புதன், 29 நவம்பர், 2017

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 1 - நாய்



முன்னுரை:



நாய் - என்று சொன்னாலே அதனுடைய நன்றிமறவாத் தன்மையே நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது நாய். இந்திய வகை நாய்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு நாய் வகைகள் வரை பலவகையான நாய்களை இன்று நாம் காண்கிறோம். நாய்வளர்ப்புக்கென்றே பலவகையான உணவுவகைகள் ஏராளமான கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. நாய்களுக்காக பலவகையான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நாயானது செல்லப்பிராணியாகவும் பொழுதுபோக்குவதற்கான உற்றதுணையாகவும் இருந்துவருகிறது. காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது பலரும் தங்களுக்குத் துணையாக நாயினை அழைத்துச் செல்வதைப் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நாயானது தவிர்க்கமுடியாத ஒரு குடும்ப உறுப்பினராகிவிட்ட நிலையில், சங்ககாலத் தமிழர்களின் சமுதாயத்தில் எவ்வகையான நாய்கள் இருந்தன என்பதைப் பற்றியும் நாய்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றியும் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளை இங்கே விரிவாகக் காணலாம்.



நாய் - பெயர்க்காரணமும் வேறுபெயர்களும்:



விலங்கியலைப் பொருத்தமட்டிலும் நாயானது கேனிடே ( canidae ) குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கூரிய பற்களைக் கொண்டது என்பது இதற்குப் பொருளாகும். கேனிடே குடும்பத்தில் நாய் உட்பட கூரிய பற்களைக் கொண்ட பலவகையான விலங்குகள் உண்டு. நாயிலும் பலவகைகள் உண்டு. நாம் அன்றாடம் காண்கின்ற தெருநாயாகட்டும் வீட்டுநாயாகட்டும் பலசமயங்களில் தனது நாக்கினை முழுவதுமாக வெளியே நீட்டித் தொங்கவிட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு இவை செய்வதற்குக் காரணம், தனது உடல்வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளவே என்று கூறப்படுகிறது. இப்படி இவ் விலங்குகள் தனது 'நா'வினைத் தொங்கவிட்டபடி இருப்பதால்தான், இவற்றுக்கு 'நாய்' என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.



'நாய்' என்னும் விலங்கினைக் குறிக்கும் வேறுபெயர்களாக ஞாளி, ஞமலி, எகினம், முடுவல் போன்றவற்றைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. 



சங்ககாலத் தமிழர்களும் நாயும்:



இன்றைய காலகட்டத்தினைப் போலவே, சங்ககாலத் தமிழர் சமுதாயத்திலும் நாயானது ஒரு இன்றியமையாத வளர்ப்பு விலங்காக இருந்துவந்துள்ளது என்பதனைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. வீட்டின் காவலுக்கேற்ற ஒரு சிறந்த விலங்காக நாயானது கருதப்பட்டு வளர்க்கப்பட்டு வந்துள்ளது. ஆடு, மாடு, புறா, கிளி, கோழியுடன் நாயினையும் ஒரு வளர்ப்பு விலங்காகச் சங்கத் தமிழர் வளர்த்து வந்துள்ளனர். காவலுக்கு மட்டுமின்றி, வேட்டைத் தொழிலுக்கும் நாய்களைப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். மான், முயல், பன்றி, உடும்பு போன்றவற்றை வேட்டையாடுவதில் நாயின் பங்கு குறிப்பிடத்தக்கது. சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு ஆண்மகன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, கையில் ஒரு வேலுடன் வேட்டைநாய் பின்தொடரச் செல்வது பெருவழக்காக இருந்தது. வீட்டுநாய், வேட்டைநாய்களைப் பற்றி மட்டுமின்றி காடுகளில் வாழும் செந்நாய்களைப் பற்றியும் நீர்நிலைகளில் வாழும் நீர்நாய்களைப் பற்றியும் சங்ககாலப் புலவர்கள் இலக்கியங்களில் பதிவுசெய்து வைத்துள்ளனர். இவற்றைத் தனித்தனியே விரிவாகக் காணலாம்.



