சனி, 15 ஏப்ரல், 2017

அளகம் என்றால் என்ன?

முன்னுரை:

சங்ககாலம் உட்பட பல காலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்து இன்றைய காலத்தில் பேச்சுவழக்கில் இருந்து ஒழிந்துபோன பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றுதான் ' அளகம் ' என்ற சொல்லாகும். இச்சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல பொருட்களைக் கூறி இருந்தாலும் அவற்றில் ஒன்றுகூடப் பொருந்தாத நிலை பல இலக்கியங்களில் காணப்படுகின்றது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்றும் அது எப்படிப் பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் காணலாம்.

அளகம் - சொல்பயன்பாடும் பொருட்களும்:

அளகம் என்ற சொல்லானது தமிழ் இலக்கியங்களில் இதுவரை கண்டறியப்பட்ட நிலையில் கீழ்க்காணும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சங்க இலக்கியம் - 1
பதினெண் கீழ்க்கணக்கு - 1
சிலப்பதிகாரம்- 2
சிந்தாமணி - 1
கம்பராமாயணம் - 16
நளவெண்பா - 1
பெருங்கதை - 2

ஆக மொத்தம் 24 இடங்களில் பயிலப்பட்டு வந்துள்ள அளகம் என்ற சொல்லுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைக் கூறியுள்ளன.

 அளகம்¹ aḷakam n. < alaka. Curls of hair on the forehead; நுதலைச்சார்ந்த முன்னுச்சிமயிர். halā. Rain-water; மழைநீர்.  Porcupine's quill; பன்றி முள். alaka. Woman's hair; பெண்மயிர். Curl; மயிர்க் குழற்சி.

அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:

அளகம் என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கூறியுள்ள பொருட்களான பெண்களின் முன்னுச்சி மயிர், தலைமயிர், மழைநீர், பன்றிமுள் போன்ற எவையும் பொருந்தாத பல இடங்கள் உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.

.... அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே - நற். 377

இப்பாடலில் வரும் 'அளகம்' என்பதற்கு மயிர் என்று பொருள்கொண்டு, 'அளகம் சேர்ந்த திருநுதல்' என்பதற்கு 'மயிர் சேர்ந்த நெற்றி' என்று விளக்கம் கூறுகிறார்கள். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், எந்த ஒரு பெண்ணுக்கும் தலையில் தான் மயிர் இருக்குமே ஒழிய நெற்றியில் மயிர் இருக்காது; மிகவும் அரிதாக நெற்றியில் இருந்தாலும் அது அப்பெண்ணுக்கு அழகு சேர்க்காது; அசிங்கமாகவே கருதப்படும். மேலும் அதை எந்தவொரு பெண்ணும் விரும்பமாட்டார். அசிங்கமான ஒன்றைப் பற்றிப் புலவர்களும் புகழ்ந்து பாடமாட்டார்கள். எனவே இப் பாடலில் வரும் அளகம் என்பது மயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.

..... மாதர் வாள் முகத்து புரி குழல் அளகத்து
புகல் ஏக்கற்று திரிதரு சுரும்பொடு - சிலப். புகார். 2

இப்பாடலில் வரும் அளகம் என்பதற்கு மயிர் என்ற பொருளைக் கொண்டால், பெண்களின் ஒளிமிக்க முகத்திலிருக்கும் சுருண்ட மயிருக்குள் புகுவதற்காக ஏக்கமுற்றுச் சுற்றிவருகின்ற வண்டினங்கள் ' என்ற விளக்கம் கிடைக்கிறது. இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மஞ்சள் முதலானவற்றைப் பூசி முகத்தில் மயிர் வளராமல் பார்த்துக் கொள்வது பெண்களின் வழக்கம். முகத்தில் மயிர் வளர்வதனை எந்த ஒரு பெண்ணும் விரும்பாத நிலையில், அந்த மயிருக்குள் புகுவதற்காக வண்டினங்கள் ஏங்கி அவளையே சுற்றி வருகின்றன என்று விளக்கம் கூறுவது சிறிதும் ஏற்புடைய கருத்தல்ல என்பது எளிதில் விளங்கும். ஆக, இப்பாடலிலும் அளகம் என்பதற்கு மயிர் என்ற பொருள் பொருந்தாது என்பது தெளிவாகிறது.

