பாடல்:
சனி நீராடு.
தற்போதைய பொருள்:
அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் உயிர்மெய் வருக்கத்தில் வரும் இப்பாடலுக்குப் பலவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர். இம் மூன்று கருத்துக்களில் எது சரி எது தவறு என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
தவறுகள்:
ஆராய்ந்து பார்த்ததில் மேற்காணும் மூன்று கருத்துக்களுமே பொருந்தாது என்றே தோன்றுகிறது. இது எவ்வாறு என்று காண்போம். சனி என்பதற்கு சனிக்கிழமை என்று பொருள் கொண்டாலும் எண்ணைக் குளியல் போடவேண்டும் என்று ஔவையார் கூறவில்லையே; வெறுமனே குளிக்கவேண்டும் என்று தானே சொல்லி இருக்கிறார். இதிலிருந்து எண்ணைக் குளியல் என்பது இட்டு சேர்க்கப் பட்டுள்ளது என்பது தெளிவு. வெறுமனே குளிக்கவேண்டும் என்று எடுத்துக் கொண்டாலும் பொருள் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் சனிக்கிழமை அல்லாத மற்ற கிழமைகளில் குளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றல்லவா பொருள் தொனிக்கிறது?. அவ்வைப் பிராட்டியார் இப்படி ஒரு தவறான வழிநடத்தலை மக்களுக்குக் கூறி இருக்க முடியாது என்பதால் சனி என்பது சனிக்கிழமையினைக் குறிக்காது என்பது தெளிவாகிறது.
சனி என்பதற்கு மந்தம் என்ற பொருள் இங்கே பொருந்துமா என்றால் பொருந்தாது. அப்படி ஒரு பொருள் அச் சொல்லுக்கு எந்த அகராதியிலும் கூறப்பட வில்லை என்பது ஒருபுறம் இருக்க மந்தமாக ஓடுகிற ஆற்று நீரில் குளித்தல் என்பது நடைமுறைக்கு இயலாத ஒரு செயலும் ஆகும். ஏனென்றால் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்றால் ஆற்றில் நன்கு நீர் ஓடவேண்டும்; அத்துடன் ஆறு ஓடுகிற ஊரில் வாழவேண்டும். இந்த இரண்டும் எப்போதும் எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை என்பது நடைமுறை உண்மை. நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒரு கருத்தை அவ்வையார் கூறமாட்டார் என்பதால் சனி என்பதற்கு மந்தம் என்ற பொருளும் இங்கு பொருந்தாது என்பது தெளிவு.
அடுத்து சனி என்பதற்கு குளிர்ச்சி என்ற பொருள் எந்த அகராதியிலும் காணப்படவில்லை. அத்துடன் குளிர்ந்த நீரில் குளிப்பதோ வெந்நீரில் குளிப்பதோ அவரவர் உடல்நலத்தைப் பொறுத்தது ஆகும். எனவே குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகக் கூறுவது தவறாகும். அவ்வையார் போன்ற அறிவுடைப் பெருமக்கள் இத்தகைய தவறினைச் செய்ய மாட்டார்கள் என்பதால் இதுவும் தவறான விளக்கம் என்பது பெறப்படுகிறது. இந்தப் பொருள் தவறுகளுக்கான காரணம் ஒரு எழுத்துப் பிழை மட்டுமே. அதைப் பற்றிக் கீழே காணலாம்.
திருத்தம்:
சனி என்னும் சொல் அசனி என்று வரவேண்டும். சொல்லின் முதலில் உள்ள 'அ' என்னும் எழுத்து விடுபட்டுப் போனமையால் தான் இவ்வளவு பொருள் குழப்பங்களும் நேர்ந்தது. அசனி என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இச் சொல் இங்கு சாம்பிராணி இலையினைக் குறிக்கும். சான்று: கழகத் தமிழ்க் கையகராதி. இனி இப் பாடலின் சரியான பொருள் இது தான்: சாம்பிராணி இலைகள் இட்ட நீரில் (நாள்தோறும்) குளிக்க வேண்டும்.
நிறுவுதல்:
முதலில் சாம்பிராணி இலைகளைப் பற்றி இங்கே காணலாம். சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும். இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.
இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது. தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும். மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது. தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும். தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும். (நன்றி: தமிழ்வாணன்.காம்.)
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட சாம்பிராணி இலைகளை நீரில் போட்டு ஊறவைத்துக் குளித்தால் சலதோசம், இருமல், சளி, தலைவலி ஆகிய நோய்கள் அண்டாது என்பதுடன் குளித்தபின் நல்ல வாசனையாகவும் இருக்கும். மேலும் தேமல் போன்ற தோல் நோய்களும் குணமாகும் என்பதால் தான் அவ்வையார் சாம்பிராணி இலைகளை ஊறப்போட்ட நீரில் நாள்தோறும் குளிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். சாம்பிராணி இலைகள் அடித்தட்டு மக்களாலும் வாங்கப் படக்கூடியது என்பது கொசுறு செய்தி.
சரியான பாடல்:
அசனி நீராடு.
...................................................................................
சுனை நீராடு.
பதிலளிநீக்குசனி=சுனை
ஏற்றுக்கொள்ளவில்லை . அசனி என்று சொன்னால் வரசை மாறி விடும்
பதிலளிநீக்குஎல்லா ஊர்களிலும் எல்லா நாட்களிலும்
சாம்பிராணி இலைகள் கிடைப்பதில்லை
பொன்.தங்கராஜ்
திரு. பொன். தங்கராஜ், சனி நீராடு சகர வருக்கத்தில் வைக்கப்படாமல் உயிர்மெய் வருக்கத்தில் வருகிறது. உயிர்மெய் வருக்கத்தில் எந்த ஒரு வரிசைமுறையும் பின்பற்றப்படவில்லை.
பதிலளிநீக்குமக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் எல்லா ஊர்களிலும் எல்லா நேரங்களிலும் சாம்பிராணி இலை தூள் வடிவில் எளிதாகக் கடைகளில் கிடைக்குமே. இப்போதும் கடைகளில் தாராளமாகக் கிடைக்கிறது.
அன்புடன்,
தி.பொ.ச.
சனி நீராடு
பதிலளிநீக்கு'சனி' இதில் ஒரு அசை மட்டுமே வருகிறது
தமிழ் இலக்கணம் ?