வியாழன், 19 ஏப்ரல், 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 10 - யானை - 1


முன்னுரை:

யானை - என்றவுடன் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் கருப்புநிற உடலுடனும் நீண்ட பாம்புபோலத் தொங்கும் தும்பிக்கையுடனும் பெரிய பெரிய காதுகளுடனும் கூடிய அந்த உருவம் தான் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் வியப்புடன் பார்க்கும் யானையின் வரலாறு மிகப்பெரியது. ஏனைய விலங்குகளைக் காட்டிலும் யானைக்கென்று பல சிறப்புகள் உண்டு. பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் யானைகளைப் போர்களிலும் கோவில், அரண்மனை முதலானவற்றின் கட்டுமானப் பணிகளிலும் பயன்படுத்தினர். இக்காலத்தில் தமிழர்கள் யானைகளைத் தெருவில் பிச்சை எடுக்கப் பயன்படுத்துகின்றனர். கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணப்படும் யானைகளைத் தமிழகத்தில் ஒருசில கோவில்களில் மட்டுமே பார்க்கமுடிகிறது. காரணம், யானைகளை அவற்றின் மருப்பு, தோல் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடி அவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துவிட்டனர். சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த யானைகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ள பல்வேறு செய்திகளைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

யானை - பெயர்களும் காரணங்களும்:

யானை எவ்வளவு பெரியதோ அதைப்போல யானையைக் குறிக்கின்ற சங்கத் தமிழ்ப் பெயர்களின் பட்டியலும் மிகப் பெரியதே. யானை என்ற விலங்கினைக் குறிப்பதாக, இப்பெயர் உட்பட, களிறு, புகர்முகம், கயவாய், பிடி, வேழம், கைம்மா(ன்), ஒருத்தல், கயமுனி, கோட்டுமா, கயந்தலை, கயமா, பொங்கடி, பிணிமுகம், மதமா, தோல், கறையடி, உம்பல், வாரணம், நாகம், பூட்கை, குஞ்சரம், கரி முதலான 23 வகையான பெயர்களைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இப்பெயர்களையும் அவற்றுக்கான காரணங்களையும் கீழே காணலாம்.

யானை - பெரிய மரக்கலம் போன்ற உடலமைப்பினைக் கொண்ட விலங்கு
களிறு - கருமைநிறம் கொண்ட தாக்கும் இயல்புடைய பெரிய விலங்கு
புகர்முகம் - முகத்தில் நிறைய புள்ளிகளை உடைய விலங்கு
கயவாய் - பெரிய வாயினை உடைய விலங்கு
பிடி - கையால் பிடித்துவைத்ததைப்போல் சிறிய மருப்புடைய பெண்யானை
வேழம் - கரும்பையும் மூங்கிலையும் விரும்பித் தின்னும் விலங்கு
கைம்மா(ன்) - தும்பிக்கை கொண்ட விலங்கு
ஒருத்தல் - அளப்பரிய வலிமை கொண்ட தனியொரு ஆண் யானை
கயமுனி - பெரும்துன்பம் தரக்கூடிய சினங்கொண்ட விலங்கு
கோட்டுமா - மருப்புடைய விலங்கு
கயந்தலை - பெரிய தலையினை உடைய விலங்கு
கயமா - மிகப் பெரிய விலங்கு
பொங்கடி - மிகப் பெரிய அடியினைக் கொண்ட விலங்கு
பிணிமுகம் - நோயினால் அழுது வருந்துவதைப் போன்ற முகமுடைய விலங்கு
மதமா - மதம் பிடிக்கின்ற விலங்கு
தோல் - துருத்திபோன்ற தும்பிக்கையைக் கொண்ட விலங்கு
கறையடி - உரல் போன்ற காலடியினைக் கொண்ட விலங்கு
உம்பல் - நல்ல உயர்ச்சியைக் கொண்ட வலிமையான விலங்கு
வாரணம் - கடல்போல் ஆர்ப்பரிப்பதும் சங்குபோல் கூரிய வெண்மருப்புடையதுமான விலங்கு
நாகம் - மேகம்போல் ஒலியை எழுப்புவதும் பாம்புபோல் வளைவதுமான துதிக்கையை உடைய விலங்கு
பூட்கை - புழையுடையதும் வலிமைமிக்கதுமான தும்பிக்கையைக் கொண்ட விலங்கு
குஞ்சரம் - வளைந்து தொங்கும் தும்பிக்கையைக் கொண்ட விலங்கு
கரி - கருமையும் பெருமையும் கொண்ட விலங்கு

யானையைக் குறிப்பிடுவதற்குச் சங்கத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்திய மேற்காணும் சொற்களில் பல சொற்கள் காலப்போக்கில் எழுத்துக்கள் மற்றும் ஒலிப்புமுறைகளில் மாறுதல்கள் / திரிபுகளை அடைந்து இந்தியத் துணைக் கண்டத்தில் தற்போது பெருவழக்காகப் பேசப்பட்டு வரும் பல்வேறு மொழிகளில் உருமாறிய நிலையில் பேசப்பட்டு வருகின்றன. யானையைக் குறிக்க எந்தெந்த மொழிகளில் என்னென்ன சொற்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் அச்சொற்கள் எந்த சங்கத் தமிழ்ச்சொல்லின் திரிபு என்பதையும் கீழே காணலாம்.

மலையாளம் 
- ஆன - யானை என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- கரி - திரிபு இல்லாத சங்கத் தமிழ்ச் சொல்.
- ^^ம் - கயம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
தெலுங்கு    
- எனுகு~, யெனுக~ - யானை என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபுகள்.
- ^^மு - கயம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
கன்னடம்    
- ஆனெ - யானை என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- கரி - திரிபு இல்லாத சங்கத் தமிழ்ச் சொல்.
- ^^ - கயம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
வங்காளம்   
- கரிணு - கரி என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- ^^ - கயம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- நாக~ - நாகம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- பா`ரண - வாரணம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- பில - வேழம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
இந்தி`       
- ^^ - கயம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
கு~ச்^ராத்தி   
- நாக~ - நாகம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- ~ - கயம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
- குஞ்ச^ - குஞ்சரம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.
மராத்தி      
- ^^ - கயம் என்னும் சங்கத் தமிழ்ச் சொல்லின் திரிபு.