கோதையும் குழலும் தாது சேர் அளகமும் ... - சிலப். புகார். 8

இப்பாடலில் வரும் அளகம் என்பதற்கு மயிர் என்ற பொருளைக் கொண்டால், தாது சேர் அளகம் என்பதற்கு பூந்தாதுக்களைக் கொண்ட மயிர் என்ற விளக்கம் வரும். இவ் விளக்கமும் பொருந்தாது. காரணம், பெண்கள் தமது தலைமயிரில் பூந்தாதுக்களைத் தூவிக்கொள்ளவோ பூசிக்கொள்ளவோ மாட்டார்கள். இதிலிருந்து இப்பாடலில் வரும் அளகம் என்பதும் மயிரையோ தலைமயிரையோ குறித்து வரவில்லை என்பது உறுதியாகிறது. இதேபோல
கீழ்க்காணும்பாடலிலும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      
 ... கொய் பூந்தாது கொண்டு அளகத்து அப்பி - சிந்தா. 2948

கொய்த பூக்களின் தாதுக்களைக் கொண்டு அளகத்தில் அப்பியிருப்பதனை மேற்காணும் பாடல்வரி கூறுகிறது. பெண்கள் தமது தலைமயிரில் பூந்தாதுக்களைக் கொண்டு அப்புவது வழக்கம் இல்லை என்பதால், இப்பாடலில் வரும் அளகம் என்பதும் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது உறுதியாகிறது. இதுபோல இன்னும் பல இடங்கள் இருக்கின்ற நிலையில், அவை பற்றிக் கீழ்வரும் பகுதிகளில் விளக்கமாகக் காணலாம்.

அளகம் - புதிய பொருள் என்ன?

அளகம் என்ற சொல் குறிக்கின்ற புதிய பொருள்:

கண்ணிமை.

நிறுவுதல்:

அளகம் என்ற சொல்லுக்கு கண்ணிமை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்துகின்றது என்று கீழே பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காணலாம். அதற்கு முன்னால், பெண்களின் அளகத்தினை எந்தெந்தப் பொருட்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்கின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொண்டால், அதன் மூலமாக அளகம் என்பது கண்ணிமையினைத் தான் குறிக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

அளகத்திற்கான உவமைகள்:

பெண்களின் அளகத்தினைக் கீழ்க்காணும் பொருட்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்கின்றனர்.

கார்மேகம்
கருவண்டு
நிலவின் கறை
கரும்புவில்

அளகமும் கார்மேகமும்:

பெண்களின் கூந்தலாகிய கண்ணிமையினைக் கார்மேகத்துடன் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கமே. இதைப்பற்றி விரிவாக, பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற ஆய்வுக் கட்டுரையில் ஏற்கெனவே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அதைப்போலவே, இங்கு பெண்களின் அளகமாகிய கண்ணிமையினையும் கார்மேகத்துடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

....அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே - நற். 377

( பொருள்: விரிந்த வானில் கரிய மேகத்தினால் சிறிதே மறைக்கப்பட்ட ஒளிவீசும் முழுநிலவினைப் போல ஒளிவீசும் விழிகளை மறைத்தக் கருமை பூசிய இமைகள் கழன்று விழுவதுபோல மெலியச் செய்யும் நோய் ஆகிவிட்டதே...)