வீட்டுநாய்:



வீட்டுநாய் என்று அழைக்கப்படுவதான இது இந்தியத்துணைக் கண்டத்தில் இயற்கையாகக் காணப்படும் நாயினமாகும். இதன் விலங்கியல் பெயர் கேனிஸ் லுபஸ் ஃபெமிலாரிஸ் ( canis lupus familiaris ) ஆகும். இதன் பாரம்பரியம் 15,000 ஆண்டுகளுக்கும் முன் செல்கிறது. இந்த இனம் உலகின் பழமையான நாய் இனங்களில் ஒன்றாகும்.



சங்ககாலத்தில் வீட்டுநாயானது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருடைய வீடுகளிலும் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. எப்போதும் வறுமையில் உழன்ற பாணர்களும் தமது வீட்டில் நாய் வளர்த்துள்ளனர். வறுமையினால் பலநாட்களாக அடுப்பு எரியாதநிலையில், பாணர்கள் தமது வீட்டில் வளர்த்த பெண்நாயானது இன்னும் கண்திறக்காத தனது குட்டிகளுடன் அடுப்பில் படுத்திருக்க, பாலில்லாமல் வற்றியிருக்கும் தனது முலையினைக் குட்டிகள் வாயால் கவ்வி இழுக்கின்ற வலியைப் பொறுக்கமாட்டாமல் குரைத்த செய்தியைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறாநிற்கின்றன.



திறவா கண்ண சாய் செவி குருளை

கறவா பால் முலை கவர்தல் நோனாது

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் - சிறு. 132



சங்ககாலத் தமிழர்களின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயானது காவலுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதைப் பலபாடல்களின் வழியாக அறியமுடிகிறது. வீட்டுக்கு வெளியில் பந்தல்காலில் கட்டி வைக்கப்பட்ட நாயானது காவலில் சிறந்து விளங்கியதைப் பெரும்பாணாற்றுப்படை கீழ்க்காணுமாறு கூறுகிறது.



கணைக்கால் பந்தர் தொடர்நாய் யாத்த துன்னரும் கடி நகர் - பெரும்.125



காதலன் தன்னைச் சந்திக்க இரவுநேரத்தில் தனது வீட்டுக்கு வரும்போது காவலர்களாலும் காவல்நாய்களாலும் அவனுக்கு ஏற்படக்கூடிய இடையூறினைப் பற்றிக் கவலையுடன் கூறுகிறாள் செல்வந்தரின் மகளான ஒருகாதலி.



காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் - குறி.240



காவல்நாயானது வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடுகளுடன் சேர்ந்துகொண்டு வீட்டு முற்றத்தில் துள்ளி விளையாடி மகிழ்ந்திருந்ததைக் காட்டும் சங்கப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை

ஏழகத் தகரோடு உகளும் முன்றில் - பட்.140.



நெல் உழு பகட்டொடு கறவை துன்னா

மேழகத் தகரோடு எகினம் கொட்கும் - பெரும்.326



'நெல்லுக்கு உப்பு வாங்கலியோ' என்று கூவியவாறு உப்புவிற்றுக்கொண்டு தெருவில் வருகின்றாள் ஒரு பெண். அவளது சத்தத்தைக்கேட்ட ஒருநாய் வீட்டுக்கு வெளியே வந்து அவளைப் பார்த்துக் குரைக்க, அப்பெண் அஞ்சி நடுங்குவதனை ஓவியமாகக் காட்டும் அகநானூற்றுப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



நெல்லின் நேரே வெண்கல் உப்பு என

சேரி விலைமாறு கூறலின் மனைய

விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம்.140



செல்வந்தர் வீடுகளில் வளர்க்கப்பட்ட காவல்நாய்களுக்கென்றே தனித்தனியாக ஒருஅறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மரக்கழிகளைக் கொண்டு பொருத்திச் செய்யப்பட்ட ஒருகதவும் இந்த அறைக்கு இருந்தது. சாரல்மழையுடன் குளிர்ந்த காற்று வீசியபோது இந்த அறைக்குள் இருந்த காவல்நாய்கள் குளிரால் நடுங்கிய காட்சியை கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் விளக்குகிறது.



