வியாழன், 17 செப்டம்பர், 2009

இந்திரனே சாலும் கரி

பாடல்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி.
                                                  - குறள் எண்: 25.

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.
மு.வ உரை: ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை: அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

தவறுகள்:

மேற்காணும் உரைகளில் முதல் உரையானது குறளுக்கு முற்றிலும் மாறுபட்டதொரு கருத்தினைக் கூறுகிறது. இது எவ்வாறென்றால் ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்று காட்டுவதே இக் குறளின் நோக்கமாக இருக்க கலைஞரின் உரையோ ஐம்புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்று கூறுகிறது. குறளின் நோக்கத்திற்கு மாறாக இவ் உரை அமைந்திருப்பதால் இது தவறு என அறியலாம். அடுத்த இரண்டு உரைகளும் ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாக இந்திரனைக் கூறுகின்றன. இது விந்தையிலும் விந்தை ஆகும்.

இந்திரன்-அகலிகை-கௌதமன் ஆகியோரின் முக்கோணக் காமக்கதை நாடறியும். பலர் பலவிதங்களில் இக் கதையினைக் கூறினாலும் ஒன்று மட்டும் உண்மை. இந்திரன் புலனடக்கம் இன்றி அகலிகையின் மேல் காம விருப்பம் கொண்டு அவளை அடைய முயன்றான் என்பதே அது. இதிலிருந்து இந்திரன் புலனடக்கம் இல்லாதவன் என்பது மிகத் தெளிவாக அறியப்படுகிறது. இப்படிப்பட்ட ஒருவனை திருவள்ளுவர் ஐம்புலன் அடக்கியவரின் ஆற்றலுக்குச் சான்றாகக் கூறுவாரா? ஒருபோதும் மாட்டார். வள்ளுவரின் சான்றாண்மைக்கு மாறாக இந்த இரண்டு உரைகளும் அமைந்திருப்பதால் அவையும் தவறாகவே கொள்ளப்படும். இந்தத் தவறுகளுக்குக் காரணம் ஒரு சில எழுத்துப் பிழைகளே ஆகும்.

திருத்தம்:

இக் குறளில் வரும் கோமான் என்னும் சொல் கோமன் என்று வரவேண்டும். மேலும் இக் குறளின் சரியான பொருளை அறிய முதல் அடியைக் கீழ்க்காணுமாறு பிரிக்க வேண்டும்.

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புள் ஆர்கோ மன்

மேற்காணும் அடியில் வரும் மன் என்பது ஒரு பொருளற்ற அசைச்சொல் ஆகும்; ஆர்தல் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இச் சொல் இங்கு 'பரவுதலைக்' குறிக்கும். இரண்டாம் அடியில் வரும் இந்திரன் என்ற சொல் ஐந்திரன் என வரவேண்டும். இச் சொல் இங்கு ஞாயிற்றைக் குறிக்கும்.

எனவே இக் குறளின் சரியான பொருள்: ' ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றல் (பூவுலகினைக் கடந்து) அகன்ற வானத்தில் பரவிநிற்குமோ?. (பரவிநிற்கும் போலும்). இதற்குக் கதிரவனே போதுமான சான்று ஆவான்.' என்பதாகும்.

நிறுவுதல்:

ஐம்புலன்களின் அடக்கத்தினால் பெறப்படும் ஆற்றலின் சிறப்பினை விளக்க முற்பட்ட வள்ளுவர் இக் குறளில் கதிரவனையே அதற்குச் சான்றாகக் கூறுகிறார். ஏனென்றால் கதிரவனின் ஆற்றல் எத்தன்மையது என்று உலகமே அறியும். ஆம், அளப்பரிய ஆற்றலுடன் அண்டமெல்லாம் தனது ஒளியைப் பரப்பிக் கோலோச்சி விளங்குகின்றான் கதிரவன். இக் கதிரவன் இன்றேல் பூமிக்கு வெளிச்சம் இல்லை; வெப்பம் இல்லை; மழை இல்லை; ஏன் எதுவுமே இல்லை எனலாம். நமது பூமிக்கு மட்டுமல்லாது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு கோள்களின் இயக்கத்திற்கும் வளமைக்கும் கதிரவனே காரணம் ஆவான். இவனே நடுநாயகமாய் வீற்றிருந்து ஏனைக் கோள்களை எல்லாம் கட்டுப்படுத்தித் தன்னைச் சுற்றி வரச் செய்கிறான். இவ்வளவு ஆற்றல் மிக்க இக் கதிரவன் அதிகாலையில் தோன்றுவது கிழக்குத் திசை ஆகும். இந்த கிழக்குத் திசைக்கு ஐந்திரம் என்றொரு பெயரும் உண்டு. (சான்று: பிங்கல நிகண்டு - வான்வகை). ஐந்திரம் ஆகிய கிழக்குத் திசையில் தோன்றுவதால் கதிரவனுக்கு ஐந்திரன் என்ற பெயர் வந்தது. எனவே ஐந்திரன் என்பது கதிரவனையே குறிக்கும் என்பது தெளிவு.

சரி, ஐம்புலன்களை அடக்கியோரின் ஆற்றலுக்குக் கதிரவனை ஏன் சான்று கூறவேண்டும்?. இதைப் பற்றிக் காணலாம். ஐம்புலன்களை அடக்குவதன் மூலம் பல ஆற்றல்களைப் பெறலாம் என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இந்த ஆற்றல்கள் எண்வகைப்படும். இவற்றை அட்டமா சித்திகள் என்று கூறுவர். அவை: அணிமா (வடிவத்தை சுருக்குதல்), மகிமா(வடிவத்தைப் பெரிதாக்குதல்), இலகிமா(உடலை இலேசாக்கிப் பறத்தல்), கரிமா (அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்குதல்), பிராத்தி (விரும்பியவற்றைக் கண்முன்னே கொணர்தல்), பிராகாமியம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்), ஈசத்துவம் (அனைத்து உலகிலும் ஆணை செலுத்துதல்) மற்றும் வசித்துவம் (அனைத்தையும் தன்வசப்படுத்துதல்) ஆகும். இந்த ஆற்றல்களின் உதவியால் ஒருவன் வானில் உள்ள பல கோள்களைக் கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு ஐம்புலன் அடக்கியோரின் ஆற்றல் வானில் பரந்து விரிந்து கோலோச்சும் தன்மை கொண்டதால் அதற்குக் கதிரவனை சான்றாகக் கூறினார் வள்ளுவர்.

சரியான குறள்:

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோன்
ந்திரனே சாலும் கரி.
....................................................................

2 கருத்துகள்:

 1. உரைகளில் தவறுகள் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே

  தங்கள் விளக்கமும் பொருத்தமாக இருக்கிறது,

  தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

  வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 2. இந்திரன் என்னும் சொல்லாட்சி மருத நிலத்தின் அதிபதியையும் குறிக்கும் அல்லவா? இக்குறளில் வருவது வானுலக அரசனான இந்திரன் அல்ல என்றால்... தமிழ் ஐந்திணைப் பகுப்பில் ஒன்றான மருத நிலத்து அதிபதியான கடவுள் இந்த்ரனும் அல்ல என்று நிறுவ வேண்டி யுள்ளது பற்றி தங்கள் கருத்து ஏதேனும்?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.