இப்பாடலில் வரும் நுதல் என்பது கண்விழியினையும் அரவு என்பது மேகத்தையும் குறிக்கும். இதைப்பற்றி நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். தலைவி தனது இமைகளின்மேல் கரிய மைபூசி இருக்கிறாள். வெண்ணிற ஒளிவீசும் கண்விழிகள் கீழிருக்க அதனை சற்றே மேலிருந்து மறைப்பதைப் போல கருமை நிறத்தில் அளகம் அதாவது கண்ணிமைகள் இருக்க, இது பார்ப்பதற்கு முழுநிலவின் ஒரு பகுதியினை பெரிய கார்மேகமொன்று மறைத்திருப்பதைப் போலத் தோன்றுகிறது புலவருக்கு. இப்பாடலில், முழுநிலவினை விழிகளுக்கும் முழுநிலவினை மறைக்கின்ற கார்மேகத்தினை கண்ணிமைகளுக்கும் ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார். மிகப் பொருத்தமான உவமைதான் இல்லையா?.

இப் பாடலில் கூறப்பட்டிருக்கும் உவமையினைப் போலவே கம்பரும் ஒரு பாடலில் கூறுவதைப் பாருங்கள். 

விதியது வகையால் வான மீன்இனம் பிறையை வந்து
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞலத் தூக்கி
மதியினைத் தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் - கம்ப. பால.22

( பொருள்: வானில் ஒளிரும் விண்மீன்கள் எல்லாம் நெருங்கிச் சென்று நிலவினைப் பற்றித் தீண்டுவதைப் போல  இளம்பெண்கள் கொழுந்து ஒளியாம் சீதையை நெருங்கித் தூக்கி, நிலவினைப் புறந்தந்த மேகமொன்று மீண்டும் அதனை ஒருபுறமாக வளைத்து மறைப்பதைப் போல சீதையின் இருள்நிற இமைகள் தாழுமாறு அதன் மேலாக அணிகலன்களைப் பூட்டினர். )

இப்பாடலில் வரும் கொழுந்து ஒளி என்பது சீதையைக் குறிப்பதாகும். சீதையை நிலவுக்கும் இளம்பெண்டிரை விண்மீன்களுக்கும் உவமையாக்கினார் கம்பர். அளகபந்தி என்பது இமையின் மேலுள்ள வரிவரியான மைப்பூச்சுக்கள். ஐம்பால் கூந்தல் என்றும் இதனைக் குறிப்பிடுவர். நிலவினை முழுவதுமாய் மறைத்திருந்த கார்மேகம் ஒன்று அதனை முழுதுமாய் வெளிவிட்டுப் பின் மீண்டும் அதனை ஒருபுறமாக வளைத்து மறைக்கிறது. இதைப்போல சீதையின் கருமையுண்ட கண்ணிமைகள் சற்றே தாழ்ந்து அவளது ஒளிவீசும் விழிகளை மறைக்குமாறு அவளது இமைகளுக்கு மேலாக நெற்றியில் அணிகலன்களை அணிவித்தனர். இங்கே பூட்டுதல் என்பது அணிகலன்களை அணிவித்தல் ஆகும். நாம் முன்னால் கண்ட பாடலைப் போலவே இப்பாடலிலும் சீதையின் விழிகளை நிலவுடனும் அவளது கருமைநிறக் கண்ணிமைகளை கார்மேகத்துடனும் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் கம்பர். கம்பராமாயணத்தில் இருந்து இன்னொரு அழகிய பாடல் கீழே:

மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல்
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் - கம்ப. ஆரண். 70

( பொருள்: மேகம் போல கருமை பூசிய இமையினையும் பஞ்சு போன்ற மெல்லிய அடியினையும் செம்பவளம் போன்ற மெல்லிய விரல்களையும் அமுதம் போன்ற இனிய மொழியினையும் கொண்டவளாகிய சீதையின் முகம் களங்கமில்லாத தாமரை மலர் அளவினது என்றால் அவளது கண்களோ கடலினும் பெரியது ...)

இப்பாடலில் வரும் அளகம், ஓதி, கூந்தல் ஆகிய மூன்றுமே கண்ணிமைகளைக் குறித்துவந்த சொற்களாம். இவற்றுள் ஓதி என்பதைப் பற்றி கதுப்பு-ஓதி-நுசுப்பு என்ற கட்டுரையிலும் கூந்தல் என்பதைப் பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா? என்ற கட்டுரையிலும் விரிவாகக் காணலாம்.

