செய்யாமல் இருப்பதற்கு நெஞ்சுரம் வேண்டும். நெஞ்சுரம் மிக்கவர்கள் தம் இன்னுயிர் போவதாயினும் பிறருக்குத் தீமை செய்யமாட்டார்கள். இதைப்பற்றி வள்ளுவரும் பல குறள்களில் விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

பிறருக்குத் தீமை செய்வது மிக எளிதானது; ஆனால் நன்மை செய்வது மிகக் கடினமானது என்னும் கருத்தினை விளக்குவதற்கு இரண்டு எடுத்துக்காட்டுக்களைக் கூறுகிறார் புலவர். செய்வதற்கு மிக எளிதானது என்று எண்ணி காடையினை வேட்டையாடச் சென்றவன் தோல்வியுற்று வெறுங்கையுடன் வருவதுண்டு. அதேசமயம், செய்வதற்குக் கடினமான வேலையாக இருந்தாலும் யானையை வேட்டையாடச் சென்றவன் வெற்றிபெற்று யானையுடன் வருவதுமுண்டு. ஆக, ஒரு வினையைச் செய்ய முற்படும்போது அது எளிதானதா கடினமானதா என்ற அடிப்படையில் வினையைத் தேர்ந்தெடுக்காமல் நோக்கத்தின் அடிப்படையில் தான் தெரிவுசெய்ய வேண்டும். செய்வதற்குக் கடினமாகவே இருந்தாலும் நமது செயல்களின் நோக்கம் உயர்வாகவே இருக்கவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்குத் தீமை தராமல் நன்மை தரும் செயல்கள் எவையோ அவையே உயர்ந்த நோக்கம் கொண்டவை.

சரி, இவ்வளவு கடினங்களைச் சந்தித்து பிறருக்கு நன்மை செய்தால் என்ன பலன் கிடைக்கும்?. இக் கேள்விக்கும் விடை சொல்கிறார் புலவர். உயர்ந்த நோக்கமுடைய பெரியோரால் தொடர்ந்து செய்யப்படும் நற்செயல்களின் பயனாக அவர்களுக்குத் தொய்யா உலகமாகிய சொர்க்கத்தில் வாழ்வு கிடைக்கும் என்கிறார். ஒருவேளை சொர்க்கவாழ்வு கிட்டாமல் போனாலும் மாறிமாறிப் பிறப்பதாகிய இந்தப் பிறவித்தளையில் இருந்தேனும் விடுதலை கிடைக்கும் என்கிறார். ஒருவேளை பிறவித்தளையில் இருந்து விடுதலை கிட்டாமல் மறுபடியும் பிறக்க நேரிட்டால் அவர்கள் மனிதராகவே பிறப்பர் என்றும் அப்படிப் பிறந்தபோதும் அவர் தமது மன உறுதியினைக் கைவிடாமல் பிறருக்குத் தீமை செய்யாமல் தொடர்ந்து நன்மையே செய்யவேண்டும் என்கிறார். அப்படிச் செய்வதால் அவரது புகழானது உயரமான உச்சியினை உடைய இமயமலையைப் போல உயர்ந்து விளங்குவதுடன் இமயமலையானது உயரம் குன்றாமல் என்றும் வாழ்வதைப் போல அவர் தமது பூதவுடல் மறைந்தாலும் புகழுடலால் மண்ணில் என்றும் வாழலாம் என்கிறார்.

" பிறருக்கு எப்போதும் நன்மை செய்வதால் சொர்க்கவாழ்வு கிடைக்காமல் போகலாம்; பிறவித்தளையிலிருந்து விடுதலை கிட்டாமல் போகலாம்; ஆனால் இமயமலை போல என்றும் குன்றாத உயர்ந்த புகழுடன் மண்ணிலேயே வாழ்வது மட்டும் உறுதியாகும். எனவே இனி நாம் பிறருக்கு நன்மையே செய்வோமாக " என்று கூறித் தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துகிற இப் புலவரின் நுண்மாண் நுழைபுலம் என்னே என்னே !!. இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு இப்பாடலையும் ஒரு சான்றாகக் கொள்வதில் தவறில்லை. 

........... தொடரும்............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.