சனி, 25 ஏப்ரல், 2009

' இருள்சேர் இருவினை '


பாடல்:

' இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'
- குறள் எண்: 5

தற்போதைய விளக்கம்:

கலைஞர் உரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
சாலமன் பாப்பையா உரை: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

தவறு:

இப்பாடலில் ஒரு எழுத்துப் பிழையும் ஒரு பொருட்பிழையும் உள்ளது. முதலில் பொருட்பிழையினைக் காணலாம். ' இருள்சேர் இருவினை' என்ற தொடருக்கு 'அறியாமையினால் விளையும் நல்வினை, தீவினை' என்று பொருள் கூறி இருப்பது முரண்பாடான கருத்தாகும். இதற்குக் காரணம் 'இருள்' என்னும் சொல்லாகும். இச் சொல்லுக்கு எவ்விதமான பொருளும் கலைஞர் உரையில் கூறப்படவில்லை. ஏனை இரண்டு உரைகளிலும் 'அறியாமை' என்னும் பொருள் கூறப்பட்டுள்ளது. இப் பொருள் இவ்விடத்தில் பொருந்தாத ஒன்றாகும். ஏனென்றால் நல்வினையோ தீவினையோ யாரும் மயக்கநிலையில் அதாவது அறிவு மயங்கிய நிலையில் இருந்துகொண்டு செய்வதில்லை. செய்யும் செயல் நல்லது என்றும் கெட்டது என்றும் தெளிவாகத் தெரிந்துகொண்டு தான் அச் செயலைச் செய்கிறோம். அன்றியும் நமக்குத் தீமையாகத் தோன்றும் ஒரு செயல் மற்றவருக்கு நன்மையாகத் தோன்றுகிறது. நமக்கு நன்மையாகத் தோன்றும் ஒரு செயல் மற்றவருக்குத் தீமையாகத் தோன்றுகிறது. நன்மை தீமை குறித்த கருத்து வேறுபாடுகள் மனிதருக்குள் எல்லாக் காலத்திலும் உண்டு. அதனால் தானே நாட்டில் குற்றங்கள் நிகழ்கின்றன. கொலை செய்யும் ஒருவன் அதைக் குற்றம் என்று தெரிந்து கொண்டுதானே செய்கிறான்?. இல்லை அவன் அறியாமல் செய்கிறானா?. கொலை செய்வது குற்றம் என்று நன்றாகத் தெரிந்துகொண்டே தனது குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள அதை அவன் செய்கிறான். நல்லது செய்யும் ஒருவன் அது நன்மை தரும் என்று நன்றாக அறிந்துகொண்டே அதைச் செய்கிறான். இது தான் உண்மை. எனவே நன்மையும் தீமையும் அறியாமையினால் வருகிறது என்னும் பொருள் பொருத்தமற்றது என்று தெளியலாம்.

அடுத்து எழுத்துப் பிழையினைக் காணலாம். இரண்டாம் அடியில் வரும் 'புகழ்' என்னும் சொல்லுக்கு 'கீர்த்தி, பெருமை' என்று பொருள் கொள்ளப்பட்டு உள்ளது. இப்பொருளை அடிப்படையாக வைத்தே இப்பாடலின் முழு விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. இறைவனின் உண்மைப் புகழை விரும்புவோரிடத்து நல்வினையும் தீவினையும் சேராது என்று கூறுவது ஏற்புடைய கருத்தாகுமா என்பதைப் பார்ப்போம். கடவுள் இல்லை என்போரைக் காட்டிலும் இருக்கிறார் என்று நம்புவோரே இவ்வுலகில் அதிகம் என்பது நாம் அறிந்த உண்மை. கடவுளின் இருப்பினை ஏற்றுக்கொண்ட அனைவருமே கடவுளைப் போற்றி வணங்குபவர்களே அதாவது கடவுளின் புகழை விரும்புபவர்களே என்பதும் உண்மை. குறளுக்குக் கூறப்பட்டு உள்ள கருத்தின்படி இவர்களின் வாழ்க்கையில் நன்மையும் தீமையும் நடக்கக்கூடாது. அப்படியே நடந்தாலும் அவை இவர்களைப் பாதிக்கக் கூடாது. ஆனால் உண்மை நிலை என்ன?. இறைவனுக்கு அணுக்கமாக இருந்து எப்போதும் போற்றி வழிபடும் பூசாரிகள் உட்பட அனைவரின் வாழ்விலும் நன்மையும் தீமையும் நிகழ்ந்து பாதிக்கத்தானே செய்கிறது. இப்படி நடைமுறைக்கு ஒவ்வாத கருத்தினை வள்ளுவர் ஒருநாளும் கூறமாட்டார் என்பதால் இப் பொருளில் பிழை உள்ளது என்று அறியலாம். குறிப்பாக புகழ் என்னும் சொல்லில் தான் பிழை உள்ளது. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

