8. யானையின் ஓசை:
யானை தனது தும்பிக்கையை மேலே உயர்த்திப் பெருங்குரல் எடுத்து ஒலிப்பதனைப் பிளிறுதல் என்று சொல்கிறோம். இந்த யானையின் பிளிறல் ஓசை கேட்பதற்கு எப்படி இருக்கும்? இதோ சங்கப் புலவர்கள் யானையின் ஓசையினை எந்தெந்த ஓசைகளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றனர் என்று பாருங்கள்.
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன - நற்.62
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமை கழையின் நரலும் - அகம். 398
மேலே காணும் பாடல்கள் இரண்டும் யானையின் பிளிறல் ஓசையினை மூங்கில் மரங்களின்மேல் பெருங்காற்று மோதி அசையச்செய்யும்போது எழுகின்ற ஓசையுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன. யானைகளின் பிளிறல் ஓசையினைக் கார்மேகங்களின் இடியோசையுடன் ஒப்பிடுகின்றன கீழ்க்காணும் பாடல்வரிகள்.
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே - புறம்.81
யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல் - பரி.8
இக்காலத்தில் கரும்பினைப் பிழிந்து சாறு எடுப்பதற்கென்று எந்திரங்கள் இருப்பதைப்போல சங்ககாலத்திலும் எந்திரங்கள் இருந்திருக்கின்றன. இந்த கரும்பு பிழியும் எந்திரங்கள் இயங்கும்போது எழுந்த ஓசையானது யானைகளின் ஓசையினைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் - ஐங்கு.55
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை - பெரும். 259
யானைகள் தம் தும்பிக்கையை உயர்த்தி பெருங்குரல் கொண்டு எழுப்பிய ஓசையினைக் கோடியர் எனப்படும் கூத்தாடிகள் தங்களது நீண்டு மேல்நோக்கி வளைந்த தூம்பு எனப்படும் இசைக்கருவியை உயர்த்தி ஒலிப்பதைப் போன்று இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை
தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் - அகம். 111
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் - ஐங்கு. 377
9. யானைக்கு மதம்பிடித்தல்:
ஆண் யானைக்கு மதம் பிடித்தல் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆங்கிலத்தில் இதனை மச்`த் என்று கூறுவர். ஆண் யானைக்கு 12 முதல் 15 அகவை ஆகும்போது மதம்பிடிக்கத் துவங்கும். இளம் யானைகளுக்கு வெயில் காலத்திலும் முதிய யானைகளுக்கு குளிர்காலத்திலும் மதம் பிடிக்கும் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. யானையின் கண்களுக்கும் காதுகளுக்கும் இடையில் தலைக்குள் இருக்கும் ஒரு சுரப்பியில் இருந்து டெச்`டோச்`டீரோன் எனப்படும் நீர் பன்மடங்கு அதிகமாக சுரந்து தலையில் இருந்து வெளியேறி வடிதலே யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறப்படுகிறது. இந்த மதநீரினைக் 'கடாம்' என்ற சொல்லால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. யானைக்கு மதநீர் ஒழுகுவதைப் பற்றிக் கூறும் சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கடாஅம் வார்ந்து நிலம் புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம் - பதி.92
கமழ் கடாம் திகழ்தரும் பெரும் களிற்று இனத்தொடு - கலி. 48
பெருங்கை யானை கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் - அகம். 88
யானையின் மதநீரானது கன்னங்களில் வழிந்து அதன் வாய்க்குள் செல்வதும் உண்டு. இந்த மதநீரினை வண்டுகள் மொய்க்கும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாத்து
பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல் .. - அகம். 78
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை - அகம். 148
ஒரு மரத்தில் இருந்த பெரிய தேனடையானது கிழிபட்டதால் அதிலிருந்து ஒழுகிய தேனானது மலையில் விழுந்து நீண்ட தொலைவு ஓடியது. இதனை யானையின் முகத்தில் இருந்து ஒழுகி ஓடிய மதநீருடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.