சங்க இலக்கியத்தில் யானை:

யானை என்னும் விலங்கு பாலூட்டி வகையைச் சேர்ந்ததாகும். நிலத்தில் வாழும் பாலூட்டி விலங்குகளில் யானையே மிகவும் பெரியதாகும். யானைகள் எலிபேண்டிடே` என்னும் விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவை. யானைகளை ஆப்பிரிக்கப் புதர் யானை, ஆப்பிரிக்கக் காட்டு யானை, ஆசி` யானை என்று மூன்று வகையாகப் பிரிப்பர். சங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள யானைகள் ஆசி` யானை வகையைச் சேர்ந்தவை ஆகும். இதன் விலங்கியல் பெயர் எலிபாச்` மேக்சி`மச்` ( ELEPHAS MAXIMUS ) ஆகும். ஆசி'யக் காட்டு யானைகளின் சராசரி ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்றும் வளர்ப்பு யானைகளுக்கு 80 ஆண்டுகள் என்றும் விக்கிபீடி`யா கூறுகிறது. சங்க இலக்கியங்கள் யானைகளைப் பற்றிக் கூறியிருக்கும் செய்திகளை இங்கே சுருக்கமாகக் காணலாம்.

சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த யானைகளின் உடல் கருமைநிறத்தில் பெரிய அளவில் இருந்ததால் அவற்றை மலைக்குன்றுகளுடனும் கார்மேகங்களுடனும் குதிர்களுடனும் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். யானைகளின் உடல் வடிவமைப்பின் அடிப்படையில் அவற்றை நீரில் மிதக்கும் படகுகளுடன் ஒப்பிட்டும் கூறியுள்ளனர். சில யானைகளின் முகத்தில் வெண்மை அல்லது செம்மை நிறப் புள்ளிகள் காணப்பட்டது என்று கூறும் இலக்கியம், செந்நிறப் புள்ளிகளைச் செங்காந்தள் மலருடனும் விடியல் வானத்துடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது. யானைகளின் முகத்தில் காணப்பட்ட வெண்ணிறப் புள்ளிகளை முல்லை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. யானையின் கண்களைப் பற்றிக் கூறுமிடத்து, அவை புகர்நிறம் வாய்ந்தவை என்று கூறி அவற்றைப் பனைமரத்தின் நுங்குகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. யானையின் மிகப்பெரிய தடித்த காதுகளைச் சேம்பின் இலைகளுடனும் தாமரை, நெய்தல், ஆம்பல் போன்ற நீர்ப்பூக்களின் இலைகளுடனும் முறத்துடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது. பலவரிகளைக் கொண்டதும் கருமைநிறம் உடையதுமான யானையின் தும்பிக்கையைப் பனைமரத்துடனும் கருப்பு மக்காச்சோளக் கதிருடனும் வரால்மீனுடனும் எழுதப்பட்ட நடுகல்லுடனும் பெண்களின் கருமை பூசிய கண்ணிமைகளுடனும் பாம்புடனும் உவமைப்படுத்திப் பல பாடல்களில் கூறுகிறது.

ஆண் யானைகளின் நீண்டு வளைந்த கூரிய வெண்ணிற மருப்புக்களைப் பற்றிக் கூறுமிடத்து அவற்றை நிலவின் பிறையுடனும் தாழைமலர் அரும்புடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது. புலியைக் குத்தியதால் செந்நிறக் குருதி படிந்த யானையின் கூரிய மருப்பினைச் செங்காந்தள் அரும்புடனும் வாழைப்பூ முகையுடனும் பெண்களின் சிவந்த கடைக்கண்ணுடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது. பெண்யானைகளின் மருப்புக்கள் மிகச்சிறியவையாக இருந்ததால் அவற்றை வாழைப்பழத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. காட்டுவாசிகள் யானையின் மருப்புக்களை உரலில் குற்றும் உலக்கையாகப் பயன்படுத்திய செய்தியைக் கூறுகிறது. யானையின் கால்கள் மிகப் பெரியவையாக இருந்ததால் அவற்றை உரலின் அடிப்பாகத்துடனும் யானையின் காலடியினைக் கிணை, பறை, துடி போன்ற இசைக்கருவிகளுடனும் உவமையாகக் காட்டுகிறது. யானையின் கால்நகங்களைப் பனங்காயின் மேலுள்ள தோட்டுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளது. யானை நடந்துசென்ற பாதையில் தேங்கியிருந்த நீரினைக் கரும்பின் பாத்தியில் தேங்கியிருந்த நீருடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.

யானைகள் தமது நீண்ட தும்பிக்கையால் எழுப்பிய ஓசையானது மூங்கில் மரங்களைக் காற்று தாக்கும்போது எழுந்த ஓசையினைப் போலவும் கார்மேகங்கள் எழுப்பிய ஓசை போலவும் கரும்பு பிழியும் எந்திரங்கள் எழுப்பிய ஓசையினைப் போலவும் கூத்தாடுவோர் தமது தூம்பு என்னும் இசைக்கருவியை ஒலித்து எழுப்பிய ஓசை போலவும் இருந்ததாகக் கூறுகிறது. ஆண் யானைகளின் கன்னங்களில் மதநீர் வடிவதனை மலையில் வடியும் தேனுடன் ஒப்பிட்டுக் கூறும் இலக்கியம் அந்த மதநீரை வண்டுகள் மொய்த்தன என்று கூறுகிறது. யானைகள் தமது உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள சேற்றிலும் நீரிலும் விளையாடும் என்றும் சேற்றைவாரித் தம்மேல் இறைத்துக்கொள்ளும் என்றும் கூறுகிறது. யானைகள் தமது நீர்த்தேவைக்காகவும் உணவுத்தேவைக்காகவும் பிற காரணங்களுக்காகவும் யாஅம், மராஅம், ஓமை, இலவம், வேங்கை முதலான மரங்களைத் தமது மருப்புக்களால் தாக்கிய செய்திகளைப் பதிவுசெய்துள்ளன. யானைகளைப் போரில் பயன்படுத்திய செய்திகளைப் பற்றிக் கூறுமிடத்து பல்வேறு உவமைகளின் மூலம் அக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. யானையைப் பற்றிய சில பழமொழிகளைக் கூறும் இலக்கியம் அதன்மூலம் பல அருமையான கருத்துக்களையும் நமக்கு உணர்த்துகின்றது. இதுகாறும் சுருக்கமாக மேலே கண்ட செய்திகளைப் பற்றி விரிவாகக் கீழ்க்காணும் தலைப்புக்களில் பல ஆதாரங்களுடன் காணலாம்.

