வியாழன், 2 பிப்ரவரி, 2017

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 5 ( புதையல் எங்கே ? )

முன்னுரை:

இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கருத்தினை உறுதிசெய்ய பல இலக்கியச் சான்றுகளை இதற்கு முன்னால் பல கட்டுரைகளில் கண்டோம். மேலும் சில சான்றுகளை இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம். 


சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 8

நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
இலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர மகளிர்க்கு மேவல் ஆகும்
வளரா பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும்       
அசைவு இல் நோன் பறை போல செலவர
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள்
காதலி உழையள் ஆக
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே - நற். 356

வரிவிளக்கம்:

நிலம் தாழ் மருங்கின் = தாழ்ந்த நிலப் பரப்பிலே இருந்த
தெண் கடல் மேய்ந்த = தெள்ளிய கடல்போன்ற நீரினில் உணவருந்திய
இலங்கு மென் தூவி = ஒளிவீசும் மெல்லிய சிறகுகளையும்
செம் கால் அன்னம் = சிவந்த கால்களையும் உடைய அன்னப்பறவையானது
பொன் படு நெடும் கோட்டு = பொன் தோன்றும் உயர்ந்த சிகரத்தை உடைய
இமயத்து உச்சி = இமயமலையினது உச்சியில் வாழும்
வான் அர மகளிர்க்கு மேவல் ஆகும் = அழகிய தேவதை போன்ற மகளிர்க்கு விருப்பமாகிய
வளரா பார்ப்பிற்கு = வளராத தமது குஞ்சுகளுக்கு
அல்கு இரை ஒய்யும் =  மாலைநேர உணவினைக் கொடுப்பதற்குத்   
அசைவு இல் நோன் பறை போல = தவறாமல் (நாள்தோறும்) வலிமையுடன் பறந்துசெல்வதைப் போல
செலவர வருந்தினை வாழி என் உள்ளம் = (நாள்தோறும்) சென்றுவர வருந்துகின்ற என் உள்ளமே நீ வாழ்க !
காதலி உழையள் ஆக = என் காதலி என்னருகில் இருக்க அவள் முகம்
குணக்கு தோன்று வெள்ளியின் = கீழ்த்திசையில் தோன்றும் வெள்ளியைப் போல் ஒளிர
ஒருநாள் எமக்குமார் வருமே = ஒருநாள் எனக்காக வருவாயா?

பொருள்விளக்கம்:

தாழ்ந்த நிலப் பரப்பிலே இருந்த தெள்ளிய கடல்போன்ற நீரினில் உணவருந்திய ஒளிவீசும் மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய அன்னப் பறவையானது பொன் தோன்றும் உயர்ந்த சிகரத்தை உடைய இமயமலையின் உச்சியில் வாழும் அழகிய தேவதை போன்ற பெண்களுக்கு விருப்பமாகிய வளராத தமது குஞ்சுகளுக்கு மாலைநேர உணவினைக் கொடுப்பதற்குத் தவறாமல் நாள்தோறும் வலிமையுடன் பறந்துசெல்வதைப் போல நாள்தோறும் சென்றுவர வருந்துகின்ற என் உள்ளமே நீ வாழ்க ! என் காதலி என்னருகில் இருக்க அவள் முகம் கீழ்த்திசையில் தோன்றும் வெள்ளியைப் போல் ஒளிர ஒருநாள் எனக்காக நீ வருவாயா?.

மேல்விளக்கம்:

