முன்னுரை:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர். - 550.
இக் குறளுக்குத் தற்போது எழுதப்பட்டிருக்கும்
விளக்க உரைகளை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் மரண தண்டனையினை ஆதரித்தார் என்ற கருத்து
பரவலாகத் தலைதூக்கி எங்கெங்கும் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் திருவள்ளுவர் மரண தண்டனையை
ஆதரித்தாரா? யாருக்கு மரணதண்டனை வழங்கலாம்? என்பதைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில்
காணலாம்.
வள்ளுவர் காட்டும் கொடியார் யார்?.
திருவள்ளுவர் மரணதண்டனையை ஆதரித்தாரா என்று
காணும் முன்னால், இக்குறளில் வரும் கொடியார் என்ற சொல்லினை வேறு எவ்வெக் குறள்களில்
எப்பொருட்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்று பார்க்கவேண்டிய தேவை இருப்பதால் அதனைக்
கீழே காணலாம்.
தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் என கூறல் நொந்து - குறள் 124:6
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா - குறள் 117:9
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
என் எம்மை பீழிப்பது - குறள் 122:7
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் - குறள் 124:5
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடுதோள் பூசல் உரைத்து - குறள் 124:7
( நன்றி: tamilconcordance.in ).
மேற்காணும் குறள்களில் வரும் கொடியர் / கொடியார்
என்ற சொல்லை நோக்கினால், அது கணவர் / காதலரைக் குறிப்பதை அறியலாம். அதாவது கணவர் /
காதலர் தன்னைவிட்டுப் பிரிந்துசென்று தனக்கு நோய் / துன்பம் தந்தமையால் மனைவி / காதலியானவள்
அவரைக் கொடியவர் என்று கூறுகிறாள். ஆக, இக்குறள்கள் அனைத்திலும் கொடியார் என்றால்
' தற்காலிகமாகப் பிரிவுத்துயரினைத் தருபவர் ' என்ற பொருளே பயின்று வந்துள்ளது என்பதனை
அறிந்துகொள்ளலாம்.
தற்போதைய விளக்க உரைகள்:
மேற்காணும் தலைப்புக் குறளுக்கு எழுதப்பட்டுள்ள
இன்றியமையாத விளக்க உரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கலைஞர் மு.கருணாநிதி உரை: கொலை முதலிய கொடுமைகள்
புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
மு.வ உரை: கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால்
அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்கு நிகரான செயலாகும்.
சாலமன் பாப்பையா உரை: கொடியவர்களுக்கு மரண
தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச்
சமம்.
பரிமேலழகர் உரை: வேந்து கொடியாரைக் கொலையின்
ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை
கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும். ('கொடியவர்'
என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை
கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப.
இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல
எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு
பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும்
ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை: கொடுமை செய்வாரைக் கொலையினானே
அரசன் ஒறுத்தல் குற்றமன்று: உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும். கொடியாராவார்
கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.
திருவள்ளுவர் மரணதண்டனையை ஆதரித்தாரா?.
மேற்காணும் விளக்க உரைகளில் கலைஞரைத் தவிர
அனைவரும் ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றனர். அதாவது: ' குற்றம் செய்தாரைக் கொலைசெய்து
தண்டிப்பது, பயிர்களைப் பாதுகாக்கக் களைபறிப்பதைப் போன்றதாகும் ' என்று கூறி வள்ளுவர்
கொலைத்தண்டனையை முதன்மையாகப் பரிந்துரைக்கிறார் என்பதைப் போன்ற புரிதலை உண்டாக்கிவிட்டனர்.
இக் கருத்து சரியா? தவறா? என்பதைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.