1. யானையின் உடல்:
2. யானையின் முகம்
3. யானையின் கண்கள்
4. யானையின் காது
5. யானையின் தும்பிக்கை
6. யானையின் மருப்பு
7. யானையின் கால்
8. யானையின் ஓசை
9. யானைக்கு மதம்பிடித்தல்
10. யானை சேற்றில் விளையாடுதல்
11. யானை மரங்களைத் தாக்குதல்
12. யானையும் போரும்
13. யானை சார்ந்த பழமொழிகள்

1. யானையின் உடல்:

யானைகளில் மூன்று வகைகள் உண்டு என்று மேலே கண்டோம். இவற்றில் ஆசி` யானைகள் ஆப்பிரிக்க யானைகளைக் காட்டிலும் உருவில் சற்று சிறியவை. ஆசி` யானைகள் 12 அடி உயரம் வரையிலும் வளரக்கூடியவை. இவற்றின் எடை 5000 கிலோ வரை இருக்கும். ஆசி` யானையின் உடல் கருமை, பழுப்பு, கரும்பழுப்பு போன்ற நிறங்களில் காணப்படும். வளர்ந்த பெரிய யானை நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 கிலோ எடையுள்ள உணவுகளைச் சாப்பிடும் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. இனி, சங்க இலக்கியங்கள் யானையின் உடல் பற்றிக் கூறியிருக்கும் செய்திகளைப் பற்றிக் கீழே காணலாம்.

யானையின் உடல் பெருமையும் கருமையும் கொண்டது என்பதால் அதனைப் பல்வேறு பொருட்களுடன் ஒப்பிட்டுச் சங்கத் தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளனர். ஒவ்வொரு ஒப்புமையிலும் சில பாடல்களைச் சான்றாகக் காணலாம். யானையின் கரிய உடலைக் கருப்புநிற மழைமேகங்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன. இப்பாடல்களில் வரும் தோல், வேழம், களிறு ஆகியவை யானையினையும் மழை, கொண்மூ ஆகியவை மேகங்களையும் குறிக்கும்.

மழை உருவின தோல் பரப்பி - புறம்.16
புரை தவ உயரிய மழை மருள் பல் தோல்   - மலை. 377
களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர - பரி. 22
செரு நவில் வேழம் கொண்மூ ஆக - புறம்.373
எயில்ஊர் பல்தோல் போல செல்மழை தவழும் - நற்.197

அது ஒரு பகல் நேரம். வானத்தில் கதிரவன் ஒளிவீசிக் கொண்டிருக்க, திடீரென்று கார்மேகங்கள் வரிசையாக நின்று கதிரவனை முழுவதுமாய் மறைத்து இருள்செய்தன. ஆனால் கொஞ்சநேரம் தான். சடாரென்று இடியிடித்து மேகப்பைகள் கிழிய அதிலிருந்து மழைத்துளிகள் கொட்டத் துவங்கியது. அழகான இந்த மழை நிகழ்வினை நம் மனக்கண்ணில் காட்டுகின்ற அகப்பாடல் கீழே:

யானை செல் இனம் கடுப்ப வானத்து
வயங்கு கதிர் மழுங்க பாஅய் பாம்பின்
பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு
ஆலி அழி துளி தலைஇ கால்வீழ்த்தன்று - அகம். 323

மேற்காணும் பாடல் யானையினைப் பாம்புடன் ஒப்பிட்டுக் கூறுகின்றது. பாம்பு என்னும் சொல்லுக்கு மேகம் என்ற பொருளும் உண்டென்று பல ஆய்வுக்கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். வானத்து வயங்கு கதிராகிய பகலவனை மழுங்கப் பாயும் பாம்பு என்பதால் அது இங்கே மேகங்களையே அன்றி வேறெதையும் குறிக்காது என்பது உறுதியாகிறது.

யானைகள் அகலத்திலும் உயரத்திலும் பெரியவை என்பதால் அவற்றை மலை / குன்று / கல்பாறைகளுடன் ஒப்பிட்டும் புலவர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர். அவற்றில் சில பாடல்கள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிடி மடிந்து அன்ன குறும்பொறை மருங்கின் - அகம். 269
பிடி கைகரந்து அன்ன கேழ் இரும் துறுகல் - குறு.111
பிடிமிடை களிற்றின் தோன்றும் குறுநெடும் துணைய குன்றமும் - அகம். 99
வரை புரையும் மழ களிற்றின் மிசை - புறம். 38
களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் - மலை.384

அந்தச் சோலையில் இருந்த பெரிய கரும்பாறையின் அருகில் ஒரு வாழைமரம் செழித்து வளர்ந்திருந்தது. அதில் பூத்திருந்த வாழைப்பூவானது தனது இதழ்களையெல்லாம் உதிர்த்தநிலையில் அந்தக் கரும்பாறையின்மேல் தனது கூரிய முனைகொண்டு தொட்டவாறு இருந்தது. இதைக்கண்ட புலவருக்கு உடனே யானையின் நினைவு வந்துவிட்டது. இக்காட்சியினைப், போர்க்களத்தில் யானையின் முகத்தில் கூரிய செவ்வேல் ஒன்று பாய்ந்த காட்சியுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடலில் பாடுவதைப் பாருங்கள்.

காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய
துறுகல் சுற்றிய சோலை வாழை - மலை.129

இரண்டு பெரிய கரிய குன்றுகள் அடுத்தடுத்து இருந்தன. இந்த இரண்டு குன்றுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வேங்கைமரம் அகலமாக அழகாகப் பூத்திருந்தது. இந்த இரண்டு குன்றுகளில் இருந்தும் பாய்ந்த அருவிநீரானது அந்த வேங்கைமரத்தின்மேல் தெறித்து விழுகின்றது. இக்காட்சியைக் கண்ட புலவருக்கு யானையின் நினைவு வந்துவிட்டது. இரண்டு பக்கங்களில் இருந்தும் கரிய யானைகள் பூநீரினை மேலே வார்க்க, நடுவில் அழகிய தாமரைமலரின்மேல் வீற்றிருக்கும் திருமகளைப் போன்று அக்காட்சி இருந்ததாகக் கீழ்க்காணும் பாடலில் பாடுகின்றார் புலவர். இப்பாடலில் யானைகளைக் குன்றுகளாகவும் திருமகளை வேங்கை மரத்துடனும் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப - கலி. 44

சங்ககாலத்தில் தமிழர்கள் தமது தேவைக்குப் போக மிஞ்சுகின்ற தானியங்களைப் பெரிய பெரிய சேமிப்புக் கலங்களில் சேர்த்து வைப்பார்கள். ஊரின் பொது இடத்தில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் இந்த சேமிப்புக்கலங்கள் உயரமாகவும் அகலமாகவும் கருமை நிறத்தில் பூசப்பட்டும் இருக்கும். இந்தச் சேமிப்புக் கலங்களைக் 'குதிர்' என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. ஊர்ப் பொதுமன்றத்தில் வரிசையாகக் கட்டிவைக்கப்பட்டிருக்கும் கரிய யானைகளை இந்தக் கருப்புக் குதிர்களுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில் - பெரும். 187
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி - மது.169

இதுவரை கண்ட உவமைகளில் யானையின் உடலைக் கருமையும் பெருமையும் கொண்ட பொருட்களான மேகங்கள், குன்றுகள் மற்றும் குதிர்களுடன் மட்டுமே ஒப்பிட்ட புலவர்கள், கீழ்க்காணும் பாடல்களில் கருமையும் பெருமையும் இல்லாத ஆனால் யானையின் உடலமைப்பினை ஒத்த பிற பொருட்களுடன் ஒப்பிட்டும் பாடியுள்ளனர். அதைப்பற்றிக் கீழே காணலாம்.

யானையின் உடலை ஆற்றில் அல்லது கடலில் மிதக்கும் படகுடன் ஒப்பிட்டுச் சங்கப் புலவர்கள் பல பாடல்களில் பாடியுள்ளனர். இதேபோலவே எருமையின் உடலைப் படகுகளுடன் ஒப்பிட்டுப் பாடியிருந்ததனைச் சங்க இலக்கியத்தில் எருமை என்ற கட்டுரையில் கண்டோம். இதிலிருந்து, யானையின் உடலமைப்புக்கும் படகின் அமைப்புக்கும் இடையில் ஒற்றுமைகள் இருக்கவேண்டும் என்ற எண்ணம் முகிழ்க்கிறது. யானை மற்றும் படகின் அமைப்பினை ஆய்ந்ததில், இரண்டின் அமைப்புக்கும் இடையில் இருந்த பல ஒற்றுமைகள் தெரியவந்தன. யானையை மேலிருந்து பார்த்தால் கிடைக்கும் காட்சியானது அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. யானையின் பருத்த உடலைப் படகின் விரிந்த பகுதியுடனும் யானையின் தலையைப் படகின் முன்பகுதியுடனும் யானையின் இரண்டு காதுகளைப் படகின் முன்பகுதியில் இருக்கும் இரண்டு துடுப்புக்களுடனும் ஒப்பிடுவதாகக் கருதலாம். யானையைப் படகுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிரை திமில் களிறு ஆக .. - கலி. 149
அறத்துறை அம்பியின் மான மறப்புஇன்று இரும்கோள் ஈரா பூட்கை ...- புறம். 381
அம்பி காழோர் சிறைஅரும் களிற்றின் பரதவர் ஒய்யும் - நற். 74
களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் - புறம். 13

2. யானையின் முகம்:

பொதுவாக, தோல் என்றாலே அதன் நிறமாற்ற நோய் என்பது மாந்தர் உட்பட அனைத்து பாலூட்டிகளுக்கும் ஏற்படக் கூடியதே. அவ்வகையில், யானையின் கருநிறத் தோலில் குறிப்பாக அதன் நெற்றி, தும்பிக்கை முதலான பகுதிகளில் உள்ள கருமைநிறம் மாறி செம்மை அல்லது வெண்மை நிறப் புள்ளிகள் அடர்த்தியாக ஆங்காங்கே காணப்படும். இது எல்லா யானைகளிலும் காணப்படுவதில்லை. இப்படிப் புள்ளிகளை உடைய யானைகளைப் புகர்முகம் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. யானையின் தும்பிக்கையில் வரிசையாகக் காணப்பட்ட செந்நிறப் புள்ளிகள் பார்ப்பதற்குச் செங்காந்தள் மலர் இதழ்களைப் போன்று இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுவதைக் காணலாம்.

பொருத யானை புகர்முகம் கடுப்ப மன்ற துறுகல்
மீமிசை பலஉடன் ஒண் செம்காந்தள் அவிழும் - குறு. 284

நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப            
போது பொதி உடைந்த ஒண் செம்காந்தள் - நற். 176

அது ஒரு அழகான பெரிய கருநிற மலை. இருளில் அந்த மலையைப் பார்க்க முடியவில்லை. அதிகாலையில் கதிரவனின் கதிர்கள் மெல்லமெல்லத் தோன்றவும், அந்தமலையும் தெரியத் துவங்கியது. இப்போது பார்த்தால் அந்த அழகான கருநிற மலையின் நெற்றிப் பகுதியில் வானம் விடிந்து கதிரவனின் செந்நிறக் கதிர்கள் செவ்வண்ணம் பூசியிருந்தன. அதைப்பார்த்த புலவருக்கு யானையின் நினைவு வந்து விட்டது. கருநிற யானையின் நெற்றியில் செவ்வண்ணப் புள்ளிகள் அடர்ந்து அழகுசெய்திருந்தன. இரண்டையும் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடலில் பாடுகிறார்.

விடியல் வியல் வானம் போல பொலியும்
நெடியாய் நின்குன்றின் மிசை நினயானை சென்னிநிறம் - பரி.19

செம்மைநிறம் மட்டுமின்றி வெண்ணிறப் புள்ளிகளும் யானையின் முகத்தில் காணப்படும். செந்நிறப் புள்ளிகளைச் செந்நிறக் காந்தள் மலர்களுடன் ஒப்பிட்டதைப் போல வெண்ணிறப் புள்ளிகளை வெண்ணிற முல்லை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றது கீழ்க்காணும் பாடல்வரி.

