புதன், 20 செப்டம்பர், 2017

எண்ணும் எழுத்தும் - 3 ( எண்களுக்கும் பொருளுண்டு )

முன்னுரை:

எண்ணும் எழுத்தும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகளை விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்பினைக் கண்டோம். மூன்றாம் பகுதியான இதில் எண்களைப் பற்றிய செய்திகளைக் குறிப்பாக எண்களுக்கும் பொருளுண்டு என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

எண்களின் சிறப்பு:

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - என்றாள் ஔவை மூதாட்டி.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்றான் ஐயன் வள்ளுவன்.

இவ் இரண்டு பாடல்களும் எண்களையே முதன்மைப்படுத்திக் கூறியிருப்பதில் இருந்து எழுத்துக்களைக் காட்டிலும் எண்களே சிறப்பு மிக்கவை என்பது கூறாமலே புரிந்துவிடும். காரணம், எழுத்துக்களைக் காட்டிலும் எண்களைப் புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் எளிதானது. சான்றாக, ஒருவரிடம் கடன் கேட்க விரும்பினால்,

ரூ. 15750 என்று எண்ணால் எழுதிக் கேட்கலாம். அல்லது
ரூ. பதினைந்து ஆயிரத்து எழுநூற்றி ஐம்பது என்று எழுத்தால் எழுதியும் கேட்கலாம்.

மேற்காணும் இரண்டு முறைகளில், எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிமையானது எண்களால் எழுதும் முறையே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றேயாகும். அதுமட்டுமின்றி, கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற பலவகையான கணக்குகளைச் செவ்வனே செய்வதற்கும் எண்களே பெரிதும் உதவிசெய்கின்றன.

எண்ணும் பொருளும்:

சொல்லுக்குப் பொருள் உண்டு என்று அனைவரும் அறிவோம். இதென்ன எண்ணுக்குப் பொருள்?. என்ற கேள்வி எழலாம். சொல்லுக்குப் பொருள் இருப்பதைப் போல எண்ணுக்கும் பொருளுண்டு. அதைப்பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

தமிழில் எண்ணம் என்ற சொல்லுக்கு நினைப்பு, மதிப்பு என்ற இருவகையான பொருட்களைத் தற்கால அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஒரு முறுக்குப் பையின் மேல் 50 எண்ணம் என்று குறிப்பிட்டிருந்தால், அப் பையில் 50 முறுக்குகள் இருப்பதாகப் பொருள். இதில் வரும் எண்ணம் என்பது மதிப்பு அல்லது எண்ணிக்கையினைக் காட்டுகின்றது. ஆசிரியராவதே என் எண்ணம் என்று ஒருவர் கூறினால், ஆசிரியராக வாழ அவர் நினைக்கிறார் என்பது பொருள். இப்படி, எண்ணம் என்ற ஒரு சொல்லுக்கு எண்ணிக்கை / மதிப்பு மட்டுமே பொருள் என்றில்லாமல் நினைப்பும் ஒரு பொருளாக வருவதைப் போல ஒவ்வொரு எண்ணுக்கும் அதன் மதிப்பு மட்டுமே பொருளாக இல்லாமல் வேறொரு பொருளும் இருக்கிறது என்பதுதான் இக் கட்டுரையில் விளக்கப்பட இருக்கும் செய்தியாகும். இவ் ஆய்வுக் கட்டுரையில் 1 முதல் 9 வரையிலான எண்களானவை புதிய பொருள்தரும் அடிப்படையில் கீழ்க்காணும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. குறிநிலை எண்கள். சான்று: மூன்று, ஐந்து, ஒன்பது.
இவை குறியீட்டு நிலையிலேயே புதிய பொருளினை உணர்த்தும்.

2. சொல்நிலை எண்கள். சான்று: ஒன்று, ஆறு.
இவை சொல்நிலையிலேயே புதிய பொருளினை உணர்த்தும்.