இருள் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு. இங்கு அது அறியாமையினைக் குறிக்காமல் உருவகமாக விதியினைக் (ஊழ்) குறிக்கும் என்பதே திருத்தம் ஆகும். புகழ் என்னும் சொல்லுக்குப் பதிலாக 'புகல்' என்று வருவதே திருத்தம் ஆகும். புகல் என்னும் சொல்லுக்கு 'அடைக்கலம், சரண், தஞ்சம்' என்று பொருள். 'புகல்புரிந்தோர்' என்றால் 'சரணடைந்தோர்' என்று பொருள்.

நிறுவுதல்:

இறைவனின் திருவடிப் பெருமையினைக் கூறும் பல குறள்களுள் இதுவும் ஒன்று. விதிவசத்தால் மாந்தர் வாழ்வில் நன்மையும் தீமையும் நடப்பது இயல்பே ஆகும். புறநானூற்றில் வரும் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்னும் பாடல் (எண்: 192) இக் கருத்தினையே ஆதரிக்கிறது. வள்ளுவரும் இந்த விதியினைப் பற்றி 'ஊழ்' என்னும் அதிகாரத்தில் விரிவாகக் கூறியுள்ளார். உயர்ந்த நிலையில் உள்ளோரைக் கீழ்நிலைக்கும் கீழ்நிலையில் உள்ளோரை உயர்ந்த நிலைக்கும் கொண்டு செல்லும் வல்லமை படைத்த இந்த விதியானது பிறரால் அறிய முடியாதது ஆகும். நன்மையும் தீமையும் நமக்கு அருகில் தான் மறைந்து உள்ளது விதியின் வடிவத்தில். அண்டவெளி எங்கும் இருளே நிறைந்திருப்பது போல விதியானது எல்லா இடங்களிலும் மறைந்தே இருப்பதால் விதியினை இருள் என்று உருவகப் படுத்திக் கூறுகிறார்.

எவ்வளவு நன்மைகள் செய்தாலும் தீமைகள் செய்தாலும் விதியினின்று தப்பிக்க முடியாது. என்றால் இந்த விதியினை வெல்லும் வழி தான் என்ன?. இறைவனைத் தஞ்சமாகப் புகுதல் ஒன்றே இதற்கான வழி. இதைத்தான் இந்தக் குறள் நமக்கு உணர்த்துகிறது.

விதியினை இருளாக உருவகப் படுத்திக் கூறிய வள்ளுவர் அதனை வெல்லும் வலிமை கொண்ட இறைவனின் திருவடிகளைப் பொருளாக உருவகப் படுத்திக் கூறுகிறார். இனி வள்ளுவர் கூற வரும் பொருள் இது தான்: 'இறைவன் தரும் பொருளாகிய திருவடிகளைச் சேர்ந்து சரணடைந்தவர்களிடத்து இருள் ஆகிய விதி தருகின்ற நன்மையும் தீமையும் சேர்வதில்லை.'

