சனி, 4 பிப்ரவரி, 2017

இமயமலையும் தமிழர்களும் - பகுதி 6 ( முத்துக்கு முத்தாக...)

முன்னுரை:
இமயமலையில் தமிழர்கள் வாழ்ந்தனர் என்னும் கூற்றுக்கு அரணாக இதுவரையிலும் பல இலக்கிய ஆதாரங்களைப் பல கட்டுரைகளில் கண்டோம். இதுவரையிலும் கண்ட ஆதாரப் பாடல்கள் வரிவிளக்கம், பொருள்விளக்கம், மேல்விளக்கம் என்று மிக விரிவாக அலசப்பட்டன. இக் கட்டுரையில் இமயமலை பற்றிக் குறிப்பிடுகின்ற முத்தான பத்து ஆதாரப் பாடல்களின் ஒருசில வரிகளை மட்டும் பொருள் விளக்கத்துடன் காணலாம்.

முத்தான பத்து ஆதாரப் பாடல்கள்:

முத்து: ஒன்று

..... கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ..... - பதி.43

பொருள்: கடவுள் நிலைபெற்ற உயர்ந்த உச்சியினையுடைய இமயமலையானது வடதிசை எல்லையாகவும் தெற்கில் குமரி எல்லையாகவும் இருக்கின்ற பரந்த நிலப்பரப்பில் முரசினை உடைய அரசர்கள் பலரும் பெரும் போரில் ஒழிய ஆரவாரத்துடன் அவர்களது பல நாடுகளின் அழகினைச் சிதைத்த வெற்றி தரும் போர்ப்படையினையுடைய பொன் போலும் மாலையணிந்த குட்டுவனே....

முத்து: இரண்டு

....மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே - புறம். 166

பொருள்: மேகங்களும் அண்ணாந்து பார்க்கின்ற உயர்ந்த உச்சியினை உடையதும் மூங்கில்கள் வளர்வதுமான இமயமலையினைப் போல நிலவுலகில் நீ நிலைத்து வாழ்வாயாக !

முத்து: மூன்று

.....விசும்பு ஆயும் மட நடை மா இனம் அந்தி அமையத்து
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரை கண்டேன்.... - கலி 92

பொருள்: மேகத்தினை அலகினால் குத்தும் அளவுக்கு விண்ணில் உயரப் பறக்கும் இயல்புடையதும் தரையில் நடக்கும்போது மெல்லிய நடையினையுடையதுமான அன்னப் பறவையானது அந்திமாலை நேரத்தில் தனது இருப்பிடத்தை விட்டு நீங்காத இமயமலையின் ஒரு பகுதியில் இமைமூடித் தியானத்தில் இருக்கின்றவர்களைப் போன்ற பெரியோர்களைக் கண்டேன்.....

பி.கு: மா = கவரிமா = அன்னப்பறவை. கவரிமா கட்டுரை காண்க.
     இறை = கண்ணிமை. இறைகொள்ளுதல் = இமைமூடியிருத்தல்.
     இறை என்றால் என்ன? கட்டுரை காண்க.

முத்து: நான்கு

....இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றி
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய பலவே - புறம். 34

பொருள்: இமயமலையில் திரண்டு இடியோசை எழுப்பிய கார்மேகங்கள் பொழிந்த நுண்ணிய பல மழைத்துளிகளைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழ்க

முத்து: ஐந்து

....பாடு ஆன்று எழிலி தோயும் இமிழ் இசை அருவி பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன ஓடை.... - புறம். 369

பொருள்: மழைப்பொழிவு ஒழிந்த மேகங்கள் தோய்கின்றதும் அருவிகள் ஓசையுடன் வீழ்கின்றதும் பொன்னினை உடையதுமான இமயமலையின் உயர்ந்த சிகரம்போல் யானைத் தலையின் உச்சியில் ஒளிர்கின்ற ஓடையணி...

முத்து: ஆறு

.... கண் ஆர் கண்ணி கலிமான் வளவ
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு
இமையம் சூட்டிய ஏம வில் பொறி       
மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடும் காலே - புறம். 39

பொருள்: .....ஆத்தி மாலை அணிந்து குதிரையில் வீற்றிருக்கும் சோழனே ! இன்ன அளவினது என்று அளந்து அறியப்படாத பொன்னை உடைய உயர்ந்த சிகரத்தினை உடைய இமயமலையில் பொன்னாலான வில்பொறியினை நட்டவனும் சிறந்த வேலைப்பாடுடைய நீண்ட தேரினை உடையவனுமான வானவனை வாடாத வஞ்சிப் போரில் தோற்கடித்துக் கொன்ற உனது பெருமைமிக்க வலிய முயற்சியினைப் பாடும்போது என்னவென்று சொல்வேன் யான்?.

முத்து: ஏழு
.....இமையவர் உறையும் சிமையச் செவ்வரை வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை..... - பெரும். 429

பொருள்: இமைமூடித் தியானிக்கும் பெரியோர்கள் வாழ்கின்ற சிகரத்தினை உடையதும் வெண்ணிறப் பஞ்சுப்பொதி மேகங்களைக் கிழித்துக்கொண்டு ஒளிர்ந்தவாறு விளங்கும் உச்சியினை உடையதுமான இமயமலையில் தோன்றி பொன்துகள்களை வாரிக்கொண்டுக் கீழிறங்கி வருகின்ற அழிவில்லாத கங்கை ஆறானது......

முத்து: எட்டு
....வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்.... - சிறு. 48

பொருள்: இமயமலையின் வடக்குப் பகுதியில் வளைந்த வில்சின்னத்தினைப் பொறித்துவைத்தவனும் தூண்போல் திரண்ட தோட்களை உடையவனும் தேரினை உடையவனுமான குட்டுவன் ......

முத்து: ஒன்பது

....மாரி புறந்தர நந்தி ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை பல் பூ கானத்து அல்கி இன்று இவண் சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ.... - அகம். 398

பொருள்: மழையின் கொடையினால் செழிப்புடையதும் ஆரியர்கள் வாழ்கின்ற பொன்னுடைய உயர்ந்த இமயமலையினைப் போல பல்வகைப் பூக்களுடன் விளங்குவதுமான எனது தந்தையின் சோலையில் இன்று தங்கியிருந்து சென்றால் என்ன கெட்டுப்போகும்?

முத்து: பத்து

....குழுமு நிலை போரின் முழு முதல் தொலைச்சி பகடு ஊர்பு இழிந்த பின்றை துகள் தப வையும் துரும்பும் நீக்கி பைது அற குட காற்று எறிந்த குப்பை வட பால் செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்... - பெரும்பாண்.

பொருள்: குவித்துவைத்த போரிலிருந்து நெற்கதிர்களை முழுவதும் நீக்கிப் பரப்பி எருதுகளை அவற்றின் மேலேறி இறங்கச்செய்த பின்னர் மேற்கில் இருந்து வீசிய உலர்ந்த காற்றிலே தூசியும் துரும்பும் வைக்கோலும் பிரியுமாறு தூற்றிக் குவித்த நெல்மணிகளின் குவியலானது வடதிசையில் இருக்கின்ற செம்பொன் மலையாகிய இமயமலையினைப் போல சிறப்புடன் தோன்றுகின்ற....

........... அடுத்த பகுதியில் நிறைவடையும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.