3. புணர்நிலை எண்கள். சான்று: இரண்டு, நான்கு, ஏழு.
இவை பிறசொற்களுடன் புணரும்போது அடையும் மாற்றத்தினால் புதிய பொருளினை உணர்த்தும்.

4. இருநிலை எண். சான்று: எட்டு.
இது சொல்நிலை, புணர்நிலை ஆகிய இருநிலைகளிலும் புதிய பொருள் உணர்த்தும்.

எண்களின் இந்த நால்வகை நிலைகளைப் பற்றி ஒவ்வொரு எண்ணின் கீழே விரிவாகக் காணலாம்.

எண் ஒன்று:

எண் ஒன்றினை எண்ணால் எழுதும்போது ' 1 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஒன்று ' என்று எழுதுகிறோம். எண் ஒன்றினை '1' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. அதேசமயம், 'ஒன்று' என்று எழுத்தால் எழுதும்போது அது எண் ஒன்றினை மட்டும் குறிக்காமல் ' ஒன்றுபடுதல் ' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

ஒன்று = 1 ( எண் ) 
ஒன்று = ஒன்றுபடுதல். ( வினை )

இப்படி ஒன்று என்ற சொல்லானது சொல்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது சொல்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் இரண்டு:

எண் இரண்டினை எண்ணால் எழுதும்போது ' 2 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' இரண்டு ' என்று எழுதுகிறோம். எண் இரண்டினை '2' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. இரண்டு என்று எழுத்தால் எழுதும்போதும் அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது.

அதேசமயம், இரண்டு என்ற சொல்லானது உயிர் முதலாக்கொண்ட வருமொழியுடன் புணரும்போது ஈர் என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

இரண்டு + உருளி = ஈர் + உருளி = ஈருருளி.
இரண்டு + உடல் = ஈர் + உடல் = ஈருடல்.

இவ்வாறு இரண்டு என்ற சொல்லானது புணர்நிலையில் 'ஈர்' என்று மாற்றம் பெறும்போது அது எண் இரண்டை மட்டும் குறிக்காமல் 'ஈர்த்தல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

ஈர் = 2 ( எண் )
ஈர் = ஈர்த்தல் = அறுத்தல். ( வினை )

இப்படி இரண்டு என்ற சொல்லானது புணர்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது புணர்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் மூன்று:

எண் மூன்றினை எண்ணால் எழுதும்போது ' 3 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' மூன்று ' என்று எழுதுகிறோம். எண் மூன்றினை 'மூன்று' என்று சொல்லாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. ஆனால், அதனை '3' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்காமல் வேறொரு பொருளையும் உணர்த்துகிறது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம். 

எண் மூன்றின் வடிவத்தினை ஆராய்ந்தால், அதில் மூன்று கிடைக்கோடுகளும் இந்த மூன்று கிடைக்கோடுகளையும் ஒருபுறமாக இணைக்கின்ற ஒரு செங்குத்துக்கோடும் இருப்பதனை அறியலாம். தத்துவ நோக்கில் பார்த்தால், இந்த மூன்று கிடைக்கோடுகளும் அடி, இடை, முதல் என்ற மூன்று படிநிலைகளைக் குறிப்பவை. அடிநிலையில் உள்ள ஒருவர் இடைநிலைக்குச் சென்ற பின்னரே முதல்நிலையினை எட்ட முடியும் என்பது பொதுவிதி. ஆனால், இந்த செங்குத்துக் கோடு என்னும் மேலூக்கி (லிஃப்ட்)யின் துணைகொண்டு அடிநிலையில் உள்ள ஒருவர் இடைநிலைக்குச் செல்லாமலேயே முதல்நிலையை அடைய முடியும். இவ்வாறாக எண் மூன்றின் வடிவமானது, ஒருவரது வாழ்க்கை நிலையினை சட்டென்று உயர்த்தி உதவி செய்யும் மேலூக்கியாகத் திகழ்கிறது என்பதைப் பொருளாக உணர்த்தி நிற்பதனை அறியலாம்.