பெயல் உறு தண் வளி போர் அமை கதவ

புரைதொறும் தூவ கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் - நற்.132



வேட்டைநாய்:



தமிழகத்தில் வளர்க்கப்பட்ட வேட்டைநாய்களில் பலவகைகள் உண்டு. இவற்றில் கோம்பைநாய், இராஜபாளையம் நாய், கண்ணி / கன்னி நாய் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை தமிழ்நாட்டுக்கே உரிய வேட்டைநாய் வகைகள் ஆகும். இவற்றின் விலங்கியல் பெயரும் வீட்டுநாயைப் போலவே கேனிஸ் லுபஸ் ஃபெமிலாரிஸ் ( canis lupus familiaris ) ஆகும். பொதுவாக, வீட்டுநாயைக் காட்டிலும் வேட்டையாடும் நாய் அதிக சினமும் அதிக ஆற்றலும் கொண்டது. இதனால் இதனைக் 'கதநாய்' என்றே இலக்கியங்கள் கூறும். வடுகமொழி பயிலும் 'வடுகர்' என்போர் வேட்டையாடுதலையே தொழிலாக உடையவர்கள். இவர்களுடன் வேட்டைநாய் எப்போதும் இருப்பதால் இவர்களைக் 'கதநாய் வடுகர்' என்றே இலக்கியங்கள் குறிப்பிடும்.



கடும் குரல் பம்பை கதநாய் வடுகர்  - நற்.212

கல்லா நீள்மொழி கதநாய் வடுகர் - அகம். 107



வீட்டுநாயினையே சிலர் வேட்டையாடப் பழக்கி வைத்திருப்பதும் உண்டு. மான், பன்றி, முயல், உடும்பு போன்றவற்றின்மீது வேட்டைநாயினை ஏவிவிட்டுப் பிடிப்பர். வேட்டைநாயினை ஏவுவதற்கும் திரும்ப அழைப்பதற்கும் ஊதுகொம்பினை விதம்விதமாக ஊதுவர். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு

வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்

நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே - அகம். 318



கோடு துவையா கோள்வாய் நாயொடு

காடு தேர்ந்து அசைஇய வயமான் வேட்டு - நற்.276



இப்பாடல்களில்வரும் கோடு என்பது ஊதுகொம்பினையும் துவைத்தல் என்பது ஒலித்தலையும் குறிக்கும். வேட்டுவர்கள் வேட்டைநாயின் உதவியுடன் மான், பன்றி, முயல் முதலானவற்றை வேட்டையாடியதைப் பற்றித் தனித்தனியே விரிவாகக் காணலாம்.



மான்வேட்டை:



கொலைவெறியுடன் பாய்ந்த வேட்டைநாயினைக் கண்டு அஞ்சிய மானானது வேடுவர் விரித்த வலையில் சிக்கிய காட்சியினைக் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல்வரிகள் விளக்கும்.



கொலைவெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப

வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல - கலி.23

 

வேட்டுவனின் அம்புகளில் இருந்து தப்பிய சிறியதும் பெரியதுமான மான்களை வேட்டைநாய்கள் பாய்ந்து கொன்றதைக் கூறும் புறநானூற்றுப் பாடல் வரிகள் கீழே:



சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய

மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்

நோன் சிலை வேட்டுவ - புறம் 205



பன்றிவேட்டை:



சிறிய கண்களையும் பெரும் சினமும் கொண்ட ஆண்பன்றி ஒன்றின் உடலெலாம் சேறு அப்பியிருக்க உலர்ந்தநிலையில் பார்ப்பதற்கு அது நீறுபூசியதைப் போலத் தோன்றியது. வேட்டுவன் எறிந்த கூர்முனைகொண்ட நீண்ட கோலானது அப்பன்றியின்மேல் சரியாகப் படவும் அதனை நெருங்கிய வேட்டைநாயானது அதன் பெரிய காதினைக் கடித்து வாயில் கவ்வியவாறு வேட்டுவனைப் பின்தொடர்ந்த காட்சியினை கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றது.



சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்

சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண

வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ

கோள் நாய் கொண்ட கொள்ளை            

கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே - நற்.82



வேடனுடைய வில்லில் இருந்து சீறிய அம்பானது தனது மார்பின்மேல் பாய்வதில் இருந்து தப்பிய ஆண் முள்ளம்பன்றியினை அவனது வேட்டைநாயானது இடைமறித்து ஒருபுறமாக வெருண்டு ஓடச்செய்யவும் அதனைச் சரியாகப் பயன்படுத்தி மறுபடி அம்பெய்து வேட்டையாடிய காட்சியைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.



வன் கை கானவன் வெம் சிலை வணக்கி

உளம் மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு

மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட     

வேட்டு வலம்படுத்த உவகையன் காட்ட - நற்.285



முயல்வேட்டை:



சங்ககாலத் தமிழகத்தில் வேடர்கள் முயல்வேட்டை ஆடிய முறையினைக் கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப் பாடல்வரிகள் தெளிவாகக் கூறுகின்றன.



பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி          

தொகு வாய் வேலி தொடர் வலை மாட்டி

முள் அரை தாமரை புல் இதழ் புரையும்         

நெடும் செவி குறு முயல் போக்கு அற வளைஇ - பெரும்.112



பிளந்த வாயினை உடைய வேட்டைநாயுடன் சென்ற வேடுவர்கள், அங்கிருந்த பசிய புதர்களை எல்லாம் கோல்கொண்டு அடிக்க, அவற்றுள் இருந்து பயந்தவாறு வெளிப்பட்ட வெண்தாமரை மலரின் இதழ்களைப் போல நீண்ட செவிகளை உடைய குறுமுயல்களை வேட்டைநாய்களின் உதவியுடன் போக்குக்காட்டியவாறு வளைத்துச்சென்றுத் தொகுக்கப்பட்ட வேலிபோல விரித்து வைக்கப்பட்டிருந்த வலைக்குள் மாட்டச் செய்தனர் என்று மேற்பாடல் விளக்குகிறது.



செந்நாய்:



இந்தியக் காடுகளில் மிக இயல்பாகக் காணப்படுவதும் செம்மைநிறம் கொண்டதுமான நாய்களைச் செந்நாய் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இதன் விலங்கியல் பெயர் கான் அல்பினஸ் (cuon alpinus ) ஆகும். ஆண் செந்நாய்களின் கழுத்தில் கவிழ்த்ததைப் போன்று அடர்த்தியான மயிர் இருக்கும். கீழ்க்காணும் ஐங்குறுநூற்றுப் பாடல் இதைக் கூறுகிறது.



கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை - ஐங்கு.397



அரம்கொண்டு தேய்த்துக் கூர்மை செய்யப்பட்ட ஊசிகளைப் போல செந்நாய்களின் பற்கள் கூர்மையுடனும் வலிமையுடனும் இருந்ததைக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது. 



அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன

திண் நிலை எயிற்றச் செந்நாய் - அகம்.199



செந்நாயின் பற்கள் பொன்னை உருக்கி வார்த்ததைப்போல ஒளியுடனும் கூர்மையுடனும் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடலும் கூறுகிறது. 



பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று செந்நாய் - அகம்.219



செந்நாய்களின் கண்களைப் பற்றிக் கூறும்போது 'பைங்கண்' என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வரும் பை(த்தல்) என்பது ஒளி(ர்தல்) என்ற பொருளில் வந்துள்ளது. செந்நாயின் கண்கள் இரவு நேரத்திலும் மஞ்சள் நிறத்தில் ஒளிர்வதைப் பார்க்கலாம். ஒளிரும் கண் என்ற பொருளில் பைங்கண் என்ற சொல்லால் குறித்தனர். சில பாடல் சான்றுகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



பைங்கண் செந்நாய் - அகம். 21, நற். 103, குறு. 141.