இப்பாடலில் சீதையின் கண்களைப் பற்றிக் கூறும்போது கடலைக் காட்டிலும் பெரியது என்று கூறுகிறார் கம்பர். ஏன் அவ்வாறு கூறுகிறார்?. கடலைப் போல பெரியது என்று கூறியிருந்தால் அதனை உவமை என்று கூறிவிடலாம். ஆனால் அவ்வாறு கூறாமல் கடலைக் காட்டிலும் பெரியது என்று ஏன் கூறவேண்டும்?. உயர்வு நவிற்சி அணி என்று ஒரேவரியில் விடைகூறி விடலாம் தான். ஆனால், கடலைக் காட்டிலும் பெரியதாய் ஆகாயம் இருக்க, கம்பர் ஏன் கடலைத் தேர்ந்தெடுத்தார் என்று அறியவேண்டியது அவசியம் அல்லவா?. சரி, கடலைக் காட்டிலும் பெரியதாகவும் ஆகாயத்தைக் காட்டிலும் சிறியதாகவும் இருப்பது எது?. அது எதுவாக இருந்தாலும், கடலைக் காட்டிலும் பெரியது என்பதால் அது கடலுக்கு வெளியில் இருக்கவேண்டும் அதேசமயம் அது ஆகாயத்தில் இருக்க வேண்டும். அது எது?. அது பூமி அல்லது நிலவாக இருக்கக் கூடும். இங்கே பூமியைக் காட்டிலும் நிலவுக்கே அதிகப் பொருத்தம் இருக்கிறது. காரணம், பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் விழிகளை ஒளிவீசும் பால்நிலவுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவது வழக்கம் தான் என்று பல பாடல்களில் கண்டிருக்கிறோம். எனவே, ' கடலைக் காட்டிலும் பெரிதான கண்கள் ' என்று கம்பர் கூறுவதற்கு ' கடலைக் காட்டிலும் பெரிதான நிலவு போன்ற கண்கள் ' என்று விரித்துப் பொருள்கொள்வது தான் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

அளகமும் வண்டும்:

பெண்களின் கருமையுண்ட கண்ணிமையினைக் கருநிற வண்டுகளுடன் ஒப்பிட்டுக் கூறும் கம்பனின் பாடல் இதோ:


.....அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறை நறும் தாமரை முகமும் நித்தில முறுவலும் .... - கம்ப. கிட்.9.

( பொருள்: நத்தையின் மேலொடு போல் குவிந்து தோன்றும் இமைகளும் அந்த இமையாகிய வண்டுகள் ஊதுகின்ற நிறைந்த தாமரைமலர் போன்ற முகமும் முத்துப் போன்ற கண்களும் ...)

இப்பாடலில் வரும் அறல் என்பது நத்தையினையும் கூந்தல் என்பது இமையினையும் முறுவல் என்பது கண்விழிகளையும் குறிக்கும். அறல் மற்றும் கூந்தல் பற்றி விரிவாக அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற கட்டுரையிலும் முறுவல் பற்றி மேலும் விளக்கமாக முறுவல் என்றால் என்ன?. என்ற கட்டுரையிலும் ஆதாரங்களுடன் காணலாம். இப்பாடலில் சீதையின் முகத்தினை மலர்ந்த தாமரை மலராகவும் அம் முகத்தில் இருப்பதான அவளது மைபூசிய கண்ணிமைகளை தாமரைமலரில் ஊதுகின்ற கருவண்டுகளாகவும் உருவகப்படுத்திப் பாடியிருக்கிறார் கம்பர்.

அளகமும் நிலவின் கறையும்:

விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும்
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள் - கம்ப. அயோ.3

(பொருள்: தனது புகழாகிய கொடியினைத் தானே வேரறுப்பதுபோல நெற்றியில் அணிந்திருந்த மேகலையை நீக்கினாள்; கிண்கிணியுடன் கைவளைகளும் துறந்தாள்: நிலாவில் தோன்றும் கறையினைத் துடைப்பவளைப் போல ஒளிரும் கண்ணுக்கு மேல் இமையில் எழுதப்பட்டிருந்த அருமையான மையணியினையும் அழித்தாள்...)

