சனி, 9 செப்டம்பர், 2017

எண்ணும் எழுத்தும் - 1 ( தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் )

முன்னுரை:

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - என்பது ஔவையார் வாக்கு. இது முக்காலும் உண்மையே. ஏனென்றால் இந்த இரண்டுமே நமக்கு இரண்டு கண்களைப் போல இருந்து வாழ்க்கையினை சீருடனும் சிறப்புடனும் வாழ உதவி புரிகின்றன என்றால் அது மிகையில்லை. ஆனால், இந்த இரண்டுக்குமே ஏதாவது தொடர்புண்டா?. என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?. அதாவது, இரண்டு கண்களும் தனித்தனியாகவே தெரிந்தாலும் உள்முகமாக அவற்றுக்கிடையில் தொடர்பு இருப்பதைப் போல, எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் ஏதேனும் உள்முகத் தொடர்பு இருக்குமா?. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ஒவ்வொரு எழுத்துடனும் ஏதாவது ஒரு எண் எவ்வகையிலாவது தொடர்பு கொண்டிருக்குமா?. என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்த ஆய்வுக் கட்டுரை ஆகும்.

ஆங்கிலத்தில் நியுமராலஜி என்ற பெயரில் எண்கணித அடிப்படையிலான ஒரு சோதிடமுறை உண்டு. இதில், ஒவ்வொரு ஆங்கில எழுத்தினையும் ஒரு எண்ணுடன் தொடர்புறுத்தி, அந்த எழுத்துக்கு அந்த எண்ணையே மதிப்பெண்ணாக அளித்திருப்பார்கள். ஆனால், இதற்கு ஒரு வரைமுறை இல்லாமல் பலவிதமான முறைகளைப் பின்பற்றுகின்றனர். அதாவது ஒரே எழுத்துக்குப் பலரும் பலவிதமான மதிப்பெண்களை வழங்கி இருக்கின்றனர். இதற்குக் காரணம், ஆங்கில எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் இடையிலான தொடர்புக்கு எவ்வித ஆதாரங்களும் முறையாகக் காட்டப்படவில்லை என்பதே. ஆனால், இலக்கிய வளமும் இலக்கண வளமும் பெற்ற சீரும் சிறப்புமுடைய தொன்மொழியாம் நம் தமிழ்மொழியின் நிலைமை அப்படி இல்லை. தமிழ்மொழிக்கு அருமையான விரிவான இலக்கணம் வகுத்துத் தந்திருக்கும் தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் பிறக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாகக் கூறியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் இடையிலான தொடர்பினை உருவாக்க முடியுமா என்ற முயற்சியின் விளைவாகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியான இதில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றிக் காணலாம்.

தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல்:

தமிழ் எழுத்துக்களில் உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டும் பிறக்கும் முறைகளைப் பற்றி விரிவாக விளக்கும் முன்னர், பிறப்பியலின் முதல் பாடலில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் தொல்காப்பியர்.

உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும்காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்பட தெரியும் காட்சியான - பா. எண் 1

பொருள்: உந்தியில் இருந்து தோன்றிய முதல் காற்றானது தலையிலும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலைபெற்று பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எண்வகையான நிலைகளில் உள்ள உறுப்புக்களிலே பொருந்தி அமைய, அவற்றை முறைப்படி ஆராய்ந்து எல்லா எழுத்துக்களைப் பற்றியும் சொல்லுமிடத்து, அவ் எழுத்துக்களின் பிறப்புமுறையானது வேறுவேறு வகையினவாய் திறன்கொண்டு அறியப்படும் தன்மையுடையவாய் உள்ளன.

தமிழ் எழுத்துக்களின் பல்வகையான பிறப்புக்களைப் பற்றிக் கூறுமிடத்துக் கீழ்க்காண்பவற்றின் அடிப்படையில் பகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் தொல்காப்பியர்.

> எழுத்துக்கள் பிறக்கும் இடம். சான்று: அண்பல், அண்ணம்.
> எழுத்துக்கள் பிறக்கும் வினை. சான்று: ஒற்றுதல், வருடுதல், அணர்தல்.
> எழுத்துக்கள் பிறக்கும் நிலை. சான்று: அங்காத்தல், குவித்தல்.
> எழுத்துக்கள் பிறக்கும் உறுப்பு. சான்று: நாக்கு, உதடு, பல், மூக்கு, அண்ணம்

தமிழ் உயிரெழுத்துக்களின் பிறப்பியல்:

தமிழ் உயிர் எழுத்துக்களின் ஒலிகள் பிறக்கும் முறையினைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார் தொல்காப்பியர்.

அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும் - பா. எண் 3

அகாரமும் ஆகாரமும் வாயினைத் திறந்தநிலையில் பிறக்கக் கூடியவை. மிடற்றில் தோன்றும் ஓசையுடன் கூடிய காற்றானது எவ்விதத் தடையுமின்றி திறந்திருக்கும் வாயின் வழியாக வெளிப்படுகையில் இவ் ஒலிகள் தோன்றும். வாயைக் கொஞ்சமாகத் திறந்து குறைந்த நேரம் ஒலித்தால் அகாரமும் நன்றாக விரியத் திறந்து நீண்டநேரம் ஒலித்தால் ஆகாரமும் கேட்கும்.