கொடியார் என்ற சொல்லுக்குத் ' தீக்கொளுவுவார்,
நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார்
என்றிவர் முதலாயினார் ' என்று பொருள்கொள்ளுகிறார் பரிமேலழகர். ஏனையோரும் பரிமேலழகரையே
பின்பற்றுவதாகத் தெரிகிறது. ஆனால் இச்சொல்லுக்கு இக்குறளைத் தவிர வேறு குறள்களில் இப்பொருள்
இல்லை என்பதனை மேலே கண்டோம். இந்நிலையில், இக்குறளில் மட்டும் இச்சொல்லுக்குப் புதிய
பொருளைக் கொள்வதில் தவறொன்றுமில்லை. இருந்தாலும், வள்ளுவரின் உளப்பாங்குடன் இப்புதிய
பொருள் பொருத்தமுடையதா என்பதனையும் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இதனைக் கீழ்க்காணும்
தலைப்புக்களின் கீழ் விரிவாகப் பார்க்கலாம்.
1. வள்ளுவர் காட்டும் செங்கோன்மை என்பது
என்ன?
2. குற்றத்திற்குத் தண்டனை கொலை ஆகுமா?
3. அரசன் யார்யாரைக் கொல்லலாம்?
1. வள்ளுவர் காட்டும் செங்கோன்மை:
முதலில் நமது தலைப்புக் குறளானது செங்கோன்மை
அதிகாரத்தில் வருவது என்பதனை நினைவில் கொள்வது நல்லது. இந்த அதிகாரத்தின் முதல் பாட்டிலேயே
செங்கோன்மை என்பது என்ன என்று கீழ்க்காணுமாறு கூறிவிடுகிறார் வள்ளுவர்.
ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை. - 541.
அதாவது, (குடிமக்கள் செய்த) குற்றத்தை நாடி
யார்மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை
ஆராய்ந்து செய்வதே முறை என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி, குடிமக்களைக் காக்கவேண்டி
குற்றம் செய்தவரை முறைப்படித் தண்டிப்பது ஒருபோதும் அரசனுக்கு இழிவைத் தராது; அது அவனது
கடமையே என்று அதே அதிகாரத்தில் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.
குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். - 549.
2. குற்றத்திற்குத் தண்டனை கொலை ஆகுமா?;
குற்றம் செய்தவரை முறைப்படி தண்டிக்கலாம்
என்று சொல்லியாகி விட்டது. அப்படியென்றால் குற்றவாளிகளைக் கொலைசெய்து தண்டிக்கலாமா?.
கூடாது என்பதே வள்ளுவரின் முதன்மைக் கருத்தாகும். வெருவந்த செய்யாமை என்னும் அதிகாரத்தில்
குற்றத்திற்குத் தண்டனை வழங்கும்போது மன்னன் பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. - 561.
நமது தலைப்புக்குறளைப் போலவே இக்குறளும்
' வேந்து ஒறுத்தலை ' ப் பற்றியே பேசுவது கவனிக்கத்தக்கது. செய்த குற்றத்தைத் தக்கவாறு
ஆராய்ந்து மீண்டும் அக்குற்றம் செய்யாதபடிக்குக் குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே
அரசன் ஆவான் என்று மேற்காணும் குறளில் கூறுகிறார். இதில் குற்றத்திற்கான தண்டனை என்பது
'கொலைசெய்தல்' என்றால் ' தலைச்செல்லா வண்ணத்தால் ' அதாவது ' மீண்டும் அக்குற்றம் செய்யாதபடி
' என்னும் தொடரானது பொருளற்றுப் போகிறது. ஏனென்றால் மறுபடியும் குற்றம் செய்யவேண்டும்
என்றால் உயிரோடு இருந்தாக வேண்டுமே. ஆக, இக்குறளில் வரும் ஒறுத்தல் என்பது மரண தண்டனையைக்
குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
அடுத்து, குற்றத்திற்குத் தண்டனை கொடுக்கும்போதுகூட
குற்றவாளியிடம் கருணை காட்டும் வள்ளுவரின் உள்ளத்தைக் கீழ்க்காணும் பாடல் படம்பிடித்துக்
காட்டுகிறது.
