பாடல்:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பிமிச்சில் மிசைவான் புலம்
- குறள் 85
தற்போதைய பொருள்:
கலைஞர் உரை: விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?.
மு.வ உரை: விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?.
சாலமன் பாப்பையா உரை: விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?.
தவறுகள்:
மேற்காணும் மூன்று உரைகளும் தவறான பொருளையே உணர்த்துகின்றன. கலைஞரின் உரை மேற்காணும் குறளுடன் தொடர்புடையதாகவே இல்லை. அவரது உரையில் 'வித்தும் இடல்வேண்டும் கொல்லோ' என்ற தொடருக்கு 'விதையைக் கூட (உணவளிக்கப்) பயன்படுத்தாமல் இருப்பானா?' என்று பொருள் கூறப்பட்டுள்ளது. இது சற்றும் பொருத்தமற்றது ஆகும். ஏனென்றால் 'கொல்லோ' என்ற சொல்லுக்கு 'இருப்பானா' என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை என்பதுடன் கொல், கொல்லோ ஆகிய சொற்கள் அடிப்படையில் பொருளற்ற அசைச்சொற்கள் ஆகும். தற்காலத்தில் இவை ஆ, ஓ ஆகிய ஈற்றசைச் சொற்களாகப் பயன்படுத்தப் படுகின்றன.
மு.வ.உரையிலும் சா.பா.உரையிலும் 'விருந்தோம்பலில் சிறந்தவனின் நிலத்தில் விதைக்காமலேயே உணவுப் பயிர் விளையும்' என்ற பொருள் தொனிக்கிறது. இது நடைமுறையில் சாத்தியமா?. ஒரு விளைநிலத்தில் விதைக்காமல் எவ்வாறு உணவுப் பயிர் விளையும்?. நெல் வேண்டுமென்றால் நெல்லைப் பயிரிட வேண்டும்; கோதுமை வேண்டுமென்றால் கோதுமையைப் பயிரிட வேண்டும். எதையுமே விதைக்காமல் ஒரு விளைநிலத்தில் பயிர் விளைகிறது என்றால் அது உறுதியாக உணவுப் பயிராய் இராது; நமக்கு வேண்டாத ஒரு களையாகவே இருக்கும். ஏனென்றால் எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்ய இயலும். இது அறிவியல் உண்மை. இந்த அறிவியல் உண்மைக்குப் புறம்பாக திருவள்ளுவர் கருத்து கூறி இருக்கமாட்டார் என்பதால் மு.வ.உரையும் சா.பா.உரையுமே தவறானவை எனத் தெளியலாம். இத் தவறுகளுக்குக் காரணம் 'வித்து' என்ற சொல்லுக்கு 'விதை' என்ற பொருளைக் கொண்டது தான். இப் பொருள் இக் குறளில் பொருந்தாது.
புதுப்பொருள்:
வித்து என்ற சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன. ஆனால் திருவள்ளுவரோ இச் சொல்லை புதியதோர் பொருளில் கையாண்டுள்ளார். 'நீர் அல்லது ஈரம்' என்பதே அப் பொருள் ஆகும். இப் புதிய பொருளின்படி, மேற்காணும் குறளுக்கு இவ்வாறு பொருள் உரைக்கலாம்: விருந்தினரைப் போற்றியதுபோக எஞ்சியதை உண்கின்றவனின் விளைநிலத்தில் (பயிர்கள் விளைய) நீர் பாய்ச்சவும் வேண்டுமோ?'.