காதல் மனைவியைக் காண விரும்பும் கணவன் தனது நெஞ்சுடன் பேசுவதாக இப்பாடல் இயற்றப்பட்டுள்ளது. பொருள் ஈட்ட வேண்டிக் காதலியைப் பிரிந்துவந்த காதலன் ஓர் இரவு முழுக்கப் பயணம் செய்யவேண்டிய தூரத்தில் இருக்கிறான். அவன் இருக்கும் இடத்தருகில் ஒரு பெரிய ஏரி உள்ளது. அது கடல்போலப் பெரியதாக தெள்ளிய நீருடன் இருக்கிறது. அங்கே அன்னப்பறவைகள் நாளும் பறந்துவந்து மீன் உண்டு தமது குஞ்சுகளுக்கு வேண்டிய உணவினை வாய்க்குள் வைத்துக்கொண்டு செல்கின்றன. காலையில் பறந்துவரும் இந்த அன்னப்பறவைகள் மீண்டும் மாலைநேரத்தில் தான் வீடு சென்று சேரும். ஒருநாள்கூடத் தவறாமல் இமயமலையின் உச்சிவரை வலிமையுடன் பறந்துசென்று அங்கே அழகிய தேவதை போன்ற பெண்கள் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் தமது வளராத குஞ்சுகளுக்கு மாலைநேர உணவினை ஊட்டுகின்றன. நாள்தோறும் நடக்கின்ற இந் நிகழ்ச்சியைக் காண்கின்ற காதலன், தனது மனைவியைக் காண்பதற்கு நாளும் நினைக்கிறான். ஆனால் தூரம் அதிகம் என்பதால் அவனது மனம் தயங்குகிறது.

மலையடிவாரத்தில் இருக்கும் நீர்ப்பரப்பிலிருந்து உயர உயரப் பறந்து இமயமலையின் உச்சிவரை நாள்தோறும் செல்ல வேண்டுமென்றால் உடல்வலிமை மட்டுமின்றி மனவலிமையும் வேண்டும் இல்லையா?. அன்னப் பறவைக்கு இருக்கின்ற இந்த மனவலிமை தலைவனுக்கு இல்லை. ஆசை இருந்தாலும் மனது ஒத்துழைக்க மறுக்கிறது. எனவே தனது மனதுடன் பேசிக் கெஞ்சுகிறான். ' இரவெல்லாம் பயணித்து அதிகாலையில் இல்லம் சேரும் என்னைக் கண்டதும் எனது மனைவியின் முகம் அதிகாலையில் கீழ்த்திசையில் ஒளிரும் வெள்ளியைப் போல மகிழ்ச்சியால் ஒளிருமே. அதைக் காண்பதற்காக ஒரே ஒருநாள் எனக்காக நீ என்னுடன் ஒத்துழைத்து வருவாயா எனது நெஞ்சமே?. ' 

இப்பாடலில் இமயமலை பற்றிய செய்திகள் சில கூறப்பட்டுள்ளன. மற்றவர்கள் சென்று அடைவதற்கு மிகவும் கடினமான இமயமலையின் உச்சியில் அழகிய தேவதை போன்ற பெண்கள் வாழ்வதாகக் கூறுகிறார். இப்பெண்கள் பெரிய அன்னப் பறவைகளுடனும் அவற்றின் குஞ்சுகளுடனும் விளையாடிப் பொழுதினைக் கழிப்பர் என்றும் கூறுகிறார். இமயமலையின் உச்சியில் இருந்து மலையடிவாரத்தில் இருக்கும் பெரிய நீர்நிலைகளுக்கு நாள்தோறும் காலையில் அன்னப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்துவந்து தாமும் மீன் பிடித்துண்டு தமது குஞ்சுகளுக்கும் தேவையான மீனுணவினைக் கொண்டு செல்லும் என்கிறார். இந்த அன்னப் பறவைகளைப் பற்றிக் கூறுமிடத்து, ' இலங்கு மென் தூவி செங்கால் அன்னம் ' என்கிறார். இதற்கு ' ஒளிவீசும் மென்மையான இறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய அன்னம்' என்பது பொருளாகும்.  ' தெண்கடல் மேய்ந்த விலங்கு மென் தூவி ' என்பதனைப் பதம் பிரித்து எழுதும்போது ' தெண்கடல் மேய்ந்த இலங்கு மென் தூவி ' என்று உடம்படுமெய்யாகிய 'வ'கரம் நீக்கி எழுதவேண்டும். ' விலங்கு மென் தூவி ' என்று எழுதினால் பொருள் சரியாகப் பொருந்தாது. இமயமலை பற்றிய ஏராளமான செய்திகளைத் தலைவன் கூறுவதிலிருந்து தமிழர்கள் இமயமலையில் வாழ்ந்து வந்தனர் என்னும் கூற்று உறுதியாகிறது. 