சிறுவீ முல்லை தேம்கமழ் பசுவீ
பொறிவரி நன்மான் புகர்முகம் கடுப்ப - நற். 248.

3. யானையின் கண்கள்:

தற்போது நிலத்தில் வாழ்ந்து வரும் அனைத்து பாலூட்டிகளிலும் மிகப்பெரிய உருவம் கொண்டது யானை மட்டுமே என்று மேலே கண்டோம். யானையின் உடல் எவ்வளவுக்கு எவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறியவை அதன் கண்கள். ஏன் இந்த மாறுபாடு?. எதனால் அதன் கண்கள் சிறியவையாகப் படைக்கப்பட்டன?. உண்மையில் யானைக்குச் சிறிய கண்களே அதற்குப் பாதுகாப்பானது. காரணம், போரின்போது எதிரிவீரர்கள் தொலைவில் இருந்தவாறு யானையின் கண்ணைக் குறிவைத்து வேலினை எறிவர். கண்கள் சிறியதாக இருப்பதால்தான் குறிதவறி அதனால் தப்பிவிட முடிகிறது. யானையின் சிறிய கண்கள் யானைக்கு மட்டுமின்றி நமக்கும் பாதுகாப்பானதே. காரணம், யானைக்கு மதம் பிடித்திருக்கும் சமயம், அது மருண்ட நிலையில் இருக்கும். அப்போது அதன் கண்களில் படும் எதையும் தனது எதிரியாகக் கருதித் தாக்குதலைச் செய்யும். இதைத் தடுப்பதற்காக அதன் முகத்தில் முகபடாம் என்னும் அணியினைக் கட்டியிருப்பார்கள். இவ்வகையில் பார்த்தாலும் யானையின் சிறிய கண்களே பாதுகாப்பானவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இனி, யானையின் கண்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறியுள்ள செய்திகளைச் சில பாடல்களின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

நுதல், மருங்குல் ஆகிய சொற்களுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறியுள்ள பொருட்கள் நீங்கலாகக் கண் என்ற புதிய பொருளும் உண்டு என்று பல ஆய்வுக் கட்டுரைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், யானையின் கண்களைப் பனைமரத்தின் நுங்குகளுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுவதைப் பார்க்கலாம்.

கறைஅடி குன்றுஉறழ் யானை மருங்குல் ஏய்க்கும்
வண் தோட்டு தெங்கின் - பெரு. 352

யானையின் கண்களும் பனைமரத்தின் நுங்குகளும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி தோன்றுவதனை அருகில் உள்ள படம் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, யானையின் கண்களைப் புகர்நுதல் என்றும் செந்நுதல் என்றும் இலக்கியம் குறிப்பிடுகின்றது. காரணம், யானையின் கண்கள் புகர் நிறத்தில் அதாவது மஞ்சள் கலந்த செந்நிறத்தில் / செந்நிறத்தில் இருக்கும். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வேங்கை வென்ற பொறி கிளர் புகர்நுதல் - பதி.53
ஓடை விளங்கும் உருகெழு புகர்நுதல் - பதி.34
செந்நுதல் யானை வேங்கடம் - அகம்.265
செந்நுதல் யானை பிணிப்ப - புறம்.348

4. யானையின் காதுகள்:

யானையின் கண்களை மிகச் சிறியதாகப் படைத்த இயற்கை அதனருகில் இருக்கும் காதுகளை மிகப் பெரியதாகப் படைத்திருக்கிறது. காரணம், யானையின் உடல் வெப்பத்தைக் கடத்த அதன் பெரிய காதுகள் உதவுகின்றன. யானை அடிக்கடி தனது பெரிய காதுகளை அசைத்துக்கொண்டே இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் அது தனது உடல்வெப்பத்தைக் குறைத்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, யானையின் கேட்கும் திறன் சிறப்பானது. மிகக்குறைந்த ஒலியினைக் கூட அதனால் கேட்கமுடியும் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. யானையின் காதுகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.

யானையின் காதுகள் பெரியவை என்பதுடன் தடிமன் உடையவை. காதுகளின் ஓரங்களில் பல நரம்புகளையும் வளைவுகளையும் காணலாம். யானையின் காதுகளைச் சேம்பின் அகன்ற இலையுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகின்றது. சேம்பின் இலைகள் அகலமாகவும் ஓரங்களில் பல வளைவுகளையும் உடையது. இதில் பல வகைகள் உண்டு. இவற்றில் கருமை / அடர்நீல இலைகள் பார்ப்பதற்கு யானையின் காதுகளைப் போலவே தோன்றுவதனை அருகில் உள்ள படம் காட்டும்.

சேம்பின் அலங்கல் வள்இலை பெருங்களிற்று செவியின் மான - குறு.76

சேம்பின் அகன்ற இலைகளுடன் மட்டுமின்றி, யானையின் அகன்ற காதுகளைத் தாமரை, நெய்தல், ஆம்பல் போன்ற நீர்ப்பூக்களின் அகன்ற இலைகளுடன் ஒப்பிட்டும் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

தாமரை களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க - நற். 310
நெய்தல் பாசடை புரையும் அம் செவி - நற். 47
பிடி செவியின் அன்ன பாசடை - நற். 230

யானையின் பெரிய காதுகளை முறத்துடன் ஒப்பிட்டும் கீழ்க்காணும் பாடல்கள் கூறுவதைக் காணலாம். 

முறம் செவி யானை - நற்.376
முறம் செவி வாரணம் - கலி.42

5. யானையின் தும்பிக்கை:

