செவ்வாய், 2 மே, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 4 ( கூந்தல் - கொங்கை - சிறுபுறம் - தோள் )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் நான்காம் பகுதியான இதில் கூந்தல், கொங்கை, சிறுபுறம், தோள் ஆகிய சொற்களைப் பற்றிச் சுருக்கமாகக் காணலாம்.

கூந்தல்:

கூந்தல் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் கண்ணிமை என்ற பொருளைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை அறல், மரல், மயில், யானைத்துதிக்கை, மேகம், நாரத்தை, பறவைகள், பூக்கள், செவ்வானம் போன்ற பொருட்களுடன் ஒப்பிட்டு ஏராளமான பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொரு ஒப்புமைக்கும் சான்றாகச் சில பாடல்வரிகள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் - பதி -74
அறல் என அவிர்வரும் கூந்தல் - அக -162

இப்பாடல்களில் வரும் அறல் என்பது நத்தை, சிப்பி முதலான மெல்லுடலிகளைக் குறிக்கும். இவற்றின் மேலோடுகள் குவிந்தும் பல வண்ணங்களை உடையதாகவும் இருப்பதால் பெண்களின் மையுண்ட வண்ண இமைகளை இவற்றுடன் ஒப்பிடுவர்.

கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் - நற் - 265, குறு - 225
கொடிச்சி கூந்தல் போல தோகை அம் சிறை விரிக்கும் - ஐங்கு - 300

பெண்கள் தமது இமைகளுக்கு மைபூசி அழகுசெய்யும்போது மயில்தோகையில் உள்ள கண்களைப் போலவும் வரைந்து அழகூட்டிய செய்தியினை மேற்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. இதைப்பற்றி கதுப்பு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.

பிடிக் கை கூந்தல் - சிந்தா -2663

பெண்களின் கருமை உண்ட மெல்லிய வரிகளை உடைய இமைகளை யானையின் துதிக்கை வரிகளுக்கு ஒப்பிடும் வழக்கத்தினை மேலே உள்ள பாடல்வரி விளக்குகிறது. இதைப்பற்றி குறங்கு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.

மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் - கலி -147
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - அக - 225

பெண்களின் கருநிற மைபூசிய இமைகளைக் கார்மேகங்களுக்கு ஒப்பிடுவது புலவர்களின் வழக்கம் என்பதனை மேலுள்ள பாடல்வரிகள் உறுதிசெய்கின்றன. இதைப்பற்றி கதுப்பு என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம்.

பெண்கள் தமது மெல்லிய பூவிதழ் போன்ற கண்இமைகளில் பல ஆண்டுகள் தொடர்ந்து மைபூசுவதால் இமையின் தோலானது நாளடைவில் தனது இயல்பான நிறத்தினை இழந்து வெளுக்கத் துவங்கி விடும். இமைகளில் தோன்றும் இந்த வெண்மையான நிறத்தினை நரை என்று குறிப்பிடுகிறது இலக்கியம். இந்த நரையினை வெண்ணிறம் கொண்ட கடல்சிப்பிகளுடனும் மரல்செடியின் இலைகளுடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது இலக்கியம்.

.. இரும் கடல் வான் கோது புரைய வாருற்று
பெரும் பின்னிட்ட வால் நரை கூந்தலர்           
நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர்   - மது - 407

...நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல்
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய  - ஐந்.ஐம்-27

வயது ஏற ஏற, தலைமயிர் மட்டுமின்றி இமைகளில் உள்ள முடிகளும் நரைத்துவிடும். இமைகளில் உள்ள நரைத்த முடிகள் சிறியதாகவும் கூர்மையாகவும் இருப்பதால் அவற்றை மீன் உண்ணும் கொக்கின் தலையில் உள்ள தூவியுடனும் மீன் முள்ளுடனும் ஒப்பிட்டுக் கூறுவர். சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரை கூந்தல் முதியோள் - புற -277
கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் ... - புற - 195

பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு அழகூட்டும்போது தமது கடைக்கண் ஈற்றில் கூரிய வரியினை வரைவது வழக்கம் என்று எயிறு என்ற கட்டுரையில் கண்டோம். அப்படி வரையும்போது கண்ணிமையினை நாரையின் தலை போன்றும் கிளியின் தலை போலவும் வரைந்தபின்னர், கடைக்கண் ஈற்றினை நாரையின் கூர்வாய் போலவும் கிளியின் மூக்கு போலவும் செந்நிறத்தில் வரைவது வழக்கம். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

