பழமொழி:
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.
தற்போதைய பொருள்:
இப் பழமொழிக்கு இதுவரை கூறப்பட்டு வந்த பொருள்விளக்கம் இதுதான்: ' மண்ணால் செய்த குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் ஆற்றைக் கடக்கும் முன்னர் அக் குதிரை கரைந்து விடும்.' ஆனால் தற்போது ஒருசிலர் 'குதிரை'யை 'குதிர்' எனக் கொண்டு இவ்வாறு பொருள் கூறுகின்றனர் : ' ஆற்றில் காணப்படும் மண்மேடுகளை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் அவை பொய்யானவை. காலை வைத்ததும் உள்ளே இழுத்துக் கொண்டுவிடும்.'
மேற்காணும் இரண்டு விளக்கங்களுமே தவறானவை ஆகும். இது எவ்வாறு என்று பார்ப்போம். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்க முடியுமா?. மண்குதிரை இயங்காத் தன்மை கொண்டது என்பதால் இக் கேள்விக்கான விடை 'முடியாது' என்பதே ஆகும். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கவே முடியாது என்ற நிலையில் இறங்கவேண்டாம் என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான ஒரு செயலாகும். பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள் என்பதால் இவ் விளக்கம் தவறு என்பது பெறப்படுகிறது. அடுத்து இரண்டாவது கருத்தில் வரும் குதிர் என்ற சொல்லைப் பற்றிக் காண்போம். குதிர் என்றால் நெற்கூடு என்று பொருள். இச் சொல்லுக்கு இந்தப் பொருள் மட்டுமே அகராதிகளில் தரப்பட்டுள்ளது. மண்மேடு என்ற பொருள் வேண்டுமென்றே இட்டுக் கூறப்பட்ட ஒன்றாகும். குதிர் என்ற சொல்லுக்கு மண்மேடு என்ற பொருள் எவ்வகையிலும் பொருந்தாது. ஏனென்றால் நெற்கூடும் மண்மேடும் வேறுவேறு தன்மை கொண்டவை. தானியங்களைச் சேமித்து வைக்க உதவுகின்ற உயரமான கலமே குதிர் ஆகும். ஆனால் ஆற்றின் நடுவே காணப்படும் உயரமான மண்மேடுகள் எதையும் சேமிக்க உதவுவதில்லை. உயரமாக இருப்பதால் மட்டும் மண்மேடும் நெற்கூடும் ஒன்றாகி விட முடியாது.
அன்றியும் மேற்காணும் கருத்தில் சொல்வதைப் போல இந்த மண்மேடுகள் காலை வைத்தால் உள்ளே வாங்குவதுமில்லை. ஏனென்றால் இவை நன்கு செறிந்த மணலுடன் அடர்த்தியாகவே இருக்கும். இதன் காரணம் இந்த மண்மேடுகளில் புல், செடி, கொடி முதலான தாவரங்கள் வளரத் துவங்குவது தான். ஆற்றில் நடுநடுவே காணப்படும் இந்த மண்மேடுகளை 'ஆற்றிடைக் குறை' என்று அழைப்பர். இதற்கு நேரான செந்தமிழ்ச் சொல் 'துருத்தி' என்பதாகும். இச் சொல்லைப் பல சங்க இலக்கியங்களில் காணலாம். துருத்திக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஸ்ரீ ரங்கம் ஆகும். ஆம, காவிரி ஆற்றின் மிகப் பெரிய இடைக்குறை அதாவது மண்மேடே ஸ்ரீரங்கம் ஆகும். எட்டு மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் கொண்ட இந்தத் துருத்திக்கு இருபுறங்களிலும் ஆறு ஓடுகிறது. அருகில் உள்ள படம் இதனை நன்கு காட்டும். இதிலிருந்து ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டில் காலை வைத்தால் உள்வாங்கும் என்ற கருத்து தவறானது என்று தெளியலாம்.
அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்க விரும்பும் ஒருவர் ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டை நம்பியா இறங்குவார்?. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் தூரத்தில் இருக்கும் மண்மேடு இவருக்கு இக் கரையில் எவ்வகையிலும் உதவி செய்யப் போவதில்லை. எனவே ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு அடியாக ஆழம் பார்த்து இறங்குவாரே ஒழிய தூரத்தில் மண்மேடு தெரிகிறது உடனே ஓடிப்போய் விடலாம் என்று அவசர கதியில் இறங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை. எனவே மண்மேட்டை நம்பி ஆற்றில் இறங்காதே என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான செயலாகும். இத்தகைய பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் கூறமாட்டார்கள் என்பதால் இக் கருத்து இட்டுக் கூறப்பட்டது என்பது பெறப்படுகிறது. இத் தவறுகளுக்கு எல்லாம் காரணம் ஒரு தூய தமிழ்ச் சொல்லை கொச்சை வழக்கெனத் தவறாகக் கருதி திருத்தியதே ஆகும். இனி சரியான சொல்லைப் பார்ப்போம்.
திருத்தம்:
இப் பழமொழியில் வரும் மண்குதிரை என்பது மங்குதிரை என வரவேண்டும். இதுவே திருத்தம் ஆகும். மங்குதிரையின் பொருளைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.
மங்குதிரை = மங்கு + திரை.
திரை என்றால் இங்கே அலை என்று பொருள். மங்குதல் என்றால் இங்கு ஒளி மழுங்குதல் என்று பொருள். (ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி). மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரைக் குறிக்கும். இனி இப்பழமொழியின் சரியான பொருள் இதுதான்: கானல் நீரை நம்பி ஆற்று மணலில் இறங்காதே.