யானையின் தும்பிக்கையே அதன் மிகப்பெரிய வலிமை ஆகும். கிட்டத்தட்ட 1,50,000 தசைநார்களைக் கொண்ட யானையின் தும்பிக்கையில் எலும்புகளே கிடையாது. யானையின் தும்பிக்கையானது மூச்சுவிடுதல், மணம் நுகர்தல், நீர், சேறு மற்றும் புழுதியை உறிஞ்சுதல், தொடுதல், துடைத்தல், பற்றுதல், தூக்குதல், முறுக்குதல், தாக்குதல், ஓசை எழுப்புதல், மண்ணைத் தோண்டுதல் போன்று பலவிதமான வேலைகளுக்கும் பயன்படுகிறது. ஒரு பெரிய யானையின் தும்பிக்கையானது 6.5 அடி நீளம் வரையிலும் இருக்கும். இதனால் தனது தும்பிக்கையைக் கொண்டு 350 கிலோ எடை வரையிலான பொருட்களைத் தூக்கமுடியும். கிட்டத்தட்ட 23 அடி உயரத்தில் உள்ள பொருட்களைக் கூட ஒரு பெரிய யானையின் உயர்த்திய தும்பிக்கை அடைந்துவிடும். இதனால்தான் காட்டுத் தோட்டங்களில் காவல்பரண் அமைக்கும்போது யானையின் தும்பிக்கைக்கு எட்டாத உயரத்தில் உயரமான பாறைகளின்மேல் அமைப்பர். யானை தனது தும்பிக்கையில் கிட்டத்தட்ட 8.5 லிட்டர் வரையிலான நீரை உறிஞ்சித் தக்கவைக்க வல்லது. நீருக்குள்ளே இருக்கும்போது நீருக்குமேலே தும்பிக்கையை உயர்த்தி அதன்மூலம் மூச்சுவிட யானையால் முடியும். தும்பிக்கையை இழந்துவிட்டால் உணவு மற்றும் நீருண்ணும் வழியின்றிக் காட்டுயானைகள் பெரும்பாலும் இறக்கவே நேரிடுகிறது என்று விக்கிபீடி`யா கூறுகிறது.

யானையின் தும்பிக்கையில் ஏராளமான தசைநார்கள் இருப்பதால் யானையினால் தனது தும்பிக்கையை மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் வளைக்க முடியும். இதற்குக் காரணம், அதன் தும்பிக்கையானது பல சிறிய துண்டங்களின் இணைப்பு போல இருப்பதே. இயல்பான நிலையில் இந்த துண்டங்கள் பார்ப்பதற்குப் பல வரிகளைப் போலத் தோன்றும். கரிய நிறத்தில் பல வரிகளை உடையதான யானையின் தும்பிக்கையினைப் பல்வேறு பொருட்களுடன் உவமைப்படுத்திச் சங்க இலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

யானையின் பல வரிகளையுடைய கரிய தும்பிக்கையினைக் கருமைநிறத் தண்டினையும் பலவரிகளையும் கொண்ட பனைமரத்துடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

பனைத்திரள் அன்ன பரேர் எறுழ் தட கை - அகம். 148
வேனில் வெளிற்றுப் பனைபோல கைஎடுத்து
யானை பெருநிரை வானம் பயிரும் - அகம். 333

யானையின் பலவரிகளைக் கொண்ட கரிய தும்பிக்கையினைத் தினைக்கதிர்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இப்பாடல்களில் வரும் தினை என்பது கருமைநிற முத்துக்களைக் கொண்ட மக்காச்சோளக் கதிர்களைக் குறிக்கும். இதனைச் சில பாடல்களின் வாயிலாக நிறுவலாம்.

மணிஏர் தோட்ட மைஆர் ஏனல் இரும்பிடி தடக்கையின் தடைஇய பெரும்புனம் - நற்.344

இப்பாடலில் வரும் மணி ஏர் தோடு என்பது கருமைநிறத் தினைக்கதிரைக் குறிக்கும்.

யானைத் தடக்கையின் தடைஇ 
இறைஞ்சிய குரல பைம்தாள் செந்தினை - நற்.376
கரும்புமருள் முதல பைம்தாள் செந்தினை 
மடப்பிடி தடக்கை அன்ன பால்வார்பு
கரிக்குறட்டு இறைஞ்சிய செறிகோள் பைம்குரல் - குறு.198

இப்பாடல்களில் வரும் செந்தினை என்பது கருமைப் பொருளில் கருநிறத் தினைக் கதிர்களைக் குறித்து வந்துள்ளது. கரிக்குறடு என்ற சொல்லும் இதனை உறுதிசெய்கிறது. அதுமட்டுமின்றி, மேற்காணும் பாடலில் தினைபற்றிக் கூறுமிடத்து 'கரும்பு மருள் முதல' என்று கூறுகிறது. 'கரும்பினைப் போன்ற தண்டினையுடைய' என்பது இதன் பொருளாகும். இதிலிருந்து இப்பாடலில் வரும் தினை என்பது மக்காச்சோளத்தையே குறிக்கிறது என்பதை உறுதிசெய்யலாம். ஏனென்றால், மக்காச்சோளமே கரும்பு போன்ற கணுக்களைக் கொண்ட வலிமையான தண்டுடன் 10 அடி உயரம் கூட வளர வல்லவை. செம் என்னும் அடைமொழிக்கு செந்நிறப் பொருள் மட்டுமின்றி கருநிறப் பொருளும் உண்டு. செம் என்னும் சொல் கருமைப்பொருளில் வரும் வேறு சில இடங்கள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு - திரு 202
பிடி கை அன்ன செம் கண் வராஅல் - மலை 457
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் - மலை 472

அதுமட்டுமின்றி, பல்வகைத் தினைகளில் மக்காச்சோளம் மட்டுமே மிகப் பெரிய கதிராக விளைவது. ஒரு மக்காச்சோளக் கதிரானது கிட்டத்தட்ட 1.5 அடி நீளம் வரையிலும் பெரியதாக விளையக் கூடியது. இதனால் இதனைப் 'பெருங்குரல்' என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப                            
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல்
நல் கோள் சிறு தினை - குறி.35

பிடி கை அன்ன பெரும்குரல் ஏனல் - குறு.360

யானையின் தும்பிக்கையினை கருநிற மக்காச்சோளக் கதிருடன் ஒப்பிட்டுக் கூறுவதன் காரணம் அதன் கருநிறம் மட்டுமன்று; அதன் தோற்றமும் அமைப்பும் கூட காரணங்களாகும். யானையின் தும்பிக்கையானது கருமைநிறத்தில் பலவரிகளைக் கொண்டதாக இரண்டு வெண்ணிற மருப்புக்களின் இடையில் இருப்பதைப் போல கருமைநிற மக்காச்சோளத்திலும் பலவரிசைகளில் முத்துக்கள் இருப்பதுடன் இதன் புறங்களில் வெண்ணிறத் தோல் நீண்டு இருப்பதே ஆகும். அருகில் உள்ள படத்தில் கருப்பு மக்காச்சோளமும் யானையின் தும்பிக்கையும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

யானையின் தும்பிக்கையினை உடலெங்கும் பல கருப்பு வரிகளைக் கொண்ட வரால் மீனுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் செம் கண் என்ற சொல் செம்மைப்பொருளில் வராமல் கருமைப்பொருளில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அருகில் வரால் மீன் படம் காட்டப்பட்டுள்ளது.