நாரை நல் இனம் கடுப்ப மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ - ஐங்கு -186
கிள்ளை பிறங்கிய பூ கமழ் கூந்தல் கொடிச்சி - ஐங்கு -290

பெண்கள் தமது கண்ணிமைகளை மைபூசி அழகுசெய்யும்போது பார்ப்பதற்கு அவை பூக்களின் மெல்லிய இதழ்களைப் போலத் தோன்றும் என்று கதுப்பு, ஓதி, ஆகம், குறங்கு போன்ற பல கட்டுரைகளில் முன்னர் கண்டோம். அதைப்போல பெண்களின் கூந்தல் ஆகிய கண்ணிமைகளையும் பூ இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே;

வேங்கை வென்ற சுணங்கின் தேம் பாய் கூந்தல் மாஅயோளே - ஐங்கு -324
குவளை குறும் தாள் நாள்மலர் நாறும் நறு மென் கூந்தல் - குறு -270
எல்உறு மௌவல் நாறும் பல் இரும் கூந்தல் - குறு -19

பெண்களின் இமைகளில் செந்நிறம் கொண்டு பூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அவை மேற்கில் தோன்றும் செவ்வானம் போன்று அழகுடன் திகழும். இதைப் பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

குட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் - கம்ப - ராவணன் அணங்குறு.
செக்கர் வார் கூந்தல் - கம்ப - படைத்தலைவர்.

கூந்தலைப் பற்றிக் கூறுவதற்கு இன்னும் பல செய்திகள் உள்ளநிலையில், அவற்றை அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா? என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கொங்கை:

பெண்களைப் பொறுத்தமட்டிலும் கொங்கை என்ற சொல்லானது கண்ணையும் கண்ணிமையினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் கண்களை நிலவுடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கமே. கம்பனும் அவ் வழக்கத்திற்கேற்ப சீதையின் விழிகளை நிலவுடன் ஒப்பிடுகிறார்.

எங்கு நின்று எழுந்தது இந்த இந்து வந்து என் நெஞ்சு உலா
அங்கு இயன்று அனங்கன் எய்த அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கை மேல் விடம் பொழிந்தது என்னினும்
கங்குல் வந்த திங்கள் அன்று அகம் களங்கம் இல்லையே - கம்ப.பால.13/51

பெண்கள் என்று சொன்னாலே கண்ணீருக்குப் பஞ்சமிருக்காது. அதுவும் துன்பப்படும்போது அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலாது. கண்களில் கண்ணீர்த் துளிகள் கோர்த்துக்கொண்டு கீழே விழத் தயாராக நிற்கும். அப்படிப்பட்ட ஒரு காட்சியினைப் படம்பிடித்துக் காட்டுகிறார் கம்பர்.

....கொண்ட நெடும் கணின் ஆலி கொங்கை கோப்ப ... - கம்ப.அயோ.3/10
....மஞ்சு என வன் மென் கொங்கை வழிகின்ற மழை கண் நீராள் - கம்ப.சுந்த.14/40

வருத்தத்தாலும் சினத்தினாலும் கண்கள் கொதிப்புற்றுச் சிவப்படையும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய் -சிலப்.புகார்.8
நோவொடு குழைவன பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையே - கம்ப.ஆரண். 3/46

பெண்களின் செவ்வண்ணம் தீட்டப்பட்ட கண்ணிமைகளை குங்குமச் சிமிழுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கமாகும். காரணம், செப்பினால் செய்யப்பட்ட குங்குமச் சிமிழானது செவ்வண்ணத்தில் கண்போன்ற வடிவில் இமைபோல மூடித் திறக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி:

கொமை உற வீங்குகின்ற குலிக செப்பு அனைய கொங்கை - கம்ப.பால. 22/10

பெண்களின் குவிந்த கண்களைத் தென்னையின் இளநீர்க் காய்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் கம்பர். காரணம், தென்னங்காய்கள் கண்போன்ற வடிவத்தில் குவிந்தும் திரண்டும் உள்ளே நீர் உடையதாய் இருக்கும். கண்விழியினைப் போலவே வெண்ணிறத்தில் உள்ளே நெற்றும் அதாவது தேங்காயும் இருக்கும். சான்றாக சில பாடல்வரிகள்:

தேரிடை கொண்ட அல்குல் தெங்கிடை கொண்ட கொங்கை - கம்ப.பால.18/17
பொங்கு இளம் கொங்கைகள் புதுமை வேறு இல தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய - கம்ப.அயோ.12/3

குவிந்து திரண்ட கண்களின் மேலிருக்கும் இமைகளைப் பொன் நிறத்தில் பூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அவை பொற்கலசங்கள் போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறுகின்ற பாடல்வரிகள் கீழே:

வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்தன்  - கம்ப.கிட்.13/37
கொங்கைகள் செவ்விய நூல் புடை வரிந்த பொன் கலசங்களை மானவே - கம்ப.பால.18/27
கொங்கையின் நிரைந்தன கனக கும்பமே - கம்ப.அயோ.2/37

பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் சந்தனக்குழம்பினாலும் குங்குமக் கலவையினாலும் பலவரிகளை வரைந்தும் பூசியும் அழகுசெய்வர். இதைப்பற்றிக் கூறுகின்ற பாடல்வரிகள் கீழே:

மங்கையர் கொங்கையில் பூசும் குங்குமமும் புனை சாந்தமும் - பெரியபு.திருமலை.8
கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த சீத களப செழும் சேற்றால் - நள. 20
கொங்கை வெயர்த்த போது இழிந்த சாந்தும் - கம்ப.பால.21/18
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து - சிலப்.மது.14

பெண்களின் கண்ணிமைக்குக் கொங்கை என்ற பெயர் ஏற்படக் காரணம், அதில் கொங்கு எனப்படுகின்ற பூந்தாதுக்களைப் பூசியிருப்பதே. கொங்கினை உடையதால் கொங்கை எனப்பட்டது. கொங்கையினைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள கொங்கை என்றால் மார்பகமா? என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

சிறுபுறம்:

பெண்களின் சிறுபுறம் என்பது பெரும்பாலும் அவர்களுடைய கண் மற்றும் கண்ணிமையினைக் குறிக்கவும் சில இடங்களில் மட்டும் கன்னத்தினைக் குறிப்பதற்கும் புலவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் வரியுடைய கண்ணிமைகளில் கருமை பூசியிருக்கும்போது அது பார்ப்பதற்கு யானையின் துதிக்கை வரிகளைப் போலத் தோன்றும் என்று முன்னர் குறங்கு, கூந்தல் ஆகிய கட்டுரைகளில் கண்டோம். இதேபோல பெண்களின் சிறுபுறம் ஆகிய கண்ணிமைகளையும் யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:

பிடி கை அன்ன பின்னு வீழ் சிறு புறத்து – சிறுபாண்.
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற். 228

பெண்களின் வண்ணவண்ண மைகளால் பூசப்பட்ட அழகிய கண்ணிமைகளை நத்தை, சிப்பி போன்றவற்றின் மேலோட்டுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று கூந்தல் என்ற கட்டுரையில் கண்டோம். இங்கும் பெண்களின் சிறுபுறமாகிய கண்ணிமையினை மெல்லுடலிகளின் மேலோட்டுடன் ஒப்பிடும் பாடல்வரிகள் கீழே:

 ………பின்னுவிட சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்.......
வாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே – அகம் -117

குழந்தைகளின் கன்னத்தினைச் செல்லமாகக் கிள்ளுவது போல பெண்களின் கன்னத்தினை விரல்களால் செல்லமாய்ப் பற்றுவதுண்டு. இதனை சிறுபுறம் கவைத்தல் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. சான்றுக்கு சில பாடல்வரிகள்:

....ஏனல் காவலின் இடை உற்று ஒருவன் கண்ணியன் கழலன்
தாரன் தண்ணென சிறுபுறம் கவையினனாக ... – நற். -128

...சூரர மகளிரின் நின்ற நீ மற்று யாரையோ எம் அணங்கியோய்
உண்கு என சிறுபுறம் கவையினன் ஆக …  - அகம் -32

ஒருதாய் தனது குழந்தைக்கு முலைப்பால் ஊட்டும்போது அக் குழந்தையானது தனது பிஞ்சுக் கைகளால் தாயின் கன்னங்களை வருடிக் கொடுக்கிறது. இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி கீழே:

வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட
தான் அவள் சிறுபுறம் கவையினன் - ஐங்கு - 404

பெண்கள் தமது இமைகளைப் பூவிதழ்களைப் போல அழகுசெய்வர் என்று முன்னர் கண்டோம். அதைப்போல இங்கும் தமது சிறுபுறமாகிய இமைகளை செங்கழுநீர்ப் பூவிதழ்களைப் போல அழகுசெய்திருந்ததைக் கூறும் பாடல்வரி:

..தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் தாம் பாராட்டிய.. – அகம் – 59