எண் நான்கு:

எண் நான்கினை எண்ணால் எழுதும்போது ' 4 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' நான்கு ' என்று எழுதுகிறோம். எண் நான்கினை '4' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. 'நான்கு' என்று எழுத்தால் எழுதும்போதும் அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது.

அதேசமயம், நான்கு என்ற சொல்லானது உயிர் முதலாக்கொண்ட வருமொழியுடன் புணரும்போது நால் என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

நான்கு + ஆயிரம் = நால் + ஆயிரம் = நாலாயிரம்.
நான்கு + ஊர் = நால் + ஊர் = நாலூர்.

இவ்வாறு நான்கு என்ற சொல்லானது புணர்நிலையில் 'நால்' என்று மாற்றம் பெறும்போது அது எண் நான்கினை மட்டும் குறிக்காமல் 'நாலுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

நால் = 2 ( எண் )
நால் = நாலுதல் = தொங்குதல். ( வினை )

இப்படி நான்கு என்ற சொல்லானது புணர்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது புணர்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் ஐந்து:

எண் ஐந்தினை எண்ணால் எழுதும்போது ' 5 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஐந்து ' என்று எழுதுகிறோம். எண் ஐந்தினை 'ஐந்து' என்று சொல்லாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. ஆனால், அதனை '5' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்காமல் வேறொரு பொருளையும் உணர்த்துகிறது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம். 

எண் ஐந்தின் வடிவத்தினை ஆராய்ந்தால், எண் மூன்றினைப் போலவே இதிலும் மூன்று கிடைக்கோடுகள் இருப்பதனை அறியலாம். ஆனால், எண் மூன்றில் இருப்பதைப் போல ஒரு உயர்ந்த செங்குத்துக்கோட்டிற்குப் பதிலாக, அடுத்தடுத்த கிடைக்கோடுகளை பக்கம் மாறி இணைப்பதைப் போல இரண்டு சிறிய செங்குத்துக் கோடுகள் இருப்பதனை அறியலாம். தத்துவ நோக்கில் பார்த்தால், வழக்கம்போல இந்த மூன்று கிடைக்கோடுகளும் அடி, இடை, முதல் என்ற மூன்று படிநிலைகளைக் குறிப்பவையே. பொதுவாக, அடிநிலையில் வாழ்கின்ற ஒருவர் யாருடைய உதவியும் கிட்டாமல் போனால் எல்லா துன்பங்களையும் தானே தாங்கி முயன்று இடைநிலைக்குச் சென்று அதனை முழுமையாக அனுபவித்து பின்னர் மீண்டும் பல துன்பங்களைக் கடந்து முயன்றால் தான் முதல்நிலையை அடைய முடியும். இவ்வாறாக எண் ஐந்தின் வடிவமானது, ஒருவரது வாழ்க்கை நிலையினை சட்டென்று உயர்த்தி உதவி செய்யும் மேலூக்கியாக இல்லாமல் அனைத்து துன்பங்களையும் ஒருவர் அனுபவித்துத் தானே முயன்று படிப்படியாக முன்னேறுகின்ற நிலையினைப் பொருளாக உணர்த்தி நிற்பதை அறியலாம்.

எண் ஆறு:

எண் ஆறினை எண்ணால் எழுதும்போது ' 6 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஆறு ' என்று எழுதுகிறோம். எண் ஆறினை '6' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. அதேசமயம், 'ஆறு' என்று எழுத்தால் எழுதும்போது அது எண் ஆறினை மட்டும் குறிக்காமல் ' ஆறுதல் ' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

ஆறு = 6 ( எண் ) 
ஆறு = ஆறுதல் = அமைதல், இயல்பாதல். ( வினை )

இப்படி ஆறு என்ற சொல்லானது சொல்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது சொல்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் ஏழு:

எண் ஏழினை எண்ணால் எழுதும்போது ' 7 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஏழு ' என்று எழுதுகிறோம். எண் ஏழினை '7' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. 'ஏழு' என்று எழுத்தால் எழுதும்போதும் அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது.