இப்பாடலில் வரும் நுதல் என்பது கண்ணையும் திலகம் என்பது கண்ணிமையின் மேல் பூசப்படும் மையணியினையும் குறிக்கும். இதைப்பற்றி விரிவாக 'நுதலும் நுதலப்படாத கருத்துக்களும்' என்று கட்டுரையில் காணலாம். இப்பாடலில் நுதல் ஆகிய கண் நிலவுக்கும் திலகம் ஆகிய மைப்பூச்சு நிலவின் கறைக்கும் உவமை. ஒளிவீசும் நிலவின் மேல் கறை இருப்பதைப் போல ஒளிவீசும் கண்களின்மேல் இருக்கும் இமையில் கருமைப் பூச்சு இருந்த நிலையினை உவமையுடன் விளக்கி இருக்கிறார் கம்பர்.

இப்பாடலில் வரும் நுதல் என்பதற்கு நெற்றி என்றும் திலகம் என்பதற்கு நெற்றிப்பொட்டு என்றும் பொருள்கூறுவார் உளர். இப்பொருட்கள் இங்கே பொருந்துமா எனில் பொருந்தாது. ஏனெனில், நெற்றியில் வைக்கப்படும் பொட்டானது நெற்றிக்குப் பெருமையும் அழகும் சேர்ப்பதாகும். ஆனால், நிலவில் காணப்படும் கறையானது நிலவுக்குப் பெருமையாகவோ அழகுசேர்ப்பதாகவோ கருதப்படுவதில்லை; மேலும் அது பொட்டுபோல ஓரிடத்தில் இல்லாமல் பரவலாக இருப்பதாகும். பொருத்தமற்ற உவமைகளைக் கம்பர் அமைக்கமாட்டார் என்பதால், இப்பாடலில் வரும் நுதல் என்பது நெற்றியையோ திலகம் என்பது நெற்றிப்பொட்டினையோ குறிக்காது என்பதும் உறுதியாகிறது.

பெண்கள் தமது அளகம் ஆகிய கண்ணிமையில் மைபூசுவதைப் பற்றிய இன்னொரு பாடல் கீழே:

திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட               
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு - சிலப். புகார். 8

(பொருள்: பெண்களின் அழகிய முகத்தில் மயக்கும் பார்வைகொண்ட கண்களின் மேலிருந்த மைப்பூச்சுடைய இமையானது சிறிய கரிய வில்போலவும் குவளைமலர் போலவும் குமிழம்பழம் போலவும் கோவைக்கனி போலவும்  தோன்றுகின்ற.....)

இதில் பெண்கள் தமது கண்ணிமைகளை அணிசெய்திருந்த விதங்கள் கூறப்பட்டுள்ளன. கருப்புநிற வில் போல கருமைநிறத்திலும் குவளைமலர் போல நீலநிறத்திலும் குமிழம்பழம் போல மஞ்சள் நிறத்திலும் கோவைக்கனி போலச் செம்மைநிறத்திலும் மைபூசி இருந்த செய்தி கூறப்பட்டுள்ளது. 

அளகமும் கரும்புவில்லும்:

செந்தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ்
இந்துமுறி என்று இயம்புவார் வந்து என்றும்
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி
ஏ வாளி தீட்டும் இடம் - நள. 42

(பொருள்: செந்தேன் போலும் இனிய மொழியினைப் பேசுகின்ற இவளின் செறிந்த வரிவரியான மைபூச்சுக்களை உடைய இமைகளின் கீழ் இருப்பவைக் கண்கள் அல்ல பிறைச்சந்திரன் என்று கூறுவார். ஆனால் இதுதான் மலரம்புகளை உடைய மன்மதன் நாளும் வந்து தனது கரும்புவில்லைச் சார்த்திவைத்துத் தான் எய்கின்ற அம்புகளைக் கூர்செய்யும் இடமாகும்..)

