சனி, 12 செப்டம்பர், 2009

உரன் என்னும் தோட்டி

பாடல்:

உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து.
                               - குறள்: 24

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை:உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.
மு.வ உரை:அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை:மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளுமே ஒரு விந்தையான பொருளை உணர்த்துகின்றன. அது என்னவெனில் ஐம்பொறிகளையும் அடக்கிக் காக்கும் ஒருவனை மூன்று உரைகளுமே 'ஒரு விதை' என்று கூறுவதே ஆகும். இவ்வளவு வல்லமை பொருந்திய ஒருவனை 'நிலத்திற்கேற்ற விதை' என்றும் 'வீட்டுலகிற்கு ஏற்ற விதை' என்றும் கூறுவது விந்தையாக உள்ளது. அதென்ன விதை?. இப் பொருளின் ஆழம் என்ன என்று ஆராய்ந்தபோது பரிமேலழகரின் உரையில் இதற்கான விளக்கம் கிட்டியது. அவர் இதை ஏகதேச உருவகம் என்று கூறுகிறார். அவரது உரைப்படி ஐம்பொறிகளையும் அடக்கிய ஒருவன் மேலான வீட்டுலகிற்கு ஒரு விதையாகச் சென்று அங்கேயே முளைப்பான்; மீண்டு இங்கே வாரான் அதாவது அவனுக்கு மறுபிறப்பில்லை என்பதாகும். பரிமேலழகரின் உரை சரியா என்று பார்ப்போம்.

அவரது உரையில் ஐம்பொறிகளையும் அடக்குவதன் மூலம் ஒருவன் பிறவிக்கடலை நீந்திவிட முடியும் என்ற கருத்து தொனிக்கிறது. இது ஒருபோதும் திருவள்ளுவரின் கருத்தாக இருக்கமுடியாது. ஏனென்றால் திருவள்ளுவரின் கருத்துப்படி இறைவனுடைய திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே பிறவிப் பெருங்கடலை நீந்த முடியும். இதை கடவுள் வாழ்த்துப் பகுதியில் உள்ள 8 மற்றும் 10 ஆம் பாடல்கள் உறுதிப் படுத்துகின்றன. எனவே இறைவனுடைய திருவடிகளைச் சேராமல் வெறும் ஐம்புலன்களை அடக்குவதால் மட்டும் வீட்டுலகம் கிட்டாது அதாவது பிறவிக் கடலைக் கடக்க முடியாது என்பது தெளிவு. வள்ளுவரின் கடவுள் வாழ்த்துக் கருத்துக்கு மாறுபாடாக பரிமேலழகரின் உரை இருப்பதால் அவரது உரை தவறு என்று அறியலாம். பரிமேலழகரின் உரையினை அடிப்படையாகக் கொண்டே மேற்காணும் மூன்று உரைகளும் 'விதை' என்று கூறுவதால் அவையும் தவறாகின்றன. இத் தவறுகளுக்குக் காரணம் 'வித்து' என்ற சொல்லுக்கு 'விதை' என்று பொருள் கொண்டதும் 'வரன்' என்ற சொல்லில் உள்ள ஒரு எழுத்துப் பிழையும் தான். இவற்றின் திருத்தங்களைக் கீழே காணலாம்.

புதிய பொருள்:

வித்து என்ற சொல்லுக்கு 'நீர்,ஈரம்' என்ற பொருட்கள் உண்டு என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இக் குறளிலும் அதே நீர்ப்பொருளில் தான் இச் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார் வள்ளுவர். இக் குறளில் வித்து என்ற சொல் மழைநீரைக் குறிக்க வருகிறது. வரன் என்ற சொல் வறன் என்று வருவதே திருத்தமாகும். வறன் என்ற சொல் இங்கு வறண்ட நிலத்தைக் குறிக்கும். வைப்பு என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இங்கு அது ஊரைக் குறிக்கும். எனவே இக் குறளின் புதிய பொருள் இதுதான்: ' மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களாகிய ஐந்து யானைகளை அடக்கிக் காப்பவன் வறண்ட நிலம் ஆகிய ஊருக்குப் பெய்யும் மழை ஆவான்.'

நிறுவுதல்:

வித்து என்ற சொல் எவ்வாறு நீர்ப்பொருளைக் குறிக்கும் என்று முன்னர் ஒரு கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டுவிட்டதால் இங்கு வறன் பற்றிக் காணலாம். வறன் என்ற சொல் வறண்ட பூமியைக் குறிக்கும் என்பதற்குக் கீழே சில ஆதாரங்கள் உள்ளன.

வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி - கலித்தொகை - பாலைக்கலி பா.எண்: 7
வறன் நீந்தி நீ செல்லும் நீளிடை நினைப்பவும் - பாலைக்கலி பா.எண்: 2

மேற்காணும் பாடல்வரிகளில் வரும் வறன் என்ற சொல் வறண்ட நிலம் என்னும் பொருளையேத் தந்துநிற்பதைத் தெள்ளிதின் அறியலாம். இச் சொல்லை இப் பொருளில் கையாள்வதன் மூலம் ஐம்புலன்களை அடக்கியவனின் பெருமையை நன்கு விளக்குகிறார் வள்ளுவர். இது எவ்வாறு என்று காண்போம். நீரின்றி உலக வாழ்க்கை இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம். இந் நிலையில் பல ஆண்டுகளாக மழையே இல்லாமல் இருந்தால் ஒரு ஊரின் நிலை என்ன ஆகும்?. ஒட்டுமொத்த ஊரும் ஒரு புல்பூண்டு கூட இன்றி வறண்ட பூமியாகத் தானே காட்சி அளிக்கும். நீர் இன்றி அந்த ஊர் மக்கள் சொல்லொணாத் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென மழை பெய்தால் என்ன நடக்கும்?. அங்கே ஒரு மகிழ்ச்சிக் கூப்பாடே நடக்கும் அல்லவா?. ஆம், மக்கள் அனைவரும் எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தவாறு மழையில் நனைந்து கொண்டு ஆடுவார்கள்; ஓடுவார்கள்; கூவித் திரிவார்கள். அவர்களது மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா அப்போது?. இந்த மகிழ்ச்சி தான் அந்த மழைக்குக் கிடைக்கின்ற புகழ் ஆகும்.

உலகில் அடிக்கடி பெய்கிற மழைக்கு புகழ் ஏதும் கிட்டுவதில்லை. எப்போதாவது பெய்யும் மழையே மிகுந்த புகழ் பெறுகிறது. ஐம்புலன்களை அடக்குதல் என்பது எப்போதாவது பெய்யும் மழையைப் போல அரிதான செயலாகும். அம் மழையைப் போலவே ஐம்புலன் அடக்கியோரும் பெரும்புகழ் பெறுகின்றனர்.

இது எவ்வாறென்றால் ஐம்புலன் அடக்கமானது ஒருவகை சித்தியை அதாவது ஆற்றலை அவர்களுக்கு அளிக்கிறது. இந்த ஆற்றலின் உதவியால் இவர்கள் சாதாரண மக்களால் செய்ய இயலாத சில வேலைகளைச் செய்து காட்டுகின்றனர். இது இவர்களுக்குப் பெரும்புகழைத் தேடித் தருகிறது. இவர்களையே நாம் சித்தர்கள் என்று நடைமுறையில் அழைக்கிறோம். இதைத்தான் ' செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலாதார்' என்று அடுத்த குறளில் கூறுகிறார். அரிதாகிய பண்பினாலும் புகழ் பெறுதலாலும் ஐம்புலன் அடக்கத்தினை இக் குறளில் வறண்ட பூமியில் பெய்யும் மழைக்கு உவமையாகக் கூறியுள்ளார் வள்ளுவர். என்னே அவரது நுண்மாண் நுழைபுலம்!.

சரியான குறள்:

உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
ன்என்னும் வைப்பிற்கோர் வித்து.

7 கருத்துகள்:

 1. நல்ல முயற்சி

  வாழ்த்துகிறேன் நண்பரே

  திருத்தம் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 2. கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 3. உரன்... வரன்... இலக்கண மரபின் படி எதுகை மோனை சரியாக வருவது போலல்லவா உள்ளது...!! வறன் என்று வருவது உங்கள் கற்பனையில் எழுந்த சிந்தனை.... நிறுவ முயற்சி செய்துள்ளீர்கள்... இருப்பினும் ஏற்பது கடினமே...

  பதிலளிநீக்கு
 4. தீர்க்கன் அவர்களே, ர கரத்திற்கு ற கரமும் இலக்கணப்படி எதுகையாக வரும் என்பதைத் தாங்கள் அறியவும்.

  அன்புடன்,
  தி.பொ.ச.

  பதிலளிநீக்கு
 5. வரன் என்பதற்கு சிறந்தவன் என்ற பொருளும் உண்டல்லவா. குறளையே மாற்றி அமைத்தல் சரியென தோன்றவில்லை ஏனைய குறள்கள் சரியிருப்பின் இவ்வாறாக இருக்கக்கூடும் என கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 6. வரன் = சிறந்தவன் என்ற பொருள் இக் குறளின் கருத்துடன் பொருந்தி வரவில்லை நண்பரே.

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.