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்று ஓரன்ன அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய - பா. எண் 4

இகாரம், ஈகாரம், எகாரம், ஏகாரம் மற்றும் ஐகார ஒலிகளும் அகார, ஆகார ஒலிகளைப் போலவே வாயைத் திறந்தநிலையில் பிறப்பனவே. ஆனால், இவ் ஒலிகளின் பிறப்பில் உரசல் இருப்பதால் ஒலிப்புமுறையில் இவை சற்று வேறுபடுபவை. மிடற்றில் தோன்றிய ஒலியுடன் கூடிய காற்றானது அண்பல்லின் விளிம்பில் உரசி வரும்போது இகார ஈகார ஒலிகள் தோன்றும். முதல்நாவின் விளிம்பில் உரசி வரும்போது எகாரமும் ஏகாரமும் ஐகாரமும் தோன்றும்.

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும் - பா. எண் 5

உகரமும் ஊகாரமும் ஒகரமும் ஓகாரமும் ஔகாரமும் மேலுதடும் கீழுதடும் முன்னோக்கிக் குவிந்தநிலையில் பிறப்பவை என்று மேற்காணும் நூற்பாவில் கூறுகிறார் தொல்காப்பியர். இப்படி ஒரே நிலையில் பல ஒலிகள் பிறந்தாலும் அவ் ஒலிகள் தமக்குள் சிறிய அளவிலான வேறுபாடுகளைக் கொண்டவை என்று கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.

தம்தம் திரிபே சிறிய என்ப - பா. எண் 6

தமிழ் மெய்யெழுத்துக்களின் பிறப்பியல்:

மெய்யெழுத்துக்கள் பதினெட்டின் பிறப்பினைப் பற்றிக் கூறுமிடத்துக் கீழ்க்காணும் முறைகளைக் கையாள்கிறார்.

> பிறக்கும் இடத்தின் அடிப்படையில், ஒவ்வொரு வல்லின எழுத்தினையும் அதனுடன் ஒட்டி ஒரே இடத்தில் பிறக்கும் மெல்லின எழுத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவில் கூறுகிறார். சான்றாக, முதல்நாவால் அண்ணத்தில் பிறக்கின்ற ககார எழுத்தினை அதனுடன் ஒட்டி அதே இடத்தில் பிறக்கின்ற ஙகார எழுத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவினால் விளக்குகிறார். ஆயினும், மெல்லின எழுத்துக்கள் பிறக்கும் வகையினை விளக்கும்போது, அவை வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடத்தில் தோன்றினாலும் அவை வாய்வழியே அன்றி மூக்கின் வழியாக வெளிப்பட்டு ஒலிப்பவை என்று கீழ்க்காணும் நூற்பாவில் கூறுகிறார்.

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் - பா. எண் 18

>  ஒரே இடத்தில் வேறுவேறு வினையால் பிறக்கும் இடையின எழுத்துக்களை இணைத்து ஒரே நூற்பாவில் விளக்குகிறார். சான்றாக, நுனிநாவானது அண்பல்லைப் பொருந்துதலால் பிறக்கும் லகாரத்தினை அண்பல்லை வருடுதலால் பிறக்கும் ளகாரத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவில் விளக்குகிறார்.

> பிறக்கும் உறுப்புக்களின் அடிப்படையில் சில எழுத்துக்களைத் தனித்தனியே விளக்குகிறார். சான்றாக, வகாரம் உதடுகளில் பிறந்தாலும் பல்லினால் பிறப்பதால் அதனைப் பகார, மகாரங்களுடன் சேர்த்துக் கூறாமல் தனியே விளக்குகிறார்.

ககார ஙகார ஒலிபிறப்பியல்:

ககார ஙகாரம் முதல் நா அண்ணம் - பா.எண். 7

தமிழ் மெய்யெழுத்துக்களில் ககார ஒலியும் ஙகார ஒலியும் முதல் நா எனப்படுவதான நாவின் தடித்த அடிப்பகுதியானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது ககார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ஙகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் அடிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் குவிந்து திரண்ட நிலையில் இருப்பதை அறியலாம்.

சகார ஞகார ஒலிபிறப்பியல்:

சகார ஞகாரம் இடை நா அண்ணம் - பா. எண்: 8

தமிழ் மெய்யெழுத்துக்களில் சகார ஒலியும் ஞகார ஒலியும் இடை நா எனப்படுவதான நாவின் மெலிந்த நடுப்பகுதியானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது சகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ஞகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் நடுப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் மேல்நோக்கி உயர்ந்து மெலிந்து பரந்த நிலையில் இருப்பதை அறியலாம்.