செந்நாய்கள் குடும்பத்துடன் வாழும் இயல்புடையவை. தனது குட்டிக்காகவும் பெண்நாய்க்காகவும் ஆண்நாயானது வேட்டையாடிக் கொண்டுவந்து உணவினைக் கொடுக்கும். பெண்மான் அலறவும், அதன் துணையாகிய ஆண்மானின் காலை அதன் தொடையுடன் கவ்விக் கிழித்துக் கொண்டுசென்று தனது துணையின் பசியினைப் போக்கிய ஆண் செந்நாயின் செயலைக் கீழ்க்காணும் பாடல் விளக்குகிறது.



பிணவின் உறுபசி களைஇயர்

காடு தேர் மட பிணை அலற கலையின்

ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை - அகம். 285.



ஆண் செந்நாயானது மான்கூட்டத்தின்மேல் பாயவும், அஞ்சி ஓடிய மான்கள் எழுப்பிய 'ஒய்' என்னும் அலறல் ஓசையானது, பூவரச (பூளை) இலையைச் சுருட்டிச் செய்யப்படும் பீப்பியின் குவிந்த முனையில் காற்றைச் செலுத்தி எழுப்பப்படும் ஓசையைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.



செந்நாய் எடுத்தலின் வளி முனை பூளையின்

ஒய்யென்று அலறிய கெடு மான்இன நிரை - அகம்.199



கடுமையான பசி; ஆனால் உண்பதற்கு உணவில்லை. என்ன செய்வோம்?. பசி தெரியாமலிருக்க, ஈரத்துணியை வயிற்றில் கட்டிக்கொண்டு படுத்திருப்போம் இல்லையா?. செந்நாய்களும் இதையேதான் செய்ததாகக் கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் கூறுகிறது.



நீர் அல் ஈரத்து பால் வீ தோல் முலை அகடு

நிலம் சேர்த்தி பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் - நற்.103



ஈரமான நிலத்தில் பால்வற்றிய தோல்முலைகளை உடைய தனது அடிவயிறு படுமாறு படுத்தநிலையில் தனது பசியை அடக்கிக்கொண்டு வேட்டைக்குச் சென்றிருக்கும் ஆண் செந்நாயின் வருகைக்காகக் காத்திருக்கும் பெண்நாயின் நிலையை மேற்பாடல் விவரிக்கிறது.



நீர்நாய்:





நீர்நிலைகளில் வாழ்வதும் பார்ப்பதற்குக் கீரிப்பிள்ளையைப் போலத் தோன்றுவதுமான நீர்நாய்களின் ஆங்கிலப்பெயர் otter (ஓட்டர்) என்பதாகும். இதன் விலங்கியல் பெயர் லுற்றோகல் பெர்ஸ்பிசில்லேட்டா ( lutrogale perspicillata ) ஆகும்.  சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த நீர்நாய்களைப் பற்றியும் சங்கப்புலவர்கள் சிலபாடல்களில் பதிவுசெய்துள்ளனர்.

நீர்நாயின் பற்கள் கூர்மையானவை என்று கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் - அகம். 6

நீர்நாயின் முதுகில் வரிவரியாய் மயிர் இருக்கும் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

அரில் பவர் பிரம்பின் வரிப்புற நீர்நாய் - குறு.364

நீரிலேயே இருக்கும் மீனை வெளியே எடுத்தால் ஒரு வாடை வருமே அதைப்போல நீரிலேயே வாழும் நீர்நாய்க்கும் ஒரு வாடை உண்டு. அதனைப் புலவு நாற்றம் என்று கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

பொய்கை பள்ளி புலவு நாறு நீர்நாய் - ஐங்கு.63

நீர்நாய்க்கு மிகப்பிடித்தமான உணவு மீன் குறிப்பாக வாளைமீன் என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் - அகம். 6
நீர்நாய் வாளையொடு உழப்ப - அகம். 336
நீர்நாய் வாளை நாள்இரை பெறூஉம் ஊரன் - குறு.364, ஐங்கு. 63