பிடி கை அன்ன செம் கண் வராஅல் - மலை. 457

சங்ககாலத்தில் ஒரு ஊரில் இன்னொரு ஊருக்குச் செல்லும் வழியில் பொருட்களைக் கொள்ளை அடிப்பர். இப்படி வழிப்பறிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் பெயர்களைக் கருங்கல்லில் பொறித்து நடுகல்லாக நட்டு வைத்திருப்பர். பலவரிசைகளில் எழுதப்பட்ட எழுத்துக்களைத் தாங்கிய கருங்கற்களை யானையின் கருநிறமுடைய பல வரிகளைத் தாங்கிய தும்பிக்கையுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் ஐங்குறுநூற்றுப் பாடல் கூறுகிறது.

விழுத்தொடை மறவர் வில் இட தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழு பிணர் பெருங்கை யானை - ஐங்கு. 352

இதுவரை மேலே கண்ட உவமைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது, கருமை நிறத்தில் பல வரிகள் / வரிசைகளைக் கொண்ட பொருட்களையே யானையின் தும்பிக்கையுடன் புலவர்கள் ஒப்பிட்டுப் பாடியிருப்பதனைப் புரிந்து கொள்ளலாம். இதேபோல பெண்களின் மையுண்ட கண் இமைகளையும் யானையின் தும்பிக்கையுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் பாடியிருக்கின்றனர். காரணம், பெண்களின் மெல்லிய கண் இமைகளில் பல வரிகள் இயற்கையாகவே காணப்படும். அந்த இமைகளின்மேல் கருமைகொண்டு பூசியிருக்கும்போது அதனைப் பார்ப்பவர்க்கு யானையின் கருநிறத் தும்பிக்கை நினைவுக்கு வருவது இயல்புதானே?. பெண்களின் மையுண்ட வரிகளையுடைய கண்ணிமைகளை யானையின் வரிகளைக்கொண்ட கருநிறத் தும்பிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறும் சிலபாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இரும் பிடி தடக்கையின் செறிந்து திரள் குறங்கின் - பொரு..40
இரும்பிடி தடக்கையின் சேர்ந்துடன் செறிந்த குறங்கின் - சிறு. 19
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து - சிறு.191
பிடி கை அன்ன பின்னகம் தீண்டி - அகம். 9
இரும்பிடி தடக்கை மான ...... நெறிகொள் ஐம்பால் - அகம். 177

மேற்காணும் பாடல்களில் வரும் குறங்கு, சிறுபுறம், பின்னகம், ஐம்பால் ஆகியவை பெண்களின் மையுண்ட கண்ணிமைகளைக் குறிக்கும். இதைப்பற்றி பல ஆய்வுக்கட்டுரைகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்து, யானையின் தும்பிக்கையினை உடலெங்கும் வரிகளையுடைய பெரிய மலைப்பாம்புடன் ஒப்பிட்டும் கீழ்க்காணும் பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். இப்பாடல்களில் யானையினை ஒரு குன்றாகவும் அதன் தும்பிக்கையினை ஒரு மலைப்பாம்பாகவும் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.

களிறு தன் வரிநுதல் வைத்த வலி தேம்பு தடக்கை
கல் ஊர் பாம்பின் தோன்றும் - அகம். 349
வேழத்து பாம்பு பதைப்பு அன்ன பரூஉ கை துமிய - முல்.69
யானை தன் வாய் நிறை கொண்ட வலி தேம்பு தட கை
குன்று புகு பாம்பின் தோன்றும் - அகம். 391

6. யானையின் மருப்பு:

பெண்ணில் இருந்து ஆணை வேறுபடுத்திக் காட்ட ஆணின் உடலமைப்பில் சில மாற்றங்களை இயற்கையானது செய்துவைத்துள்ளது. அப்படி இயற்கை அன்னை ஆசி`யக் கண்டத்து ஆண் யானைக்குக் கொடுத்திருக்கும் சிறப்பு உறுப்பு தான் அதன் மருப்பாகும். எல்லா யானைகளுக்கும் மொத்தம் 26 பற்கள் உண்டு. இவற்றில் 24 பற்கள் வாய்க்குள்ளேயே அமைந்திருக்க, ஆண்யானைகளின் மேல்தாடையில் இருக்கும் இரண்டு கோரைப்பற்கள் துருத்திக்கொண்டு வெளியே மிகவும் நீண்டு வளர்ந்திருக்கும். இவற்றையே மருப்பு என்றும் கோடு என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. சில பெண் யானைகளுக்கு மிகச் சிறிய மருப்பு இருக்கும். ஆசி` யானைகளின் மருப்பானது 10 அடி வரையிலும் நீண்டு வளரக்கூடியவை. இதன் ஒரு மருப்பின் எடை மட்டும் 39 கிலோ வரையிலும் இருக்கும் என்று விக்கிபீடி`யா கூறுகிறது.

நீர், உப்பு மற்றும் கிழங்குகளுக்காக மண்ணைத் தோண்டவும் மரங்களைக் குத்திப் பட்டைகளை உறிக்கவும் எதிரிகளிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றவும் யானைகள் தங்கள் மருப்புக்களைப் பயன்படுத்துகின்றன. மனிதரில் எப்படி வலக்கை இடக்கை பழக்கம் என்ற பாகுபாடு இருக்கிறதோ அதேபோல யானைகளிடம் வலக்கோடு இடக்கோடு பழக்க பாகுபாடுகள் உண்டு. எந்த மருப்பு அடிக்கடி பயன்படுத்தப்பட்டதால் உடைந்து சிறியதாகக் காணப்படுகிறதோ அதுவே அந்த யானையின் பழக்கத்தினைக் காட்டிக்கொடுத்து விடும் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. இனி, சங்க இலக்கியத்தில் யானையின் மருப்புக்களைப் பற்றிக் கூறியிருக்கும் பல்வேறு செய்திகளைக் கீழே காணலாம்.