டகார ணகார ஒலிபிறப்பியல்:

டகார ணகாரம் நுனி நா அண்ணம் - பா. எண்: 9

தமிழ் மெய்யெழுத்துக்களில் டகார ஒலியும் ணகார ஒலியும் நுனி நா எனப்படுவதான நாவின் கூர்மையான நுனிப்பகுதியானது அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது டகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ணகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் நுனிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் வாயின் உட்புறம் நோக்கி வளைந்த நிலையில் இருப்பதை அறியலாம்.

தகார நகார ஒலிபிறப்பியல்:

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம் - பா. எண் 11

தமிழ் மெய்யெழுத்துக்களில் தகார ஒலியும் நகார ஒலியும் நுனி நா எனப்படுவதான நாவின் கூர்மையான நுனிப்பகுதியானது அண்ணமும் மேல்பல் வரிசையும் பொருந்துவதான இடத்தைத் (அண்பல்) தொட்டுப் பரந்த நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது தகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது நகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் நுனிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் தனது கூர்முனை மழுங்கித் தடித்த நிலையில் இருப்பதை அறியலாம்.

பகார மகார வகார ஒலிபிறப்பியல்:

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - பா. எண் 15
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் - பா. எண் 16

தமிழ் மெய்யெழுத்துக்களில் பகார ஒலியும் மகார ஒலியும் மேலுதடும் கீழுதடும் பொருந்திய நிலையில்  உண்டாவதாக மேற்காணும் முதல் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது பகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது மகார ஒலியும் பிறக்கும். வகார ஒலியானது மேற்பல் வரிசையும் கீழுதடும் பொருந்திய நிலையில் பிறப்பதாக மேற்காணும் இரண்டாம் பாடலில் குறிப்பிடுகிறார்.

இவ் ஒலிகள் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் நாக்கின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது எந்தவொரு மாற்றமுமின்றி தனது இயல்பான சமநிலையில் இருப்பதை அறியலாம்.

றகார னகார ஒலிபிறப்பியல்:

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 12

தமிழ் மெய்யெழுத்துக்களில் றகார ஒலியும் னகார ஒலியும் நாக்கு நுனியானது உட்குழிந்த நிலையில் அண்ணத்தைப் பொருந்தும்போது உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அணர்தல் என்பது உட்குழிதல் ஆகும். (சான்று: அணர் செவிக் கழுதை = குழிந்த காதினையுடைய கழுதை.) இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது றகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது னகார ஒலியும் பிறக்கும்.

ரகார ழகார ஒலிபிறப்பியல்:

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 13

தமிழ் மெய்யெழுத்துக்களில் ரகார ஒலியும் ழகார ஒலியும் நாக்கு நுனியானது உட்குழிந்து அண்ணத்தைப் பொருந்தி வருடும்போது உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நாக்கு நுனியானது மழுங்கிய நிலையில் உள்நோக்கி அண்ணத்தை வருடும்போது ழகரமும் குவிந்த நிலையில் வெளிநோக்கி அண்ணத்தை வருடும்போது ரகரமும் பிறக்கும்.

லகார ளகார ஒலிபிறப்பியல்:

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 14

தமிழ் மெய்யெழுத்துக்களில் லகார ஒலியும் ளகார ஒலியும் நாக்கு நுனியானது வீங்கி 'அண்பல்' எனப்படுவதான மேல்வரிசைப் பல்லும் அண்ணமும் பொருந்துகின்ற இடத்தினை முறையே பொருந்தவும் வருடவும் பிறப்பதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அதாவது, அண்பல்லைப் பொருந்தும்போது லகாரமும் வருடும்போது ளகாரமும் பிறப்பதாகக் கூறுகிறார். நாக்கு நுனியானது வீங்கி அண்பல்லைப் பொருந்தும்போது உட்குழிந்தும் வருடும்போது உள்நோக்கி வளைந்தும் காணப்படும்.

யகார ஒலிபிறப்பியல்:

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்  - பா. எண் 17

தமிழ் மெய்யெழுத்துக்களில் சகார ஒலியும் ஞகார ஒலியும் இடை நாவானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக முன்னர் கண்டோம். பொதுவாக இவ் ஒலிகள் பிறக்கும்போது மிடற்றில் இருந்து வெளிவரும் காற்றானது அண்ணத்தைத் தொடும்போது இடைநாவின் உரசலால் முழுவதுமாக வாய்க்குள் அடைபட்டுப் போகும். அப்படி இடைநாவுக்கும் அண்ணத்துக்கும் இடையில் அடைபட்டு நிற்காமல் காற்றானது வெளிப்பகுதியினை அடையும்போது யகர ஒலி பிறக்கும். சகார, ஞகாரத்தைப் போன்றே, யகார ஒலி பிறக்கும்போதும் நடுநாவானது உயர்ந்து மெலிந்து பரந்த நிலையில் காணப்படும். அருகிலுள்ள படத்தில் நாக்கின் நிலையானது வரைந்து காட்டப்பட்டுள்ளது.

..... தொடரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.

முன்னுரை:     ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அம் மொழி சார்ந்த அகராதிகள் எவ்வளவு முக்கியமான பணியைச் செய்கின்றன என்பதை ...