தேன் சிதைந்த வரைபோல மிஞிறு ஆர்க்கும் கமழ்கடாஅத்து
அயறு சோரும் இரும்சென்னிய மைந்து மலிந்த மழகளிறு - புறம். 22
யானைக்கு மதம் பிடித்திருக்கும் நேரம் அதன் வலிமைப் பன்மடங்காக உயர்கிறது. மதம்பிடிக்காத பெரிய யானையை மதம்பிடித்த சிறிய யானை வென்றுவிடும். இதனால் மதம் பிடித்த யானையைத் தறுகண் பூட்கை என்று கீழ்ப்பாடல் குறிப்பிடுகிறது.
பொழி கவுள் தறுகண் பூட்கை - சிறு.142
10. யானைகள் சேற்றில் ஆடுதல்:
எருமைகள் நீரிலும் சேற்றிலும் விளையாடுவதைப் போல யானைகளும் நீர் மற்றும் சேற்றில் விளையாடும் இயல்பு கொண்டவையே. இவ்வாறு இவை செய்வதன் காரணம், தமது உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளவே ஆகும். யானைகள் சேற்றில் புரண்டதுடன் சேற்றினைத் தம் உடல்மேல் வாரி இறைத்துக்கொண்ட செய்திகளைக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு - நற். 51
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு - அகம். 121
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் - நற். 126
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின் - புறம்.325
இரும்சேறு ஆடிய கொடும் கவுள் கயவாய் - நற். 141
11. யானைகள் மரங்களைத் தாக்குதல்:
காட்டில் வாழும் யானைகள் தமது நீர் வேட்கையைத் தணித்துக் கொள்ளவும் உணவுக்காகவும் சினத்தைத் தணித்துக் கொள்ளவும் நடந்துசெல்வதற்கான வழியினை உண்டாக்கவும் பிற காரணங்களுக்காகவும் காட்டு மரங்களைத் தாக்குகின்றன. தனது கூரிய மருப்பினால் மரத்தின் தண்டினைக் குத்துதல், மரப்பட்டைகளை உறிஞ்சி எடுத்தல், கிளைகளை முறித்தல், உடலால் / தலையால் மோதி வேரோடு சாய்த்தல் போன்ற செயல்களில் காட்டு யானைகள் அடிக்கடி ஈடுபடும். யானையின் இத்தகைய செயல்பாடுகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பல பாடல்களின் வழியாகக் கூறியுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.
யானைகள் பல்வேறு மரங்களைத் தாக்கினாலும் வேங்கை, யாஅம், மராஅம், ஓமை, இலவம் ஆகிய மரங்களையே அதிகமாகத் தாக்கி உண்டதாகச் சங்க இலக்கியங்களின் வழியாக அறியமுடிகிறது. இது தொடர்பான சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் - குறு.37
பெரும் களிறு தொலைத்த முடத்தாள் ஓமை - நற். 137
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை - நற். 362
களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து - அகம். 309
வயகளிறு செம்கோல் வால்இணர் தயங்க தீண்டி
சொரிபுறம் உரிஞிய நெறிஅயல் மராஅத்து - அகம். 121