நிறுவுதல்:
வேளாண்மை அறிவியலின்படி ஒரு பயிர் விளைவதற்கு விதை,நீர்,நிலம்,வெளிச்சம், வெப்பம் போன்றவை தேவைப்படுகின்றன. இவற்றில் வெளிச்சமும் வெப்பமும் நிலத்திற்குக் கதிரவனின் கொடை ஆகும். விதையும் நீருமே நமது முயற்சியால் நிலத்திற்கு அளிக்கப்படுவன. இவ் இரண்டில் விதை இல்லாமல் எதுவும் விளையாது என்பதால் வேளாண்மையின் வெற்றியானது நீர் பாய்ச்சுதலைப் பொறுத்தே அமைவதாகிறது. பயிர்கள் செழித்துவளர மட்டுமின்றி விதைகள் முளைவிடவும் நீரே தேவைப்படுகிறது. ஈரத்துணியில் கட்டிவைக்கும் பயறுகள் முளைவிடுதலே இதற்குப் போதுமான சான்றாகும். இவ்வளவு இன்றியமையாத நீரைப் பாய்ச்சாமல் இருந்தாலும் சிறப்பாக விருந்தோம்பல் செய்வானின் நிலத்தில் பயிர்கள் செழித்து வளரும் என்று கூறுகிறார் வள்ளுவர். இது எப்படிச் சாத்தியமாகும் என்று பார்ப்போம்.
மனிதனை மனிதனாகவே வாழச்செய்யும் பல பண்புகளில் விருந்தோம்பல் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுகிறது. விருந்தோம்பலின் முதல் கட்டம் தன் இல்லம் தேடி வந்த விருந்தினரை இன்மொழிகளால் வரவேற்று இல்லத்தில் தங்கச் செய்தல் ஆகும். அதன்பின் அவரது குறைகளைக் கவனத்துடன் கேட்டறிதல் இரண்டாவது கட்டம் ஆகும். விருந்தினரின் பொருட்பிணியினை நீக்கும் வல்லமை இல்லாவிட்டாலும் அவரது பசிப்பிணியையாவது தீர்க்கவேண்டும் என்பதே விருந்தோம்பலின் இன்றியமையாத மூன்றாவது கட்டம் ஆகும். இந்த மூன்று செயல்களையும் யார் எப்போதும் எந்த நிலையிலும் செம்மையாகச் செய்கிறார்களோ அவரது வீட்டில் திருமகள் என்றென்றும் நீங்காமல் தங்கி இருப்பாள் என்று 84 ஆம் குறள் கூறுகிறது. ஆனால் எல்லா மக்களும் இவ்வளவு செம்மையாக விருந்தோம்பலைக் கடைப்பிடிப்பதில்லை.
எவ்வகை குருதித் தொடர்பும் நட்பும் அற்ற மக்களை இல்லத்திற்குள் அழைத்துச் சென்று உணவளித்து முகம் கோணாமல் மகிழ்விக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை உயிர்களின் மேல் இரக்கம் ஆகும். எனவே பிறரது துன்பத்தைத் தனது துன்பமாக நினைத்து உதவுகின்ற மேன்மக்களால் மட்டுமே விருந்தோம்பலில் சிறக்க முடியும். இந்த மேன்மக்களின் நெஞ்சில் எப்போதும் ஈரம் ஆகிய இரக்கம் இருப்பது போல் அவரது விளைநிலத்தின் நெஞ்சிலும் ஈரம் எப்போதும் இருக்கும் என்கிறார் வள்ளுவர். இது எவ்வாறெனில்
பூமித்தாயே திருமகள் என்பதால் நெஞ்சில் ஈரமுடைய மேன்மக்களது விளைநிலத்தில் மட்டும் திருமகள் நீரின் வடிவாக எப்போதும் வீற்றிருந்து வளம் குறையாமல் காப்பாள். இதனால் அவரது விளைநிலத்திற்கு நீர் பாய்ச்சுகின்ற தேவை இல்லை என்பதே இக் குறளின் மூலம் வள்ளுவர் உணர்த்த வரும் கருத்தாகும்.