இப்படிப் பூவிதழ்களைப் போல அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகளில் அமர்ந்து கள்குடிக்க வண்டினங்கள் விரும்பிச் சுற்றிச்சுற்றி வரும் என்று முன்னர் அளகம் என்ற கட்டுரையில் கண்டோம். அதைப்போலவே இங்கும் சிறுபுறமாகிய இமைகளில் அமர்ந்து தும்பியானது கள்குடிக்கும் காட்சியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி – சிந்தா – 852

சிறுபுறம் என்ற சொல்லானது சிறு + புறம் எனப் பிரிந்து சிறிய புறத்துறுப்பு என்று பொருள்தரும். பெண்களின் புறத்துறுப்புக்களில் மிகச் சிறியதும் புலவர்களால் பெரிதும் பாடப்படுவதும் கண்ணிமையே என்று அறிவோம். பெண்களின் கண்ணிமைக்குச் சிறுபுறம் என்ற பெயர் வந்ததன் காரணம் இதுவே ஆகும். இதைப்பற்றி குறங்கு என்ற கட்டுரையிலும் கண்டோம். சிறுபுறம் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள சிறுபுறம் என்பது.. என்ற கட்டுரையைப் படிக்கலாம்.

தோள்:
தோள் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் அவர்களது கண்ணைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் தோள் ஆகிய கண்களைப் புணை ஆகிய தெப்பங்களுடனும் மூங்கிலின் காய்களுடனும் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கம். இதைப் பற்றிய சில பாடல்வரிகள் கீழே:

வேய் மருள் பணைத்தோள் - ஐங்கு.-318, நற்.-85,188
வேய் உறழ் பணைத்தோள் - பதி.-21

பெண்கள் இமைகளில் மையிட்டுக் கடைக்கண்ணைக் கூராக வரைந்து மூடியிருக்கும்போது உருண்டு திரண்ட அவரது கண்கள் பார்ப்பதற்கு மூங்கிலின் உருண்டு திரண்ட கூரிய முனையுடைய காய்களைப் போலவே தோன்றும். அதனால் தான் பல இடங்களில் தோள் என்ற சொல்லினை பணை (பருத்த) என்ற அடையுடன் சேர்த்துக் கூறுவர். 

முழங்குநீர்ப் புணை என அமைந்த நின் தடமென் தோள் - கலி.-56
எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே - ஐங்கு.-78

பெண்களின் கண்ணானது புணை எனப்படுகின்ற தெப்பம் போலவே வடிவத்தைக் கொண்டிருப்பதுடன் அதைப்போலவே நீரில் தத்தளிக்கும் இயல்புடையது என்பதால் பெண்களின் கண்களைப் புணைக்கு உவமையாக்கினர் புலவர்.

பெண்கள் பிரிவுத்துயரின்போது கண்கலங்கி அழுவர். இதனை தோள் நெகிழ்தல் என்றும் தோள் பசத்தல் என்றும் இலக்கியம் கூறுகிறது. பசத்தல் / பசலை என்பது அழுகை / கண்ணீரைக் குறிக்கும் என்று பசத்தல் என்றால் என்ன? என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம். சான்றுக்குச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

திருந்து இழை பணைத்தோள் நெகிழ - ஐங்கு-39
வேய் புரை மெல் தோள் பசலையும் - கலி.-39
தாம் பசந்தன என் தடமென் தோளே - குறு.-121

பெண்கள் தமது கண்களின்மேல் மையிட்டு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். அதைப்போலவே, தமது தோள் ஆகிய கண்களைச் சுற்றிலும் வட்டமாக மையினால் வரைந்து அழகுசெய்வர். இந்த வட்டமான மையணியினைக் கரும்பு என்றும் தொய்யில் என்றும் தொடி என்றும் இலக்கியம் கூறுகிறது.

என் தோள் எழுதிய தொய்யிலும் - கலி.-18
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி.-64
தொடியொடு தோள்நெகிழ நோவல் - குறள் - 1236

பெண்கள் அழும்போது கண்ணில் பூசியிருந்த இந்த தொடி அணியானது கசங்கி அழிந்து கண்ணீருடன் இழியும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே:

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். - குறள் - 1234

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. - குறள் - 1236

ராமனின் அழகிய கண்களைக் கண்ட பெண்களின் கண்கள் அதிலேயே குத்திட்டு நின்றன. அங்கிங்கு அசைய முடியவில்லையாம். மெய்மறத்தல் என்று சொல்வார்களே அதுபோன்ற நிலையினை அவர்கள் அடைந்தார்கள் என்று கம்பர் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார். 

தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே .

தோள் பற்றி மேலும் தகவல்களை அறிந்துகொள்ள தோள் என்றால் என்ன?. என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

............. தொடரும் ............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.