ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

' மலர்மிசை ஏகினான் '


பாடல்:

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வர்' - குறள் எண்: 3

பொருள்:

கலைஞர் உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
சாலமன் பாப்பையா உரை:மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
(நன்றி: திருக்குறள்.காம்)
தவறு:

இப்பாடலில் எழுத்துப் பிழையோ சொற்பிழையோ இல்லை. பொருளில் தான் பிழை உள்ளது. 'மலர்' என்னும் பெயர்ச்சொல்லுக்கு 'விரிந்த பூ' என்று தான் அகராதிகள் பொருள் கூறுகின்றன. 'நெஞ்சம், மனம், அகம்' என்று எந்த அகராதியும் கூறவில்லை. ஒரு சொல்லுக்கு அகராதியில் இருக்கும் பொருட்களை விடுத்து இல்லாத பொருட்களைக் கூறுவதானால் அகராதிகள் ஏன் உருவாக்கப் படவேண்டும்?. இவ்வாறு 'இல்லாத பொருட்களைக் கூறியதாலும் இருக்கும் பொருட்களை விடுத்ததனாலும்' இந்த உரைகள் யாவும் தவறாகவே கொள்ளப்பட வேண்டும்.

' இல்லை இல்லை; இந்த உரைகள் எவையும் தவறில்லை; இங்கே வள்ளுவர் மலரை நெஞ்சத்துடன் உருவகப் படுத்தி/ உவமைப் படுத்தி இருக்கிறார்' என்று கூறலாம். அவ்வாறு கொண்டாலும் பொருள் பொருந்தாது. ஏனென்றால் 'ஏகுதல்' என்ற சொல்லுக்கு ' போதல், கடத்தல், கழலுதல், செல்லுதல்' என்று தான் அகராதிகள் பொருள் கூறுகின்றன. 'நிறைதல், வீற்றிருத்தல், இருத்தல்' ஆகிய பொருட்களை எந்த அகராதியும் கூறவில்லை. எனவே 'மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு ' நெஞ்சமாகிய மலரில் வீற்றிருப்பவன்/இருப்பவன்/நிறைந்தவன்' என்று பொருள் கொள்வது எவ்வகையிலும் பொருந்தாது என்பதைத் தெள்ளிதின் உணரலாம்.

திருத்தம்:

'மலர்மிசை ஏகினான்' என்ற தொடருக்கு 'பரந்த மேலிடமாகிய அண்டவெளியினைக் கடந்துநிற்பவன்' என்பதே பொருள் ஆகும். 'மலர்தல்' என்ற வினைச்சொல்லுக்கு 'விரிதல்,பரவுதல்' என்று பொருள். 'மிசை' என்னும் சொல்லுக்கு 'மேலிடம்' என்றும் பொருள் ஆகும். வினைத்தொகை ஆகிய 'மலர்மிசை' என்பது 'மலர்ந்த மிசை' என்று விரியும். இதற்கு 'பரந்த மேலிடம்' என்று பொருள். இது அண்டவெளியினைக் குறிக்கும். 'மலர்தலை' என்பது பரந்த இடத்தையும், 'மலர்தலை உலகம்' என்பது பரந்த பூவுலகினையும் குறிப்பதைப் போல 'மலர்மிசை' என்பது அண்டவெளியினைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும். 'ஏகுதல்' என்னும் சொல்லுக்கு இங்கே 'கடத்தல்' என்னும் பொருளே பொருத்தமாகும்.

நிறுவுதல்:

இறைவனின் இருப்புநிலையினை உணர்த்த வந்த குறள் இது. அடிமுடி அறிய ஒண்ணாத அமலன் என்று இறைவனைப் பற்றி ஆகமங்களும் புராணங்களும் பக்தி இலக்கியங்களும் கூறுகின்றன. இறைவன் எங்கே இருக்கிறான்? அவனது முடியும்(தலை) அடியும் எங்கே உள்ளன? என்றெல்லாம் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு பல கதைகளும் கூறப்பட்டுள்ளன. உண்மை நிலை தான் என்ன? இக் கேள்வியின் ஒரு பாதிக்கு விடையிறுப்பதாக இக்குறள் இருக்கிறது.

பூமிப்பந்தின் மேல் வாழும் நமக்கு மேலே பரந்து விரிந்து இருப்பது எது? அண்டவெளி தானே. இந்த அண்டவெளியினையும் கடந்து நிற்பவன் இறைவன் என்று வள்ளுவர் அவனது இருப்புநிலையினைக் கூறுகிறார். வள்ளுவர் கூறும் இறைவன் பற்றிய வேறு பல செய்திகளை மற்றொரு கட்டுரையில் காணலாம்.

சரியான பொருள்:

'பரந்த மேலிடமாகிய வெளியினைக் கடந்துநிற்கும் இறைவனின் மாட்சிமை பெற்ற திருவடிகளை அடைந்தவர்கள் பூவுலகில் நெடுங்காலம் நிலைத்து வாழ்வர்.'

------------------------------------வாழ்க தமிழ்!---------------------------------------------

5 கருத்துகள்:

 1. உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் பதிவினைப்ப்றி வலைச்சரத்தில் பிரபு எழுதி இருக்கிறார். சென்று பாருங்கள்.

  http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_23.ஹ்த்ம்ல்

  கிருஷ்ணப் பிரபு.

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி கிருஷ்ணப் பிரபு அவர்களே. வலைச்சரத்தில் திருத்தம் பற்றிய செய்தியைப் பார்த்தேன். பிரபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. எனது கருத்து சற்றே மாறுப்பட்டதாக உள்ளது.
  'மிசை' என்பதன் பொருள் மேலிடம் என்று கொள்வோமாயின், மலரின் மேல் வீற்றிருக்கும் கல்வி கடவுளை அடைந்து கல்வி செல்வம் பெற்றவனும், அண்டங்களை படைக்கும் மா புருஷனாகிய மற்ற கடவுளின் திருவடி சேர்பவனும், நிலவுலகில் எல்லா மேன்மைகளையும் பெற்று நீடு வாழ்வான். என்று இக்குறள் கூறுவதாக தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 4. தவறும் திருத்தமும் நன்று. ஆனால், ‘ நிலமிசை நீடுவாழ்வர்’ என்பதற்கு தட்டையாக பூமியில் அதிக காலம் உயிரோடு இருப்பர் என்பது சரியா? இறைவனின் திருவடிகளில் சரணடைந்தவர்க்கு அதிக ஆயுள் என்பது அப்படி ஒன்றும் பெரிய பேரு அல்லவே? நிலமிசை- நிலத்தில் விரிந்து அதாவது பூமி எங்கும் பரந்து அவர்களது புகழ் நீண்ட காலம் நிலைக்கும் எனக்கொண்டால் தத்துவார்த்தமாகப் பொருந்தும் என நினைக்கிறேன்! :-)

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் திரு.சாணக்கியன். உங்கள் கருத்து மிகச் சரியானதே. பிறப்புடைய எல்லோருக்கும் இறப்பும் உண்டு. ஆனால் இறைவனின் திருவடிகளில் சரணடைந்தவர்கள் இவ் உலகில் புகழ் பெற்று நெடுங்காலம் நிலைத்து வாழ்வர்.

  நன்றி.

  அன்புடன்,

  தி.பொ.ச..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.

முன்னுரை:     ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அம் மொழி சார்ந்த அகராதிகள் எவ்வளவு முக்கியமான பணியைச் செய்கின்றன என்பதை ...