மேற்காணும் குறள் தவிர 24, 138, 361 ஆகிய குறள்களில் வித்து என்ற சொல்லை நேரடியாகவும் 235 ஆம் பாடலில் மறைமுகமாகவும் பயன்படுத்தி உள்ளார் செந்நாப்புலவர். இவை அனைத்திலும் வித்து என்ற சொல் நீர் அல்லது ஈரத்தையே குறிக்கிறது. 235 ஆம் பாடலின் விளக்கத்தினை ஏற்கெனவே நாம் சங்கே முழங்கு என்னும் தலைப்பின் கீழ் திருத்தத்தில் கண்டுள்ளோம். 24 ஆம் பாடலின் விளக்கத்தினை தனிக் கட்டுரையின் கீழ் காணப்போவதால் இங்கே ஏனை இரண்டு குறள்களை மட்டும் காண்போம்.
(138) நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - 'நன்மை என்னும் பயிர் விளைய நல்லொழுக்கம் என்னும் நீரைப் பாய்ச்சவேண்டும். மாறாக தீயொழுக்கம் என்னும் நீரைப் பாய்ச்சினால் வறுமை என்னும் பயிரே விளையும்' என்பதுவே இக் குறளின் சரியான பொருளாகும். இக் குறளில் ஒழுக்கத்தை நீராக உருவகப் படுத்தியுள்ளார் வள்ளுவர். இது மிகவும் சரியாகும். ஏனென்றால் இரண்டுமே ஒழுகும் தன்மை கொண்டவை. இக் குறளின் மூலம் வள்ளுவர் உணர்த்த வரும் கருத்தானது: நல்லொழுக்கம் என்பது பயிர்களுக்கு நன்னீரைப் பாய்ச்சுதலுக்கு ஒப்பாகும். தீயொழுக்கம் என்பது பயிர்களுக்கு கழிவுநீரைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும் என்பதே ஆகும். நன்னீரைப் பாய்ச்சினால் நல்ல வளமான பயிர்களைப் பெற்று செழிப்புடன் வாழலாம். கழிவுநீரைப் பாய்ச்சினால் பயிர்கள் நோய்வாய்ப்பட்டு வாடிவிடும். இதனால் வறுமையே உண்டாகும். அதைப்போல நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் நன்மைகள் பெறலாம்; தீய ஒழுக்கத்தினால் வறுமையும் நோயுமே மிகும் என்கிறார் வள்ளுவர். இது அறிவியல் உண்மை என்பதால் இக் குறளிலும் வித்து என்பது நீர்ப்பொருளையே குறித்து நிற்கிறது என்று தெளியலாம்.
(361) அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாப் பிறப்பீனும் வித்து - ' (இவ்வுலகில்) அனைத்து உயிர்களுக்கும் பிறப்பினைத் தவறாமல் அளிப்பது ஆசை என்னும் ஈரப்பசையே ஆகும்' என்பதே இதன் சரியான பொருளாகும். பிறப்பு, மறுபிறப்பைப் பற்றிப் பல சமயங்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றன. அவற்றில் ஒன்று தான்: 'இறக்கும் தருவாயில் ஒருவன் நெஞ்சில் கொள்ளும் ஆசையே அவனது மறுபிறவிக்குக் காரணமாக அமைகிறது' என்ற இந்து சமயக் கொள்கை ஆகும். புத்த மதமும் இதே கொள்கையைத் தான் கூறுகிறது. இந்த ஆசையானது ஒரு பொதுநல விருப்பமாகவும் இருக்கலாம்; சுயநல விருப்பமாகவும் இருக்கலாம். பொதுநலம் சாரும்போது அது இரக்கம் என்னும் பெயர் பெறுகிறது. சுயநலம் சாரும்போது அது வேட்கை எனும் பெயர் பெறுகிறது. 'பிறருக்கு உதவிசெய்ய இயலவில்லையே; அடுத்த பிறவியிலேனும் இதை நிறைவேற்ற வேண்டும்' என்ற ஆசை உயர்வானது; இரக்கம் சார்ந்தது. 'இவற்றை எல்லாம் அனுபவிக்க இயலவில்லையே; அடுத்த பிறவியில் இவற்றை அடைந்துவிட வேண்டும்' என்ற ஆசை இழிவானது; வேட்கை சார்ந்தது. எது எவ்வாறாயினும் விதையில் சிறிதளவு நீர்ப்பசை இருந்தாலும் அது முளைவிட்டு விடுவதைப்போல நெஞ்சில் சிறிதளவு ஆசை(இரக்கம்/வேட்கை) இருந்தாலும் அது மறுபிறவிக்கு வழிவகுத்து விடும் என்கிறார் வள்ளுவர். இதில் அறிவியல் உண்மையும் கலந்திருப்பதால் இக் குறளில் வரும் வித்து என்ற சொல் நீர்ப்பசையாகிய ஈரத்தையே குறிக்கும் என்று தெளியலாம்.