அந்த வேங்கைமரம் முழுவதும் அழகாகப் பூத்திருந்தது. புலித்தோல் நிறத்தில் இருந்த வேங்கைப் பூக்களைக் கண்டதும் அந்த ஆண் யானைக்குச் சினம் தலைக்கேறியது. ' ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு ' என்ற பழமொழிக்கேற்ப அது ஒரு மரம் என்று அறியும் நிலையைக் கடந்து அதனை ஒரு வயப்புலியாகக் கருதித் தனது கூரிய மருப்புக்களால் வேங்கை மரத்தினை வலுவுடன் குத்தியது. மருப்புக்கள் மரத்தில் நன்கு ஆழமாகப் பதிந்துவிட்டன போலும். யானையால் தனது குத்திய மருப்புக்களை மரத்தில் இருந்து மீள எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியாமல் அசந்துபோய் அச்சம் மேலிட உதவிக்குப் பிற யானைகளை அழைக்கத் தனது தும்பிக்கையை உயர்த்திக் கடும் ஓசையுடன் பிளிறியது. அதன் பிளிறல் ஓசையானது அந்த மலையில் பட்டு எங்கெங்கும் எதிரொலித்தது. இந்த இயற்கை நிகழ்ச்சியினை, இமயமலையில் சிவபெருமான் உமையுடன் வீற்றிருக்க, அம்மலையினைத் தனது கையால் பெயர்த்தெடுக்க எண்ணிய பத்துத்தலை இராவணன், தனது வலிய கையினை மலைக்குக்கீழே கொண்டுசென்று தூக்கும்பொழுதில் சிவ[பெருமான் தனது கால்கட்டை விரலால் மலையைச் சிறிது அழுத்தவும் மலையின் கீழே சிக்கிக்கொண்ட கையினை எடுக்கமுடியாமல் இராவணன் பெருங்குரல் எடுத்து அலறிய புராணச் செய்தியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல்.
இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக
ஐயிருத் தலையின் அரக்கர் கோமான்
தொடி பொலி தட கையின் கீழ் புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன்
கோடு புய்க்க அல்லாது உழக்கும் - கலி. 38
12. யானையும் போரும்:
ஏவுகணை, அணுகுண்டு முதலான பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் வரையிலும் நால்வகைப் படைகளே உலகமெங்கும் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நால்வகைப் படைகளில் வலிமை வாய்ந்த படையாகக் கருதப்பட்டு வந்தது யானைப்படையே. வலிமை வாய்ந்த ஒரு போர்யானையானது போர்க்களத்தில் நூற்றுக்கணக்கான எதிரி வீரர்களைத் தும்பிக்கையால் சுருட்டி வீசும்; காலால் எட்டி உதைக்கும்; காலின் கீழ் வைத்து மிதித்துக் கொல்லும்; நீண்ட மருப்புக்களால் எதிரி வீரர்களைக் குத்திக்கொல்லும். போர்க்களத்தில் மட்டுமின்றி, எதிரிநாட்டு மன்னன் மூடிவைத்த கோட்டைக் கதவினைத் தலையால் முட்டித்தள்ளி மருப்புக்களால் குத்தித் திறப்பதற்கும் யானைகள் பெரிதும் பயன்பட்டன. இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்களில் வரும் எழு / எழூஉ என்பது கோட்டைக்கதவுக்குப் பின்னால் அதனைப் பிணித்தவாறு தாங்கியிருக்கும் வலிமை வாய்ந்த பெரிய மரக்கட்டை ஆகும்.
களிறே எழூஉ தாங்கிய கதவம் மலைத்து - புறம்.97
கடுங்கண்ண கொல்களிற்றால் காப்புடைய எழு முருக்கி - புறம். 14.
போர்க்களத்தில் யானைகள் எதிரிவீரர்களைக் கொன்று பிணங்களாகக் குவிக்கின்றன. இதைப்பார்க்கும் சங்கப்புலவர்கள் அதனை வேளாண்மைத் தொழிலுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்களில் கூறும் விதத்தைப் பாருங்கள்.