இப்பாடலில் வரிவரியாய் கருப்புமையினாலான பூச்சுக்களை உடைய கண்ணிமைகள் மன்மதனின் கரும்பு வில்லுக்கு உவமை. அந்த இமைகளின் கீழ் இருப்பதான கண்கள் பிறைச்சந்திரனுக்கு உவமை. அந்தக் கண்களில் இருந்து வெளிப்படுகின்ற ஒளிக்கதிர்களோ மன்மதனின் கூரிய அம்புகளுக்கு உவமை.

அளகமும் பூந்தாதுக்களும்:

பெண்கள் தமது கூந்தல் எனப்படுகின்ற கண்ணிமைகளின் மேல் சுணங்கு எனப்படும் பூந்தாதுக்களைப் பூசி அழகுசெய்வர் என்று ' பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போலவே பெண்களின் அளகமாகிய இமைகளின் மேல் பூந்தாதுக்களைப் பூசுவதைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்களை இங்கே காணலாம்.

சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி
இதணால் கடி ஒடுங்கா ஈர்ம் கடா யானை
உதணால் கடிந்தான் உளன் - திணை.150. - 1

( பொருள்: கொன்றை, நீலம், அடம்பு மற்றும் அசோக மலர்களின் தாதுக்களை ஆய்ந்து புடைத்தபின்னர் அவற்றைத் தமது இமைகளின் மேல் அப்பியிருக்கும் இளம்பெண்களின் பார்வை அம்பிற்கு, காவற்பரணில் இருந்து எய்யப்படும் அம்புகளுக்கு அடங்காத மதம்கொண்ட யானை போன்ற ஆண்மகனும் அடங்காமல் தப்பமுடியாது. )

இப்பாடலில் பெண்கள் தமது கண்ணிமைகளின் மேல் அப்பிக்கொள்ளப் பயன்படுத்துகின்ற சில பூக்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இப்படி பல பூக்களில் இருந்து பெறப்பட்ட தாதுக்களைப் புடைத்து ஒரே சீரான அளவுடையவற்றை ஆய்ந்தெடுத்துப் பயன்படுத்துவர் என்ற செய்தியும் இப்பாடலின் மூலம் தெரியவருகின்றது.

அடுத்து வரும் பாடல் சற்றே வேறுபட்டது. இதில் பெண்களின் கண்ணிமையில் பூந்தாதுக்கள் பூசியிருப்பதை நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறியிருப்பார் இளங்கோ அடிகள். இதோ பாடல் வரிகள் கீழே:

..... சண்பகப் பொதும்பர் தாது தேர்ந்து உண்டு
மாதர் வாள் முகத்து புரி குழல் அளகத்து
புகல் ஏக்கற்று திரிதரு சுரும்பொடு - சிலப். புகார். 2

( பொருள்: சண்பகச் சோலையிலே பூந்தாதுக்களைத் தேர்ந்துண்ட பின்னர், அச் சோலையிலிருந்த பெண்களின் அழகிய முகத்தில் ஒளிரும் குழல்விளக்குப் போன்ற இமைகளுக்குள் புகுவதற்கு விரும்பி ஏக்கமுற்றுச் சுற்றிவருகின்ற வண்டினங்கள்...)

சண்பகச் சோலையில் பூந்தாதுக்களில் இருந்து தேனைத் தேர்ந்தெடுத்துண்ட வண்டினங்கள் திடீரென்று பெண்களின் முகத்தில் இருக்கும் கண்ணிமைகளுக்குள் புகவிரும்பி அவர்களையே சுற்றிச்சுற்றி வருகின்றனவாம். ஏன்?. காரணம், அப்பெண்கள் தமது கண்ணிமைகளில் பூசியிருந்த பூந்தாதுக்களின் வண்ணமும் வாசனையும் தான். மஞ்சள் நிறப் பூந்தாதுக்களைப் பூசியிருத்தலால் குழல்விளக்குப் போல ஒளிர்கின்ற அவர்களது கண்ணிமைகளின் ஒளியினாலும் வாசனையாலும் ஈர்க்கப்பட்ட வண்டினங்கள் அந்தக் கண்ணிமைகளுக்குள் புகவிரும்பி அவர்களையே சுற்றிச்சுற்றி வருவதாகக் கூறுகிறார் புலவர். இமைகளின்மேல் பெண்கள் பூந்தாதுக்களைப் பூசியிருக்கும் செய்தியினை நேரடியாகக் கூறாமல் வண்டுகளின் செயல்பாடு மூலமாக உய்த்துணர வைத்தார்.