வயலில் தேங்கியிருக்கும் நீர், கழிமுக நீர், பொய்கை நீர் போன்றவற்றில் தனக்கான மீன் உணவினை பகற்பொழுதெல்லாம் வேட்டையாடி உண்ணும் நீர்நாய்கள் இரவில் கொடிகள் அடர்ந்த புதருக்குள்ளும் மரங்களின் பொந்துக்குள்ளும் தங்கும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நீர்நாய் முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் - அகம். 6
அரில் பவர் பிரம்பின் வரி புற நீர்நாய் - குறு.364
நீர்நாய் கொழுமீன் மாந்தி தில்லையம்பொதும்பில் பள்ளிகொள்ளும் - நற்.195


நாயின் நாக்கும் பெண்ணின் பாதமும்:



ஓடி இளைத்தநிலையில் வலிமைகுன்றி இருக்கும் நாயானது தனது செந்நிற நாக்கினை வாய்க்கு வெளியே நீட்டித் தொங்கவிட்டவாறு இருப்பதனைப் பார்த்திருக்கிறோம். தொங்கவிடப்பட்ட நாக்கின் வடிவத்தைப் பார்த்தால், அது ஒரே சீராக நீண்டு அதன் இறுதிப்பகுதியில் விரிந்து அகன்று மெலிந்து இருக்கும். இது பார்ப்பதற்குப் பெண்களின் இரண்டு பாதங்களையும் (சீறடி) ஒன்றாக அருகருகே சேர்த்துவைத்ததைப் போலத் தோன்றும். இயல்பாகவே மென்மையான பாதங்களைக் கொண்ட பெண்கள் நெடுந்தொலைவு நடக்கும்போது அவர்களது பாதங்கள் மேலும் மெலிந்து சிவப்பு நிறமடையும். இந்நிலையில், அவர்களது பாதங்களை வடிவம் மற்றும் வண்ண ஒப்புமை கருதி நாயின் நாக்கிற்கு உவமையாகக் கூறுவது சங்ககாலப் புலவர்களின் வழக்கம். அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டிருக்கும் நாயின் நாக்கும் பெண்களின் இணைந்த பாதங்களும் சங்கப்புலவர்களின் உவமை எவ்வளவு நுட்பம் வாய்ந்தது என்பதனைத் தெளிவாக விளக்கும். நாயின் நாக்குடன் பெண்களின் மெல்லிய சிவந்த பாதங்களை ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.



வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி  - பொரு. 42

(பொருள்: வருந்துகின்ற நாயின் நாக்கினைப் போன்ற சிறப்புடைய பாதங்கள்...)



உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ           

வயங்கு இழை உலறிய அடியின் - சிறு. 17

(பொருள்: வருந்துகின்ற நாயின் நாக்கினைப்போல நல்அழகு வாடிய அணியினை உடைய பாதங்கள்...)



மதம் தபு ஞமலி நாவின் அன்ன   

துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி - மலை.42

(பொருள்: வலிமை குன்றிய நாயின் நாக்கினைப் போல தளர்ந்த நடையுடைய மெலிந்த பாதங்கள்....)



முடிவுரை:



சங்ககாலத் தமிழர்களின் சமுதாயத்தில் எவ்வகையான நாய்கள் இருந்தன என்பதைப் பற்றியும் நாய்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றியும் சங்ககால இலக்கியங்கள் கூறுகின்ற செய்திகளை மேலே விரிவாகக் கண்டோம். அதுமட்டுமின்றி, சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கையானது நாயுடன் எவ்வாறு ஒன்றிணைந்து இருந்தது என்பதையும் கண்டோம். சங்ககாலம்தொட்டு இன்றுவரையிலும் மனிதர்களுக்குக் காலம்காலமாக நன்றி உணர்வுடன் பலவகையிலும் உதவிசெய்துவருவதான நாயை அது தெருநாயாக இருந்தாலும் கேவலமாக நினைக்காமல் தயவுசெய்து கொல்லாமல் அன்புகாட்டி ஆதரிப்போம் !.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.