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப
விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்து
படு பிண பல் போர்பு அழிய வாங்கி
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின் - புறம். 370
பெருமழை பொழிந்து செம்மண் நெகிழ்ந்து சேறாவதைப் போல படைமாரி பொழிந்ததால் சிந்திய குருதியில் போர்க்களம் எங்கும் செந்நிறச் சேறானதாம். செம்மண்ணில் வித்தி விளைந்து முற்றிய கதிர்களை அரிவாளால் அறுப்பதைப் போல போர்க்களத்தில் எதிரிவீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தினராம். அறுத்த கதிர்களை நிலத்தில் இட்டு மாடுகளைக் கொண்டு உழக்கி நெல் வேறு வைக்கோல் வேறாகப் பிரித்துக் குவிப்பதைப்போல தரையில் விழுந்த வீரர்களின்மேல் யானைகளைவிட்டு மிதிக்கச்செய்து தலை வேறு உடல் வேறாகக் குவித்தனராம். என்ன ஒரு கொடுமையான ஒப்பீடு !. இதே ஒப்பீட்டைக் கூறும் இன்னொருபாடல் கீழே.
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா
வாள் தக வைகலும் உழக்கும்- புறம். 342
அது ஓர் இரவுநேரம். அந்நேரத்தில் கடலில் பெருமழை பொழிகிறது. அதனைப் போர்க்களக் காட்சியுடன் எப்படி ஒப்பிட்டுக் கூறுகிறார் பாருங்கள் புலவர் கீழ்க்காணும் பாடலில்.
கொல் களிற்று உரவு திரை பிறழ அ வில் பிசிர
புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர
விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு - பதி. 50
போர்க்களத்தில் யானைகள் எடுக்கும் பெருங்குரலைப் போல கடல் அலைகள் மிகப்பெரிதாக ஆர்ப்பரித்தனவாம். வில்லில் இருந்து பாயும் அம்புகளைப் போல பெருமழை (சரமாரி) பொழிந்ததாம். வீரர்கள் பற்றியிருந்த கருநிறத் தோல் கேடயங்களைப் போல கருமேகங்கள் தோன்ற, அவர்களது வேல் ஆயுதங்களைப் போல வானத்து விண்மீன்கள் ஒளிர்ந்தனவாம். போரின்போது கொட்டப்படும் முரசொலியைப் போல இடியோசை கேட்டதாம். என்ன ஒரு ஒப்பீடு !.
இதோ இதேபோல இன்னுமொரு அருமையான ஒப்பீடு. வானத்தில் கருநிற மேகங்கள் திரண்டிருந்தன. அப்போது வெண்ணிறப் பறவையினங்கள் கீழே தாழ்வாகப் பறந்து செல்கின்றன. இந்த அழகான இயற்கைக் காட்சியைப் பார்த்த புலவர், அப்படியே அதனை போர்க்களக் காட்சியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.
கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும்
வான் பறை குருகின் நெடு வரி பொற்ப
கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு
நெடும் தேர் நுடங்கு கொடி அவிர்வர பொலிந்து - பதி.83
கருநிற மேகங்களைக் கரிய யானைக் கூட்டத்துடனும் அந்த யானைகளின்மேலாகப் பறக்கவிடப்பட்டிருந்த வெண்ணிறக் கொடிகளைப் பறவைகளுடனும் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர்.
யானைக்கு அதன் தும்பிக்கையே மிகப்பெரிய வலிமையாகும். யானையை வேல்கொண்டு குத்திக் கொல்லவேண்டுமென்றால் ஏராளமான வேல்கள் தேவைப்படும். ஆனால் யானையின் தும்பிக்கையை வாளால் வெட்டிவிட்டாலே போதும், யானை அலறித் துடித்து வலிபொறுக்க முடியாமல் தரையில் வீழ்ந்து விடும். இதனால் யானையின்மேல் அம்பாரம் அமைத்து அமர்ந்திருக்கும் எதிரிகளும் கீழே விழுந்துவிடுவர். எனவே எதிரி வீரர்கள் யானையின் தும்பிக்கையை வெட்டி வீழ்த்தவே பெரிதும் முனைவர். அப்படி வெட்டிவீழ்த்தப்பட்ட யானையின் தும்பிக்கையானது பனைமரத்தின் கரிய துண்டங்களைப் போல போர்க்களத்தில் ஆங்காங்கே கிடந்த காட்சியினைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.