சரியான பாடல்:

' இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகல்புரிந்தார் மாட்டு.'
................................வாழ்க தமிழ்!.....................................

5 கருத்துகள்:

  1. அன்பு வேந்தன்சரவணன் அவர்களுக்கு,
    "இருள்சேர் இருவினையும் சேரா" என்னும் இக்குறளில் இருள் என்னும் சொல்லுக்கு உரியபொருள் கண்டால் குறளின் நேர்பொருள் காணலாம்.அண்டவெளி இருளைப்போல் பிறப்பீனும் கருவறையும் இருள்சேர்ந்ததே. ஆதலின் கருவறைத் தொழிலாம் பிறப்பைச் சுட்டும். பிறப்பீனும் நல்வினை தீவினை இறைவனின் புகழ்புரிந்தார்மாட்டு சேரா என்பதே இயல்பொருளாகும்."எல்லாப்புகழும் இறைவனுக்கே!அனைத்தும் அவன்செயலே, சிவன்செயலே என்று இருப்பதே புகழ்புரிந்தார்மாட்டு எனும் சொல் சுட்டும்.பிறப்பை ஆள்வது ஊழாக இருக்கலாம். பிறப்பைத் தருவது நல்வினை, தீவினை தான்.பிறப்பின்றேல் ஊழ் எங்கே வரும்?.எனவே "இருள்சேர்" ஊழைச் சுட்டாது.
    அன்புடன்.
    மீ.க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காமம் வெகுளி மயக்கம் உடையவை தெய்வம் அல்ல என்பதை அறிதல் வேண்டும் .தீவினை நல்வினை ஆகியவை இருவினைகள் .இவை பிறவி சுழற்சிக்கு காரணம் ஆகிறது .பிறவிகள் எத்தகையது ஆயினும் அவை இருளுக்கும் காரணம் ஆகின்றன என்பதை உணர்தல் வேண்டும் .இறைவன் என்பவன் மீண்டும் பிறவா நிலை பெற்றவன். நல்வினை தீவினைகளை தவிர்த்தவன். அத்தகைய இறைவன் காட்டிய பாதையை சிந்தித்து அவன் வழி செயல்படுபவன் புகழ் அடைகிறான்.
      பேரணி ஸ்ரீதரன்

      நீக்கு
  2. "இருள்சேர் இருவினையும் சேரா"
    - இவ்விடத்தில் "இருள்" என்பது தீமை, கெடுதல் எனக் கொள்ளலாம். ஆக, தீமை விளைவிக்கும் இருவினையும் சேரா. அவ்விருவினைகள் "செயல் வினை" மற்றும் "ஊழ்வினை". செயல் வினை நாம் அறிந்து செய்யும் வினை. ஊழ்வினை விதிப்படி நடப்பது.

    யாரிடம் இவ்விருவினையும் சேரா? "இறைவன்
    பொருள்சேர் புகழ் புரிந்தாரிடம்".
    - இறைவன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பலர் இருக்கலாம். இறைவன் சந்நிதியில் இறை சேவை செய்பவராகவும் இருக்கலாம். ஆனால், யார் "இறைவன்" என்பதற்க்குச் சரியான பொருளைப் புரிந்து அவனை வழிபடுகிறார்களோ, அவர்களிடமே இருள்சேர்க்கும் இருவினையும் சேரா.

    -தமிழ் மாணவன்.

    குறிப்பு: விளக்கத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும். திருத்தவும்.

    பதிலளிநீக்கு
  3. http://saivasiddanthambasics.blogspot.in/
    visit the above site to get explanation for this thirukkural

    பதிலளிநீக்கு
  4. விருப்பு வெறுப்பு என்று பொருள் கொள்ள வேண்டும் விருப்பு ஆசை வெறுப்பு அன்பு இன்மை இதில் கருணாநிதியும் பாப்பையாவும் எங்கிருந்து வந்தார்கள் ?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.