நிறுவுதல்:
மங்குதிரை என்னும் மூலச் சொல்லினை கொச்சை வடிவமாகக் கருதி மண்குதிரை எனத் திருத்தியது தான் இப் பழமொழியின் தவறான பொருள்கோளுக்குக் காரணமாகும். மங்குதிரை என்பது கானல்நீரினைக் குறிக்கும் ஒரு அருமையான சொல். கானல்நீரானது தூரத்தில் நீர்அலை வடிவத்தில் தெரிகின்ற ஒரு மாயத்தோற்றம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தோற்றம் நிலையானதல்ல. மாறக்கூடியதே. இது எப்படி எங்கே எப்போது உருவாகிறது என்பதை அறிந்துகொண்டால் மங்குதிரை என்னும் சொல்லின் நயத்தினை நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.
கானல்நீர் தோன்றுவதற்கு முதற்காரணம் வெப்பம் ஆகும். நண்பகல் நேரத்தில் கதிரவனின் தெறுகதிர்கள் செங்குத்தாக வறண்ட மணல் பகுதிகளில் விழும்போது தான் இந்தக் கானல் நீர் உருவாகிறது. மணல்பரப்பின் மேற்பகுதி மிகவும் வெப்பமடையும் போது அந்த வெப்ப ஆற்றல் அலைவடிவம் பெற்று கதிர்வீசத் துவங்குகிறது. இந் நிலையில் தூரத்தில் உள்ள பொருட்களின் ஒளிக் கதிர்கள் இந்த அலைகளில் படும்போது அவை மழுங்குகின்றன. மழுங்கிய நிலையில் இந்த ஒளி அலைகள் நம் கண்களை அடைவதால் அப் பொருளுக்குக் கீழே அதன் நிழல் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அதாவது எவ்வாறு ஒரு நீர்ப்பரப்பு ஒரு பொருளை தனக்குள் பிரதிபலிக்குமோ அதைப்போல இந்த மழுங்கிய ஒளி அலைகள் நமக்கு ஒரு மாய நிழலைக் காட்டுகிறது. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். இதைக் காணும்போது அங்கே நீர் இருப்பது போன்ற ஒரு எண்ணம் நமக்குள் பிறக்கிறது இல்லையா?. இதுவே கானல் நீர் ஆகும். அதிக வெப்பமடைந்த தார்ச்சாலைகள் மற்றும் மணல் பரப்புக்களில் கானல்நீர் தோன்றும். கானல்நீர் பற்றிய மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள விக்கிபீடியா சென்று காணலாம்.
ஆற்றங்கரைகளில் பலவிதமான மரங்கள் வளர்ந்து நிழல் தருவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே தான் பழங்காலத்தில் (ஏன் இக்காலத்திலும் கூட) மக்கள் ஆற்றங்கரை ஓரமாகவே நடைப்பயணம் செய்து பிற ஊர்களுக்குச் செல்வர். இதனால் வெயிலின் கொடுமை தவிர்க்கப் படுவதுடன் ஆற்றின் அழகிய காட்சியினைக் கண்ட வண்ணம் பயணம் இனிதாக நடைபெறும். ஆனால் இயற்கைச் சூழ்நிலை எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?. பருவநிலை மாற்றங்களால் போதுமான மழை பெய்யாமல் போக பல ஆறுகள் நீர் முழுதும் வறண்டு வெறும் மணற்பரப்புக்களாகக் காட்சி அளிப்பதை நாம் காண்கிறோம். இந் நிலையில் ஆற்றங்கரை ஓரமாக நடைப்பயணம் செய்யும் மக்கள் வழியில் தாகமெடுத்தால் (தாம் கொண்டுவந்த நீர் முழுதும் தீர்ந்து போன நிலையில்) குடிப்பதற்கு நீரைத் தேடி ஏங்குவது இயல்பு. நீர்வேட்கை உடைய இவர்களது கண்களில் ஆற்றுமணலில் தோன்றிய இந்தக் கானல்நீர் கண்டிப்பாகப் படும். காரணம் ஆற்றுமணல் பகுதி தாழ்வாகவும் ஆற்றங்கரை பகுதி உயர்வாகவும் இருப்பதே. ஏற்கெனவே நீர்வேட்கையால் வருத்தமுற்று இருக்கும் இம் மக்கள் கானல்நீருக்கு எளிதில் ஏமாறுவர். கானல் நீரை உண்மையான நீரென்று நம்பி ஆற்று மணலில் இறங்கி நடப்பர். அதன்பின் அவர்களது நிலை என்னாகும்?. இல்லாத ஒரு நீருக்காக பொல்லாத வெயிலில் நடந்து நடந்து களைத்து உடல் வெம்பி ஏமாற்றத்தால் மனம் நொந்து .... அப்பப்பா! மிகப் பெரிய துன்பம் அது!.
இவ்வாறு கானல்நீரை நம்பி ஏமாந்து துன்பப் படக்கூடாது என்பதற்காகத் தான் பெரியோர்கள் இப் பழமொழியினைக் கூறியுள்ளனர். மணலில் இறங்கிய பின்னர் கானல்நீரினை நோக்கி நடக்கத்தானே செய்வர். அதனால் தான் ஆற்றுமணலில் நீர் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இறங்கவே வேண்டாம் என்கிறது இப் பழமொழி.
சரியான பழமொழி:
........................வாழ்க தமிழ்!......................................
தகவலுக்கு நன்றி. அந்த பழமொழி தவறு என்பதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் புரிந்தது. நானும் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் சரி (மங்குதிரை) என்று சொன்ன விளக்கம் தான் புரியவில்லை.
பதிலளிநீக்குசரியான விளக்கமாகத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇதுபோன்று இன்னும் பல பழமொழிகளுக்கான சரியான விளக்கங்களை எதிர்பார்க்கிறோம்.
பதிலளிநீக்கு