யானையின் மருப்புக்கள் வெண்ணிறத்தில் கூரிய முனையுடன் நீண்டு மேல்நோக்கி வளைந்து வளர்ந்திருக்கும் போது அதனை நிலவின் பிறையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல் வரிகள்.

நிலவு கோட்டு பல களிற்றோடு - புறம்.359
பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானை - அகம். 115

ஆண் யானையின் வெண்ணிற மருப்புக்களைத் தாழைமலர் / அரும்புகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்வரிகள்.

தாழை பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு - நற். 19
யானை உடைகோடு அன்ன ததர்பிணி அவிழ்ந்த தாழை வான் பூ - நற்.299

காட்டுயானையின் முதல் எதிரி புலி தான். யானையைப் புலி தாக்கும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள யானையானது தனது மருப்பினால் புலியைத் தாக்கும். இதில் குத்துப்பட்ட புலி சில நேரங்களில் இறந்துபோவதும் உண்டு. புலியின் செந்நிறக் குருதி படிந்த கூர்முனையைக் கொண்ட யானை மருப்பினை வாழைப்பூவுடனும் செங்காந்தள் மலருடனும் ஒப்பிட்டுக் கூறும் பாடல்கள் கீழே:

யானை வெண்கோடு கடுப்ப வாழை ஈன்ற வைஏந்து கொழுமுகை - நற். 225
யானை கோடு கண்டன்ன செம்புடை கொழுமுகை அவிழ்ந்த காந்தள் - நற்.294
புகர்நுதல் புண்செய்த புய்கோடு போல உயர்முகை நறுங்காந்தள் நாள்தோறும் புதிது ஈன - கலி. 53

பெண்கள் பிரிந்துசென்ற தமது கணவர் / காதலர் இன்னும் வாராமை குறித்து அழுதுகொண்டே இருப்பர். இதனால் இவர்களது கடைக்கண் சிவந்து போயிருக்கும். இப் பெண்களின் சிவந்தநிறம் கொண்ட கடைக்கண்ணைப் புலியைக் குத்தியதால் செம்மைநிறம் கொண்ட யானையின் கூரிய மருப்புடன் ஒப்பிட்டுப் புலவர்கள் கீழ்க்காணும் பாடல்களில் கூறுகின்றனர்.

கொடும் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்தி
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலைமருப்பு ஏய்ப்ப கடைமணி சிவந்த நின் கண்ணே - நற்.39

கொன்ற யானை கோட்டின் தோன்றும்
..............................................
ஆழல மன்னோ தோழி என் கண்ணே - அகம். 375

சில பெண்யானைகளுக்கு சிறிய அளவில் மருப்பு உண்டு என்றும் முன்னர் கண்டோம். இந்த மருப்பானது கூர்மையாக இல்லாமல் முனைமழுங்கிப் போயிருக்கும். இது பார்ப்பதற்கு வாழைப்பழம் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார் புலவர்.

கவை முலை இரும் பிடி கவுள் மருப்பு ஏய்க்கும்
குலைமுதிர் வாழை கூனி வெண்பழம் - பெரும். 358

யானையின் நீண்ட மருப்பு அதற்கு அழகு சேர்த்ததைப் போல அழிவையும் தேடித்தந்தது. யானையின் நீண்ட மருப்பிற்காகக் காட்டுவாசிகள் அதனைக் கொன்று அழித்தனர். சங்ககாலப் பெண்கள் யானை மருப்பினைக் கொண்டு பாறையில் செய்யப்பட்ட குழி உரலில் நெல் முதலானவற்றைக் குற்றியதாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்
ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் - கலி.43

வய களிற்று கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் - கலி. 41

7. யானையின் கால்கள்:

யானை மிகப்பெரிய உருவம் கொண்டது என்னும்போது அதன் கால்கள் அந்தப் பெரிய கனமான உடலைத் தாங்கும் வண்ணம் பெரியதாகவும் வலியதாகவும் இருக்கவேண்டும் அல்லவா?. யானையின் கால்கள் எப்படிப்பட்டவை என்றால், அவை உரல்களின் அடிப்பகுதியினைப் போல வலிமையும் பெருமையும் கொண்டவை என்று ஒப்பிட்டுக் கூறுகின்றன கீழ்க்காணும் பாடல்வரிகள். இப்பாடல்களில் வரும் கறை, திரிமரம் ஆகியவை தினைகளைக் குற்றும் உரலைக் குறிப்பதாகும்.

கறைஅடி மட பிடி கானத்து அலற - அகம் 83
களிற்றுத் தாள் புரையும் திரிமர பந்தர் - பெரும். 187
இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும் துளைஅரை சீறுரல் - பெரும். 53
உரல்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ - குறு.232

யானையின் கால்களை உரலின் அடிப்பகுதியுடன் ஒப்பிட்டுக் கூறிய புலவர்கள், அதன் காலடியினை கிணை, பறை, துடி ஆகியவற்றுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்களில் கூறியுள்ளனர். பெரிய யானையின் காலடியினை மாக்கிணை, இரும்பறையுடன் ஒப்பிட்டும் குட்டியானையின் காலடியினைத் துடி என்னும் சிறுபறையுடன் ஒப்பிட்டும் கூறியுள்ளனர்.

பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண் இரும்பறை - புறம். 263
பொருகளிற்று அடிவழி அன்ன என்கை ஒருகண் மா கிணை - புறம். 392
துடிஅடி அன்ன தூங்குநடை குழவியொடு பிடிபுணர் வேழம் - பொரு.126

யானையின் காலடியினை பறையுடன் ஒப்பிட்டு அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. யானையின் காலடியினை பறையுடன் ஒப்பிட்ட புலவர்கள், யானை நடந்தபோது உண்டான குழிவான பாதையில் தேங்கிய நீரினைக் கரும்புத் தோட்டத்தில் வெட்டிவிட்ட பாத்தியுடன் ஒப்பிட்டுக் கூறுவர்.

கரும்புநடு பாத்தி அன்ன பெருங்களிற்று அடிவழி நிலைஇய நீரே - குறு.262

யானையின் காலில் இருக்கும் அதன் பெரிய நகங்களைப் பனங்காயின் தலையில் உள்ள தோட்டுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கானயானை கதுவாய் வள்உகிர் இரும்பனை இதக்கையின் ஒடியும் - அகம். 365.

                                     ............. பகுதி 2 தொடரும்...........

6 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.