சனி, 14 நவம்பர், 2009

குணமும் சினமும்


பாடல்:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

- குறள் எண்: 29

தற்போதைய பொருள்:

பரிமேலழகர் உரை: துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது வெகுளி தான் உள்ள அளவு கணமே ஆயினும் வெகுளிபட்டாரால் தடுத்தல் அரிது.
கலைஞர் உரை: குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
மு.வ உரை: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை: நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

உரைத் தவறுகள்:

மேற்காணும் நான்கு உரைகளிலும் தவறுகள் உள்ளன. அவற்றைக் காண்போம். முதல் மூன்று உரைகளிலும் ஒரு பொதுவான பொருட்பிழை உள்ளது. குணக்குன்றின் மேல் நிற்கும் பெரியோரும் சில சமயங்களில் சினம் கொள்வர் என்னும் பொருள்பட கருத்து கூறியிருப்பதே அப் பிழை ஆகும். இக் கருத்து தவறு என்று நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஏனென்றால் சினம் என்பது ஒரு கீழ்நிலைக் குணமாகும். இது மனிதனை விலங்காக மாற்றும் தன்மை உடையது. இதனால் தீமையே அன்றி நன்மை ஒருபோதும் விளைவதில்லை. குணக்குன்றின் கீழ்நிலையில் உள்ள இக் குணத்தினை முற்றிலும் கைவிடாதவர்கள் எங்ஙனம் அக் குன்றின் உச்சியில் இருப்பதாகக் கொள்ள முடியும்?. அன்றியும் குணக்குன்றின் உச்சியில் இருப்பவர்கள் கீழ்நிலைக் குணமான சினத்தை முற்றிலும் துறந்தவர்களாக இருக்க அவர்களும் சினம் கொள்வார்கள் என்று கூறுவது சற்றும் பொருத்தமற்ற கருத்து அல்லவா?. அதுமட்டுமின்றி நீத்தார்பெருமையைக் கூறும் இந்த அதிகாரத்தில் ஐம்புலன் அவித்தோர் சினம் கொள்வர் என்று கூறுவது அவருக்குப் பெருமை சேர்க்காது; சிறுமையே சேர்க்கும். எனவே முதல் மூன்று கருத்துக்களில் பொருட்பிழை உள்ளது என்பதை தெள்ளிதின் அறியலாம். இது முதல் பிழை ஆகும்.

மேற்காணும் பிழையே அன்றி வேறொரு பிழையும் உள்ளது. குறளில் வரும் 'காத்தல்' என்ற சொல்லுக்கு அகராதிகள் கூறும் பொருட்கள் இவை தான்: பாதுகாத்தல், எதிர்பார்த்தல், அரசாளுதல், அளித்தல், விலக்கல் ஆகியன. ஆனால் மேற்காணும் உரைகளில் (சா.பா.உரை உட்பட) காத்தல் என்ற சொல்லுக்கு அகராதிகளில் கூறப்படாத பொருட்களே கூறப்பட்டுள்ளன. தடுத்தல் என்ற பொருளில் முதலுரையும் நிலைத்துநிற்றல் என்ற பொருளில் இரண்டாம் உரையும் கொண்டிருத்தல் என்ற பொருளில் நான்காம் உரையும் கூறுகின்றன. அகராதிகளில் இல்லாத இப் பொருட்களை இவர்கள் கூறியிருப்பதும் பிழை ஆகும். மு.வ.உரையோ காத்தல் என்னும் சொல்லுக்கு விளக்கமே அளிக்காமல் காத்தல் என்றே கூறிநிற்கிறது. சரியான விளக்கம் அளிக்காததால் இதுவும் பிழையாகவே கொள்ளப்படும்.

இப்படி பல பொருட்பிழைகள் இக் குறளுக்கான விளக்க உரைகளில் தோன்றக் காரணம் இரண்டாம் அடியில் உள்ள காத்தல் என்ற சொல்லில் உள்ள எழுத்துப் பிழைகளே ஆகும். இவற்றைக் கீழே காணலாம்.

திருத்தம்:

காத்தல் என்ற சொல்லுக்குப் பதிலாகக் காண்டல் என்ற சொல் வரவேண்டும். இதுவே இங்கு தேவையான திருத்தம் ஆகும். கணம் என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச் சொல் அற்பம் என்ற பொருளைக் குறிக்கும். இனி இக் குறளின் சரியான பொருள் இதுதான்: ' குணம் ஆகிய குன்றின் மேல் நிற்கும் ஐம்புலன் அவித்தோரிடத்து அற்ப அளவேனும் சினத்தைப் பார்ப்பது அரிதாகும் (பார்க்க இயலாது).'

நிறுவுதல்:

வள்ளுவர் இக்குறளில் மனிதனின் மொத்த குணங்களையும் (உணர்ச்சிகளையும்) ஒரு குன்றாக உருவகிக்கிறார். இதிலிருந்து குன்றின் அடிவாரத்தில் சினம் முதலான இழிகுணங்கள் இருப்பதாகவும் மேல்பகுதியில் அன்பு முதலான நற்குணங்கள் இருப்பதாகவும் கொள்ள முடிகிறது. அழுகை, சிரிப்பு முதலான பல உணர்ச்சிகளில் ஒன்றே சினம் ஆகும். பொதுவாக எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படும்போது முகத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே தான் ' அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்று வள்ளுவர் குறிப்பறிதல் அதிகாரத்தில் முகம் பற்றிக் கூறுகிறார். அவ்வாறே ஒருவரது உள்ளத்தில் சினம் தோன்றினால் அவரது முகம் உடனே அதைக் காட்டிக் கொடுத்துவிடும். மற்ற உணர்ச்சிகளைப் போலன்றி உள்ளத்தில் தோன்றிய சினத்தைக் கட்டுப்படுத்தலாமே அன்றி எள்ளளவும் தெரியாமல் மறைப்பது மிகவும் கடினமாகும். ஏனென்றால் சினம் என்பது நான் என்னும் அகந்தை எண்ணத்தின் அடிப்படையில் தோன்றுவது. எனவே சினத்தை முற்றிலும் வேரறுக்க வேண்டுமெனில் முதலில் நான் என்னும் அகந்தையினை வேரறுக்க வேண்டும்.

இந்த நான் என்னும் அகந்தை ஆனது ஐம்புல உணர்வுகளின் மேல் அரியாசனமிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு எண்ணம் ஆகும். ஐம்புல உணர்வுகள் ஒடுங்கும்போது நான் என்னும் அகந்தையும் தானாகவே ஒடுங்குகிறது. ஐம்புலன் அவித்த பெரியோர்களின் உள்ளத்தில் நான் என்னும் அகந்தை இல்லை என்பதால் அவர்களது உள்ளத்தில் சினம் தோன்றுவதே இல்லை. உள்ளத்தில் சினம் தோன்றாததால் அவர்களின் முகத்தில் சிறிதளவும் சினத்தைக் காண் முடியாது என்கிறார் வள்ளுவர்.

சரியான பாடல்:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காண்டல் அரிது.

( குறிப்பு: இக்குறளின் மூன்றாம் சொல்லுக்குப் பின்னர் கண் என்ற ஏழன் உருபும் நான்காம் சொல்லுக்குப் பின்னர் ஐ என்ற இரண்டாம் உருபும் தொக்கி வந்துள்ளன.)
..........................................................வாழ்க தமிழ்!................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.