அதேசமயம், ஏழு என்ற சொல்லானது சில பெயர்ச்சொற்களுடன் புணரும்போது எழு என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

ஏழு + கடல் = எழு + கடல் = எழுகடல்.
ஏழு + மலை = எழு + மலை = எழுமலை.

இவ்வாறு ஏழு என்ற சொல்லானது புணர்நிலையில் 'எழு' என்று மாற்றம் பெறும்போது அது எண் ஏழினை மட்டும் குறிக்காமல் 'எழுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

எழு = 7 ( எண் )
எழு = எழுதல் = உயர்தல். ( வினை )

இப்படி ஏழு என்ற சொல்லானது புணர்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது புணர்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் எட்டு:

எண் எட்டினை எண்ணால் எழுதும்போது ' 8 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' எட்டு ' என்று எழுதுகிறோம். எண் எட்டினை '8' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. அதேசமயம், 'எட்டு' என்று எழுத்தால் எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டும் குறிக்காமல் 'எட்டுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

எட்டு = 8 ( எண் )
எட்டு = எட்டுதல் = முடிதல், முழுமையாதல். (வினை)

அதுமட்டுமின்றி, எட்டு என்ற சொல்லானது சில பெயர்ச்சொற்களுடன் புணரும்போது எண் என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

எட்டு + நாள் = எண் + நாள் = எண்நாள்.
எட்டு + திசை = எண் + திசை = எண்டிசை.

இவ்வாறு எட்டு என்ற சொல்லானது புணர்நிலையில் 'எண்' என்று மாற்றம் பெறும்போது அது எண் எட்டினை மட்டும் குறிக்காமல் 'எண்ணுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

எண் = 8 ( எண் )
எண் = எண்ணுதல் = சிந்தித்தல். ( வினை )

இப்படி எட்டு என்ற சொல்லானது சொல்நிலையில் ஒரு புதிய பொருளும் புணர்நிலையில் ஒரு புதிய பொருளும் தருவதால், இது இருநிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் ஒன்பது:

எண் ஒன்பதினை எண்ணால் எழுதும்போது ' 9 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஒன்பது ' என்று எழுதுகிறோம். எண் ஒன்பதினை 'ஒன்பது' என்று சொல்லாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. ஆனால், அதனை '9' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்காமல் வேறொரு பொருளையும் உணர்த்துகிறது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம். 

எண் ஒன்பதின் வடிவத்தினை ஆராய்ந்தால், அது எண் மூன்று மற்றும் ஐந்தின் அமைப்பினை உள்ளடக்கியதாக இருப்பதனை அறியலாம். மூன்று, ஐந்து ஆகிய எண்களில் இருப்பதைப் போல எண் ஒன்பதிலும் மூன்று கிடைக்கோடுகளும் ஒரு உயர்ந்த வலப்பக்கச் செங்குத்துக்கோடும் ஒரு சிறிய இடப்பக்கச் செங்கோடும் இருப்பதனை அறியலாம். தத்துவ நோக்கில் பார்த்தால், வழக்கம்போல இந்த மூன்று கிடைக்கோடுகளும் அடி, இடை, முதல் என்ற மூன்று படிநிலைகளைக் குறிப்பவையே. ஆனால், எண் ஒன்பதில் உயர்ந்த செங்கோடும் சிறிய செங்கோடும் இருப்பதால், எண் மூன்று மற்றும் ஐந்தின் தன்மைகள் இரண்டையும் கொண்டதாக எண் ஒன்பது திகழ்கிறது. அதாவது, எண் மூன்றினைப் போலத் தூக்கி (லிஃப்ட்) யாகச் செயல்பட்டு வாழ்க்கையில் உடனே முன்னேற உதவி செய்ய வல்லதும் எண் ஐந்தினைப் போல பல துன்பங்களைக் கொடுத்து அனுபவிக்கச் செய்து தானே முயன்று படிப்படியாய் முன்னேற வைப்பதும் ஆகிய இருவிதமான நிலைகளையும் பொருளாக உணர்த்தி நிற்கின்றது.


.... தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.