வெளிற்றுப் பனம் துணியின் வீற்றுவீற்று கிடப்ப
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை - புறம். 35
பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன்
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் - பதி.36
13. யானை சார்ந்த பழமொழிகள்:
பழமொழிகள் தம் பெயருக்கேற்ப பழம்பெருமை மிக்கவையே. இக்காலத்தில் மட்டுமின்றி சங்க காலத்திலும் பல்வேறு பழமொழிகள் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. அவற்றுள், யானை சார்ந்த பழமொழிகள் சிலவற்றைச் சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக இங்கே காணலாம்.
பழமொழி: களிறு மென்று இட்ட கவளம் போல (புறம்.114)
பொருள்: யானையானது கவளத்தை உண்ணும்போது அதிலிருந்து கொஞ்சம் கீழேயும் சிந்துவதைப்போல
பெரும்பயனைப் பிறர் நுகர்ந்தபின்னர் எஞ்சியிருக்கும் சிறிய அளவிலான பயனைத் தான் நுகர்தல்.
பழமொழி: களிறு பொர கலங்கிய தண்கயம் போல (புறம்.341)
பொருள்: யானை இறங்கிய குளத்துநீர் கலங்குவதைப் போல உள்ளத்தில் பெரும் கலக்கம் தோன்றுதல்.
பழமொழி: களிறு மாறுபற்றிய தேய்புரி பழங்கயிறு போல (நற். 284)
பொருள்: இரண்டு யானைகள் எதிரெதிராகப் பற்றி இழுக்கும் பழைய கயிற்றினைப் போல இரண்டு பெரிய சிக்கல்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு மனதாலும் உடலாலும் வலிமை குன்றுதல்.
பழமொழி: களிறு கவுள் அடுத்த எறிகல் போல (புறம் 30)
பொருள்: யானையின் வாய்க்குள் சென்ற சிறிய கல்லினைப் போலச் சிக்கலை ஒன்றுமில்லாமல் செய்துவிடுதல்.
பழமொழி: பிச்சை சூழ் பெரும் களிறு போல (நற்.300)
பொருள்: பெருமையும் வலிமையும் கொண்ட யானை தெருவில் நின்று பிச்சை எடுப்பதைப்போல ஒருவர் தனது வலிமையையும் பெருமையையும் மறந்து பிறரிடம் கையேந்துதல்.
முடிவுரை:
சங்க இலக்கியங்கள் யானைகளைப் பற்றிக் கூறியிருக்கும் பல்வேறு செய்திகளை மேலே கண்டோம். இவை மட்டுமின்றி, இன்னும் பல சுவையான செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இக்காலத்தில் சிறுவர்கள் தெருவில் பிச்சையெடுக்கும் யானையைப் பார்த்ததும் ' ஐ யானை ! ' என்றுகூறி மகிழ்வதைப் போலச் சங்க காலத்திலும் அழுதுகொண்டிருந்த சிறுவர்கள் யானையைக் கண்டதும் அழுகையை மறந்து யானையை வியப்புடன் நோக்கினர் என்று கீழ்க்காணும் புறப்பாடல் கூறுகிறது.
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலை சிறாஅர் மன்று மருண்டு நோக்கி - புறம். 46
யானைகளை ஊரின் பொதுஇடமாகிய மன்றத்தில் மண்ணில் ஆழமாக நட்டு வைக்கப்பட்ட பெரிய பெரிய கழிகள் அல்லது பெரிய மரங்களுடன் பெரிய தடித்த கயிறு அல்லது இரும்புச் சங்கிலிகளால் கட்டி வைத்திருப்பர் என்றும் இக்கழிகளை வெளில் என்றும் இலக்கியம் கூறுகிறது. யானைப்பாகர்கள் யானையுடன் வடமொழி போன்ற ஒருவகைமொழியில் பேசுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருமையான படைப்பு
பதிலளிநீக்குhttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
மிக்க நன்றி ஐயா. :))
நீக்கு