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். - 562.
அதாவது, ஒருவருக்குத் தண்டனையாக சவுக்கடி
போன்றவற்றைக் கொடுக்கும்போதுகூட வேகமாக ஓங்கி மெதுவாக அடிக்க வேண்டும் என்று கருணை
காட்டுகிறார் வள்ளுவர். அப்போதுதான் குற்றவாளி திருந்துவதற்கும் ஆக்கபூர்வமான வேலைகளில்
தொடர்ந்து ஈடுபடுவதற்கும் ஒரு வாய்ப்பு கிட்டும் என்ற பொருளில் ' நெடிது ஆக்கம் நீங்காமை
வேண்டுபவர் ' என்று கூறுகிறார். இதிலிருந்து வள்ளுவரின் உள்ளக் கிடக்கையினை மிகத் தெளிவாகப்
புரிந்து கொள்ளலாம். அது இதுதான்: குற்றம் செய்தவர் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பினைக்
கொடுக்கும் வகையாகத் தான் தண்டனை என்பது இருக்கவேண்டும். இதை உறுதிசெய்வதைப் போல கீழ்க்காணும்
குறளிலும் கூறுகிறார்.
ஒறுத்தாற்றும் பண்பினார்க் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை - 579.
எப்போதும் பிறருக்குத் துன்பந்தரும் இயல்பினரே
ஆயினும் அவர்களுக்குத் தண்டனை கொடுக்கும்போது அவசரமின்றிப் பொறுமையாகக் கண்ணோடுவது
அரசனின் தலையாய பண்பாகும் என்று இக்குறளில் கூறுகிறார். இதிலிருந்து, குற்றங்களுக்கான
தண்டனையாக மரண தண்டனையினை அவர் முதன்மைத் தண்டனையாக முன்மொழியவில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.
3. அரசன் யார்யாரைக் கொல்லலாம்?.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடாது
என்றால், மன்னன் யாரையுமே கொலைசெய்யக் கூடாதா?. என்ற கேள்வி எழுகிறது. இக் குழப்பத்தினைப்
போக்கும் விதமாகச் சில குறள்களின் மூலம் விளக்கம் தருகிறார் வள்ளுவர்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. - 879
ஒரு அரசன் தனது பகையானது சிறியதாக இருக்கும்போதே
அதனை முனைந்து வேரறுத்து அழித்துவிட வேண்டும் என்று இக்குறளின் மூலம் கூறுகிறார். இதற்கு
எடுத்துக்காட்டாக முள்செடியினைக் கூறுகிறார். முள்செடிச் சிறியதாக இருக்கும்போதே அழிக்கப்படாவிட்டால்
அது மரமாக வளர்ந்து களைபவரின் கைகளையே பதம்பார்த்து விடும். அதைப்போல பகையினை வளரவிட்டால்
பின்னர் அதனை அழிப்பது மிகமிகக் கடினம் என்று எச்சரிக்கிறார். பகைவரை அழிக்கவேண்டும்
என்ற கருத்தினை கீழ்க்காணும் பாடலிலும் வலியுறுத்துகிறார்.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். - 880
பகைவரின் வலிமையைச் சிதைக்காவிட்டால் ஒரு
அரசனால் உயிரோடு மூச்சுவிடவும் முடியாது என்று இக் குறளிலும் எச்சரிக்கிறார். இந்த
இரண்டு குறள்களின் மூலம், ஒரு அரசன் எந்தச் சூழலிலும் தனது பகைவர்களை உயிருடன் விட்டுவைக்கலாகாது
என்று வலியுறுத்துகிறார்.
அரசன் யாருக்கு மரண தண்டனை வழங்கலாம்?.