சங்க இலக்கியமும் இமயமலையும்: சான்று: 9

.... புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை
நீர் முதல் கரந்த நிதியம்கொல்லோ
எவன்கொல் வாழி தோழி ..................
வெம் முனை அரும் சுரம் இறந்தோர்
நம்மினும் வலிதா தூக்கிய பொருளே - அகம். 265

வரிவிளக்கம்:

புகையின் பொங்கி = பொங்கி எழுகின்ற புகையினைப் போன்ற
பனி ஊர் வியல் விசும்பு உகந்து = மேகங்கள் ஊர்கின்றதும் அகன்ற வானில் உயர்ந்து விளங்கி
அழல் கொடி கடுப்ப தோன்றும் = பெரிய தீப்பிழம்பு போலத் தோன்றுவதுமான
இமய செம் வரை மானும்கொல்லோ = இமயமலையின் பொன்நிறச் சிகரத்தின் அளவினதோ?
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் = பல வெற்றிப்போர்களால் புகழ்பெற்ற நந்தர்கள்
சீர் மிகு பாடலி குழீஇ = சிறப்புமிக்க பாடலி நகரத்தில் ஒன்றுகூடி
கங்கை நீர்முதல் கரந்த நிதியம்கொல்லோ = கங்கை நீருக்குள் மறைத்துவைத்த புதையல் அளவினதோ?
எவன்கொல் வாழி தோழி = எதுவோ தோழி நீ வாழ்க!
வெம் முனை அரும் சுரம் இறந்தோர் = வெப்பம் மிக்க கடத்தற்கரிய பாலைவழியாகச் சென்றவர்
நம்மினும் வலிதா தூக்கிய பொருளே = நம்மைக் காட்டிலும் பெரியதென்று கருதிய பொருட்செல்வமானது

பொருள் விளக்கம்:

தோழியே நீ வாழ்க ! நம்மைப் பிரிந்து வெப்பம் மிகுந்த கடத்தற்கரிய பாலைவழியாகச் சென்றவர் நம்மைக் காட்டிலும் பெரியதென்று அடையக் கருதிய பொருட்செல்வமானது, அகன்ற வானில் உயர்ந்து விளங்கி மேகங்கள் ஊர்ந்து செல்லக் காண்பதற்குப் பொங்கி எழும் புகைசூழ எரிகின்ற பெரியதோர் தீப்பிழம்பினைப் போல செந்நிறத்தில் ஒளிர்கின்ற இமயமலையின் சிகரத்தின் அளவு இருக்குமா? இல்லை, பல போர்வெற்றிகளால் புகழ்பெற்ற நந்தர்கள் சிறப்புடைய பாடலிநகரத்தில் ஒன்றுகூடிக் கங்கை ஆற்றுநீருக்குள் புதைத்துவைத்த புதையல் அளவு இருக்குமா?. எதுவாக இருக்கும்?.

மேல்விளக்கம்:

எந்தவொரு இயற்கைப் பொருளைப் பார்க்குமிடத்தும் பார்ப்பவரின் பார்வையினைப் பொறுத்தே அதன் அழகு அமைகிறது. பாருங்கள், புலவர் இப் பாடலில் இமயமலையினை எப்படி வருணிக்கிறார் என்று !. மிக மிக உயரமாக வானத்தில் கம்பீரமாகத் தெரிகிறது இமயமலை. அதன் சிகரமோ செம்பொன் நிறத்தில் தகதக என்று ஒளிர்கின்றது. அந்தச் சிகரத்தின் கீழ் மேகங்கள் மிகமெதுவாக மலையைச் சுற்றி ஊர்ந்து செல்கின்றன. இந்தக் கண்கொள்ளாக் காட்சியினைக் காணும் புலவருக்கு வேறொரு நினைப்பு வருகிறது. செம்பொன் நிறத்தில் ஒளிரும் இமயமலைச் சிகரமானது வானத்தில் கொழுந்துவிட்டு எரிகின்ற பெரிய தீப்பிழம்பினைப் போலத் தெரிகிறது அவருக்கு. அம் மலையைச் சுற்றிச் செல்கின்ற மேகங்களின் திரண்ட கூட்டமோ தீயைச் சுற்றிலும் பொங்கி எழுகின்ற புகைமூட்டம் போலத் தெரிகிறது. என்னவொரு கற்பனை பாருங்கள். !!! அருகில் இருக்கும் படத்தைப் பார்த்தால் புலவரின் கற்பனை சரியென்றே தோன்றுகிறது இல்லையா?.