கோதையும் துகிலும் ஏந்தி குங்குமம் எழுதி கொய் பூம்
தாது கொண்டு அளகத்து அப்பி தட முலை வருடி சேர்ந்து
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
ஏதிலர் ஆகி கோமான் எண்ணமே எண்ணினீரே - சிந்தா. 2948

(பொருள்: மாலையையும் முகத்திரையையும் தாங்கிய எனது பெரிய கண்ணிமைகளின் மேல் குங்குமத்தால் எழுதியும் கொய்த பூக்களின் தாதுக்களைக் கொண்டு அப்பியும் காதலுடன் எனது கைவிரல்களைப் பிணித்திருந்த நீங்களும் இப்போது அயலவரைப் போல அரசனின் எண்ணத்தையே சிந்திக்கலாயினீர்....)

மேற்காணும் பாடலில் வரும் முலை என்பது இமையினைக் குறிக்கும் என்று கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். அடுத்து, அளகம் குறித்துக் கம்பன் காட்டும் அழகோவியத்தைக் கீழே காணலாம்.

கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் - கம்ப. அயோ. 14

( பொருள்: அன்னத்தின் நடையினைக் கொண்டவளே ! கன்னிப்பெண்கள் அழகுசேர்க்கும் இமைக்கோலங்களைக் கற்று அறிபவரைப் போல வேங்கை மரங்களும் கோங்கு மரங்களும் நீ உனது இமைகளில் அப்பி அழகுசெய்கின்ற தாதுக்களை உடைய பொன்போன்ற புதிய மலர்களை இடமெங்கும் சிந்துவதைக் காண்பாயாக! ...)

வேங்கை மரங்களும் கோங்கு மரங்களும் பொன்னிற மலர்களைப் பூமியின்மேல் சிந்துவது இயற்கைதான். ஆனால் கம்பரின் கண்ணோட்டம் வேறுமாதிரி இருக்கிறது. கன்னிப்பெண்கள் தமது இமைகளின் மேல் பொன்னிறப் பூந்தாதுக்களை அப்பி அழகுசெய்வதுபோல அம்மரங்கள் தமது பொன்னிறத்து மலர்களைப் பூமிப்பெண்ணின் மேல் சிந்தி அழகுசெய்யக் கற்றுக் கொள்கின்றனவாம். என்ன ஒரு கற்பனை !. அதுதான் கவிச்சக்கரவர்த்தி கம்பர் !!. இதோ இன்னுமொரு கவியோவியம் !.

மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான்
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண்
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா - கம்ப. அயோ. 4

( பொருள்: சந்தனப்பொடியும் பூந்தாதுக்களும் கொண்டு அப்பிய இமைகளின் கீழ் பிறைச்சந்திரன் போல் ஒளிவீசும் கண்களை உடைய சீதையுடன் இணைந்து செம்பவளம் போன்ற இதழ்களையுடைய ராமன் நடந்துவரும்போது, கார்மேகம் ஒன்று மின்னலுடன் வருவதைப் போலவும் பூணணிந்த களிற்றுயானை ஒன்று பெண்யானையுடன் வருவதைப் போலவும் தோன்றிற்று..)

அளகபாரம்:

அளகம் என்ற சொல் பயின்றுவரும் சில இடங்களில் அளகபாரம் என்ற சொல்லாட்சியும் உண்டு. இதைப் பற்றி விரிவாக இங்கே காணலாம். பாரம் என்றவுடன் கீழ்க்காணும் திரைப்படப் பாடல் வரிகள் நினைவுக்கு வரும்.