குற்றம் செய்தவர்களை மன்னன் முறைப்படித்
தண்டிக்கலாம் என்று வள்ளுவர் கூறியிருப்பதை மேலே கண்டோம். குற்றங்களைப் பொறுத்தே தண்டனைகள்
அமையும் என்றும் மேலே கண்டோம். என்றால், ஒரு அரசன் எவ்வகையான குற்றத்திற்கு எந்தச்சூழலில்
மரண தண்டனை வழங்கலாம்?. என்ற கேள்வி எழுகிறது. இக் கேள்விக்கான விடையினைத் தான் கீழ்க்காணும்
நமது தலைப்புக் குறளில் கூறியிருக்கிறார் வள்ளுவர்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர். - 550.
இதில் வரும் 'கொலையிற் கொடியார்' என்னும்
சொல்லே முதன்மையானது; நுட்பம் வாய்ந்தது. இதன் நுட்பத்தினை அறிந்துகொள்ள இதனைக் கீழ்க்காணுமாறு
பிரித்துப் பொருள்கொள்ளவேண்டும்.
கொலையிற் கொடியார் = கொலையிற்கு + ஒடியார்
= கொலைசெய்வதற்கு இடையறாதார்.
( ஒடிதல் = முறிதல், கெடுதல், இடையறுதல்.)
= தொடர்ந்து கொலைக்குற்றம்
புரிபவர்கள்.
இக்குறளின் மூலம் வள்ளுவர் கூறவரும் கருத்து
: ஒருவர் முதல்முறையாகக் கொலைக்குற்றம் புரிந்திருந்தால் அறியாமையால் செய்ததாகக் கருதி அக்குற்றவாளிக்கு மரணதண்டனை
வழங்காமல் வேறு கடுமையான தண்டனைகளை வழங்கலாம். தண்டனையை அனுபவித்து விடுதலையான பின்னரும்
திருந்தாமல் மறுபடியும் அக்குற்றவாளி கொலைக்குற்றம் புரிந்தால் அப்போது மரண தண்டனை
வழங்குவதில் தவறில்லை. இது எவ்வாறு எனில், வேளாண்மை செய்யும்போது பயிர்களின் நன்மை
கருதி பயிர்களின் இடையே வளர்ந்துள்ள புல்பூண்டு முதலான களைகளை உழவர்கள் வேருடன் களைந்துவிடுவதைப்
போன்றதாகும். பறிக்கப்படாத களைகள் எப்படிப் பயிர்களை வளரவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து
விடுமோ அதைப்போலத் தொடர்ந்து கொலைக்குற்றம் புரிபவர்களை அரசன் கொல்லாமல் விட்டால் அவர்கள்
நாட்டுமக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றழித்து விடுவர். தனது குடிகளாகவே இருந்தாலும் பகைவர்களைப் போல இவர்கள் தன் நாட்டுமக்களைக் கொன்றழிப்பதால் இத்தகையோருக்கு மட்டும்
ஒரு அரசன் கொலைத்தண்டனை வழங்குவதில் தவறில்லை என்று கூறுகிறார் வள்ளுவர்.
முடிவுரை:
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.- 314.
துன்பம் தந்தவரைத் தண்டிக்கும் ஒரேவழி அவர்
தனது செயலுக்கு வெட்குமாறு அவருக்கு நன்மை செய்துவிடுதலே என்று இக்குறளின் மூலம் உலகோர்க்குக் கூறிய
கருணைக்கடலே திருவள்ளுவர். இத்தகைய கருணைக்கடலின் உள்ளத்தில் மரண தண்டனை என்னும் ஆழிப்பேரலை
( சுனாமி ) எப்படித் தோன்றியிருக்கும்? என்ற ஐயத்தின் விளைவாக எழுந்ததே இந்த ஆய்வுக்
கட்டுரை ஆகும். குற்றங்கள், தண்டனைகள் பற்றி வள்ளுவர் கூறியுள்ள ஏனைய குறள்களின் அடிப்படையிலேயே
இப் புதிய கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
************* வாழ்க தமிழ் ! வளர்க வள்ளுவம் !! *******************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.