அடுத்து, நந்தர்களைப் பற்றிய புதிய செய்திகளைச் சொல்கிறார். மகதநாட்டினைச் சேர்ந்த இவர்கள் இன்றைய பாட்னா என்று அழைக்கப்படுவதான பாடலிபுத்திரத்தினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். ஏறத்தாழ 25 ஆண்டுகளே நிலைபெற்று இருந்ததாகக் ( கி.மு. 345 முதல் கி.மு. 321 வரை ) கூறப்படும் இவர்களது ஆட்சி பெருவளம் கொண்டதாக இருந்திருக்கிறது. இவர்கள் தமது பெரும் படைபலத்தினால் பல பெரிய போர்களில் வெற்றிபெற்றுப் பெரும் பொருட்செல்வத்தினைத் திரட்டி இருக்கின்றனர். இவர்களது பெரும் பொருட்செல்வத்தைக் கேள்விப்பட்டுப் போர்தொடுத்து வந்த பகைமன்னர்களிடம் தோற்றுப்போகும் நிலையில் இவர்கள் தமது பெருஞ்செல்வத்தினைப் பகைவர்கள் அடையமுடியாத வண்ணம் கங்கை ஆற்றுநீருக்குள் புதைத்து மறைத்து விட்டதாகக் கூறுகிறார் புலவர். அந்தப் புதையலை மறைத்தது எங்கே என்று தெளிவாகக் கூறாத நிலையில் நமக்கெல்லாம் ஏமாற்றமே மிஞ்சுகிறது இல்லையா?. :))

பொருளீட்ட வேண்டிக் காதலியைப் பிரிந்து கொடிய பாலைநில வழியாகச் சென்ற காதலன் வெகுநாட்களாகியும் இல்லம் திரும்பாததால் மிகவும் கவலைப்பட்ட காதலி தனது தோழியிடம் புலம்புகிறாள். அந்தப் புலம்பல் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை உரையாடல் போலப் பார்க்கலாம்.

- காதலர் பிரிந்துசென்று வெகுநாட்களாகி விட்டதே தோழி!. இன்னும் ஏன் அவர் வரவில்லையோ?
- கவலைப்படாதே தோழி !. பெரும் பொருட்செல்வத்தைத் திரட்டிக் கொண்டிருப்பாராக்கும் '
- ம்க்கும்!. பெரிய்ய்ய பொருட்செல்வம் !.
 அது எவ்வளவு பெரியதோ என் தோழி?
 இந்த இமயமலையின் சிகரத்தில் நிறைந்து இருப்பதாகக் கூறப்படும்
 பெரும் பொன்னின் அளவு பெரியதோ?. இல்லை
 நந்தர்கள் கங்கை ஆற்றில் ஒளித்துவைத்ததாகக் கூறப்படும் செல்வத்தின் அளவு பெரியதோ?.
 இந்த இரண்டு பெருஞ்செல்வங்களைக் காட்டிலும் எனது அன்பு பெரிதில்லையா?. கூறுவாய் !

இப்படி இந்தப் பாடல் முழுவதிலும் இமயமலை பற்றியும் கங்கை ஆறு பற்றியும் செய்திகள் வருவதால் இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு ஆதாரமாக இப்பாடலையும் கொள்ளலாம்.

.... தொடரும்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.