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா?

மிக அருமையான இந்த பாடல்வரிகளில் இருந்து பாரம் எது என்பதற்கான வரையறையைப் பெறலாம். பாரம் எனப்படுவது யாதெனின், வெளியில் இருந்து ஏற்று / ஏற்றிக் கொள்ளப்படுவதும் தேவைப்பட்டால் இறக்கிவைத்துக் கொள்ளத் தக்கதுமானது எதுவோ அதுவே பாரம் எனப்படும். அவ்வகையில், வண்டியில் ஏற்றப்படும் பாரம், குழந்தையைக் கருவில் சுமக்கின்ற பாரம் போன்றவை அடங்கும். அதைப்போல, இமைகளுக்கு மேலாக பெண்களால் விரும்பி ஏற்றி வைக்கப்படும் பாரமே அளகபாரம் ஆகும்.

பெண்கள் தமது இமைகளுக்கு மேலாக பல வண்ணங்களில் பூசியும் பல பொருட்களைக் கொண்டும் அழகு செய்வர் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். இப்படி நேரடியாக இமைகளின் மேல் பூசி எழுதி அப்பி அழகு செய்வது ஒருவகை. இன்னொரு வகை இருக்கிறது. இவ்வகையில் இமைகளின்மேல் நேரடியாகப் பூசியோ எழுதியோ அப்பியோ அழகுசெய்யாமல் அழகுசெய்யப்பட்டுத் தயாராக இருக்கின்ற அணிகளை அப்படியே இமைகளின் மேல்பகுதியில் புருவங்களுக்குக் கீழாகப் பொருத்திப் பசைகொண்டு ஒட்டவைத்துக் கொள்வது. இவ்வகை அணிகளைத் தான் பூண் என்றும் கச்சு என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இலக்கியப் பாடல்களில் வருவதான முலைப்பூண், முலைக்கச்சு ஆகியவை இமைகளுக்கு மேலாக அணியப்படுகின்ற இந்த அணிகலன்களையே குறிக்கும். அளகம் ஆகிய இமைகளின் மேலாக ஏற்றப்படும் பாரம் என்பதால் இதனை அளகபாரம் என்றும் கூறலாயினர். சான்றாக, மயில் போல வரைந்து வெட்டி மைபூசி அழகுசெய்யப்பட்ட அணிகலன் ஒன்றை அப்படியே இமைகளுக்கு மேலாகப் பொருத்திக் கொள்வதைச் சொல்லலாம். இந்த அணிகலன்களை அவரவருடைய பொருளாதார வசதிகளுக்கேற்ப பொன், வெள்ளி போன்ற உலோகத் தகடுகளாலும் ஏனைப் பொருட்களாலும் செய்து அணிந்தனர் எனலாம். இப்படி அளகத்தின் மேல் ஏற்றப்படுகின்ற பாரம் அதிகமாகும்போது இமைகளைத் திறக்கமுடியாமல் பெண்கள் துன்புறுவர் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, அளகம் என்பதற்குக் ' கண்ணிமை ' என்ற பொருளும் உண்டு என்பதனைத் தெளிவாக அறிந்துகொண்டோம். அத்துடன் அளகபந்தி, அளகபாரம் போன்ற சொற்கள் குறிக்கின்ற உண்மையான பொருட்களையும் அறிந்துகொண்டோம். அழகே வடிவாய் விளங்குவதால் தான் கண்ணிமைக்கு அளகம் என்று பெயரிட்டார்களோ என்னவோ !.

4 கருத்துகள்:

  1. தங்கள் புலமையும் ஆழ்ந்த நுண்ணறிவும் ஆய்வு மனப்பாங்கும் யாம் பெற்ற இன்பத்தை எல்லோரும் துய்க்க வேண்டும் என்ற பெருந்தன்மையும் போற்றுதலுக்குரியது ஐயா.

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை சரவணன் கவிஞர் ஆரா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.