நல்ல விளக்கம். இதே போல காமம் என்ற சொல்லுக்கு இழிவான பொருள் கற்பிக்கப் படுகிறது என்று முனைவர். மொ.அ.துரை அரங்கசாமி தமது `காமத்து பாலா, இன்பத்து பாலா`என்ற நூலில் எழுதியுள்ளார். இது பற்றிய தங்களின் கருத்தை அறிய விழைகிறேன்.
பதிலளிநீக்குவலிந்து பொருள்கொள்ளும் வல்லவரே!
பதிலளிநீக்குவணக்கம். இடு, இடுகை, இடல் யாவும் வினை சுட்டும் சொற்கள். உணவை உண் என்பார்கள் ; நீரைப்
பருகு (அ) அருந்து (அ) குடி என்பார்கள். எனவே, வினைச்சொல் எழுவாயைச் சுட்டும். உணவு கட்டிப்பொருள் என்பதை உண் என்ற சொல்லும், உணவு நீர்ப்பொருள் என்பதை பருகு என்ற சொல்லும்
சுட்டுவதுபோல் 'இடல்வேண்டும்' என்ற வினை கெட்டிப்பொருளான வித்தெனும் விதையையே சுட்டும். பெய், பாய் எனும் வினைச்சொல் நீர்ப்பொருளுக்கு உரியதே. நீர்ப்பொருளை இடு என்று யாரும் கூறார்.
அன்புடன்,
மீ.க.
சற்று முன் இட்ட என் கருத்துரை இடம் பெறவில்லையே. ஏன்?
பதிலளிநீக்குஅன்புடன்,
மீ.க.
ஐயா இடுதல் என்ற சொல்லுக்கு சொரிதல் என்ற பொருளும் உண்டு. இதை அகராதியில் காணலாம். வித்தும் இடல்வேண்டும் கொல்லோ என்பது நீரையும் சொரிய வேண்டுமோ என்ற பொருளில் இங்கே வந்துள்ளது.ஒன்றைத் தயவுசெய்து நினைவு கொள்ளுங்கள். எதையும் இட்டுக் கட்டிக் கூறுபவனல்ல நான். இருப்பதைச் சொல்கிறேன். அவ்வளவே.
பதிலளிநீக்குஉண்மை திரு.வீரராகவன். காமம் என்ற சொல் உடலுறவைக் குறிக்காது. காதலையே குறிக்கும். இதை நான் தக்க ஆதாரங்களுடன் ஒரு கட்டுரையில் விரைவில் தெரிவிப்பேன். நன்றி.
பதிலளிநீக்குமீ.க. ஐயா, தமிழில் இன்ன சொல் இந்த பயன்பாட்டிற்குத் தான் என்ற அதிக வரையறை இல்லை. பெய் என்பது நீர்ப்பொருளுக்குத் தான் என்றில்லை; திடப்பொருளுக்கும் உண்டு. இதற்கு பீலிபெய் சாகாடும் என்ற குறளை சான்றாகக் கூறலாம். நன்றி.
பதிலளிநீக்கு